Friday, July 10, 2009

மொழி அழிதல்...!


(இந்த பதிவை தனது youthful.vikatan.com இல் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றி.)

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதொன்றும் காணோம். என பாடினான் சுப்ரமணிய பாரதி. ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் மட்டுமே நல்ல மொழி என தமிழை சிதைத்து வாழ்வோரால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் அபாயம் எட்டி உள்ளது.

குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் பல தமிழர்களின் குழந்தைகள் தமிழை அறிந்திருக்கவில்லை. மேலும் தமிழில் பேசினால் கேவலம் என்ற எண்ணமும் அவர்களிடையே மேலோங்கி உள்ளது. அதற்க்கு காரணம் அக்குழந்தைகளின் பெற்றோரும் அதன் உறவினர்களும் தான். இப்படியே போனால், ஒரு சந்ததியே தமிழறியாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் பல குழந்தைகள் வெளியே ஆங்கிலம் அறிந்தாலும் ஆங்கிலத்திலேயே பேசினாலும் வீட்டிலும் அதனையே தொடர்வது, தமிழ் மொழியின் அழிவின் தொடக்கம். பெற்றோரும் குழந்தயிடத்தே ஆங்கிலத்தில் உரையாடுவதால் குழந்தைக்கு தமிழ் மொழி மறக்கிறது. மேலும் அக்குழந்தை விடுமுறைக்கு இந்தியா செல்லும்போது அங்கு வாழும் அக்குழந்தையின் தாத்தா பாட்டி மற்றும் உறவினர்கள் அதனை அமெரிக்காவின் ஆங்கிலத்தில் பேச சொல்லி அது பேச இவர்கள் புல்லரித்து புளங்காகிதம் அடைவதை காணும் குழந்தைகள், தமிழ் ஒரு மோசமான மொழி என்றும், ஆங்கிலம் பேசுவதால் மட்டுமே தனக்கு மரியாதை மற்றும் கெளரவம் என்று நினைக்கிறது.

அமெரிக்காவிலிருந்தோ ஐரொப்பாவிலிருந்தொ இந்தியாவிற்கு தொலை பேசும் குழந்தைகளை ஆங்கிலத்தில் பேசுமாறு அதன் பெற்றோர் பணிக்கின்றனர். அப்போது தான் தன குழந்தைக்கும் தனக்கும் கெளரவம் என நினைக்கின்றனர். இதனை தொலைபேசி மூலம் பாராட்டும் அக்குழந்தையின் உறவினர்களும் ஆங்கிலமே சிறந்தது என்ற என்னத்தை அந்த பிஞ்சு உள்ளத்தில் விதைக்கின்றனர்.

குழந்தைகளுக்கு 'அம்மா இங்கே வா வா ' என சொல்லி கொடுத்தால் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறீர்களே.'பா பா ப்ளாக் ஷீப்' அல்லது ரெயின் ரெயின் கோ அவே ' பாடல்களை சொல்லி கொடுங்கள் என அறிவுரைக்கிறார்கள்.

தமிழில் பேசுவதையே அகௌரவமாக நினைக்கும் குழந்தைகள் எழுதவும் படிக்கவும் தமிழை நிச்சயம் நாடப் போவதில்லை. எனது நண்பனின் குழந்தையாய் அமெரிக்காவில் உள்ள பள்ளியில் சேர்க்க சென்றபோது அக்குழந்தையின் அமெரிக்க ஆசிரியை கூறிய வார்த்தைகள் இவை.

'நீங்கள் வீட்டில் உங்கள் தாய் மொழியில் மட்டுமே உங்கள் குழந்தையுடன் உரையாட வேண்டும். தாய் மொழி தாய்க்கு நிகரானது. ஆங்கிலத்தை நீங்கள் வீட்டில் கற்றுக் கொடுக்க அவசியம் இல்லை. அதனை இங்குள்ள பள்ளிகளும் தொலைக்காட்சி பெட்டிகளும் தாமாக கற்று கொடுத்து விடும். தாய் மொழியை மறந்த குழந்தைகள் தாயை மறந்த குழந்தைகள் ஆகிவிடும். உங்கள் கலாச்சாரத்தையும் மறந்து இரண்டும் கேட்டான் ஆக எனது மாணவர்கள் ஆகிவிடக்கூடாது '

என்ன சத்தியமான வார்த்தைகள். எப்போதும் சதா ஆங்கிலத்தில் உரையாடி கொண்டிருந்த என் நண்பனின் குழந்தையை ஒரு ஐந்து நிமிடம் தமிழில் உரையாட சொன்னேன். அக்குழந்தை திக்கி திக்கி தமிழ் பேசுவதை நான் கண்டு சந்தொஷப்பட்டுகொண்டிருந்தபோது, என் காதுபட அக்குழந்தையின் தாய் சொன்னது, 'எதற்கு குழந்தையை துன்புறுத்துகிறீர்கள் அவளுக்கு ஆங்கிலம் தான் வருகிறது என்றால் ஆங்கிலத்திலேயே பேசட்டுமே'. குழந்தைகளுக்கு எது நல்லது எது கேட்டது என தெரியுமா? அதனை கற்றுக் கொடுப்பது நாம் அல்லவா? இப்போதே கற்றுகொடுத்தால் தானே மொழியின் மீது குழந்தைகளுக்கு பற்று வரும்?

இதற்க்கு இடையே தமிழகத்தில் இரண்டாவது மொழிப்பாடமாக சில பிரகஸ்பதிகள் பிரெஞ்சு மொழியை எடுத்துக் கொள்கிறார்கள். எதோ இவர்கள் பிரான்ஸ் சென்று பிரெஞ்சு புரட்சி செய்வது போல.

நான் ப மா கா வோ அல்லது திருமாவின் விடுதலை சிறுத்தைகளோ அல்லது சீமானின் சீடனோ அல்ல.,தூய தமிழில் பேசவேண்டும் என கோடி பிடிக்க. தமிழ் மொழியை பேசவும் எழுதவும், படிக்கவும் நம் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். அது நமது தலையாய கடமை. இல்லையேல் தமிழ் மொழி அடுத்த சந்ததியினர் இடையே அழிந்து விடும் ஆபத்து உண்டு.

இவ்வளவு பேசி கொண்டிருக்கிறேன். அமெரிக்கா குடிமகனான என் ஒரு வயது மகன் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. இப்போது அவனுக்கு புரிந்த நமக்கு புரியாத மழலையில் பெசிகொண்டிருக்கிறான். பிற்காலத்தில் எந்த மொழியில் பேசுவானோ என கவலையாக இருக்கிறது...

12 comments:

ஹேமா said...

முகிலன்,என்ன இத்தனை ஆவேசம்.யாருக்கோ நல்ல அடி கொடுக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது.அடி அவர்கள் மண்டையில் உறைக்கவேணுமே.அதுதான் என் கவலை.

நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை.ஆனால் சுவிஸ்,ஜேர்மன் எம் குழந்தைகள் இதுக்கு விதிவிலக்கு.முடிந்தால் First Audio-London வானொலி கேட்டுப் பாருங்க.நடா மோகன் என்பவர் நடத்துகிறார்.முகில்குட்டி கண்டிப்பாய் தமிழில் என்னோடு கதைப்பார் பாருங்களேன்.அது உங்கள் கையில்தான்.

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு!

குழந்தைகள் தமிழில் பேசுவது பெற்றோரில் கையிலேயே உள்ளது. ஒருவருக்கு முதல் அடையாளம் மொழி தான் என்பது புரிந்தால் தான் இந்த நிலை மாறும்.

குறைந்தது பதிவுலவில் இத்தனை பேர் கலந்து கொள்வது நல்ல விடயம்.

தொடருங்கள்..

சத்ரியன் said...

"தமிழன் அழிவதை கண்டும் கேட்டும் கூட அலைவரிசையை மாற்றி " மானாட மயிலாட " பார்த்துக் ரசித்த கொண்டிருந்த தூயத்தமிழர்களுக்கு மொழி என்பது ...யிருக்குச் சமம். இனமே அழிந்துபோன பின் மொழியை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?"

ராஜசுப்ரமணியன் S said...

நம் தாய் மொழியில் நாம் பேசாவிட்டால் எப்படி? தமிழ் தாய் மொழி என்பதற்காக மட்டுமல்ல.அதன் சிறப்பு களையும் இலக்கிய செல்வங்களையும் கருத்தில் கொண்டு அதைப் பேணிக்காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.நல்ல பொருள் பொதிந்த பதிவு.

jothi said...

//இப்போது அவனுக்கு புரிந்த நமக்கு புரியாத மழலையில் பெசிகொண்டிருக்கிறான். பிற்காலத்தில் எந்த மொழியில் பேசுவானோ என கவலையாக இருக்கிறது... //

எந்த மொழியில் பேசினால் என்ன? தமிழ் மொழியில்தான் நினைப்பான்.

சந்திரா said...

மிக மிக சரியாக சொன்னீர்கள்.மொழியை சரியாக பாதுகாக்காத காரணத்தினால் ஆங்கிலத்திடமோ,மற்ற மொழியிடமோ தன்னை தொலைத்த மொழிகள் உலகில் பல உண்டு.உலகில் எங்கு வேண்டுமானலும் செல்லுங்கள்,என்ன மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள்.ஆனால் தாய் மொழியை மறக்காதீர்கள்.

நிலா முகிலன் said...

வாருங்கள் ஹேமா. இது யாருக்காகவும் இல்லை. நம்மை போல சொந்த மண்ணை விட்டு சொந்த மொழியை விட்டு வேறு தேசத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தான்.

ஐரோப்பாவில் அப்படி இல்லைன்னு சொல்றிங்க. சந்தோசம். நிலா குட்டி நல்ல தமிழில் கதைப்பாள் என நம்புகிறேன்.

நிலா முகிலன் said...

வணக்கம் செந்தில் வேலன். நீங்கள் தமிழ் பற்றி விகடனில் எழுதுவதை தொடர்ந்து படித்து வருகிறேன். தொடரட்டும் இப்பணி.

நிலா முகிலன் said...

உங்கள் ஆவேசம் புரிகிறது சத்ரியன். அங்கு தமிழர்கள் மாண்டு கொண்டிருக்க வருத்தபடுவதை தவிர என்ன செய்ய இயலும். துக்கம் தான் அனுஷ்டிக்க முடிந்தது.

நிலா முகிலன் said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா சுப்ரமணியன்.

நிலா முகிலன் said...

தமிழை மறந்து ஆங்கிலத்திலேயே பேசி கொண்டிருந்தால் அவன் சிந்திப்பது கூட ஆங்கிலத்திலேயே என்றாகிவிடும். தமிழில் சிந்திப்பது கூட இயலாமல் பொய் விடும்.

நிலா முகிலன் said...

சந்திரா உங்கள் கருத்து நியாமானதே. தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு ஹிந்தி மொழி மருதலிக்கபடுவது ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மொழிகள் கற்பதற்கு தடை இருக்க கூடாது என்பதே என் கருத்து. ஆனால் எந்த மொழியை கற்றாலும் தமிழை உங்கள் தாய் மொழியை அதற்க்கு உரிய இடம் தரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...