Friday, January 28, 2011

புகைப்பட கவிதை... மீனவ நண்பன்

(எனது முதல் பதிவு மீண்டும் மீள் பதிவாக...)
http://www.savetnfisherman.org/
அன்று...
சிதிலமான என்னை செப்பனிட
மனைவியின் தாலி தங்கத்தை விற்றாய்.

உன் வியர்வை துளிகளால்...
எனக்கு வர்ணம் பூசினாய்.

உன் சுவாசக் காற்றால்
என்னை சுத்தப்படுத்தினாய்

கிழிந்த புடவையுடன்...
மனைவி தைத்து தந்த வலையை
என் மேல் போர்த்தி அழகு பார்த்தாய்.

எனது ஓட்டைகளை அடைத்தாய்
குடிசை ஓட்டைகளில்
நனைந்தது உன் குடும்பம்.

நான் முன்னேறி செல்ல
துடுப்பு வழித்தாய்
கை வலித்தாய்
பொறுமை சகித்தாய்
வெய்யிலில் தகித்தாய்.

நீ பசித்திருக்க
என்னை மீன்களால் நிரப்பினாய்.

இன்று...
ஓலசத்தம்
உன் ஓலை குடிசையில்...

நான் கரை ஏறிவிட்டேன்.
நீ..?
இலங்கையிலா? இந்தியாவிலா?
சிதைக்கப்பட்டாயா சிறையிடப்பட்டாயா?

அலைகளின் ஓசையில்
அலறிகொண்டிருகிறது...
என் மௌனங்கள்..

- நிலா முகிலன்

-புகைப்படம் -நிர்மல்



Thursday, January 27, 2011

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் -8


ஜூரிச்  ரயில் நிலையம்.
சூரிக் ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கிய பொழுது இரவு பத்தரை மணி. அங்கிருந்து நாங்கள் பதிவு செய்திருந்த விடுதிக்கு செல்ல பத்தாம் நம்பர் டிராமை நாங்கள் பிடிக்க வேண்டும். பெட்டிகளை தூக்கி கொண்டு குழந்தையையும் ஸ்ட்ராலரில் தள்ளிக் கொண்டு அங்கு இருந்த இருவரிடம் எங்கு டிராமை பிடிக்க வேண்டும் என கேட்க அவர்களுக்கு ஆங்கிலம் தெரிய வில்லை. அவர் சுவிஸ் ஜெர்மன் பேசியது எங்களுக்கு புரியவில்லை. அப்போது எங்கிருந்தோ வந்த நமது இந்தியர் ஒருவர் வழிகாட்டி நாங்கள் செல்லும் இடத்துக்கு எங்கு இறங்க வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு வழி காட்டினார். அவர் சுவிஸ் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார் என அறிந்தோம் நன்றி சொல்லி விட்டு டிராமில் ஏறி அமர்ந்தோம்.

நம்ம ஊரு நாலு பல்லவன் பஸ்களை இணைத்தது போல இருந்தது டிராம். கார்களும் பஸ்களும் ஓடும் சாலையின் ஓரத்தில் டிராமுக்கு என்று தண்டவாளங்கள் இருந்தன. டிராமில் ஏறுவதற்கு முன்பே டிராம் நிறுத்தத்தில் தானியங்கி எந்திரத்தில் கடவு சீட்டு வாங்கி கொள்ள வேண்டும். எங்களுக்கு நான்கு நாள் பாஸ் இன்னும் முடியவில்லை என்பதால் நாங்கள் அதையே உபயோகப் படுத்திக் கொண்டோம். டிராமில் உள்ள ஒரு திரையில், அடுத்து வரும் ஐந்து நிறுத்தத்தின் பெயர்களையும் அந்த நிறுத்தத்துக்கு சென்று சேர இன்னும் எவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்றும் காண்பித்தது. அதன் மூலம் நமது நிறுத்தம் இன்னும் வர எவ்வளவு நேரமாகும் என நம்மால் கணக்கிட முடிந்தது. நமது நிறுத்தத்துக்கு வரும் முன்பே நாம் இறங்க தயாராகி கொள்ள அது இடமும் அளித்தது.

எங்கள் நிறுத்தமான 'யுனிவெர்சிட்டி இர்க்கேல்' வந்ததும் நாங்கள் இறங்கி கொண்டோம். நாங்கள் அடுத்த 7  நாட்களுக்கு அங்குள்ள அக்காடமியா ஸ்டுடியோ அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். விலை ஒரு நாளைக்கு நூறு சுவிஸ் பிராங்குகள்.அவர்கள் ஏற்கனவே ஒரு நான்கு இலக்க எண்ணை அந்த கட்டிடத்தின் நுழைவுக்கான கடவு சொல்லை எங்களுக்கு அளித்திருந்தனர்.கட்டிடத்தின் வாசலில் இருந்த எந்திரத்தில் நாங்கள் அந்த எண்ணை அமுக்கியதும், ஒரு சாவி கொத்து  வந்து விழுந்தது. அந்த சாவியால் கட்டிடத்தின் உள்ளே நுழைந்ததும் பல்வேறு அறைகள் இருந்தன. எங்கள் அறைக்கு தனியாக சாவி போட்டு திறந்தோம். பத்துக்கு பத்து என அறை இருவர் படுக்க கூடிய படுக்கை. குழந்தைக்கு தனியே ஒரு தொட்டில், இணைக்கப்பட்ட கழிவறை, ஒரு மாற திட்டில், சமையல் செய்ய இரு அடுப்புகள் கொண்ட ஹீட்டர். சமையல் செய்ய தேவையான கரண்டி, கத்தி, பாத்திரங்கள், சாப்பிட தட்டுகள் இருந்தன. உடுப்புகள் வைக்க ஒரு அலமாரி, ஒரு மேசை நாற்காலி, டி வீ  என ஒரு குறுகிய கால தங்குதளுக்கு தேவையான அனைத்தும் அங்கு இருந்தன. இருந்த அசதியில் அப்படியே படுக்கையில் படுத்து உறங்கிப் போனோம்.

மறுநாள் கண் விழித்த போது மணி பத்து உடனே எழுந்து பக்கத்தில் கடை ஏதும் இருக்கிறதா என பார்க்க நடந்து செல்ல அங்கிருந்து ஒரு ஐந்து நிமிட நடைக்கு பின்னர் 'கூப்' (coop) என்ற ஒரு கடையை கண்டு அங்கு குழந்தைக்கு வேண்டிய பால், அவசர சாப்பாட்டுக்கு பிரட் முட்டை, ஜாம், வெண்ணை,தயிர், தக்காளி வெங்காயம் எல்லாம் வங்கி வந்தேன். பின்னர் அவசர அவசரமாக பிரட் ஆம்லேட் உண்டு விட்டு, பத்தாம் நம்பர் டிராம் பிடித்து ஜூரிக் ரயில் நிலையம் சென்று இறங்கினோம்.

மிக ப்ரம்மாண்டதாகவும் மிகவும் பழமையானதாகவும் இருந்தது அந்த ரயில் நிலையம். அங்கிருந்து செயின்ட் மாரிட்ஸ் என்ற இடத்துக்கு ரயிலில் பயணம் செய்து அங்கே ஒரு பஸ் டூர் எடுத்து இத்தாலி உள்ளே சென்று வர திட்டம். எங்கள் அசதியில் நாங்கள் தாமதமாக எழுந்ததால், திட்டம் மாறியது. சுவிசின் மேற்கு முனையான ஜெனீவாவை கண்ட நாங்கள், அடுத்து கிழக்கில் உள்ள செயின்ட் காலனை பார்க்கலாம் என முடிவு செய்தோம். ( மேற்கிலிருந்து கிழக்கு முழுவதும் கவர் செய்துவிடவே இந்த ஏற்பாடு.) ஜூரிக்கிலிருந்து ஒரு மணி நேர தூரத்தில் இருக்கிறது செயின்ட் காலன்.
செயின்ட் காலன் ஆலயம் 
அயர்லாந்தை சார்ந்த காலஸ் என்பவர் ஒரு தியான மையத்தை இந்த இடத்தில் கி பி 613  இல் நிறுவியதால் அவரது நினைவாக இந்த இடம் செயின்ட் காலன் என அழைக்கப் பட்டு வருகிறது. நகரத்தின் மையத்தில் ஒரு மிக பிரம்மாண்டமான, பழமையான கத்தோலிக்க தேவ ஆலயம் இருக்கிறது. இந்த நகரமே, அந்த ஆலயத்தை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள்ளது.
        செயின்ட் காலன் ஆலயம் - உள்ளே 
இந்த ஆலயம் பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் பல போர்களில் சிதைக்கப்பட்டு மீண்டும் பதினேழாம் நூற்றாண்டில், மிகப் பிரபலமான கட்டிடக் கலை வல்லுனர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு மூன்று நூற்றாண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்தை ஒட்டி உள்ள நூலகத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து ஏறக்குறைய நூற்று ஆருபது ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அதில் இரண்டாயிரத்து ஐநூறு கை எழுத்து நூல்கள் ஆகும்.

ஆலயத்தினுள், பழங்கால வேலைப்பாடுகள் அற்புதமாக  தங்க மூலத்தில் இழைக்கப் பட்டிருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு. அங்குள்ள ஒவ்வொரு பொருளும் பழங்காலத்தை நினைவு படுத்துவதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள வானுயர அலமாரிகளை அண்ணாந்து நோக்கி கொண்டிருந்தேன். எனது மகனை அந்த அலமாரியின் அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அதனை வைத்து அந்த அலமாரிகள் எத்துனை உயரம் என அறிந்து கொள்வீர்கள்.
                                                                 அந்த அலமாரி..!
1983  முதல் இந்த ஆலயம், யுனெஸ்கோ வின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

நாங்கள் பின்னர் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து வருகையில் ஒரு புதுவித காட்சியை கண்டோம். ஒரு தெரு முழுக்க  கார்பெட்டை விரித்து வைத்திருந்தனர். மழை வந்தாலும் எதுவும் ஆகாது என எங்களுக்கு சொல்லப் பட்டது. அதனை ச்டாட்ட் லவுஞ் (Stadtlounge) என்கிறார்கள். நகரத்தின் மத்தியில் உள்ள லவுஞ் என்பது அதன் பொருளாம். அழகாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது.
                                                                   ச்டாட்ட் லவுஞ்
அதற்குள் மாலை ஆகி விட்டதால், மீண்டும் ரயில் பிடித்து கூட்டை வந்தடைந்தோம்.

மறுநாள் மலையில் வின்ச்சில் மவுண்ட் பிளாடஸ் செல்ல போகிறோம் என்ற எக்சைட்மேண்டில் பேசியபடியே அசதியில் உறங்கிப் போனோம்.

(தொடரும்)
--

Tuesday, January 25, 2011

ஆஸ்கார் பந்தயத்தில் மீண்டும் ஏ ஆர் ரகுமான்!

தமிழர்கள் தலை நிமிரும் காலம் மீண்டும். இசை மூலம் உலகத்தையே கட்டி ஆண்டு கொண்டிருக்கும் ஏ ஆர் மீண்டும் இந்த வருடம் 127  அவர்ஸ் என்ற டானி பாயிலின் ஆளிவூட் திரைப்படத்திற்க்காக சிறந்த திரை இசை மற்றும் படத்தின் 'இப் ஐ ரைஸ்' என்ற திரைப்பாடலுக்கும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
மலை ஏற்றத்தில் ஈடுபடும் ஒருவன் தனது கை ஒரு பொந்தினுள் மாட்டிக்கொள்ள அவனால் வெளியேற முடியவில்லை. வெளி உலகத்துக்கும் இதை பற்றி தெரிவித்து உதவி கோர முடியாத நிலை. தனது கையை அறுத்துக் கொண்டு கையை விடுவித்தால் ஒழிய அவனால் தப்பிக்க இயலாத நிலை. தன்னிடம் உள்ள மொண்ணைக் கத்தியை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக துடிக்க துடிக்க வெட்டிக் கொண்டு தப்பிப்பது தான் 127 hours படத்தின் கதை. இது ஒரு உண்மைக் கதை கூட. இப்படி ஒரு கதையை சுவாரஸ்யப் படுத்த ஒரு இசை அமைப்பாளரின் பங்கு மிக மிக முக்கியம். அப்படி ஒரு படத்துக்கு சிலிர்ப்பூட்டும் இசையை தந்து, வெற்றி பெற்றிருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

                                                                 ஆரோன் ரால்ச்டன்

உண்மை கதையின் கதாநாயகனான Aron ரல்ச்டன் படத்தின் இசையை கேட்டு ஸ்தம்பித்து ஏ ஆரை அழைத்து பாராட்டி கவுரவப் படுத்தி உள்ளார்.. அவர் தனது கைப் பட எழுதிய கடிதம் கீழே.

எனது கதைக்கு உங்கள் சிலிர்ப்பூட்டும் இசைக்கு நன்றி. உங்கள் இசையை நான் அன்று கான்யான் மலையில் மாட்டிக்  கொண்ட பொது கேட்டுக் கொண்டிருந்தால், நிச்சயமாக இன்னும் ஒரு 127  மணிகள் என்னால் வாழ்ந்திருக்க முடியும். என்பதே அந்தக் கடிதத்தில் கண்டுள்ளது. 

ஒன்று மிகவும் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், இருமுறை ஏ ஆர் ரகுமானின் ஆஸ்கார் பரிந்துரையும் டானி பாயில் என்ற ஒரு ஆங்கில இயக்குனரலேயே சாத்தியமாகி உள்ளது.  

ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் பந்தயத்தில் ஜெயித்தாலும் ஜெயிக்காவிட்டாலும்.. இந்த ஆஸ்கார் பரிந்துரையே தமிழர்களான நாம் அனைவருக்கும் பெருமை இல்லையா?

இந்த தற்பெருமை அற்ற கலைஞனை மீண்டும் ஆஸ்கார் பந்தயத்தில் ஓடி ஜெயிக்க நாம் வாழ்த்துவோம்.

127 hours  படத்தில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'if I raise'  பாடல் உங்களுக்காக...




Sunday, January 23, 2011

திரைப்படம்: ஆடுகளம்.



தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து அற்புதமான திரைப்படங்கள் வெளி வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. உலக சினிமாவை நோக்கிய பயணத்தை அடுத்த களத்துக்கு எடுத்து செல்லும் திரைப்படம் தற்போது வெளி வந்துள்ள வெற்றிமாறனின் ஆடுகளம். இந்தத் திரைப்படத்தை தனுஷின் திரைப்படம் என சொல்வதை விட, வெற்றிமாறனின் ஆடுகளம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். படத்தில் வணிகத் தன்மைகளின் ஆதிக்கங்களை குறைத்து, தமிழுக்கு புதிய களமான சேவல் சண்டையை மையப் படுத்தி, மனித மகிழ்வுகளையும் வக்கிரங்களையும் ஒன்று சேர பதிவு செய்து ஒரு நல்ல சினிமாவை படைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

சிலர் இதனை இஸ்பானியல்  சினிமாவான அமோறேஸ் பெர்ரோசின்  காபி என சொல்கின்றார்கள். அமோறேஸ் பெரோசின் கதை வடிவத்தை தான் மணிரத்னம் ஆயுத எழுத்து படத்தில் கையாண்டார். அமோறேஸ் பெரோஸில் வரும் மூன்று கிளை கதைகளில் ஒன்று நாய் சண்டையை பற்றியது, ஆடுகளம் சேவல் சண்டையை பற்றியது என்ற ஒரே ஒரு சிறிய ஒற்றுமை தவிர, இரண்டும் வேறு வேறு களங்கள், வேறு வேறு கதைகள். எனவே ஆடுகளம் என்ற ஒரு நல்ல முயற்சியை பிரதி என குறுக்கிட வேண்டாம்.

கதை?
மதுரையில் சேவல் சண்டைக்கு பெயர் போனவர் பேட்டைக்காரன். அவரை எதிர்த்து ஒவ்வொரு முறையும் மண்ணை கவ்வுகிறார், சேவல் சண்டைக்கு பெயர்போன குடும்பத்திலிருந்து வந்த காவல் அதிகாரியான இரத்தின சாமி. அது தனது கௌரவத்தை பாதித்தால், மீண்டும் ஒரு முறை பந்தயம் வைத்து பெட்டைகாரனை வெற்றிகொள்ள முடிவு செய்கிறார்.

பேட்டைகாரனிடம் வேலை செய்த தொரை, பார் வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்க, பேட்டைகாரனின் மற்றொரு சிஷ்யன், கருப்பு. ஒவ்வொரு முறை சேவல் தோற்றபோதும் அதனை அறுத்து போட சொல்வது பேட்டைகாரனின் வழக்கம். கருப்பு வளர்த்த ஒரு சேவலை அறுத்து போட சொல்ல, கருப்புக்கு மனம் கேட்காமல், அதனை எடுத்து சென்று தனது வீட்டினில் வளர்க்கிறான். அதற்க்கு, சேவல் சண்டைக்கு தேவையான பயிற்சியும் கொடுத்தபடி வருகிறான்.

சேவல் சண்டையில் ஈடுபடும்படி ரத்தினசாமி இன் சவாலை ஏற்று கொள்ளும் பேட்டைக்காரன், தோற்ப்பவன் மீசை மழித்து மொட்டை அடித்து சண்டையை விட்டே ஒதுங்கி விட வேண்டும் என்ற சவாலுடன் களத்தில் இறங்க சிலிர்ப்பூட்டும் சேவல் சண்டைகள் அந்த ஆடுகளத்தில் அரங்கேற, பேட்டைகாரனின் சேவல்கள், ரதினசாம்யின் தந்திரங்களுடன் களத்தில் இறக்கப்பட்ட சேவல்களை எதிர்கொள்ள திராணி இல்லாமல் சுணங்க, பேட்டைகாரனின் எதிர்ப்புக் கிடையே, தான் வளர்த்து வரும் சேவலை களம் இறக்கும் சேவல் வெற்றி வாகை சூட, இறுமாப்பில் பேட்டைகாரனுக்கு தனுஷின் மேல் பகையும் வஞ்சமும் வளர இடை வேளை. அதன் பின்னர் தான் உண்மையான ஆடுகளம்.

 கருப்பு வாக வாழ்ந்திருக்கும் தனுஷுக்கு இது ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். அசல் மதுரைக்காரனாக வாழ்ந்திருக்கிறார். அம்மாவை இழந்து அழுகை வராமல் அன்று இரவு அம்மாவை பற்றி தனது ஆங்கிலோ இந்தியன் காதலியான டாப்சீயிடம் புலம்பி கதறி உடைந்து போகுமிடத்தில் கலக்குகிறார். பேட்டைகாரனாக நடித்திருக்கும் ஈழத்துக் கவிஞயர் செயபாலன் ஒரு ரேவெலேஷன். அந்த பெரிய மீசைக்குள்ளிருந்து வரும் உறுமலும், குரோதம் கொண்ட பார்வையுமாக அற்புதமாக நடித்திருக்கும் அவருடன் சேர்ந்து , டப்பிங்கில் ராதாரவியின் குரல் மாடுலேஷங்களும் சேர்ந்து நடிக்கிறது.

தனது முதல் படமான பொல்லாதவனில் கவனத்தை ஈர்த்த வெற்றிமாறன், ஆடுகளத்துக்காக, சேவல் சண்டையின் அடிப்படையிலிருந்து அனைத்தையும் கற்று தேர்ந்து வெளிப்படுத்தியதில் அவரது கடின உழைப்பு தெரிகிறது. வித்தியாசமான களமும்,கதையும், விறுவிறு திரைக்கதையுமாக  நம்மை ஆரம்பம் முதலே கட்டிபோட்டு உட்கார வைத்து விடுகிறார்.

அந்த விறு விறு திரைக்கதைக்கு வேகமூட்டுகிறது சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து புறப்படும் வேல்ராஜின் ஒளிப்பதிவும், சிலிர்ப்பூட்டும் ஜி வியின்  பின்னணி இசையும். இவரது இசையின் 'யாத்தே யாத்தே' மற்றும் 'அய்யயோ நெஞ்சி அலையுதடி',  இரண்டும் தாளமிட வைக்கின்றன..

தனுஷ் தனது அந்த ஒல்லிப்பிச்சான் உடம்பை வைத்துக் கொண்டு அத்துணை பேரிடமும் மல்லுக்கு நின்று சண்டை இடுவது, மற்றும் கதைக்கு அழுத்தம் கூட்டாத டாப்சீயின் காதல் காட்சிகளும் படத்தின் சீரான திரைக்கதைக்கு உறுத்தலாக இருந்தாலும், ஆடுகளம், தமிழ் சினிமாவின் அற்புதமான படைப்புகளில் ஒன்று.

ஆடுகளம்...அதகளம்.
--

Friday, January 7, 2011

நகைச்சுவை குற்றங்கள்.

பல கொடூர, வன்மையான, பயங்கரமான குற்றங்கள் நிகழ்த்தும் குற்றவாளிகளின் மத்தியில், சிரிப்பு திருடன் சிங்காரவேலு போல சில குற்றவாளிகளும் இருக்கவே செய்கிறார்கள். பல நாளிதழ்களில், இணையதளங்களில் காணக் கிடைத்த உண்மை சம்பவங்களின் தொகுப்பு இது.

கோழி மிதித்து(சுட்டு)...
 
அமெரிக்காவின் மிளுவாக்கி நகரை சேர்ந்தவன் இருபத்தொரு வயது ரிக். ஹாலோவீன் நாள் என்பது, பிசாசுகளுக்காக ஒதுக்கப்பட்ட நாள். அன்றைய தினம் கடைக்கு சென்றிருந்த தன தாயை மிரட்ட திட்டம் போட்டு, கடையில் முகமூடி ஒன்றை வாங்கி வந்து, உடம்பு முழுக்க கருப்பு உடை அணிந்து,உள்ளிருந்து வேறொரு சாவியால் கதவை பூட்டி, தாயை பயமுறுத்த காத்திருந்தான்.  அவனது தாய் நான்சி தான் வைத்திருந்த சாவியால் வீட்டு கதவை திறந்து உள்ளே வந்து வாங்கிய பொருட்களை பரப்பி அடுக்கி வைக்கும் வரை காத்திருந்தவன் தடாரென தன அன்னை நான்ஸியின் முன் குதிக்க, அலறினாள் நான்சி. 'ஊட்டாண்ட இருக்கறது எல்லாம் சுருட்டிட்டு போக வந்துருக்கேன் ஒழுங்க எல்லாத்தையும் என்னாண்ட குடுத்துரு' என மிரட்ட, நான்சி, சட்டென கிட்செனின் ஒரு டிராவை திறந்து அங்கிருந்த .357 ரிவால்வரை எடுத்து ரிக்கை குறி பார்க்க, கல கலவென சிரித்த ரிக், ஆங்கிலத்தில் 'சுடு சுடு  பார்க்கலாம்' என கெக்கலிக்க, நான்சி குறிபார்த்து ரிவால்வரை இயக்க, குறி தவறாமல், ரிக்கின் குறியை பதம் பார்த்தது அந்த புல்லட். ' ஐயோ அம்மா' என (ஆங்கிலத்தில் தான்...) என கதறியபடி ரிக் விழ, உடனே நான்சி 911  எண்ணிற்கு போன் பண்ணி காவலரை அழைக்க, உடனே பறந்து வந்த அவர்கள், முகமூடியை கழட்டிய பின் தான் தனது மகனை சுட்டிருக்கிறோம் என புரிந்தது அந்த தாய்க்கு.

பின்னர் ஆபரேஷன் எல்லாம் செய்து ரிக் பிழைத்துவிட்டான். தாயை ஏமாற்றவே அப்படி செய்தேன் என ரிக்கும், தற்காப்புக்காகவே சுட்டேன் என நான்சியும்  கூற யாரும் கைது செய்யப்படவில்லை.

திருடனை போலீஸ் காப்பாற்றிய கதை.
 

அமெரிக்காவின் டெலவேர்  மாகணத்தில் நடைபெற்ற சம்பவம் இது. ஜான் பின்ச் என்ற 44 வயது நபர், ஆளில்லா பங்களாவில் கொள்ளையடிக்க ஒரு சன்னலை உடைத்து உள்ளே நுழைந்திருக்கிறான். அவன் ஏற்கனவே இதே போல உள்ளே நுழைந்து திருடியதால், வீட்டுக்காரன் உள்ளேயும் சாவி போட்டு திறந்தால் மட்டுமே வெளியே வர கூடிய பூட்டை போட்டுவிட்டான்.

வெளியே இருந்து சன்னலை உடைத்து உயரமான இடத்திலிருந்து உள்ளே குதித்த ஜான் வெளியேற முடியவில்லை. உள்ளே இருந்த குட்டி பாரில் வைக்கப்பட்டிருந்த ஜின் வோட்கா என எதையும் விட்டு வைக்காது குடித்திருக்கிறான். மூன்று நாட்கள் உள்ளே இருந்தவன், தட்டு முட்டு சாமான் எல்லாம் போட்டு மேலேறி ஜன்னலை பிடித்த நேரம், அவன் ஏறி நின்ற மேசை, ஸ்டூல் எல்லாம் உருண்டு விழுந்து ஓடியதால், சன்னலை பிடித்து தொங்கியபடி திருடனான அவனே, 911 அழைத்து போலிசை உதவிக்கு கூப்பிடவேண்டிய நிர்பந்தம். அவனை காப்பாற்றிய கையோடு அவனுக்கு விலங்கு போட்டு அழைத்து சென்றனர் போலீஸ் .
--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...