Friday, January 22, 2010
உலக சினிமா: வாழ்க்கையை கொண்டாடும் சொர்பா தி கிரீக்(Zorba the Greek)
வாழ்க்கையில் பல தருணங்கள், சோகம் வந்து நம்மை அப்பிக் கொள்வதுண்டு. நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகள் நம்மை துக்கத்தில் ஆழ்த்திடும். அடுத்து நாம் செய்யப்போவது என்ன என அறியாமல் கலங்கி கசங்கி நமது நிகழ்கால நிமிஷங்களை தொலைத்து விடுவதுண்டு. அத்தகயோருக்கான படம் தான் சொர்பா தி கிரீக்.
'சொர்பா தி கிரீக்' என்ற நாவல் கிரேக்க எழுத்தாளரான நிகோஸ் கசான்ட்சகிஸ் என்பவர் எழுதி வெளியிடப்பட்ட ஆண்டு 1946. ஒரு புத்திசாலியான எழுத்தாளன், தனது புத்தக வாழ்வை விட்டு கிரேக்க நாட்டின் மிக அழகிய தீவான க்ரீட் (crete) சென்று அங்குள்ள மக்களுடன் மக்களாக வாழ ஆசைப்படுகிறான். அவனை ஒரு மர்மம் மற்றும் வாழ்கையை கொண்டாடும் சொர்பா என்ற மனிதன் சந்திக்கையில், அந்த எழுத்தாளனின் வாழக்கை போக்கே மாறுகிறது. இந்த கதையை மைகேல் கொகொயாநிஸ் 1964 இல் திரைப்படமாக எடுக்க பெரும் வெற்றி பெற்று மூன்று ஆஸ்கார் விருதுகளைஅள்ளியது.
பசில் ஒரு கிரேக்கருக்கும் ஆங்கிலேயருக்கும் பிறந்த ஒரு எழுத்தாளன். தான் வளர்ந்த லண்டனிலிருந்து தனது தந்தை வைத்திருக்கும் நிலம் அடங்கிய கிரீட் என்ற கிரேக்க தீவின் குக்கிராமத்துக்கு பயணப்படுகிறான். கிரீசில் சொர்பா என்ற அந்த மர்மமான குதூகலமான, சந்தோஷமான சொர்பாவை சந்திக்கிறான். தனது தந்தையின் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதே பசிலின் நோக்கம். அதனை அறிந்த சொர்பா தானும் அவனுடன் வந்து அவனுக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டு அவனுடன்பயணப்படுகிறான்.
கிரீட் தீவின் கிராமத்தில் ஒரு போர் வீரனின் விதவையான மேடம் ஹோர்டன்ழே வின் விடுதியில் தங்குகிறார்கள். அங்கே சொர்பாவின் மேல் காதல் கொள்கிறாள் அந்த போர் வீரனின் விதவை. பசிலின் தந்தையின் நிலகரி சுரங்கம் ஒன்றுக்கும் உதவாதென அறிகிறார்கள். அப்போது அந்த நிலத்தின் எதிரில் இருக்கும் மலையில் இருந்து மரம் இறக்க சொர்பாவுக்கு யோசனை தோன்ற அந்த மலைக்கு சொந்தமான பாதிரி மார்களுக்கு மது விருந்து அளித்து அவர்களை சம்மதிக்க வைக்கிறான் சொர்பா.
சொர்பாவின் வெள்ளையான பேச்சும், ஆனந்த கூத்தாடுவதும்,ஆபத்துகளை பற்றி சிறிதும் கவலை இன்றி சந்தோஷமாக இருப்பதும், பாசிலை கவர்கிறது. அவனை தனது முதன்மையான நண்பனாக ஏற்றுக் கொள்கிறான். அப்போது அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு விதவை பெண்ணின் மேல் பசிலுக்கு ஈர்ப்பு ஏற்ப்பட சொர்பாவே காரணமாக இருக்கிறான். அந்த விதவைப்பெண்ணை அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு நிலமுதலாளியின் மகன் பைத்தியமாக இருக்கிறான்.
மலையில் இருந்து மரம் இறக்க தேவையான கேபிள்கள் வாங்க பசிலிடம் பணம் பெற்று கொண்டு நகரத்துக்கு செல்கிறான் சொர்பா. அங்கிருந்து பசிலுக்கு தான் ஒரு வயது குறைவான பெண்ணிடம் காதலில் இருப்பதாகவும் அவளுக்காக செலவழித்து பணம் எல்லாம் தீர்ந்து விட்டதாக கடிதம் எழுதுகிறான் சொர்பா. பசில் கோவம் அடைந்து அந்த போர்வீரனின் விதவை[இடம் சொர்பா அவளை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதாக கடிதத்தில் எழுதி இருப்பதாக கதை அளக்கிறான். அதனை அறிந்து அவள் மகிழ்ச்சி அடைந்து சொர்பாவை மணம் செய்யகாத்திருக்கிறாள்.
சொர்பா தேவையான பொருளை நகரத்தில் இருந்து வாங்கி வர பசிலோ தான் அந்த போர்வீரனின் விதவையிடம் சொர்பா மணம் புரிய சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறி வருந்துகிறான். சொர்பா அதனை ஏற்று அவளை மணம் புரிகிறான்.
ஒரு நாள் மது அருந்திவிட்டு அந்த இளம் விதவையின் இல்லம் சென்று அவளோடு ஒரு நாள் தங்குகிறான். அதனை கண்டுவிட்ட அவளை ஒருதலையாய் காதலிக்கும் அந்த நிலப்பிரபுவின் மகன் கடலில் விழுந்து தற்கொலை செய்துக் கொள்கிறான். மருநாள அவனது அடக்கத்திற்கு வருகை தரும் அவளை கொல்ல கத்தியுடன் இறந்தவனின் நண்பன் வருகிறான். அதனை கண்டு அஞ்சிய பசில் ஒருவனை விரட்டி சொர்பாவை அழைத்து வர செல்கிறான். சொர்பா வந்து அவனை தடுத்திருக்கும் போது அந்த நிலபிரபு தனது கத்தியினால் அந்த விதவையின் கழுத்தை கீறி அவளை கொன்று விடுகிறான்.
இதற்கிடையே சொர்பாவின் மனைவியான அந்த போர்வீரனின் விதவை நோய் வாய்ப்படுகிறாள். அவள் இறக்கபோவதை அறிந்து அவளது வீட்டில் இருக்கும் பொருட்களை அபகரிக்க ஒரு கூட்டமே வந்து அவள் இல்லத்தில் அவள் மண்டையை போடுவதற்காக காத்திருக்கிறது. அவள் இறந்ததும் அவளது பொருட்களை சந்தோஷத்தோடு கொள்ளையடித்து செல்கிறது அந்த கிராமம்.
இந்நிலையில் சொர்பா மலையிலிருந்து மரத்தை கேபிள்கள் வழியாக கீழே இறக்க ஒரு சறுக்கு பாதையை கட்டி மேலிருந்து முதல் மரத்தை வெட்டி விட... அது மேலே இருந்து கேபிள் வழியாக மலையிலிருந்து கீழே வந்து விழுகிறது. இடையில் சில சேதங்களை ஏற்ப்படுத்துகிறது. இரண்டாவது மரம் சரியாக சறுக்கி கீழே வந்து கடலில் விழ சந்தோசம் கொள்கின்றனர் அந்த மலைக்கு சொந்தக்கரறான் பாதிரிமாரும் சார்பாவும் பசிலும். மூன்றாவது மரத்தை இறக்கும்போது சொர்பா கட்டிய அத்தனை தடுப்புகளும் உடைந்து விழ கேபிள் களும் அறுந்து விழ அவர்களது முயற்சி படு தோல்வி அடைகிறது.
துன்பம் வரும் நேரமெல்லாம் நாட்டியமாடும் சொர்பாவை தனக்கு நாட்டியம் ஆட சொல்லி கேட்கிறான் பசில். அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளை நகைச்சுவயாக சொல்லி சிரிக்கிறார்கள். அந்த மூன்றாவது மரம் கீழே விழும்போது அந்த பாதிரிமார்களின் முகங்கள் போன போக்கை எண்ணி சிரிக்கிறார்கள். இதன் மூலம் பசிலும் சொர்பாவுடன் சேர்ந்து வாழ்கையை கொண்டாட பழகிக் கொண்டதாக காட்டபடுகிறது. இருவரும் இணைந்து நாட்டியம் ஆடுவதோடு முடிகிறது திரைப்படம்.
திரைப்படத்தின் உயிர்நாடி சொர்பாவாக நடித்திருக்கும் ஆந்தனி குவீன் மற்றும் படத்தின் வசனங்கள். துன்பம் வந்தாலும் சோகம் வந்தாலும் வாழ்கையை கொண்டாடுகிறான் சொர்பா. மிகவும் சுவாரஸ்யமான பாத்திரப் படைப்பு. ஆந்தனி குவீன் பின்னி எடுத்திருக்கிறார். வேறு எவரையுமே அந்த பாத்திரத்தில் பொருத்தி பார்க்க முடியாது. அப்படி ஒரு அபாரமான நடிப்பு. படத்தின் வசனம் மிகவும் அருமை. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வசனத்தையும் ரசித்து சிலாகிக்க வைத்திருக்கிறார் நிகோஸ் கசன்சகிஸ். படம் கருப்பு வெள்ளையில் இருந்தாலும் கிரீட் தீவின் அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது வால்டர் லச்சால்யின் காமெரா.
ஒளிப்பதிவு, கலை மற்றும் போர்வீரனின் விதவையாக நடித்த லீலா கேட்ரோவா ஆகியோருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஆந்தனி குவின்( சிறந்த நடிகர்), மிஹளிஸ் கொகயானுஸ்(சிறந்த இயக்குனர்) மற்றும் சிறந்த படம் ஆகிய பிரிவுகளுக்கு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப் பட்டது.
மற்றும் பல விருதுகள் வாங்கி உள்ளது இந்த படம்.
ஆரம்பத்தில் என்ன இது பழையகால படத்தை வாங்கி வந்து விட்டோமே என தயங்கிய என்னை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுத்து கொண்டது சொர்பா தி கிரீக் திரைப்படம். வாழ்கையை கொண்டாட வேண்டுவோர் இந்த திரைப்படம்பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இப்பொழுதுதான் உங்கள் வலைப்பூவுக்கே வருகிறேன்..அதற்கு முதலில் என்னை மன்னிக்கவும்.அருமையான பதிவு,
Post a Comment