Saturday, October 31, 2009

திரைப்படம் - காஞ்சிவரம்.


எத்தனை நாளாகிவிட்டது...இப்படி ஒரு உயிர்ப்புள்ள ஒரு படம் பார்த்து!

1948 இல நடக்கிறது கதை.ஊருக்கெல்லாம் பட்டு நெய்யும் நெசவாளிகள் கூட்டம் தங்களின் மனைவிக்கோ மகளுக்கோ பட்டு சேலை கொடுத்து மகிழ்விக்க முடியாமல் தவிக்கிறது. வெளியே எண்ணூறு ரூபாய்க்கு விற்கப்படும் சேலையை நெய்யும் நேசவாளிக்கோ எட்டு ரூபாய் கூலி. நெசவாளி வேங்கடம், தான் கட்டிக்க போகும் பெண்ணுக்கு பட்டுடுத்தி வீட்டுக்கு கூடி வர நினைத்து அது முடியாமல் போக, தனது மகள் கல்யாணத்திற்கு எப்படியாவது பட்டு சேலை கட்டி மணவறையில் தனது மகளை அமர வைக்கவேண்டும் என அவருக்கு ஆசை. அதனை சபதமாக ஏற்கிறார்.

சபதம் எடுத்தாகிவிட்டது. பட்டு சேலை நெய்ய பட்டு நூலுக்கு எங்கே போவது?. தான் வேலை செய்யும் இடத்திலேயே, பைகள் மற்றும் உடைகள் சோதிக்கப்பட்டு வெளியனுப்ப படும் இடத்தில் வாயில் வைத்து நூலை கடத்தி வீட்டுக்கு வந்து மகளுக்கு சேலை நெய்கிறார். இடையே ரத்தவாந்தி எடுத்து தனது மனைவி இறந்து போனாலும் தனது லட்சியத்தை நோக்கிய அவரது பயணம் தொடர்கிறது. நெசவாளர்களின் துன்பம் கண்டு அங்கு எழுத்தாளராக வரும் கம்யூனிச தோழரிடம் நட்பு ஏற்பட்டு, அவரும் அவரது நண்பரான சாரதியும் சேர்ந்து தொழிற்சங்கம் அமைக்கிறார்கள். நெசவாளர்களை சுரண்டும் எஜமானனை எதிர்த்து கோரிக்கை வைக்கிறார்கள். ஆலை மூடப் படுகிறது. அவ்வமயம் தனது நண்பன் சாரதியின் மகனை தன மகள் தாமரைக்கு நிச்சயிக்க பட, சாரதியின் மகனோ பட்டாளத்தில் இருந்து விடுப்பில் வந்து செல்லுமுன் திருமணம் செய்யுமாறு கோர, தனது மகளுக்கு பட்டு சேலை நெயவதற்காக, வேலை நிறுத்தத்தை நிறுத்தி வேலைக்கு சென்று மீண்டும் பட்டு நூலை வாய்க்குள் வைத்து திருடி வெளி வரும்போது தனது நண்பனான சாரதியினாலேயே அவரது திருட்டு வெளி வந்து விட, அவரை அடித்து இழுத்து செல்கிறது போலீஸ். பரோலில் தனது மகளை பார்க்க வரும் அவர் என்ன ஆனார் என்பது உள்ளத்தை உருக்கும் கிளைமாக்ஸ்.

பிரகாஷ் ராஜ் என் மதிப்பிற்குரிய ஒரு நடிகர். அவர் ஏற்று நடிக்கும் பாத்திரம் எதுவானாலும் வெளுத்து வாங்கி விடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சில படங்களில் ஓவர் ஆக்டிங் செய்தாலும் ரசிக்கவைக்க கூடிய நடிப்பு அவரது. காஞ்சிவரத்தில் பட்டு சேலை நெய்யும் நெசவாளி வேங்கடமாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

பாத்திரம் உணர்ந்து ஆர்பாட்டம் இன்றி அமைதியான நடிப்பில் அண்டர்ப்ளே செய்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது கண்கள் பேசுகின்றன. இந்த படத்தில் நடித்ததற்கு அவர் சம்பளம் பெற்றுக் கொள்ள வில்லையாம். தேசிய விருது பெற தகுதியான நடிப்புதான்.

திருவின் ஒளிப்பதிவு மிக கச்சிதம். பீரியட் படத்திற்க்கேர்ப்ப அவரது ஒளி அமைப்பு நிஜத்தை கண் முன்னே காட்டுவது போல இருக்கிறது. M G ஸ்ரீகுமாரின் இசை படத்தின் காலத்திற்கேற்ற உணர்வுகளை கொண்டு வருகிறது.

இயக்குனர் ப்ரியதர்ஷன், மலையாளத்திலும் ஹிந்தியிலும் பொழுதுபோக்கு படங்களாக எடுத்து தள்ளியவர். தனது ஆத்மா திருப்திக்காக படம் நிச்சயம் ஓடாது என்று தெரிந்தும் இரண்டு கோடி செலவு செய்து இப்படத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கி இருக்கிறார்.

படத்தின் இறுதியில் வரும் அந்த அபரிதமான சோக காட்சிகள்.. அவார்டு படம் என்றாலே இப்படி தான் இருக்குமா என்ற ஒரு தேக்கத்தை ஏற்படுத்துகிறது.

காஞ்சிவரம் தமிழ் திரைக்கு ஒரு வரம்.

Friday, October 30, 2009

ஆவிகளின் உலகம்..!


எல்லோருக்கும் வணக்கம். கடுமையான வேலை பளு காரணமாக என்னால் கடந்த சில நாட்களாக பதிவுகள் இட முடியவில்லை. (யாரு உன்னை கேட்டா ? என்று சிலர் சொல்வது எனக்கு கேட்கிறது...). அக்டோபர் முப்பது ஆவிகளின் தினம் என்பதால்..இதோ ஆவிகளை பற்றிய ஒரு கட்டுரையுடன் இதோ வந்து விட்டேன்.(போச்சுடா..)

ஆவிகள் உலகத்தில் இருக்கின்றனவா என கேட்டால்...பகுத்தறிவாளர்கள் சிரிப்பார்கள். நான் இது வரை எந்த ஆவியையும் (இட்லி சுடும்போது வரும் ஆவி மற்றும் கொட்டாவி தவிர...) நேரில் கண்டதில்லை. எனவே இதில் எனது கருத்தும் பகுத்தறிவாளர்களின் கருத்து தான். எனினும் ஆவிகளைப் பற்றிய கதைகளை கண்டும் கேட்டும் அதிசயித்திருக்கிறேன். ஆனால் எனக்கு கூறப்பட்ட சம்பவங்களின் நம்பகத்தன்மை எனக்கு இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது.

எனக்கு தெரிந்த சிலர் விளக்கணைத்து,மெழுகுவர்த்தி பொருத்தி (அப்போது தான் ஆவி வருமாம்.) கட்டங்கள் போட்டு ஆங்கில எழுத்துக்கள் எழுதி, நாணயத்தை கட்டத்தின் நடுவில் வைத்து ஆவிகளுடன் பேசியதாக கூறியுள்ளனர். எனது சகோதரனே எனது இறந்து போன பெரியம்மாவின் ஆவியுடன் பேசியதாக கூறி உள்ளான். அந்த ஆவி பெயரை மட்டும் கூறியது பின்னர் சத்தம் கேட்டவுடன் சென்றுவிட்டது என கூறினான். மறுநாள் தூங்கி எழுந்ததும் பேய் அறைந்தது போல இருந்தான். என்ன வென கேட்டபோது இரவில் தனக்கு பயங்கர கேட்ட கனவுகள் வந்தது என்றும் இனி தான் ஆவிகளுடன் பேசப்போவது இல்லை எனவுக் கூறினான். சிலர் ஆவியை அழைத்தபோது அது 'டூ நாட் டிஸ்டர்ப் ' என கூறியதாக சொன்னார்கள்.

வாஷிங்டன் டி சி வானொலியில் நேற்று ஒரு நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தேன். மன நல மருத்துவர்களுடன் நேயர்களின், தொலைபேசி மூலம் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி அது.

அப்போது ஒரு மைக் என்ற ஒரு தகப்பன் நடுங்கும் குரலில் சொல்கிறான்...
'எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். வயது 8. அவளுக்கு,அவளுக்கு மட்டும் சில பிம்பங்கள் தெரிகின்றன.அவள், அவளது அறையில் சில உருவங்களை பார்ப்பதாக சொல்கிறாள். அவளை தவிர மற்றவர்களுக்கு அவை புலப்படுவதில்லை. அந்த உருவங்கள் அவளை பயமுறுத்துவதில்லை.அந்த உருவங்களை அவள் அதற்க்கு முன்பு பார்த்தும் இல்லை.அவள் நார்மலாகத்தான் இருக்கிறாளா?'

இதற்க்கு மருத்துவர்கள் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கிறார்கள். அவள் பள்ளியில் எப்படி இருக்கிறாள்? சந்தோஷமாக இருக்கிறாளா? உங்கள் மணவாழ்க்கை எப்படி இருக்கிறது.அவள் சோர்வாக காண படுகிறாளா,உங்கள் வேலை எப்படி இருக்கிறது என.

எனக்கு மணவாழ்க்கை போன வருடம் முடிந்தது விவாகரத்து பெற்றுவிட்டேன். என பதில் வருகிறது.

அந்தப் பெண் உங்களது கவனத்தை பெறுவதற்காக அல்லது உங்கள் மணமுறிவுக்கு ஒரு வடிகாலாக அப்படி சொல்ல வாய்ப்பு உண்டு. அவளை மன நல மருத்துவரிடம் காட்டுவது நல்லது.

என் கேள்வி எல்லாம்...நிஜமாகவே அந்த பெண் உருவங்களை பார்த்திருப்பாளோ? மனோவியாதி என அதற்க்கு முடிவு கட்டப் படுகிறதோ என்பது தான்.

மனோ நல அகராதிகளை புரட்டிப் பார்த்தால் , இல்லாத உருவங்களை காண்பது ஒருவித மனோவ்யாதி என சொல்கிறது. அதற்க்கு சீசோபெறேன்யா (Schizophrenia) என நாமகரணமும் சூட்டியுள்ளது. இதைப்பற்றி எ பியுடிபுல் மைன்ட்(a beautiful mind) என திரைப்படமும் வந்து ஆஸ்கார் விருதுகள் வாங்கியுள்ளது.

ஜான் நாஷ் என்ற ஒரு பேராசிரியரின் கதையே அது. அவர் இன்னமும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யுனிவர்சிடி இல பேராசிரியராக இருக்கிறார்.( அவர் மாணவர்களை கண்டாலே எரிந்து எரிந்து விழுவார் என அங்கு பி எச் டி செய்த என் தோழி சொல்லி இருக்கிறாள்).

1999 இல தி ப்ளைர்விச் ப்ராஜெக்ட்(The Blair Witch project) என்ற உண்மை பதிவுகள் அமைந்த திரைப்படம் வெளியாகி அமெரிக்காவையே அலற வைத்தது.(இந்தியாவில் இந்த படம் வெளியானதா என தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்).

மூன்று திரைப்பட மாணவர்கள், இரண்டு ஆண்கள் ஒரு பெண், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பர்கித்ச்வில் என்ற இடத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் வாழும் ப்ளைர்விச் என்ற ஒரு சூனிய கிழவியை பற்றி தங்கள் பாடத்தின் ஒரு பகுதியான படம் எடுத்தல் என்ற பாடத்திற்காக சென்றனர். அவர்கள் கையோடு எடுத்து சென்ற வீடியோ கேமரா மற்றும் பிலிம் கமெராவில் பதியப்பட்ட காட்சிகள் இப்படத்தில் வருவது. அவர்கள் மூவரும் என்னவானார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. அவர்களால் எடுக்கப்பட்ட பிலிம் சுருள் மற்றும் வீடியோ கேமரா மட்டும் ஒருவருடம் கழித்து காட்டில் கண்டெடுக்கப் பட்டது. அப்படத்தில் காட்டின் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட வினோதமான மணிகள், கிலி ஏற்படுத்துவதாக இருந்தது. அவர்கள் தங்கி இருந்த கூடாரத்தின் முன்னே போடப்பட்ட ரத்தம் தோய்ந்த சதை துணுக்குகள் எல்லாவற்றையும் படம் பிடித்துள்ளனர். அவர்கள் பேய்களால் கொல்லப்பட்டனரா அல்லது வேறு மனிதர்களால் கொல்லப்பட்டனரா என இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது.(படத்தின் இறுதியில் எஞ்சி இருக்கும் பெண்ணின் அலறல் கேட்க காமெராவை தூக்கி கொண்டு ஓடும் ஆண் தாக்கப்படுவதொடு கேமரா கீழே விழுந்து 'விர்ர்' சத்தத்தோடு படம் முடிவடைகிறது. பேயையோ ஆவியையோ காட்டாமலும், கத்துக்குட்டி ஒளிப்பதிவில் (வீடியோ கமெராவில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆடிக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு காட்சியும்) எடுக்கப்பட்டிருந்தாலும் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுக்கு அந்த உண்மை காட்சிகளே காரணமாக சொல்லப்பட்டது.

நிஜ பிசாசுகள் ஆவிகள் இருக்கின்றனவா என தெரியவில்லை நான் கண்டதில்லை . ஆனால் மனித உருவத்தில் உள்ள பிசாசுகளை கண்டு இருக்கிறேன். சமீபத்தில் கூட..இலங்கையில்....

உங்களுக்கு எதாவது ஆவிகள் தொடர்பான அனுபவங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்தவும். ஆவிகள் பற்றிய எனது அறிவு விருத்தி அடைய உதவும்.

இனிய பிசாசுகள் தின வாழ்த்துக்கள்...(Happy Haloween..)
...

Saturday, October 3, 2009

நகைச்சுவை குற்றங்கள் -3


திருடன் போலீஸ் !!!!
====================

சிறையில் இருந்து விடுதலையான நியூயோர்க்கை சேர்ந்த ஜெரமி வாஷிங்டன் என்ற முப்பத்தி மூன்று வயது மனிதன், தனது வயிற்றுப்பாட்டிற்க்காக மீண்டும் கொள்ளையடிக்க முடிவு செய்தான். ஒரு பொம்மை கடையில் சென்று,சிறையில் சம்பாரித்த பணம் கொண்டு ஒரு பொம்மை ரிவால்வரை வாங்கினான். (சென்ற முறையும் பொம்மை துப்பாக்கியை காட்டியே கொள்ளை அடித்திருந்தான். பின்னர் மாட்டிக் கொண்டான்.) நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் கூட்டம் குறைவாக இருக்கும் மாலை ஏழு மணி அளவில் ஒரு மரத்தின் பின் மறைந்து தூரத்தில் வரும் இரண்டு மனிதர்கள் அருகில் வரும்வரை காத்திருந்தான். அருகில் வந்ததும் பொம்மை துப்பாக்கியை காட்டியபடி படாரென அவர்கள் முன் குதித்து அவர்களின் மணி பர்சகளை கேட்டு மிரட்ட, ஒரு வினாடி அதிர்ந்து போன அவர்களின் கையில் டக்கென முளைத்தது துப்பாக்கிகள். இதனை எதிர்பார்க்காத ஜெரமி அவர்களை முழுமையாக பார்த்தபின் தான் அவர்கள் கையில் இருப்பது தன்னை போல அல்லாமல் நிஜமான துப்பாக்கிகள் என புரிந்து கொண்டு தனது துப்பாக்கியை கீழே போட்டு தன்னை நொந்து கொண்டு அழ ஆரம்பித்தான். ஆம் அவர்கள் இருவரும் நியூயார்க் போலீசை சேர்ந்த காவலதிகாரிகள்.மாலை நடை பயிற்சியை சென்ட்ரல் பார்க்கில் மேற்கொண்டிருந்தார்கள்.

சளிபிடித்தால் சனி பிடிக்கும்.
=======================

இங்கிலாந்தில் உள்ள புர்ந்லேயில் மிச்சேல் ரொபின்சன் தனது மகளுடன் ஒரு நாள் இரவு கதவை தாழ் போட்டுவிட்டு மாடியில் உள்ள படுக்கை அறையில் உறங்கப் போனார். அதிகாலையில் ஐந்து மணிக்கு விழித்த மிச்சேல் தண்ணி தாகம் எடுக்க கீழே வந்து கிட்செனில் தண்ணீர் குடிக்க வந்தவர், தனது சோபாவில் யாரோ ஒரு புதிய மனிதன் தனது குளிர் கோட்டை மாட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு பயந்து போலிசுக்கு போன் பண்ண, உடனே வந்த போலீஸ் அவன் ஒரு திருடன் என கண்டு பிடித்தனர். அவன் பெயர் மைகேல் ஆர்தர் போல்டேன்.அவனது பையினுள் மிச்சேல் உடைய தங்க நகைகளும் மற்றொரு பையில் அவருடைய ப்ரிட்சில் இருந்த சில இனிப்புகளும் வைத்திருந்தான். போலீஸ் விசாரணையில் தான் திருடன் என்பதை ஒத்துக்கொண்டான். திருட கிளம்பும் முன் தனக்கு மிகவும் சளி பிடித்திருந்ததால், சளி மாத்திரை சாப்பிட்டிருக்கிறான். அந்த மாத்திரை தூக்கத்துக்கு உண்டானது. கிட்சேன் ஜன்னலை உடைத்து உள்ளே வந்தவன் நகையையும் இனிப்பையும் மிச்செலின் கோட்டையும் திருடிய பின்னர் தூக்கம் தொடர்ந்து வர அவனையும் அறியாமல் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கி இருக்கிறான். போலீசில் மாட்டிக்கொண்டான்.
----------

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...