Monday, June 20, 2011

திரைப்படம்: ஆரண்ய காண்டம்ஒவ்வொரு முறையும் ஒரு சிறந்த உலக திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம், இது போன்ற ஒரு திரைப்படம் எப்போது நமது தமிழில் வரும் என நினைத்து ஏங்கியதுண்டு. இப்போது தமிழ் திரைப்படங்களும் உலக திரைப்படங்களின் தரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதற்கு ஆரண்ய காண்டம் ஒரு வலுவான ஆதாரம். பருத்தி வீரனில் ஆரம்பித்த முயற்சி, சுப்ரமணிய புரத்தை தொடர்ந்து, இப்போது ஆரண்ய காண்டம் என்ற ஒரு சிறந்த திரைப்படத்தில், உலக திரைப்படங்களுக்கெல்லாம் சவாலான ஒரு முயற்சி தெரிகிறது.

இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அப்பாவின் பணத்தை செலவிட்டாலும், வணிக நோக்கோடு குப்பை படங்களை எடுத்து தள்ளாமல், ஒரு நல்ல திரைப்படத்தை தயாரித்ததற்காக எஸ் பி சரணுக்கு ஒரு பூங்கொத்து. ( தன பையன் எடுத்த திரைப்படங்களால் நஷ்டமடைந்த எஸ் பி பி தனது குருநாதர் பெயரில் கட்டிய கோதண்டபாணி ஸ்டுடியோவை விலை பேசி வருவதாக தகவல்).

இரண்டு நிழல் உலக தாதாக்களான  சிங்கம்பெருமாள் மற்றும் கஜபதி ஆகியோருக்கு பகை. கதை நடக்கும் நாளில்,  (படத்தின் கதை காலையில் ஆரம்பித்தது மாலையில் முடிந்து விடுகிறது) அதிகாலையில், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, தனது வைப்பாக வைத்திருக்கும் சுப்புவிடம் தனது தள்ளாத வயதில் சுகம் அனுபவிக்க முடியாத சிங்கம்பெருமாளுக்கு தனது இயலாமையை ஒத்துகொள்ள முடியாத கோவத்தில் இருக்க, அவரது அடியாள் பசுபதி, எதிராளி கஜேந்தரன் போதை பொருள் கடத்த போவதை மோப்பம் பிடித்து , அதனை கடத்த அனுமதி கேட்க, அதனை சிங்கம்பெருமாள் மறுக்க, 'உங்களுக்கு வயசாயடுச்சி அதனால ரிஸ்க் எடுக்க தயங்க றிங்க, நான் பாத்துக்கறேன்' என தனியாக வேலை செய்ய அனுமதி கேட்க, அதனால் கொவமுற்ற சிங்கம் பெருமாள், பசுபதியை போட்டு தள்ள தனது ஆளுகளை ஏவி விட, அதனை அறிந்து பசுபதி தப்பி விட... டாப் கியரில் கிளம்புகிறது திரைக்கதை.

இடையே வாழ்ந்து கேட்ட ஜாமீன் குடும்பத்திலிருந்து தங்களது கடனை அடைக்க சேவல் சண்டை விட்டு சம்பாதிக்க வரும் முன்னாள் ஜமீனும், அவரது மகனும்,  போதை பொருள் வைத்திருக்கும் ஆளுடன் இரவில் தங்க, அவனது போதை பொருளினால் தங்களுக்கு பணம் கிடைக்கும் என அறிந்து அதனை கடத்த, அந்த ஆள் இறந்து விட, போதை பொருள் வாங்க கஜேந்திரனின் குழு வர, அங்கே பொருளை காணமல், தனது ஆள் இறந்து கிடப்பதையும் கண்டு அதனை எடுத்து போனது நிச்சயம் சிங்கம்பெருமாளின் ஆளாக இருக்கும் என நினைத்து அவனுக்கு தொலைபேச, சிங்கம்பெருமாள் அதனை எடுத்தது பசுபதி தான் என போட்டு குடுக்க, பசுபதியை கஜேந்திரனின் ஆட்களும், சிங்கம்பெருமாளின் ஆட்களும் கொல்லதேடுவது தனிக்கதை. 

இதற்கிடையே சிங்கம் பெருமாள் சுப்பு என்கிற தனது வைப்புக்கு காவலாக 'சப்பை' என்ற பெண்தன்மை உடைய ஒருவனை துணைக்கு வைக்க, சுப்புவும் சப்பையும் காதல் கொள்ள....தட தடக்கும் திரைக்கதைக்கு ஏற்ற சுழற்றி அடிக்கும் ரத்த கிளைமாக்ஸ்.

ஓரம்போ, குவார்டர் கட்டிங் போன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய தியாகராஜா குமார ராஜா தான் இப்படத்தின் திரைக்கதை, வசனம் இயக்கத்துக்கு சொந்தக்காரர். அவரது திரைக்கதை உத்தியில், எனக்கு மிகவும் பிடித்தமான அலேஜன்றோ கோன்சாலஸ் இன்னரிட்டு, மற்றும் ஹாலிவூட் திரைக்கதை ஜாம்பவான குவென்டின் டொராண்டினோ வின் சாயல் தெரிந்தாலும், வித்தியாசமான திரைக்கதையால், ஹாலிவூட் தரத்தை எட்டி இருக்கிறார் என மார் தட்டிக் கொள்ளலாம்.

படத்தில் வரும் வசனங்களும் இயற்கையாய் அமைந்தும் அற்புதமாக வந்து ஒவ்வொரு காட்சியிலும் வந்து விழுகிறது. நீளமாக இல்லாமல் நறுக்கு தெறித்தாற்போல இருப்பது வசனகர்த்தாவின் வெற்றி. படத்தின் மூடுக்கு ஏற்ப இழைகிறது யுவனின் வயலினும் வினோத்தின் ஒளிப்பதிவும். யுவன் பல இடங்களில் மௌனத்தை மீட்டி இருந்தாலும், இசை கோர்வைகள் அனைத்தும் உலகத் தரத்தை எட்டிப் பிடிக்கிறது.

தமிழுக்கு புதுசான ஜாக்கி ஷேராபின் பாத்திரத்தை, தமிழில் வேறு யாரும் செய்ய முடியுமா என ஐயம் எழுகிறது. சம்பத் ராஜ்,சுப்புவாக நடித்திருக்கும் யாஸ்மின் பொன்னப்ப, சப்பையாக வரும் ரவிக்ருஷ்ண, ஜமீன், அவரது மகன், ஆண்ட்டிக்களை மடக்கும் டெக்னிக் சொல்லும் அடியாள் என பாத்திர படைப்புகள் காண கச்சிதம். நடிப்பில் கோடி கட்டி பறக்கிறார்கள்.

படத்தில் ரத்தம் அளவுக்கு அதிகமாவே தெறிக்கிறது. என்றாலும் கதைக் களனுக்கு அது அவசியமாகிறது.

நிச்சயமாக வயது வந்தோர்க்கான படம் இது. வசனங்களுக்கும்
வன்முறைக்கும்.

ஏற்கனவே அமெரிக்காவில் விருது வாங்கிய போதிலும், மேலும் பல விருதுகளை இத்திரைப்படம் குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆரண்யகாண்டம்... அறுசுவை பண்டம்.

3 comments:

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

Tamil Movies Gallery

அரசன் said...

நல்ல விமர்சனம் ...
நானும் பார்த்தேன் ,...
சிறந்த படம் ....

Anonymous said...

It has some similarities like "Lock Stock And Two Smoking Barrels 1998"

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...