Sunday, February 12, 2012

காதல் என்பது...!



காதல் என்பது...

ஒரு

ஐஸ் கிரீமுக்கு

இரண்டு ஸ்பூன்கள்

கேட்பது.


 காதல் என்பது...

மதிய வெய்யிலில்,

மெரீனா மத்தியில்,

குடைக்குள் மறைந்து

மறந்து கிடப்பது...



காதல் என்பது...

காதலியிடம்,

காதலனை,

பல பொய்கள்

சொல்ல வைப்பது.



காதல் என்பது..

காதலனிடம்,

காதலியை,

பல உண்மைகளை,

மறைக்க வைப்பது,



காதல் என்பது...

கை நகம்

கடிக்க வைத்து

நட்சத்திரங்களையும்

வெண்ணிலவையும்

ரசிக்க வைப்பது.



காதல் என்பது...

கண்ணாடி முன் நின்று

காலங்களை

தொலைப்பது.



காதல் என்பது...

வராத

கவிதையை,

வரவைத்து

எழுதுவது



காதல் என்பது...

பிரிவெனும் துயரத்தில்,

துளிர்க்கும்
 
கண்ணீர் துளியின்  

முற்றுப்புள்ளியில்

முடிந்து போவது.

Thursday, January 12, 2012

கிளைமாக்ஸ் கதைகள் 7: முடிவல்ல ஆரம்பம்...!




அந்த ஆஸ்பத்ரியின் வராண்டாவில் நகம் கடித்தபடி காத்திருந்தேன்.

டாக்டர் கூறிய அனைத்து டெஸ்டுகளும் முடிந்து விட்டன. ஒன்றா இரண்டா... ஐந்து டெஸ்டுகள்.

அந்த ரிசல்டுகள் அனைத்தும் இப்போது டாக்டரின் கைவசம்.

டாக்டர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் 'ஆம் அந்த வியாதி இருக்கிறது' என்று சொல்லிவிட்டால் என் கதி என்ன?

நான் ஒரு ஐ டி கம்பனியில் கை நிறைய சம்பளம் வாங்கும் சங்கர். ஒரு ஹான்க் மோட்டார் பைக், வார இறுதி கிளப்களில் பார்ட்டி, வாரம் ஒரு முறை மிலிடரி ஓட்டலில் சிக்கன் பிரியாணி,மாதம் ஒருமுறை நண்பர்களுடன் சுற்றுலா, பண்டிகை காலங்களில் பெற்றோருக்கு பணமும் உடுப்புகளும், தங்கைக்கு மறக்காமல் ஒரு தங்க கம்மலும் வாங்கி சொந்த ஊர் சென்று திரும்புதல், இரண்டு காதல் தோல்விகள் என சராசரி, சென்னை ஐ டி இளைஞனின் பிரச்சனை இல்லாத வாழ்கை.

ஒரு வருடத்துக்கு முன்பு தான் 'இந்தப் பிரச்சனை' ஆரம்பித்தது.'இதுவாக' இருக்குமோ என ஒவ்வொரு நாளும் நான் பயந்து பயந்து இறந்துக் கொண்டிருந்தேன்.

மருத்துவர்களிடம் செல்வதற்கும் பயம். ஏடாகூடமாக ஏதாவது சொல்லி தொலைத்து விட்டால், நான் வாழும் நாட்கள் எல்லாம் நரகமாகிவிடுமே!

இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல எனது பிரச்னை பூதாகாரமாகிக் கொண்டே செல்வதை நான் புரிந்து கொண்டேன்.

இனிமேல் காலம் தாழ்த்துவதால், சிக்கல் மேலும் பெரிதாக இருக்குமோ என்று தான் இந்த டாக்டரை பார்க்க வந்தேன்.

டாக்டர் ரங்கபாஷ்யம், 'இது போன்ற வியாதிக்கு கை தேர்ந்தவர்' என்றெல்லாம் டெஸ்டிங் டீமில் வேலை பார்க்கும் முத்து சொல்லி தான் இவரை பார்க்க வந்தேன். அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும். அன்பாக பேசியவர், சில பரிசோதனைகள் செய்தபின் தான் தான் எந்த முடிவுக்கும் வர முடியும் என சொல்லிவிட்டார்.

ரங்கா பாஷ்யத்தின் மேல் பாரத்தை போட்டு விட்டு ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அனைத்து பரிசோதனைகளுக்கும் என்னை உட்படுத்திக் கொண்டேன்.

இதோ இன்னும் சிறிது நேரத்தில் ரங்கா பாஷ்யம் என்னை உள்ளே அழைக்கப் போகிறார். 'உங்களுக்கு ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகிவிடும்' என்று சொல்ல போகிறார் என்று காத்திருக்கிறேன்.

'மிஸ்டர் சங்கர்...' என்று அழைத்த அந்த நர்ஸ் மிக அழகாக ஒரு வெள்ளை தேவதையை போல இருந்தாள். ஆனால் அவளை ரசித்துக் கொண்டிருக்க இப்போது சமயமும் இல்லை, எண்ணமும் இல்லை, மிகுந்த பதை பதைப்புடன் உள்ளே நுழைந்தேன்.

ரங்கபாஷ்யத்தின் முகம் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் இறுகி இருந்தது.

'உட்காருங்க சங்கர். எப்படி இருக்கீங்க? வேலை எல்லாம் எப்படி போகுது?'

'டாக்டர் சஸ்பென்ஸ் தாங்கல. சொல்லுங்க டாக்டர் ரிசல்ட் வந்துருச்சா? '

' ஆமா சங்கர். நீங்க கொஞ்சம் உங்க மனசை திடப் படுத்திக்கணும்'

'டாக்டர்ர்ர்ரர்ர்ர்ர் ....!'

'எஸ் சங்கர். உங்களுக்கும் 'அது இருக்கு' '.

'ஒ மை காட். இன்னும் எவ்ளோ நாள் இருக்கு டாக்டர்?'

'இன்னும் ஒரு ஆறு மாசம். அவ்ளோதான்'

'ஐயோ டாக்டர், எனக்கு பொண்ணு எல்லாம் பாத்ருக்காங்க டாக்டர் இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம்'

' ஐ ஆம் சாரி சங்கர். கொஞ்சம் தள்ளி போட வேணா முயற்சி பண்ணி பாக்கலாம்'

துவண்டு சரிந்த என்னை தேற்றினார் ரங்கா பாஷ்யம்.


'இப்போ அதுனால என்ன மிஸ்டர் சங்கர். இப்போ என்னை பாருங்க எனக்கும் தான் இருக்கு. என்ன பண்றது, நமக்கு வந்துட்டா அதோட வாழ பழகிக்கணும். தலை முடி உதிர்றது இப்போ எல்லாம் சாதாரணம். உங்களுக்கு ஆறு மாசத்துல முழுக்க உதிர்ந்துட்டா, ஒரு விக் வாங்கி மாட்டிக்கொங்களேன்.'

தனது வழுக்கை மண்டையை தடவியபடி முடிவில்லாதபடி பேசி கொண்டே சென்ற ரங்கா பாஷ்யத்தை பார்த்தபடி, இது தான் ஆரம்பம் என நினைத்துக் கொண்டேன்.


(குறிப்பு: நந்தினி ரெட்டி இயக்கிய ஆளா மொதலாயிந்தி என்ற தெலுகு திரைப்படத்தின் ஒரு காட்சியை தழுவியது இந்த கதை.)

Wednesday, January 4, 2012

உலக சினிமா: The boy in the striped pajamas



யூதர்களை கொன்று குவித்த ஜெர்மானியர்களைப் பற்றிய திரைப்படங்கள் எவ்வளவோ வந்து விட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சோக கதைகளை கூறின. இரு சிறுவர்களின் நட்பின் பின்னணியில் எனக்கு தெரிந்து யூத கொடுமைகளை சொல்லியபடம் தி பாய் வித் ஸ்ட்ரைப்ட் பஜாமாஸ் என்கிற இந்தப் படமே. கொடுமைகளை அப்பட்டமான காட்சிகளால் காட்டி நம்மை நெளிய வைக்க விடாமல் நம்மை அந்த கொடுமைகளை உணர செய்ததன் மூலம் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.

ப்ருனோ என்கிற அந்த எட்டு வயது சிறுவனுக்கு போரைப் பற்றியோ யூதர்களைப் பற்றியோ எதுவும் தேரியாது.

அவனது வயதுக்குரிய நண்பர்களோடு விளையாடி, பள்ளி சென்று காலம் கழித்து வரும் அவன் தனது தந்தைக்கு பதவி உயர்வு கிடைத்து ஊர் மாறி செல்லும் செய்தி அறிந்து வருத்தம் அடைகிறான். அவனது நண்பர்களை பிரிந்து செல்ல நேரிடும் என்ற கவலை தான் அவனுக்கு. அவர்கள் இல்லமே விழா கோலம் பூண்டு அவன் தந்தையின் பதவி உயர்வை கொண்டாடிக் கொண்டிருக்கையில், ப்ருநோவின் அந்த குட்டி நீல கண்களில் சோகம் மட்டும் பளபளக்கிறது.

வந்து சேரும் புதிய இடமோ, ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருக்கிறது. தன்னுடன் விளையாட ஆள் கிடைக்காத ப்ருனோ, தனது பெட்ரூம் சன்னல் வழியாக தொலைவில் வேலி போட்ட ஒரு இடத்தை காண்கிறான். அது என்ன என விசாரிக்கையில், அது ஒரு தோட்டம் என்றும் அங்கு ஆட்கள் வேலை செய்கிறார்கள் என்றும் தெரிகிறது. அவனுக்கு அங்கு விளையாட சிறுவர்கள் கிடைப்பார்கள் என உணர்கிறான். யாரும் அறியாத வண்ணம், அந்த தோட்டம் நோக்கி பயணப்படுகிறான். அங்கு வேலிக்குள்  யூதர்கள் கோடு போட்ட பைஜாமா உடையில் உயிர்வாழ்வதை காண்பவன், வேலி ஓரத்தில் மறைவில், தனது வயதை ஒத்த ஒரு சிறுவன் தலை குனிந்து அமர்ந்திருப்பதை காண்கிறான். அவனுடன் பேச்சு கொடுக்கும் ப்ருனோ, அந்த சிறுவனின் பெயர் ஷ்மூல் என்றும், அவனுக்கும் வயது தன்னை போல எட்டு என்றும் அறிகிறான்.


ஒவ்வொரு நாளும் ஷ்மூலுக்கு உண்ண தின்பண்டங்கள் கொண்டு வருகிறான். வெளிகளுக்கு பின்னால் ஷ்மூலும், வேலிகளின் வெளியே ப்ருனோ அமர்ந்திருக்க இருவரும் தினமும் பேசி களித்து விளையாடி, அவர்களின் நட்பு இறுகுகிறது. ஒருமுறை ப்ருநோவின் வீட்டில் கண்ணாடிகளை பாத்திரங்களை துடைப்பதற்கு அழைத்து வரப்படுகிற ஷ்மூலுக்கு தின்பண்டம் தின்னக் கொடுக்க, அதனை கண்டு விட்ட ஒரு ஜெர்மானியன் அவனை பிடித்து விட, ஷ்மூல், அந்த தின்பண்டத்தை தான் திருடவில்லை என்றும் தனது நண்பன் ப்ருனோ கொடுத்தது என்றும் சொல்ல, ப்ருனோ அவனால் மிரட்டப்பட, பயத்தில் ப்ருநோவோ, ஷ்மூல் யார் என்றே தெரியாது என்று சொல்லிவிட, ஷ்மூலுக்கு அவனால் தண்டனை கிடைக்கிறது.

தனது செயலால் மிகுந்த வருத்தமும் வேதனையும் குற்ற உணர்வும் அடைகிறான் ப்ருனோ. பின்னர் அவன் ஷ்மூலை தேடி செல்ல, அவனை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு பிறகு மீண்டும் ஷ்மூலை அவன் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்.அதற்க்கு பிராயச்சித்தமாக, காணமல் போன ஷ்மூலின் தந்தையை கண்டுபிடிக்க தான் உதவுவதாகக் கூறுகிறான். 
ஒரு மழைநாளில், அந்த கோடு போட்ட பைஜாமா சீருடையில் ஷ்மூல் வேலியின் உள்ளே காத்திருக்க, ஒரு கழி கொண்டு வேலியின் வெளியில் இருந்து வேலிக்கடியில் குழி தோண்டி, வெளிக்குள் சென்று, ஷ்மூலின் சீருடை அணிந்து கொண்டு ஷ்மூலின் தந்தையை கண்டுபிடிக்க புறப்படுகிறார்கள் நண்பர்கள் இருவரும். அடுத்து வருவது பதை பதிக்கும் கிளைமாக்ஸ்.

பிரபல எழுத்தாளரான ஜான் பாயனின் (John Boyne) நாவலான தி பாய் வித் ஸ்ட்ரைப்ட பஜாமஸ் என்ற நாவலே அதே பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. ப்ருனோ என்ற அந்த சிறுவனின் பார்வையில் இந்த ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதர்களின் மேல் பாய்ச்சப்படும் வன்முறை, கத்தி இன்றி ரத்தம் இன்றி, மேலும் காட்சிகளால் வலிமையாகக் காட்டபடுகிறது. சிறுவர்களைப் பற்றிய படம் என்பதால், அவர்களும் காணும் வகையில், எந்த வித சித்ரவதைகளும் படத்தில் காட்டாமல், மனதை கனக்க செய்ததில் இயக்குனர் மார்க் ஹெர்மனின்  (Mark Herman) சாமர்த்தியம் பளிச்சிடுகிறது.


படத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடியது, விறுவிறுப்பாக அமைக்கப் பட்டிருக்கும் திரைக்கதை. குறி ஈடுகளால் பல காட்சிகளை புரியவைக்கும் வித்தை, புகைபோக்கியில் வெளிப்படும் புகையில் இருந்து அளவுக்கு அதிகமாக நாற்றம் வருவது குறித்து, வரும் வசனங்கள், (உள்ளே யூதர்களை வைத்து எரித்துக் கொண்டிருக்க,) 'நமக்கு தேவை இல்லாதவற்றை, நாம் எரிக்கிறோம்' என சொல்லும்போது, கொடூர காட்சிகள் எதுவும் இல்லாமல், அந்த ஒரு வசனமே, முதுகு தண்டை சில்லிட வைக்கிறது. தனது கணவன், ஒரு கொடுங்கோலன் என்று தெரிந்த பிறகு, ப்ருநோவின் தாய் தவிக்கும் தவிப்பு, தான் ஒரு ஜெர்மாநியனாக இருந்தபோதிலும், அந்த தவிப்பில் அவளது தாய்மை வெளிப்படுகிறது.  

படத்தின் உயிர்நாடியே ப்ருநோவாக நடித்திருக்கும் ஆசா பட்டர்ப்ளை என்ற சிறுவனின் நடிப்பு தான். அந்த குட்டி நீல கண்களில் அவன் காட்டுகிற, ஏக்கம், சோகம், குற்ற உணர்வு, மகிழ்ச்சி, என சாட் சட்டென மாறுகிற பாவனைகள் அற்புதம். ப்ருநோவின் தாயாக வரும் விரா பெர்மிகா, தன கணவனிடம் மாட்டிக்கொண்டு யூதர்களுக்காக தாய்மை உணர்வுடன் பரிந்து பேசும் நடிப்பு அருமை.

பல விருதுகளை வென்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை, கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்.

The boy in the striped pajamas - 'Oh Boy' 



Tuesday, December 6, 2011

முற்றுப் பெறாதக் கவிதை!

முற்றுப் பெறாதக் கவிதை!



 
தாள்கள் கிழிபட்ட

ஒரு சமூக நாவலின்,

முற்றுபெறாத அத்தியாயமாய்,

வந்தவன் எல்லாம்,

தன் கை மறந்து,

தங்கையை கேட்க...

மணந்து போன தங்கையை

வாழ்த்த தான் முடிந்தது.


ஆடைகளும்,

அணிகளும்,

அலங்கரிக்க மறுக்கும் உடலுடன்,

ஒரு

அகோரியின் மன நிலையில்,

நிலைத்து நின்றன

வளைகள் பூட்டிய விழிகள்.

 
வெள்ளியின் விலை ஏற்றமோ

என்னவோ..

அவள் சிரசு மயிரில்

ஏறி விட்டன

சில வெள்ளிக் கம்பிகள்..


இரவின்

தனிமையில்,

தவிப்பில்,

குளித்த நீர்த்துளி..

தொட்டு சென்றன..

அவளது

தொடக்கூடாத இடங்களை...


தனிமை தவத்தை

கலைக்க வருமோ..?!

தவிப்பின் தாகம்

தீர்க்க வருமோ..?!

தொலைந்து போனவனின்..

துவண்ட கைகள்..?


அணைப்பும் வேண்டாம்...

அரவணைப்பும் வேண்டாம்..

இறுகப் பற்ற

ஒரு கரம் போதும்..

இன்னமும்

முற்று பெறாத

இக்கவிதையை படிக்க...

எங்கே இருக்கிறாய்..

என் ராஜகுமாரா...?

Saturday, November 5, 2011

என்னைத் தொட்டு...ராஜாவின் ராஜாங்கம்.



காலங்கள் உருண்டோடினாலும், சில விடயங்கள் நம்மை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவை நாம் கேட்கும் இசை. சில பெரியவர்கள், 'என்ன இருந்தாலும் அந்த காலம் போல பாடல்கள் இந்த காலத்தில் வருமா' என அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம், இவர்கள் ஏன் பழையதையே போட்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள், புதியதை வரவேற்கத் தயங்குகிறார்கள் என எண்ணத் தோன்றும். ஆனால் இப்போது நம்மையும் சில பாடல்கள் நம்மை பின் தொடர்ந்து ஒரு நாஸ்டால்ஜியா உணர்வை கொடுப்பதை இந்தப் பாடலை கேட்கும்போது உணரத் துவங்கினேன். 

யார் என்ன  விமர்சனங்களை வைத்தாலும், ராஜா ராஜாதான். அவர் செய்த சாதனைகளை வேறு எவரும், ஏன் ஒரு ஆஸ்கார் விருது கூட இணையாகுமா என்பது ஐயப்பாடே. சங்கீதம், மேல்தட்டு மக்களுக்கும், சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டுமே என அனைவரும் நினைத்திருந்த மாத்திரத்தில், கடைக்கோடி தமிழனுக்கும் சங்கீதத்தை அவனுக்கும் புரிகிற மாதிரி எடுத்து சென்று சேர்த்த பெருமை ராஜாவுக்கு மட்டுமே உண்டு.  சிந்து பைரவி படத்தில் வரும் 'பாடறியேன் படிப்பறியேன்' என்ற பாடல் அவரை பற்றி பாடுவதை போலவே இருக்கும். 'தலைக்கனம் எனக்கு இல்ல' என்ற வரியை தவிர. இளையராஜாவுக்கு தலைக்கனம் என பலர் கூறக் கேட்டிருக்கிறேன், கலைஞர்களுக்கு தலைக்கனமும் தங்களுக்கு ஒரு கவசமாக கையாள்வதை சொல்வார்கள். வைரமுத்து கூட, பாரதியின் வாழ்க்கை பற்றி தான் எழுதிய 'கவிராஜன் கதை' என்ற கவிதை தொகுப்பின் முன்னுரையில், தான் அந்த தொகுப்பை எழுதியதால் பாரதிக்கும் பெருமை தானே என்று படித்தபின் வைரமுத்துவை எனக்கு சில காலம் பிடிக்காமல் போயிற்று. 

பிறிதொரு நாள் யோசனை செய்தபோது, பாரதியே அப்படிப்பட்ட செருக்குடையவன் தானே என நினைத்து அந்த கோவத்தை கைவிட்டு வைரமுத்துவை ரசிக்க ஆரம்பித்தேன்.

சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு , உன்னை நெனச்சேன் பாடு படிச்சேன் படத்தில் வரும் 'என்னை தொட்டு ' என்ற பாடலை கேட்ட பொது ஒரு கணம் அந்த பாட்டின் இசையிலும் மேன்மையிலும் பாடல்களின் குரல்களிலும் மயங்கி ஏன் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரலில் 'ஆ ஆ ஆ ' என ஆரம்பிக்கும் ஆலாபனையில் ஆரம்பிக்கும் பாடல், தாளத்தின் சந்தத்துடன் ' என்னை தொட்டு அள்ளிகொண்ட மன்னன் பெரும் என்னடி'  என உருக்கி உள் நுழைகிறது. இந்தபாடல் என்ன ராகம், என்ன தாளம் என்ற சங்கீத இலக்கணம் எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் கண்களை மூடிக் கொண்டால், நம் மனக்கண்ணுள் விரியும், பச்சை பசும் புல் வெளிகளும், நீரோடைகளும், பறக்கும் பறவைகளும்,  அங்கும் இங்கும் ஓடியபடி பாடும் குண்டு பெண் மோனிஷாவும் கண்ணுக்கு தெரிகிறார்கள்.

ஓடிகொண்டே தனது காதலனைப் பற்றி பாடிகொண்டே துள்ளி ஓடும் மொநிஷாவின் வெட்கம் கலந்த முகம், ஸ்வர்ணலதாவின் குரலுக்கு பொருந்தி அழகு சேர்க்கிறது. பாடலின் இரண்டாவது பல்லவியில், மோகனமாய் பாடியபடி தனது ரொமாண்டிக் சிரிப்புடன் கலந்து கொள்கிறார் SPB. அவருக்கே உரிய காதலும் காந்தமும் கலந்த குரலில், 'உன்னை தொட்டு' என அவர் பாடும்போது அவர் குரலுமே சேர்ந்தே நடிக்கிறது. கார்த்திக் அவருடைய குரலுக்கு, துள்ளல் நடிப்புடன் பொருந்தி அமைய ஒரு சுகமான பாடலில் லயிக்கிறது மனம்.

தெம்மாங்கு மேட்டில் அமைந்த இந்தப் பாடலில், ராஜாவின் மற்ற பாடல்களைப் போலவே, வயலினும், புல்லாங்குழலும், தபலாவும் மட்டும் முக்கிய அங்கம் வகிக்கிறது. அவ்வப்போது கேட்கும் கித்தாரின் இசையும் மந்திரம்  செய்கிறது. பாடல் முழுவதும் தாளத்தில் எந்த மாற்றமும் இன்றி ஒரே சீராய் பயணிக்கிறது, பாடலின் கடைசி வரை.

எனினும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம், நான் மதுரை கருமாத்தூரில் கல்லூரியில் படித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. நான் படித்த கல்லூரியை சுற்றி பச்ச பசும் வயல்களும் நீரோடைகளும் ஏரிகளும் இருக்க, சந்தியா காலங்களில்  எங்கிருந்தோ வானொலியில் இருந்த கசியும் இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்த்துக் கொள்ளும்.

இந்தப் பாடலைப் பாடிய ஸ்வர்ணலதா புற்று நோயில் இறந்து போனதும், நடிகை மோனிஷா விபத்தில் இறந்து போனதும், நினைவில் வந்து நெஞ்சம் கனக்கிறது. படத்தில் நடித்த கார்த்திக் தமிழில் மிகச்சிறந்த நடிகர்ளில் ஒருவர் என்பது எனது கருத்து, நாளடைவில், போதையிலும், அரசியலிலும் இறங்கி முங்கி தனது எதிர்காலத்தை தானே அழித்துக் கொண்டார்.இளையராஜாவும் இப்போது இசை அமைப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ள, SPB
கூட இப்போது பாடல்கள் பாடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டதாக அறிகிறேன். இருந்தாலும், இந்தப் பாடல் என்றென்றும் என் மனதிலும், என் காதுகளிலும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும் என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

அந்தப் பாடல்...




Monday, October 31, 2011

கோப்பை!




எதற்க்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்...?
உன் தோல்விகளில்...
நான் பங்கேற்றுக் கொள்ளவா?
என் தோள்களில்...
உன் சுமைகளை இறக்கிக் கொள்ளலாம்.
உனக்காக...
என்னால் கோப்பையில் இறங்க முடியாது.

எதற்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்..?
உன் வெற்றிகளை
நான் கொண்டாடுவதற்கா...?
என் தோள்களில் உன்னை சுமந்து
ஊர்வலம் வருவேன்.
உனக்காக
என்னால் கோப்பையை எந்த முடியாது.


எதற்காக
என்னிடம் கோப்பையை நீட்டுகிறாய்...?
நமது நட்பை
டையாளப் படுத்திக் கொள்ளவா?
நீ உடைந்து போகும் முன்பு
என்னை உடைத்து
உன்னை ஒட்டித் தருவேன்...
உனக்காக..
என்னால் கோப்பையை பிடிக்க முடியாது


உன் வெற்றிகளுக்கும்,
உன் தோல்விகளுக்கும்,
உன் கொண்டாட்டங்களுக்கும்...
கோப்பைகளை நிரப்பி நிரப்பி,
உன் நிகழ்கால
நிமிஷங்கள்  
தொலைத்து
உனக்கான ஆயத்தங்கள்
ஆறப்போடப் படுகின்றன...

ஏந்திக் கொள்கிறேன்..
என்
கோப்பையை நான்
நிரப்பிக்கொள்ளவும்,
எனக்கான கோப்பையை
நான் கை பிடிக்கவும்
எனக்கான சுதந்திரம்
உன் கோப்பை கொடுக்குமானால்...!

Saturday, October 29, 2011

உலக சினிமா: தி கிங்க்ஸ் ஸ்பீச்.




அரசியல்வாதிக்கும், அரசாள பிறந்தவர்க்கும், தனது வாயே மூலதனம். அதாவது, மக்களை மதிமயக்க வைக்கும் பேச்சாற்றல் தான் அவர்களது பலம். அதற்க்கு , அண்ணா, கருணாநிதி, மார்டின் லூதர் கிங் என பல உதாரணங்கள் சொல்லலாம். அரசாள பிறந்தவனுக்கு பேசும்போது நாக்கு பிறழ்ந்தால் அவன் என்னவெல்லாம் சங்கடங்கள் அனுபவிக்கக் கூடும் என்பதை அழகாக சொல்கிறது சென்ற வருட சிறந்த படம், சிறந்த நடிகர்,சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைக்கதை  என்கிற மிக முக்கியமான  ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற தி கிங்க்ஸ் ஸ்பீச் திரைப்படம்.


பெர்ட்டி என்கிற ஆல்பர்ட் என்கிற ஆறாம் ஜார்ஜ் மன்னர். உண்மை புகைப்படம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில், இங்கிலாந்தை ஆண்ட மன்னன்ஆறாம்  ஜார்ஜ் நோய் வாய் பட்டிருந்த காரணத்தால், தனது முதல் மகனான டேவிட் க்கு பட்டம் சூட்ட நினைக்கிறார். டேவிடோ ஒரு விவாகரத்தான ஒரு அமெரிக்க பெண்ணிடம் காதல் கொண்டு அவளை மணக்க இருப்பதாக கூறுகிறான். அந்த காலத்தில் பிரிட்டிஷ் மன்னன் தான் கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவனாகவும் அறியப்பட்டதால், ஒரு மன்னன் இவ்வாறு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மணப்பது அப்போதைய கத்தோலிக்க மத சட்ட திட்டங்களுக்கு எதிராக இருந்ததால், அவன் மன்னனாக ஆகும் தகுதி இழக்க, சட்டப்படி அவனது தம்பி பெர்ட்டி தான் அந்த பட்டத்துக்கு ஏற்றவன். 

படத்தின் துவக்கத்திலேயே தனது நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரை நிகழ்த்த பெர்ட்டி முயற்ச்சிக்க, தனது திக்கு வாய் பிரச்சனையால் அவனால் சரியாக உரை நிகழ்த்த முடியாமல் போக, அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை. மக்களுக்கோ, சரியாக பேசத்தேரியாதவன் தங்களின் தலைவனாக எப்படி இருக்க முடியும் என அவன் மேல் நம்பிக்கை இன்மை. ஏற்படுகிறது. அரசாங்க காரியங்களில் தன சகோதரனை விட சிறந்து விளங்கும் பெர்ட்டி, தனது வாய் பிரச்னையால் அவனால் ஒரு சிறந்த மன்னனாக வாய்ப்பை ஏற்று நாட்டை வழிநடத்த அவனுக்கு நம்பிக்கை வராமல் போகிறது. 
லயொநெல் லோக், தனது மனைவியுடன், உண்மை புகைப்படம்.

அவனது கவலையை உணர்ந்த அவனது மனைவி எலிசபெத், தனது கணவனின் இந்த திக்கு வாய் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறாள். அப்போது அவளுக்கு ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட மருத்துவனான லியோனல் லோக் என்பவனைப் பற்றி கேள்விப் பட்டு அவனிடம் தன கணவனை யாருக்கும் தெரியாது அழைத்து செல்கிறாள். லோக், பெர்ட்டியை ஒரு மன்னனாக கருதமுடியாது என்றும் தான் அவனை 'ஹிஸ் ஹைனெஸ்' என்று அழைக்காமல் பெர்ட்டி என்றே அழைக்க முடியுமானால் அவனுக்கு உதவுவதாகக் கூறுகிறான். அதவும் போக, அரசனை தேடி தான் வர முடியாது என்றும், தனது அலுவலகத்துக்கு அவன் வந்தால் மட்டுமே உதவ முடியும் என கறாராக கூறிவிட, எலிசபெத் பெர்ட்டியை எப்படியோ சமாதனப் படுத்தி அவனை அழைத்து வந்துவிடுகிறாள். 

அரச பரம்பரையை சார்ந்த தான் ஒரு சாதாரண மருத்துவனை தேடி செல்வதா என்ற இறுமாப்பும், தன்னை பெயர் சொல்லி ஒரு சாதாரணன் அழைப்பதா என்ற திமிரும் கோவமும் சேர்ந்து புறப்பட, லோக் இன் மீது ஒரு சினத்துடன் தான் அவனைத்தேடி வருகிறான் பெர்ட்டி. அவனது முதல் சந்திப்பில், லோக் ஒரு இசைத்தட்டை சுழல விட்டபடி, அவனை ஒரு செய்தி தாள் கொடுத்து படிக்க சொல்ல, அவன் பாதி படித்து முடித்ததும் 'இதற்க்கு மேல் என்னால் உனது ஆய்வுகளுக்கு உட்பட முடியாது' என கோவத்துடன் வெளியேறி விடுகிறான். அவன் படித்ததை பதிவு செய்த லோக் அந்த பதிவு செய்த ஒலித் தட்டையும் அவனிடம் கொடுத்து அனுப்புகிறான்.
                                            காலின் பிர்த் மற்றும் ஜெப்ரி ரஷ்

அந்த சமயத்ததில், ஜேர்மனி இன் ஹிட்லரின் அட்டூழியம் போருக்க இயலாது, அந்த நாட்டின் மீது படை எடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, பெர்ட்டி  தனது பொதுமக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டிய அவசியம் வருகிறது. அப்போது லோக் தான் பேசியதை பதிவு செய்த ஒலித்தட்டை கேட்கும்போது தான் திக்கு இல்லாமல் பேசியதை கேட்டதும் லோக் இன் மீது நம்பிக்கை வர, தனக்கு திக்கு வாய் இருப்பதை நீக்க லோக் இடம் தன்னை முழுவதுமாக ஒப்புவிக்கிறான் பெர்ட்டி.

அறிக்கைகளை ஏற்ற இறக்கத்துடன் படிக்க கொஞ்சம் கொஞ்சமாக படிக்க லோக் பெர்டிக்கு பயிற்சி தருகிறான். வார்த்தைகளின் இடையே விழும் இடைவெளிகளில் அவனுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை மனதுக்குள் சொல்லி நிரப்ப சொல்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் எப்படி தன்னை முழுதுமாக தயாரித்து அவன் பொதுமக்களுக்கான தனது வானொலி உரையை வெற்றிகரமாக முடித்தானா என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது திரைப்படம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் வாழ்ந்த ஆறாம் ஜார்ஜ் மன்னன் என்கிற பெர்ட்டியின் உண்மை கதை இது. இப்போது வாழ்ந்து வரும் இரண்டாம் எலிசபெத்தின் தந்தை தான் இந்த பெர்ட்டி 

படத்தில் பெர்ட்டி யாக நடித்திருக்கும் காலின் பிர்த்க்கும்(Colin Firth), டாக்டர் லோக் ஆகா நடித்திருக்கும் ஜெப்ப்ரி ரஷ் க்கும்(geoffrey rush) தான் நடிப்பில் போட்டி.

ஒரு அரச பரம்பரையின் வாரிசுக்கு உரிய கம்பீரத்தையும், தனக்கு திக்கும் வாய் பிரச்னையினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும், தனது மக்களின் மேல் இருக்கும் பிரியத்தையும், தனது மரியாதையை விட்டு கொடுக்க தயங்கும் தயக்கத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கும் காலின் பிர்தின் நடிப்பு ராஜ கம்பீரம். அதற்க்கு இணையான  மென்மையான நடிப்பு லோக் ஆக நடித்திருக்கும் ஜெப்ரி ரஷ். தனது சட்ட திட்டங்களுக்கு பெர்ட்டியை உடன்படுத்த அவர் கை யாளும் மென்மையான ஆனால் உறுதியான நிலைப்பாட்டை அலுவலக மேலாளர்கள் அனைவரும் கடைப் பிடித்தால் நிச்சயமாக அலுவலகங்களில் உற்பத்தி கூடும். மிகவும் நுணுக்கமான பாத்திரப்படைப்பான லோக் ஆக அற்புதமான அண்டர் ப்ளே நடிப்பில் மின்னுகிறாள் ஜெப்ரி ரஷ.

திக்கு வாயால் கஷ்டப்படும் ஒரு மன்னன் அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டு வருகிறான் என்ற நூலிழை போன்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு, அற்புதமான திரைக்கதை வடித்த டேவிட் செயட்லருக்கும் (David Sidler) ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கும் இயக்குனர் டாம் ஹூப்பருக்கும் ஒரு ராயல் சல்யுட்.
நம்மை கதை நடக்கும் ஆயிரத்து தொள்ளயிரத்து முப்பதுகளுக்கு அழைத்து சென்ற ஒளிப்பதிவாளர் டானி கோஹேன் மற்றும் இசை அமைப்பாளர் அலேசான்டரே டெஸ்பிளாட் ஆகியோரின் உழைப்பு படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது. 

தி கிங்க்ஸ் ஸ்பீச் - ராஜ கம்பீரம். 

Related Posts Plugin for WordPress, Blogger...