Friday, May 8, 2009

சினிமாவும் நானும்...சங்கிலி தொடர்...

சினிமாவை பற்றிய தொடருக்கு தனது உப்புமட சந்தி இணையத்தில் என்னை அழைத்த ஹேமாவுக்கு முதல் நன்றி. பல மாதங்கள் கழித்தே எனக்கு இதனை பதிய நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். எனக்கு இணையுலகத்தில் யாரையும் தெரியாததால் என்னால் யாரையும் இதனை தொடர அழைக்க இயலவில்லை. இனி ஹேமாவின் கேள்விகளும் என் பதில்களும் .......

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு ஆறு அல்லது ஏழு வயது இருக்கலாம்.


2)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
சக்கரவர்த்தி திருமகள் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த த்யாகம் இரண்டும் மங்கலாக நினைவிருக்கிறது. நான் முதலில் பார்த்தது எம் ஜி ஆரைத்தான்

3)என்ன உணர்ந்தீர்கள்?
கோவையில் இருக்கும் சவுரி பாளையத்தில் உள்ள டென்ட் கொட்டாயி இல பார்த்த சினிமா இன்னமும் மங்கலாக நினைவு இருக்கிறது. வெள்ளை துணி கட்டி அதில் படம் காண்பித்தார்கள். காற்று அடிக்க திரையும் சேர்ந்து ஆடியது. எம் ஜி ஆர் குதிரையில் வர வர திரையான அந்த வெண்ணிற துணியும் காற்றுக்கு ஆட எதோ நிஜமாகவே குதிரையில் அவர் என்னை நோக்கி வருவதாக எண்ணி பயந்து அழுதது எனக்கு நினைவிருக்கிறது. பின்னர் அப்பா என்னை தோளில் தூக்கி வைத்து திரைக்கு பின்னல் சென்று காட்டி அங்கு யாரும் இல்லை என அறிந்து தான் சமாதானம் ஆனேன்.

4)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
என் மனைவி சூர்யாவின் ரசிகை என்பதாலும் எனக்கு பூமிகாவை பிடிக்கும் என்பதாலும் இருவரும் கடைசியாக திரை அரங்கில் சென்று பார்த்த தமிழ் சினிமா 'ஜில்லென்று ஒரு காதல்'. படம் மிக சுமார் என்றாலும் படத்தில் வரும் நியூ யார்க் நகரம் பாடலின் டெக்னிகல் நேர்த்தியும் 'முன்பே வா ' தந்த மேன்மையும் பெரிய திரையில் பார்க்கையில் மிக அழகு (பூமிகாவும் தான்). மற்றபடி நான் பார்ப்பது குறுந்தகடுகளில் தான்

5)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?
தனுஷ் நடித்த 'படிக்காதவன்' வீட்டில் குறுந்தகட்டில் பார்த்தேன். படம் குப்பை. விவேக்கின் நகைச்சுவை கொஞ்சம் பரவாயில்லை. இப்படி பட்ட படங்களையும் மக்கள் பார்த்து ஹிட் ஆக்குகிறார்களே என கவலைப் பட்டேன்.
6)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
சந்த்யா ராகம்,வீடு,உதிரி பூக்கள்,முள்ளும் மலரும்,அன்பே சிவம் ,மேஜர் சந்திரகாந்த் இப்படி பல உண்டு
7)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இது வர்றேன் அதோ வர்றேன் என சொல்லி அரசியலுக்கு வராமலேயே அரசியல் செய்த ரஜினி, ஒகனேகல் பிரச்னையில் அனைவரும் கன்னடர்களை அடிக்க வேண்டும் ஒதைக்க வேண்டும் என பேச சகோதரத்துவம் பற்றி பேசிய கமலின் முதிர்ச்சி, பல தடைகள் தாண்டி அரசியலில் கால் பதித்து குறிப்பிடத்தக்க ஒட்டு வங்கியை வைத்து பெரிய கட்சிகளுக்கு சவால் விடும் விஜயகாந்தின் துணிச்சல்....விஜய T ராஜேந்தர் அவ்வபோது செய்யும் அரசியல் காமெடி என இன்னும் சினிமா காரர்களின் அரசியல் சுவாரசியம் தான்.
8)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
நாயகன் மற்றும் அக்னி நட்சத்திரம் திரைப்படங்களின் ஒளி அமைப்புகள், கிராபிக்ஸ் அவ்வளவாக இல்லாத காலத்திலேயே கமலின் தேவர் மகன் படத்தின் வெள்ள காட்சிகள் மிகவும் பிடித்தது. இப்போது வரும் கிராபிக்ஸ் காட்சிகள் தொழில் நுட்ப நேர்த்தி இல்லாமல் அரைவேக்காடுதனமாக இருக்கிறது (உதாரணம், தசாவதாரம்,சிவாஜி). எனகென்னமோ இயற்கையாக படம் பிடித்தல் தான் பிடித்திருக்கிறது.( பாலு மகேந்திராவின் இயற்கை ஒளிப்பதிவு உண்மைக்கு அருகே இருப்பதால் காட்சிகளுக்கு மிக அருகில் இருப்பதை போல உணர்கிறேன். அதுவே ஒரு கலைஞனின் வெற்றி என நான் கருதுகிறேன்.)
9)தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஒருநாளும் தமிழ் சினிமா பற்றி வாசிக்காமல் இருந்ததில்லை.
10)தமிழ்ச்சினிமா இசை?
என்னை கைப்பிடித்து அழைத்து இசையை ரசிக்க வைத்தது இளையராஜாவின் இசை. மாலை நேரத்தில் கோவை வானொலி நிலையத்தில் போடும் பாடல்களுக்காக காத்து கிடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்போதும் 'அன்னகிளியே உன்னை தேடுது' பாடலை கேட்டால் எனக்கு வானொலியில் மிதந்து வரும் அந்த காலங்கள் அணைத்து கொள்கின்றன. இளையராஜா இந்திய தரம் என்றால் ரகுமான் உலகத்தரம். இட்டிலியும் பீட்சாவும் இரண்டுமே நமக்கு தேவை படுகிறதே. தாலாட்ட இளையராஜாவின் இசை என்றால் கொண்டாட கூத்தடிக்க ரகுமானின் இசை. வித்யாசாகர் மற்றும் 'என்ன இது என்ன இது' என நளதமயந்தி படத்தில் வரும் அந்த பாடலில் தேனையும் பாலையும் ஊற்றிய ரமேஷ் விநாயகம், நிறைய படங்கள் பண்ணுங்க சார்.
11)தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?

நான் அதிகம் விரும்பி ரசித்து பார்ப்பது அயல் நாடு திரைப்படங்களே. தமிழ் படங்களில் பெரும்பாலான படங்கள் நமது வாழ்க்கையுடன் ஒத்து போகாத ஹீரோ இசம் கலந்த திரைப்படங்களே வெளி வருவதால் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. உலக சினிமாவுக்கு வாருங்கள்.. கொட்டிகிடக்கின்றன அற்புதமான முத்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளர்கள், அலெஜாண்ட்ரோ கொன்செல்வாஸ் இன்னரிட்டு என்ற இஸ்பானிய இயக்குனர் மற்றும் இரானிய இயக்குனர் மஜீத் மஜீதி. மிகவும் பாதித்த படங்கள் இரானிய திரைப்படங்களான 'children of heaven' மற்றும் colour of paradise, இன்னரிட்டு இயக்கிய மூன்று படங்களான அமோறேஸ் பெரோஸ், 21 grams , பாபேல், lars vaan tier's 'the dancer in the dark கோரிய திரைப்படமான ' தி வே ஹோம் ' என பட்டியல் நீளும்.
12)தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இதுவரை நேரடி தொடர்பு இல்லை.
ஒரு சினிமா அல்லது ஒரு குறும்படம் இயக்கவேண்டும் என்ற கனவு உண்டு. அதற்காக என்னை நான் இன்னமும் தகுதிப்படுத்திக்கொள்ளவில்லை. எதிர்காலத்தை பற்றி எனக்கு தெரியாது.
13)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் சினிமாவில் இப்போது பல புது முயற்சிகளின் மேற்கொள்ள படுகின்றன உதாரணம் பருத்தி வீரன், சுப்ரமணிய புறம், பசங்க போன்ற படங்கள். அதனை மக்களும் ஏற்றுகொண்டிருக்கின்றனர். சூப்பர் ஹீரோ படங்களை புறக்கணித்து நல்ல படங்களை ஆதரிக்க தொடங்கி இருக்கின்றனர். இது ஒரு ஆரோக்கியமான மாற்றம். தமிழ் சினிமாவின் எதிர்காலம் நிச்சயம் தமிழ் ரசிகர்களின் கையில் தான் இருக்கிறது. அவர்கள் எம்மாதிரி படங்களை ஆதரிக்கிறார்களோ அவ்வகை திரைப்படங்கள் மட்டுமே வெளிவரும். தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் பயணம் செய்யபோகிறது எனவே கணிக்கின்றேன்

14)அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நான் புத்தகங்கள் படிப்பதிலும் கவிதைகள் எழுதுவதிலும் நேரம் செலவிடுவேன். எனது படைப்புகளை பதிவேற்றம் செய்து உங்களை படுத்துவேன்.
எனினும் உலக சினிமாக்கள் தொடர்ந்து பார்ப்பேன்.
தமிழ் நாட்டில் பல தொலைக்காட்சி சானேல்களை மூட வேண்டி இருக்கும். பலர் பைத்தியம் பிடித்து அலைவார்கள்.நடிகர்கள் அனைவரும் அரசியலில் இறங்கி அதில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ரசிகர்கள் அப்போதும் அரசியல் வாதி ஆன தங்கள் தானை தலைவனின் கட் அவுட்கள் மேல் ஏறி பால் அபிஷேகம் செய்து பீர் அபிஷேகம் செய்து அங்கிருந்து தவறி விழுந்து தங்கள் உயிரை விட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களது தலைவன் கட் அவுட்டில் சிரித்தபடி பார்த்துகொண்டிருப்பான்.







LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...