Friday, May 14, 2010

வலி!

உறைந்து போன விழிகளும்,
ஒடுக்கப்பட்ட  மொழிகளும்,
உடைந்து போன கனவுகளும்,
நடுக்கமுள்ள நனவுகளும்,

தொலைந்து போன உறவுகளும்,
தவிக்கப் பற்றும் இரவுகளும்,
உலர்ந்து போன ரத்தமும்,
தெளிந்து போகா பித்தமும்,

காற்றில் நாறும் தசைகளும்,
பழுதுபட்ட விசைகளும்,
மறைந்து போன மனிதமும்,
மாற்றி எழுதிய  கணிதமும்,

தமிழும் எம்மை கைவிட..
உமிழும் நீராய் நாம் உளோம்.
அமிலமான வாழ்கையே..
அடுத்த அடுத்த வேளையே..

இருந்தும் ஒளியை நோக்கிய
பயணம் முடியவில்லையே..
விடியல் காணும் நாள் நினைத்து..
வலி மரத்து போனதே..!

--ஈழப் படுகொலைகளின் நினைவாக...
--

Thursday, May 13, 2010

ஷான் பென்னும் ஒரு டிப்தீரிய சிறுவனும்...!



ஒரு நடிகன் என்பவன் யார்?
நமக்கு தெரிந்த வரையில், நடிகன் என்பவன் ஒவ்வொரு படத்திற்கும் கோடிகளில் சம்பாதிப்பவன். படத்தில் தோன்றி ஆங்காங்கே பன்ச் டைலாக் சொல்லி கைதட்டலும் விசிலும் வாங்குபவன்,  அவன் பட வெளியீடு அன்று அவனது கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்து  ரசிகர்கள் கொண்டாடும் வேளையில் உள்ளுக்குள் மகிழ்ந்து வெளியே 'அப்படி எல்லாம் செய்ய கூடாது' என்று சொல்பவன். தனது பிறந்த நாளன்று ஒரு இருபது பேருக்கு தையல் மெசினையும், இருபது இலவச கல்யாணங்களையும் நடத்தி வைத்து தனது சமூக ஆர்வத்தை உலகுக்கு பத்திரிகைகளில் போட்டோ அனுப்பி அறிமுகப்படுத்துபவன். சில படங்களில்தலைகாட்டியதும்  தளபதி, தல, நாயகன், ஸ்டார் என்ற பட்டத்தை போட்டுக் கொள்பவன். இதுவெல்லாம் செய்தால் போதும், அடுத்த முதல்வர் தானே எனக் கனவு காண்பவன்...

நமது நடிகர்களுக்கெல்லாம்  மேலே மில்லியன் கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் ஹாலிவூட் நடிகர்கள். அவர்கள் பட்டங்கள் போட்டுக் கொள்வது இல்லை. எல்லா படங்களிலும் பன்ச் டயலாகுகள் இல்லை. அவர்களை ஒரு சக மனிதனாக மட்டுமே கருதுகிறார்கள் அவர்களது ரசிகர்கள்.(ஆட்டோக்ராபோடு நின்று விடுகிறது இவர்களின் ரசிகர்களின் அன்பு).  சில நடிகர்களிடம், நடிப்பதும் தாண்டிய ஒரு மனித நேயத்தை காண முடிகிறது. ஹைதியில் நில நடுக்கத்தில் அந்த நாடே உடைந்து வீழ்ந்த பொது, தனது விமானம் முழுவதும் மருந்துகளை வாங்கி போட்டு தானே விமானத்தை ஒட்டி ஹைதியில் தரை இறக்கினார் ஹாலிவுட் நடிகர் ஜான்  டிரவோல்டா.

டிரவோல்டா .. தனது விமானத்தில்...ஹைதிக்கு பறந்த பின்னர்...


அனைத்திற்கும் மேலாக, இருமுறை ஆஸ்கார் வென்ற கலைஞன் ஷான் பென், ஒரு அறகட்டளை ஆரம்பித்து அதன் மூலம் பல இயற்க்கை அழிவுகள் நிறைந்த இடங்களுக்கு சென்று உதவி வருகிறார். இப்போது அவர் ஹைதியில் செய்து கொண்டிருப்பது அவரது மனித நேயத்தை பறை சாற்றுகிறது. இரு முறை ஆஸ்கார் அவார்டுகளை வென்றும் மூன்று முறை ஆஸ்காருக்கு பரிந்துரையும்பெற்றிருக்கிறார்.

சமீபத்திய நிலநடுக்கத்தால் சல்லடையாக்கப்பட்ட ஹைதியில் இப்போது இந்த ஹாலிவுட் புயல் மையம் கொண்டுள்ளது. தானும், ஒரு பெண் தொழிலதிபரும் இணைந்து ஆரம்பித்த அறக்கட்டளை சார்பில் தற்போது ஹைதியில் தங்கி ஹைடி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும், அவர்களுக்கு கூடாரங்கள் அமைத்து தரவும் முனைந்துள்ளார். அவர் மாட மாளிகையில் அமர்ந்து கொண்டு சும்மா பம்மாத்து செய்துகொண்டிருக்கவில்லை. அவர் தற்போது ஹைதியின் தலை நகரமான போர்ட் ஒ பிரின்ஸ் இல் மக்களோடு மக்களாக ஒரு கூடாரத்தில் தனது அறக்கட்டளை சார்பில் வந்துள்ள தன்னார்வ தொண்டர்கள் மத்தியில் தங்கிஉள்ளார்.

                                                ஷான், தனது கூடாரத்தின் முன்...

ஒரு பதினைந்து வயது சிறுவனுக்கு டிப்தீரியா என்ற கொள்ளை நோய் தக்க பட்டது அறிந்ததும் அவனுக்கு மருந்து வாங்க தான் பதினோரு மணி நேரம் அலைந்ததாக வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். டிப்தீரியா ஒரு தோற்று நோய் என்றும் அது வெகு விரைவில் மற்ற குழந்தைகளையும் வயோதிகர்களையும் தாக்க கூடும் என்பதால் அதனை முளையிலேயே களையவே அவர் அவ்வளவு மெனக்கெட வேண்டி இருந்தது. டிப்தீரியா சுகாதாரமற்ற சூழலும் சரியான உணவும் இல்லையென்றாலும் மக்களை தாக்க கூடும். அது வெகு விரைவில் மற்றவர்களுக்கு பரவி உயிர்பலிகள் அதிகம் ஏற்ப்பட வாய்ப்புண்டு என்பதால் அமெரிக்க ராணுவம், ரெட் கிராஸ் எவரிடமும் அந்த மருந்து இல்லாமல் பின்னர் உலக சுகாதார மையத்தை அழைத்து மருந்தை வரவழைத்து அவனை காப்பாற்றியுள்ளார் ஷான்.

டிப்தீரியா ஒரு தோற்று நோய் என்பதால் மற்றவர்களுக்கும் பரவி விடும் என்பதால், எந்த மருத்துவமனையும் முதலில் ஓரியல் என்ற அந்த சிறுவனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. ஷான், தானே கையோடு எல்லா மருத்துவ மனைகளிலும் ஏறி இறங்கி வாதாடி, பின்னர் பொது மருத்துவமனையில் சேர்த்து அவனுக்கு மருந்து வாங்கி அளித்துள்ளார்.

ஐம்பதாயிரம் மக்களை தன கட்டுப்பாட்டில் வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.  அவர் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகராக இருந்தும், மில்லியன் கணக்கில் பணம் இருந்தும், அவரை ஹைதியில் யாருக்கும் தெரியவில்லை.அவரி பற்றி கேட்டால்,   'அவர் ஒரு நல்ல மனிதர்' என்று மட்டும் சொல்கிறார்கள்.
சிலருக்கு மட்டும் அவர் பாடகி மடோன்னாவின் முன்னாள் கணவர் என்ற மட்டும் தெரிந்திருக்கிறது.

ஒரு அமெரிக்கனான அவருக்கு ஹைடி மக்கள் மேல் அக்கறை என்ன? அவர் தனது அறக்கட்ளை மூலம், கத்ரீனாவில் சீரழிந்து போன நியூ ஓர்லீன்ஸ் நகரத்திற்கும் சென்று மக்களளுக்கு உதவியுள்ளார்.அவரது சேவைகளை பற்றி யாராவது பாராட்டி பேசினால், ' நான் போடுவது ஒரு பாண்டேஜ் மட்டும் தான். ஆறாத காயங்கள் பல உள்ளன. இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியது நிறைய இருக்கிறது' என்று சொல்கிறார். மற்றும் அவருக்கு பத்திரிக்கையாளர்களையும் தன்னை படம் பிடிக்கும்பப்பராசிகளையும்  பிடிப்பதில்லை.

நமது தமிழகத்தில் சுனாமி பேரலையில் மக்கள்,தம்  வீடு உடமைகள் உறவுகள், உயிர்கள் யாவும் இழந்து நிற்கும்போது, மும்பையில் இருந்து விவேக் ஓபராய் தான் வரவேண்டி இருந்தது. நமது தலைகளும்  தளபதிகளும், நாயகன்களும் ஸ்டார்களும் எதிர்கால முதலமைச்சர் நாற்காலி கனவில் இருந்திருப்பார்கள் போலும்.

ஷான் பென்னின் நேர்முக ஒளி சுட்டி.


Saturday, May 8, 2010

மதர்!

வணக்கம்.
இது எனது நூறாவது பதிவு. நான் பதிவு எழுத ஆரம்பித்து ஒண்ணரை ஆண்டுகளில் நான் சம்பாதித்தது இருபத்தைந்து பாலோயர்களையும் இருபதாயிரத்தை நெருங்கும் ஹிட்ஸ் களையும். என்னை வாசித்த, வாசித்து கொண்டிருக்கிற, வாசிக்க போகும் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் ஒரு சிறந்த பதிவர் என்றோ சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன் என்றோ மார் தட்டி கொள்ள வில்லை. அதற்க்கு எனக்கு தகுதியும் கிடையாது என்றும் எனக்கு தெரியும். எனினும்  சிறுகுழந்தை ஒரு பலப்பத்தில் 'அ' 'ஆ' என எழுதி பழகுதல் போல என பதிவு பயணம் இப்போது துவங்கியுள்ளது என்றே கருதுகிறேன். தோள் கொடுக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும், குறிப்பாக எனது எழுத்தை நம்பி என்னை தொடரும் அந்த இருபத்தைந்து பேர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் ஒரு வாரமாக பதிவு இடாத காரணம், அன்னையை பற்றி அன்னையர் தினம் அன்று எழுத வேண்டும் என்ற உந்துதலே. தற்செயலாக இது எனது நூறாவது பதிவாகவும் அமைந்து விட்டதால், இந்தப் பதிவை, அன்னைக்கும் உலகெங்கும் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் காணிக்கைஆக்குகிறேன்.




அன்னை என்றாலே என் நினைவுக்கு வருவது அன்னை தெரேசா தான். ஒரு துறவி எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவர்.
 காரணம் அவர் இறந்த பொது அவருக்கென சொத்து எதுவும் இல்லை.
 அவரது சொத்து எல்லாம் தெருவில் கிடக்கும் ஆதரவற்றோரும் அநாதைகளும் தான்.
ஆகஸ்ட் 26 1910இல் அல்பானியா நாட்டின் குக்கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் கடைசி மகளாக பிறந்தவர் அக்னேஸ். தனது பதின்ம வயதுகளிலேயே ஒரு கத்தோலிக்க துறவியாக, பிறருக்கு சேவை செய்யும் செயல் வீரராக ஆக வேண்டும் என முடிவு செய்தவர், தனது பதினெட்டாவது வயதில் லோரெட்டோ என்ற சபையில் தன்னை ஒரு கன்னிகாஸ்த்ரியாக இணைத்து கொண்டார்.

அவரது சபையின் கிளை இந்தியாவில் இருக்க அவர் டார்ஜீலிங் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் கன்னிகாஸ்த்ரியாக பட்டம் பெற்றதும் இந்தியாவில் தான். அவரை சபை ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்ய பணித்தது. கல்கத்தாவின் வறுமையும், தெருவோரத்தில் கிடக்கும் குஷ்டரோகிகளும், முடவர்களும், கை விடப்பட்டவர்களும் அவர்களின் கஷடங்களும் அவரை வாட்ட, அவர்களுக்காக தனது சபையை துறந்து மிஷனரீஸ் ஆப சாரிடீஸ் என்ற சபையை ஆரம்பித்தார். அநாதை குழந்தைகள், தெருவில் கிடந்த தொழு நோயாளிகளை அழைத்து வந்து அவர்களை சுத்தப்படுத்தி, உணவளித்து, அவர்களுக்கும் ஒரு உலகத்தை தனது பதிமூன்று பேரால் ஆரம்பிக்கப்பட்ட சபையின் மூலம் காண செய்தார்.
அவரது சேவைக்கு கோடி கொடியாக பணம் கொட்டவில்லை. அவருக்காக அவர் மாளிகை எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை. அவரிடம் பணமும் கிடையாது. பிச்சை எடுத்தார். கல்கத்தாவின் தெருக்கள் முழுக்க அவரது பாதம் பட்டிருக்கிறது. தெரு தெருவாக பிச்சை எடுத்தார்.

ஒருமுறை ஒரு கடை காரனிடம் 'எனது குழந்தைகளுக்கு ஏதாவது தாருங்கள்' என கை ஏந்தியபோது, அவன் எரிச்சலில் அவரது இடது கையில் காரி துப்பி விட்டான். சிறிதும் சஞ்சலப்படாத அன்னை,'இது நீங்கள் எனக்கு கொடுத்த பரிசு, இந்த மறு கையில் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்' என சொல்ல, தன தவறுணர்ந்த அந்த கடை முதலாளி, அவருக்கு அன்று முதல் தீவிர கொடையாளியாக மாறினான்.

இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட அந்த சேவை நிலையம் இன்று உலகெங்கும் தனது கிளைகளை பரப்பி, கைவிடப்பட்ட மக்களுக்கு, ஒரு அன்னையாக சேவை புரிந்து வருகிறது.

மதர், நாட்டின் சிறந்த முதல்வர்களுள் ஒருவராக மதிக்கப்படும் வங்காள முன்னாள் முதல்வர் ஜ்யோதி பாசுவுக்கு சிறந்த நட்பாக இருந்தார். மதரின் இல்லம், வங்காள அரசாங்கம் மூலம் அவர் வழங்கியது தான்.

உலகின் உயரிய விருதான நோபெல் பரிசு முதல் அவர் வாங்காத விருதில்லை. 'வாழும் புனிதர்கள்' என டைம்ஸ் இதழ் இவரின் அட்டைப்படத்துடன் செய்தி வெளி இட்டது.


செப்டம்பர் 5 1997 மதர் மறைந்த அதே சமயத்தில் இளவரசி டயானாவும் மறைந்ததால், டயானாவின் உலகளாவிய அழகும் புகழும் அவளுடைய செய்தியே பிரதானமாக போனது. உலகத்தை, அழகு வென்றது.


மதரின் சேவை பற்றியும் குறை சொன்னவர்கள், சொல்பவர்கள் இன்றும் உண்டு. அவர் ஒரு மதத்தின் பெயரால் இதை செய்து மதம் மாற்ற முயல்கிறார் என்று. சாகும் தருவாயில், அன்னையின் அரவணைப்பில் இருந்த ஒரு குஷ்ட நோயாளி பின்வருமாறு கூறுகிறான்.

 'ஒரு பிச்சைக் காரனாக வாழ்ந்தேன். அன்னையின் கருணையால், ஒரு தேவதையை போல சாகிறேன்'

இந்த மகிழ்ச்சியை எந்த மதத்தினரும் அளிக்கலாம். ஒவ்வொரு மதத்தினரும் இப்படி சேவை நிறுவனங்கள் துவங்கி கைவிடப்பட்டோருக்கு சேவை செய்ய துவங்கினால், நாட்டில் எவருமே கைவிடப்பட்டவர்களாகவும்,அநாதைகளாகவும் இருக்கமாட்டார்கள்.

நாம் ஒவ்வொருவருமே, பிறக்கும்போது கைவிடப்பட்ட குழந்தைகள் தான். நம்மை தமது அரவணைப்பில் வைத்து பாதுகாப்பது நமது தாய் தான்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...