Wednesday, February 29, 2012

திரைப்படம்: காதலில் சொதப்புவது எப்படி?ஒரு காதலிக்கும் கல்லூரி ஜோடி, காதலித்து கல்யாணத்துக்கு காத்திருக்கும் கல்லூரி முடித்த ஜோடி, காதலித்து மனம் முடித்து விவாகரத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு மூத்த ஜோடி, இவர்களின் காதலில் எழும் சொதப்பல்களும் அதற்கான தீர்வுகளும் என படம் முழுவதும் புன்னகையுடன் பயணிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி மோகன்.

யு ட்யூபில்  நாலு லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ்கள் அடித்து பெரும் வரவேற்பு பெற்ற  'காதலில் சொதப்புவது எப்படி' என்ற இவரது குறும்படத்தையே, சிறிது நீட்டி இவரது இன்னொரு குறும்படமான 'மிட்டாய் வீடு' படத்தில் இருந்து சில காட்சிகளை கலக்கி, ஒரு பீல் குட் படத்தை படைத்திருக்கிறார்.

பெரிதாக கதை என்று ஒன்றும் இல்லாமல், சம்பவங்களை தொகுத்தே, 'பொண்ணுக இப்படி இருப்பாங்க' , 'பசங்க இப்படி இருப்பாங்க' என்று கத்தி இன்றி காதலை அறுவை சிகிச்சை செய்த இவரது புதுமையான திரைக்கதை யுக்தி தான் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கினை ஆற்றி உள்ளது.

கல்லூரியில் படிக்கும் காதலர்களாக சித்தார்த், அமலா பால். ஒவ்வொரு முறையும் அமலா விடம் பல்ப் வாங்கி, சொதப்பி, வருந்தி, கெஞ்சி, கூத்தாடி, 'காதல் ஏங்க இவ்ளோ கஷ்டமா இருக்கு' என புலம்பி டிபிகல் லவ்வர் பாயாக பின்னி எடுத்திருக்கிறார் சித்தார்த்.

கேர்ள் நெக்ஸ்ட் டோர் லுக் உடன் அமலா பால். 'மைனா' படத்திற்கு பிறகு, இந்த படத்தில் சிம்பிளாக வரும் அமலா பால் கொவப்படுவதிலும், ஈகோ காட்டுவதுமாக நன்றாக நடித்துள்ளார். மணம் முடித்த பின் விவாகரத்துக்காக காத்திருக்கும் அமலா பாலின் பெற்றோராக பழைய சுரேஷும் சுரேகாவும். பழைய காதலை பறை சாற்றுவது போல சுரேஷ் காதல் கடிதம் எழுதி மகளையே தன மனைவிக்கு தூது போக சொல்லுவதும் என அவர்கள் இருவரின் யதார்த்த நடிப்பும் அற்புதம்.சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அவர்கள் இருவரும் பட்டாசு கிளப்புகிறார்கள்.

நீரவ் ஷாவின் ரொமாண்டிக் ஒளிப்பதிவும் தமனின் பின்னணி இசையும் படத்தை உயரத்தில் நிறுத்துகிறது. பாடல்களில் 'பார்வதி' மட்டும் மனதில் நிற்கிறது.

'இந்த பொண்ணுக இருக்காங்களே!' என காமெராவை பார்த்து சித்தார்த் பேசி கொண்டிருப்பது ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், போக போக படத்தை ஒரு டாகுமெண்டரி லெவலில் கொண்டு பொய் விடுகிறது. தவிர நண்பர்களின் பாண்டி செரி பயணம் படத்தை நகர்த்தி செல்ல மட்டுமே உதவி இருக்கிறது.

படத்துக்கு பெரிய பலம், திரைக்கதையும் சிரிக்க வைக்கும் வசனங்களும் தான்.

கல்லூரியை சுற்றியே கதை நடந்தாலும்,  பேராசிரியர்களை கோமாளிகள் போல சித்தரிக்கும் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல்.

காதல் என்றாலே, உருக்கும் வசனங்கள், டூயட் பாடல்கள், காதலுக்கு எதிர்ப்பு, அரிவாள், கொலை சோகமான முடிவு என்ற இலக்கணங்களை எல்லாம் உடைத்து ஜாலியான படத்தை கொடுத்திருகிறார் பாலாஜி மோகன்.

குடும்பத்துடன் காணக்கூடிய ஒரு ஜாலி படம்.

காதலில் சொதப்புவது எப்படி?- ஜாலியான சொதப்பல்.

Thursday, February 23, 2012

திரைப்படம்: ப்ரணயம் (மலையாளம்) - எல்லைகள் தொலைத்த காதல்..


நான் ஆராதிக்கும் இந்திய திரைப்பட இயக்குனர்களில் மலையாள இயக்குனர் ப்ளேசிக்கு தனி இடம் உண்டு. அவரது இயக்கத்தில் வெளி வந்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து புல்லரித்து போனவன் என்ற முறையில் சமீபத்தில் வந்த பரணயம் என்ற மலையாள படத்தை கண்ட என்னை இம்முறையும் என்னை அவர் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு திரைப்படத்திலும் அழுத்தமாக தனது முத்திரையை பதித்து பார்வையாளனது சிந்தனையில் தனது திரைப்படத்தின் ஓட்டம், குறைந்தது ஒரு மூன்று நாளாக தங்கிவிடும்படி செய்துவிடுவார்.

அவரது திரைப்படங்களான 'காழ்ச்சா','தன்மாத்ரா','பலுங்கு','ப்ரம்மரம்' என ஒவ்வொன்றும் வேறு வேறு கதைகளை வேறு வேறு களத்தில் சொல்லின. இது வரை காதலின் பக்கம் செல்லாமல் இருந்த ப்ளேசி 'ப்ரணயம்' மூலம் யாரும் இதுவரை தொட்டுவிடாத காதலை சொல்லுகிறார்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மருமகள் மற்றும் பேத்தியுடன் வசிக்கிறார் பணி ஓய்வு பெற்ற அச்சுத மேனன். அவரது மகன் சுரேஷ், ஷார்ஜாவில் வேலை செய்து பணம் அனுப்பி வருகிறான்.அவ்வப்போது கேரளா வந்தும் செல்கிறான். ஒரு நாள் தனது அடுக்கு மாடி குடி இருப்பில் லிப்டில் இறங்கும் அச்சுத மேனன், கிரேசி என்ற அந்த வயதான பெண்ணை பார்த்ததும், உதடுகள் துடிக்க கண்கள் பட படக்க நெஞ்சை பிடித்து கொண்டு லிப்டிலேயே மயங்கி விழுந்து விட, கிரேசி அவரை தனது மடியில் கிடத்தியபடி, 'அச்சு அச்சு' என கதறியபடி உதவிக்கு அழைக்கிறாள்.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் அவரது பெயர் வயது எல்லாவற்றையும் தானே சொல்ல, அச்சுத மேனோனின் குடும்பத்துக்கு சந்தேகம் வலுக்க, தான் அச்சுத மேனனின் முன்னாள் மனைவி என்றும் தாங்கள் சுரேஷ் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டதாகவும் கூறுகிறாள். அதன் பின்னர் அவள் ஒரு தத்துவ பேராசிரியரான மாதியூசை மணந்து அவளுக்கு ஒரு பெண் பிறக்க, மணமாகி குழந்தையுடன் அந்த குடியிருப்பில் வசிக்கும் அவளது பெண் வீட்டுக்கு தான் புதிதாக குடி வந்திருக்கிறார்கள் கிரேசும் மாத்யூசும்.

மாத்யூஸ்  பராலிடிக் அட்டாக் வந்து செயல்படாத கால்களும் ஒரு கையும் உடையவன். அவனை குளிக்கவைப்பது முதல் அவனுக்கு எல்லாம் செய்வது கிரேஸ் தான்.  கிரேஸின்  பழங்கதை முழுக்க அறிந்த மாத்யூஸ் அவளை புரிந்து கொண்ட கணவனாக அவளுக்கு ஆறுதலாக இருக்கிறான். உடல் நலமடைந்து அச்சுத மேனன் வீடு திரும்ப, அச்சுத மேனன், கிரேஸ் மற்றும் மாத்யூசுக்கு இடையே ஒரு கள்ளமில்லாத நட்பு வளையம் உருவாக, ஒருவர் பால் ஒருவர் அன்பாக ஊர்வலம் வர, இவர்களது உறவை காமத்துடன் தொடர்பு படுத்தி கொச்சை படுத்துகிறது இவர்களது வாரிசுகள்.

கொஞ்சம் கொஞ்சமாக கிரேஸ் மற்றும் அச்சுத மேனன் எதற்கு விவாகரத்து செய்தார்கள், மாத்யூஸ் கிரேசை எப்படி மணக்க நேர்ந்தது என ஒவ்வொரு முடிச்சாக அவிழ,  இவர்களின் மூவரின் நட்பும் விரிவடைய, தங்களது வாரிசுகளுக்கு தெரியாமல் ஒரு சாலைப் பயணம் கிளம்புகிறார்கள் மூவரும்.
அதை தொடர்ந்து வருகிறது கனக்க வைக்கும் கிளைமாக்ஸ். 

அச்சுத மேனனாக இந்தி நடிகர் அனுபெம் கெர், கிரேசாக ஜெயப்ரதா. அனுபம் கெர் பின்னணி குரல் உறுத்துகிறது. மற்றபடி இயல்பான நடிப்பு. ஜெயப்ரதா, படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை அழுதபடியே வருகிறார். மோகன் லால், சக்கர நாற்காலியில் இருந்த படி, போலியோ அட்டாக் ஆன ஒரு நோயாளியின் உடல்மொழியையும், திணறிய படி பேசும் வாய் மொழியும் என நடிப்பில் கொடி நாட்டுகிறார். இவருக்கும் ஜெயப்ரதாவுக்கும் இருக்கும் அந்த கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்னியோன்யம் பார்ப்பவர்களை பொறாமைப் பட வைக்கும்.

சதீஷ் குருப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் மின்னுகின்றன. எம் ஜி ஜெயச்சந்திரனின் இசை அருமை.  விஜய் யேசுதாஸ் மற்றும் ஸ்ரேயா கோஷாலின் குரலில்  அந்த மழைப்பாடலான 'மழைத்துளி பளுங்குகள்' கண்ணுக்கும் காதுக்கும் குளுமை, இனிமை. ஒரு வித ரெட்ரோ உணர்வுடன் எண்பதுகளுக்கே நம்மை கூட்டி செல்கிறது.
படத்தில் சில குறைகளும் உண்டு. சில செண்டிமெண்ட் காட்சிகள் அதிகபடியாக உள்ளது. அந்த மூவர் செல்லும் சாலை பயணத்தில் வரும் அந்த கிளப் பாடல் காட்சி, படத்துடன் ஒட்டாமல் உறுத்துகிறது.

ப்ளேசி என்னும் சிறந்த கதை சொல்லியின் இயக்கத்துக்காக கண்டிப்பாக இப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.

ப்ரணயம் - அனுபவம்.

Sunday, February 12, 2012

காதல் என்பது...!காதல் என்பது...

ஒரு

ஐஸ் கிரீமுக்கு

இரண்டு ஸ்பூன்கள்

கேட்பது.


 காதல் என்பது...

மதிய வெய்யிலில்,

மெரீனா மத்தியில்,

குடைக்குள் மறைந்து

மறந்து கிடப்பது...காதல் என்பது...

காதலியிடம்,

காதலனை,

பல பொய்கள்

சொல்ல வைப்பது.காதல் என்பது..

காதலனிடம்,

காதலியை,

பல உண்மைகளை,

மறைக்க வைப்பது,காதல் என்பது...

கை நகம்

கடிக்க வைத்து

நட்சத்திரங்களையும்

வெண்ணிலவையும்

ரசிக்க வைப்பது.காதல் என்பது...

கண்ணாடி முன் நின்று

காலங்களை

தொலைப்பது.காதல் என்பது...

வராத

கவிதையை,

வரவைத்து

எழுதுவதுகாதல் என்பது...

பிரிவெனும் துயரத்தில்,

துளிர்க்கும்
 
கண்ணீர் துளியின்  

முற்றுப்புள்ளியில்

முடிந்து போவது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...