Friday, May 15, 2015

உலக சினிமா: Boyhood ( அமெரிக்கா ) ஆஸ்கார் திரைப்பட வரிசை 2.



இப்பதிவை வெளியிட்ட விகடனுக்கு நன்றி.

மனித மனங்கள் மற்றவர்களின் வாழ்க்கையை  அருகே இருந்து கவனிக்க ஆசைப்படும். அடுத்தவன் வீட்டில் ஏதாவது நடந்தால் எட்டிப் பார்க்கும் குழு மனநிலை நம் சமூகத்துக்கு ஏற்பட்டது இப்படித்தான்.

இதே மனநிலை பற்றி 'The Truman story' போன்ற பல  திரைப்படங்கள் வந்திருந்தாலும் boyhood  போல ஒரு முயற்சி இதுவரை உலக திரைப்பட வரலாற்றில் நடந்ததில்லை. ஒரு மனிதனின் ஆறு வயது முதல் பதினெட்டு வயது வரையிலான வாழ்கையை சொல்கிறது இத்திரைப்படம். இதிலென்ன புதுமை? இத்திரைப்படம் பனிரெண்டு வருடங்களாக அதே நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அந்தந்த வருடத்துக்கு ஏற்றவாறு அந்ததந்த நடிகர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அந்த வருடத்தின் கால மாற்றங்களுக்கேற்ப படமாக்கப்பட்டிருக்கிறது படம்.

மேசன் என்கிற ஆறு வயது சிறுவனின் ஊடாக சொல்லப்படுகிறது ஒரு பனிரெண்டு வருட வாழ்க்கை. மேசனின் பெற்றோர் பிரிந்துவிட தனது தாய் மற்றும் தனது சகோதரி சமந்தாவுடன்  ஒரு நடுத்தர வாழ்கையை வாழ்ந்து வருகிறான். பெற்றோர் பிரிந்துவிட்டதால், கோர்ட் விதிமுறைகளின்படி அவர்களது தந்தை அவ்வப்போது வந்து மேசனையும் சமந்தாவையும் அழைத்து கொண்டு வெளியில் செல்வது வாடிக்கையானது. அவர்களது தாய்க்கு திருமணங்கள்  நிலைப்பதில்லை.

அவர்களை, அவர்களது தாயின் தாய் அதாவது பாட்டி, தான் இருக்கும் டெக்சாசில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு அழைத்துக்  கொள்கிறாள். அதுவரை தாங்கள் வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, நண்பர்கள் அனைவரையும் சோகத்துடன்  பிரிந்து செல்கிறார்கள் மேசனும் சமந்தாவும். அங்கே மேலே படிக்கும் மேசனின் தாய் தனக்கு பாடம் சொல்லித்தரும் பேராசிரியருடன் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ள. அவரின் மகள் மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் வாழத் துவங்குகிறார்கள் மேசனும் சமந்தாவும். எனினும் புதிதாகக் கிடைத்த சகோதர சகோதரியுடன் நட்பு பாராட்ட, குடிக்கு அடிமையான பேராசிரியரோ அவர்களிடம் ஒரு அதிகாரத் தோரணையுடன் நடந்து கொள்கிறார். ஒரு நாள் அவர்களது தாயை  தாக்கிவிட, அவ்விடம் இருந்து மேசனும் சமந்தாவும் தங்களது புதிய தந்தை, சகோதர சகோதரியை விட்டு பிரிந்து வேறிடத்துக்கு  குடி பெயருகிறார்கள்.

அவ்வப்போது வந்து சந்திக்கும் தந்தை அவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கிறார். அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார், பின்னே அவரும் வேறொரு பெண்ணை மணம் புரிந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார். அவர்களது அம்மா மீண்டும் ஒரு முன்னாள் ராணுவ வீரனை மணந்து கொள்ள, அதிலும் கசந்து வெளியேறுகிறாள். மேசனும் சமந்தாவும்  பதின்ம வயதில் பள்ளி மேற்படிப்பு முடித்து கல்லூரியில் சேருவதோடு  முடிகிறது படம்.

ஒரு அமெரிக்க வாழ்கையை தத்ரூபமாக கண் முன்னே நிறுத்துகிறது படம். நடிக்கும் கதாபாத்திரங்களின் வளர்ச்சி குறிப்பாக மேசன் மற்றும் சமந்தா  சிறுவயதில் இருந்து பதின்ம வயது வரை தோற்ற மாற்றங்கள் எந்த விதமான பூச்சும் இன்றி இயல்பாக கடந்து ஒரு உண்மையான வாழ்கையை திரையில் காணும் பிரம்மிப்பை உண்டு செய்கிறது. அமெரிக்க குழந்தைகள் கடந்து செல்லும் பிரச்சனைகளை இயல்பாக கவலையோடு உரையாடுகிறது படம். தாயின் திருமண தோல்விகள், அடிக்கடி இருப்பிடம் மாறுவதால் தொடர்பிழக்கும் நட்பு வட்டம், பிள்ளைகளின் மீதான பெற்றோரின் வன்முறை, பள்ளியில் சக மாணவர்களால் ஏற்படும் BULLYING  எனப்படும் ராகிங், காதல் தோல்விகள் என இங்கு குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை சொல்லி செல்லும் அதே வேளையில். மேசன், சமந்தாவின் தந்தை , மேசனின் ஆசிரியர் போன்றோரின் மூலம் அவர்களுக்கான அறிவுரைகளையும் வழங்கத்  தவறவில்லை.

காலத்தே  மாறும் செல் பேசி மாடல்கள், இராக் போர், ஹாரி பாட்டர் திரைப்பட வெளியீடு தினம்,ஒபாமா, மெக்கெய்ன்  போட்டியிட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் என கதை நடக்கும் காலத்தை குறிப்பிட்டு செல்லும் காட்சிகளின் குறியீடுகள் படம் நெடுக விரவிக் கிடக்கின்றன.
ரிச்சர்ட் லின்க்லேட்டார். தன மகள் லோரேலி லின்க்லேட்டர்  மற்றும் படத்தின் நாயகன் எல்லார் கோல்ட்ரேன்.

இயக்குனர், ரிச்சர்ட் லின்க்லேட்டர் (Richard Linklater ). இந்த படத்துக்காக ஒவ்வொரு வருடத்துக்குமாக சேர்த்து பனிரெண்டு திரைக்கதைகளை எழுதியதாக சொல்கிறார். படத்தின் வரைவை (outline ) முதலில் தீர்மானித்துவிட்டு பின்பு காலத்துக்கேற்றபடி திரைக்கதை அமைத்து அந்த வருடத்தைய சிறப்புகளை திரைக்கதையில் சேர்த்திருக்கிறார். தனது மகள் லோரேலி லின்க்லேட்டர் சிறுவயதில் செய்த சேட்டைகளை கண்டு, அவளையே படத்தில் மேசனின் சகோதரி சமந்தாவாக நடிக்க வைத்திருக்கிறார். மேசனாக செய்திருப்பவர் எல்லார் கோல்ட்ரேன் (Ellar Coltrane) படத்துக்காக தனது வாழ்க்கையை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியாமல், முடி வெட்டுதலை கூட இயக்குனரின் அனுமதி பெற்றபின் தான் செய்ததாக புலம்பி இருக்கிறார்.

படத்தின் ஜீவன், மேசனின் தாயாக நடித்திருக்கும் பெற்றிசியா ஆர்க்வெட் (Patricia Arquette). தனது திருமணங்கள் தோல்வியில் முடியும் வேளையில்  மனம் ஓடிவதும், அதனால் தனது பிள்ளைகள் பாதிக்கபடுவதை கண்டு மனம் வெதும்புவதும்,   அனைவரும் தன்னை தனியே விட்டு விட்டு பிரிந்து செல்லும்போது உடைந்து அழுவதுமாக அதகளப் படுத்தி இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கான ஆஸ்கார் விருது மற்றும் கோல்டன் க்ளோப்  விருது என கை நிறைய விருதுகளை சம்பாதித்து கொடுத்தது இந்த கதாபாத்திரம்.

படத்தின் ஆன்மா இசை. கதை நடக்கும் ஒவ்வொரு காலகட்டத்தையும் உணர்த்துவதற்காக அந்ததந்த காலங்களை பிரதிபலிக்கிறது இசை. படமாக்குவதற்கு டிஜிட்டல் உட்பட பல்வேறு கருவிகள் வந்துவிட்ட போதிலும், கதை நடக்கும் காலங்களுக்கிடையே ஆன  தொடர்பு காட்சிகள் (continuity ) அறுபட்டு விடக் கூடாது என்பதற்காக 35 எம் எம் பிலிம் சுருளில் முழு படத்தையும் எடுத்ததாக கூறுகிறார் இயக்குனர் லின்க்லேட்டார்.

பாய்ஹூட் -வாழ்க்கை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...