Wednesday, June 29, 2011

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் - 9

                                                                 லுசர்ன் நகரம்.
ஜூரிக் நகரிலிருந்து லுசர்ன் (LUZERN) நகருக்கு ரயிலில் ஒரு மணி நேரம் பயணப் பட வேண்டும். இந்த இடத்தில் தான் சூர்யா நடித்த 'சில்லென்று ஒரு காதல்' படத்தில் வரும் 'நியூயார்க் நகரில்' பாடம் முழுவதையும் சூட் செய்திருந்தார்கள், என்பது அந்நகரத்து வீதிகளில் நடக்கையில் புலப்பட்டது.


மற்ற நகரங்களை போல இல்லாமல், லுசேர்ன் நகரம் தனித்துவம் பெற்று மேலும் அழகாக இருந்தது. லுசர்ன் ஏரியில் கட்டப்பட்டிருந்த சாபேல்  பிரிட்ஜ்  என்ற மரத்தாலான பாலம் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என அறிந்து வாய் பிளந்தோம். அந்த மரப்பாலத்தில் ஆங்காங்கே சொருகப் பட்டிருந்த பூக்கள் அந்த அழகான பாலத்தை மேலும் அழகூட்டியது.
                                                              சாப்பல் மரப்பாலம்.
அங்கே சிறிது நேரம் சுற்றித் திரிந்துவிட்டு அங்கிருந்து ஒரு பஸ் பிடித்து பிளாட்ஸ் மலையின் அடிவாரம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து மூன்று கேபிள் கார்களில் பயணப்பட்டால் தான் பிலாடுஸ் மலையின் உச்சியை அடைய முடியும். அதிக கனவுகளுடன் எங்கள் கேபிள் கார் பயணம் ஆரம்பம் ஆகியது. சிறிது சிறிதாக மேலே செல்ல செல்ல, லுசர்ன் நகர் கீழே செல்ல செல்ல அந்த நகரின் அழகை கண்களில் பருக இரு விழிகள் போதாது என்பது எனது எண்ணம். இரண்டாவது கேபிள் கார் நிறுத்தத்தில் உணவகங்கள் இருந்தன. பலதரப்பட்ட 'அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்' நடந்து கொண்டிருந்தது. அங்கு நாங்கள் சண்ட்விச்சுகள் வாங்கி கொண்டு உண்ண அமர, புராதன சுவிஸ் உடை அணிந்தபடி சுவிஸ் மக்களின் இசை கருவியான ஆல்ப் ஹோர்ன் (Alp horn). வாசித்தனர் பனிரெண்டு பேர். சாதாரண மௌத் ஆர்கன் வாசிக்கவே மூச்சு திணறும் எனக்கு அவ்வளவு பெரிய ஒரு கருவியை அற்புதமாக வாசிக்க எப்படி முடிகறதோ என ஆச்சர்யப் பட்டு கொண்டிருந்த நேரம் எங்களை ஏற்றி செல்ல கடைசி கேபிள் கார் வந்து சேர்ந்தது.

முதல் இரண்டு கேபிள் கார்களில் இரண்டு இரண்டு பேராக ஏற்றி சென்றது கேபிள் கார். மூன்றாவது சற்று பெரிதாய் இருக்க, இடம் கொள்ளளவு படி கிட்டத்தட்ட இருபது பேர்களை ஏற்றி சென்றது. நாங்கள் கேபிள் கார்களில் சென்று கொண்டிருக்கும் வேளையில், தரையில் குடும்பம் குடும்பமாக நடந்தபடி ட்ரெக்கிங் செய்தபடி மலை ஏறுபவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருதோம். தங்களது பெற்றோருடன் பத்து வயதே  நிரம்பிய  சிறார்களும் நடந்து சென்றது தான் ஆச்சர்யம்.
                             பிளடுஸ் மலையில் இருந்து லுசர்ன் ஏரியின் காட்சி.
நாங்கள் மவுண்ட் பிளடஸ் மலை உச்சியை அடைந்ததும் ஓடி ஓடி சென்று முகடுகளின் ஓரத்தில் நின்று பார்க்கையில், இயற்க்கை அன்னை கொட்டி கொடுத்த அழகு காட்சிகளை காண கண்கள் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைந்தோம். லுசர்ன் ஏரியும், லுசர்ன் நகரும் மவுண்ட் பிளடஸ் மலை உச்சியில் இருந்து பார்க்கையில் கொள்ளை அழகு.  அங்கேயே அமர்ந்து இயற்கையை ரசிக்க சாய்மான நாற்காலிகள் பலவற்றை போட்டு வைத்துள்ளனர். அதில் சாய்ந்தபடி நீங்கள் அந்தி சாயும் வரை இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வப்போது பஞ்சு மெத்தைகள் போல நமது காலடியில் மேகங்கள் கடந்து சென்று இயற்கையை மறைக்கிறது. வெண்பனி படர்ந்து புகை மண்டலமாக ஆகி, நாம் திரைப்படங்களில் வருவது போல எதோ சொர்க்கத்தில் இருப்பதை போல உணர்கிறோம்.


அங்கு பல மணி நேரங்கள் செலவிட்டப்பின் மலையின் கீழ் இறங்க காக் ரயில் (cog rail) என்னும் உலகின் மிக மெதுவான ரயிலில் இறங்கினோம். ரயிலே படிக்கட்டு போல அமைந்திருப்பது இதன் சிறப்பு. ரயிலில் இரண்டு ஜெர்மானிய ஜோடிகள் ஜெர்மனியில் ஏசி பேசி சண்டையிட்டு கொண்டிருந்ததை பார்க்க புதுமையாக இருந்தது. அரை மணி நேரப் பயணத்துக்கு பின்னர் நாங்கள் மலையின் மற்றொரு புறம் இறங்கி இருந்தது தெரிந்தது. அருகேயே ரயில் நிலையம் இருக்க, ரயிலில் ஏறி அரைமணி நேரப் பயணத்துக்குப் பின் லுசர்ன் நகர ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து ஜுரிக் நகர ரயில் நிலையம் சேர்ந்து தாங்கும் விடுதிக்கு வந்து சேர இரவு எட்டு மணி ஆனது. அந்த ஜெர்மானிய தம்பதியினர் எதற்காக சண்டையிட்டு இருப்பார்கள் என்று யுகம் செய்தபடியே தூங்கிப் போனோம்.


தொடரும்..

Monday, June 20, 2011

திரைப்படம்: ஆரண்ய காண்டம்ஒவ்வொரு முறையும் ஒரு சிறந்த உலக திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம், இது போன்ற ஒரு திரைப்படம் எப்போது நமது தமிழில் வரும் என நினைத்து ஏங்கியதுண்டு. இப்போது தமிழ் திரைப்படங்களும் உலக திரைப்படங்களின் தரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதற்கு ஆரண்ய காண்டம் ஒரு வலுவான ஆதாரம். பருத்தி வீரனில் ஆரம்பித்த முயற்சி, சுப்ரமணிய புரத்தை தொடர்ந்து, இப்போது ஆரண்ய காண்டம் என்ற ஒரு சிறந்த திரைப்படத்தில், உலக திரைப்படங்களுக்கெல்லாம் சவாலான ஒரு முயற்சி தெரிகிறது.

இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அப்பாவின் பணத்தை செலவிட்டாலும், வணிக நோக்கோடு குப்பை படங்களை எடுத்து தள்ளாமல், ஒரு நல்ல திரைப்படத்தை தயாரித்ததற்காக எஸ் பி சரணுக்கு ஒரு பூங்கொத்து. ( தன பையன் எடுத்த திரைப்படங்களால் நஷ்டமடைந்த எஸ் பி பி தனது குருநாதர் பெயரில் கட்டிய கோதண்டபாணி ஸ்டுடியோவை விலை பேசி வருவதாக தகவல்).

இரண்டு நிழல் உலக தாதாக்களான  சிங்கம்பெருமாள் மற்றும் கஜபதி ஆகியோருக்கு பகை. கதை நடக்கும் நாளில்,  (படத்தின் கதை காலையில் ஆரம்பித்தது மாலையில் முடிந்து விடுகிறது) அதிகாலையில், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, தனது வைப்பாக வைத்திருக்கும் சுப்புவிடம் தனது தள்ளாத வயதில் சுகம் அனுபவிக்க முடியாத சிங்கம்பெருமாளுக்கு தனது இயலாமையை ஒத்துகொள்ள முடியாத கோவத்தில் இருக்க, அவரது அடியாள் பசுபதி, எதிராளி கஜேந்தரன் போதை பொருள் கடத்த போவதை மோப்பம் பிடித்து , அதனை கடத்த அனுமதி கேட்க, அதனை சிங்கம்பெருமாள் மறுக்க, 'உங்களுக்கு வயசாயடுச்சி அதனால ரிஸ்க் எடுக்க தயங்க றிங்க, நான் பாத்துக்கறேன்' என தனியாக வேலை செய்ய அனுமதி கேட்க, அதனால் கொவமுற்ற சிங்கம் பெருமாள், பசுபதியை போட்டு தள்ள தனது ஆளுகளை ஏவி விட, அதனை அறிந்து பசுபதி தப்பி விட... டாப் கியரில் கிளம்புகிறது திரைக்கதை.

இடையே வாழ்ந்து கேட்ட ஜாமீன் குடும்பத்திலிருந்து தங்களது கடனை அடைக்க சேவல் சண்டை விட்டு சம்பாதிக்க வரும் முன்னாள் ஜமீனும், அவரது மகனும்,  போதை பொருள் வைத்திருக்கும் ஆளுடன் இரவில் தங்க, அவனது போதை பொருளினால் தங்களுக்கு பணம் கிடைக்கும் என அறிந்து அதனை கடத்த, அந்த ஆள் இறந்து விட, போதை பொருள் வாங்க கஜேந்திரனின் குழு வர, அங்கே பொருளை காணமல், தனது ஆள் இறந்து கிடப்பதையும் கண்டு அதனை எடுத்து போனது நிச்சயம் சிங்கம்பெருமாளின் ஆளாக இருக்கும் என நினைத்து அவனுக்கு தொலைபேச, சிங்கம்பெருமாள் அதனை எடுத்தது பசுபதி தான் என போட்டு குடுக்க, பசுபதியை கஜேந்திரனின் ஆட்களும், சிங்கம்பெருமாளின் ஆட்களும் கொல்லதேடுவது தனிக்கதை. 

இதற்கிடையே சிங்கம் பெருமாள் சுப்பு என்கிற தனது வைப்புக்கு காவலாக 'சப்பை' என்ற பெண்தன்மை உடைய ஒருவனை துணைக்கு வைக்க, சுப்புவும் சப்பையும் காதல் கொள்ள....தட தடக்கும் திரைக்கதைக்கு ஏற்ற சுழற்றி அடிக்கும் ரத்த கிளைமாக்ஸ்.

ஓரம்போ, குவார்டர் கட்டிங் போன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய தியாகராஜா குமார ராஜா தான் இப்படத்தின் திரைக்கதை, வசனம் இயக்கத்துக்கு சொந்தக்காரர். அவரது திரைக்கதை உத்தியில், எனக்கு மிகவும் பிடித்தமான அலேஜன்றோ கோன்சாலஸ் இன்னரிட்டு, மற்றும் ஹாலிவூட் திரைக்கதை ஜாம்பவான குவென்டின் டொராண்டினோ வின் சாயல் தெரிந்தாலும், வித்தியாசமான திரைக்கதையால், ஹாலிவூட் தரத்தை எட்டி இருக்கிறார் என மார் தட்டிக் கொள்ளலாம்.

படத்தில் வரும் வசனங்களும் இயற்கையாய் அமைந்தும் அற்புதமாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் வந்து விழுகிறது. நீளமாக இல்லாமல் நறுக்கு தெறித்தாற்போல இருப்பது வசனகர்த்தாவின் வெற்றி. படத்தின் மூடுக்கு ஏற்ப இழைகிறது யுவனின் வயலினும் வினோத்தின் ஒளிப்பதிவும். யுவன் பல இடங்களில் மௌனத்தை மீட்டி இருந்தாலும், இசை கோர்வைகள் அனைத்தும் உலகத் தரத்தை எட்டிப் பிடிக்கிறது.

தமிழுக்கு புதுசான ஜாக்கி ஷேராபின் பாத்திரத்தை, தமிழில் வேறு யாரும் செய்ய முடியுமா என ஐயம் எழுகிறது. சம்பத் ராஜ்,சுப்புவாக நடித்திருக்கும் யாஸ்மின் பொன்னப்ப, சப்பையாக வரும் ரவிக்ருஷ்ண, ஜமீன், அவரது மகன், ஆண்ட்டிக்களை மடக்கும் டெக்னிக் சொல்லும் அடியாள் என பாத்திர படைப்புகள் காண கச்சிதம். நடிப்பில் கோடி கட்டி பறக்கிறார்கள்.

படத்தில் ரத்தம் அளவுக்கு அதிகமாவே தெறிக்கிறது. என்றாலும் கதைக் களனுக்கு அது அவசியமாகிறது.

நிச்சயமாக வயது வந்தோர்க்கான படம் இது. வசனங்களுக்கும்
வன்முறைக்கும்.

ஏற்கனவே அமெரிக்காவில் விருது வாங்கிய போதிலும், மேலும் பல விருதுகளை இத்திரைப்படம் குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆரண்யகாண்டம்... அறுசுவை பண்டம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...