Friday, July 31, 2009

நகைச்சுவை குற்றங்கள் -1


கொலை செய்வது, திருடுவது,கற்பழிப்பது மட்டும் தான் குற்றம் என்று இல்லை. அமெரிக்க செய்தி தாள்களை பார்த்தால் சில சிரிப்பான கைதுகளும் அகப்படும். அவற்றில் சில.

மோட்டார் சேஸ்
--------------------------------
ஒரு ஞாயிற்று கிழமை.யூட்டா மாநிலத்தின் சிறு நகரொன்றில் காவல் நிலையத்துக்கு ஏகப்பட்ட புகார்கள். ஒரு கார் ரோட்டில் தறிகெட்டு ஓடுவதாக. அந்தக் காரை துரத்தியது காவலர் வண்டிகள். அவர்களுக்கு ஆச்சர்யம். குற்றவாளிகள் காவலரை கண்டால் மிக வேகத்தில் காரில் பறப்பது வழக்கம். அப்போது தானே தப்பிக்க முடியும். ஆனால் இந்த கார் நாற்பது மைல் வேகத்துக்கு மேல் போகவில்லை. துரத்தப்பட்ட கார் ஓரிடத்தில் நிற்க, காவல் கார்கள் சுற்றி வளைக்க அதிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஏழு வயது சிறுவன். சர்ச் செல்வதை தவிர்க்க தன பெற்றோரிடம் தப்பிக்கவே தான் காரை ஒட்டி சென்றதாக சொல்ல தலையை சொரிந்தது போலீஸ். அச்சிறுவன் மீது வழக்கு போடாமல் எச்சரித்து அனுப்பி விட்டது போலீஸ்.

காவல் ஹோட்டல்.
-------------------------------------
லூசியான மாநிலத்தில் மிட்செல் தேச்லட்டே என்ற இருபத்தைந்து வயது இளைஞன் ஸ்டைலாக தனது கரை பார்கிங் லாட்டில் பார்க் செய்து விட்டு ஒரு கட்டிடத்தின் கதவை தட்டி, திறந்தவரின் சீருடையை கண்டு சிரிப்பை அடக்கி கொண்டு
' ஒரு ரூம் புக் பண்ணனும் கொஞ்ச நேரத்தில் என் கேர்ள் பிரண்டை கூட்டிட்டு வரேன் ' என்று சொல்ல அவர் அவன் தலையில் தட்டி விலங்கிட்டு விட்டார். பின்னே, குடி போதையில் போலீஸ் ஸ்டேஷனை ஹோட்டல் என நினைத்து இந்ஸ்பெக்தரிடமெ ரூம் வேண்டும் என்று கேட்டால்?... அய்யா குடிபோதையில் கார் ஒட்டியதற்காக கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

நன்றி: The Examiner.

Wednesday, July 29, 2009

குட்டிக் கவிதை - 4

வளைகாப்பு
==========


ஜனனத்தின் காரணம்,
ஆணும் பெண்ணும்...
ஏன் பெண்ணுக்கு மட்டும் கைவிலங்கு...?!

Saturday, July 25, 2009

குட்டிக் கவிதை -3

மெழுகுவர்த்தி..!
=============
ஒளித் தலைவனின்
அரசியல் தொண்டன்.

-நிலா முகிலன்.

குட்டிக் கவிதை -2

வயிறு
ஏழை வங்கியின்
காலியான
கஜானா..!

-நிலா முகிலன்

Friday, July 24, 2009

குட்டிக் கவிதை -1.

பாலியல் தொழிலாளி.
-----------------------------
'தொடாதே'
பலகையில்
பல 'கை'கள்.

- நிலாமுகிலன்

Sunday, July 19, 2009

உலக சினிமா : The Kite Runner (தி கைட் ரன்னர்)

இந்த பதிவை வெளியிட்ட விகடனுக்கு நன்றி.
(youthful.vikatan.com).
ஆப்கனிஸ்தானில் காபூலில் வாழும் சிறுவர்கள் பணக்கார ஆமிரும் அவனுடைய உயிர் நண்பனான ஏழை ஹசனும். பணக்கார ஆமிரின் குடும்பத்துக்கு சேவகம் புரிந்து வருகின்றனர் ஹசனும் அவன் தந்தை அலியும்.

ஆமிர் பள்ளி செல்கிறான். ஏழ்மை காரணமாய் பள்ளியில் படிக்க வில்லை ஹசன். என்றாலும் தனது நண்பனை கதைகள் படிக்க சொல்லி கேட்டு மகிழ்கிறான். ஹசனுக்கு நண்பனான ஆமிர் உலகம். அவனுக்காக உயிரையும் விடுவான் ஹசன். ஆமிரின் பணக்கார தந்தையான பாபாவுக்கு ( அப்படி தான் ஆமிர் அழைக்கிறான். பாபா என்றால் அப்பா என அர்த்தம்) தச்சனின் மேலும் பிரியும் அவர்கள் திரைப்படம் பார்க்கும் வேளை எல்லாம் ஹசனையும் அழைத்து செல்வார். அவனுடைய பிறந்த நாளுக்கு அவனுக்கு பிடித்த பட்டம் வாங்கி கொடுப்பார்.

ஆமிரின் கோழைத்தனம் அவருக்கு சிறிதும் பிடிப்பதில்லை. அவனுக்கு முன்பாக ஹசனை உயர்வாக பேசுவார். தனது தந்தை தன்னை வெறுக்க காரணம், தான் பிறந்த போதே தனது தாயும் இறந்ததால் தன்னால் தான் தாய் இறந்து விட்ட வெறுப்பு அவருக்கு இருக்கிறது என நினைக்கிறான் ஆமிர்.
ஆமிரின் எழுத்து திறமைக்கு அவனுக்கு ஆறுதலாக இருப்பது பாபாவின் நண்பரான ரஹீம் கான்.

ஹசன் ஹஜாரா என்ற இனத்தை சேர்ந்தவன். அந்த இனத்தை சேர்ந்தவர்களை எள்ளி நகையாடும் ஒரு கூட்டம் அவர்களை வழி மறித்து ராக்கிங் செய்கிறது. அப்போது தன்னிடம் இருக்கும் உண்டிவில் கொண்டு அவர்களை விரட்டுகிறான் ஹசன். அந்த கூட்டத்தின் தலைவன் அஸ்ஸெப். ஹசனை பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்து கொண்டு இருக்கிறான்.

காபூலில் மாஞ்சா பூசிய பட்ட திருவிழா வருகிறது.பட்டம் விடுவதில் புலி ஹசன். அவனுடைய உதவியால் பட்ட திருவிழாவை வெல்கிறான் ஆமிர்.தன தந்தையிடம் இருந்து பாராட்டும் பெறுகிறான். ஹசன் அவனை வாழ்த்தி விட்டு அவனுடைய பட்டதினால் அறுபட்ட நீல நிற பட்டம் விழுந்த இடத்தை அறிந்து அதனை கொண்டு வந்து செர்பிப்பதாக கூறி செல்கிறான்.

அவனை காணாமல் தேடி புறப்படுகிறான் ஆமிர். அவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் அவன் ஆஸெப்ப் கூட்டத்திடம் மாடி கொண்டதை அறிந்து ஒளிந்து கொண்டு நடப்பவற்றை கவனிக்கிறான்.
அந்த பட்டத்தை தந்துவிடுமாறு ஆஸெப்ப் அவனுடைய ஜாதி பெயரை சொல்லி திட்டுகிறான். அதற்க்கு அது தான் தனது நண்பன் ஆமிருக்கு கொண்டு வந்து தருவதாக வாக்களித்துவிட்டதாகவும் உயிர் போனாலும் அதனை தரப்போவதில்லை என்றும் ஹசன் கூற அவனை அடித்து அவனை வன்புணர்ச்சி செய்து விடுகிறார்கள் ஆஸெப்பும் அவன் நண்பர்களும்.

அதனை கண்டு அஞ்சுகிறான் ஆமிர். வீட்டிற்கு வந்ததும் தான் ஹசனை காப்பாத்த முடியாமல் போன கையாலாகாத தனத்தை எண்ணி வருந்துகிறான். ஹசன் நோய்வாய் படுகிறான்.

ஹசனை பார்க்கும்போதெல்லாம் தனது கோழை தனத்தை எண்ணி பார்க்கும் ஆமிர் அவனை வீட்டை விட்டு துரத்த திட்டம் போடுகிறான்.தந்தை இடம் சொல்லி பார்த்தும் அவர் கேட்காததால், தனது கைகடிகாரத்தை ஹசனின் படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்து விட்டு அவன் மேல் திருட்டு பட்டம் கட்டுகிறான்.ஹசனும் தனது நண்பனின் செயலை உணர்ந்து அவனை காப்பாற்ற திருட்டு பட்டத்தை ஏற்றுக் கொள்கிறான். பாபா அவனையும் அவன் தந்தை அலியையும் அழைத்து இதை பற்றி விசாரித்து தான் அவர்களை மன்னித்து விட்டதாக கூறியும், அலி திருட்டு பட்டத்தை சுமந்து கொண்டு தானும் தனது மகனும் அங்கு மேலும் வேளை செய்வது இயலாத காரியம் என கூறி வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானை ரஷ்ய படைகள் சூழ்ந்து கொள்ள தனது மகனை அழைத்து கொண்டு திருட்டுத்தனமாக தப்பித்து பாகிஸ்தான் வந்து சேரும் பாபா தனது நண்பன் ரஹிம்கானை தனது வீட்டை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு அமெரிக்க வந்து வசிக்கிறார். தனது மகனை படிக்க வைத்து பட்டம் வாங்க வைக்கிறார். தனது மகன் ஆசைப்பட்ட பெண்ணை மணம் முடித்து வைத்து விட்டு இறந்து போகிறார்.
ஆமிர் தனது வாழ்கையை புத்தகமாக எழுதி தனது கதைகளை சிறு வயதில் அங்கீகரித்த ரகீம் கானுக்கு சமர்பிக்கிறான்.

அப்போது பாகிஸ்தானிலிருந்து ரஹீம் கான் தொலை பேசி அவனை அங்கு அழைக்கிறார். அங்கு செல்லும் அமீரிடம் உண்மை ஒன்றை கூறுகிறார் ரஹீம். அதாவது ஹசன் அமிரின் தந்தைக்கு பிறந்தவன் என்றும் அலி ஆண்மையற்றவன் என்றும் கூற அதிர்ச்சி அடைகிறான் ஆமிர். பாபா ஹசனின் மீது பாசம் கொண்டு இருந்தமைக்கு அவனுக்கு காரணம் விளங்குகிறது.

மேலும் அவனது வேட்டை ஹசன் தான் பார்த்துகொண்டிருந்தான் என்றும் அந்த வீட்டை காப்பதற்காக அவனும் அவன் மனைவியும் உயிர் துறந்த கதையும் அவன் மகன் சோரப் அநாதை ஆக்கப்பட்ட கதையும் இப்போது சொரப்பை ஆமிர் காபுல் சென்று காப்பற்றி கொண்டு வரவேண்டும் என்றும் ரஹீம் கான் கூறுகிறார்.

தான் ஹசனுக்கு செய்த துரோகத்திற்கு பிராயச்சித்தம் தேட இதுவே கடைசி வாய்ப்பு என்று உணரும் அமீர், ஒரு வீரனாக அப்போது தாலிபானின் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு சொரபை காப்பாற்ற புறப்படுகிறான்.பல இன்னல்களுக்கு பிறகு சொரபை கண்டுபிடிக்கும் அமீர், அவன் ஹசனை வன்புணர்ச்சி செய்த ஆசெபின் பிடியில் இருப்பதை அறிகிறான். அவனிடம் இருந்து சொரபை காப்பற்றி அமெரிக்க கொண்டு வந்து தனது மகனாக வளர்த்து வருகிறான். சொரபுக்கு தன் நண்பன் கற்று கொடுத்த பட்டம் விடும் வித்தையை ஆமிர் கற்றுகொடுக்க படம் முடிகிறது.

நட்புக்காக எதையும் செய்யும் சிறந்த நண்பனை ஹசனின் பாத்திரம் காட்டுகிறது. சிறுவயது ஹசானாக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு அற்புதம். அமிராக நடித்திருக்கும் காலித் அப்துல்லாஹ் இயல்பாக அருமையாக நடித்திருக்கிறார்.

படத்தின் இசை ரம்மியம். ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட இசை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அமெரிக்க என எல்லைகளுகேற்ற கலாச்சாரத்துக்கு ஏற்ப உருகி வழிகிறது.

படத்தில் எனக்கு பிடித்த வசனம், பாபா அமிரை பார்த்து சொல்வது.
"இவ்வுலகில் திருடுதல்தான் அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை. நீ பொய் கூறினால் எதிராளியின் உண்மையை அறியும் உரிமையை நீ திருடுகிறாய். அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டால், அவனிடமிருந்து நீ அவன் மனைவியை திருட பார்க்கிறாய். கொலை செய்ய ஆசைப்பட்டால், அவனுடைய உயிரை நீ திருட நினைக்கிறாய். ஆகவே உலகின் குற்றங்களுக்கெல்லாம் அடிப்படை திருட்டு தான்.

சில செயற்கை தனங்கள் இருந்தாலும் படத்தின் இயக்குனர் மார்க் பொர்ஸ்தெர் ஒரு உயிர்த்துடிப்பான படத்தை அளித்துள்ளார்.

கைட் ரன்னெர், நட்புக்கு இலக்கணம்.

Friday, July 10, 2009

மொழி அழிதல்...!


(இந்த பதிவை தனது youthful.vikatan.com இல் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றி.)

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதொன்றும் காணோம். என பாடினான் சுப்ரமணிய பாரதி. ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் மட்டுமே நல்ல மொழி என தமிழை சிதைத்து வாழ்வோரால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் அபாயம் எட்டி உள்ளது.

குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் பல தமிழர்களின் குழந்தைகள் தமிழை அறிந்திருக்கவில்லை. மேலும் தமிழில் பேசினால் கேவலம் என்ற எண்ணமும் அவர்களிடையே மேலோங்கி உள்ளது. அதற்க்கு காரணம் அக்குழந்தைகளின் பெற்றோரும் அதன் உறவினர்களும் தான். இப்படியே போனால், ஒரு சந்ததியே தமிழறியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் பல குழந்தைகள் வெளியே ஆங்கிலம் அறிந்தாலும் ஆங்கிலத்திலேயே பேசினாலும் வீட்டிலும் அதனையே தொடர்வது, தமிழ் மொழியின் அழிவின் தொடக்கம். பெற்றோரும் குழந்தயிடத்தே ஆங்கிலத்தில் உரையாடுவதால் குழந்தைக்கு தமிழ் மொழி மறக்கிறது. மேலும் அக்குழந்தை விடுமுறைக்கு இந்தியா செல்லும்போது அங்கு வாழும் அக்குழந்தையின் தாத்தா பாட்டி மற்றும் உறவினர்கள் அதனை அமெரிக்காவின் ஆங்கிலத்தில் பேச சொல்லி அது பேச இவர்கள் புல்லரித்து புளங்காகிதம் அடைவதை காணும் குழந்தைகள், தமிழ் ஒரு மோசமான மொழி என்றும், ஆங்கிலம் பேசுவதால் மட்டுமே தனக்கு மரியாதை மற்றும் கெளரவம் என்று நினைக்கிறது.

அமெரிக்காவிலிருந்தோ ஐரொப்பாவிலிருந்தொ இந்தியாவிற்கு தொலை பேசும் குழந்தைகளை ஆங்கிலத்தில் பேசுமாறு அதன் பெற்றோர் பணிக்கின்றனர். அப்போது தான் தன குழந்தைக்கும் தனக்கும் கெளரவம் என நினைக்கின்றனர். இதனை தொலைபேசி மூலம் பாராட்டும் அக்குழந்தையின் உறவினர்களும் ஆங்கிலமே சிறந்தது என்ற என்னத்தை அந்த பிஞ்சு உள்ளத்தில் விதைக்கின்றனர்.

குழந்தைகளுக்கு 'அம்மா இங்கே வா வா ' என சொல்லி கொடுத்தால் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறீர்களே.'பா பா ப்ளாக் ஷீப்' அல்லது ரெயின் ரெயின் கோ அவே ' பாடல்களை சொல்லி கொடுங்கள் என அறிவுரைக்கிறார்கள்.

தமிழில் பேசுவதையே அகௌரவமாக நினைக்கும் குழந்தைகள் எழுதவும் படிக்கவும் தமிழை நிச்சயம் நாடப் போவதில்லை. எனது நண்பனின் குழந்தையாய் அமெரிக்காவில் உள்ள பள்ளியில் சேர்க்க சென்றபோது அக்குழந்தையின் அமெரிக்க ஆசிரியை கூறிய வார்த்தைகள் இவை.

'நீங்கள் வீட்டில் உங்கள் தாய் மொழியில் மட்டுமே உங்கள் குழந்தையுடன் உரையாட வேண்டும். தாய் மொழி தாய்க்கு நிகரானது. ஆங்கிலத்தை நீங்கள் வீட்டில் கற்றுக் கொடுக்க அவசியம் இல்லை. அதனை இங்குள்ள பள்ளிகளும் தொலைக்காட்சி பெட்டிகளும் தாமாக கற்று கொடுத்து விடும். தாய் மொழியை மறந்த குழந்தைகள் தாயை மறந்த குழந்தைகள் ஆகிவிடும். உங்கள் கலாச்சாரத்தையும் மறந்து இரண்டும் கேட்டான் ஆக எனது மாணவர்கள் ஆகிவிடக்கூடாது '

என்ன சத்தியமான வார்த்தைகள். எப்போதும் சதா ஆங்கிலத்தில் உரையாடி கொண்டிருந்த என் நண்பனின் குழந்தையை ஒரு ஐந்து நிமிடம் தமிழில் உரையாட சொன்னேன். அக்குழந்தை திக்கி திக்கி தமிழ் பேசுவதை நான் கண்டு சந்தொஷப்பட்டுகொண்டிருந்தபோது, என் காதுபட அக்குழந்தையின் தாய் சொன்னது, 'எதற்கு குழந்தையை துன்புறுத்துகிறீர்கள் அவளுக்கு ஆங்கிலம் தான் வருகிறது என்றால் ஆங்கிலத்திலேயே பேசட்டுமே'. குழந்தைகளுக்கு எது நல்லது எது கேட்டது என தெரியுமா? அதனை கற்றுக் கொடுப்பது நாம் அல்லவா? இப்போதே கற்றுகொடுத்தால் தானே மொழியின் மீது குழந்தைகளுக்கு பற்று வரும்?

இதற்க்கு இடையே தமிழகத்தில் இரண்டாவது மொழிப்பாடமாக சில பிரகஸ்பதிகள் பிரெஞ்சு மொழியை எடுத்துக் கொள்கிறார்கள். எதோ இவர்கள் பிரான்ஸ் சென்று பிரெஞ்சு புரட்சி செய்வது போல.

நான் ப மா கா வோ அல்லது திருமாவின் விடுதலை சிறுத்தைகளோ அல்லது சீமானின் சீடனோ அல்ல.,தூய தமிழில் பேசவேண்டும் என கோடி பிடிக்க. தமிழ் மொழியை பேசவும் எழுதவும், படிக்கவும் நம் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். அது நமது தலையாய கடமை. இல்லையேல் தமிழ் மொழி அடுத்த சந்ததியினர் இடையே அழிந்து விடும் ஆபத்து உண்டு.

இவ்வளவு பேசி கொண்டிருக்கிறேன். அமெரிக்கா குடிமகனான என் ஒரு வயது மகன் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. இப்போது அவனுக்கு புரிந்த நமக்கு புரியாத மழலையில் பெசிகொண்டிருக்கிறான். பிற்காலத்தில் எந்த மொழியில் பேசுவானோ என கவலையாக இருக்கிறது...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...