Saturday, December 15, 2012

திரைச்சிற்பிகள் -1 (மஜீத் மஜிதி )



பனிரெண்டு வயதில் நாடகத்தின் மேல், நடிப்பின் மேல், எனக்கு ஈர்ப்பு வந்தது.  ஒரு கட்டத்தில், என் முதல் படம் இயக்க சந்தர்ப்பம் வாய்த்த போது, அந்த அனுபவங்களை பயன்படுத்திக் கொண்டேன். எனக்கு மிகவும் கடினமாக இருந்தது எனது முதல் படம் தான். என்றாலும், ஒரு இயக்குனரின் சிறந்த படம் தான், அவனது முதல் படமாக கொள்ள வேண்டும். எவ்வளவு தடைகளை  தாண்டி வந்தாலும்,ஒரு மோசமான படத்துக்கு எந்தக் காரணிகளும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடாது.
-- மஜீத் மஜிதி.
 
உலக சினிமா என்றாலே, முதலில் நம் நினைவுக்கு வருவது இரானிய சினிமாக்களே!. அப்பாஸ் க்ரியோஸ்தமி,மோசென் மக்மல்பாப் , அபோல்பாசில் ஜலிலி போன்ற ஜாம்பாவான்கள், காலத்தில் அழியா காவியங்கள் படைத்து உலக சினிமா வரைபடத்தில், இரானை அழுத்தமாக காலூன்ற செய்தவர்கள்.  
இவர்களின் வரிசையில், மறுக்கவோ மறக்கவோ முடியாத ஒரு திரை சிற்பி மஜீத் மஜிதி. அவரது திரைப்படங்களை தேடி தேடி சென்று பார்த்த அனுபவத்தில், அவரது ஒவ்வொரு படைப்பும், இன்றைய புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு பாடப் புத்தகமாக வைக்கலாம். இன்றைக்கும் யாரவது ஒரு குழந்தைக்கு காலனி அணிவித்துக் கொண்டிருந்தால் , எனக்கு மஜீத்தின்  'சில்றன் ஆப் ஹெவென் ' திரைப்படம் தான் மனத்திரையில் மின்னி மறையும்.
 
எம் ஜி ஆரையும் , சிவாஜியையும், ரஜினி, கமலையும் பார்த்து சலித்த எனது தாய், அமெரிக்காவில் சில்றன் ஆப்  ஹெவனை பார்த்துவிட்டு, மறுபடி மறுபடி ஐந்து முறை அவரை   பார்க்கவைத்தது, படத்தில் இருந்த பாடல்களோ, நாட்டியமோ உருக வைக்கும் காட்சிகளோ அல்ல. அப்படத்தின் குழந்தைகள், தன்  குழந்தைகளை அவளுக்கு ஞாபகப் படுத்தி இருக்கலாம். உலக சினிமாவை பற்றிய எந்த அறிவும் இல்லாத, தனக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத ஒரு நாட்டின், தனக்கு என்னவென்றே தெரியாத பாரசீக மொழியில் அமைந்த அந்த திரைப்படம் அவளை அவ்வளவு தூரம் பாதித்ததேன்றால், அந்த திரைமொழி எந்த வடிவத்தில் இருந்திருக்க வேண்டும்? 
 
மஜீத், இரானிய சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச் செல்ல, மெகா பட்ஜெட்டை தேடி ஓடவில்லை. சூப்பர் ஹீரோக்களை தனது படத்தில் நடிக்க வைக்கவில்லை. பயங்கரமான கதைக் களங்கள்  அவரது படத்தில் இல்லை. அவர் தனது முற்றத்தில் இருக்கும் கதைகளை, தனது கிராமங்களில், தான் சந்தித்த மனிதர்களிடம் இருந்து தான் கதைகளை எடுத்துக் கொண்டார். மெல்லிய மனித உணர்வுகளை, நமக்கே தெரியாமல் நமக்குள் புதைந்திருக்கும் மனித தருணங்களை வெளியே கொண்டு வந்தார். மேற்கத்தைய  உலகின் திரைகள் தொலைத்துவிட்ட மனிதத்தை, இரானிய திரைப்படங்களின் மூலம் ஞாபகமூட்டிக் கொண்டிருந்தன அவரது திரைப் படங்கள்.
 
மேற்கத்தைய நாடுகளின் திரைப்படங்கள் தொலைத்துவிட்ட மனிதத்தை திரையில் காட்டும் உங்களுக்கு  உங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையா? என கேட்ட ஒரு நிருபரிடம் இப்படி பதில் அளிக்கிறார் மஜீதி.

'இரான் கலாசாரத்துக்கு பெயர் போன ஒரு பழம் பெரும் நாடு. 'ஹபீஸ்,சாடி ரூமி போன்ற இலக்கியவாதிகளை உலகத்துக்கு தந்த நாடு. அவர்களின் கவிதைகளில், மனிதம் மேலாக இருக்கும்.  எனக்கு எனது கலாசாரம் மட்டுமே தெரியும். மேற்க்கத்திய உலகம் தனது கலாசாரத்தை தொலைத்துவிட்டு புதிய உலகம் நோக்கி நடைபோடுகிறது. மனிதம் பிணைந்த கலாசாரத்தில் வாழும் நாங்கள், அதனை சார்ந்து தான் எங்கள் திரைப்படங்களும் இயங்கி கொண்டிருக்கிறது. எங்களது கலாசாரம் அப்படி. என்னால் எனது நாட்டினை விட்டு வெளியே சென்று படம் எடுக்க முடியாது.'
 
திறமை சாலிகள் பலரை கொண்டிருக்கும் தமிழ் சினிமா ஏன்  இன்னமும் உலக அளவில் கவனிக்கப் படவில்லை என இப்போது புரிகிறதா? நாம் மேற்கத்திய கலாசாரம் தான் உயர்ந்தது என நினைத்து நாம் நமது மதிப்பீடுகளை விட்டு விட்டு அவர்களுக்கு தகுந்தமாதிரி தானே படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நமது பண்பாட்டையும் கலையையும் கலாசாரத்தையும் உலகத்துக்கு காடக் கூடிய திரைப்படங்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்.
 
மஜீதின் சில திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.
 
சில்றன் ஆப ஹெவென்:

 தங்கையின் அறுந்து போன ஷூவை தைத்து வருவதற்காக அண்ணன், அதனை தொலைத்து விட, குடும்ப கஷ்டத்தில் இருக்கும் அப்பாவை சங்கடபடுத்த வேண்டாம் என்று அண்ணனும் தங்கையும் தாங்கள் வேறு வேறு நேரங்களில் பள்ளி செல்லும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.காலையில் பள்ளி செல்லும் தங்கை, அண்ணனின் ஷூவை அணிந்து செல்கிறாள். மதியம் வகுப்புகளுக்கு செல்லும் அண்ணன் பாதி வழியில் தங்கையிடம் இருந்து ஷூவை அணிந்து பள்ளிக்கு செல்கிறான். இடையே அண்ணனது பள்ளியில் ஓட்டபந்தயம் வைக்கப்பட அந்த பந்தயத்தில் மூன்றாம் பரிசு அழகிய ஷூக்கள் என்று அறிவிக்கப் பட, அண்ணன் தனது இத்துப்போன ஷூவை வைத்து ஓடி மூன்றாம் பரிசு வென்று அந்த ஷூவை தன தங்கைக்கு அளிக்க நினைத்து பந்தயத்தில் கலந்து கொள்கிறான். கதை சிம்பிளாக இருந்தாலும் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்ல உதவி இருக்கும் திரைக்கதை அபாரம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த அண்ணன் தங்கையை தனது வீட்டு மாந்தர்கள் போல உணருவதால் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

கலர் ஆப் பாரடைஸ்:

 பார்வை இழந்த சிறுவனை, மனைவியை இழந்த அவன் தந்தை நிராகரிக்கிறான். அந்த சிறுவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவனுடைய பாட்டியும் அவனது சகோதரிகளும். அவனது தந்தைக்கு வேறொரு பெண்ணை மணம் முடிக்க ஆசை. ஆனால் பார்வை இழந்த மகனை உடைய அவனை மணக்க, பெண்ணின் வீட்டில் சம்மதிக்க வில்லை. எனவே அவன் தனது மகனை வெறுக்க ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் தன வாழ்கையை பாழ்படுத்திய தனது மகனையே கொல்ல நினைக்கிறான். இந்த படம் பார்ப்பவர்களின் உள்ளத்தை உருக்கி விடும். அந்த சிறுவன் முகம்மது ஆகா நடித்திருக்கும் சிறுவன் மொஹ்சென் ராமெசானி க்கு நிஜ வாழ்விலும் கண் பார்வை கிடையாது. படத்தின் வசனங்கள் மிகவும் அருமை. படத்தில் வரும் ஒரு வசனம் :'எனது டீச்சர், கடவுள் பார்வை அற்றவர்களை மிகவும் விரும்புவார் என சொல்ல, நான் பதிலளித்தேன், கடவுள் என்னை விரும்பினால் என்னை ஏன் பார்வையற்றவனாக படைக்க வேண்டும். எனக்கு பார்வை இருந்தால் நான் இறைவனை காண முடியுமே. அதற்க்கு டீச்சர் சொன்னார், கடவுள் எங்கும் இருக்கிறார், உன் விரல் நுனியில் கூட அவனை நீ காணலாம். நான் என் கைகளை வைத்து தேடிக் கொண்டே இருக்கிறேன் அவன் அகப்படவே இல்லை.' இந்த வசனம் கூறும்போது காற்றில் அலை பாயும் முகம்மதுவின் கரங்களை கண்டு நம் கண்கள் கசிவது நிச்சயம்.

பாரான்:

ஆப்கன் அகதியான லதீப் இரானில் கட்டிட வேலை செய்யும் நபர்களுக்கு டீ யும் உணவும் தயார் செய்யம் வேலை செய்கிறான். எந்த குறையும் இல்லாத ஒரு மகிழ்வான வாழ்வு வாழும் லதீபுக்கு, சுகவீனமான நஜாப் கட்டிட வேலை செய்ய முடியாததால் தனது மகன் ரஹைம்மத்தை வேலைக்கு அனுப்ப, பலகீனமான ரஹைம்மத்தால் கடுமையான கட்டிட வேலைகள் செய்ய இயலாமல் போக, லத்தீபை அந்த பணிக்கு அமர்த்திவிட்டு ரஹைம்மத்துக்கு லத்தீப்பின் வேலை கொடுக்கப்பட, அவன் மீது வெறுப்புடன் அலைகிறான் லத்தீப். ஒரு சமயத்தில் ரஹைம்மத் ஒரு பெண் என அறிந்து கொள்ளும் லத்தீப், அவள் மீது ஒரு ஈர்ப்புடன் அலைகிறான். அவள் மேல் அவனுக்கு காதல் என்பதை அவனது முகபாவனைகளை வைத்தே உணர்த்தும் யுக்தியும், ரஹஅம்மத் ஒரு பெண் என்பதை அவளது தலை முடி வைத்து காட்டும் யுக்தியும் அருமை. ஒரு மெல்லிய காதல் கதை, ஒரு பறவையின் சிறகை போல மெல்ல வருடுகிறது.

தி வில்லோ ட்ரீ :
கண் பார்வையற்ற ஒரு பேராசிரியருக்கு நல்ல மனைவி குழந்தை என்ற அழகான குடும்பம்.அவனுக்கு பார்வை திரும்ப சாத்தியம் இருக்கிறது என அறிந்து பிரான்ஸ் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள, அவனுக்கு பார்வை திரும்புகிறது. பார்வை திரும்பியதால் அவன் சில தீய எண்ணங்களால் உந்தப்பட்டு, பார்வை இல்லாமல் இருந்தபோது அவனுக்கு கிடைத்த நிம்மதியை இழந்து நிற்கிறான். படத்தில் சிலிர்ப்பூட்டும் ஒரு காட்சி, அவன் கண் பார்வை பெற்று திரும்பியவுடன், விமான நிலையத்தில் காத்திருக்கும்,அவனை கண்டதும் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில், யார் யார் எவர் என தெரியாமல் முழித்தபடி, கூட்டத்தில் அனைவரும் சிரித்தபடி அவனுக்கு கை ஆட, ஒரே ஒரு பெண் ஓரமாக அவனை பார்த்தபடி அழுது கொண்டிருப்பதை கண்டதும் 'அம்மா' என்று சொல்லும் காட்சியை வைக்க, மஜீத்துக்கு மட்டும் தான் தெரியும்.

இன்னமும், நெருப்புக் கோழி வளர்க்கும் பண்ணையில் வேலை பார்க்கும் கரீம், ஒரு சந்தர்பத்தில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நெருப்புக் கோழிகளில் ஒன்று தப்பித்துவிட, தனது மகளின் காத்து கேட்கும் கருவியை வாங்க முடியாது அல்லாடும் தகப்பனின் கதையான 'தி சாங்க்ஸ் ஆப் ஸ்பர்ரோவ்ஸ்' மற்றும் தகப்பனை இழந்த மேஹரோல்லா, மறுமணம் செய்து கொள்ளும் தாயை வெறுக்கும் பாதர் கதையும் இன்னமும் பார்க்க கிடக்கின்றன.

உங்கள் படங்களில் குழந்தைகளை அதிகமாக காண முடிகிறதே, என்ற கேள்விக்கு மஜித்தின் பதில், 'நானும் குழந்தை ப்ராயத்துக்காக ஏங்குபவன் தான். எனது சிறுவயது பிராயங்களில் நடந்த சில சம்பவங்களையும் எனது படங்களில் தொகுக்க முயல்கிறேன். இந்த பிராயம் தான், குழந்தை பருவத்தையும், பதின்ம பருவத்தையும் இணைக்கிறது'. தனது பல படங்களில் பல தருணங்களில், நடிகர்களுக்கு தெரியாத இடத்தை காமராக்களை வைத்து விடுவது இவரது பாணி. அதன் மூலம் இயற்கையான நடிப்பை அவர்களிடம் இருந்து வரவழைக்க முடியும் என நம்புகிறார்.

 அவரது ஒவ்வொரு படங்களையும், ஒரு கலை சிற்பி போல செதுக்கி எடுக்கிறார். அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு உருவகத்தை உபயோகபடுத்தி இருப்பார். சில்றன் ஆப் ஹெவனில் 'ஷூ', 'கலர் ஆப் பாரடைசில்' வண்ணத்து பூச்சி, 'தி வில்லோ ட்ரீயில்' கட்டெறும்பு, பாரானில் மழை என அவைகளையும் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டிருப்பார். இரானின் கலாச்சாரமும், இந்திய கலாச்சாரமும் ஒன்றுகொன்று பின்னி பிணைந்து கிடப்பதால், நம்மால் அவரது படத்தோடு ஒன்ற முடிகிறது.

இரானை, குறையுள்ள நாடாக காட்டக் கூடாது , பெண்களை ஆடை குறைத்துக் காட்டக்கூடாது, என பலபல கட்டுபாடுகள் உள்ள இரானிலிருந்து தான் இது போன்ற உலகத்தரமான படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. வியாபார நோக்கத்தை பொருட்படுத்தாது கலையை கலையாகவே காட்ட மஜீத் மஜிதி தவறியதில்லை.அதற்காக அவர் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. இதற்காகவே, அவரது படங்களை தேடி தேடி பார்த்து புல்லரித்துக் கொண்டிருக்கிறேன். அவரது படங்கள் தரும் உணர்வுகளை நான் ரசித்துக் கொண்டே இருக்கிறேன்.
-நன்றி. soundcameraaction.com க் காக நிலாமுகிலன்
 

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...