Thursday, January 27, 2011

பூலோக சுவர்க்கம் - சுவிஸ் பயணம் -8


ஜூரிச்  ரயில் நிலையம்.
சூரிக் ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கிய பொழுது இரவு பத்தரை மணி. அங்கிருந்து நாங்கள் பதிவு செய்திருந்த விடுதிக்கு செல்ல பத்தாம் நம்பர் டிராமை நாங்கள் பிடிக்க வேண்டும். பெட்டிகளை தூக்கி கொண்டு குழந்தையையும் ஸ்ட்ராலரில் தள்ளிக் கொண்டு அங்கு இருந்த இருவரிடம் எங்கு டிராமை பிடிக்க வேண்டும் என கேட்க அவர்களுக்கு ஆங்கிலம் தெரிய வில்லை. அவர் சுவிஸ் ஜெர்மன் பேசியது எங்களுக்கு புரியவில்லை. அப்போது எங்கிருந்தோ வந்த நமது இந்தியர் ஒருவர் வழிகாட்டி நாங்கள் செல்லும் இடத்துக்கு எங்கு இறங்க வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு வழி காட்டினார். அவர் சுவிஸ் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார் என அறிந்தோம் நன்றி சொல்லி விட்டு டிராமில் ஏறி அமர்ந்தோம்.

நம்ம ஊரு நாலு பல்லவன் பஸ்களை இணைத்தது போல இருந்தது டிராம். கார்களும் பஸ்களும் ஓடும் சாலையின் ஓரத்தில் டிராமுக்கு என்று தண்டவாளங்கள் இருந்தன. டிராமில் ஏறுவதற்கு முன்பே டிராம் நிறுத்தத்தில் தானியங்கி எந்திரத்தில் கடவு சீட்டு வாங்கி கொள்ள வேண்டும். எங்களுக்கு நான்கு நாள் பாஸ் இன்னும் முடியவில்லை என்பதால் நாங்கள் அதையே உபயோகப் படுத்திக் கொண்டோம். டிராமில் உள்ள ஒரு திரையில், அடுத்து வரும் ஐந்து நிறுத்தத்தின் பெயர்களையும் அந்த நிறுத்தத்துக்கு சென்று சேர இன்னும் எவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்றும் காண்பித்தது. அதன் மூலம் நமது நிறுத்தம் இன்னும் வர எவ்வளவு நேரமாகும் என நம்மால் கணக்கிட முடிந்தது. நமது நிறுத்தத்துக்கு வரும் முன்பே நாம் இறங்க தயாராகி கொள்ள அது இடமும் அளித்தது.

எங்கள் நிறுத்தமான 'யுனிவெர்சிட்டி இர்க்கேல்' வந்ததும் நாங்கள் இறங்கி கொண்டோம். நாங்கள் அடுத்த 7  நாட்களுக்கு அங்குள்ள அக்காடமியா ஸ்டுடியோ அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். விலை ஒரு நாளைக்கு நூறு சுவிஸ் பிராங்குகள்.அவர்கள் ஏற்கனவே ஒரு நான்கு இலக்க எண்ணை அந்த கட்டிடத்தின் நுழைவுக்கான கடவு சொல்லை எங்களுக்கு அளித்திருந்தனர்.கட்டிடத்தின் வாசலில் இருந்த எந்திரத்தில் நாங்கள் அந்த எண்ணை அமுக்கியதும், ஒரு சாவி கொத்து  வந்து விழுந்தது. அந்த சாவியால் கட்டிடத்தின் உள்ளே நுழைந்ததும் பல்வேறு அறைகள் இருந்தன. எங்கள் அறைக்கு தனியாக சாவி போட்டு திறந்தோம். பத்துக்கு பத்து என அறை இருவர் படுக்க கூடிய படுக்கை. குழந்தைக்கு தனியே ஒரு தொட்டில், இணைக்கப்பட்ட கழிவறை, ஒரு மாற திட்டில், சமையல் செய்ய இரு அடுப்புகள் கொண்ட ஹீட்டர். சமையல் செய்ய தேவையான கரண்டி, கத்தி, பாத்திரங்கள், சாப்பிட தட்டுகள் இருந்தன. உடுப்புகள் வைக்க ஒரு அலமாரி, ஒரு மேசை நாற்காலி, டி வீ  என ஒரு குறுகிய கால தங்குதளுக்கு தேவையான அனைத்தும் அங்கு இருந்தன. இருந்த அசதியில் அப்படியே படுக்கையில் படுத்து உறங்கிப் போனோம்.

மறுநாள் கண் விழித்த போது மணி பத்து உடனே எழுந்து பக்கத்தில் கடை ஏதும் இருக்கிறதா என பார்க்க நடந்து செல்ல அங்கிருந்து ஒரு ஐந்து நிமிட நடைக்கு பின்னர் 'கூப்' (coop) என்ற ஒரு கடையை கண்டு அங்கு குழந்தைக்கு வேண்டிய பால், அவசர சாப்பாட்டுக்கு பிரட் முட்டை, ஜாம், வெண்ணை,தயிர், தக்காளி வெங்காயம் எல்லாம் வங்கி வந்தேன். பின்னர் அவசர அவசரமாக பிரட் ஆம்லேட் உண்டு விட்டு, பத்தாம் நம்பர் டிராம் பிடித்து ஜூரிக் ரயில் நிலையம் சென்று இறங்கினோம்.

மிக ப்ரம்மாண்டதாகவும் மிகவும் பழமையானதாகவும் இருந்தது அந்த ரயில் நிலையம். அங்கிருந்து செயின்ட் மாரிட்ஸ் என்ற இடத்துக்கு ரயிலில் பயணம் செய்து அங்கே ஒரு பஸ் டூர் எடுத்து இத்தாலி உள்ளே சென்று வர திட்டம். எங்கள் அசதியில் நாங்கள் தாமதமாக எழுந்ததால், திட்டம் மாறியது. சுவிசின் மேற்கு முனையான ஜெனீவாவை கண்ட நாங்கள், அடுத்து கிழக்கில் உள்ள செயின்ட் காலனை பார்க்கலாம் என முடிவு செய்தோம். ( மேற்கிலிருந்து கிழக்கு முழுவதும் கவர் செய்துவிடவே இந்த ஏற்பாடு.) ஜூரிக்கிலிருந்து ஒரு மணி நேர தூரத்தில் இருக்கிறது செயின்ட் காலன்.
செயின்ட் காலன் ஆலயம் 
அயர்லாந்தை சார்ந்த காலஸ் என்பவர் ஒரு தியான மையத்தை இந்த இடத்தில் கி பி 613  இல் நிறுவியதால் அவரது நினைவாக இந்த இடம் செயின்ட் காலன் என அழைக்கப் பட்டு வருகிறது. நகரத்தின் மையத்தில் ஒரு மிக பிரம்மாண்டமான, பழமையான கத்தோலிக்க தேவ ஆலயம் இருக்கிறது. இந்த நகரமே, அந்த ஆலயத்தை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள்ளது.
        செயின்ட் காலன் ஆலயம் - உள்ளே 
இந்த ஆலயம் பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் பல போர்களில் சிதைக்கப்பட்டு மீண்டும் பதினேழாம் நூற்றாண்டில், மிகப் பிரபலமான கட்டிடக் கலை வல்லுனர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு மூன்று நூற்றாண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்தை ஒட்டி உள்ள நூலகத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து ஏறக்குறைய நூற்று ஆருபது ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அதில் இரண்டாயிரத்து ஐநூறு கை எழுத்து நூல்கள் ஆகும்.

ஆலயத்தினுள், பழங்கால வேலைப்பாடுகள் அற்புதமாக  தங்க மூலத்தில் இழைக்கப் பட்டிருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு. அங்குள்ள ஒவ்வொரு பொருளும் பழங்காலத்தை நினைவு படுத்துவதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள வானுயர அலமாரிகளை அண்ணாந்து நோக்கி கொண்டிருந்தேன். எனது மகனை அந்த அலமாரியின் அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அதனை வைத்து அந்த அலமாரிகள் எத்துனை உயரம் என அறிந்து கொள்வீர்கள்.
                                                                 அந்த அலமாரி..!
1983  முதல் இந்த ஆலயம், யுனெஸ்கோ வின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

நாங்கள் பின்னர் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து வருகையில் ஒரு புதுவித காட்சியை கண்டோம். ஒரு தெரு முழுக்க  கார்பெட்டை விரித்து வைத்திருந்தனர். மழை வந்தாலும் எதுவும் ஆகாது என எங்களுக்கு சொல்லப் பட்டது. அதனை ச்டாட்ட் லவுஞ் (Stadtlounge) என்கிறார்கள். நகரத்தின் மத்தியில் உள்ள லவுஞ் என்பது அதன் பொருளாம். அழகாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது.
                                                                   ச்டாட்ட் லவுஞ்
அதற்குள் மாலை ஆகி விட்டதால், மீண்டும் ரயில் பிடித்து கூட்டை வந்தடைந்தோம்.

மறுநாள் மலையில் வின்ச்சில் மவுண்ட் பிளாடஸ் செல்ல போகிறோம் என்ற எக்சைட்மேண்டில் பேசியபடியே அசதியில் உறங்கிப் போனோம்.

(தொடரும்)
--

7 comments:

sakthistudycentre-கருன் said...

Nice..

Chitra said...

Lovely photos and post.

வடுவூர் குமார் said...

போக வாய்ப்பு கிடைக்கனும். விவரங்கள் அருமை.

நிலா முகிலன் said...

நன்றி கருண்.

நிலா முகிலன் said...

நன்றி சித்ரா.

நிலா முகிலன் said...

வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் குமார்.

தமிழ் வசந்தன் said...

நிலா முகிலனின் பயணங்கள். . . இவ்வளவு ஈர்ப்போடு ஒரு வலைப்பூ இடுகை. எல்லை தாண்டாத இந்திய இளைஞனாய், மதிமயங்கினேன் ஸ்விஸ் இடுகைகளில். திரும்பத் திரும்ப அதற்குள்ளேயே உழன்றுகொண்டிருக்கிறேன். இதயம் நிறைக்கிறது இந்தப் பதிவுகள் எல்லாம். தொடர்க பதிவரே. . .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...