Monday, January 25, 2010

56 ஆவது தேசிய திரைப்பட விருதுகள்- ஒரு பார்வைஇந்த நேரம் இந்த தலைப்பை வைத்து ஏகப்பட்ட பதிவுகள் வந்திருக்கும். எனினும், சினிமாவை பற்றி படிப்பதற்கு சுவாரஸ்யம் இல்லாமல் என்று இருந்ததில்லை. இந்த வருடம் தேசிய திரைப்பட விருதுகள் சிறிது சீக்கிரமே அறிவிக்கப்பட்டுள்ளது. நான் மிகவும் எதிர்பார்த்த நான் கடவுள் படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஒரு இயக்குனரே ஒரு படத்தின் தாய். அவரது கனவில், அவரது கனவு என்னும் கருவில் உருவாவது தான் படத்தில் தெரியும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பிரதிபலிப்பும்.( அயல் நாட்டு படங்களை சுட்டு எடுக்கப்படும் படங்களின் இயக்குனர் மற்றொருவரின் குழந்தையை திருடி கொண்டு ஓடும் திருடனுக்கு சமம். உரிமம் வாங்கி எடுப்பது தத்து எடுப்பதற்கு சமம். இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு.)

நான் கடவுள் போன்ற படத்தை எடுக்க மிகுந்த துணிவு வேண்டும். அந்த துணிவு பாலாவிற்கு இருந்ததால் தான் இந்த விருது சாத்தியமாகி இருக்கிறது. அவரது ஒவ்வொரு படத்திற்கும் அவரது சிரத்தை, அவரது உழைப்பு அந்த படம் முழுதும் தெரியும். படத்தின் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் மிக அழுத்தமாக ஆணித்தரமாக இருக்கும். அந்த கதாபாத்திரங்கள் படத்தை பார்க்கும் ரசிகர்களாக நமக்கும் மிகுந்த பாதிப்புகளை ஏற்ப்படுத்தும். அதுவே அவரது படைப்பின் வெற்றி. சேது படத்தின் சேது, பிதாமகன் படத்தின் சுடுகாடு சுடலை, நான் கடவுள் படத்தின் பூஜா மற்றும் அகோரியின் கதாபாத்ரங்கள் யாராலும் மறக்க முடியாதபடி படைக்க இப்போதைக்கு பாலாவினால் மட்டுமே முடியும். எனினும் அவரது ஒவ்வொரு படத்தின் கதாநாயகர்களும் ஒரே மாதிரி அசுர பலத்துடன் ஒருவித மிருகத்தனத்துடன் இருப்பது மீண்டு மீண்டும் அவருடைய மற்ற படங்களையே ஒப்பிட்டு நோக்க வைத்து ஒரு ஆயாசத்தை உண்டு பண்ணுவது உண்மை. அதனை விட்டு அவர் வெளியே வருதல் நலம். அவரது அடுத்த படத்தில் அத்தகைய கதாநாயகர்கள் இல்லாது முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக செய்ய இருப்பதை அறிகிறேன் வாழ்த்துக்கள்.

சிறந்த கதாநாயகன் மற்றும் சிறந்த சமூக நலன் படமாக மராத்திய படமான ஜோக்வா தேர்ந்தெடுக்கப் பட்டிருகிறது. அப்படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன். நிச்சயம் ராஜ் தாக்கரே சந்தோஷ பட்டிருப்பார். அப்படத்தின் இயக்குனர் வட இந்தியானாக இருந்தால் அப்படத்தின் சுருளை கொளுத்தி போட ஆட்களை ஏவி விட்டிருப்பார்.

சிறந்த நாயகியாக பேஷன் படத்திற்காக பிரியங்கா சோப்ரா தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யமல்ல. நிச்சயமாக அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருந்தாலும் நம்ம பூ படத்தில் நடித்த பார்வதி மேனனுக்கு நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அவருக்கு கிடைக்காதது ஆச்சர்யமே. பிரியங்கா சோப்ராவை விட மிக அழுத்தமாக தனது நடிப்பை பதிவு செய்திருந்தார் பார்வதி மேனன். பூ படம் ஒரு வேளை முந்திய வருடத்தில் எடுக்கப்பட்டிருக்குமோ? இருந்தாலும் அவருக்கு அளிக்கபடாதது வருத்தமே. கங்கனா ரனாவத் மிக சிறப்பாக பேஷன் படத்தில் செய்திருந்தார். நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என படம் பார்த்த போதே எதிர்பார்த்தேன். அவரை தமிழில் வெறும் டூயட் பாட மட்டுமே உபயோக படுத்திருந்தது வருத்தமே. மிகச்சிறந்த நடிகை அவர்.

இம்முறை, பெரும்பாலான விருதுகளை ஹிந்தி மராத்தி மற்றும் வங்காள திரைப்படங்களே அள்ளி சென்றுள்ளன. தமிழ் படங்களின் வசூலை பார்த்து, தமிழ் பட பாணியை எப்போது நகலெடுக்க துவங்கியதோ அப்போதே சினிமா ஜீவிகள் சூழ்ந்த மலையாள படங்கள் தங்களது தனித்தன்மையை இழக்க துவங்கி விட்டன. எப்போதும் திரைப்பட விருதுகளில் முதன்மையாக இருக்கும் மலையாள படங்களில் ஒரு படத்திற்கு கூட எந்த நல்ல விருதும் கிடைக்காதது ஏமாற்றமே. மலையாள திரைப்பட பிரம்மாக்கள், தங்களது முயற்சியை மாற்றி நல்ல சினிமாக்கள் படைப்பத்தை தொடர வேண்டும்.

வங்காள மொழிப்படமான அநிருத்த ராய் சௌதரி இன் 'அந்தஹீன்' படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி பாடகி (ஸ்ரேயா கோசால்) பிரிவுகளுக்கு தேர்வாகி இருக்கிறது. வங்காள இயக்குனர்கள், இன்னும் வியாபார ரீதியான படங்களை நோக்கி முற்றிலுமாக நகரவில்லை என்பதை இது காட்டுகிறது.

சில பல பதிவர்கள் கமலுக்கு தசாவதராம் படத்திற்கு விருது கிடைக்க வில்லை என வருந்தி இருந்தது சிரிப்பை வரவழைத்தது. அப்படி பார்த்தால் சிவாஜி ரஜினியும் விருதுக்கு தகுதியானவரே. தசாவதாரம் படத்தில் காயாஸ் தியரி என்ற ஒரு புதுமையை தவிர, கமலின் மாறுவேட தாகத்தை தீர்த்து வைத்த திரைப்படம்அவ்வளவே.

தமிழ் படங்களில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றான 'பூ' படத்திற்கு இந்த வருடமோ அல்லது சென்ற வருடமோ.. எந்த விருதும் கிடைக்க வில்லை என்பதுதான் எனது ஆதங்கம்.

Friday, January 22, 2010

உலக சினிமா: வாழ்க்கையை கொண்டாடும் சொர்பா தி கிரீக்(Zorba the Greek)


வாழ்க்கையில் பல தருணங்கள், சோகம் வந்து நம்மை அப்பிக் கொள்வதுண்டு. நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகள் நம்மை துக்கத்தில் ஆழ்த்திடும். அடுத்து நாம் செய்யப்போவது என்ன என அறியாமல் கலங்கி கசங்கி நமது நிகழ்கால நிமிஷங்களை தொலைத்து விடுவதுண்டு. அத்தகயோருக்கான படம் தான் சொர்பா தி கிரீக்.

'சொர்பா தி கிரீக்' என்ற நாவல் கிரேக்க எழுத்தாளரான நிகோஸ் கசான்ட்சகிஸ் என்பவர் எழுதி வெளியிடப்பட்ட ஆண்டு 1946. ஒரு புத்திசாலியான எழுத்தாள
ன், தனது புத்தக வாழ்வை விட்டு கிரேக்க நாட்டின் மிக அழகிய தீவான க்ரீட் (crete) சென்று அங்குள்ள மக்களுடன் மக்களாக வாழ ஆசைப்படுகிறான். அவனை ஒரு மர்மம் மற்றும் வாழ்கையை கொண்டாடும் சொர்பா என்ற மனிதன் சந்திக்கையில், அந்த எழுத்தாளனின் வாழக்கை போக்கே மாறுகிறது. இந்த கதையை மைகேல் கொகொயாநிஸ் 1964 இல் திரைப்படமாக எடுக்க பெரும் வெற்றி பெற்று மூன்று ஆஸ்கார் விருதுகளைஅள்ளியது.

பசில் ஒரு கிரேக்கருக்கும் ஆங்கிலேயருக்கும் பிறந்த ஒரு எழுத்தாளன். தான் வளர்ந்த லண்டனிலிருந்து தனது தந்தை வைத்திருக்கும் நிலம் அடங்கிய கிரீட் என்ற கிரேக்க தீவின் குக்கிராமத்துக்கு பயணப்படுகிறான். கிரீசில் சொர்பா என்ற அந்த மர்மமான குதூகலமான, சந்தோஷமான சொர்பாவை சந்திக்கிறான். தனது தந்தையின் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதே பசிலின் நோக்கம். அதனை அறிந்த சொர்பா தானும் அவனுடன் வந்து அவனுக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டு அவனுடன்பயணப்படுகிறான்.

கிரீட் தீவின் கிராமத்தில் ஒரு போர் வீரனின் விதவையான மேடம் ஹோர்டன்ழே வின் விடுதியில் தங்குகிறார்கள். அங்கே சொர்பாவின் மேல் காதல் கொள்கிறாள் அந்த போர் வீரனின் விதவை. பசிலின் தந்தையின் நிலகரி சுரங்கம் ஒன்றுக்கும் உதவாதென அறிகிறார்கள். அப்போது அந்த நிலத்தின் எதிரில் இருக்கும் மலையில் இருந்து மரம் இறக்க சொர்பாவுக்கு யோசனை தோன்ற அந்த மலைக்கு சொந்தமான பாதிரி மார்களுக்கு மது விருந்து அளித்து அவர்களை சம்மதிக்க வைக்கிறான் சொர்பா.

சொர்பாவின் வெள்ளையான பேச்சும், ஆனந்த கூத்தாடுவதும்,ஆபத்துகளை பற்றி சிறிதும் கவலை இன்றி சந்தோஷமாக இருப்பதும், பாசிலை கவர்கிறது. அவனை தனது முதன்மையான நண்பனாக ஏற்றுக் கொள்கிறான். அப்போது அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு விதவை பெண்ணின் மேல் பசிலுக்கு ஈர்ப்பு ஏற்ப்பட சொர்பாவே காரணமாக இருக்கிறான். அந்த விதவைப்பெண்ணை அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு நிலமுதலாளியின் மகன் பைத்தியமாக இருக்கிறான்.

மலையில் இருந்து மரம் இறக்க தேவையான கேபிள்கள் வாங்க பசிலிடம் பணம் பெற்று கொண்டு நகரத்துக்கு செல்கிறான் சொர்பா. அங்கிருந்து பசிலுக்கு தான் ஒரு வயது குறைவான பெண்ணிடம் காதலில் இருப்பதாகவும் அவளுக்காக செலவழித்து பணம் எல்லாம் தீர்ந்து விட்டதாக கடிதம் எழுதுகிறான் சொர்பா. பசில் கோவம் அடைந்து அந்த போர்வீரனின் விதவை[இடம் சொர்பா அவளை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதாக கடிதத்தில் எழுதி இருப்பதாக கதை அளக்கிறான். அதனை அறிந்து அவள் மகிழ்ச்சி அடைந்து சொர்பாவை மணம் செய்யகாத்திருக்கிறாள்.

சொர்பா தேவையான பொருளை நகரத்தில் இருந்து வாங்கி வர பசிலோ தான் அந்த போர்வீரனின் விதவையிடம் சொர்பா மணம் புரிய சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறி வருந்துகிறான். சொர்பா அதனை ஏற்று அவளை மணம் புரிகிறான்.

ஒரு நாள் மது அருந்திவிட்டு அந்த இளம் விதவையின் இல்லம் சென்று அவளோடு ஒரு நாள் தங்குகிறான். அதனை கண்டுவிட்ட அவளை ஒருதலையாய் காதலிக்கும் அந்த நிலப்பிரபுவின் மகன் கடலில் விழுந்து தற்கொலை செய்துக் கொள்கிறான். மருநாள அவனது அடக்கத்திற்கு வருகை தரும் அவளை கொல்ல கத்தியுடன் இறந்தவனின் நண்பன் வருகிறான். அதனை கண்டு அஞ்சிய பசில் ஒருவனை விரட்டி சொர்பாவை அழைத்து வர செல்கிறான். சொர்பா வந்து அவனை தடுத்திருக்கும் போது அந்த நிலபிரபு தனது கத்தியினால் அந்த விதவையின் கழுத்தை கீறி அவளை கொன்று விடுகிறான்.

இதற்கிடையே சொர்பாவின் மனைவியான அந்த போர்வீரனின் விதவை நோய் வாய்ப்படுகிறாள். அவள் இறக்கபோவதை அறிந்து அவளது வீட்டில் இருக்கும் பொருட்களை அபகரிக்க ஒரு கூட்டமே வந்து அவள் இல்லத்தில் அவள் மண்டையை போடுவதற்காக காத்திருக்கிறது. அவள் இறந்ததும் அவளது பொருட்களை சந்தோஷத்தோடு கொள்ளையடித்து செல்கிறது அந்த கிராமம்.

இந்நிலையில் சொர்பா மலையிலிருந்து மரத்தை கேபிள்கள் வழியாக கீழே இறக்க ஒரு சறுக்கு பாதையை கட்டி மேலிருந்து முதல் மரத்தை வெட்டி விட... அது மேலே இருந்து கேபிள் வழியாக மலையிலிருந்து கீழே வந்து விழுகிறது. இடையில் சில சேதங்களை ஏற்ப்படுத்துகிறது. இரண்டாவது மரம் சரியாக சறுக்கி கீழே வந்து கடலில் விழ சந்தோசம் கொள்கின்றனர் அந்த மலைக்கு சொந்தக்கரறான் பாதிரிமாரும் சார்பாவும் பசிலும். மூன்றாவது மரத்தை இறக்கும்போது சொர்பா கட்டிய அத்தனை தடுப்புகளும் உடைந்து விழ கேபிள் களும் அறுந்து விழ அவர்களது முயற்சி படு தோல்வி அடைகிறது.

துன்பம் வரும் நேரமெல்லாம் நாட்டியமாடும் சொர்பாவை தனக்கு நாட்டியம் ஆட சொல்லி கேட்கிறான் பசில். அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளை நகைச்சுவயாக சொல்லி சிரிக்கிறார்கள். அந்த மூன்றாவது மரம் கீழே விழும்போது அந்த பாதிரிமார்களின் முகங்கள் போன போக்கை எண்ணி சிரிக்கிறார்கள். இதன் மூலம் பசிலும் சொர்பாவுடன் சேர்ந்து வாழ்கையை கொண்டாட பழகிக் கொண்டதாக காட்டபடுகிறது. இருவரும் இணைந்து நாட்டியம் ஆடுவதோடு முடிகிறது திரைப்படம்.


திரைப்படத்தின் உயிர்நாடி சொர்பாவாக நடித்திருக்கும் ஆந்தனி குவீன் மற்றும் படத்தின் வசனங்கள். துன்பம் வந்தாலும் சோகம் வந்தாலும் வாழ்கையை கொண்டாடுகிறான் சொர்பா. மிகவும் சுவாரஸ்யமான பாத்திரப் படைப்பு. ஆந்தனி குவீன் பின்னி எடுத்திருக்கிறார். வேறு எவரையுமே அந்த பாத்திரத்தில் பொருத்தி பார்க்க முடியாது. அப்படி ஒரு அபாரமான நடிப்பு. படத்தின் வசனம் மிகவும் அருமை. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வசனத்தையும் ரசித்து சிலாகிக்க வைத்திருக்கிறார் நிகோஸ் கசன்சகிஸ். படம் கருப்பு வெள்ளையில் இருந்தாலும் கிரீட் தீவின் அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது வால்டர் லச்சால்யின் காமெரா.

ஒளிப்பதிவு, கலை மற்றும் போர்வீரனின் விதவையாக நடித்த லீலா கேட்ரோவா ஆகியோருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஆந்தனி குவின்( சிறந்த நடிகர்), மிஹளிஸ் கொகயானுஸ்(சிறந்த இயக்குனர்) மற்றும் சிறந்த படம் ஆகிய பிரிவுகளுக்கு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப் பட்டது.
மற்றும் பல விருதுகள் வாங்கி உள்ளது இந்த படம்.

ஆரம்பத்தில் என்ன இது பழையகால படத்தை வாங்கி வந்து விட்டோமே என தயங்கிய என்னை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுத்து கொண்டது சொர்பா தி கிரீக் திரைப்படம். வாழ்கையை கொண்டாட வேண்டுவோர் இந்த திரைப்படம்பாருங்கள்.

Saturday, January 16, 2010

'டமில் வால்க' - ஒரு ஜாலி கானா


இந்த படைப்பை வெளியிட்ட 'யூத்புல் விகடனுக்கு' நன்றி

'டமில் வால்க' தலிவரு
புள்ள இங்கிலீசு பேசும்
பிகரு கிட்ட தமில்ல பேசினா
இங்க்லீசுல ஏசும்!

பீச்சாங்கர பக்கம் போனா
ஏகப்பட்ட மீனு...
ஸ்டெல்லா காலேஜ் பொண்ணு கேக்குது
வாட் டூ யு மீனு..!

தங்க்லீசுல பேசினாக்கா
ஒன்னும் பிரியல...
இங்க்லீசு பேசாட்டி போனா
நீயும் தருதல..!

தொல காட்சி பொண்ணு எல்லாம்
தங்கலீசு பேச...
இதுங்க குப்பத்து டமில் பேச தான
எனக்கும் ஆச!

பிகுலு பார்ட்டி டகுலு டோமர்ன்னு
நானும் சொன்னாக்கா....
இந்த இங்க்லீசு பார்ட்டிங்க புரியாம
போடும் டண்டனக்க..!

நா குப்பத்து டமில் சொம்மா எட்த்து உட்டா..
இங்க்லீசு சனங்க மெர்சல் ஆகி ஓடும்
சுப்பனுக்கும் குப்பனுக்கும் பிரிற மாறி
டமில் நீயும் பேசினாக்க கொறஞ்சா பூடும்!

Sunday, January 10, 2010

காதலிச்சி பாருன்னு சொம்மாவா சொன்னாங்கோ..!(ஒரு ஜாலி கானா..)


காதலிச்சி பாருன்னு
சொம்மாவா சொன்னாங்கோ...
நான் சொல்லறத கேட்டுபுட்டு
இன்னான்னு கேளுங்கோ.

அறியாத நேரத்துல
மூக்கு கீழா முடி மொளைக்கும்
புரியாத வயசுலதான்
லவ்வு மூடு ஸ்டார்ட் ஆவும்.

நா பாக்கும் பிகரு எல்லாம்
செட் ஆகி போச்சுதுங்கோ..
அழகான போண்ணுக்கல்லாம்
கல்யாணம் ஆச்சிதுங்கோ

இஸ்கூலு போற பொண்ணு
பல்சர் பார்ட்டி தேடுதுங்கோ..
காலேஜ் பொண்ணு எல்லாம்
டிஸ்கோ கூட்டி 'போ' ன்னு துங்கோ..

மிஸ்ட் காலு உட்டாக்கா..
மிஸ் ஆகி போவுதுங்கோ..
எஸ் எம் எஸ் அனுப்பினாக்கா
எஸ் ஆகி போகுதுங்கோ...

கிராமத்துல அத்த பொண்ணு
இருக்கான்னு தேத்திக்கிட்டேன்...
ஜல்லிக்கட்டு காளயடக்கி
ஒருத்தன் அவள தேத்திபுட்டான்.

ஊரெல்லாம் தேடி அலைஞ்சி
கவித போல ஒன்னு கிறுக்கி
எடுபிடியா நா திரிஞ்சி..
அவ என்ன பாத்து சிரிச்சி..

லவ்வு கொஞ்சம் செட் ஆகி,
ஊரு கொஞ்சம் சுத்திபுட்டா..
அயல் நாடு மாபிள்ள வந்தா
அண்ணான்னு சொல்லிபுட்டா..
--------

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...