Monday, December 31, 2012

திரைசிற்பிகள் - 3 ரோமன் பொலன்ஸ்கி


உலக சினிமாவின் மறுக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் ரோமன் பொலன்ஸ்கி . அவரது படங்கள் திரை உலக ஜாம்பாவானான ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் படங்களைப் போல உள்ளது என சொல்லபட்டாலும், ஹிட்ச்காக் போலல்லாது வெவ்வேறு ஜானர்களில் இவர் படங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறார். இவர் படங்கள் பெரும்பாலும், கிரைம் த்ரில்லர் வகையை சார்ந்தவை. ஆனால் இவரது த்ரில்லர்கள், சாதரணமான கதைகளாக இல்லாது, மாடர்ன் சிந்தனைகளுடனான மாற்று சினிமாக்களாகவே இருந்திருக்கிறது.உலக வாழ்கையின் சாதாரண  நிகழ்வுகளும், அதன் அடியாழத்தில் புதைந்திருக்கும் வக்கிரங்களை இவரின் படங்கள் பேசிக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் முன் பாரிசில் பிறந்த ரோமனின் குடும்பம் பாரம்பரியமான யூத இனத்தை சார்ந்தவர்கள். ரோமன் பிறந்த பிறகு போலந்துக்கு குடி பெயர்ந்தவர்கள், இரண்டாம் உலகப் போரின்போது நடந்த இனப் பயங்கரவாதத்துக்கு இவரது தாய் பலியானார்.ரோமன் தனது சிறு வயதில் இனவாதத்தில் இருந்து தப்பிக்க வேறு வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தபடியே இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலவற்றை, தனது 'தி பியானிஸ்ட்' படத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போரின் பின்னே, தனது கலை வாழ்க்கையை,'சிறுவர்களின் வானொலி நிகழ்ச்சியான 'தி மேரி காங்' மூலம் ஆரம்பித்தார். பின்னர் ஒரு நடிகனாக 'தி சன் ஒப் ரெஜிமெண்ட்' படத்தில் நடிக்க அறிமுகமாக.. பின்னர் உலக புகழ் பெற்ற லாட்ஸ் (LOTZ) பள்ளியில் திரைப்பட கல்வி பயின்றார்.

1962 இல் இவர் எடுத்த 'தி நைப் இன் தி வாட்டர் ' (The Knife In the Water')
திரைப்படம், உலக திரைப்பட அரங்கில் இவரது இருப்பை தெரியப்படுத்தியது.போலிஷ் மொழியில் எடுக்கப்பட்ட அந்தப் படம், வெளிநாட்டு பட வரிசையில் சிறந்ததென ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது. மீண்டும் இவர் ஹாலிவூட் சென்று இயக்கிய, ரோஸ் மேரிஸ் பேபி என்ற படத்துக்கு சிறந்த திரை கதை ஆசிரியருக்கு இவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டபோது ஹாலிவூட் உலகம் இவரை திரும்பி பார்த்தது.

1974 இல் இவர் இயக்கிய 'சைனா டவுன் ' என்ற திரைப்படத்திற்கு பனிரெண்டு ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டன. திரைக்கதைக்காக ராபர்ட் டவுன் ஆஸ்கார் விருது வென்றார். உலகமே இவர் ஒரு உலக திரை உலக சிற்பி என்பதை புரிந்து கொண்டது. விருதுகளுக்கான பரிந்துரை மட்டுமன்றி. இவர் இயக்கிய 'தி பியானிஸ்ட்' என்ற திரைப்படம் ஒரு இசை கலைஞனின் வழியாக இரண்டாம் உலகப்போரின் அவலங்களை உலகுக்கு உணர்த்தியது. அந்த படத்துக்காக, சிறந்த இயக்கத்துக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றார் பொலன்ஸ்கி.

திரை உலகில் வெற்றி பெற்ற இவரது சொந்த வாழ்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை. சிறு வயதில் தாயை யூதர்களுக்கெதிரான இனப்போரட்டத்துக்கு பறிகொடுத்த பொலன்ஸ்கி தான் இனக்கலவரங்களில் இருந்து தப்பிக்க, ஊர் ஊராக பயணப்படுபவராக இருந்தார். அவர் தன்னுடன் ஒரு படத்தில் நடித்த ஷரன் டேட் என்ற நடிகை மணம் புரிந்துகொண்டார்.

1970, ரோமன் போலன்ஸ்கி லண்டன் சென்றிருந்த போது, சார்லஸ் மேன்சன் பாமிலி என்ற இனவாதக் குழுவால் எட்டரை மாத நிறைமாத கர்ப்பிணியான ஷரன் டேட் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், குத்தி கொல்லப்பட்டார். 1977 இல் ஒரு பதிமூன்று வயது பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக அவரை கைது செய்ய போலீஸ் தேடியதும், ஐரோப்பா சென்று லண்டன் நகரத்தில் சென்று வசிக்க ஆரம்பித்தார். இன்றும் அந்த வழக்கினால் அவரை தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க போலீஸ். தற்போது அவர் சுவிட்செர்லாண்டில் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் சம்மததினுடனேயே அந்த உறவு ஏற்பட்டது என்பது அவர் வாதம். ஒரு படைப்பாளிக்குரிய பலவீனங்களில் அவர் மாறிக்கொண்டு பரபரப்பு செய்திகளின் குழந்தையாய் அவர் வாழ்ந்துவந்தாலும், அவரது திரைப்படங்களில் அவர் கொண்டு வந்துள்ள படைப்புத்திறன், அவரது சொந்த வாழ்கயினால் என்றும் பாதிப்படைந்ததில்லை. அவரது சில நுணுக்கமான, அற்புதமான திரைப்படங்கள் சிலவற்றை பார்க்கலாம்.


ரோஸ்மேரிஸ் பேபி.


ரோஸ்மேரி மற்றும் கய் இருவரும் நியூ யார்க்கின் அபார்ட்மெண்ட் ஒன்றில் குடி ஏறுகிறார்கள். அவர்களை சுற்றி அமானுஷ்யமாய் ஏதேதோ நடக்கிறது. கய் ஒரு நடிகன். அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு வயதான தம்பதியிடம் கய் நட்பு கொள்கிறான். இறங்குமுகத்தில் இருக்கும் அவனது மார்கெட், திடீரென உயர்கிறது. திரை உலகத்தில் இருக்கும் அவனது எதிரியின் கண் பார்வை பறிபோகிறது. இந்த சமயத்தில் ஒரு நாள் ஒரு விபரீத கனவு காணும் ரோஸ்மேரி கருவுருகிறாள். அப்போது அந்த வயதான தம்பதி அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள ரோஸ் மேரிக்கு அவர்கள்த அதீத கவனிப்பு மற்றும் அவர்களின் அதிகாரம் கண்டு மிரளுகிறாள். கடைசியில் தனது குழந்தைக்கு இருக்கும் ஆபத்தை உணர்கிறாள். ஹாலிவூடில் பொலன்ஸ்கி இயக்கிய இப்படம், பெரும் வரவேற்ப்பை பெற்றதுடன் ஒரு ஆஸ்கார் விருது மற்றும் பதினோரு இதர விருதுகளை வென்று ரோமன் போலன்ஸ்கிக்கு சிவப்பு கம்பளம் விரித்தது ஹாலிவூட்.

சைனா டவுன்


ஹாலிஸ் முல்றாய் எனும் லாஸ் ஏஞ்சலிஸ் நகர நீர் கட்டுப்பாடு வாரிய பொறியாளரின் மனைவி, துப்பறியும் நிபுணனான ஜே ஜே கிட்சை தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா என அறிந்து வர சொல்கிறாள்.கிட்சும் ஹாலிசை பின் தொடர்ந்து அவர், வேறொரு சின்ன பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டு பிடித்து புகைப்படம் எடுக்கிறான். அவனை அறியாமல் அந்த புகைப்படங்கள் செய்தி தாள்களில் வெளியே வந்துவிட, அவனை தொடர்பு கொள்கிறாள் எவெலின். அவளே ஹாலிசின் உண்மை மனைவி என்று அறிகிறான் கிட்ஸ். அவள் அந்த கேசை விட்டு விடும்படி சொல்ல, வேறொரு நாளில், ஹாலிஸ் அந்த நீர்தேக்கி மையத்தில் கொலை செய்யப்பட்டு கிடக்க, அதனை செய்தது எவெலின் தான் என கிட்ஸ் சந்தேகப்பட, பின் வரும் திடுக்கிடும் திருப்பங்களால் படம் பரபரப்பாக சென்று யாரும் எதிர்பாராத உச்சக்கட்டத்தை அடைகிறது. படத்தில் கிட்சாக நடித்திருக்கும் ஜாக் நிக்கல்சன், தனது தனிப்பிட்ட நடிப்பினால் தூள் கிளப்பி இருப்பார். இப்படம், பனிரெண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது வாங்கியது. அதை தவிர மேலும் இருவது விருதுகளை வாங்கிக் குவித்தது.

டெத் அண்ட் தி மெய்டன்.


வக்கீல் ஜெரார்டோ , அவனது மனைவி பவ்லினா எஸ்கோபார், மற்றும் டாக்டர் மிரண்டா, என்ற இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் படம் முழுக்க. ஆனால் படம் முழுவதும் நீங்கள் உங்கள் இருக்கை நுனியில் தான் அமர்ந்திருப்பீர்கள். ஒரு நாள் இரவு ஒரு புயலின் நடுவில் மாட்டிகொண்ட டாக்டர் மிரான்டாவை தனது இல்லத்துக்கு அன்றிரவு தங்க அழைத்து வருகிறான் ஜெரார்டோ.அப்போது டாக்டர் மிரண்டாவின் குரலை கேட்டதும்,அவனை துப்பாக்கி முனையில் சிறை பிடிக்கும் பவ்லினா, அவன் ஒரு கொடியவன் என்றும், அதற்க்கு முந்தய ஆட்சியில் தன்னை கண்ணை கட்டிவிட்டு டார்ச்சர் செய்தான் என்றும் வார காலமாக தன்னை கற்பழித்தவன் என்றும் குற்றம் சாட்ட, 'இல்லை' என்று டாக்டர் மிரண்டாவும்,'இருக்காது' என்று அவள் கணவன் ஜெரார்டோ வும் மறுக்கிறார்கள். உண்மை என்ன என்பதை கிளைமாக்ஸ் வரை இந்த மூன்று கதாபத்திரங்களை வைத்தே சிறிதும் தொய்வில்லாமல், சொல்லி இருக்கிறார் போலன்ஸ்கி. பவ்லினாவாக நடித்திருக்கும், சிகோர்னி வீவரும், டாக்டர் மிரண்டாவாக, காந்தக் குரலில் மயக்கும் பெண் கிங்ஸ்லீயும் கலக்கி இருக்கிறார்கள். அவர்களது நடிப்பே நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது.

தி பியானிஸ்ட்


வ்லாடிஸ்லா ஷ்பில்மன் ( Władysław Szpilman) என்ற ஒரு பியானோ இசை கலைஞனின் உண்மை கதையையும், தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் தொகுத்து ரோமன் போலன்ஸ்கி உருவாகின திரைக் காவியம் தான், 'தி பியானிஸ்ட்'. ஷ்பில்மன் போலந்தை சேர்ந்த ஒரு யூதன். உலக புகழ் பெற்ற பியானோ கலைஞன். இரண்டாம் உலகப்போரின் போது, யூதர்களை வேட்டையாடும் ஜெர்மானியர்கள், ஸ்பில்மானின் குடும்பத்தையும் விட்டு வைக்க வில்லை. யூதனல்லாத ஒரு குடும்பத்தின் உதவியுடன் ஷ்பில்மன் தப்பிப்பது தான் பதைபதைக்க வைக்கும் இந்தப் படத்தின் கதை.வ்லாடிச்லா ஷ்பில்மெனாக வாழ்ந்திருப்பார் அட்ரியன் ப்ரோடி. அவருக்கு ஆஸ்கார் விருதும், ரோமன் போலன்ஸ்கி க்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்காரும் படத்தின் திரைக்கதைக்கும் கிடைத்தது. படத்தில் உள்ள ஒவ்வொரு போர்கள காட்சியும், சிதைந்து போன ஓவியமாக காட்சி அளிக்கும் சிறப்பு இந்த திரைப்படத்துக்கு உண்டு.

33 வருடங்களுக்கு முன் தான் மாட்டிகொண்ட அந்த கற்பழிப்பு குற்றசாட்டு உண்மை இல்லை என தொடர்ந்து மறுத்து வரும் போலன்ஸ்கி, அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் நடந்தது எனினும் அவளுக்கு அப்போது பதிமூன்று வயது என்பதால், அந்த குற்றத்தின் துக்கம் தன்னை தொடர்ந்து கொண்டே இருப்பதாக கூறியுள்ளார். அவரின் குற்றத்துக்கு வக்காலத்து வாங்க வில்லை. யார் கண்டது, அதனையும் கூட ஒரு படமாக அவர் எதிர்காலத்தில் எடுக்கலாம்.

ஒரு கலைஞனுக்கு சொந்த வாழ்வில், பல சோகங்கள், பல நிகழ்வுகள் இருந்தாலும், அவனது கலை பயணம் தடையில்லாமல் தொடரவே செய்கிறது. சந்திக்கும் இடர்களையும் தனது எதிர்காலப் படங்களுக்காங்க கச்சா பொருள்களாக மாற்றிக் கொள்ளும் தன்மை சில பெரும் திரைச் சிற்பிகளாக மட்டுமே முடியும் அத்தகையோரில் ரோமன் போலன்ஸ்கி க்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

-நன்றி. soundcameraaction.com க் காக நிலாமுகிலன்

Monday, December 24, 2012

திரைச்சிற்பிகள் - 2 அலெஜாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரித்தோ


'Innocence can be more powerful than experience,
Too much knowledge and analysis can be paralysis."
-Alejandro Gonzalez Inarritu.

சென்ற வாரம் மஜீத் மஜிதி என்ற மனிதத்தின் மெல்லிய உணர்வுகளை ஊடுருவ வைக்கும் திரைசிற்பியை சிலாகித்தோம். இந்த வாரம் அதே போல மனிதத்தை சொல்லும் திரை காவியங்கள் படைத்த அலெஜாண்ட்ரோ கொன்சாலஸ் இன்னாரித்தோ என்ற மேசிக்கன் படைப்பாளியை பற்றி பேச போகிறோம். இவரது படங்கள் மஜீத்தின் படங்களை போல மனிதத்தின் மெல்லிய உணர்வுகளை தொடுவது அல்ல. மனிதத்தின் வக்கிரத்தை, வருத்தத்தை, போராட்டத்தை, தோல்விகளை இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்க்கிறது.

மெக்ஸிகோவிலிருந்து புறப்பட்ட மிகச் சிறந்த திரை மொழியாலர்களுள் ஒருவர் இன்னாரித்தோ  இவரது திரைப்படங்கள் ஒரு புதிய திரைமொழியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. என்றுமே பரீட்சார்த்த முயற்சிகளுக்கு இவர் தயங்கியதே இல்லை.இவரது படங்கள் அனைத்துமே நான் லீனியர் அல்லது பின் நவீனத்துவம் என சொல்லப்படும் வகையை சேர்ந்தவை. இவரது படங்கள் பெரும்பாலும் சோகமானவை. மிகவும் ஆழமானவை. இவரது ஒவ்வொரு படமும் நம்மை உலுக்கிப் போடும். வாழ்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் எதிர்கொள்ள வைக்கும்.

                                                   குவில்லர்மொ அர்ரியாகா

ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத கதைகளை திரையில் ஓடவிட்டு ஒரு மையப் புள்ளியில் இணைக்கும் திரைக்கதை இவரிடத்தில் இருந்தே முழுமையாக துவங்கியது. குவெண்டின் டரண்டினொ இந்த உத்தியை தனது உலகப் புகழ் பெற்ற திரைப்படமான பல்ப் பிக்ஷனில் தொட்டு சென்றிருப்பார். இன்னாரித்தோவும் தனது ஆஸ்தான திரைக்கதை ஆசிரியர் குவில்லர்மொ அர்ரியாகாவும் (Guillermo Arriaga)  இணைந்து செதுக்கிய திரை சிற்பங்கள் ஒவ்வொன்றும் திரைமொழியில் வேறு வேறு பரிமாணங்களை காட்டின.

1963 வருடத்தில் மெக்சிகோவின், மெக்சிகோ சிட்டியில் பிறந்த இன்னாரித்தோ ஒரு நடத்தற வாழ்கையை வாழ்ந்தவர். இசையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர், மெக்சிகோவில் ஒரு வானொலி நிலையத்தில், டீ ஜெ வாக சில காலம் பணியாற்றினார். அவரது இசையின் மீதுள்ள ஆர்வம் அவரை அந்த வானொலி நிலையத்தின் இயக்குனராக உயர்த்தியது. வேலையில் இருக்கும்போதே ஆறு மெக்சிகன் திரைப்படங்களுக்கு இசை அமைத்த அனுபவம் அவருக்கு உண்டு. அதனாலேயே, அவரது படங்களில் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதை காணலாம். அவரது பாபேல் திரைப்படம், இசைக்காக ஆஸ்கர் விருது வாங்கியது. இசையில் சிறந்த ஞானம் இருப்பினும், அவரது எந்த திரைப்படங்களுக்கும் அவர் இசை அமைத்ததில்லை. அவரது அனைத்து படங்களுக்கும் இசை அமைத்தவர், குஸ்தாவோ சந்தாவோலல்லா (Gustavo Santaolalla) என்ற அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த சிறந்த இசை அமைப்பாளர். இவர் Brokeback mountain படத்துக்காக 2006 மற்றும் பாபேல் படத்துக்காக 2007 ஆகிய இரண்டு வருடங்களுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருதை வென்றவர்.

தொன்னூறுகளில் ஜீட்டா பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு சினிமா கம்பெனி துவங்கி, தொலைக்காட்சி சானல்களுக்கு குறும்படங்கள் எடுத்து தள்ளி கொண்டிருந்தார். அச்சமயத்தில் தான் இவரது முதல் மூன்று படங்களில் திரைக்கதை ஆசிரியராக வேலை செய்த குவில்லியர்மோர் அர்ரியாகா வின் நட்பு இவருக்கு கிடைக்க, நமக்கு அமோறேஸ் பெர்ரோஸ் (Amores Perros) என்ற அற்புத திரைக்காவியம் கிடைத்தது.

இன்னாரித்தொவின் திரைச்சிற்பங்களை சிறிது பார்க்கலாம்.

அமோறேஸ் பெர்ரோஸ்(Amores Perros):


தனது திரைகதை ஆசிரியர் குவில்லர்மொ அர்ரியாகாவோடு சேர்ந்து மூன்று வருடங்கள் உழைத்து 36 முறை மாற்றி எழுதி உருவாகிய படம் தான் அமோறேஸ் பெர்ரோஸ். மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் கதை. ஒரு விபத்து என்ற மையப் புள்ளியில் இணைகிறது. எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? ஆம். நம்ம ஊரு மணிரத்னம் இதே ஸ்டைலை காபி செய்து தான் தனது ஆய்த எழுத்தை உருவாக்கினார். இந்த படத்தில் வரும் முதல் கதை, நாய் சண்டையை பற்றியது. மெக்ஸிகோ நகரத்தில் நாய் சண்டை நடக்கும் இந்த இடம், பாதுகாப்பற்றது. ஆனால் அந்த இடத்தில் தான் தனது படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பினார் இன்னாரித்தோ.முதல் நாளில், நாய் சண்டை நடக்கும் வீட்டின் வெளியே, அவரையும் அவரது படக்குழுவினரையும் சுற்றி வளைத்தது பதின்ம வயது இளைஞர் கும்பல் ஒன்று. அவர்கள் அனைவரும் போதை இருந்தனர். போலீசுக்கும் போக முடியாது. அவர்களையும் கொன்று பட குழுவினரையும் கொன்று விடுவார்கள். பணமும் அவர்களுக்கு தேவை இல்லை. பின் என்னதான் வேண்டும் அவர்களுக்கு. 'இது எங்க ஏரியா. எங்கள் இடத்தில் நீங்கள் படம் பிடிக்க வேண்டுமானால், எங்களை கேக்க வேண்டும். கேட்டார்கள், அவர்களும் விட்டார்கள். மட்டுமல்ல, இவர்கள் படப்பிடிப்பு முடியும் வரை அவர்களே படகுழுவினருக்கும் பாதுகாவலாய் இருந்தார்கள்.

கதை ஒன்று:
அக்டோவியோ, ராமிரோ இருவரும் சகோதரர்கள். ரோமிரோவின் மனைவி சூசனின் மீது அக்டோவியாவுக்கு காதல். ரோமிரோவின் நாயை நாய் சண்டைக்கு பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான பணம் வெல்கிறான் அக்டொவியோ. சூசனிடம். எல்லாவற்றையும் விட்டு விட்டு தன்னுடன் வந்து விடும்படி வேண்டுகிறான் அக்டோவியோ. சூசனோ, தான் ரோமிரோவை மட்டுமே விரும்புவதாகவும் அவனை விட்டு வர விருப்பம் இல்லை என்றும் சொல்லி விடுகிறாள். ரோமிரோவின் நாயிடம் தனது நாய்களை தோல்வியை தழுவ, கடைசியாக ஒரு நாய் சண்டைக்கு அழைப்பு விடுகிறான், ஜராக்கோ. அந்த சண்டையிலும் தனது நாயை குதறிப்போடும் அக்டோவியோவின் நாயை சுட்டுவிடுகிறான் ஜராகோ. அவனை கத்தியால் குத்திவிட்டு, நாயை எடுத்துக் கொண்டு ஒரு காரில் தனது நண்பனுடன் தப்பிக்கும் ஆக்டோவியோ அந்த கோரமான கார் விபத்தில் சிக்கிக் கொள்கிறான்.

கதை இரண்டு:
டேனியல் தன்னை விட வயது குறைந்த வலேரியா என்ற ஒரு அழகான மாடலுக்காக, தனது மனைவி குழந்தையை விட்டு பிரிந்து வருகிறான். வலேரியாவுக்காக ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி பரிசாக அளிக்கிறான். அந்த அப்பார்ட்மெண்டின் ஜன்னல் வழியே உள்ள ஹோர்டிங்கின்ல், தனது அழகான கால்கள் தெரிய வலேரியா புகைப்படம் தரித்த ஒரு விளம்பரம். அத்துடன் ஒரு அழாகான குட்டி நாயையும் பரிசாக அளிக்கிறான் டேனியல் அதனை அவள் கொஞ்சி தள்ளுகிறாள். இந்த அழகான நாளை கொண்டாட அவனுக்காக வைன் வாங்க செல்லும் வலேரியா அந்த விபத்தில் சிக்க அவளது கால் சிதைந்து விடுகிறது. அவளை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறான் டேனியல். அவளோ உந்து கட்டைகள் வைத்தபடி அப்பார்ட்மெண்டயெ  சுத்தி சுத்தி வருகிறாள். அவர்களது புதிய அபார்ட்மெண்டின் தரையில் இருக்கும் ஓட்டை வழியே அவளது நாய் ரிச்சி கீழே சென்று மாட்டிக்கொள்ள, டேனியல் வேலைக்கு சென்றதும், தனக்கு இருக்கும் ஒரே துணையான ரிச்சியை தேடி தருமாறு டேனியல்லை கேட்க அவனோ வேலை பளுவில் அதனை கவனிக்காமல் விட்டு விட, தன்னை உதாசீனப்படுத்துவதாக அவள் நினைக்க, அவனோ தனது பழைய மனைவியை தேடி போக நினைக்க, ஒரு நாள் அவன் வீட்டுக்கு வந்தும் அவள் தனது படுக்கை அறை கதவை திறக்காமல் இருக்க, அவன் உடைத்து திறக்க,அவள் தரையில் விழுந்து கிடக்கிறாள். அவளை பரிசோதிக்கும் டாக்டர், அவள் கால் முற்றிலும் உருக்குலைந்து விட்டதால், காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட, டேனியல், கவலையுடன் ஜன்னலுக்கு வெளியே, வலேரியாவின் ஹோர்டிங் வெள்ளையடிக்கப் பட்டு ' போர் ரெண்ட்' என்ற வாசகத்தை பார்த்தபடி நிற்கிறான்.

கதை மூன்று: எல் சிவோ, குப்பை பொறுக்குபவன். சாலையில் நடக்கும் அந்த விபத்தை பார்கிறான், ஓடி சென்று அக்டோவியோவுக்கு உதவுபவன், அவனது பர்சை திருடிக் கொண்டு குண்டடி பட்டு கிடக்கும் அவனது நாய் கோபி யையும் அழைத்து கொண்டு சென்று விடுகிறான். அடிப்படையில் அவன் காசுக்கு கொலை செய்பவன். அவனிடம் ஒருவன் பணம் கொடுத்து தனது பிசினஸ் பார்ட்னரை தீர்த்துக் கட்ட சொல்ல, அவனை கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைப்பவன், தன்னை கொலை செய்ய சொன்னவனையும் வரவழைத்து அதே இடத்தில் கட்டி வைக்க, அப்போது தான் அவனுக்கு தெரிகிறது, அவர்கள் பிசினஸ் பார்ட்னர் மட்டுமல்ல அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று. இடையே அவனது வளர்ப்பு மகளை தேடி புறப்படுகிறான்.

இந்தத் திரைப்படம், இதுவரை ஐம்பத்தி ஐந்து விருதுகளை உலக அளவில் வென்றிருக்கிறது. ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப் பட்டது.

21 கிராம்ஸ்.

பால், ஒரு செயின் ஸ்மோக்கர். சாவின் விளிம்பில் இருக்கும் அவனுக்கு ஒரே வாய்ப்பு மாற்று இருதயம். கிறிஸ்டினாவின் கணவனும் குழந்தைகளும் வாகிங் செல்லும்போது ஒரு கார் அவர்களை மோதிவிட, குழந்தைகள் இறந்துவிட, கோமாவில் இருக்கும் அவளது கணவனின் இதயம் பாலுக்கு பொறுத்த படுகிறது. பால் தனக்கு இதயம் தந்தவனின் குடும்பத்தை காண புறப்பட, குடும்பத்தை இழந்த தவிப்பில் இருக்கும் கிறிஸ்டீன உடன் இவனுக்கு தொடர்பு ஏற்படுகிறது அவளோ தன குடும்பத்தை குலைத்த அந்த கார் ஓட்டுனரை கொலை செய்ய வேண்டும் என உத்தரவிட, அவனைத் தேடி புறப்படுகிறான். கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியவன் ஜாக். முன்னாள் குற்றவாளி.இப்போது கிறித்துவ மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு மனம் மாறி தவறி போகும் இளைஞர்களை நல்வழிப்படுத்தவனாக வாழ்கிறான். இந்த விபத்து இவன் குடும்பத்தையும் புரட்டிப் போட, அவனே காவல் நிலையம் சென்று சர்ரண்டர் ஆகிறான். 21 கிராம்ஸ் என்பது, நாம் இறக்கும் தருவாயில், நமது உடலில் இருந்து குறைவாகும் நமது எடை. நமது ஆத்மாவின் அளவாக குறிப்பிடப் படுகிறது.

ஒவ்வொரு காட்சியும் வரிசையாக இல்லாமல், ஜம்புள் முறைப்படி வெவ்வேறு வரிசையில் அமர்ந்திருந்தாலும் படம் முடியும்போது மொத்த கதையும் நமக்கு புரியும்படி அமைந்த திரைக்கதையின் சிறப்பு.  இந்த படத்துக்கு க்ரிஸ்டீனா வாக அற்புதமாக நடித்த நவமி வாட்சுக்கும் ஜாக்காக நடித்த பெனிசியோ டெல் டோராவுக்கு சிறந்த துணை நடிகர் விருதுகாகவும் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டார்கள். இந்த படம் உலக அளவில் வாங்கிய மொத்த விருதுகள் 28.

பாபேல்.

ஒரு ஆடு இடையன், தனது ஆடுகளை தின்று விடும் ஓநாய்களை விரட்ட, ஒரு துப்பாக்கியை ஒரு மொரோக்கோ நாட்டை சேர்ந்தவனிடம் இருந்து வாங்குகிறான் அதனை தனது ஆடுகளை கவனித்து கொள்ளும் தனது மகன்களிடம் கொடுக்கிறான். துப்பாகியால் உந்தப்பட்ட இளைய மகன், சும்மா குறி இல்லாமல் சுடுகிறான். அப்போது அங்கு வந்து கொண்டிருக்கும் ஒரு டூரிஸ்ட் பஸ்சின் கண்ணாடியை உடைத்து கொண்டு ஒரு தொட்ட பாய்ந்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க தம்பதியில் மனைவியை பதம் பார்க்கிறது. அவர்கள் ஆபிரிக்காவில் சுற்றுபயம் மேற்கொண்டிருக்க, அவர்களது குழந்தைகளை கவனித்து கொள்கிறாள், ஒரு மெக்சிக்கன் ஆயா.அந்த துப்பாக்கி, ஒரு ஜப்பாநியனிடம் இருந்து வாங்கப்பட்டதாக அறியப்படுகிறது. இப்படத்தில், அந்த ஆட்டு இடையனின் குடும்பம், அமெரிக்க தம்பதிகள், அவர்கள் குழந்தையை கவனித்துக் கொள்ளும் மேசிக்கன் ஆயா, அந்த துப்பாக்கியை அளித்த ஜப்பானியனின் வாய் பேச முடியாத மகள் என நான்கு கதைகள், முன்னும் பின்னும் பொய் வருகிறது. மிக அற்புதமான பின் நவீனத்துவ திரைக்கதை மாறும் சிறந்த இயக்கத்துடன் வந்த இந்த திரைப்படம், இசைக்கு ஆஸ்கார் விருது பெற்றதுடன், உலக அரங்கில் 37 விருதுகளை  வென்றுள்ளது.
பியுட்டிபுள்

பாபேல் படத்தின்போது ஏற்பட்ட மனஸ்தாபத்தால், தனது ஆஸ்தான திரைக்கதை எழுத்தாளர் அறியகாவை விட்டு பிரிந்து, நிகோலஸ் மற்றும் அர்மண்டோவுடன் எழுதிய திரைக்கதை தான் பியுடிபுள். பராஸ்டேட்  கான்சரால் அவதி படும் உக்ஸ்பாலுக்கு போதைக்கு அடிமையான மனைவி மற்றும் இரு குழந்தைகள். மனைவியால் தனது குழந்தைகளை கவனிக்க முடியாது என்று அறிந்து கொண்ட உக்ஸ்பால், செனெகல் நாட்டில் இருந்து தனது வீட்டில் வேலை செய்யும் ஏகே விடம் தனது பணம் அனைத்தையும் கொடுத்து தனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள சொல்கிறான். இன்னாரித்தோ எடுத்த திரைப்படங்களிலேயே, இந்த திரைப்படம் மட்டுமே சிக்கலில்லாத நேர் கோட்டில் பயணிக்கிற திரைக்கதையை கொண்டது. அறியாகவின் பிரிவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.இப்படத்தில் உக்ஸ்பல்லாக நடித்திருக்கும் ஆவியே பார்தேம் (javier Bardem), கான்செர் நோயாளியாக கலக்கி இருக்கிறார். இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப் பட்டது. இந்த படத்துக்கு உலக அளவில் மொத்தம், பதினைந்து விருதுகள் கிடைத்தன.


இன்னாரித்தோ இதுவரை இயக்கியுள்ள படங்கள் நாலுதான். அவரது படங்கள் மொத்தமாக குவித்த விருதுகளோ நூற்றி ஐம்பதுக்கும் மேல். அவருடைய ஒவ்வொரு படமும், மனித வலியை பதிகிறது. இதயத்தின் அடியாளம் வரை சென்று அமர்ந்து கொள்ளும் உணர்வுகளை இவரது படம் தருகிறது. பாலியலை அதன் அழகியலோடும் இவரது திரைப்படம் முன்வைப்பதால், இவரது படங்கள் அவைகளை எளிதாக கலந்து போகிறது. இவரது படத்தின் திரைக்கதைகள் எளிதானதல்ல. குவெண்டின் டொரொண்டினொவை போல, கிறிஸ்டோபர் நோலனை போல ஒவ்வொரு படைப்பும் பார்வையாளனை சிந்திக்க வைக்கிறது. இவரது படத்தினை சிலாகிக்கவும் வைக்கிறது.  ஒவ்வொரு படமும் நம்மை கனக்க வைப்பது நிச்சயம். அதுவே அவரது வெற்றி எனவும் நான் நினைக்கிறேன். 

இவர் உலக அரங்கில் பேசப்படும் இயக்குனராக இருந்து கொண்டிருப்பதற்கு பின் வரும் காரணத்தை கூறுகிறார். அதுவே அவரது வெற்றிக்கும் காரணமாக இருக்கிறது. 

I think that in order to be a film director, one has to be a warrior who shouldn't be defeated by the daily onslaught of problems. We are all hanging by threads and are the mercy of various elements, if one fails the whole flight could come crashing down, and like a good warrior I'm not going to break down.

-நன்றி. soundcameraaction.com க் காக நிலாமுகிலன்Saturday, December 15, 2012

திரைச்சிற்பிகள் -1 (மஜீத் மஜிதி )பனிரெண்டு வயதில் நாடகத்தின் மேல், நடிப்பின் மேல், எனக்கு ஈர்ப்பு வந்தது.  ஒரு கட்டத்தில், என் முதல் படம் இயக்க சந்தர்ப்பம் வாய்த்த போது, அந்த அனுபவங்களை பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு மிகவும் கடினமாக இருந்தது எனது முதல் படம் தான். என்றாலும், ஒரு இயக்குனரின் சிறந்த படம் தான், அவனது முதல் படமாக கொள்ள வேண்டும். எவ்வளவு தடைகளை  தாண்டி வந்தாலும்,ஒரு மோசமான படத்துக்கு எந்தக் காரணிகளும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடாது.
-- மஜீத் மஜிதி.
 
உலக சினிமா என்றாலே, முதலில் நம் நினைவுக்கு வருவது இரானிய சினிமாக்களே!. அப்பாஸ் க்ரியோஸ்தமி,மோசென் மக்மல்பாப் , அபோல்பாசில் ஜலிலி போன்ற ஜாம்பாவான்கள், காலத்தில் அழியா காவியங்கள் படைத்து உலக சினிமா வரைபடத்தில், இரானை அழுத்தமாக காலூன்ற செய்தவர்கள்.  
இவர்களின் வரிசையில், மறுக்கவோ மறக்கவோ முடியாத ஒரு திரை சிற்பி மஜீத் மஜிதி. அவரது திரைப்படங்களை தேடி தேடி சென்று பார்த்த அனுபவத்தில், அவரது ஒவ்வொரு படைப்பும், இன்றைய புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு பாடப் புத்தகமாக வைக்கலாம். இன்றைக்கும் யாரவது ஒரு குழந்தைக்கு காலனி அணிவித்துக் கொண்டிருந்தால் , எனக்கு மஜீத்தின்  'சில்றன் ஆப் ஹெவென் ' திரைப்படம் தான் மனத்திரையில் மின்னி மறையும்.
 
எம் ஜி ஆரையும் , சிவாஜியையும், ரஜினி, கமலையும் பார்த்து சலித்த எனது தாய், அமெரிக்காவில் சில்றன் ஆப்  ஹெவனை பார்த்துவிட்டு, மறுபடி மறுபடி ஐந்து முறை அவரை   பார்க்கவைத்தது, படத்தில் இருந்த பாடல்களோ, நாட்டியமோ உருக வைக்கும் காட்சிகளோ அல்ல. அப்படத்தின் குழந்தைகள், தன்  குழந்தைகளை அவளுக்கு ஞாபகப் படுத்தி இருக்கலாம். உலக சினிமாவை பற்றிய எந்த அறிவும் இல்லாத, தனக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத ஒரு நாட்டின், தனக்கு என்னவென்றே தெரியாத பாரசீக மொழியில் அமைந்த அந்த திரைப்படம் அவளை அவ்வளவு தூரம் பாதித்ததேன்றால், அந்த திரைமொழி எந்த வடிவத்தில் இருந்திருக்க வேண்டும்? 
 
மஜீத், இரானிய சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல, மெகா பட்ஜெட்டை தேடி ஓடவில்லை. சூப்பர் ஹீரோக்களை தனது படத்தில் நடிக்க வைக்கவில்லை. பயங்கரமான கதைக் களங்கள்  அவரது படத்தில் இல்லை. அவர் தனது முற்றத்தில் இருக்கும் கதைகளை, தனது கிராமங்களில், தான் சந்தித்த மனிதர்களிடம் இருந்து தான் கதைகளை எடுத்துக் கொண்டார். மெல்லிய மனித உணர்வுகளை, நமக்கே தெரியாமல் நமக்குள் புதைந்திருக்கும் மனித தருணங்களை வெளியே கொண்டு வந்தார். மேற்கத்தைய  உலகின் திரைகள் தொலைத்துவிட்ட மனிதத்தை, இரானிய திரைப்படங்களின் மூலம் ஞாபகமூட்டிக் கொண்டிருந்தன அவரது திரைப் படங்கள்.
 
மேற்கத்தைய நாடுகளின் திரைப்படங்கள் தொலைத்துவிட்ட மனிதத்தை திரையில் காட்டும் உங்களுக்கு  உங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையா? என கேட்ட ஒரு நிருபரிடம் இப்படி பதில் அளிக்கிறார் மஜீதி.

'இரான் கலாசாரத்துக்கு பெயர் போன ஒரு பழம் பெரும் நாடு. 'ஹபீஸ்,சாடி ரூமி போன்ற இலக்கியவாதிகளை உலகத்துக்கு தந்த நாடு. அவர்களின் கவிதைகளில், மனிதம் மேலாக இருக்கும்.  எனக்கு எனது கலாசாரம் மட்டுமே தெரியும். மேற்க்கத்திய உலகம் தனது கலாசாரத்தை தொலைத்துவிட்டு புதிய உலகம் நோக்கி நடைபோடுகிறது. மனிதம் பிணைந்த கலாசாரத்தில் வாழும் நாங்கள், அதனை சார்ந்து தான் எங்கள் திரைப்படங்களும் இயங்கி கொண்டிருக்கிறது. எங்களது கலாசாரம் அப்படி. என்னால் எனது நாட்டினை விட்டு வெளியே சென்று படம் எடுக்க முடியாது.'
 
திறமை சாலிகள் பலரை கொண்டிருக்கும் தமிழ் சினிமா ஏன்  இன்னமும் உலக அளவில் கவனிக்கப் படவில்லை என இப்போது புரிகிறதா? நாம் மேற்கத்திய கலாசாரம் தான் உயர்ந்தது என நினைத்து நாம் நமது மதிப்பீடுகளை விட்டு விட்டு அவர்களுக்கு தகுந்தமாதிரி தானே படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நமது பண்பாட்டையும் கலையையும் கலாசாரத்தையும் உலகத்துக்கு காடக் கூடிய திரைப்படங்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்.
 
மஜீதின் சில திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.
 
சில்றன் ஆப ஹெவென்:

 தங்கையின் அறுந்து போன ஷூவை தைத்து வருவதற்காக அண்ணன், அதனை தொலைத்து விட, குடும்ப கஷ்டத்தில் இருக்கும் அப்பாவை சங்கடபடுத்த வேண்டாம் என்று அண்ணனும் தங்கையும் தாங்கள் வேறு வேறு நேரங்களில் பள்ளி செல்லும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.காலையில் பள்ளி செல்லும் தங்கை, அண்ணனின் ஷூவை அணிந்து செல்கிறாள். மதியம் வகுப்புகளுக்கு செல்லும் அண்ணன் பாதி வழியில் தங்கையிடம் இருந்து ஷூவை அணிந்து பள்ளிக்கு செல்கிறான். இடையே அண்ணனது பள்ளியில் ஓட்டபந்தயம் வைக்கப்பட அந்த பந்தயத்தில் மூன்றாம் பரிசு அழகிய ஷூக்கள் என்று அறிவிக்கப் பட, அண்ணன் தனது இத்துப்போன ஷூவை வைத்து ஓடி மூன்றாம் பரிசு வென்று அந்த ஷூவை தன தங்கைக்கு அளிக்க நினைத்து பந்தயத்தில் கலந்து கொள்கிறான். கதை சிம்பிளாக இருந்தாலும் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்ல உதவி இருக்கும் திரைக்கதை அபாரம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த அண்ணன் தங்கையை தனது வீட்டு மாந்தர்கள் போல உணருவதால் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

கலர் ஆப் பாரடைஸ்:

 பார்வை இழந்த சிறுவனை, மனைவியை இழந்த அவன் தந்தை நிராகரிக்கிறான். அந்த சிறுவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவனுடைய பாட்டியும் அவனது சகோதரிகளும். அவனது தந்தைக்கு வேறொரு பெண்ணை மணம் முடிக்க ஆசை. ஆனால் பார்வை இழந்த மகனை உடைய அவனை மணக்க, பெண்ணின் வீட்டில் சம்மதிக்க வில்லை. எனவே அவன் தனது மகனை வெறுக்க ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் தன வாழ்கையை பாழ்படுத்திய தனது மகனையே கொல்ல நினைக்கிறான். இந்த படம் பார்ப்பவர்களின் உள்ளத்தை உருக்கி விடும். அந்த சிறுவன் முகம்மது ஆகா நடித்திருக்கும் சிறுவன் மொஹ்சென் ராமெசானி க்கு நிஜ வாழ்விலும் கண் பார்வை கிடையாது. படத்தின் வசனங்கள் மிகவும் அருமை. படத்தில் வரும் ஒரு வசனம் :'எனது டீச்சர், கடவுள் பார்வை அற்றவர்களை மிகவும் விரும்புவார் என சொல்ல, நான் பதிலளித்தேன், கடவுள் என்னை விரும்பினால் என்னை ஏன் பார்வையற்றவனாக படைக்க வேண்டும். எனக்கு பார்வை இருந்தால் நான் இறைவனை காண முடியுமே. அதற்க்கு டீச்சர் சொன்னார், கடவுள் எங்கும் இருக்கிறார், உன் விரல் நுனியில் கூட அவனை நீ காணலாம். நான் என் கைகளை வைத்து தேடிக் கொண்டே இருக்கிறேன் அவன் அகப்படவே இல்லை.' இந்த வசனம் கூறும்போது காற்றில் அலை பாயும் முகம்மதுவின் கரங்களை கண்டு நம் கண்கள் கசிவது நிச்சயம்.

பாரான்:

ஆப்கன் அகதியான லதீப் இரானில் கட்டிட வேலை செய்யும் நபர்களுக்கு டீ யும் உணவும் தயார் செய்யம் வேலை செய்கிறான். எந்த குறையும் இல்லாத ஒரு மகிழ்வான வாழ்வு வாழும் லதீபுக்கு, சுகவீனமான நஜாப் கட்டிட வேலை செய்ய முடியாததால் தனது மகன் ரஹைம்மத்தை வேலைக்கு அனுப்ப, பலகீனமான ரஹைம்மத்தால் கடுமையான கட்டிட வேலைகள் செய்ய இயலாமல் போக, லத்தீபை அந்த பணிக்கு அமர்த்திவிட்டு ரஹைம்மத்துக்கு லத்தீப்பின் வேலை கொடுக்கப்பட, அவன் மீது வெறுப்புடன் அலைகிறான் லத்தீப். ஒரு சமயத்தில் ரஹைம்மத் ஒரு பெண் என அறிந்து கொள்ளும் லத்தீப், அவள் மீது ஒரு ஈர்ப்புடன் அலைகிறான். அவள் மேல் அவனுக்கு காதல் என்பதை அவனது முகபாவனைகளை வைத்தே உணர்த்தும் யுக்தியும், ரஹஅம்மத் ஒரு பெண் என்பதை அவளது தலை முடி வைத்து காட்டும் யுக்தியும் அருமை. ஒரு மெல்லிய காதல் கதை, ஒரு பறவையின் சிறகை போல மெல்ல வருடுகிறது.

தி வில்லோ ட்ரீ :
கண் பார்வையற்ற ஒரு பேராசிரியருக்கு நல்ல மனைவி குழந்தை என்ற அழகான குடும்பம்.அவனுக்கு பார்வை திரும்ப சாத்தியம் இருக்கிறது என அறிந்து பிரான்ஸ் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள, அவனுக்கு பார்வை திரும்புகிறது. பார்வை திரும்பியதால் அவன் சில தீய எண்ணங்களால் உந்தப்பட்டு, பார்வை இல்லாமல் இருந்தபோது அவனுக்கு கிடைத்த நிம்மதியை இழந்து நிற்கிறான். படத்தில் சிலிர்ப்பூட்டும் ஒரு காட்சி, அவன் கண் பார்வை பெற்று திரும்பியவுடன், விமான நிலையத்தில் காத்திருக்கும்,அவனை கண்டதும் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில், யார் யார் எவர் என தெரியாமல் முழித்தபடி, கூட்டத்தில் அனைவரும் சிரித்தபடி அவனுக்கு கை ஆட, ஒரே ஒரு பெண் ஓரமாக அவனை பார்த்தபடி அழுது கொண்டிருப்பதை கண்டதும் 'அம்மா' என்று சொல்லும் காட்சியை வைக்க, மஜீத்துக்கு மட்டும் தான் தெரியும்.

இன்னமும், நெருப்புக் கோழி வளர்க்கும் பண்ணையில் வேலை பார்க்கும் கரீம், ஒரு சந்தர்பத்தில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நெருப்புக் கோழிகளில் ஒன்று தப்பித்துவிட, தனது மகளின் காத்து கேட்கும் கருவியை வாங்க முடியாது அல்லாடும் தகப்பனின் கதையான 'தி சாங்க்ஸ் ஆப் ஸ்பர்ரோவ்ஸ்' மற்றும் தகப்பனை இழந்த மேஹரோல்லா, மறுமணம் செய்து கொள்ளும் தாயை வெறுக்கும் பாதர் கதையும் இன்னமும் பார்க்க கிடக்கின்றன.

உங்கள் படங்களில் குழந்தைகளை அதிகமாக காண முடிகிறதே, என்ற கேள்விக்கு மஜித்தின் பதில், 'நானும் குழந்தை ப்ராயத்துக்காக ஏங்குபவன் தான். எனது சிறுவயது பிராயங்களில் நடந்த சில சம்பவங்களையும் எனது படங்களில் தொகுக்க முயல்கிறேன். இந்த பிராயம் தான், குழந்தை பருவத்தையும், பதின்ம பருவத்தையும் இணைக்கிறது'. தனது பல படங்களில் பல தருணங்களில், நடிகர்களுக்கு தெரியாத இடத்தை காமராக்களை வைத்து விடுவது இவரது பாணி. அதன் மூலம் இயற்கையான நடிப்பை அவர்களிடம் இருந்து வரவழைக்க முடியும் என நம்புகிறார்.

 அவரது ஒவ்வொரு படங்களையும், ஒரு கலை சிற்பி போல செதுக்கி எடுக்கிறார். அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு உருவகத்தை உபயோகபடுத்தி இருப்பார். சில்றன் ஆப் ஹெவனில் 'ஷூ', 'கலர் ஆப் பாரடைசில்' வண்ணத்து பூச்சி, 'தி வில்லோ ட்ரீயில்' கட்டெறும்பு, பாரானில் மழை என அவைகளையும் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டிருப்பார். இரானின் கலாச்சாரமும், இந்திய கலாச்சாரமும் ஒன்றுகொன்று பின்னி பிணைந்து கிடப்பதால், நம்மால் அவரது படத்தோடு ஒன்ற முடிகிறது.

இரானை, குறையுள்ள நாடாக காட்டக் கூடாது , பெண்களை ஆடை குறைத்துக் காட்டக்கூடாது, என பலபல கட்டுபாடுகள் உள்ள இரானிலிருந்து தான் இது போன்ற உலகத்தரமான படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. வியாபார நோக்கத்தை பொருட்படுத்தாது கலையை கலையாகவே காட்ட மஜீத் மஜிதி தவறியதில்லை.அதற்காக அவர் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. இதற்காகவே, அவரது படங்களை தேடி தேடி பார்த்து புல்லரித்துக் கொண்டிருக்கிறேன். அவரது படங்கள் தரும் உணர்வுகளை நான் ரசித்துக் கொண்டே இருக்கிறேன்.
-நன்றி. soundcameraaction.com க் காக நிலாமுகிலன்
 

Friday, November 23, 2012

உலக சினிமா: Life of Pi
'இறைவன் இருகிறான் என உங்களை என்னால் நம்ப வைக்க முடியும். ஏன் 
என்றால், நான் அதனை உணர்ந்தேன்.'. ப்ரிசின்  படேல் என்கிற 'பை' சொல்லும் இந்த வசனத்தில் தான் படம் ஆரம்பம் ஆகிறது. ' கண்ணே கனியமுதே' என தமிழ் பாடலோடு, பாண்டி சேரியில் தான் கதை ஆரம்பம். தனதுகதையை பாண்டிச்சேரியில் இருந்து துவங்குகிறான் இப்போது கனடாவின் மாண்ட்ரியால் நகரில் வாழ்ந்து வரும் 'பை'. கடவுள் இருக்கிறான் என்பதை ஆணித்தரமாக நம்பும் 'பை' எல்லா மதத்தின் கடவுளையும் நம்புபவன். பிறப்பால் ஹிந்துவாக பிறந்தாலும், மானிட குலத்துக்காக தன்னையே தாகம் செய்த தேவகுமாரன் இயேசு , அனைவரையும் அன்பால் அரவணைத்து செல்லும் அல்லா, படைப்பின் மூலமான பிரம்மா, என அனைத்து கடவுளையும் வணங்குபவனாக இருப்பதை, நாத்திகனான அவனது தந்தை, அடக்குமுறையில் கையாளாது, கருத்தியல் ரீதியாக எதிர் கொள்கிறார்.

பையின் தந்தை சில மிருகங்களை வைத்து பாண்டிச்சேரியின் முனிசிபாலிடியில் இடம் வாங்கி, ஒரு மிருக காட்சி சாலை நடத்தி வருகிறார். கனடாவுக்கு புலம் பெயர கடவு சீட்டுகள் வாங்கி கனடா நாட்டுக்கு 'ட்சிம்ட்சும் ' என்ற சரக்கு கப்பலில், புறப்படுகிறார்கள். மிருகங்களுக்கு அமெரிக்காவில் நல்ல கிராக்கி என்பதால், அவைகளையும் கூண்டில் அடைத்து கூட்டிக் கொண்டு கப்பல் ஏறுகிறார்கள். கனடா போகும் வழியில், கலிபோர்னியா ஜூவில் நல்ல விலைக்கு விற்றுவிட ஏற்பாடு.

பிலிப்பைன்ஸ் தீவின் மணிலா நகருக்கு சற்று வெளியே ஒரு புயலில் மாட்டிக் கொண்டு 'ட்சிம்ட்சும்' கப்பல் மூழ்கிவிட, ஒரு உயிர்காப்பு படகில் பதினாறு வயதான 'பை', ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு உராங்குட்டான், மற்றும் 'ரிச்சர்ட் பார்க்கர்' என்ற பெயர் கொண்ட ஒரு புலியுடன் தப்பி விடுகிறான்.
காலுடைந்த வரி குதிரையை ஓநாய் தின்றுவிட, மற்ற மிருகங்களை 'ரிச்சர்ட் பார்க்கர்' என்ற புலி தின்றுவிட, எஞ்சியது, 'பை' மற்றும் புலி. படகை புலி ஆக்கிரமித்து விட, படகில் இருக்கும் சில மிதவைகள் கொண்டு அதில் ஒரு மிதப்பானை அமைத்து அதில் தனது இருப்பிடத்தை அமைத்து கொண்டு அதனை படகுடன் கயிறில் கட்டி விடுகிறான் 'பை'. படகில் சில நாட்களுக்கு தேவை பட கூடிய குடி தண்ணீர், சில பிஸ்கட்டுகள் என இருக்க, ஒவ்வொரு முறையும் தனது மிதப்பானிலிருந்து படகுக்குள் செல்லும்போதும் உயிரை பிடித்தபடி சென்று வருகிறான். ஒருகட்டத்தில் இது சரிப்படாது என உணர்ந்த 'பை', ரிச்சர்ட் பார்க்கரை, ஒரு ரிங் மாஸ்டரின் முனைப்போடு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.

சுத்த சைவனான 'பை' வேறு வழியில்லாமல் மீன்களை பிடித்து பச்சையாக உண்கிறான். பெரிய மீன்களை பிடித்து ரிச்சர்ட் பார்கருக்கு உண்ணக் கொடுக்கிறான். மழை நீரை சேமித்து தனது மற்றும் புலியின் தாகத்தை தீர்த்துக் கொள்கிறான். இவ்வாறு 255 நாட்கள் கடலில் தத்தளித்த 'பை' எவ்வாறு கரை காண்கிறான் என்பதை, உண்மைக்கு மிக அருகிலிருந்து சொல்லி இருக்கிறார்கள்.

கனடிய எழுத்தாளர் 'யான் மார்ட்டல் '(Yaan Martel) எழுதிய; 'Life of Pi', எனும் மிக சிறப்பு மற்றும் புகழ் பெற்ற நாவலே, அதே பெயரில் திரைப்படமாக்கப் பட்டிருக்கிறது. இன்னமும் 'பை' கனடாவில் உயிருடன் வாழ்ந்து வருவதாக இந்த நாவல் கூறுகிறது. நான் முதலில் புத்தக வடிவை இரண்டு மாதங்களுக்கு முன்பு படித்தபோது, குறைந்தது ஒரு வாரமாவது தூக்கமின்று துவண்டேன். நாவலை படிக்கும் ஒவ்வொருவருமே, தன்னை பை யாக நினைத்துப் பார்த்துகொள்ளும் உணர்வு வரும். நாவல் வாசகனே, கடலில் தத்தளித்து கொண்டிருப்பதை போல பிரம்மை ஏற்ப்படுத்தியதே நாவலின் வெற்றி என கொள்ளலாம்.

இந்நாவலை திரைப்படமாக எடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து, இந்த நாவலை எப்படி திரைவடிவத்தில் கொண்டு வர முடியும் என்ற ஐயம் என்னுள் எழுந்தது. எனினும் இப்படத்தின் இயக்குனர், ஆஸ்கார் விருது பெற்ற, உலக புகழ்பெற்ற எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவரான ஆங் லீ என அறிந்த போது , எனது ஆர்வம் மிகவும் அதிகரித்தது. என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.

திரைப்படம் உண்மைக்கு மிக அருகில் எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் நாவலின் அனைத்து சம்பவங்களையும் திரை மொழியில் கொண்டு வந்து விட வேண்டும் (சில சம்பவங்கள் நீங்கலாக..!) என்ற திரைகதை ஆசிரியரின் முனைப்பு தெரிகிறது.விளைவு, ஹாலிவூட் திரைப்படங்களுக்கு சற்றே நீளமாக இரண்டு மணி நேரம் படத்தின் ஓட்டம். நாவலை படித்திராத பார்வையாளர்களுக்கு, படத்தின் முக்கால் வாசி நேரம், பதினாறு வயது 'பை', ரிச்சர்ட் பார்க்கர் என்ற அந்த பெங்கால் புலி மற்றும் கடல், இவை மற்றுமே திரையில் காட்டப்படுவதால், சற்று அலுப்பு ஏற்படுகிறது. எனினும், நாவலைப் படித்தவன் என்ற முறையில், நான் வாசித்த ஒவ்வொரு சம்பவமும், திரையில் பிரமாண்டமாக விரியும் பொது (இப்படத்தை 3D இல் வேறு பார்த்தேன்), மனம் குதூகலித்தது என்னவோ உண்மை.

படத்தில் பை யாக நடித்திருக்கும் இந்தியர் சூரஜ் ஷர்மாவின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பளீரென அறிமுகமாகும் சூரஜ், கடலில் பல நாட்கள் தத்தளித்து, எழும்பும் தோலுமாகி, கண்கள் பஞ்சடைந்து, அவ்வளவு நாட்களாக தன்னுடன் கடலில் தத்தளித்த நண்பனான ரிச்சர்ட் பார்க்கர், கரையை அடைந்த பின் தன்னை திரும்பி கூட பார்க்காமல் காட்டுக்குள் சென்றதும், இயலாமையிலும் ஏமாற்றத்திலும் கதறி அழுது உடைந்து போவது கிளாஸ். கண்டிப்பாக, ஆஸ்கார் விருது பரிந்துரை இவருக்கு நிச்சயம் உண்டு.

படத்தில் உண்மை சம்பவங்கள் அதிகமாக தொகுக்கப்பட்டிருப்பதால், படத்தின் பிரம்மண்டத்துக்காக அதிக கிராபிக்ஸ் பயன்படுத்தாது, படத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்தி இருப்பதால், தனியாக துருத்திக்கொண்டு தொங்காமல், படத்தின் உண்மைத் தன்மையை குலைத்துவிடாமல், இயல்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தின் உண்மையான கதாநாயகன், படத்தின் ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டா (Claudio Miranda). படத்தின் உண்மை தன்மையை குலைக்காது, கடலின் பிரம்மாண்டத்தையும் குறைக்காது, ராட்சத நடனம் ஆடி இருக்கிறது இவரது கேமரா. கடலில் வரும் சில நைட் ஷாட்ஸ், மற்றும் எம்பி குதிக்கும் பிரம்மாண்ட திமிங்கிலம் போன்ற காட்சிகள், வாவ். படத்தின் இசையும் படத்தின் தன்மைக்கு சிறிதும் விலகாது, சிறிது இந்தியத் தனத்தோடு ஊடாடி வரும் மைக்கேல் டன்னாவின் இசை ஒரு அனுபவம்.


                                                                           ஆங் லீ

இப்படத்தில் வரும் புலி முழுக்க முழுக்க கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டதே என ஆங் லீ ஒரு பேட்டியில் கூறியுள்ளது மிகவும் ஆச்சர்யம் அளித்தது. அவர் சொல்லாவிட்டால், யாருக்கும் அந்த விடயமே தெரிந்திருக்காது. அவ்வளவு கச்சிதம். மற்றும், படத்தின் கடல் காட்சிகள் அனைத்தும், தைவான் அருகே உள்ள பெரிய டாங்கில் தண்ணீர் நிரப்பி படமாக்கப்பட்டது என்று தெரிவித்தார். அவர் இப்படத்தை முடிக்க எடுத்துக் கொண்ட கால அளவு நான்கு ஆண்டுகள்.

ஆங் லீயின் 'லைப் ஒப் பை' ஒரு உன்னதமான படைப்பு. வரும் ஆஸ்கார் விருதுகள் தேர்வுபட்டியலில் பல விருதுகளுக்கு நிச்சயம் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப் படும்.

முக்கியமான விடயம் என்னவென்றால், படத்தின் ஆரம்பத்தில் வரும் தமிழ் பாடல். 'இன்ப தென் வந்து பாயுது...' என்பதை நான் உணர்ந்தேன். அதனை அமெரிக்காவின் தியேட்டரில், பல வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் நமது தமிழ் பாடலில் கிறங்கி போகும் அவர்களைப் பார்த்து எனக்குள் ஏற்ப்பட்ட உணர்வு.. அதனை என்னால் வார்த்தைகளால் புரிய வைக்க முடியவில்லை.


Life of PI: It is Life.

 

Tuesday, November 20, 2012

உலக சினிமா: The Descendantsஉலகத்தில் அன்பு மட்டுமே நிரந்தரமானது. துரோகங்களும், கயமைகளும் நம்மை சூழும்போழுது, அன்பு காட்டுதலும், மன்னிப்புகளும் மட்டுமே நம்மை அந்த துன்ப சூழ்நிலைகளை விட்டு வெளியேற வைக்கும்.   Sideways , About Shmidt போன்ற சிறந்த படங்களை அளித்த அலேசாண்டர்  பயின் இன் (Alexander Payne) இயக்கத்தில் தி டிசண்டன்ஸ் நமது உள்ளத்தின் ஆழமான அடுக்குகளை மிதமாக வருடுகிறது  , படம் முழுக்க வியாபித்திருக்கும் நுட்பமான உணர்வுகள். 

'ஹவாய் தீவு, அமெரிக்காவின் சொர்க்கம் என வர்ணிக்கப் படுகிறது. ஆனால் அங்கு வாழும் எனது வலி உங்களுக்கு புரியாது' என பொருள் பட வாய்ஸ் ஓவரில் மாட் கிங் உரையாடும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. 

ஹவாய் தீவுகளில் ஒன்றான கவாய் தீவில்  அவனுக்கும் அவனது ஒன்று விட்ட சகோதரர்களுக்குமான 25000 ஏக்கர் நிலம் அவர்கள் பரம்பரை சொத்தாக ஒரு அறக்கட்டளையின் கீழ் இருக்கிறது. அதற்க்கு தலைவனாக மாட் இருக்கிறான். அந்த அறக்கட்டளை ஏழு வருடங்களில் முடிவதால், அதனை விற்க முடிவெடுக்கிறார்கள் மாட்டும் அவனது ஒன்று விட்ட சகோதரர்களும். யாருக்கு அந்த நிலத்தை விற்கிறார்கள் என்பதை பொறுத்தே கவாய் தீவின் எதிர்காலம் என்ற நிலை. இதை பற்றியே அந்த தீவு மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும், தனது வக்கீல் வருமானத்தால் தான் காலம் தள்ளுகிறான் மாட்.

ஹவாய் தீவு கடல் சாகச விளையாட்டுகளுக்கு பெயர் போனது. மாட் கிங்கின் மனைவி எலிசபெத்துக்கு அந்த விளையாட்டுகள் தான் பொழுது போக்கு. அப்படி ஒரு நாள் விளையாடுகையில் விபத்து ஏற்பட்டு, தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு தள்ளப்படுகிறாள். அவளை ஆஸ்பத்ரியில் வைத்து கவனித்துக் கொள்கிறான் மாட். 

பதின் பருவத்தில் இருக்கும் அவனது மூத்த மகள், அலெக்ஸ் என்கிற அலெக்சாண்ட்ரா, தனது தாயுடன் சென்ற கிறிஸ்துமசின்  போது ஏற்பட்ட வாக்குவாதத்தால்  ஆத்திரமுற்று வேறு நகரில் போர்டிங் பள்ளியில் தங்கி படித்து வருகிறாள். அவனது இரண்டாவது பெண் ஸ்காட்டி, சரியான வளர்ப்பு முறை இல்லாததால், பள்ளியில் பலவகை முறைப்பாடுகளை தாங்கி நிற்கிறாள். வேலை நிமித்தம், வெளியூர்களில் பெரும்பாலும் தங்க நேரிடும் மாட் கிங்குக்கு தனது குடும்பம் அந்நியமாக  தெரிகிறது. மாட் கிங்கிற்கு தனது பெண்களை கையாளத் தெரியவில்லை. அவர்களின் பழக்க வழக்கங்கள் சரியாக இல்லாததை உணர்கிறான். தனது மனைவி கோமா நிலையில் தள்ளப்பட்டதை அடுத்து, குடும்ப பாரம் முழுவதும்  தானே சுமக்கிறான்.

எலிசபெத்தை கவனிக்கும் டாக்டர்கள், இனி எலிசபத் பிழைக்கப் போவதில்லை என்றும், அவள் மேல் வைத்திருக்கும் லைப் சப்போர்டை எடுத்துவிடப் போவதாகவும் அதற்க்கு முன்னர் 'சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பிருங்க' என்று சொல்லவும், தனது மூத்த மகள் அலெக்ஸ் இருக்கும் பள்ளிக்கு சென்று அவளது எதிர்ப்பையும் மீறி அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான்.

பின்னர் மெல்ல, அவளது அம்மாவின் நிலைமையை எடுத்து சொல்ல, அவளோ அவளது அம்மாவின் மீது வெறுப்பை உமிழ்கிறாள். மாட் காரணத்தை வினவ அப்போது தான், அவனது மனைவி எலிசபெத் க்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனை தான் கண்ணால் கண்டதாகவும் கூற உடைந்து போகிறான் மாட். அதனை தங்கள் குடும்ப நண்பனின் மூலம் உறுதிபடுத்திக் கொள்கிறான். அவனது மனைவி எலிசபெத் மீது கோவமும் ஆத்திரமும் வந்தாலும், அவளது தற்போதைய கையாலாகாத நிலையை உணர்ந்து அவளை மன்னித்து விடுகிறான். உறவினர்களிடம் சொல்வதை போல, அவளது கள்ள காதலனையும் கண்டு பிடித்து, அவள் இறப்பதற்கு முன் அவனை அவளிடம் அழைத்து வர விரும்பி தங்கள் மகள்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களை ஒன்றிணைத்து அவனை தேடி கிளம்புகிறான். அவன் அம்முயற்சியில் வெற்றி பெற்றானா, தனது மகள்களின் அன்பை பெற்றானா, தனது பரம்பரை சொத்துகளை விற்றானா  என மீதி படம் கூறுகிறது.

ஹாலிவூடில் சூப்பர் ஸ்டார் அளவில் இருக்கும் மிக சில நடிகர்களில் ஜார்ஜ் கிளூனியும் ஒருவர். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது ஆச்சர்யம். நடுத்தர வயது மாட்டை தனது அடக்கமான நடிப்பினால் கம்பி மேல் நடப்பது போல பிரதிபலிக்கிறார். தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டால் எனத் தெரிந்ததும் பொங்கும் ஆத்திரத்துடன் அவளை தனிமையில் திட்டி தீர்த்துவிட்டு மகள்களை அம்மாவுடன் பேச சொல்ல, அவர்கள் திட்டத் துவங்கியதும், 'அம்மாவை அப்படி எல்லாம் பேசக் கூடாது' என அடக்கும் காட்சியில் ஜொலிக்கிறார்.

படத்தின் முதல் ஹீரோ, படத்தின் தொய்வில்லாத திரைக்கதை. எந்த ஒரு சிக்கலும் இல்லாத தெளிவான கதையில் சுவாரஸ்யங்களை புகுத்தி படம் பார்ப்பவர்களை அசத்தி இருக்கிறார்கள். படத்தின் கதை முதலில் நாவல் வடிவத்தில் எழுதியவர் கவாய் ஹார்ட் ஹெம்மிங்க்ஸ்.
அதற்க்கு திரைக்கதை அமைத்தவர்கள், Alexandar Payne, Nat Faxon and Jim Rash.
அடுத்து Phedon Papamichael கையாண்டிருக்கும் ஒளிப்பதிவு. இந்த சோகமான கதையின் மூடுக்கு ஏற்றவாறு கமெராவும் பயணிக்கிறது. ஹவாய் தீவின் அழகையும் அள்ளித்தர தவறவில்லை.

நாவலை தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை பகுதியில், இத்திரைப்படம் ஆஸ்கார் வென்றது. ஜார்ஜ் க்ளூனி க்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டது.

டிசண்டன்ட்ஸ் : டீசன்ட்

Monday, September 17, 2012

அணு உலை.. உயிருக்கு உலை..!

வரலாற்று புத்தகத்தில் படித்திருக்கிறேன். அந்நிய சக்திகளை எதிர்த்து சுதந்திரம் வேண்டி மக்கள் ஒன்று கூடி அகிம்சை போராட்டம் நடத்தினர் என்று. இப்போ நம்ம ஊருகாரங்களை எதிர்த்தே நாம சுதந்திரம் வேண்டி போராட வேண்டி இருக்கு. படிப்பறிவில்லாத மக்கள் தானன்னு நெனச்சி கொண்டு வந்தாங்க அணு உலைய கூடங்குளத்துல. ஆரம்பத்துல இத அங்க உள்ள மக்களும் கண்டுக்கல. ஆங்கங்கே போராட்டம் நடத்தினாங்க, அது எந்த பத்திரிக்கையிலும் வரல. அரசு.. அப்படிப்பட்ட போராட்டமே நடக்கல ன்னு மள மளன்னு கூடங்குளத்துல அணு உலை கட்ட ஆரம்பிச்சாங்க. 

அமெரிக்கால பனிரெண்டு வருஷம் வாழ்ந்துட்டு, அணு சக்தியின் தீமைகளை பத்தி பல ஆராய்சிகளும் செஞ்சி ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி உள்ள நாகர்கோயில சேர்ந்த டாக்டர் உதயகுமார் வந்தாரு. மக்களுக்கு அணு உலைகளினால் வரும் தீமைகள எடுத்து சொல்ல... அப்போ தான் மக்களுக்கு அது எவ்ளோ பெரிய அழிவு சக்தி நு புரிஞ்சிது. இதே சமயத்துல சப்பான்ல பூகம்பம் வரவும் அங்குள்ள பூக்குஷிமா அப்டிங்கற நகரத்துல அணு உலைகள் வெடித்து பெரிய சேதாரம் ஆகவும், கூடங்குளத்தை சுற்றி உள்ள மக்கள் முழிச்சிக்கிட்டு போராட்டத்த தீவிரப் படுத்தினாங்க.

கடந்த ஒரு வருஷமா, இவங்க போராட்டத்த ஒரு பொருட்டா நெனைக்காத நம்ம அரசாங்கம், சீக்கிரம் இவங்க போராட்டம் பிசுபிசுத்து போய்டும்னு நெனச்சி சும்மா இருக்க...இந்த போராட்டம் ஒரு மாபெரும் அகிம்சை போராட்டாமா ஒரு வருஷத்துக்கும் மேல... குறிப்பா பெண்கள் குழந்தைகளும் இணைந்து வெற்றிகரமா நடக்க காரணம் டாக்டர் உதயகுமார். அணுஉலை தொறப்பாங்க நமக்கு மின்சாரம் கெடைக்கும், டி வீல சீரியலும் கிரிக்கட் மாச்சும் பாக்கலாம் நு ஜொள்ளு விட்டு திரிந்த கூட்டத்துக்கு அங்க பாதிப்புக்கு  பயப்படற மக்களை பத்தி எதுக்கு  கவலை? ஒடனே உதயகுமார் அமெரிக்கா கிட்ட பணம் வாங்கிட்டான், ஒன்னும் தெரியாத மக்களை ஏவி புடறான் அப்டின்னு ஆளாளுக்கு பத்த வைக்க ஆரம்பிச்சாங்க. அமெரிக்காவோட அணு ஒப்பந்தம் போட்ட  அப்புறமா  தான் இந்த அணு உலை ஆரம்பிச்சாங்க நு அந்த மடபசங்களுக்கு புரியவே இல்ல.அவனுக்கு மக்கள் எக்கேடு கேட்டு போனா என்ன? அவனுக்கு கறன்ட் வேணும். 

அணு உலை ஆரம்பிச்சப்பரம் ஒடனே கறன்ட் வந்துருமா? தேவையான கரண்ட் கடச்சிருமா? இல்ல. ஆனா எதாச்சும் ஒரு பேரழிவு வந்தா... அணு உலை இருந்த இடத்தின் சுற்று புறத்த முழுக்க தாக்கி, வருங்கால சந்ததிகள மிகப் பயங்கரமா பாதிக்கும் நு இவனோட சின்ன அறிவுக்கு புரிய மாட்டேன்குது. ஏன்னா அவன் அந்த சுற்று புறத்துல இல்ல. இவன் சென்னைல இருப்பான், இல்ல துபைல இருப்பான் இல்லாங்காட்டி அமெரிக்காவுல இருப்பான். அவன பொய் இடிஞ்ச கரைல இல்ல கூடன்கொளத்துல  போய் வாழ சொல்லுங்க. அங்க இருந்து எழுதட்டும் இப்படி.

சில பதிவர்கள் எழுதறாங்க, மக்களோட அச்சத்தை போக்கணும்னு. என்னமோ இவங்களுக்கு அணு உலை பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதிரியும், அங்க இருக்கற மக்களுக்கு தான் அணு உலை பத்தி ஒன்னும் தெரியாம பயப்படறாங்க அப்டின்னும் நெனச்சிட்டு.. அணு உலை பத்தி மக்களுக்கு இருக்கற அச்சத்தை போக்கனுமாம். இவங்கள விட, அணு உலைகள் பத்தியும் அதோட ஆபத்துகள் பத்தியும் அந்த மக்களுக்கு தான் ரொம்ப தெரியும்னு இவங்களுக்கு தெரியாம  கண்டபடி  எழுதிபுடறாங்க.

பதினாலாயிரம் கோடி செலவு பண்ணினப்பறம் எப்படி அதை கை விட முடியும் நு சிலர் பொலம்பறாங்க. ஒரு லட்சம் கோடி ஊழல் பண்ணவன் இருக்கான். எழுவதாயிரம் கோடி ஊழல் பண்ணவன் கொழுத்து பொய் கெடக்கான். கோடிகள்ள கட்டப்பட்ட தலைமை செயலகம் இந்தம்மாவோட கர்வத்தால, தலை தெரிச்சதனதால பாம்புகள்  வந்து   பூட்டி கெடக்குது. மக்களோட வாழ்வாதரத்தோட, உயிரோட விளையாடக் கூடிய அணு உலை மூடினா  கொறஞ்சா போய்டும்?

சேது சமுத்திர திட்டம் நு ஒன்னு கொண்டு வந்து பல்லாயிர கோடிகள் செலவு பண்ணதுக்கு அப்பறம், இந்து மத சமுதாயத்தின் மனதை புண் படுத்தும் படி நடந்துக் கொள்ளக் கூடாது நு நிறுத்தினான்களே, அதனால என்ன பலன்? மக்களுக்கு என்ன ஆதாயம்? ஒரு வருஷமா, அரசுக்கு எந்த பாதிப்பும் வராம அகிம்சை வழில போராட்டம் பண்ண மக்களை, அந்த கள்ள போலிஸ் ராஜேஷ் தாஸ் உசுப்பேத்தி உசுபேத்தி  லட்டிய  சொழட்டி  ரணகளம் ஆக்கிட்டாயங்க அதுல ரெண்டு உசுரு போய்டுச்சே, அடக்குமுறைல மக்களை அடக்கிற முடியுமா? இதை இன்னொரு சுதந்திரப் போராய் தான் பாக்க வேண்டி இருக்கு. அடக்க அடக்க வெகுண்டு எழுந்து மக்கள் சக்தி என்னன்னு காட்டிட்டு இருக்காங்க இடிந்த கரை மற்றும் கூடன்குள மக்கள்.

உள்நாடு வெளிநாடு என அனைத்து மக்களையும் அணு சக்திக்கு எதிராக ஒன்றிணைக்கற ஒரு போராட்டமா இந்த போராட்டம் வளந்துட்டு வருது. இதை தன்னோட இரும்புக்கரம் வச்சி அமுக்க, ஒடுக்க மத்திய மாநில அரசு முயற்சி செஞ்சிட்டு வருது. மத்திய அரசான காங்கிரசுக்கும், இன்றைய முந்தய மாநில அரசுகளான திராவிட அரசுகளுக்கு சாவுமணி அடிச்சாச்சு. இன்றைய தமிழகத்தில் வை கோ மட்டுமே மக்களுக்காக போராடும் ஒரு அரசியல் தலைவனா தெரியறாரு. வேறு எந்த பெரிய கட்சிக்கும், ஒட்டு கேட்டு வர கூட தகுதி இல்லை மக்கள் தங்களது விளக்குமாறுகளை தீட்டிட்டு தான் இருக்காங்க. இப்போ தன்னோட சொத்து விவரத்த பப்ளிக்கா அறிவிச்சிருக்காரு உதயகுமார். இவ்ளோ வெளிப்படையா இருகறவர மக்கள் நம்பாம இருப்பாங்களா...?


அமெரிக்கால பனிரெண்டு வருஷம் வாழ்ந்த உதயகுமார் தான்
இந்த  நூதன, சாத்வீக, கட்டுகோப்பான போராட்டத்தை முன்னின்று நடத்திட்டு வரார். எவனும் இனிமே, அமெரிக்கால ஐரோப்பால பீசா பர்கர் சாப்பிடறவன் நாட்டப் பத்தி பேசக்கூடாதுன்னு எழுதவோ பேசவோ முடியாது. கடல் தாண்டி வாழ்ந்தாலும் தமிழன் உயிர்காக்க புறப்பட்டிருக்கும் உதயகுமாரன்கள். கடலலைகளை போல ஆர்ப்பரிக்கும், அந்த கடல் மாந்தர்களையும் அவர்களை ஒருங்கிணைத்து செல்லும் உதயகுமாரன், புஷ்பராயன் போன்றவர்களையும் வணங்குகிறேன். 

ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ எப்போதும், இல்லாத ஒரு வாய்ப்பு நமக்கு இருக்கிறது அது, சூரிய ஒளி. ஒவ்வொரு இடத்துக்கும் சோலார் சக்திகளை சேமித்து மின்சார தயாரிப்பை நாம துவக்கணும் அதை கூடங்குளத்துல இருந்தும், இடிந்த கரையில் இருந்தும் நாம ஆரம்பிச்சு வைப்போம்.

வேண்டாம் அணு உலை.. அது நமது உயிருக்கு உலை.

Friday, August 24, 2012

முதல்வன் பெடரர் - 3


'நான் டென்னிஸ் உலகின் முதல்வனா வரணும்.அதாவது நம்பர் ஒண்ணா வரணும்' பெடரர் என்ற அந்த சிறுவன், தனது கோச்சிடம் இப்படி சொன்னபோது அவர் சிரித்தார். 'மொதல்ல  ஒழுங்கா  டென்னிஸ் விளையாட கத்துக்கோ ' என்று சொன்னார். கூட பயிலும் சிறுவர்களும் சிரித்தார்கள். பெடரருக்கு அவரது கனவை எட்டி பிடிக்கும் வழி அவ்வளவு சுலபமாக இல்லை. முதல் முதலில் விளையாடிய டோர்ணமண்டில் அவர் 6-0 6-0 என்ற நேர் செட்களில் அவர் தோற்றுப் போனார். வழக்கம் போல ஆட்டத்தின் முடிவில் அவர் கதறி அழவும் தவறவில்லை. 

அதனைத் தொடர்ந்து பல தோல்விகள். ஆனால் உள்ளே தான் முதல்வனாக வேண்டும் என்கிற வெறி மட்டும் அவருள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தனது நண்பர்களை அழைத்து விளையாடும் நேரம் போக, சுவர்களில் பந்தை அடித்து ஆடி கொண்டே இருந்தார். அதற்க்கு வெகு விரைவில் பலன் கிடைத்தது. தனது பதினோராவது வயதில், 1993 ஜெனிவாவில் நடந்த உள்ளரங்கு இறுதி பந்தயத்தில் வென்று சுவிஸ் நாட்டின் பனிரெண்டு வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன் ஆனார். ஆறு மாதங்கள் கழித்து தனது பரம டென்னிஸ் வைரியான டானி ஷ்னைடரை தோற்கடித்து வெளி அரங்கிலும் சுவிஸ் நாட்டின் பனிரெண்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லவும்.. 'ஆஹா நம்மாலும் டென்னிசில் வெல்ல முடியும்' என்ற நம்பிக்கை மெள்ள வந்ததது.


                                        பெடரரின் சிறுவயது புகைப்படங்கள் சில...

பெடரரின் பதிமூன்றாம் வயதில், தான் சுவிஸ் நாட்டின் நம்பர் ஒன் வீரனாகவும், உலக அரங்கில் தான் முதல் நூறு பேரிலும் வரவேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்பட்டது. அவனுக்காக எதையும் செய்ய தயாராகவும் அதே சமயத்தில் அவனது முடிவுகளில் குறுக்கிடாத பெற்றோர்கள் , அவனை ஜெனிவா லேக் அருகே இருந்த இகுப்ளேன்(EKUBLEN) என்ற நகரத்தில் இருந்த 'சுவிஸ் தேசிய டென்னிஸ் விளையாட்டு மையம்' (swill national tennis center) அனுப்ப முடிவு செய்தனர். அங்கு பயின்றவாறே, பள்ளியிலும் சேர்ந்து பயில வசதி இருந்தது. அந்த மையத்தில் பயிலுபவர்களுக்கு சில பாடங்கள் படிக்க தேவை இல்லை என்ற வசதியும் இருந்தது. அவர்கள் பேயிங் கஸ்டாக  யாராவது   ஒரு வீட்டில் தங்கி கொள்ள வேண்டும். பெடரரிடம் கேட்டபோது முதலில் தனது தாயை பிரிந்து இருக்க வேண்டுமே என்ற வருத்தத்தில் மறுப்பு சொன்ன போதிலும், டென்னிஸ் மேலிருந்த காதலால், சம்மதித்தார்.

அந்த மையத்தில் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பலவிதமான பயிற்சிகளும், பரீட்சைகளுக்கும் பின்னர் தான் அங்கே சேர்த்துக் கொள்வார்கள். நம்மாள் தான் எதிலும் சளைக்காத வீரனாயிற்றே. அவனது செய்கைகள், தேர்வாளர்களான பியர்ரே  பகணினி மற்றும் கிறிஸ்டோபர் பிரெய்ஸ்  (Pierre Paganini and Christophe Freyss) இருவருக்கும் உடனே பிடித்துவிடவும், 'இவனுக்குள் எதோ ஒன்னு இருக்கு' என்று எண்ணிய அவர்கள், உடனே பெடரரை செலக்ட் செய்து விட்டனர்.

1995 அந்த பள்ளியில் சேர்ந்தவுடன் தான் ஒரு பெரும் சவாலை பெடரர் எதிர்கொள்ள வேண்டி வந்தது...

ஆட்டம் தொடரும்... 

Tuesday, August 21, 2012

முதல்வன் பெடரர் -2


ராபர்ட் பெடரர் மற்றும் லிநெட் பெடரர் இருவரும், சவுத் ஆபிரிக்கா தேசத்தில் சந்தித்து மணந்து கொண்டனர். அதன் பின்னர் ராபர்டின் சொந்த ஊரான சுவிட்சர் லாந்துக்கு திரும்பி வந்து குடி ஏறினர்.
ஆகஸ்ட் எட்டு 1981 சுவிஸ் நாட்டின் ஓரத்தில் பேசல் நகரத்தின் அருகே உள்ள பெர்நேக் (Berneck) என்ற சிறிய கிராமத்தில், லிநெட் என்ற இளம் பெண், பின்னாளில் வரலாற்றில் பேசப்பட போகும் ஒரு மகவை பெற்றாள். அந்தக் குழந்தைக்கு ரோஜர் பெடரர் என பெயர் வைத்தனர். ராபர்ட் மற்றும் லிநெட் இருவரும், விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களாய் இருந்தனர். டென்னிஸ், சாக்கர், கால்ப் என எதையும் விட்டு வைக்கவில்லை. 

சிறுவயதில் பெடரருக்கு. பாஸ்கட் பால் மிகப் பிடித்தமான விளையாட்டு. சிகாகோ புல்சின் மைகேல் ஜோர்டான் தான் அவருக்கு சிறுவயது ஹீரோ.சிறுவயது பெடரர் சுட்டித்தனம் பொறுக்க இயலாமல் அவரை கண்ட்ரோல் செய்ய இயலாது அவரை  அவர் போக்கிலேயே விட்டு விட்டனர். அவரை டென்னிஸ் வகுப்புக்கு கூட்டி செல்வது தான் மிகவும் கடினமான ஒரு விஷயமாக லிநெட் கூறுகிறார். 'பெடரர் அடிக்கும் பந்துகள் எதுவுமே ஒழுங்காக இராது. எவ்வளவு சொன்னாலும் தப்பு தப்பாகத்தான் அடிப்பான்.'

                                                               சிறுவயதில்.. பெடரர்..
வீட்டின் சுவர்களில் பந்தை டென்னிஸ் மட்டையால் அடித்து பழக ஆரம்பித்தான் சிறுவன் பெடரர்.வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உடைத்து வாங்கி கட்டிக் கொள்வது, பெடரரின் சிறுவயது ஹாபி. அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு தனது அக்கா   டையானை   வம்புக்கு இழுப்பது. அவள் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிரும்ம்போது ஒட்டு கேட்பது, அவளது பொருட்களை தனது டென்னிஸ் பயிற்சியின் பொது போட்டு உடைப்பது என அவன் ஒரு குட்டி சைத்தானாக இருந்தான் என இப்போது தனது தம்பியின் சிறுவயது நினைவுகளை பெருமையோடு நினைவு கொள்கிறாள் டயான்.

டென்னிஸ் உலகில், சிறுவயதில் பெடரரின் ஆதர்சம், போரிஸ் பெக்கர்.  1985 இல் போரிஸ் பெக்கர் விம்பிள்டன் போட்டியில் வெற்றி கொண்ட பொது, பெடரருக்கு வயது நான்கு. அந்த போட்டியை கண்டே பெக்கரை தனக்கு மிகவும் பிடித்து போனதாக சொல்கிறார் பெக்கர். டென்னிஸ் களத்தில்  பெக்கருக்கு பிரதான எதிரி, செர்வுகளுக்கு பெயர் போன ஸ்டெபான் எட்பர்க். 1988 மற்றும் 1990 இல் பெக்கர், ஸ்டெபானிடம் இறுதி ஆட்டத்தில் தோற்று போனபோது, கதறி கதறி அழுதிருக்கிறார் பெடரர். பின்னர் டென்னிஸ் மட்டுமே பிடித்தமான ஆட்டமாக மாறிப்போனது. 'தோல்வி மற்றும் வெற்றி, இரண்டுமே எனக்கு கைகளில் தான் இருக்கிறது. சாக்கரில் வெற்றி தோல்வி நிர்ணயம் ஆவது ஒரு ஆளின் மூலமாக மட்டும் அல்ல.' எனவே தனக்கான விளையாட்டாக டென்னிசை தெரிவு செய்து அதில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.
                                      தன் இளவயது நண்பன் மார்கோவுடன்.... 
பேசல் நகரை சுற்றி இருந்த டென்னிஸ் க்ளப்புகளில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். அங்கு தான் தனது சிறுவயது நண்பனான மார்கோவை சந்தித்தார்.இருவரும் ஒரே இடத்தில் பயின்றதால், இரு நண்பர்களும் குறும்பு செய்து மாட்டிக் கொள்வதை நினைவு கூறுகிறார் மார்க். பாதி நேரம், குறும்பு செய்துவிட்டு தண்டனையாக மார்க்கும் பெடரரும் கோர்டுக்கு வெளியே அமர வைக்க படுவார்கள். பயிற்ச்சியில் போதிய கவனம் செலுத்தாத பெடரர், மாட்ச் என்று வந்து விட்டால் பின்னி எடுத்துவிடுவார்.  இவர்கள் இருவருக்கும் எட்டு வயது இருக்கும்போது இருவரும் இடம் வாரியாக பிரிக்கப் பட்டு வேறு வேறு குழுக்களில் இணைக்கப்பட்டு போட்டியில் விளையாடியதே பெருமையாக ஞாபகம் இருப்பதாக கூறுகிறார் மார்க். மார்க்கும் பெடரரும் நேருக்கு நேர் போட்டியில் மோதிய போது, மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த பெடரர் ஒருக்கட்டத்தில் உடைந்து அழ ஆரம்பிக்க, மார்க் ஓடி பொய் அவரை தேற்றி இருக்கிறார். பின்னர் பெடரர் நம்பிக்கையோடு முன்னேற, தான் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் மார்க் அழ ஆரம்பிக்க பெடரர் ஓடி வந்து தேற்றி இருக்கிறார். பொதுவாக, பெடரர் மிகவும் எமோஷனல் டைப். மிக எளிதாக அழுதுவிடுவார்.இப்போதும்.  அந்த ஒரே ஒரு மாட்சை மட்டும் பெடரருக்கு எதிராக ஜெயித்த மார்க், அதன் பின் எப்பொதுமே பெடரரை ஜெயித்ததில்லை.

ஆட்டம் தொடரும்.....


Friday, August 17, 2012

திரைப்படம்: 22 பீமேல் கோட்டயம்.(மலையாளம்)

சில காலங்களாக, தமிழ் சினிமாவின் மசாலா சூழலில் மதி மயங்கி கொண்டிருந்த மலையாள படங்களில், இப்போது மீண்டும் வசந்த காலம். நல்ல படங்கள் சமீபகாலமாக வரத்துவங்கி உள்ளது வரவேற்கத் தகுந்த முயற்சி. அந்த வரிசையில் சால்ட் அண்ட் பெப்பர் பட இயக்குனர் ஆசிக் அபு வின் இயக்கத்தில் வந்துள்ள 22 பீமேல் கோட்டயம் ஆரவாரமாக இடம் பிடிக்கிறது. அடித்தளக் கதை இந்தி படமான 'ஏக அசீனா தி' என்ற படம் என்ற போதிலும்(அந்த படத்திற்கான கிரெடிட் டைட்டிலில் கொடுக்கப் படுவதால் இது ஒரு நேர்மையான முயற்சி.), படத்தின் கதையோட்டத்தை மாற்றி இன்றைய சூழ்நிலைக்கு பொருந்தி போகும்படி எடுத்துள்ளமைக்காக இந்த படத்தை பாராட்டியே தீர வேண்டும். 

பெங்களுருவில் ஒரு நர்சாக வேலை பார்த்து வருகிறாள் கோட்டயத்தை சேர்ந்த  டெசா . பெற்றோரை இழந்த அவளுக்கு இருக்கும் ஒரே உறவு, கொச்சினில் படித்து கொண்டிருக்கும் தங்கை. அவளது அறைத்தொழிக்கு
மணமான பணம் படைத்த டி கே விடம் தொடர்பு இருக்கிறது. 

கனடா நாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக, பெங்களுருவில் இருக்கும் இம்மிக்ராஷன் ஆபீசை அணுகுகிறாள்  டெசா . அங்கு மேலாளராக இருக்கும் சிறில் பழக்கமாகிறான். இருவருக்கும் பிடித்துப் போக, இவர்கள் உறவு லிவிங் டுகெதர் அளவுக்கு செல்கிறது.ஒருமுறை ஒரு உணவகத்தில் ஒருவன்  
டெசாவை உரச, அவனை சிறில் அடிக்க, அவனோ ஒரு அரசியல் பெரும்புள்ளியின் மகன். தன்னை அடித்த சிறிலின் கையை உடைக்காமல் ஓய்வத்தில்லை என அவன் சிறிலை தேடி  அலைய , அவனை தனது கஸ்ட் ஹௌசில் தங்க வைக்கிறான் அவனுடைய முதலாளி ஹெக்டே.

சிறில் இல்லாமல் தனியே இருக்கும்  டெசாவை  மண்டையில் அடித்து பலகீனமாக்கி அவளை கற்பழித்து விடுகிறான் ஹெக்டே. அதனை அறிந்து ஹெக்டேவை பழி வாங்கத் துடிக்கிறான் சிறில். அதன் பின் வரும் காட்சிகள் நம்மை சுழற்றி அடித்து பரபரப்பை உண்டு பண்ணுகின்றன. 

படத்தில் சிறிலாக நடித்திருக்கும், காதலுக்கு மரியாதை இயக்குனர் பாசிலின் மகன் பகாத் பாசில் அற்புதம். மிக மிக எளிதாக தனக்குரிய பாகத்தை செய்திருக்கிறார். இவர் முன்பு நடித்த 'சப்ப குறிசு' திரைப்படத்திலும் தனது வித்யாசமான கதாபாத்திரத்தினால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களும் கதைகளும் மிகவும் அரிதானதாக இருக்கிறது. மலையாள நடிகர்களிடையே இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.

டெசாவாக நடித்திருக்கும் ரீமா கல்லிங்காலை சுற்றிதான் படமே. 
பாத்திரத்திற்கேற்று நடித்திருந்தாலும் இன்னும் முயற்சித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.காட்சிகளின் சூழ்நிலைகளுக்கேற்ப,  பதைபதைப்பும் பரபரப்பும்,  இவர் முகத்தில் கொண்டு வராதாது ஏமாற்றம். ஹெக்டேவாக வரும் இயக்குனர் பிரதாப் போத்தன் வழக்கம் போல லூசு நடிப்பை கொண்டு வருகிறார்.

இசை பெரிதாக சொல்லிக்கொளும்படி இல்லை என்றாலும், படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, ஷைஜூ காலேதின்  ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியான ஒளியமைப்பு படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி செல்கிறது.  பெங்களூரின் நகரத்தன்மை இவரது ஆளுமையில் புதுமையாகத்  தெரிகிறது. 

இயக்குனர் ஆஷிக் அபு விறுவிறுவென படத்தை நகர்த்தி இருக்கிறார். கலாச்சாரங்களை எல்லாம் குழி தோண்டி புதைத்து மிகவும் கேசுவலாக, இன்றைய நகர வாழ்கையை உள்ளது உள்ளபடி காட்டிய இவருக்கு தைரியம் அதிகம். அதும்போக படத்தை இன்ஸ்பைர் செய்த 'ஏக ஹசீன தீ' உட்பட இரண்டு ஆங்கில படங்களை டைட்டில் கார்டில் போட்ட நேர்மை...

பிமேல்..சராசரிக்கும் மேல்...

Friday, August 3, 2012

முதல்வன் பெடரர் -1எனது பள்ளி நாட்களில், நான் நன்றாக ஓடியதால், ஓட்டத்துக்கு முதன்மை கொடுக்கும் கோ கோ என்ற விளையாட்டில் என் பள்ளி குழுவில் இணைத்து கொண்டார் என் விளையாட்டு ஆசிரியர். பல்வேறு பள்ளிகளுக்கு சென்று வெற்றிகள் குவித்த போதும், கோ கோ என்ற விளையாட்டுக்கு உலக அரங்கில் மதிப்பில்லை என உணர்ந்தேன். மெதுவாக கால்பந்து பக்கம் கவனம் செலுத்தி, எனது பள்ளி இறுதி ஆண்டுகளில் பள்ளியின் கால்பந்து குழுவில் விளையாடி, கோவை நேரு ஸ்டேடியம் வரை சென்று விளையாடியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என்ன விளையாடினாலும், வீட்டிலும், பள்ளியின் மதிய உணவு இடைவேளைகளிலும் கிரிக்கெட் ஆடுவது பிடித்தமாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானத்தில் கிட்டத்தட்ட பத்து டீம்கள் குறுக்கும் நெடுக்குமாக விக்கட் நட்டி விளையாண்டதை இப்போது நினைத்து பார்த்தாலும் உடல் உள்ளம் சிலிர்க்கிறது.

எனினும், எனது பள்ளி நாட்களில் இருந்தே, டென்னிஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அப்போது தூர்தர்ஷனில், அரை இறுதி, மற்றும் இறுதி போட்டிகளை மட்டுமே ஒளிபரப்பி வந்தார்கள். குட்டை பாவாடை அணிந்து ஆடும் பெண்கள் தான் என் கவனத்தை டென்னிஸ் பக்கம் திருப்பினார்கள். அவர்களை பார்க்க ஆரம்பித்த நான், மெல்ல ஆட்டத்தின் மீதும் கவனம் கொள்ள, ஆடவர் டென்னிசையும் கவனிக்க ஆரம்பித்து எனது முதல் டென்னிஸ் கதாநாயகன் ஐவன் லென்டில் என கொண்டேன். அப்போது (இப்போதும் கூட) டென்னிஸ் என்பது, மேல்தட்டு கனவான்கள் ஆடும் ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. ஐவன் லேண்டிலும், ஸ்டெப்பி க்ராபும் ஆடும் ஆட்டம் கண்டு, எனக்கும் டென்னிஸ் ஆடவேண்டும் என்று மிகுந்த ஆசை எழுந்தது. கிரிக்கெட் மட்டை கூட வாங்க காசில்லாதவன் டென்னிஸ் ராக்கட்டுக்கு ஆசை படலாமா? எனினும் என்றாவது ஒரு நாள் டென்னிஸ் ஆட வேண்டும் என்ற வெறி மட்டும் என்னுள் இருந்தது.

பலப்பல வருடங்கள் கழிந்து, இரண்டாயிரம் வருஷத்தில் முதன் முதலாக நான் விமானப் பயணத்தில் அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தபோது என் மனதினுள் எழுந்த முதல் சந்தோசம், நான் டென்னிஸ் ஆட வாய்ப்பு அங்கு கிடைக்கும் என்பதே. அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் மீது நான் சென்ற விமானம் மெல்ல பறந்து கொண்டிருந்தபோது, கீழே நிலத்தில் பச்சை நிறத்தில் நான் பலப்பல டென்னிஸ் கோர்ட்டுகளை கண்டதும், எனது கனவு நனவாகப்போவதை கண்டு குதூகலித்தேன். நான் ஐவன் லென்டிலுடனும், பீட் சாம்ப்ராசுடனும், ஆண்ட்ரே அகாசியுடனும் விளையாடுவதை போல கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன்.

அமெரிக்கா சென்று இறங்கிய பின் சரியாக ஒரு ஆண்டு கழித்து தான் எனக்கு டென்னிஸ் ஆட வாய்ப்பு கிடைத்தது. இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்டு, அமெரிக்காவின் வியாபாரம் தடைபட்ட நிலையில் ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் 'பெஞ்சில்' இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என் கம்பெனி எங்களுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்திருந்தது. நாங்கள் பகல் முழுவதும் எங்களுக்கு வரப்போகிற நேர்முகதேர்விற்கு எங்களை தயார் படுத்தி கொண்டோம். மாலை நேரங்களில், கோடை காலங்களில் இங்கு இரவு மிகத் தாமதமாக எட்டரை மணிக்கு தான் வரும் என்பதால் மாலை ஐந்திலிருந்து எட்டு வரை டென்னிஸ் விளையாட ஆரம்பித்தோம். அப்போது எங்களுக்கு மேனேஜராக இருந்த மிஸ்டர் முரளிக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். வேலை இல்லாத கவலையை போக்க எங்களுக்கு டென்னிஸ் கை கொடுத்தது. எனக்கு முதலில் டென்னிஸ் ராக்கெட்டை பிடிக்கவே தெரிய வில்லை. மற்றவர்கள் எனக்கு டென்னிஸ் தெரியாது என்று ஒதுக்கி விட்ட போதிலும், ரமேஷ் என்ற ஒரு நண்பன் எனக்கு பொறுமையாக ராக்கட் பிடிப்பது முதல் எப்படி விளையாட வேண்டும் என்று பொறுமையாக சொல்லிக்கொடுக்க, வெகு சீக்கிரத்தில் டென்னிஸ் எனக்கு பிடித்து போனது.

ஒவ்வொரு நாளும் எப்போடா ஐந்து ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தோம். இரவு முற்றிலும் கவிழும் வரை ஆடிதீர்த்தோம். மிஸ்டர் முரளியின் உதவியுடன் டோர்ணமேண்டுகள் வைத்து டென்னிஸ் எங்கள் வாழ்கையில் இருந்து இணை பிரியாத ஒன்றாக ஆகிப் போனது. டி வீயில் டென்னிஸ் காண்பித்து விட்டால் உடனே சானல் மாத்த தோன்றாமல் அதையே பார்த்துக் கொண்டிருப்பேன்.டென்னிஸ் உலகத்தில், எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் ஆடி வெல்லும் 'மிஸ்டர் கூல்' பீட் சாம்ப்ராஸ் எனது ஆதர்சமாகி போனார். தனது பதினான்கு வருட காரியரில் பதினாலு கிராண்ட் ச்லாம்களை வென்று, உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரராக உருவானார். ஏழு முறை விம்பிள்டன் போட்டிகளின் சாம்பியனாகவும், ஐந்து முறை யு எஸ் ஓபன் சாம்பியனாகவும் இருந்து தொடர்ந்து ஆறு வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் ஆட்டக்காரராக இருந்துள்ளார். சர்வுகளை பேஸ் லைனில் போடுவதும் பின்னர் ரிடர்ன் ஆனா பந்தை நெட்டின் அருகே போட்டு பாய்ன்ட்களை அள்ளுவது இவரது ஸ்பெஷாலிட்டி.

அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், ஆண்ட்ரே அகாசி. ஸ்டெபி கிராப்பை மணம் முடித்து பல்லாயிரக்கணக்கான ஸ்டெபி ரசிகர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானவர்.


பீட் சாம்ப்ராஸ் , அகாசி ஆட்டம் என்றாலே மைதானம் முழுக்க பொறி பறக்கும். ஒவ்வொரு முறையும் பீட் வேல்லும்போதும் மனம் ஆனந்தக் கூத்தாடும். பீட் சாம்ப்ராசுக்கு இணையாக விளையாடக் கூடிய ஒரே நபர் அகாசி என்றே நினைத்திருந்தேன். பீட் சாம்ப்ராஸ் டென்னிஸ் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்று வெளியேறிய பின், அகாசி மட்டுமே டென்னிஸ் உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தார்.

அவரையும் வெல்ல ஒருவன் பிறந்து வருவான் என அப்போது எனக்குத் தோன்றவில்லை.


(ஆட்டம் தொடரும்...)

Wednesday, June 27, 2012

என் நிலாவும்.. நிலாத் துண்டுகளும்..
'நிலா வேணுமா...'
கேட்ட என் குட்டி நிலாவிடம்...
'ஆம்' என்று சொல்ல..
நீரில் தெரிந்த நிலாவை,
தன் குட்டிக் கரங்களால்...
அள்ளியெடுத்து
என் கைகளில் கொட்டினாள்.


'நிலா போய்டுச்சே''
என்ற என் குட்டி நிலாவின்
துக்கம் தாளாமல்,
ஒரு நிலவை
வாங்கி அளித்தேன்.


' நிலாவை' கொஞ்சி,
கூத்தாடி,
கட்டி அணைத்தபடி,
நிலவொளியில்
அவள் உறங்குவதை..
நிலாவே
பொறாமையுடன் பார்த்தது.

'நிலாவுக்கு உடம்பு சுகமில்லை'
டாக்டர் சொன்னதும்,
குட்டி நிலாவுடன்
எடுத்து சென்றிருந்த
'நிலா'
பதற்றத்தில் கீழே விழுந்து
உடைந்தது.

'நிலா உடஞ்சிருச்சி'
முனகிய நிலாவுக்கு...
உடைந்த நிலாத் துண்டுகளை,
பொறுக்க தெம்பில்லை.

இன்று,
நிலா இல்லை.
உடைந்த நிலாத் துண்டுகளை
ஓட்டத் தெரியாமல்
அழுதுகொண்டிருக்கிறேன் நான்.

- நிலா முகிலன்.

Saturday, June 16, 2012

நித்தியானந்தரும் அவரது சீடர்களும்...நித்தியானந்தர்...இந்த பெயர் தான் இப்போது பத்திரிகை,தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களுக்கும் தலைப்பு செய்திகளை அள்ளித் தருகிறது. எவ்வளவோ காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த நித்யானந்தாவின் ஆட்சிபீடம் இப்போது அஸ்திவாரத்தோடு ஆட்டம் கண்டு கலகலத்து பொய் நிற்கிறது. அனால் இப்போதும் அதே மாறா புன்னகையுடன் ஆசி வழங்குகிறார் நித்யானந்தா.

நித்யானந்தா என்ற மனிதன் யார்? எப்படி அவருக்கு இவ்வளவு புகழும் சொத்துகளும் சாத்தியமாயின?அவரது சீடர்களோ, மெத்த படித்த மேதாவிகள். மருத்துவர்கள், பொறியாளர்கள், அயல்நாட்டு பக்தர்கள், இன்று அவரது தற்கொலை படையாக, இன்று அவர் இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பின்பும் அவருக்கு அரணாக நின்றுகொண்டிருப்பது மிகுந்த ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். தனது குடும்பத்தை, தனது வாழ்க்கையை,தனது கல்வியை  உதறிவிட்டு நித்யானந்தாவின் பின்னே அணிவகுத்து நின்றவர்களின் நிலை தான் இன்று பரிதாபம்.

பொதுவாக துறவறத்தில் இருப்பவர்கள், தங்கள் பொதுவாழ்வில் கறை வந்துவிட்டால், அமைதியாக ஓட்டுக்குள் சென்றுவிடுவார்கள். தங்களது கறைகளை களைந்து தங்களை நிரபராதி(நிரபராதியாக இருந்தால்...) என நிரூபிக்கும் வரை , மீடியா வெளிச்சங்களில் இருந்து விலகி இருக்கவே விரும்புவார்கள். உதாரணமாக. சங்கர ராமன் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்ட ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர், ஒரு கன்னியாஸ்திரியை கற்பழித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட செயின்ட் ஜோசெப் கல்லூரி முதல்வர் ராஜநாயகம் போன்றோரை சொல்லலாம். ஆனால் நித்யானன்தரோ, முன்னை விட இப்போது தான் டார்லிங் ஆப் தி மீடியா வாக வலம் வருகிறார். 

கமெராவில் பதிவு பண்ணப்பட்ட வீடியோ டி வீயிலும் பத்திரிக்கை மூலமாகவும் வெளி வந்தபோது எங்கோ பொய் பதுங்கி கொண்டவர் அங்கிருந்தபடி, தான் சமாதி நிலையில் இருந்ததாகவும் அப்போது நடந்தது எதுவும் தனக்கு தெரியாது எனவும் சொன்னார். பின்னர் அது தவ வழிபாட்டில் ஒரு  வழி  என்றும் சொன்னவர், ஆட்சி மாறியபின் அடிக்கடி  பத்திரிக்கையாளர்களை   அழைத்து பிரஸ் மீட் வைக்கிறார். அந்த சீ டீ பொய் என்றும் மார்பிங் செய்யப்பட்டது என்றும், அது தனது அறையே அல்ல என்றும் பெட்டி கொடுக்கிறார். அந்த பேட்டிகளில் ஒரு துறவி போல பேசாமல், 'தூ' என துப்புகிறார். 'டம்மி பீசு.. காமடி பீசு' என்று சினிமா டயலாகுகள் அவிழ்த்து விடுகிறார். தன்னை பற்றி தவறாக பேசிய ஜெயேந்திரர் மீது வழக்கு போடுவேன் என மிரட்டுகிறார், மதுரை ஆதீனத்தில் தான் பொறுப்பு ஏற்ப்பதை எதிர்க்கும் மற்ற ஆதீனங்களை, தங்களது சீடர்கள் அவர்களது ஆதீனங்களின் முன்னே போராட்டம் செய்வார்கள் என மிரட்டுகிறார். கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை  'தூக்குடா அவனை' என கத்தி தனது சீடர்களை தாக்க சொல்ல அவர்களும் தாக்குகிறார்கள். உச்சகட்டமாக இப்போது ஆர்த்தி ராவ் என்னும் பெண்மணி நித்யானந்தரின் மீது புகார் சொன்னதும்  நித்யானந்தர்  கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட, அவர் சிறையில் இருந்தபடியே கர்னாடக அரசின் மீது மான நஷ்ட வழக்கு பத்து கோடிக்கு போடுகிறார்.

                                            சிறுவயதில் நித்தியானந்தா (நடுவில்).
துறவி என்பவர் யார்? முற்றும் துறந்தவனை தான் துறவி என்பார்கள். மற்றவர்களுக்கு சேவை செய்பவர்களை துறவி என்பார்கள். உதாரணமாக சத்யா ஸ்ரீ சாய்பாபா(புட்டபர்த்தி சாய்பாபா அல்ல), அன்னை தெரேசா, யோகி ராம்சுரத் குமார், என பலரை உதாரணம் கூறலாம். தன்னை துறவி என்று சொல்லிக் கொள்ளும் நித்யனந்தாவுக்கு எதுக்கு தங்கத்தில் மகுடம்? எதற்கு தங்க பல்லக்கு?

 புத்தன் ஊருக்கு எல்லாம் உழைத்து மக்களுக்கு ஞானம் வழங்கினான். அவன் காசு எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. புத்தனின் சீடர்கள், பிச்சை எடுத்து தான் உண்டார்கள். நித்யானந்தர் எவ்வளவு காசு வாங்குகிறார் தெரியுமா? பொதுமக்களுக்கு என்ன சேவைகள் செய்துள்ளார்? புட்டபர்த்தி சாய்பாபா சமூக செயல்கள் பலவையும் செய்துள்ளார். அவரை மந்திரவாதி என பலர் விமர்சனங்கள் வைத்தாலும், மக்களுக்கு அவர் தனது சீடர்கள் மூலம் சேவை செய்துள்ளார், வீராணம் குழாய்களை தமிழகத்துக்கு அமைத்து கொடுத்ததுக்கு சாய் பாபாவின் அறக்கட்டளை பெரும் பங்கினை ஆற்றி இருக்கிறது. நித்யானந்தரின் ஆஸ்ரமம் என்ன சமூக தொண்டு ஆற்றி இருக்கிறது. ஆசிரமத்தின் பணம், ஒரு கார்பொரேட் கம்பனியின் வல்லுனர்வுடன் பல தேசங்களில் கிளைகளை திறந்து ஆன்மிக வியாபாரத்தை விருத்தி செய்து மேலும் காசு பார்த்ததே தவிர ஆன்மிகத்தை சேவையாக செய்யவில்லை.

பல நூறு கோடி சொத்துக்களை வைத்திருந்தபோதும், மதுரை ஆதீனத்தின் மேல் நித்யானந்தருக்கு ஏன் அப்படி ஒரு அதீத மோகம்? தனக்கு அந்தப் பதவி கிடைக்காமல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் எதிர்ப்பவர்களை எல்லாம் எதற்கு தாக்கவும், வழக்கு போடவும், மிரட்டி பேட்டி கொடுக்கவும் செய்யவேண்டும்? அவர்களது சீடர்கள் எல்லாம் யார்? எந்த ஸ்டேடஸ் இல் இருந்து வந்தவர்கள்? அமைதியை நாடித்தானே சாமியார்களை நோக்கி வருகிறார்கள்? அவர்கள் எப்படி சாமியார்களின் அடியாட்களாகி அமைதியை தொலைத்து விட்டு நிற்கிறார்கள்?

இவர்களின் குடும்ப வாழ்க்கையில் கிடைக்காத  அமைதி , இப்போது இந்த அடிதடி வாழ்கையில் இவர்களுக்கு கிடைத்து விட்டதா? நித்யானந்தர் தவறு செய்தாரா இல்லையா என எனக்கு தெரியவில்லை அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. எனக்கு உண்டான கவலை எல்லாம் அவரது சீடர்களை பற்றியது. அவர்கள் அந்த அளவுக்கு படிக்க வைக்க அவர்களது பெற்றோர் எவ்வளவு சிரமப்  பட்டிருப்பர் . தனது மனைவியையும் குழந்தையும்  நடு இரவில் தவிக்க விட்டு துறவறம் சென்ற சித்தார்த்தனை கூட என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது மனைவியான யசோதையும் குழந்தையும் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நான் சிந்தித்து பார்க்கிறேன்.

இப்போது கண்ணீரும் கம்பலையுமாக பெட்டி கொடுத்த ஆர்த்தி ராவ் இன்ஜினியரிங் படித்து விட்டு அமெரிக்காவில் ஒரு பன்னாட்டு கம்பனியில் கை நிறைய சம்பளம் வாங்கி கொண்டு திருமணம் செய்து கணவனும் குழந்தையும் என செட்டில் ஆகிவிட்ட ஒரு சாமானிய ஸ்திரீ.. குடும்ப வாழ்கையில் ஏற்படும் சிறு குறைகளுக்காக மனம் வெதும்பி அனைத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு ஆன்மீகத்துக்கு வரவேண்டும் என்று நித்யானந்தரின் பின்னே வந்து விட்டு இப்போது அனைத்தையும் இழந்து நிற்கிறார். ஐந்து வருடங்களாக தன்னை அவர் உபயோகப்படுத்திக் கொண்டார் என சொல்லும் ஆர்த்தி ராவ் ஐந்து வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் நித்யானந்தரின் அறையில் வைத்த காமெரா மூலம் மற்ற பெண்களுடனும் தன்னை போலத்தான் உறவு கொள்கிறார் என்பதை அறிந்த பின்னர் தான் அவர் என்ன இப்படி மோசம் செய்து விட்டார் என மீடியாக்களின் முன்னே புலம்புகிறார். இதை ஏன் அவர் ஐந்து  ஆண்டு காலமாக  செய்யவில்லை?

இப்போது நித்யானந்தர் சிறையுள் சென்றுவிட்டால் இவரை ச்வாமியாகவே தரிசிக்கிற சீடர்களின் கதி என்ன? அவர்கள் படித்த படிப்புக்கு இப்போது என்ன மதிப்பு இருக்கும்? ஆசிரமத்தில் இருந்ததால், தங்களது படிப்பை அனுபவரீதியாக பயன் படுத்தாமல் அனுபவமற்ற நிலையில் யார் இவர்களுக்கு வேலை கொடுப்பார்கள்? இவர்களது குடும்பத்தை எப்படி எதிர் கொள்ள போகிறார்கள்? மரத்தின் அடியே அமர்ந்து த்யானம் செய்து கொண்டே சாகப் போகிறார்களா?

ஆன்மிகம் அமைதி தரும் என்றால், அதற்கென ஒரு நேரம்  ஒதுக்கி  அமைதியை தேடி கொள்ளுங்கள். அல்லது நீங்களே முழு நேர ஆன்மிகவாதியாகி துறவறம் மேற்கொள்ளுங்கள். இது போன்ற நித்யனந்தர்களின் பின்னே சென்று உங்கள் ஆன்மிகத்தை தொலைத்து அமைதியையும் இழந்து, வாழ்கையையும் வெறுத்து ஒரு  தாதாவின் அடியாட்களை போல வாழாதீர்கள். அவர் சிறை சென்றாலும் சிரித்தபடி போஸ் கொடுப்பார். உங்களை நோக்கி வாழ்க்கை சிரித்துக் கொண்டிருக்கும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...