Saturday, November 27, 2010

உலக சினிமா: அம்ரீக்கா (அரபிக்)

ஒரு மதத்தை சார்ந்தவன் ஏதாவது ஒரு பயங்கரவாத செயலில் ஈடுபட்டால், அம்மதத்தை சார்ந்த அனைவருமே, பயங்கர வாதிகள் என முத்திரை குத்தப்படுவதும் அதனை அரசியல் சக்திகள் ஊதி ஊதி பெரியதாக்குவதும் நாம் அனைவரும் கண்ட ஒன்று. அதே மதத்தை சார்ந்த, குற்றங்கள் அறியாதவர்களும் பலிகடாக்கள் ஆக்க படுவதை நாம் காண்கிறோம். ஒசாமா என்ற ஒரு தீவிர வாதி ஒரு அரபிக் என்பதால், அனைத்து அரபியர்களும் தீவிரவாதிகள் என பார்க்கும் மனோபாவம் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. அரபியர்களோ இஸ்லாமியர்களோ தங்கள் நாடுகள் வரும்போது அவர்களை பரிசோதிக்க கூடுதல் கவனமும் இமிக்ராஷன் பகுதியில் எடுத்துக் கொள்ளப்படும்.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஒரு வங்கியில் நல்ல வேலையில் இருப்பவள் முன்னா. அவளுடைய மகன் க்பாட்டி. முன்னா குண்டாக இருப்பதால், அவளை விவாகரத்து செய்துவிட்டு அழகான ஒரு யுவதியுடன் வாழ்க்கை நடத்துகிறான் அவள் கணவன். ஒவ்வொரு முறை தன அலுவலகத்தில் இருந்து இல்லம் திரும்பும்போது  ராணுவத்தின்  ஏகப்பட்ட பரிசோதனைகள். எங்கே தன மகனும் இந்த பாலைவனத்தில் கிடந்தே அல்லல் பட போகிறானோ என அவள் வருத்தமுற்று இருந்த சமயத்தில், அவள் எப்போதோ அமெரிக்க விசாவிற்கு மனு  போட்டிருக்க, அப்போது அவளுக்கு கிடைக்கிறது.. தாயும் மகனும் அம்ரீக்காவிற்கு பயணப்படுகிறார்கள்.(அரபிக்கில் அமெரிக்காவைத்தான் அம்ரீக்கா என சொல்கிறார்கள்)

மூன்று மணி நேர விசாரணை மற்றும் பரிசோதனைக்கு பின்னர், வெளியே வரும் அவர்களை, முன்னாவின் சகோதரி ரகதா மற்றும் அங்கு மருத்துவனாக இருக்கும் அவள் கணவன் நபீல், தங்களது மூன்று குழந்தைகளுடன் தங்கள் குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றனர்.தனது பத்து வருட வங்கி வேலை அனுபவத்தில் எளிதாக வேலை கிடைத்துவிடும் என கனவில் இருக்கும் முன்னாவிற்கு வைட் காசில் என்கிற ஒரு துரித உணவகத்தில் பணியாளர் வேலை மட்டுமே கிடைக்கிறது. தனது அறிவாளியான மகன் க்பாடியை அங்குள்ள ஒரு நல்ல பள்ளியில் சேர்க்கிறாள். க்பாடியோ பாலஸ்தீனத்தை சேர்ந்தவன் என்பதால், அவனை எல்லோரும் ஒசாமா என எள்ளி நகையாடுகிறார்கள். முன்னாவின், சகோதரி ரகதாவுக்கோ, அம்ரீக்காவில் இருக்க பிடிக்க வில்லை. தனது சொந்த ஊருக்கு போக அவள் துடிக்கிறாள். அப்போது அமெரிக்கா சதாம் உசேன் நாடாண்டு கொண்டிருந்த இராக்கின் மீது போர் தொடுக்கிறது. மருத்துவனான நபீல் ஒரு அரபியன் என்பதால் அவனிடம் நோயாளிகளின் வரவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் அந்த குடும்பத்தின் நிம்மதி குலைந்து போகிறது. க்பாட்டி அமெரிக்கனாக மாறி தனது அம்மாவை மதிக்க மறுக்கிறான். சக மாணவர்கள் தன்னை அன்னியமாக பார்ப்பதால் அவனுக்கு அவர்களிடம் பிணக்கு வருகிறது.நிம்மதியாக இருந்த பாலஸ்தீன வாழ்கையை விட... அமெரிக்காவில் தாங்கள் அகதிகளாக உணர்கிறார்கள்.
 


வேறொரு நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயரும் மக்களின் துயரை அருமையாக சொல்லி இருக்கிறது படம். முன்னாவாக நடித்திருக்கும் நிஸ் ரீன் பௌர், மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாள். தனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும், மற்றவரிடம் அன்பை வெளிப்படுத்தும் இடங்களிலும், தனது மகன் சிறிது சிறிதாக தன்னை விட்டு விலகிப் போவதை கண்டு கண்ணீர் வடிப்பதும் என கலக்கி எடுத்திருக்கிறார். இது ஒரு அரபி படம் என்பதால் தான் அவருக்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என நான் நினைக்கிறேன்.

ஒரு சிக்கலான கதையை எடுத்துக் கொண்டு, அதிக செலவு இல்லாமல், மனித உணர்வுகளுடன் விளையாடி இருக்கிறார், திரைக்கதை மற்றும் இயக்கத்தை கையாண்டிருக்கும் பெண் இயக்குனர் செரியன் டபிஸ். சோகத்தை கசக்கி பிழியாமல், படம் முழுவதும் கருப்பு நகைச்சுவையை இழையோட விட்டு, படம் ராக்கெட் வேகத்தில் பயணிப்பதற்கு இவரது இருகப்பற்றும் திரைக்கதையே முக்கிய காரணி. படத்தில் அமெரிக்காவை குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல் அதன் பாசிடிவ் பக்கத்தையும் காட்டி, ஒரு அருமையான படத்தை அளித்த அவருக்கு ஒரு ராயல் சல்யுட்.

ரகதாவின் வீடு, அவள் குடும்பம், வைட் காஸ்டல் உணவகம், க்பாடின் பள்ளி. அவ்வளவுதான் படத்தின் கதை நடக்கும் இடங்கள் என அதிகம் செலவுக்கு வழி வகுக்காமல் குறைந்த செலவில் நிறைவான் படத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர்.

படத்தில், வேறொரு நாட்டில் இருந்து அமெரிக்கா வந்து வாழ்பவர்களை பற்றி ரகதா சொல்லும் அந்த வசனம் மிகவும் பிடித்தது.
'ஒரு மரத்தை ஒரு இடத்தில் இருந்து பிடுங்கி, இன்னொரு இடத்தில் நட்டு வைத்தால், அது முன்பை போலவே வளருமா.. அதன் வேர்களை தேடாதா?'.


மிக கௌரவமான  கான் திரைப்பட விருதுகள், சண் டான்ஸ் திரைப்பட விருதுகள்,  என அள்ளி குவித்துள்ளது இந்த திரைப்படம். 

வாழ்க்கையை பாசிடிவாக மாற்றி மற்றவர்களை மகிழ்விக்கும் முன்னாவின் புன்னகைக்காகவே இந்த திரைப்படத்தை இரண்டு முறை பார்த்தேன்.

அம்ரீக்கா--அருமை.

Thursday, November 18, 2010

பூலோக சுவர்க்கம் - 5 சுவிஸ் பயணம்.

                                                     லவ்சான் நகர தெரு ஒன்று...

ஜெனீவாவிலிருந்து லவ்சான் நகருக்கு ஒரு மணி நேரப் பயணம். லவ்சான் ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது புடவை கட்டிய ஒரு இந்தியப் பெண்ணை பார்த்தேன். சென்று பேசுவதற்குள் அவரது ஆண் நண்பரோ அல்லது கணவரோ உடன் வேகமாக சென்று விட்டார்.எதோ இந்தியப் பார்டிக்கு செல்லப்போகிறார் போலும் என நினைத்துக் கொண்டோம். அங்குள்ள அனைவரும் பிரெஞ்சு தான் பேசினார்கள். ஆங்கிலம் புரியவில்லை. பின்னர் நீண்ட நேரமாக முத்தமிட்டுக்  கொண்டிருந்த ஒரு ஜோடியை, அவர்கள் முடித்ததும் அணுகி வழி கேட்க.. அவர்கள் அங்கிருந்து ஒன்றரை மைல் தொலைவில் இருப்பதாக சொல்லி வழிகாட்டினார்கள். அசதியாக இருந்தாலும், காலையில் கண்ட காட்சி மனதில் நிழலாட, நடக்க ஆரம்பித்தோம். சுமார் இருபது நிமிட நடைக்கு பின்னர் அந்த ஏரி வந்தது அதன் பெயர் லேக் அவ்ச்சி என சொன்னார்கள். நாங்கள் ஏரிக்கு செல்லும் முன்னர் அங்கிருந்த பூங்காவின் நீர் எழுச்சி காட்சியை சிறிது நேரம் கண்டு கழித்து விட்டு ஏரிக்கு சென்றோம். சாலைகளில் உள்ள மேடுகளும் பள்ளங்களும் அது மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட நகரம் என்பதை உணர்த்தின.

ஓல்ட் டவுன் எனப்படும் பழைய நகரம் ஒரு பழங்கால அழகான பிரமாண்டமான தேவாலயத்தை சுற்றியே அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த தேவாலயத்திற்கு ஆயிரம் வயது என சொன்னார்கள்.

சுவிஸ், தான் ஒரு பூலோக சொர்க்கம் என நிரூபித்தது அங்கே. அந்த ஏரியும் தொலைவில் தெரியும் மலைகளும் அவ்வளவு அழகு.மூன்று தொடர் மலைகளின் மேலே லவ்சான் நகரம் அமைந்துள்ளது. அதன் பாதத்தில் ஜெனிவா ஏரி அமைந்து அந்த நகருக்கே அழகு சேர்க்கிறது.

லவ்சான் நகரின் அழகை இங்கிருக்கும் புகைப்படங்களே எடுத்து சொல்லும்.

எட்டரை மணிக்கு இருட்டும் நேரம் வரை லவ்சான் நகர ஏரியின் அழகை பருகிவிட்டு செல்ல மனம் இல்லாமல் கிளம்பி இரவு பத்து மணிக்கு பெர்ன் வந்து சேர்ந்தோம். அகோர பசி. அருகிருந்த பர்கர் கிங் உணவகத்தில் இரண்டு பர்கர்கள் வாங்கி கொண்டு எங்கள் அறைக்கு வந்து சேரும்போது மணி பதினொன்று.

மறுநாள் நாங்கள் செல்ல இருந்தது ஐரோப்பாவின் உச்சியான யுங் ப்ராவ் என்னும் வெள்ளை சொர்க்கம். அதன் கனவுகளிலேயே உறங்கிப்போனோம்.

Monday, November 15, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-6: வயசுப் பொண்ணு..!

ரு இருபது வயது வாலிபனையும் ஒரு வயது வந்த பெண்ணையும் ஒரு இரவில் தனியே மூன்று மணி நேரங்கள் விட்டு சென்றால், எவ்வளவு பிரச்சனை வரும் என்பது உங்களுக்கு தெரியும் தானே. எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட என்னை வளர்த்தது என் அக்கா தான். அக்காவுக்கு ஒரு பெண் இருந்தாள். கிரிஜா என்பது பெயர். அவள் பிறந்த தினத்திலிருந்தே, இவன் தான் உன் தாய்மாமன் என என்னை காட்டி தான் வளர்த்தாள்.

இருந்தாலும் எனக்கும் கிரிஜாவுக்கும் பிடிக்காமல் போனது. அவளுக்கு வாய் பேச வரவில்லை. என்றாலும் என்னை அக்காவிடம் போட்டு கொடுக்க அவள் தயங்கியதில்லை. இப்படித்தான் ஒரு முறை, நான் திருட்டு தம் அடிக்க வைத்திருந்த ஒரு சிகரெட்டை அக்காவிடம் குடுத்து விட்டாள். இது பரவாயில்லையே.. நண்பர்கள் என்னிடம் கொடுத்து ஒளித்து வைக்க சொல்லியிருந்த மதுபுட்டியையும் நொண்டி எடுத்து உடைத்துப் போட அக்கா உடனே... 'உன்னை எப்படி எல்லாம் வளர்த்தேன்', என ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.அக்காவிடம் நான் எடுத்திருந்த நற்பெயர் தூள் தூளானது.

என்னை தேடி என் கல்லூரி நண்பர்கள் யாரேனும் வந்து விட்டாள் போதும், என் அறையிலேயே இங்கும் அங்கும் சுத்தி சுத்தி வருவாள். அவளுக்கு என் நண்பர்கள் கொடுக்கும் பறக்கும் முத்தங்களுக்கு வெக்கத்துடன் சிரிப்பதை கண்டு ஆத்திரமாக வரும் எனக்கு. என்னதான் இருபதாம் நூற்றாண்டு என்றாலும், என் வீடு முழுக்க அவள் குட்டை பாவாடையில் தான் வலம் வருவாள். என் அக்காவும் கண்டு கொள்வதில்லை.

அன்று அக்கா தயங்கி தயங்கி என்னிடம் வந்து நின்ற பொது அவள் மனதில் என்ன இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. மாமா வேறு அன்று சீக்கிரமே வந்து விட்டார்.
'இன்னிக்கு என்ன நாளு ன்னு நீ மறந்துட்ட சுந்தரேசா' என்று அக்கா சொன்னபோது கூட நான் யோசனை செய்து பார்த்து தோற்றுவிட்டதை ஒத்துக் கொண்டு...
' ஸாரிக்கா நேஜம்மாவே எனக்கு என்ன நாளுன்னு ஞாபகம் வரலை'

' அக்கா மேல பாசம் இருந்தா இதெல்லாம் மறப்பியா இன்னிக்கு என் கல்யாண நாள்..' எனக் கண்ணை கசக்க ஆரம்பித்து விட்டாள்.

' இல்லக்கா அது வந்து... ' என நான் சமாளிக்க ஆரம்பிக்க உடனே அக்கா கண்களை துடைத்துக் கொண்டு...( இந்த பொம்பளைங்க எப்டி தான் டக் னு அழுது டக் னு அழுகைய நிப்பாட்டிக்கறாங்களோ )

' வந்து... உன் மாமா என்னை இன்னிக்கு சினிமாக்கு கூட்டிட்டு போகனும்னு ஆசை படறார். நானும் சினிமா எல்லாம் பொய் ரொம்பா நாளாச்சா... வந்து இன்னிக்கு ஒரு மூணு மணி நேரம் நீ கிரிஜாக்கு தொணயா இருந்தின்னா நாங்க போய்ட்டு ஒடனே வந்துருவோம். அது என்னமோ அடல்ட் படமாம். கிரிஜாவ கூட்டிட்டு போகமுடியாது. அதனால...'

எனக்கு அந்த ஐடியா சுத்தமாக பிடிக்கவில்லை. நானாவது கிரிஜாவுடன் மூணு மணி நேரமாவது...என நினைத்தேன். என்றாலும் என் அக்காவை அழ வைத்து விட்டதால் உடனே சரி என்றேன்.

அக்காவும் மாமாவும் கிளம்பி சென்றதும், நான் கிரிஜாவிடம் இருந்து விலகியே இருந்தேன். இருந்தாலும்... அவள் மெல்ல என் அறைக்குள் நுழைந்தாள். புன்னகைகளையும் பார்வைகளையும் என்னால் சமாளிக்க முடியாமல், அவள் மேல் எனக்கிருந்த கோவம் எல்லாம் பொடிப் பொடியாக நான் அவளை மெல்ல நெருங்கினேன்...

மூன்று மணி நேரம் கழித்து படம் முடிந்து அக்காவும் அத்தானும் வீட்டில் நுழைந்தபோது, நான் கிரிஜாவை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருந்ததை பார்த்து அக்காவும் மாமாவும் அதிர்ச்சி அடைந்தனர்.

' எலியும் பூனையுமா இருந்த மாமனும் மருமகளும் எப்படி கொஞ்சிக்கறாங்க பாருங்க..' என அக்கா சொல்ல...
' என்ன மச்சான் ரொம்ப படுத்தினாளா' என என் மாமா வினவ...
' இல்லை மாமா இவள் ரொம்ப சமத்து. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருங்கின நண்பர்களா ஆய்டோம். உங்க ரெண்டு பேருக்கும் தான் நான் தேங்க்ஸ் சொல்லணும் ' என்றேன்.

என்ன புரிந்ததோ.. தனது பொக்கை வாய் திறந்து சிரித்தாள்.. ஒரு வயதே பூர்த்தி அடைந்த என் மருமகள் கிரிஜா!
--

Wednesday, November 10, 2010

திரைப்படம்: மம்மி அண்ட் மீ (மலையாளம்).


நாம் வளர்ந்து வரும் பிராயத்தில் டீன் ஏஜ் எனப்படும் பதின்ம வயதுப் பருவம், மிக மிக முக்கியமான ஒன்று. நமது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகும் வயதும் இந்த வயது தான். அந்த வயதில் வரும் அகங்காரம், கோவம், தான் செய்வது மட்டுமே சரி என தோன்றும் மனோபாவம், அனைத்தையும் உளவியல் ரீதியாக அலசுகிறது நான் சமீபத்தில் பார்த்த மலையாளத் திரைப்படம் 'மம்மி அண்ட் மீ'.

டீன் ஏஜ் பருவத்தை பற்றி சொல்கிறேன் என பாலியல் காட்சிகளை காட்டி கல்லா கட்ட நினைக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு குடும்ப படமாக எடுத்து பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நிலவி வரும் ஜெனரேஷன் கேப்பை ஓரளவு மூட பிரயத்தனம் செய்கிறது இந்த நல்லப் படம். தமிழ் மசாலா படங்களைப் பார்த்து கேட்டு போய்விட்ட மலையாள திரைப்படங்களில் இந்தத் திரைப்படம், எடுத்தக் கொண்ட களன், மற்றும் விறுவிறு திரைக்கதையால் தனித்து நிற்கிறது.


ஜுவல் கல்லூரியில் படிக்கும் பதின்ம வயதுப் பெண். அவள் இந்த உலகத்தில் முதல் எதிரியாக நினைப்பது, வீட்டுக்கு காலம் தாழ்த்தி வந்தாலோ, இறுக்கப் பிடிக்கும் உடை அணிந்தாலோ, தனது ஆண் நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடித்தாலோ, அதனை எதிர்த்து திட்டும் அம்மா கிளாரா தான். வங்கி அதிகாரியான அப்பா ஜோசெப் க்கு இவர்கள் இருவரின் சண்டையை தீர்த்து வைக்கவே நேரம் போதவில்லை. அவளுடைய தம்பி, அவள் திட்டு வாங்கும்போதெல்லாம் குதூகலிக்கும் சாப்பாட்டு பிரியன்.

இவர்களின் குடும்ப நண்பரின் மகன் ராகுல். இரு குடும்பங்களும் பரஸ்பர நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருப்பதால், ஜுவலுக்கு ராகுலுடனான நட்புக்கு இருவர் வீட்டிலும் பச்சை கோடி. ஜுவலும் ராகுலும் ஒரே கல்லூரியில் படிப்பதால், ஜுவல் ஆண் பிள்ளைகளிடம் சண்டை இடும் போதெல்லாம் அவளைக் காப்பது ராகுல் தான். ராகுலுக்கு ஜுவலின் மீது ஒருதலை காதல் இருந்தாலும், அதன் மூலம் இரு குடும்ப நட்பு களங்கப்பட்டு விடுமோ என தன காதலை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்கிறான். கல்லூரியில் இருந்து நேரங்கழித்து வீடு திரும்புவதற்கு காரணம் கேட்டதற்கு, இன்டர்நெட் சாட் செய்வதால் சமயமாகிறது என காரணம் சொல்லும் ஜுவலுக்கு கிளாராவே பரிந்துரைத்து வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி தருகிறார் ஜோசெப். இன்டர்நெட் சாட்டில் நண்பனாகிறான் முகம் தெரியாத அமீர். அவனுடன் சாட் செய்ய செய்ய ஜுவலின் சுபாவம் மாறுகிறது. ஒருமுறை தனது தாயின் கண்டிப்பாய் பொறுக்க முடியாத ஜுவல் கத்தி கூப்பாடு போட்டு வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் உடைத்து மயங்கி விழுந்து விட, ஒரு மன நல மருத்துவரை அணுகுகிறார்கள் கிளாராவும் ஜோசெப்பும். அப்போது அவர் இன்றைய பதின்ம வயது இளைஞர்களின் மனோ நலத்தையும் பெற்றோர் எப்படி அவர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் எனவும் விளக்குகிறார்.

உடைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியும் பேசி மாய்ந்து போகும் ஆண்ட்டிகள்  வரும் பார்ட்டிகளுக்கு ஜுவல் செல்ல விரும்புவதில்லை. ( அந்த பார்டிகளுக்கும் சுடிதார் அல்லது காக்ரா சோளி தான் அணிந்து வரவேண்டும் என்ற அன்னையின் கட்டுப்பாடு வேறு). அவள் பார்ட்டிக்கு செல்ல, ஒரு அழகான உடை தைத்து அனுப்பி வைக்கிறான் அமீர். அதனை அணிந்து அவள் பார்ட்டிக்கு செல்ல பார்ட்டியில் உள்ள அனைவரின் கண்ணும் ஜுவலின் மேல். தன அம்மாவிடம் அதனை தன தோழியுடன் சென்று கடையில் வாங்கியது என பொய் சொல்ல, அமீர் தாயிடம் தான் யார் என்ற உண்மையை சொல்ல வேண்டியது தானே. என கேட்க அப்போது தான் தான் மெல்ல அமீரை காதலிக்க துவங்கி இருப்பது புரிகிறது. இதனை ராகுலிடம் அவள் சொல்ல, ராகுலோ அவளது நலத்தில் அக்கறை கொண்டவனாய் இரு வீட்டாரின் பெற்றோரிடமும் சொல்ல, மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி அமீரை  வீட்டுக்கு அழைக்கிறார்கள் கிளாராவும் ஜோசெப்பும்.
ஜுவல் அவன் அனுப்பிய அந்த பார்ட்டிஉடை அணிந்தபடி மகிழ்ச்சியுடன் காத்திருக்க, ராகுலின் குடும்பமும் ஜுவலின் குடும்பமும், படம் பார்க்கும் நாமும் , நகம் கடித்தபடி காத்திருக்க, அமீர் வந்தானா? அமீர் யார்? ராகுலின் காதல் என்னவானது என்பதை சிறிது திருப்பத்துடன் சொல்கிறது படம்.

படத்தில் பட்டாசாக வெடித்திருப்பவர் ஊர்வசி. வயது வந்தப் பெண்ணை வைத்துள்ள ஒரு தாய்க்குரிய கண்டிப்பும் கரிசனமும் அவர் வெளிப்படுத்தும் இடங்களில் கைத்தட்டல் பெறுகிறார். முகேஷின் அலட்டல் இல்லாத நடிப்பும் அருமை. ஜுவல்லாக நடித்திருக்கும் அர்ச்சனா கவி கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார். மிகவும் சாதரணமாக செய்துள்ளார். ராகுலாக நடித்திருக்கும் குஞ்சாக்கோ போபனுக்கு படத்தில் அவ்வளவாக வேலை இல்லை.

படத்தின் மிகப்பெரும் பலம் திரைக்கதை மற்றும் இயக்கம். படத்தின் பலவீனம், நன்றாக இருந்தாலும் அவ்வப்போது சம்மந்தமில்லாமல் எட்டி பார்க்கும் பாடல்கள்.
தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவை விளக்கும்  மாலாகப் போல மகளே.. மிக மென்மையான பாடல். காட்சிபடுத்தலும் அருமை.

இருந்தாலும் தைரியமான கதைக் களனுக்காகவும் திரைக்கதைக்காகவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.


மம்மி அண்ட் மீ - மேன்மை.மாலாகப் போல மகளே..

Friday, November 5, 2010

பூலோக சுவர்க்கம் - 4 சுவிஸ் பயணம்.

                                                                  ஜெனீவா நகரம்.
காலையில் எங்கள் விடுதியிலேயே இலவச உணவு வழங்கப்பட்டது. சுவிஸ்சில் க்ரோசாந்த் எனப்படும் ஒருவித ரொட்டியும் கோதுமை ரொட்டியும் பிரதான உணவுகள். க்ரோசாந்தை நான் அமெரிக்காவிலேயே உண்டிருந்தாலும் இங்கு அதன் வடிவமும் சுவையும் மிக அருமையாக இருந்தது. பழ சாறுகள், அவித்த முட்டை, நறுக்கிய பழத்துண்டுகள், அவித்த உருளை கிழங்கு என அருமையாக இருந்தது. சுவிஸ் தேசத்தின் வெண்ணையும் சீஸும் மிக பிரசித்தி பெற்றது. பாலுக்கு பெயர் போன டென்மார்க்கிலிருந்து வருவதாக சொன்னார்கள்.

 நாங்கள் பெர்ன் நகர ரயில் நிலையத்தை அடைந்து ஜெனீவா செல்லும் ரயிலை பிடித்தோம். அங்கிருந்து இரண்டு மணி நேரப் பயணம். ரயில் பெட்டியில் இருந்த ஒவ்வொருவரும் வந்து என் மகனை கொஞ்ச ஆரம்பித்தார்கள். அவனும் அவர்களுக்கு டாடா காட்டியும் ஒளிந்து விளையாடியும் புன்னகைகளையும் தந்து வசீகரித்துக் கொண்டிருந்தான். வயதானவர்கள் வந்து எங்கள் இருக்கையின் அருகே நின்று எதுவுமே பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். நான் ஹலோ சொன்னதும் பதிலுக்கு ஹலோ சொல்லி விட்டு அவனையே கவனிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் மனதில் அவர்களின் பேரன்கள் வந்து போயிருக்கக் கூடும்.

 ரயிலில் இரண்டு அடுக்குகள் இருந்தன. நமது ஊரைப் போல ஒரு பெட்டியில் சமையல் நடக்கிறது. அங்கு ரொட்டி, பழசாறு, தேநீர் பாஸ்தா என சகல ஐரோபிய உணவு வகைகளும் இருந்தன.  எனினும் விலையை கருதி நாங்கள் வாங்கவில்லை. கையோடு எடுத்து சென்றிருந்த தண்ணீர் பாட்டில்களையும் பழ சாறுகளையும்  காலி செய்தோம்.
ரயிலின் வெளியே தெரிந்த காட்சிகளில் நான் முன்பே சொன்னது போல அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு மிக அழகாக தெரியலாம்.ஆனால் அமெரிக்காவிலும் இதை போலவே பசுமை தெரியும் ஆதலால், அவ்வளவாக வேறுபாடு இன்றி தெரிந்தது. ஆங்காகே மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மிகவும் புஷ்டியாக இருந்தது. ஒரு மணி நேரப் பயணத்துக்கு பின் தான் அந்த பரவசமூட்டும் காட்சியை கண்டோம்.
பெர்நிலிருந்து ஜெனீவா செல்லும் வழியில் லவ்சான் நகர் இருக்கிறது. அதனை தாண்டி செல்லும் வேளையில், அந்த ஜெனீவா ஏரியின் அழகு.. அப்பா..சொல்லி மாளாது. (காண்க புகைப்படம்)

ஜெனீவா ஏரி லவ்சான் நகரத்திலிருந்து...
எந்த புகைப்பட காரனும் ஒரு நிமிடம் அந்த அழகு காட்சியை கண்டு ஸ்தம்பித்து தான் போய்விடுவான். அவ்வளவு அழகு. உண்மையாக சொல்கிறேன், அந்த காட்சியை காண எனக்கு கண்கள் இருந்ததற்காக அந்த ஒரு நொடி மிகவும் பெருமையாக இருந்தது. என்ன புகைப்படம் எடுத்தாலும், நேரில் காண்பது போல வராது. அப்போது தான் நான் சுவிஸ்சில் இருப்பதையே உணர்ந்தேன். சுவிஸ் ஒரு பூலோக சொர்க்கம் என மற்றவர்கள் கூறுவதை அப்போது தான் என் மனம் ஏற்றுக் கொண்டது.  என் மனைவியிடம் கூறினேன்.'சுவிஸ் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தினமும் இந்த அழகு காட்சிகளை அவர்கள் கண்டு கொண்டே இருக்கலாமே' என.ஜெனீவா பார்த்து திரும்பி செல்லும் வேளையில் நிச்சயமாக லவ்சான் நகருக்கு செல்ல வேண்டும் என பேசி கொண்டோம்.                                                  ஜெனீவா ஏரியின் நீர் எழுச்சி...
ஜெனீவா சென்று இறங்கியதும் அது எங்களுக்கு வேறுவிதமான நகராக தெரிந்தது. மக்கள் அனைவரும் மெர்சி மெர்சி என பிரெஞ்சு பேசிக் கொண்டிருந்தார்கள். நிறைய மக்கள் தலைகள். சுவிஸ்சிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம். (முதலாவது சூரிக்). டிராம்களும் பேருந்துகளும் தங்கள் ஹைட்ராலிக் பெருமூச்சோடு மக்களை உண்டும் துப்பிக்கொண்டும் இருந்தன.

ஜெனிவா என்று நினைத்தாலே நமக்கு ஐக்கிய நாடுகள் சபையும், செஞ்சிலுவை சங்கமும் தான் நினைவுக்கு வரும். ஆம். செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகமும், ஆஸ்திரியாவின் விஎன்னாவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமும் இங்கு தான் இயங்குகின்றன. பிரான்ஸ் தேசத்தின் எல்லையில் இருப்பதால், ஜேர்மன் மொழியே பிரதான மொழியாக இருந்தாலும், ஜெனிவாவில் அதிகமாக பிரெஞ்சு தான் பேசுகிறார்கள். நாங்கள் இன்போர்மஷன் சென்டர் சென்று ஜெனீவா டூர் என ஏதாவது பஸ் இருக்கிறதா எனக்கேட்க, அவளோ பிரெஞ்சில் பதில் கூறினாள். எனக்கு பிரெஞ்சு தெரியாது என்றாலும் அவளது உடல் மொழியிலும் அவள் கூறியதில் இருந்து நேரே சென்றால், ஜெனீவா ஏரியில் போட் டூர் இருக்கிறது என புரிந்து கொண்டேன். 

அந்த போட் டூர் சரியான மொக்கை. இருந்தாலும் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கூறிய ஜெனீவா நகர வரலாறு பிடித்தமாக இருந்தது. படகில் இருந்தபடியே ' அதோ பார் ஐக்கிய நாடுகள் சபை, அதோ பார் பறவை' என்கிற ரேஞ்சில் இருந்தது.  ஏரியில் ஒரு ராட்சச நீர் எழுச்சி (அது தாங்க வாட்டர் பௌண்டன்)  இருந்தது. அது தான் உலகிலேயே மிக உயரமான வாட்டர் பவுண்டன் என சொன்னார்கள். ஒரு மணி நேரம் போட் அதனையே சுற்றி சுற்றி வந்தது. மக்கள் பலர் தாங்கள் சொந்தமாக வைத்திருந்த போட்டில் அந்த ஏரியில் பவனி வந்து கொண்டிருந்தனர். போட் டூர் முடிந்ததும் பசி எடுக்க அங்கிருந்த ஒரு லெபனான் தேசத்து உணவகத்தில் பலாபல்(falafal) ராப் உண்டோம். நம்ம ஊரு வடை போல இருக்கும் பலாபல். அனால் இதனை கொண்டைகடலை மசித்து செய்கிறார்கள். வடை போல செய்தது அதனை மசித்து சிறிது லேட்ட்யுஸ், தக்காளி, வெங்காயம் சிறிது தயிர் எல்லாம் வைத்து தருகிறார்கள்.  பக்கத்திலேயே இருந்த இந்திய உணவகத்தில் ஒரு பிரியாணி நாற்பது பிராங்குகள் என எழுதி இருந்ததை வயிற்றெரிச்சலோடு பார்த்து கொண்டே உண்டோம். பசிக்கு அமிர்தமாக இருந்தது. உங்கள் ஊரில் மெடிடரேனியன் அல்லது லெபனீஸ் உணவகம் இருந்தால் பலாபல்லை முயற்சித்து பாருங்கள்.


                                  மிகப் பழமையான கத்தோலிக்க தேவாலயம்.   

பின்னர் அங்கு சிறிது நேரம் சுற்றி விட்டு, லவ்சன் நகருக்கு செல்ல ஒரு பரவசத்தோடு காத்திருந்தோம். அன்றைய மாலை ஒரு மறக்கமுடியாத மாலையாக அமையப்போகிறது என்பதை நாங்கள் அப்போது உணர்ந்திருக்க வில்லை.

--

Tuesday, November 2, 2010

பூலோக சுவர்க்கம் - 3 சுவிஸ் பயணம்.

                                       ஆர் நதியின் அணைப்பில் பெர்ன் நகரம்.
சூரிக்கில் இருந்து ஒரு மணி நேர ரயில் பயணத்தில்,நாங்கள் பகல் இரண்டு மணிக்கு பெர்ன் சென்று சேர்ந்தபோது, அங்கு இருந்த கட்டடங்களும், சாலைகளும், அது ஒரு மிகப்பழமையான ஒரு நகரம் என்பதை உணர்ந்தேன். காண்டினெண்டல் என்ற விடுதியின் அறையை நான் முன்பே முன்பதிவு செய்திருந்தேன். இருவர் படுக்க கூடிய ஒரே ஒரு படுக்கை, ஒரு மேசை மற்றும் ஒரு சோபா என எட்டுக்கு எட்டு அளவில் இருந்த அறை. சிறிது ஓய்வு எடுத்து விட்டு பெர்ன நகரில் நடை பயணம் செய்தோம். பெர்ன நகரத்தின் தெருக்களை அடித்தபடி மேசை சேர்கள் போடப்பட்டு மக்கள் குடித்துக் கொண்டோ, உண்டு கொண்டோ இருந்தனர். நான் விசாரித்த பொது, வெயில் காலங்களில் மக்கள் வெளியில் மட்டுமே அமர்ந்து உண்ணவும் குடிக்கவும் விரும்புவர் என நான் அறிந்தேன். சாலை முழுவதும் நமது ஊரைப் போல தார் சாலையாக இல்லாமல் கற்களாக பதிக்கப் பட்டு இருந்தது. பெர்ன் நகரம் பழமையான நகரமாதலால் யுனெஸ்கோவின் பராமரிப்பின் கீழ் வருகிறது என உணர்ந்தேன். மக்கள் அனைவரும் நட்பாக புன்னகைத்தனர்.
                                            புராதனமான 'ட்சீட்கிலோக்' (Zytglogge)
வலை தளங்களை ஆய்வு செய்த பொது பெர்ன நகர வரலாறு, என்னை கி பி பனிரெண்டாம் நூற்றாண்டுகளுக்கு அழைத்து சென்றது.
  1196 ஆம் ஆண்டு பெர்தோல்ட் என்பவர் 'ஆர்' என்ற ஆற்றின் படுகையில் இந்த நகரை கண்டுபிடித்து தான் வேட்டையாடிய ஒரு கரடியின் நினைவாக 'பெர்ன் ' என இந்நகரை பெயரிட்டார். ஆர் என்ற அந்த ஆறு நகரின் குறுக்கே வளைந்து வளைந்து ஓடுகிறது. நகரின் மத்தியில் வீற்றிருக்கும் 'ட்சீட்கிலோக்' (Zytglogge) (அப்படித்தானே சொல்லவேண்டும்?) என்ற மணிகூண்டு க்கு வயது பனிரெண்டு நூற்றாண்டுகள்.
                                                  பெர்ன் நகர தெரு ஒன்றில்...
தடுக்கி விழுந்தால் வங்கிகள். டென்னர், கூப் என காய்கறி கடைகள். பெர்ன நகர தெருக்கள் எப்போதும் திருவிழா பூண்ட நகரமாகவே இருக்கின்றன. மக்கள் அனைவரும் கொண்டாட்டமாகவே இருக்கின்றனர். எவர் முகத்திலும் எந்த ஒரு கவலையோ, டென்ஷனோ பாக்க முடியவில்லை. அனைவரின் முகத்திலும் புன்னகை. உங்களுக்கு எப்போதும் அவர்களின் 'ஹலோ' உண்டு.சுவிஸ்சிலேயே பெரிய நகரங்களாக ஜுரிச் மற்றும் ஜெனீவா இருந்தாலும் பெர்ன் நகர் தான் தலைநகரம். பெர்ன சிறிய நகரமாக இருந்தாலும், கனஅளவில் இங்கு மக்கள் பெருக்கம் அதிகம்.பெர்ன நகர தெருக்களில் மக்கள் முழங்கால் உயர செஸ் காய்களுடன், செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். டூரிஸ்டுகள் மிக அதிகமாக காணப்பட்டனர். சுவிஸ் தேசத்தின்  பாராளுமன்றம் இங்கு தான் உள்ளது( காண்க படம்.).
                                           சுவிஸ் தேசத்தின் பாராளுமன்றம்.
எங்கள் பயண அட்டவணைப்படி நாங்கள் செல்ல இருந்த நகரங்களான ஜெனீவா மற்றும் இண்டர்லாகன் பெர்னின் அருகே இருந்ததால், இந்த நகரில் தங்கினோம்.  மாலை பெர்ன நகரம் சுற்றி வந்தந்தால் அகோரப் பசி. அங்கே இருந்த ஒரு தென் தமிழ் உணவகம் கண்டு பிடித்து இட்லி சாம்பார் உண்டோம் .இட்லி குளிர் பதன பெட்டியில் இருந்து வந்ததால், சுவை குறைந்திருந்தாலும், விமானத்திலிருந்து சரியான உணவு எங்களுக்கு இல்லாததால், அமிர்தமாக இருந்தது சாம்பார். அனால் விலை எவ்வளவு தெரியுமா?. நான்கு இட்லி பதினைந்து சுவிஸ் பிராங்குகள். நமது இந்திய மதிப்பின் படி எழுநூறு ருபாய். இருந்தாலும் பசியில் விலை பெரிதாக தெரியவில்லை. ( அமெரிக்காவில் நான்கு இட்லி ஐந்து டாலர். சுவிஸ்சில் அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிகம். பயண அசதியையும் பொருட் படுத்தாது பெர்ன் நகரை நடை வலம் வந்து அறையில் அடைந்தோம்.                    ஆறு மணிக்கெல்லாம் உறங்கிவிடும் பெர்ன் நகர தெருக்கள்...
இரவு எட்டு மணி வரை வெளிச்சம் இருந்தாலும்,சுவிஸ் தெருக்கள் மாலை ஆறு மணிக்கெல்லாம் அமைதி ஆகி விடுகிறது. ஏழு மணிக்கு பிறகு திறந்திருப்பது உணவகங்களும் பார்களும் தான். சரியான சோம்பல் நகரம் என நாங்கள் பேசிக் கொண்டோம்.

வெளியே தெருவில் இரவு ஒரு மணி வரி லியோபாலத் என்ற பாரிலிருந்து திடும் திடும் என இசையும் கேளிக்கையும் நடந்து கொண்டிருந்ததை அரை தூக்கத்தில் கவனித்தவாறே உறங்கிப் போனோம்.

மறுநாள், ஜெனீவாவை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது.


பயணம் தொடரும்...
--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...