Wednesday, December 30, 2009

மாத்ருபூமி - ஆண்களுக்கு எதிரான ஒரு மாற்று சினிமா.

இவ்வளவு அதிர்ச்சி அளிக்கும் ஒரு இந்திய திரைப்படத்தை இதற்குமுன் நான் பார்த்ததில்லை. உலக சினிமாக்களில், என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பல திரைப்படங்கள் உண்டு. உதாரணமாக பிரெஞ்ச் படமான இர்ரிவர்சிபிள்(irreversible). மாத்ருபூமி தணிக்கைக்கு பெயர் போன இந்தியாவிலிருந்து படைக்கப்பட்டிருப்பது தான் ஆச்சர்யம். படத்தின் கரு வன்புணர்ச்சி. இத்தகைய ஒரு கருவை ஆபாசமான காட்சிகள் இன்றி படமாக்கியது பெரிய விஷயம்.

வடக்கே ஒரு கிராமத்தில், பெண்கள் பிறந்தால் அதனை கொன்று விடுகிறார்கள். பெண்கள் பிறந்தால் அவர்களுக்கு வரதட்சணை தரவேண்டும் என. எனவே அந்த கிராமத்தில் வாழ்பவர்கள் முழுக்க முழுக்க ஆண்களே. அவர்களுக்கு காமம் அடங்காமல் தலை விரித்தாடுகிறது. நீல படம் பார்க்கிறார்கள். விழாவில் ஆண் பெண் வேடம் ஏற்று ஆடினாலும் அவர்கள் இச்சையுடன் நோக்குகிறார்கள். பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்ய அவர்களுக்கு தடை இல்லை.
அந்த கிராமத்தில், கல்யாணம் செய்வதற்கு கூட பெண் கிடைப்பதில்லை. இந்த சமயத்தில் ஒருவனுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட அனைத்து ஆண்களும் அவனை பொறாமையுடன் பார்க்கின்றனர். திருமணநாளில் மணமகனின் தந்தை மணமகளின் தந்தைக்கு ஒரு லட்சம் பணமும் ஒரு பசு மாடும் சீதனமாக கொடுத்து தனது மகனுக்கு மணம் முடிக்கப் பார்க்க, பூசாரியின் தயவால் மணமகள், பெண் இல்லை ஒரு ஆண் சிறுவன் என்றும் பணத்திற்காக அவனுடைய தந்தை தனது மகனுக்கு பெண் வேடமிட்டு அழைத்து வந்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
அந்த கிராமத்தில் ஒரு பணக்கார குடும்பம். ஒரு வயதான தந்தை. அவருக்கு ஐந்து மகன்கள். மூத்த மகன் தனக்கு ஒரு பெண் பார்க்க வக்கில்லாது போய்விட்ட தனது தந்தையை திட்டி தீர்க்கிறான். அந்த தந்தையோ, அந்த கிராமத்து பூசாரியிடம் தனது மகன்களுக்கு பெண் பார்க்குமாறு சொல்ல அந்த பூசாரி ஊரெல்லாம் சல்லடை போட்டு தேடுகிறான். அப்போது ஒரு நாள் கல்கி என்ற பெயருடைய ஒரு அழகான பெண் தனது பக்கத்து கிராமத்தில் இருப்பதை அறிய அந்த வீடு சென்று அந்த பெண்ணின் தந்தையிடம் பணத்தாசை காட்டி அந்த பெண்ணை அந்த குடும்பத்துக்கு கட்டிக் கொடுக்குமாறு கோருகிறான். பணத்தினால் கவரப்பட்ட அந்த பெண்ணின் தந்தை ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து பசுக்களுக்கு ஈடாக, அந்த குடும்பத்தின் ஐந்து மகன்களுக்கும் சேர்த்து கட்டி வைத்து விடுகிறான்.( ஒரு மகனுக்கு ஒரு லட்சம் மற்றும் ஒரு பசு.)

முதலிரவு அன்று மூத்த மகன் கல்கியை பங்கு போடுகிறான். முதல் நாள் எனக்கு மற்ற நாள் உனக்கு என.. ஐந்து நாட்களுக்கு ஐந்து பேரின் முறை. இதை கண்டு கோவம் கொள்கிறான் தந்தை. உங்களுக்காக நான் ஐந்து லட்சம் செலவு செய்திருக்கிறேன். எனக்கும் வேண்டும் என. அந்த பெண்ணை ஒவ்வொரு நாளும் ஒருத்தர் என பங்கு போட்டு வன்புணர்ச்சி செய்கிறார்கள். அதில் கடைசி மகன் மட்டும் அவளிடம் அன்பாய் இருக்கிறான். அவன் மேல் அவளுக்கு காதல் வருகிறது. அந்த வீட்டில் வேலை செய்யும் ரகு என்ற சிறுவன் அவளுடன் அன்பாய் இருக்கிறான்.அவளது கஷ்டத்தை உணர்ந்தவனாய் இருக்கிறான்.

ரகுவின் மூலம் தனது தந்தைக்கு கடிதம் எழுதுகிறாள் கல்கி. மகன்களுடன் சேர்ந்து தந்தையும் தன்னை வன்புணர்ச்சி செய்வதாக எழுதுகிறாள். அதனை அறிந்ததும் காரில் வந்து இறங்குகிறான் கல்கியின் தந்தை. செல்போன் சகிதம் உலா வரும் அவன், கல்கியிடம், 'அந்த கிழவன் உன்னோடு படுப்பதாக என்னிடம் முன்பு கூறவில்லை ஏமாற்றுக்காரன். நல்லவேளை இப்போது எனக்கு தெரிந்துவிட்டது அதனால் மேலும் ஒரு லட்சம் வாங்கி விட்டேன்' என சொல்லி பணம் வாங்கி செல்கிறான்.

இந்நிலையில், கல்கி கடைசி மகனுடன் மட்டும் காதலுடன் இருப்பது தந்தைக்கும் மற்ற மகன்களுக்கும் பொறுக்கவில்லை. ஒரு நாள் குறித்து அவனை கொன்று போடுகிறார்கள். அவன் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக போலிசிடம் சொல்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிணத்தை போஸ்ட் மோர்டம் செய்யாமல் சென்றுவிடுகிறது போலீஸ். தனக்கு ஒரே ஆறுதலாக இருந்தவனையும் கொன்றுபோட்ட அந்த குடும்பத்திடம் இருக்க பிடிக்காத கல்கி, வேலைக்கார சிறுவனிடம் தன்னை எப்படியாவது அந்த கிராமத்திலிருந்து தப்பிக்க வைக்கும்படி மன்றாடுகிறாள்.

அவள் மேல் இரக்கம் கொண்டு அவளை கூட்டிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறான் ரகு. அப்போது அதனை அறிந்து கொண்ட அந்த குடும்பம் அவர்களை சுற்றி வளைத்து, பின் தங்கிய சாதியை சேர்ந்த ரகுவை சுட்டு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்கின்றது. வேலைக்காரனோடு ஓடிப்போனவள் என அவளை தூற்றி மாட்டு தொழுவத்தில் போடுகிறார்கள் அவளை. ரகுவின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவனுடைய தந்தையுடன் சேர்ந்த தாழ்த்த சாதி கூட்டம் திட்டம் தீட்டுகிறது.

அந்த குடும்பத்தில் ரகுவின் மறைவுக்கு பிறகு புதிதாய் ஒரு சிறுவன் வேலைக்கு சேர்கிறான். மாட்டுத் தொழுவத்தில் மாட்டின் சாணி மற்றும் மூத்திரத்துக்கு மத்தியில் கிடக்கும் கல்கிக்கு தினமும் உணவு கொண்டு வந்து கொடுக்கிறான். ரகுவின் தந்தையும் அவனது கூட்டாளிகளும் பழிவாங்க வந்தவர்கள், மாட்டு தொழுவத்தில் சுய நினைவற்று கிடக்கும் கல்கியை பார்த்து கோவம் கொள்கிறார்கள். ரகுவின் மரணத்துக்கு காரணம் கல்கியே என அவளை வைத்தபடி ரகுவின் தந்தை அவளை வன்புணர்ச்சி செய்கிறான்.

கல்கி ஒரு நாள் கர்ப்பம் அடைய அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். மகன்கள் எல்லோரும் பிறக்கபோகும் குழந்தைக்கு தானே தகப்பன் என போட்டி போட அந்த மகன்களின் தந்தையோ தான் தான் முதலிரவில் அவளுடன் படுத்தவன் என்ற முறையில் தானே தந்தை என அறிவிக்கிறான். அப்போது திரளாக வந்த தாழ்ந்த சாதி கூட்டம், ரகுவின் தந்தையே அக்குழந்தைக்கு தகப்பன் என அறிவித்து அந்த பெண்ணை தங்களோட அனுப்பி வைக்குமாறு கோர, அந்த குடுமபத்தின் தந்தை துப்பாக்கியை கொண்டு வந்து அவர்களை விரட்டுகிறான். அந்த துப்பாக்கியை வாங்கி கொண்டு நான்கு மகன்களும் கல்கியை சொந்தம் கொண்டாட நினைத்த ரகுவின் தந்தையின் கிராமத்துக்கு சென்று அவனை சுட்டு கொலை செய்ய, கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த நால்வரையும் படுகொலை செய்து போடுகிறது....

இதனிடையே அந்த குடும்பத்தின் தந்தை கல்கியை கொடுமை செய்ய.. அதனை காண சகியாமல் அந்த புதிய வேலைக்கார சிறுவன் அவனை கத்தியால் குத்தி கொன்று போடுகிறான். இதனிடையே கல்கிக்கு பிரசவ வலி எடுக்க அந்த ரத்த பூமியில் புதிதாய் ஜனிக்கிறது ஒரு பெண் குழந்தை ஒன்று. அதனை கண்டு ஆனந்த படுகிறார்கள் கல்கியும் அந்த வேலைக்கார சிறுவனும். அத்துடன் முடிவடைகிறது படம்.
படம் முழுக்க முழுக்க ஆணாதிக்கம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் அந்த வேலைக்கார சிறுவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கல்கியாக நடித்திருக்கும் துலிப் ஜோஷி இந்த பாத்திரத்தில் நடிக்க மிகுந்த தைரியம் வேண்டும். அழகு தேவதையாக இருக்கிறார். வசனங்களே அவருக்கு இல்லை. கண்களே எல்லாம் பேசி விடுகிறது. சலீம் சுலைமானின் இசை படத்தின் மூடுக்கு ஏற்றவாறு படத்தோடு இழையோடுகிறது.

இயக்குனர் மனிஷ் ஜா துணிச்சலாக படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் கதை இப்படி இருந்தாலும், ஆபாசமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. வசனங்களிலும், உருவக காட்சிகளிலும் மட்டுமே பல செய்திகள் நமக்கு சொல்லப்படுகின்றன.

2003 இல் வெளியான இத்திரைப்படம், வெனிஸ் திரைப்படவிழா மற்றும் தேச்சலோனிக்கி திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளி உள்ளது.

நிச்சயம் மென்மையான இதயங்களை உடையவர்களுக்கு மற்றும் பதினெட்டு வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு இந்த திரைப்படம் அல்ல.

-------------

Saturday, December 19, 2009

பிச்சைக்காரர்கள் இல்லா நகரம்- கோவை மாநகரில் புது முயற்சி


இல்லாதவர்களுக்கு உதவும் குணம் நம் தமிழருக்கு என்றும் உண்டு. பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படும் அதே வேளையில் அயல் நாட்டினரைக் கண்டால் அவர்களை சூழ்ந்து கொண்டு இருப்பவர்களும் பிச்சை கேட்பது, நமது நாட்டை அவர்கள் குறைத்து மதிப்பிடுவதற்கு வழி செய்து விடுகிறது. வெளிநாட்டில் இந்தியாவை பற்றி எந்த ஒரு நிகழ்ச்சி காட்டப்பட்டாலும், இந்தியாவின் வறுமையும், இந்தியாவில் இருக்கும் பிச்சைக் காரர்களும் அதில் நிச்சயமாக இடம் பெறுவார்கள். அழுக்கு துணியும் பல நாட்களாக வெட்டப்படாத தலை முடியும் பல நாட்களாக சவரம் செய்யப்படாத முகமும் இவர்களின் அடையாளங்கள். போக்குவரத்து சிகனல்களில் கை குழந்தைகளுடன் வண்டிகளில் செல்பவர்களின் சட்டையையும் கைகளையும் இழுத்து காசு கேட்கும் தாய் மார்களை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு காசு கொடுக்கும் நேரத்திற்குள் சிக்னல் பச்சை காட்டிவிட அவ்வப்போது சில விபத்துகளும் நிகழ்வதுண்டு.

இதனை எல்லாம் தடுத்து நிறுத்தும் திட்டம் ஒன்று கோவை மாநகரில் ஆரம்பிக்கப் பட உள்ளது. இந்த செய்தியினை தினமலர் நாளிதழில் படித்து ஆனந்தம். கோவை கலெக்டர் உமாநாத், காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி பிச்சைகாரர்களை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. டான் பாஸ்கோ தொண்டு நிறுவனம் இவர்களில் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர முன் வந்துள்ளது. அவர்களுக்கு மன நல மருத்துவர்கள் கொண்டு ஆலோசனையும், அவர்களுக்கு மறுவாழ்வும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் இரண்டு சுகாதாரப் பணியாளர்கள், இரண்டு போலீஸ் காவலர்கள் மற்றும் நான்கு டான் பாஸ்கோ பணியாளர்களைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு டிசம்பர் 19 அன்று பிச்சைகாரர்களை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது. கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு, டவுன் ஹால், உக்கடம், ரயில் நிலையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள 320 பிச்சைகாரர்கள் பிடிக்கப்பட்டு வரதராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு முடி வெட்டி சவரம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டு சோப்பு ஷாம்பூ அளிக்கப்பட்டு குளிக்க செய்து புத்தாடைகள் அளிக்கப்பட்டது. சுட சுட உணவு அளிக்கப்பட்டு, மன நல கவுன்சல்லிங் அளிக்கப்பட்டது அதன்படி ஒவ்வொருவருக்கும் பிச்சை எடுக்காமல் உழைத்து வாழ வழி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் பெயரளவில் மட்டும் அல்லாது , தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் பிச்சைக்காரர்கள் இல்லாத நகராக கோவை மாநகரம் மாறக்கூடும். தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய ஹை டெக் நகராக உருவாகி வரும் கோவை, பிச்சைக் காரர்களும் இல்லாத நகராக, உழைத்து வாழும் மக்கள் கொண்ட நகராக மாறினால், தமிழ் நாட்டின் மற்ற நகரங்களுக்கு ஒரு சிறந்த முன்னோடியாக மாறக்கூடும். மற்ற நகர்களின் கலெக்டர்களும் கோவை கலெக்டர் உமாநாத்தை போல திட்டம் தீட்டி பிச்சைக் காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்தால், பிச்சைகாரர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாக திகழ கூடும். அரசியல்வாதிகளும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும் இந்த விஷயத்தில் உதவி, தமிழகம் தழைக்க வழி செய்தல் நலம்.

இதற்க்கு முயற்சி செய்த கோவை மாவட்ட கலெக்டர் திரு உமாநாததுக்கும், பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்ப்படுத்த உதவிடும் டான் பாஸ்கோ தொண்டு நிறுவனத்துக்கும் நன்றிகள் பல.

Monday, December 14, 2009

வட்டம்


வட்டம்:
=======
தாயின் கருவறை,
சமுதாய வரையறை,
குழுவின் எல்லை,
மருந்து வில்லை...

பௌர்ணமி நிலவு...
மனிதனின் உறவு...
இதழ்களின் குவிப்பு.
குழந்தையின் சிரிப்பு ..

உலகின் வடிவம்.
கடிகாரப் படிவம்,
அலைகளின் எழுச்சி...
புயலின் சுழற்சி,

மங்கையின் வளையல்
மழைத்துளி சிதறல்
எண்களின் துவக்கம்,
அயர்ச்சியில் கிறக்கம்.

சுமங்கலிக் குங்குமம்
நதிகளின் சங்கமம்,
மனிதத்தின் திட்டம்
வாழ்க்கையே வட்டம்.
---

Monday, December 7, 2009

உலக சினிமா: சென்ட்ரல் ஸ்டேஷன் (பிரேசில்)

ஐம்பதுகளில் இருக்கும் ஒரு கள்ளப் பெண்மணி, பதினோரு வயது சிறுவன், இவர்கள் இருவரின் பயணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான திரைப்படம் அளிக்கமுடியுமா? முடியும் என நிரூபித்திருக்கிறார், எனது மதிப்புக்குரிய இயக்குனர்களில் ஒருவரான பிரேசிலிய இயக்குனர் வால்ட்டர் சல்லஸ். அந்த திரைப்படம் தான் சென்ட்ரல் ஸ்டேஷன். சிறிது சிறிதாக படத்தினுள் நாம் இழுக்கப்பட்டு, டோரா மற்றும் ஜோஷுவா ஆகியோருடன் நாமும் பிரேசிலிய கிராமங்களில் பயணம் சென்று வந்த உணர்வு.

ஐம்பதுகளில் இருக்கும் டோரா தான் படத்தின் நாயகி. சிறுவயதில் தனக்கு நேர்ந்த அவமானங்களில் மனம் வெறுத்து தனது குடும்பத்தை பிரிந்து பிரேசிலின் தலை நகரான ரியோ தே ஜெனிரோவில் தனது தோழியுடன் வாழ்கிறாள். அவளுக்கு வேலை? ரியோவின் சென்ட்ரல் ஸ்டேஷன் இல் ஒரு பெஞ்சை போட்டு எழுத படிக்க தெரியாத மக்களுக்கு கடிதம் எழுதும் வேலை. ஒரு கடிதம் எழுத ஒரு பிரசிலிய ரியல். அதனை தபால் பெட்டியில் சேர்க்க ஒரு ரியல். என அவளது வாழ்க்கை ஓடுகிறது. பலரும் வந்து அவளிடம் கடிதம் எழுதி காசும் தருகிறார்கள். எல்லாவற்றையும் எழுதி தனது வீடு கொண்டு வந்து அவர்கள் எழுத சொன்னதை தனது தோழி ஐரீனுக்கு படித்துக்காட்டி இருவரும் சிரிக்கிறார்கள். பின்னர் பல கடிதங்களை கிழித்து போடுகிறாள். சில கடிதங்களை மட்டும் தனது மேசை டிராயரில்வைத்துக்கொள்கிறாள்.

ஒரு நாள் அனா என்ற ஒரு பெண்மணி சென்ட்ரல் ஸ்டேஷன் இல் தனது பதினோரு வயது மகனான ஜோஷுவாவை டோராவிடம் அழைத்து வருகிறாள். ஜோஷுவாவை பார்த்தவுடன் டோராவிற்கு பிடிக்காமல் போகிறது. அவனுக்கும். அவன் தனது பம்பரத்தை வைத்து டோராவின் மேசையை குடைகிறான். அவளோ அவனை அடிக்க கையை ஓங்கி விரட்டி விடுகிறாள். அனா தனது கணவனுக்கு டோராவை கடிதம் எழுத சொல்கிறாள். ஜோஷுவா நன்றாக வளர்ந்து விட்டான் என சொல்லி அவளது முகவரியை கூறி சந்திக்க வருமாறு அக்கடிதத்தில் எழுதுமாறு டோராவை கேட்க அவளும் அவ்வாறே எழுத ஜோஷுவாவின் புகைப்படமும் அக்கடிதத்துடன் இணைத்து அனுப்ப கோருகிறாள். அப்படியே செய்வதாக கூறி அவளிடம் பணம் வாங்கிகொண்டு தனது கடிதங்களில் ஒன்றாக வைத்துக்கொள்கிறாள் டோரா. 'இவள் கடிதம் எழுதுகிறாள் அனால் அதனை அவள் தபால் பெட்டியில் போடுவாள் என்பது என்ன நிச்சயம்?' என கேட்கிறான் ஜோஷுவா. அதனாலேயே டோராவிற்கு அவனை பிடிக்காமல் போய்விடுகிறது.

கடிதம் எழுதிவிட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் ஐ விட்டு வெளியே வந்து சாலையை கடக்க எத்தனிக்கையில் கட்டுக்கடங்காத வேகத்தில் வரும் ஒரு பஸ் மோதி, அதே இடத்தில் இறந்து போக, அந்த ஒரே ஒரு நொடியில் அநாதை ஆகிறான்ஜோஷுவா.
அவனுக்கு இப்போது உலகத்தில் தெரிந்த ஒரே முகம், டோரா. அவளிடம் வந்து கண்களில் நீர் வழிய தன தாய் எழுதிய கடிதத்தில் தனது தந்தையின் முகவரி இருக்கும் என்றும் அதனை தனக்கு தரவும் வேண்டுகிறான். டோரா அவன் மேல் உள்ள கடுப்பில் தர மறுத்து விட்டு வீடு சென்று விடுகிறாள். அவனது இரவு அன்று அந்த ரயில் நிலையத்தில் கழிகிறது. மறுநாள் வழக்கம் போல ஸ்டேஷன் வரும் டோரா, அங்கு படுத்திருக்கும் ஜோஷுவாவை கண்டு மனம் இறங்கி, அவனுக்கு உணவு வாங்கி தருகிறாள். அதனை அவன் மறுத்து விடுகிறான். அப்போது அந்த ஸ்டேஷன் இல் கடை வைத்துள்ள ஒருவன் ஜோஷுவாவை நெருங்க, அவனை வழி மரிக்கும் டோரா, அவன் தனக்கு வேண்டப்பட்ட பையன் என கூறியதும் அவளை தனியே அழைத்துப் போய் பேசுகிறான். திரும்பி வந்த டோரா, ஜோஷுவவிடம் பரிவுடன் பேசி அவனை தனது வீடு அழைத்து சென்று சாப்பாடு கொடுத்து தனது தோழிக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாள். சிறுவனின் சூட்டிப்பைக் கண்டு டோராவின் தோழி ஐரீனுக்கு அவனை மிகவும் பிடித்து விடுகிறது. அன்று இரவு ஜோஷுவாவுக்கு டோராவின் வீட்டில் கழிகிறது.

காலையில் ஜோஷுவாவை தூரமாக இருக்கும் ஒரு இடத்திருக்கு கூடி சென்று ஒரு குடும்பத்திடம் அவனை ஒப்படைக்கிறாள் டோரா. இனி உனக்கு நல்ல காலம் பிறக்க போகிறது என்று சொல்லி அந்த குடும்பத்தாரிடம் 2000 ரியால் வாங்கிகொண்டு, ஸ்டேஷன் இல் இருந்தவுடன் ஆளுக்கு ஆயிரம் என பங்கு போடு கொண்டு வீட்டிற்கு ஒரு புது டிவி வாங்கி வருகிறாள். மாலையில் ஐரீன் டோராவிடம் ஜோசுவாவை பற்றி விசாரிக்க, அவன் வெளிநாட்டுக்கு தத்து கொடுக்கும் ஒரு குடும்பத்திடம் விட்டு விட்டதாகவும் அவனை ஐரோப்பியாவில் இருந்தோ அமெரிக்காவில் இருந்தோ பெரும் செல்வந்தர்கள் தத்தெடுத்துக் கொள்வார்கள் என்றும் சொல்ல... அவர்கள் குழந்தைகளை கொன்று அவர்களது உறுப்புகளை எடுத்து விற்கும் கூட்டம் என ஐரீன் சொல்கிறாள். தனது தவறை உணர்ந்த டோரா ஜோஷுவாவை அந்த குடும்பத்தில் இருந்து காப்பாற்றி அவனது தந்தை இருக்கும் ஊரை நோக்கி பயணமாகிறாள்.
அந்தப் பயணத்தில் டோராவிற்க்கும் ஜோஷுவாவிற்க்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய் விடுகிறது. இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்தாலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். வழியில் பணம் எல்லாம் இழந்து போக, ஒரு ட்ரக் ஓட்டுனர் அவர்களுக்கு உதவுகிறார். அவர் மேல் டோராவிற்கு காதல் வர அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை தனியே விட்டு சென்று விடுகிறார். எப்படியோ அவனது தந்தை இருக்கும் ஊர் வந்து சேரும் அவர்கள், அவனது தந்தை வீட்டை விட்டு வேறு ஒரு ஊருக்கு சென்று விட்டதை அவ்வீட்டில் குடி இருந்தவர்கள் கூறுகிறார். அந்த ஊறி திருவிழா ஆகையால், மிகுந்த நெரிசல். பணம் இன்றி பட்டினி கிடந்த டோரா மயங்கி விழுகிறாள். அவளை ஜோஷுவா மடியில் கிடத்தி தடவி கொடுத்து நன்றாக பார்த்து கொள்ள மனம் நெகிழ்கிறாள் டோரா.

அங்கு சாமிக்கு கடிதம் எழுத ஆள் இல்லாததை கண்ட ஜோஷுவா உடனே டோராவை அங்கு அமர வைத்து எழுதி கொடுக்க வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஒரு விடுதியில் அறையும் எடுக்கிறார்கள். அப்போது வழக்கம் போலஎழுதிய கடிதங்களை, ஜோஷுவா கிழிக்க போக அதனை தடுக்கும் டோரா மறுநாள் அதனை தபால் நிலையத்தில் சேர்த்து விடுகிறாள். பின்னர் அவனது தந்தை வீட்டிற்கு செல்லும் அவர்கள் ஜோஷுவாவின் சகோதரர்களை சந்திக்கிறார்கள். ஜோஷுவவின் தந்தை ஜோஷுவாவின் அன்னைக்காக காத்திருந்து காத்திருந்து கடிதம் வராமல், தண்ணி அடித்தே இறந்து போனதை சொல்கிறார்கள். தனது தம்பியை பாசத்துடன் ஏற்றுக் கொள்கிறார்கள். ஜோஷுவாவை சரியான இடத்தில் சேர்பித்து விட்டதால், நிம்மதி அடையும் டோரா, விடியும் முன் ஜோஷுவா தனக்கு வாங்கி தந்த ஆடை அணிந்து கொண்டு புறப்படுகிறாள். காலை எழுந்ததும் ஜோஷுவா ஓடி வந்து அவளை தேடுகிறான். அப்போது அவள் பஸ்ஸில் ஏறி வெகு தூரம் சென்று விட்டிருக்கிறாள். ஜோஷுவவுக்கு கண்ணீர் மல்க அவள் கடிதம் எழுதுகிறாள். அத்துடன் படம் முடிகிறது.

படத்தின் உயிர் நாடி ஜோஷுவாக நடித்துள்ள வ்நிசிஸ் தி ஒலிவேரா (Vinícius de Oliveira) மற்றும் டோராவாக நடித்துள்ள பெர்னாண்டோ மொண்டேநேக்ரோ ( Fernanda Montenegro) ஆகியோரின் நடிப்பு. ஒரு திரைப்படமாக அல்லாமல் நம் கண்முன்னே நடக்கும் கதை போல ஒரு தோற்றத்தை கொண்டு வந்த பெருமை இவர்களையே சேரும்.

வால்ட்டர் செலேசின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வால்ட்டர் கர்வால்ஹோ தான் இந்த படத்துக்கும். ட்ரைனை தொடர்ந்து சூரிய கதிர்கள் ஊடாக ஜோஷுவா ஓடி வரும் காட்சியும், அந்த கிராமத்தில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மேழுகுதிரிகளுகிடையே, டோரா ஜோஷுவாவை தேடி செல்லும் காட்சியும் கண்களுக்கு விஷூவல் விருந்து.
மனித நேயத்தை ஒரு வித்தியாச கோணத்தில் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார் வால்ட்டர் செலஸ்.

இத்திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பாப்டா மற்றும் பெர்லின் விருதுகள் இத்திரைப்படத்துக்கு கிடைத்தன.

அவசியம் சென்று சேர வேண்டிய இடம்... சென்ட்ரல் ஸ்டேஷன்.

----

Tuesday, December 1, 2009

அது ஒரு மழைக்காலம்!இக்கவிதையை வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி.

அது ஒரு மழைக்காலம்!
------------------------------
அவள்...
என் வாழ்க்கை வானத்தில்
மின்னி மறைந்தாள்

மேகங்கள்
என்னை விலகி சென்றன...

என்
இதயத்தின் இடிமுழக்கம்
எனக்கு மட்டும் கேட்டது.

என்
கனவுத் துளிகள்,
மண்ணில்
விழுந்து தெறித்தது.

என் கண்களில்
புறப்பட்ட
வெள்ளம்
என்
இதழ் கடந்து மார்பை நனைத்தது.

என்
நம்பிக்கை மரங்கள்,
அறுந்து விழுந்தன.

மனதில் பாய்ந்த
மின்சாரத்தால்,
என்
காதல் மனிதர்கள்
மாண்டு போனார்கள்.

ஒளியை தொலைத்த
என்
வாழ்க்கை பிரதேசங்கள்...
இருட்டில் இளைத்தன.

இன்று....
மழை ஓய்ந்துவிட்டது

என்
இதயபூமி
காத்திருக்கிறது
அடுத்த மழையை
எதிர்பார்த்து....!

-நிலா முகிலன்
=============

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...