Saturday, November 5, 2011

என்னைத் தொட்டு...ராஜாவின் ராஜாங்கம்.காலங்கள் உருண்டோடினாலும், சில விடயங்கள் நம்மை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவை நாம் கேட்கும் இசை. சில பெரியவர்கள், 'என்ன இருந்தாலும் அந்த காலம் போல பாடல்கள் இந்த காலத்தில் வருமா' என அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம், இவர்கள் ஏன் பழையதையே போட்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள், புதியதை வரவேற்கத் தயங்குகிறார்கள் என எண்ணத் தோன்றும். ஆனால் இப்போது நம்மையும் சில பாடல்கள் நம்மை பின் தொடர்ந்து ஒரு நாஸ்டால்ஜியா உணர்வை கொடுப்பதை இந்தப் பாடலை கேட்கும்போது உணரத் துவங்கினேன். 

யார் என்ன  விமர்சனங்களை வைத்தாலும், ராஜா ராஜாதான். அவர் செய்த சாதனைகளை வேறு எவரும், ஏன் ஒரு ஆஸ்கார் விருது கூட இணையாகுமா என்பது ஐயப்பாடே. சங்கீதம், மேல்தட்டு மக்களுக்கும், சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டுமே என அனைவரும் நினைத்திருந்த மாத்திரத்தில், கடைக்கோடி தமிழனுக்கும் சங்கீதத்தை அவனுக்கும் புரிகிற மாதிரி எடுத்து சென்று சேர்த்த பெருமை ராஜாவுக்கு மட்டுமே உண்டு.  சிந்து பைரவி படத்தில் வரும் 'பாடறியேன் படிப்பறியேன்' என்ற பாடல் அவரை பற்றி பாடுவதை போலவே இருக்கும். 'தலைக்கனம் எனக்கு இல்ல' என்ற வரியை தவிர. இளையராஜாவுக்கு தலைக்கனம் என பலர் கூறக் கேட்டிருக்கிறேன், கலைஞர்களுக்கு தலைக்கனமும் தங்களுக்கு ஒரு கவசமாக கையாள்வதை சொல்வார்கள். வைரமுத்து கூட, பாரதியின் வாழ்க்கை பற்றி தான் எழுதிய 'கவிராஜன் கதை' என்ற கவிதை தொகுப்பின் முன்னுரையில், தான் அந்த தொகுப்பை எழுதியதால் பாரதிக்கும் பெருமை தானே என்று படித்தபின் வைரமுத்துவை எனக்கு சில காலம் பிடிக்காமல் போயிற்று. 

பிறிதொரு நாள் யோசனை செய்தபோது, பாரதியே அப்படிப்பட்ட செருக்குடையவன் தானே என நினைத்து அந்த கோவத்தை கைவிட்டு வைரமுத்துவை ரசிக்க ஆரம்பித்தேன்.

சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு , உன்னை நெனச்சேன் பாடு படிச்சேன் படத்தில் வரும் 'என்னை தொட்டு ' என்ற பாடலை கேட்ட பொது ஒரு கணம் அந்த பாட்டின் இசையிலும் மேன்மையிலும் பாடல்களின் குரல்களிலும் மயங்கி ஏன் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரலில் 'ஆ ஆ ஆ ' என ஆரம்பிக்கும் ஆலாபனையில் ஆரம்பிக்கும் பாடல், தாளத்தின் சந்தத்துடன் ' என்னை தொட்டு அள்ளிகொண்ட மன்னன் பெரும் என்னடி'  என உருக்கி உள் நுழைகிறது. இந்தபாடல் என்ன ராகம், என்ன தாளம் என்ற சங்கீத இலக்கணம் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் கண்களை மூடிக் கொண்டால், நம் மனக்கண்ணுள் விரியும், பச்சை பசும் புல் வெளிகளும், நீரோடைகளும், பறக்கும் பறவைகளும்,  அங்கும் இங்கும் ஓடியபடி பாடும் குண்டு பெண் மோனிஷாவும் கண்ணுக்கு தெரிகிறார்கள்.

ஓடிகொண்டே தனது காதலனைப் பற்றி பாடிகொண்டே துள்ளி ஓடும் மொநிஷாவின் வெட்கம் கலந்த முகம், ஸ்வர்ணலதாவின் குரலுக்கு பொருந்தி அழகு சேர்க்கிறது. பாடலின் இரண்டாவது பல்லவியில், மோகனமாய் பாடியபடி தனது ரொமாண்டிக் சிரிப்புடன் கலந்து கொள்கிறார் SPB. அவருக்கே உரிய காதலும் காந்தமும் கலந்த குரலில், 'உன்னை தொட்டு' என அவர் பாடும்போது அவர் குரலுமே சேர்ந்தே நடிக்கிறது. கார்த்திக் அவருடைய குரலுக்கு, துள்ளல் நடிப்புடன் பொருந்தி அமைய ஒரு சுகமான பாடலில் லயிக்கிறது மனம்.

தெம்மாங்கு மேட்டில் அமைந்த இந்தப் பாடலில், ராஜாவின் மற்ற பாடல்களைப் போலவே, வயலினும், புல்லாங்குழலும், தபலாவும் மட்டும் முக்கிய அங்கம் வகிக்கிறது. அவ்வப்போது கேட்கும் கித்தாரின் இசையும் மந்திரம்  செய்கிறது. பாடல் முழுவதும் தாளத்தில் எந்த மாற்றமும் இன்றி ஒரே சீராய் பயணிக்கிறது, பாடலின் கடைசி வரை.

எனினும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம், நான் மதுரை கருமாத்தூரில் கல்லூரியில் படித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் படித்த கல்லூரியை சுற்றி பச்ச பசும் வயல்களும் நீரோடைகளும் ஏரிகளும் இருக்க, சந்தியா காலங்களில்  எங்கிருந்தோ வானொலியில் இருந்த கசியும் இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்த்துக் கொள்ளும்.

இந்தப் பாடலைப் பாடிய ஸ்வர்ணலதா புற்று நோயில் இறந்து போனதும், நடிகை மோனிஷா விபத்தில் இறந்து போனதும், நினைவில் வந்து நெஞ்சம் கனக்கிறது. படத்தில் நடித்த கார்த்திக் தமிழில் மிகச்சிறந்த நடிகர்ளில் ஒருவர் என்பது எனது கருத்து, நாளடைவில், போதையிலும், அரசியலிலும் இறங்கி முங்கி தனது எதிர்காலத்தை தானே அழித்துக் கொண்டார்.இளையராஜாவும் இப்போது இசை அமைப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ள, SPB
கூட இப்போது பாடல்கள் பாடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டதாக அறிகிறேன். இருந்தாலும், இந்தப் பாடல் என்றென்றும் என் மனதிலும், என் காதுகளிலும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும் என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

அந்தப் பாடல்...
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...