Monday, August 31, 2009

குட்டிக் கவிதை -7

மழை
=====

மேகக் காதலன் கைவிட்டதால்....

நீர்த் துளியின்

தற்கொலை...

.....

Wednesday, August 26, 2009

ஐ டி மக்களும் அவர்களை குறித்து சமுதாயத்தின் பார்வையும்.


அதென்னவோ தெரியவில்லை, ஐ டி துறையில் வேலை பார்ப்பவர்கள் தான் ஒட்டுமொத்த தமிழ் கலாசாரத்தையே அழிக்க வந்த கிங்கரர்கள் என பலரின் மனதில் எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. எதோ டை கட்டிக் கொண்டு ஏ சி ரூமில் அமர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டு, ப்லாகுகள் எழுதிக் கொண்டு, வலைத்தளங்களை மேய்ந்துகொண்டு வருவதற்கு அவர்களுக்கு லட்சம் ருபாய் சம்பளம் தருகிறது அவரது அலுவலகங்கள் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை நான் சக பதிவர்களின் பதிவுகளில் இருந்தும், திரைப் படங்களிலும் பார்த்து அடைந்த கவலையின் விளைவே இந்த பதிவு.

சரி ஐ டி மக்களின் மேல் அப்படி என்ன இவர்களுக்கு இருக்கும் கோவம்.

1. அதிகம் சம்பாதிக்கிறார்கள்.நோகாமல் நுங்கு தின்கிறார்கள்.(அதிகம் வேலை செய்யாமல் சம்பாதிக்கிறார்கள்).
2. தண்ணி அடிக்கிறார்கள்.
3. நம் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள்.
4. உள்ளூரில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள்.
5. விலைவாசியை உயர்த்துகிறார்கள்.

இந்திய பொருளாதாரம் இன்று உயர்ந்துள்ளதற்கு யார் அல்லது எது காரணம் என நினைக்கிறீர்கள்? அந்நிய செலாவணி தானே? அதனை இப்போது அதிகமாக ஈட்டிக் கொடுப்பது ஐ டி தானே. இந்தியா இன்று உலக வரைப்படத்தில் ஒரு தவிர்க்க முடியாத பங்கு சந்தையாக வளர்ந்து நிற்பதற்கு காரணம் என்ன? இந்தியா ஒளிர்கிறது மற்றும் ஜெய் ஹோ என மாறி மாறி அரசியல் கட்சிகள் தேர்தல் முழக்கம் செய்வதற்கு காரணம் என்ன? ஐ டி என்ற கணினி பொறியாளர்களால், மென்பொருட்கள் புனையப்பட்டு ஏற்றுமதி செய்யபடுவதால் தானே? அவர்கள் அதிகம் சம்பாதிக்க காரணம் என்ன? அவர்கள் புனைந்த மென்பொருட்கள் அதிகம் விலைக்கு உலக சந்தையில் விலை போவதால் தானே? சரக்குக்கு ஏற்ற கூலி. அல்லது வருமானத்துக்கு ஏற்ற கூலி.

மக்களின் வருமானம் சுழற்சி முறையில் தான் தீர்மானிக்கப் படுகிறது. முதலில் ஆடிட்டர்கள் சம்பாதித்து தீர்த்தார்கள், பின்பு வக்கீல், பின்னர் பெற்றோர்கள், தங்கள் பிள்ளை எஞ்சினியராகவோ அல்லது ஒரு டாக்டராகவோ ஆக்க ஆசைப்பட்டார்கள். அதில் வருமானமும் கௌரவமும் அதிகம் இருந்தது. இப்போது கணினி. எதிர்காலத்தில் வேறொன்று வரலாம்.

உழைப்பவர்கள் தங்கள் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்பட, ஐ டி பொறியாளர்கள் தங்கள் மூளையை மூலதனமாக கொண்டு செயல்படுகிறார்கள்.

சும்மா உக்கர்ந்திருந்து பணம் சம்பாதிப்பது எந்த ஒரு தொழிலும் இயலாத காரியம்.அப்படி ஒரு நிலைமை ஐ டி கம்பெனிகளில் இருந்தது. அதை பெஞ்ச் பீரியட் என சொல்வார்கள். மாடு மாதிரி ஒரு ப்ரொஜெக்டில் உழைத்து முடித்திருப்பான்.அடுத்த ப்ராஜெக்ட் வரும்வரை அவனுக்கு சம்பளம் கொடுத்து காத்திருக்க வைப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு.ப்ராஜெக்ட் முடிந்தால் அடுத்த நாளே அவனுக்கு வேலை பொய் விடும்.

மன உளைச்சல் மன உளைச்சல் என ஒரு எழுத்தாளன் சொல்கிறான் என்றால், அதற்க்கு காரணம் அவன் எழுத்திலேயே மூழ்கி அதை பற்றியே சிந்தித்து அதிலேயே உழன்று திரிவதால் வருகிறது. ஒரு ஐ டி பொறியாளனும் அவ்வாறே. தாது ப்ரோஜெக்ட்க்கு எவ்வாறு ப்ரோகராம் எழுதினால் சரியாக வரும் என அதிலேயே உழன்று குறித்த நாட்களுக்குள் அதனை முடிக்க வேண்டும் என்ற டெட் லைனுக்காக இரவும் பகலும் பாடுபட்டு மன உளைச்சல் அடைய்கிறான். ஒரு புத்தகம் எழுதி முடித்துவிட்டு ஒரு எழுத்தாளன் அடைகிற அதேவிதமான மகிழ்வும் நிம்மதியும் ஒரு ப்ரோக்ராம் முடித்ததும் ஒரு கணிப்பொறி போறியாளனுக்கு ஏற்ப்படுகிறது. எழுத்துக்களை படைக்கு படைப்பாளியான ஒரு எழுத்தாளன் தான் படைப்பதால் கடவுள் என சொல்லிக் கொண்டால், ஒரு ப்ரோக்ராமை படைக்கும் ஒரு கணினி பொறியாளனும் கடவுள் தானே.

தனது மன உளைச்சலை ஒரு எழுத்தாளன் கஞ்சா அல்லது தண்ணி என தீர்த்துக் கொள்கிறான். தனது கணினி பொறியாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களே தண்ணி வாங்கி தருகிறது. இது ஒரு உருவகம் மட்டுமே அனைத்து கம்பனிகளும் தனது தொழிலாளர்களுக்கு தண்ணி வாங்கி கொடுப்பது இல்லை. அனைத்து கணினி பொறியாளர்களும் தண்ணி அடிப்பதும் இல்லை. ப்ராஜெக்ட் முடிந்த பார்ட்டி என்றால் தண்ணி பார்ட்டி சில பெரிய கம்பனிகளில் உண்டு என நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அது ஐ டி கம்பெனிகளில் மட்டும் என்று இல்லை. ஐ டி அல்லாத கம்பெனிகளிலும் உண்டு என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஐ டி மக்களை மட்டும் இந்த அளவிற்கு மட்டம் தட்டுவது ஏன்? அவர்கள் அதிகம் சம்பாதிப்பது தான் இவர்களை உறுத்துகிறதோ?

கலாசாரம் என்றால் என்ன? ஐ டி தொழில் வருவதற்கு முன்னர் கலாசாரம் எப்படி இருந்தது இப்போது சீரழிந்து போவதற்கு. எப்போது கேபிள் டி வீ நமது வரவேற்பறைகளை அலங்கரிக்க ஆரம்பித்ததோ அப்போதே நமது காலாசாரம் சீர்கெட ஆரம்பித்து விட்டது. இன்று கல்லூரிகளிலேயே பல அத்துமீறல்கள் நடக்கின்றன. இன்று செய்தி தாள்களை பிரித்தால் தினந்தோறும் கள்ளக் காதல் கொலைகள்... அவர்கள் எல்லோரும் ஐ டீயில் வேலை பார்பவர்களா?. ஐ டீயில் உள்ள பெண்கள் தண்ணி அடிக்கிறார்கள் என்பது ஒரு குற்றசாட்டு. மலம் அல்லும் தொழிலாளிகளும் சித்தாள் வேலை பார்ப்பவர்களும் தான் தண்ணி அடிக்கிறார்கள். அதற்காக நான் அதனை ஞாயப் படுத்தவில்லை. அதற்க்கு ஒரு காரணம் இருக்கிற்து.

ஐ டி கம்பெனிகள் உருவாக துவங்கியதும், உலகமயமாக்கள் துவங்கிவிட்டது. வடக்கில் உள்ளவர்கள் தெற்கில் உள்ள கம்பெனிகளிலும் தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் உள்ள கம்பெனிகளிலும் வேலைக்கு சேர்வது சகஜமானது. வடக்கில் உள்ள பல பெண்கள் தண்ணி அடிப்பதும் சேர்ந்து வாழ்வதும் சகஜமானது. அவர்கள் தெற்கிலும் வந்து அதையே தொடர்ந்தால் கலாசாரம் கேட்டுவிட்டது என ஒட்டுமொத்த ஐ டி மக்கள் அனைவரையும் சாடுவது எந்த விதத்தில் ஞாயம். நிச்சயமாக கலாசார அதிர்வுகள் ஏற்பட்டிருப்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.

ஆனால் அது எல்லா துறைகளிலும் உண்டு. எப்படி ஒரு நடிகை காதலித்தால் அது பூதாகாரமாக பார்க்கப்பட்டு செய்தி ஆகிறதோ அதே போல் தான் ஐ டி மக்களின் நிலைமையும். ஒரு முஸ்லிம் தீவிரவாதி குண்டு வைப்பதால், அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என்பது எவ்வளவு முட்டாள் தனமானதோ அதே அளவு முட்டாள் தனமானது தான் ஒரு சில ஐ டி மக்களின் நடவடிக்கைகளை பார்த்து அனைத்து ஐ டி மக்களும் அப்படி தான் இருப்பார்கள் என முடிவு செய்வது.

உள்ளூரில் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்வது நமது தாத்தா காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. நமது தாத்தா காலத்தில் ரங்கூன் சென்று சம்பாதித்து கொண்டிருந்தார்கள். நமது அப்பா காலத்தில் வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர் மலேசியா சென்று சம்பாதித்து கொண்டிருந்தார்கள். இப்போது அந்த எல்லைகள் விரிந்து அமெரிக்கா ஐரோப்பா என்று உலகெங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்.

இன்றைய மத்தியதர மக்களின் வாழ்க்கை உயர்ந்திருப்பதற்கு காரணம் ஐ டி துறையே என்பதை மத்தியதர மக்கள் சொல்வார்கள். இது நாள் வரை விமானங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மக்கள் இன்று அதில் ஏறி பயணித்து உலகம் சுற்றும் வாய்ப்பு அவர்களது ஐ டி துறை சார்ந்த மகனாலோ அல்லது மகளாலோ என்பதை அவர்கள் மறுக்க மாட்டார்கள்.

எனக்கு தெரிந்த நண்பர் சொன்னார். தனக்கு பத்தாவது படிக்கும் வயதில் இருந்து அமெரிக்க சென்று வாழவேண்டும் என்ற எண்ணம் என்று. இவரைப் போல சிலரை தவிர அமெரிக்காவிலோ அல்லது இங்க்லாந்திலோ உள்ள பல இந்தியர்களின் கனவு, நன்று சம்பாதித்து விட்டு இந்தியாவில் ஒரு வீடு வாங்கி வந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதே.

இந்தியாவில் வேலை செய்தாலும், அயல் நாட்டில் வேலை செய்தாலும் வேலை செய்வதென்னவோ அயல் நாட்டின் ப்ரோஜெக்ட்களுக்காக தானே. இந்தியர்கள் அனைவருக்கும் அரசாங்க உத்தியோகம் கிடைத்துவிடுகிறதா என்ன? இதில் அயல் நாடு சென்று வேலை செய்தால் என்ன இந்தியாவில் இருந்து வேலை செய்தால் என்ன? ஒவ்வொருவருக்கும் சம்பாதிக்க வேண்டும் நல்லபடியாக செட்டில் ஆக வேண்டும் என்பது தானே. வைப்புள்ளவன் சம்பாதித்துக் கொள்கிறான். வாய்ப்பில்லாதவன் பழி போடுகிறான்.

சனல் ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முன்னணி வகிக்கிறது. கணிப்பொருள் ஏற்றுமதியும் அவ்வாறுதானே. பொருள் மட்டும் தானே வேறு. பின் எப்படி ஐ டி மக்கள் மட்டும் அந்நிய நாட்டுக்கு சோரம் போவதாக பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்?

விலைவாசியின் ஏற்றத்துக்கு காரணம் அரசியல் வாதிகளின் திட்டங்கள் மட்டுமே. வீடு வாங்குவதிலும் மனைகள் வாங்குவதிலும் சரியான திட்டங்கள் இல்லாமையே வீடு விலை உயர்வுக்கு காரணம். விலை ஏற்றத்திற்கு சரியான நிர்ணயம் இல்லாமையே வீடுகளின் உயர்வுக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

நிற்க...
பணத்தை அள்ளிக் கொடுப்பதால், பணத்தின் மதிப்பு ஐ டி மக்களிடையே குறைந்து வருத்வது தெளிவாகிறது. எதிர்காலத்துக்கு சிறிதும் சேமிக்காமல், இருக்கும் காசை செலவு செய்ய துடிக்கும் இளைய சமுதாயத்தில் சிலர் பார்ட்டி கல்செரில் சிக்கி அல்லாடுவது தெரிகிறது.
மற்றும் வேறு ஊர்களில் வந்து வேலை செய்யும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கையில் காசு இருக்கும் சுதந்திரத்தால், யார் நம்மை பார்க்க அல்லது கேட்க போகிறார்கள் என்ற நினைவில் லிவிங் டுகெதர் என்ற சேர்ந்து வாழும் கலாசாரம் தனி மனித ஒழுக்கத்தை சீரழித்து வருகிறது.

இதனையே சமூகம் கலாசாரம் கேட்டுவிட்டது என கூப்பாடு போடுகிறது. வாழ்க்கையில மன உளைச்சலை தீர்க்க எவ்வளவோ வழிகள் உண்டு. மதுவிலும் மாதுவிலும் மட்டும் மன அமைதி தேடுவது வாழ்கையை சின்னாபின்னமாக்கிப் போடும்.

எதிலும் ஒரு அளவு வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். மேலும் கணவனும் மனைவியும் வேலைக்கு செல்ல ப்ரோஜெக்ட்களும் டெட் லைன்களும் குடும்பங்களின் மேல் உள்ள கவனத்தை குறைப்பதால் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களிலும் குழந்தைகள் டே கேர் களிலும் வளர வேண்டிய சூழல் வரலாம். இதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
குடும்பத்திற்கென்று குறித்த நேரம் ஒதுக்க வேண்டும். ப்ராஜெக்ட் இல்லையென்றால் அடுத்த நாளே வேலையே விட்டு உங்கள் கம்பெனி தூக்கி விடலாம். உங்கள் குடும்பம் மட்டுமே கடைசி வரும் உங்கள் கூட வரும். குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் எதிர்பார்க்கும் நேரம் குடும்பம் உங்களுடன் இருக்காது.

இது மற்ற வேலைகளிலும் உண்டு என்றாலும், அதற்கும் இந்த சமூகம் ஐ டி மக்கள் மேல் தான் பழி போடும்.
-----------------------------------------

Wednesday, August 19, 2009

குட்டிக் கவிதை -6

மரணம்...!
========
மனித
வாக்கியத்தின்...
முற்றுப்புள்ளி
-------------------

Monday, August 17, 2009

உலக சினிமா: தி கியூ ரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (The Curious case of Benjamin Button)




அயல் மொழி திரைப்படங்களை பார்க்கும்போதெல்லாம்.. எப்படி இப்படி வித்யாசமாக சிந்திக்கிறார்கள், ஏன் நமது தமிழ் மொழி படைப்பாளர்கள் இப்படி சிந்திப்பதில்லை என நான் நினைப்பதுண்டு. Irreversible என்ற பிரெஞ்சு படம் தலைகீழாக ஓடும். அதாவது முதலில் படத்தின் முடிவும், படம் முடியும் தருவாயில் படத்தின் துவக்கமும் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த இஸ்பஞொல் இயக்குனரான அலெஜாண்ட்ரோ கோன்ழேலஸ் இன்னரிட்டுவின் படைப்புகள் 'இப்படித்தான்' என அனுமானிக்க முடியாதது போல வழமையான திரைக்கதை அமைப்பை கட்டுடைத்தன. அந்த வரிசையில் வருவது தான் பெஞ்சமின் பட்டன்.

ஒரு வித்யாசமான கரு உடைய ஒரு சிறுகதையை இந்த அளவுக்கு ஒரு அற்புதமான திரைக்கதை நேர்த்தியுடன் திரைப்படம் ஆக்க முடியுமா? என எனக்குள் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய படம் தான் பெஞ்சமின் பட்டன்.

ஸ்காட் பிட்ஸ் ஜெரால்ட் எழுதிய சிறுகதையே, எரிக் ரோத்தின் திரை கதை ஆக்கத்தால் டேவிட் பின்ச்செரின் இயக்கத்தில் பிரமாண்ட திரைப்படம் ஆனது.

ஒரு குழந்தை முதியவனாக பிறந்து வளர வளர இளமைக்கு திரும்பி, வயதாகும்போது கைக்குழந்தை ஆவது தான் கதை.

முதல் உலகப்போர் முடிந்திருந்த நேரம், அமெரிக்கா தனது வெற்றியை ஊரெங்கும் கொண்டாடி கொண்டிருக்க, தாமஸ் பட்டன் என்ற பட்டன் கம்பெனி முதலாளி கொண்டாடும் கூட்டத்துக்குள் புகுந்து ஓடி தனது வீட்டை அடைகிறான். அங்கு ஒரு அவனது மனைவி ஒரு குரூபியான குழந்தையாய் பெற்றுவிட்டு இறந்து போய்விடுகிறாள்.குழந்தையின் அவலட்சண முகம் அவனை தாக்குகிறது. அது ஒரு பிசாசு என நினைக்கிறான். டாக்டேர்களோ அக்குழந்தைக்கு கண்களில் காடராக்ட் என்றும் மூட்டு வலி என்கிற ஆர்திரிடீஸ் என்றும் கூறி அதிக நாள் தாங்காது என கூறுகின்றனர்.

மனைவியின் இழப்பு, மிக மிக வயதானதாக சுருக்கமான தோலுடன் தோற்றமளிக்கும் அவலட்சண குழந்தையின் மேல் அவனது கோவம் பாய்கிறது. அதனை நதியில் போட்டுக் கொல்ல தூக்கி கொண்டு ஓடுகிறான். போலீஸ் அதனை கண்டு அவனை துரத்த, ஒரு முதியோர் இல்லத்தின் வாசலில் குழந்தையாய் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.

அந்த முதியோர் இல்லத்தை நடத்துபவள் அன்பும் ஆதுரமும் கொண்ட ஒரு கறுப்பின பெண். அவனது கணவன் தடுத்தாலும் அவளது தாயுள்ளம் அந்த அவலட்சணமான குழந்தையை வளர்க்க தூண்டுகிறது. அக்குழந்தையை முத்தமிட்டு பெஞ்சமின் என பெயரிடுகிறாள்.அவளது பராமரிப்பில் அந்த குழந்தையும் வளர்கிறது. மற்ற குழந்தைகளிடம் இருந்து மாறாக அக்குழந்தைக்கு ஒரு எண்பது வயது தாத்தாவின் தோற்றம். ஆனால் மனதில் குழந்தையின் வயதுக்கேற்ற மனது. மற்ற குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்க பெஞ்சமினோ முதியவர்களின் மத்தியில் தானும் ஒரு முதியவனாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்.அவனுக்கு இருக்கும் வ்யாதியை பற்றி தெரியாமல், அவனையும் ஒரு முதியவன் என்றே கருதி தங்களது கதைகளை பகிர்ந்துகொள்கின்றனர் அந்த முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை தன பாட்டியை காண அவ்விடுதிக்கு வருகிறாள் டெய்சி. அவளுக்கு பெஞ்சமின் மீது அவனது வயதான தோற்றத்தையும் மீறி ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. தனது தோற்றம் கண்டு தன்னை ஒதுக்காமல் தன்னுடன் விளையாடும் அந்த பெண் மீது பெஞ்சமினுக்கும் ஒரு பாசம் ஏற்ப்படுகிறது. இருவரும் நட்பாக பழகுகிறார்கள். பெஞ்சமின் நாளடைவில் சற்கர நாற்காலியை விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கிறான்.( அவன் இளமை ஆகிக்கொண்டு போவதை அற்புதமாக காட்சிக்கு காட்சி செதுக்கி இருக்கிறார்கள்). ஒரு கப்பலில் வேலைக்கு சேர்கிறான்.

அமெரிக்க வழக்கப்படி அவனுக்கு பதினேழு வயது ஆனா போது வீட்டை விட்டு வெளியேறுகிறான்.அந்த கப்பலில் வேலை செய்தவாறு அலைகிறான். எனினும் அவர்களுக்குள்ளான உடன்படிக்கையின்படி டெய்சிக்கு எங்கு இருந்தாலும் ஒரு போஸ்ட் கார்ட் அனுப்பிவிடுவான் பெஞ்சமின். பனிகாலத்தில் கப்பலை ஓட்ட முடியாததால் ஓரிடத்தில் ஹோடேலில் தாங்கும் பெஞ்சமினுக்கும் அங்கு தங்கி இருக்கும் மற்றொரு பயணி எலிசபெத்துடன் தொடர்பு ஏற்ப்படுகிறது. எனினும் ஒரு நாள் அவனை விட்டு விலகி போகிறாள் எலிசபெத். பேர்ல் ஹார்பர் குண்டினால் தாக்கப்பட்ட சமயம் பெஞ்சமினின் கப்பலும் போரில் ஈடுபட பெஞ்சமின் சகாக்கள் கொல்லப்பட்டு விடுகின்றனர்.
போர் முடிந்து வீடுதிரும்பும் பெஞ்சமின் அழகான இளைஞனாக உருமாறி இருப்பதை கண்டு ஆனந்தப்படுகிறாள் அவனது வளர்ப்புத் தாய் குயினி. அப்போது மீண்டும் டெய்ஸியை தேடி கண்டுபிடிக்கிறான். அவள் அழகான யுவதியாக ஒரு பாலே டான்செராக உருபெற்று இருக்கிறாள். இருவரும் காதல் கொண்டு மனம் செய்து கொள்கின்றனர். டெய்சி ஒரு பெண் குழந்தையை கருத்தரிக்கிறாள். பெஞ்சமினுக்கு பயம். எங்கே அவளும் தன்னை போல பிறந்துவிடுவாளோ என்று. நல்லவேளையாக அவள் எல்லோரையும் போல ஆரோக்கியமான குழந்தையாக பிறக்கிறாள்.
பெஞ்சமின் டெய்ஸியை உயிராய் காதலிக்கிறான். அதனாலேயே அவளை விட்டு விலகி போக தீர்மானிக்கிறான். தன இளமை திரும்ப திரும்ப அவன் விரைவில் தான் குழந்தையாக போக போகிறோம் என அவனுக்கு புரிந்து டெய்சிக்கு தொந்தரவு தர அவன் விரும்ப வில்லை.

அவளை வேறொரு மணம் புரிந்து தனது குழைந்தைக்கு ஒரு நார்மல் மனிதன் தகப்பனாக இருக்க வேண்டும் என அவளிடம் சொல்லி அவளிடம் இருந்து விடைபெற்று உலகமெங்கும் சுற்றி திரிகிறான். பல வருடங்கள் கழித்து டெய்ஸியை சந்திக்கும்போது அவனுடைய குழந்தை பனிரெண்டு வயது சிறுமியாக வளர்ந்து நிற்கிறாள். டெய்சி மனைவி இழந்தவனை மணம் செய்து இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் விலகுகிறான். அவனுடைய வளர்ப்பு தாய் இறந்ததும் அந்த முதியோர் விடுதியை அவளுடைய மகள் நடத்துகிறாள். அங்கு வந்து சேர்கிறான் பெஞ்சமின் அப்போது அவன் சின்னஞ்சிறு சிறுவனாக இருக்கிறான். அவனுக்கு பலதும் மறந்துவிடுகிறது என கூறுகிறார்கள்( அவனுக்கு வயது ஆகிவிட்டதை அப்படி தெரிவிக்கப் படுகிறது).டெய்சி அந்த சிறுவனை தத்தெடுத்துக் கொள்கிறாள். அந்த சிறுவன் பின்னர் கைகுழந்தைஆகி வயதான டெய்சி இன் கைகளில் அவளை பார்த்தபடியே உயிரை விடுகிறது.

படத்தில் எனக்கு பிடித்த வசனம், பெஞ்சமின் தன வளர்ப்பு தாய் குயினி இடம் கேட்கிறான். 'எதற்கு எல்லாரும் செத்து செத்து போகிறார்கள்?'அதற்க்கு அவள் பதில்,'மகனே, உயிருடன் இருப்பவர்களின் மதிப்பு நமக்கு தெரியாது. இறந்தபின்பு தான் அவர்கள் நமக்கு முக்கியமானவர்கள் என நமக்கு புரியும் நமக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என காட்டவே அவர்கள் இறந்து போகிறார்கள்.'

படத்தில் பிரம்மிக்க வைக்கும் விடயம் படத்தின் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்ப மாறும் படத்தின் உடைகள், கலை இயக்கம், மற்றும் ஒளிப்பதிவு. பெஞ்சமினுக்கு வயது குறைந்து கொண்டு வருவதை ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கி வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மற்றும் பெஞ்சமினாக நடித்திருக்கும் பிராட் பிட் மற்றும் டேய்சியாக நடித்திருக்கும் கேட் ப்லன்செத்தின் நடிப்பு அற்புதம். அந்த வயதுக்கேற்ற முகபாவங்களை அனாயசமாக கொண்டு வருகிறார் பிராட். தனது கணவனின் வினோத வ்யாதியை தாங்கி கொண்டும் தங்கி கொள்ள முடியாமலும் என பின்னி எடுத்திருக்கிறார் கேட்.

படத்தின் நீளம் சில சமயங்களில் ஆயாசத்தை கொடுக்கிறது. பெஞ்சமின் போருக்கு செல்வதும் போர் காட்சிகளும் படத்தின் ஓட்டத்துக்கு ஒரு தடை கல்.

இத்திரைப்படம் பதிமூன்று பிரிவுகளில் ஆஸ்கார் க்கு பரிந்துரைக்கப்பட்டு ஸ்லம்டொக் மில்லியனர் எட்டு விருதுகள் அள்ளிக் கொள்ள, பெஞ்சமினுக்கு கிடைத்த விருதுகள் மூன்று. கலை இயக்கம், மேக் அப் மற்றும் விசுவல் எப்பெக்ட்.

படத்தை இழைத்து இழைத்து கொடுத்திருக்கிறார்கள். அற்புதமான படைப்பு.
---------------------------

Thursday, August 13, 2009

இன்று..!


(இது ஒரு மீள் பதிவு...
விகடன் 63 ஆம் சுதந்திர தின சிறப்பு பக்கத்திற்காக எழுதப்பட்டது.)

http://youthful.vikatan.com/youth/india63/Nilamukilan15082009.asp

வலது தோள்பட்டை
தீயில் பட்டது போல்
சுடுகிறது...
வலி,
இதயத்தில் நுழைந்து
முளையில் விழுகிறது.
எதிரி நாட்டு தோட்டா துளைத்திருகிறது.

தரையில்
விழுந்து கிடக்கிறேன் நான்...
பனி நிறைந்த வெள்ளை நிலம்
என்
ரத்தத்தால்
சிவபபாகிக்கொண்டிருகிறது...

என்னை
நாட்டின் ராணுவத்துக்கு
அர்ப்பணித்த
என்
தாய் தந்தைக்கு
முதல் வணக்கம்....

இன்று
எங்காவது ஒரு குழந்தை
பிறந்த நாள் கேக்கை
வெட்டிக்கொண்டிருக்கும்....

இன்று
எங்காவது ஒரு அரசியல் வாதி
யாரிடமாவது
லஞ்சம்
வாங்கிக்கொண்டிருப்பார்..

இன்று
எங்காவது
ஒரு கற்பழிப்பு
நடந்து கொண்டிருக்கும்...

இன்று
பிறந்த
பெண் குழந்தையை கொல்ல
யாராவது கள்ளிப்பாலை
அதன் வாயில்
ஊற்றிக்கொண்டிருப்பர்கள்.

இன்று
எதாவது ஒரு விடுதியில்
ஆணும் பெண்ணும்
பணத்துக்காகவும்,
உடல் பசிக்காகவும்
இணைந்து கொண்டிருப்பார்கள்..

இன்று
வரதட்சணைக்காக
ஏதாவது ஒரு வீட்டில்
ஸ்டவ் வெடித்திருக்கும்..

இன்று
திருமணமான ஏதாவது ஒரு ஜோடி
விவாகரத்துக்காக
கோர்ட் படி ஏறி கொண்டிருக்கும்...

இன்று
எதோ மதத்தை சேர்ந்த
சாமியார்
எதற்காகவோ கைது செய்யப்பட்டிருப்பார்.

இன்று
ஏதாவது ஒரு நடிகன்...
'அன்பான ரசிகனே' என
மூளை சலவை செய்ய ஆரம்பித்திருப்பார்.

இன்று
எங்காவது சாதி மோதலில்
பல உயிர்கள் மடிந்திருக்கும்...

இன்று
மதத்துக்காக
'மதம்' பிடித்த மனிதர்கள்
எங்காவது
மோதிக்கொண்டிருப்பர்கள்...

இன்று
எதாவது இளைஞன்
வேலைக்காக
எதாவது ஒரு அலுவலகத்தின்
கதவை
தட்டிக்கொண்டிருப்பான்...


இன்று
எதாவது ஒரு சினிமா நடிகனின்
முதல் நாள் காட்சியில்
அவன் கட் அவுட் மேலிருந்து
கீழே விழுந்த ரசிகன்
உயிரை விட்டிருப்பான்...

எனினும்,
நாட்டுக்காக துடித்து கொண்டிருக்கும்
இதயங்களுடன்
எனது இதயமும் துடிக்கட்டும்...

அருகில் இருக்கும் கம்பத்தில்
என் பையில் இருக்கும் கொடியை கட்டி
சர சர வென ஏற்றுகிறேன்.

நொறுங்கிப்போன எலும்புகளுடன்
வலக்கையை உயர்த்தி
கொடி வணக்கம் செய்து
செத்து மடிகிறேன்......

சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்....

Friday, August 7, 2009

இன்றைய காதல்...!



அவன்
கனவுகளில்,
காலையின் உதயத்தில்,
புல்லின் பனித்துளியில்,
வானவில்லின் வர்ணங்களில்,
குழந்தையின் ஸ்பரிசத்தில்,
மழைக்கு முந்தய வாசத்தில்,
தூறலின் சாரல்களில்,
அலைகளில் நனைகையில் ,
கணினி திரையின் பிம்பங்களில்,
பட்டாம்பூச்சியின் சிறகுகளில்,
ஒளித்து வைத்த மயிலிறகில்,
அவளையே கண்டும்,உணர்ந்தும்,ஸ்பரிசித்தும் வாழ்ந்தான்....
அடுத்தவளை
காணும் வரை...!
----------------------------------------

Tuesday, August 4, 2009

உலக சினிமா: டாக் டு ஹெர் (Talk to Her).


மனித உறவுகளை அதன் ஆளுமையுடன் சொல்லும் படங்கள் என்னை மிகவும் பாதிக்கின்றன. அப்படி என்னை சமீபத்தில் பாதித்த படம் தான் இஸ்பாநியெல் படமான 'டாக் டு ஹெர். ஐரோப்பிய இயக்குனர்களில் மிக சிறந்த படைப்பாளர்களில் ஒருவரான பெத்ரோ அல்மோடோவர் இயக்கி இருக்கிறார்.

படத்தின் கதை இரு ஜோடிகளை பற்றியது.
பெநிக்னோ ஒரு நாட்டிய நாடகத்தில் அமர்ந்திருக்கிறான். அதில் நடிக்கும் பெண்கள் நடனமிட்டபடி சுவற்றில் மோதி விழுகிறார்கள்.ஒருவன் அவர்கள் போகும் பாதையில் இருக்கும் நாற்காலிகளை விலக்கி வைக்கிறான். அந்நாடகத்தை பார்த்துகொண்டிருக்கும்போது தனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அழுது கொண்டிருப்பதை பார்க்கிறான். அழுது கொண்டிருப்பவன் தான் மார்கோ. இருவருக்கும் காதலிகள் இருக்கிறார்கள். இருவரை பற்றியது தான் கதை.

1.பெநிக்னோ.
பெநிக்னோ ஒரு ஆம்பிளை நர்ஸ். தனது அம்மா நோய்வாய்ப்பட்டு கிடந்த போது அவளுக்கு பணிவிடைகள் செய்தவன். அவளுக்கு உதட்டு சாயம் பூசி, தினமும் உடம்பை துடைத்தெடுத்து, அவளை ஒரு குழந்தையாய் போல பார்த்து கொண்டவன். அவள் இறந்த பின் அவனுக்கு தனிமை வாட்டுகிறது. அவனது ஜன்னலின் வழியே பார்த்தால் அங்குள்ள நடனப்பள்ளி ஒன்று தெரிகிறது. அதில் ஒரு பெண் ஜன்னலின் அருகே நின்று ஆடுவதை தினமும் பார்த்து அவள் மேல் காதல் கொள்கிறான். அவளை தொடர்ந்து சென்று அவள் பெயர் அலிசியா என்றும் அவள் தந்தை ஒரு மனோதத்துவ மருத்துவர் என்றும் அறிந்து கொள்கிறான். அவள் நடனப்பள்ளிக்கு வருவது ஒரு நாள் நின்று விடுகிறது. காரணத்தை அறிகிறான். அவளுக்கு பெரும் விபத்து ஏற்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் கோமாவில் இருப்பதாக தகவல். அவளுக்கு எந்நேரமும் கூடவே இருக்க நர்ஸ் வேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்து, தான் ஒரு 'கே'(ஒரினசெர்க்கயாளன்) என கூறி நர்ஸ் வேலை வாங்கி அவளுடனேயே இருந்து அவளை அல்லும் பகலும் பார்த்துக் கொள்கிறான். ஆவலுடன் பேசி கொண்டே இருக்கிறான். அவளுக்கு தூரத்துணி மாற்றுகிறான். குளிக்க வைக்கிறான். உடை மாற்றி விடுகிறான்.பெடி கூர்,மினி கூர் செய்து விடுகிறான் ஆனால் ஓயாமல் பேசி கொண்டே இருக்கிறான். அன்று பார்த்த நாடகத்தை பற்றி சொல்கிறான். ஒருவன் தன்னருகில் அமர்ந்து அந்நாடகத்தை பார்த்து அழுதது பற்றியும் சொல்கிறான்.

2. மார்கோ.
ஸ்பெயினில் நடைபெறும் காலை சண்டையில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும் என்ற தன் தந்தையின் கனவை நனவாக்க புறப்படும் லிடியாவை எள்ளி நகயாடுகிறான் அவளது காதலன். அவளுடைய முன்னாள் காதலன் தான் மார்கோ ஒரு பத்திரிக்கையாளன். அவளது கனவு நனவாவதற்கு துணையாக இருக்கிறான். அன்று நடந்த சண்டையில் காளை லிடியாவை பிய்த்து போடுகிறது. அவள் கோமாவிற்கு தள்ளப் படுகிறாள்.

லிடியாவை அலிசியா இருக்கும் மருத்துவமனையிலேயே சேர்க்கப் படுகிறாள். அலிசியாவை அல்லும் பகலும் அவளருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் பெநிக்னோ அவனது கவனத்தை கவர்கிறான். அவனிடம் நட்பு கொள்கிறான் மார்கோ. கோமாவில் இருக்கும் நோயாளிகளிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும், அவர்களை சக மனிதர்களை போலவே நடத்த வேண்டும். என்றாவது ஒரு நாள் அவர்கள் விழித்துக் கொள்ளும் அதிசயம் நிகழலாம் என அவனுக்கு கற்று கொடுக்கிறான் பெநிக்னோ. இருவரும் நண்பர்கள் ஆகின்றனர்.ஒருவர் இல்லாதபோது மற்றொருவர் இருவரின் காதலிகளையும் பார்த்துக் கொள்வது என உதவிக் கொள்கின்றனர்.

அப்போது லிடியாவின் இந்நாள் காதலன் வந்து தான் லிடியாவை பார்த்துக் கொள்வதாக கூற, அதுவே ஞாயம் என மார்கோ தனது வேலையே பார்க்க வெளிநாடு கிளம்பி போகிறான். இதனிடையே, அலிசியாவிற்கு மாதவிலக்கு நின்று பொய் வயிறும் வீங்க ஆரம்பிக்க அவள் கர்ப்பமாக இருப்பது உறுதிப்படுகிறது. மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் பெநிக்நோவின் மீது சந்தேகம். அவன் சிறையில் அடைக்கப்படுகிறான்.

இதனை கேள்விப் பட்ட மார்கோ ஸ்பெயின் நாட்டுக்கு மீண்டும் வந்து அவனுக்கு உதவ முனைகிறான்.லிடியா மறித்து போனதை அறிகிறான். பெநிக்நோவை சிறையில் சந்திக்க, அலிசியாவை பார்க்காமல் அவளுடைய கூந்தல் க்ளிப் கூட இல்லாமல் தன்னால் காலம் தள்ளுவது சிரமமாக இருக்கிறது என கூறுகிறான். வழக்கு முடியும் வரை, தனது வீட்டில் தங்கிக் கொள்ளும்படி மார்கோவிடம் கூறுகிறான்.

மார்கோ அந்த ஜன்னலின் வழியே பார்க்க அலிசியா அந்த நடன பள்ளிக்கு வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறான். வக்கீலிடம் பேசும்போது அவள் பிரசவத்தின் பொது குழந்தை இறந்து பிறந்தது என்றும் பிரசவத்தில் அவளுக்கு சுயநினைவு வந்து விட்டது என்றும் கூறி, பெநிக்னோ இப்போது மனோவ்யாதி முற்றி ஒரு சைக்கோவாக இருக்கிறான். இந்த உண்மையை கூறினால் நிலைமை மோசமாகும் என சொல்கிறான்.

மார்கோ உண்மையை மறைத்து விடுகிறான். ஒரு நாள் ஒரு தொலைபேசி வருகிறது. வாய்ஸ் மெயில் விட்டிருக்கிறான் பெநிக்னோ. 'அலிசியா இல்லாத வாழ்க்கை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. எனவே நான் அலிசியாவின் வாழ்க்கைக்கு போக போகிறேன்'. மார்கோ உடனே அலிசியா உயிருடன் இருப்பதாக கூறுவதற்கு சிறைக்கு வேக வேகமாக ஓடுகிறான். ஆனால், தூக்க மாத்திரைகளை அதிகம் உண்டு, இறந்து விடுகிறான் மார்கோ. கல்லறையில் அவனுடன் பேச துவங்குகிறான் மார்கோ. அவள் விழித்திருக்கும்போது நீ துயில் கொண்டாயே என கண் கலங்குகிறான்.

2002 இல வெளியான இத்திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதையும், சிறந்த இயக்குநருக்காக பரிந்துரைக்கப்படும் இருக்கிறது. முன்னும் பின்னும் ஆக செல்லும் திரைக்கதை, ஒரு சிறந்த சவால். இயக்கமும் திரைக்கதையும் தெளிவாக இருக்கிறது. பெநிக்னோ வாக நடித்திருக்கும் ஆவியர் கமரா (Javier Cámara) அற்புதமாக நடித்திருக்கிறார். காதலியின் மேல் தனக்கிருக்கும் இயல்பை கடந்த ஒரு ஈர்ப்பை, பாசத்தை, காதலை இதனைவிட வேறு யாரும் வெளிப்படுத்தல் இயலாது.

படத்தில் வரும் அந்த நாடகங்களும் இஸ்பானிய பாடல்களும் கதைக்கு ஏற்ப உள்ளத்தை உருக்குவதாக அமைந்துள்ளது.
பெண்கள் தன்னுடன் பேசுவதை அதிகம் விரும்புவார்கள். கோமாவில் இருந்தாலும் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அது சத்தியமான உண்மை. பெரும்பாலான பெண்கள் தனிமையானவர்கள்.பெண்களுடன் பேசுங்கள் பேசி கொண்டே இருங்கள் அதை விரும்புவார்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...