Wednesday, December 24, 2014

கிறிஸ்துமஸ்

என் சிறுவயது கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.


எனது அம்மாவுக்கு அனைத்து உறவினர்களும் வேண்டும் . வா வா என
அழைப்பார்கள். அனைவரும் சீக்கிரமே வந்து விட வேண்டும். தாமதமாக வரும் உறவினர்களுக்கு திட்டு உண்டு. அப்போதெல்லாம் எங்களில் யாரும் பெரிய பதவிகளில் அமர்ந்திருக்கவில்லை. கை நெறைய சம்பளம் இல்லை. எங்களின்  வெளிநாடு சென்னை மற்றும் பெங்களூரு மட்டுமே.  நானும் சகோதரர்களும் கிறிஸ்துமஸ் நாளின் முன் தினம் அதிகாலை எழுந்து , வீட்டின் முன்னே அமர்ந்து காத்திருப்போம். திருநெல்வேலி, கோவை, சென்னை, மதுரை என ஒவ்வொருவராக  குவியும் பொது மனதில் எழும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காதது. எங்கள் சித்தப்பா வேலை முடித்துவிட்டு சி எஸ் சி பேருந்தில் கடைசியாக வருவார்கள். அதனாலேயே அவர்களுக்கு சி எஸ் சி சித்தப்பா என்ற  பெயர் உண்டு.

அம்மா சம்பளம் இல்லா விடுமுறை(Loss of Pay) எடுத்து விடுவார்கள். காசு இல்லை என கவலைப்பட்டதில்லை. வந்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வந்தவர்கள் சிரிக்க வேண்டும். இதுவே அம்மாவின் குறிக்கோளாக இருந்தது.  அம்மாவுக்கு பலகாரம் சரியாக செய்ய வராவிட்டாலும் ஆள் வைத்து பலகாரம் செய்து விடுவார்கள். நிறைய ஆகிவிட்டதென்றால், குழந்தைகளை அழைத்து 'பத்து பைசா' தரேன் இந்த ஜிலேபி சாப்பிடு  என்று அளித்த தருணங்கள் உண்டு.

எங்கள் வீடு மாட மாளிகையோ கூட கொபுரமாகவோ இருந்ததில்லை. ஆனால், தளும்ப தளும்ப அன்பு நிறைந்திருக்கும்.  முன்னே அஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட கூரையில் ஒரு அறை . அதன் அருகே ஒரு சிறிய அறை . ஒரே ஒரு கட்டிலால் அந்த அறை  நிறைந்திருக்கும். அந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் புதிதாக யாருக்கு திருமணம் ஆகி இருக்கிறதோ அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிடும்  நடுவில் ஒரு ஹால். வந்திருக்கும் அனைத்து உறவினர்களும் அங்கே தான் தங்குவார்கள். கடைசியில் ஒரு சமையலறை. அவ்வளவுதான் எங்கள் வீடு.

அவ்வப்போது போய்விட்டு வரும் மின்சாரம். வீட்டில் தண்ணீர் குழாய் கிடையாது. சிறிது தூரத்தில் இருக்கும் விஸ்கோஸ் தொழிற்சாலையின்  குழாயில் தான் தண்ணீர் பிடிக்கவேண்டும்.இரவு பதினோரு  மணிக்கு வரிசையாக குழாயிலிருந்து வீடு வரை ஆட்களாக நின்று கொள்வோம். ஒவ்வொரு குடமாக தண்ணீர் பிடித்து அடுத்தடுத்து ஆட்கள் கைமாறி குடத்து தண்ணீர் வீட்டின் ட்ரம்களில்  நிரப்பப்படும். அப்படி இப்படி என இரவு இரண்டு மணி ஆகிவிடும் உறங்க. நடு  இரவில் ஒருவர் ஹாலின் விளக்கை போட்டு பார்த்தால், ஜாலியான் வாலாபாக் படுகொலைகள் நடந்த இடம் போல காட்சி தரும்.யார் தலை யார் காலில் இருக்கிறது என்பதே தெரியாமல் படுத்து கிடப்பார்கள்.

பகலில் ஆண்கள் எல்லோரும் லுங்கி பனியன் சீருடையுடன், எங்களின்  ரப்பர் பந்து பிடுங்கப்பட்டு கிரிக்கட் ஆட ஆரம்பிப்பார்கள். அவுட் செய்ய பல வியூகங்களும் அமைக்கப்படும். எங்களுடன் பெரியவர்கள் கிரிக்கெட் ஆடுவதை நினைத்து எங்களுக்கு பெருமையாக இருக்கும்.

சமையல் கூட்டாக நடக்கும். ஆண்கள் பெண்கள் என அனைவரும் பங்கு பெறுவார்கள். வெங்காயம் உரிக்கையில் நடு ஹாலில் இருந்து ஒரே ஒரு வெங்காயம் எங்கிருந்தாவது பறக்கும். உடனே அந்த ஹால் முழுக்க அங்கங்கே இருந்து சின்ன வெங்காயங்கள் பறந்து எதிராளிகளை தாக்கி அது ஒரு வெங்காயப் போர்க்களமாகும். ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லாமல் சமையல் நடக்கும். அண்ணா  ரசம் வைப்பார்கள் . அத்தை பிரியாணி செய்வார்கள். பெரியம்மா காய் செய்வார்கள் மற்ற அனைவருமே எடுபிடிகளாக வேலை செய்வோம். எங்கள் யாருக்கும் நடுவிலும் ஈகோ எட்டி பார்த்தது கூட கிடையாது.

எங்கள் அப்பா வந்தவர்களை வரவேற்று விட்டு காணாமல் போய்  விடுவார்கள். அவர்களை தேவாலயத்தில் தான் பார்க்க முடியும். ஆலயத்தின் உத்திரத்தில் ஏறி வண்ணக் காயிதங்கள் கட்டி கொண்டிருப்பார். அல்லது  ஒரு கலை இயக்குனராக மாறி குடிலுக்கான குகைகளை நிர்மாணித்துக் கொண்டிருப்பார் அல்லது ஆலயத்தின் பீடத்தில் வண்ணங்களை குழைத்து பூசி கொண்டிருப்பார். அவர் வீடு திரும்பும்  போது  அனைவரும் உண்டு முடித்து தங்களின் ஜேம்ஸ் அண்ணனை/சித்தப்பாவை/தாத்தாவை /மாமாவை எதிர் கொள்ளுவார்கள். இடுப்பில் ஒரு லுங்கி மார்பில் ஒரு துண்டு அணிந்து கொண்டு அனைவரிடமும் சாப்பிட்டாகிவிட்டதா என்று கேட்டுவிட்டுத்தான் சாப்பிட அமர்வார்கள். அன்று எங்கள் வீட்டில் நடந்த கலாட்டாக்களை ஒவ்வொருவரும் போட்டி போட்டு கொண்டு அவரிடம் சொல்லி முடிக்கையில், அவர் சிரிக்கும் சிரிப்பில் உணவுத் துணுக்குகள் அவர் பல்லிடுக்கில் மாட்டிக் கொள்ளும்.

அவர் வீட்டுக்கு வரும்போது கோயிலுக்கு செய்யவேண்டிய ஏதாவது ஒரு வேலையையும் சேர்த்தே கொண்டு வந்திருப்பார். அவர் உண்டு முடித்தவுடன் என்னை போன்ற சில எடுபிடிகள் அவருடன் மாடிக்கு சென்று, அவர் கொண்டு வந்திருந்த தெர்மாகோல் அட்டைகளில் ஜிமிக்கி ஒட்டவும். வண்ண காகிதங்களை கத்தரிக்கவும் நாங்கள் அவருக்கு உதவி செய்வோம். அவர் எதற்காக அப்போது அதனை செய்கிறார் என்பது எங்களுக்கு விளங்கவே விளங்காது. மறுநாள் ஆலயத்தில் அவர் வைக்கும்போது தான் அந்த ஜோடனை ஆலயத்தை  எவ்வளவு அழகாக அலங்கரித்துள்ளது  என்பதே விளங்கும்.

கிறிஸ்துமஸ் முடிந்து அனைவரும் ஊர் செல்லும் நாள், எதோ பெண்ணை கட்டி கொடுத்த பெண் வீட்டாரின் மறுவீடு போலத்தான் ஒரே கண்ணீராக  நிறைந்திருக்கும். வந்தவர்களும், அம்மாவும் கண்ணீர் விட்டு அழுவார்கள்.  வீடு வெறிச்சோடி போயிருக்கும். வெங்காயத்தை பார்த்தாலே சோகமாக இருக்கும். எங்களின்  ரப்பர் பந்து சீண்டுவாரின்றி கிடக்கும்.

இன்று, அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை.
வசதிகள் பணம் எல்லாம் இருந்தும் உறவினர்கள் அனைவரும் ஆங்காங்கே இருக்க, பதவிகளும் பணமும் பலரை மாற்றிப் போட்டது. இன்று அனைவரும்  தனி தனி தீவுகளாக கரை தெரியாமல் நின்று கொண்டிருக்கிறோம். அடுத்து அனைவரும் என்று சேர்ந்து சந்திப்போம்  என்ற நிலை. கடந்த முறை இந்தியாவுக்கு சென்றிருந்த பொது கூட சிறுமுகை பற்றி பேசாத உறவினர்கள் இல்லை. அந்த வரலாறை அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்ல ஆட்கள் இல்லை.  ஈகோக்களால் நிரம்பி இருக்கிறது இன்றைய உலகம். எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம், எதிர்பாராத ஆட்களிடம்  நாம் எதிர்பாராத பிரச்சனைகள் முளைப்பதை கண்டு மருகி நிற்கும்போது அம்மாவையும் அப்பாவையும்  சிறுமுகையில் களித்த கிறிஸ்மஸ்   நாட்களையும் நினைக்காமல் கணங்கள் நகர்வதில்லை.

I miss you Appa and Amma...

அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.  

Merry Christmas to you All.

Friday, June 27, 2014

சூன்யவேளியின் கார்டூன் பொம்மைகள்!


வீடு நுழைகையில்,
இடறிவிட்டது ...
கார் பொம்மை ஒன்று!

படுக்கை அறையெங்கும்
மனைவி மடித்து வைத்த
துணிகள்
பரவிக் கிடந்தன.

காலுடைந்த பார்பி
குப்புறப் படுத்தபடி
அழுது புரண்டது!

உணவு மேசை எங்கும்
எங்கள் வீடு வான் கோ க்கள்
இலக்கில்லாமல்
தீட்டிய
வண்ணங்கள்!

பிய்ந்து கிடந்தன
புதிதாய் வாங்கிய
கித்தார் கம்பிகள்.

உடைந்து கிடந்தன
தேநீர் கோப்பைகள்

கிழிந்து கிடந்தன
அலுவலக கோப்புகள்.

களமாடிவிட்டு  வந்த
வீரர்களைப் போல
அசதியில்
உறங்கிய பிள்ளைகளை
எழுப்பி
வைதது
நினைவுக்கு வந்தது.

விடுமுறைக்காக
ஊர் சென்றுவிட்ட
பிள்ளைகளை
தொலைத்துவிட்டு,

யாருமற்ற
சூன்யவேளியின் தனிமையில்
நான் விடும்
மூச்சுக் காற்று
வீடெங்கும்
எதிரொலித்தது!

கார் பொம்மையை
கதவருகே வைத்துவிட்டு,
தேநீர் கோப்பையை
உடைத்தேன்.

தொலைக்காட்சிப்  பெட்டியில்
சிரிக்கத் துவங்கின
கார்டூன் பொம்மைகள்.


Sunday, June 22, 2014

உலக சினிமா: அமோர் (AMOUR) (பிரெஞ்ச்)பருவ காலத்தில் காதல் வந்து அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு, வயதான பால்யத்தில் அருகே இருப்பது தான் உண்மை காதல் என பொளேரென அறைந்து சொல்கிறது பிரெஞ்சு திரைப்படம் AMOUR( காதல் )

படத்தின் துவக்கத்தில் ஒரு அரங்கத்தில் பியானோ  இசைக்கப் படுகிறது. அரங்கத்தின் மேடை காண்பிக்கப் படுவதில்லை. பார்வையாளர்கள் மட்டும் காட்டப் படுகிறார்கள்.அதன் பின்னே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் வீட்டுக்குள் நுழைகிறார்கள்,  எண்பதுகளில்  தங்களது அந்திமத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆன் மற்றும் ஜார்ஜ் தம்பதியர். அன்று  வாசித்தவன் ஆனின்  மாணவன் ஆண்ட்ரே. அவனது வாசிப்பை பற்றி பெருமையாக கூறிக் கொண்டிருக்கும் ஆன் சிறிது நேரம்  செயலற்று பொய் விட பதைபதைக்கும் கணவன் ஜார்ஜ் மருத்துவமனைக்கு தொலைபேசுகிறான். ஆனுக்கு ஸ்ட்ரோக்   அவருக்கு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்புகிறார். வீடு திரும்பியதும், ஜார்ஜிடம், தன்னை இனி எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லக்கூடாது என வாக்கு வாங்கி விடுகிறார் ஆன் .

அதன் பின்னே ஆனை  குளிப்பாட்டுதல் முதல் உணவளிப்பது வரை அனைத்தும் செய்யும் தாயுமானவனாக ஜார்ஜ் பணிவிடை  செய்கிறார்.அவர்களது ஒரே மகள் ஈவா லண்டனில் வசித்து வருகிறாள். அவ்வப்போது இவர்களை பாரிஸ் வந்து பார்த்து செல்கிறாள். அம்மாவின் நிலையை கண்டும், அப்பா அம்மாவுக்கு செய்யும் பணிவிடைகளை கண்டும், அப்பாவின் பாரம் குறைக்க அம்மாவை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறு கூற, ஆனிடம்   தான் கொடுத்த வாக்கு பற்றி கூறி, அதனை மறுக்கிறார் ஜார்ஜ்.

ஆனுக்கு  பக்கவாத நோயும்  தாக்க,நிலை குலைந்து பொய் விடுகிறார்கள் இருவரும். எனினும் ஆனை , தன காதல் மனைவியை  சுமை தாங்கியாக நின்று தாங்குகிறார் ஜார்ஜ். தனது காதல் மனைவியின் வியாகுலத்தை பார்த்து தாங்க இயலாத ஜார்ஜ் இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

ஒரு அடுக்குமாடி வீடு, அதில் வாழும் இரு மனிதர்கள் அவ்வப்போது வந்து செல்லும் மகள் இரண்டு செவிலியர், ஆனின் பியானோ மாணவன் இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். படம் முழுக்க ஒரே ஒரு வீட்டில் மட்டுமே கதை சொல்லப்படுகிறது . இசையால் நிரம்பி வழியும் அந்த வீடும் கூட இந்தப் படத்தின் ஒரு கதாப் பாத்திரமாக நடித்திருக்கிறது.

ஆரம்பத்தில் தனியாக ஜார்ஜ்ஜும்  ஆனும்  தாங்கள் ரசித்த அந்த பியானோ  குறித்த உரையாடல், அவர்களுக்கிடையே நிகழும் அந்நியோன்யத்தை  அற்புதமாக வெளிப்படுத்துகிறது. ஆன் துயரப்படும் போதெல்லாம் ஜார்ஜ் பேசும் ஆறுதல் மொழிகளும், ஆனுக்கு  ஒவ்வொரு நாளும் சிறுகுழந்தைகளுக்கு வாசிப்பதை போல புத்தகம் வாசித்து காட்டும்போதும், ஜார்ஜ் ஆனுக்கு  பணிவிடை செய்யும்போதும் ஆணின் மீது தனக்குண்டான காதலை, மொழியின் மூலம் புரிய  வைக்காமல்,தனது செயலின் மூலம் புரியவைப்பது படத்தின் அடிப்படை ஆன் மற்றும் ஜார்ஜின் மகள் இவா , 'என் சிறுவயதில் நீங்கள் இருவரும் காதலுடன் தான்  இருக்கிறீர்கள், என் நண்பர்களின் பெற்றோர் போல விவாகரத்து பெறமாட்டீர்கள் என்பதை, மேலே கேட்கும் கட்டில் சத்தத்தில் இருந்து புரிந்துக்  கொள்வேன்' என்று சொல்லுமிடம் கவிதை!.

இந்தப் படம்  திரைப்படம் பார்க்கும் உணர்வை தராமல் நேரிலேயே இரு மனிதர்களின் வாழ்க்கையை பார்ப்பது போல பதிவு செய்திருக்கும் எதார்த்தம் பிரம்மிப்பை உண்டு செய்கிறது. எண்பது  வயதான இருவரை மட்டுமே திரைப்படம் முழுவதும் உலவவிட்டு, அவர்களது காதலை, வலியை கோவத்தை, அன்னியோன்யத்தை காண்பிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும்  அதனை நிகழ்த்தி  ஆஸ்கார், கோல்டன் க்ளோப் , பாப்டா  போன்ற உலகின் ஆகச்சிறந்த விருதுகளை இந்தத் திரைப்படம் பெற காரணமாக இருந்தவர் , இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கிய ஜெர்மனியத் திரைப்பட இயக்குனர் மைக்கேல் ஹானெகெ. படத்தில் இசை ஒன்று இரண்டு இடங்களில் மட்டுமே  வருகிறது.அதுவும் பியானோ மட்டுமே. படத்தின் ஒவ்வொரு துளியுமே ஒளிபபதிவில்  தாண்டவம் நடத்தி இருக்கிறது.

படத்தின் ஜார்ஜ் ஆக நடித்திருக்கும் ஜீன் லூயி மற்றும் ஆன் ஆக நடித்திருக்கும் இம்மனுவாலா ரீவா இருவரும் இந்தக் கதா பாத்திரங்களுக்கு அத்துணை பாந்தம்.  இம்மானுவாலா முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்.. தனது எண்பதாவது  வயதிலும், ஒரு தேவதையாக  ஒளிர்கிறார். ஜார்ஜ் அந்த எண்பதாவது வயதிலும் தீராக் காதலுடன் இருப்பதற்கு இந்த அழகும் நியாயப் படுத்தப் படுகிறது.

படம் மிக மெதுவாக நகர்வது படத்தை பார்க்கும் சிலருக்கு பெரும் குறையாக இருக்கலாம். நிச்சயமாக இந்த திரைப்படம் நல்ல சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே.


கூட்டுக் குடும்பங்கள் குறைந்தும் பெரும்பாலும் மறைந்தே விட்ட இந்த சமூகச் சூழலில் , தங்கள் பிள்ளைகள் தங்கள் அருகே இல்லாத நிலையில் இருக்கும் பல பெற்றோர்களின் நிலையை இந்தத் திரைப்படம் உணர்த்துகிறது.

இத்திரைப்படத்தை பார்க்கும்  அனைவருக்கும், தங்களது அந்திமக் காலத்தைக் குறித்து பயம் வரும், அந்த பயத்தை   தம்பதியர் இருவரும் தங்களது தீராக் காதல் மூலம் வெல்ல முடியும் என இந்தத் திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.

அமோர் ஒரு அற்புதம்.

Friday, June 20, 2014

ஹி(இ)ந்தியா ..?!!மொழி... ஒரு கலாசாரத்தின் அடையாளம். தமிழ் மொழி மிக மிகப் பழமையான ஒரு மொழி என்பதை எல்லோரும் அறிவோம். அந்த மொழியின் அழகு மற்றும் வீச்சின் அளவால் தான், தமிழுக்கு பல்வேறு மொழிகளின் அச்சுறுத்தல் வந்தாலும் மேற்க்கத்திய நாட்டு மொழியே தன்னை மேல்தட்டு வர்க்கமாக காண்பிக்கும் என்ற சுயமட்ட சிந்தனையின்  தாக்கத்தால் சற்று குறைந்திருந்தாலும், இன்றும் தமிழ் மொழிக்குண்டான காதலர்களும், அறிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 அந்த அந்த மாநிலத்தில் வசிக்கும் பெருவாரியான மக்கள் பேசும் மொழியே   ஆட்சி  மொழி என பட்டியல் எண் 345 அறிவித்துவிட்டதால் தமிழ் மொழி தமிழகத்தின் பிரதான மொழி என பிரகடனப் படுத்தப்பட்டது. அறுபதுகளில் லால் பகதூர் சாஸ்த்ரியின் அரசு ஹிந்தியை தேச மொழியாக அறிவித்ததை தொடர்ந்து  நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்வைத்தே காமராஜர் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது வெற்றி கொண்டு தி மு க தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது வரலாறு.

தமிழர்கள் வேறு மொழியை கற்பதை இங்கு யாரும் எதிர்க்கவில்லை. வேறொரு மொழியை பலவந்தப்படுத்தி திணிக்க முற்படும்போது தான் எதிர்க்கவேண்டி இருக்கிறது. அவரவர் தனி விருப்பத்திற்கேற்ப எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் அவரவர்களுக்கு உண்டான வாய்ப்புகளை பொறுத்தே அமையட்டும். ஆனால் ஹிந்தி மொழி கற்காவிட்டால் இந்தியனே அல்ல என்ற போக்கு பாசிசத்தின் அடையாளத்தையே குறிக்கிறது.

காலம் காலமாக அந்தந்த மாநிலத்தின் பிரதான மொழியே ஆட்சி மொழி என்றும் தொடர்பு மொழியாக ஆங்கிலம் என்றும் இருந்து வந்த சூழலை  இன்று எதற்காக மத்திய அரசு மாற்ற எத்தனிக்க நினைக்கிறது என்பதை ஆராய வேண்டும்.

மதம் என்பது நம்பிக்கையை சார்ந்தது. யாருடைய நம்பிக்கையையும் யாரும் எளிதாக தகர்த்து விட முடியாது.உண்மையான மதமாற்றம் என்பது மனம் மாறினால் மட்டுமே இயலும். பணம் கொடுத்தோ பால் டின் கொடுத்தோ, வன்முறையாலோ ஒருவரின் மதத்தை மாற்றி விட முடியாது. நம்பிக்கைகளை அழித்து விட முடியாது.  

மொழி என்பது ஒரு கலாசாரம். வாழ்வியல் முறை. ஒரு அரசாங்கமே மொழியின் வழியால் தான் இயங்குகிறது. அரசாங்கம் தங்கள் குடிமக்களுக்கு புரியாத மொழியில் அரசானை அறிவிக்கப் படும் என்பதும், அதனை புரிந்துகொள்ளவேண்டும் என்றால் அந்த மொழியை அறிந்து கொள் என்றும் அறிவிப்பது பாசிசத்தின் அடையாளம் அன்றோ? அரசாங்கத்துக்காக மக்களா? அல்லது மக்களுக்காக அரசாங்கமா?

ஹிந்தியோ, மலையாளமோ, கன்னடமோ, தெலுகோ, பிரெஞ்சு மொழியோ  தனிப்பட்ட முறையில் கற்பது அவரவர் விருப்பம். அதற்காக ஒரு மொழியை வலிந்து திணிக்க வேண்டாம் என்பதே தமிழ் மொழியாளர்களின் கருத்து.

வடநாட்டு ஊடகங்கள், ஹிந்தியை தேச மொழியாக அங்கீகரிப்பதை எதிர்க்கும் தமிழர்களை எகத்தாளத்தோடு  அணுகுகிறார்கள். அதற்காக அவர்கள் சிறுவர்களை அழைத்து பேட்டி  என்ற பெயரில் சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த சிறுவர்கள் சொல்வது, 'என்றோ தான் செல்லபோகும் வட  இந்தியாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஹிந்தி தவிர வேறு ஒன்றும் பேசுவதில்லை அதற்காக ஹிந்தி தேவை என்று. தமிழ் நாட்டிற்கு வரும் வட இந்தியர்கள் தமிழ் கற்றுக் கொண்டா தமிழகம் வருகிறார்கள்?  அவர்களுக்கு தேவை என்றால் தமிழகம் வந்தபின் தமிழ் கற்றுக் கொள்வதில்லையா?

ஏற்கனவே ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என எண்ணும் பெற்றோர்களால், எங்கள் குழந்தைகளை மேற்கத்திய மொழி ஒன்றிற்கு காவு கொடுத்துவிட்டோம். மேலும் ஒரு மொழியை திணித்து தமிழ் வாழ தடை போடாதீர்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...