Saturday, August 23, 2008

உலக சினிமா: சில்ட்றேன் ஆப் ஹெவென்(Children of heaven)....காலணியே கதாநாயகன்!எத்தனையோ கோயில்களில், மண்டபங்களில் மற்றும் எங்கெங்கோ நமது செருப்பை, காலணியை தவற விட்டிருப்போம். அதனை பற்றி அந்த சமயத்தில் நினைத்து கவலை படுவோம். அதன் பிறகு புது காலணி வாங்கிய பின் தொலைந்த செருப்பை பற்றி நினைத்து கூட பார்க்கமாட்டோம். படம் முழுக்க காலணியே கதாநாயகனாக அல்லது முதன்மையான கதாபாத்திரமாக நடிக்க முடியுமா....முடியும் என நிரூபித்திருக்கிறது மஜித் மஜீதியின் படைப்பான இரானிய திரைப்படம் 'சில்ட்றேன் ஆப் ஹெவென்' (Children of heaven).

ஒரு சிறுவன் ஒரு சிறுமி, ஒரு ஜோடி காலணி. இது தான் படமே. இதனை வைத்து கொண்டு படம் முழுக்க இருக்கை நுனியில் அமரவைத்திருக்கிறார் இயக்குனர் மஜீத் மஜீதி.
ஒரு முதியவர் ஒரு ஷூவை தைத்து கொண்டிருக்கிறார். தைத்து முடித்தும் ஷூக்களை அருகில் வைத்து விட்டு அம்மா வாங்கி வர சொன்ன உருளை கிழங்கை எடுத்து கொண்டிருக்கும்போது குப்பை எடுக்க வந்த கண் இல்லாத ஒருவர் செய்தி தாளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஷூவையும் தவறுதலாய் எடுத்து பொய் விடுகிறார்.
தேடிப்பார்க்கும் சிறுவன்.. அழுகையுடன் வீட்டுக்கு வருகிறான். அவர்கள் குடும்பம் ஏழை குடும்பம். தந்தை உப்பு கல்லை வாங்கி உடைத்து வீடுகளில் விற்று பணம் சம்பாதிப்பவர். அம்மாவுக்கோ சீக்கு. தங்கையின் ஷூவை தொலைத்து விட்டதாக அவளிடம் கூறுகிறான் சிறுவன். தங்கையோ அண்ணனை அப்பாவிடம் காட்டி கொடுத்து விடாமல் தான் ஷூ போடவில்லைஎன்றால் பள்ளியில் அனுமதிக்க விடமாட்டார்களே என வருந்த அதற்க்கு ஒரு யோசனை சொல்கிறான் அண்ணன். இரானில் காலையில் பெண்கள் பள்ளியும் மாலையில் ஆண்கள் பள்ளியும் இயங்கும்.எனவே காலையில் தங்கை அண்ணனின் ஷூவை போட்டு செல்லவேண்டியது. மதியம் வேக வேகமாக ஓடி வந்து பாதி வழியில் பள்ளி செல்லும் வழியில் காத்திருக்கும் அண்ணனிடம் தங்கை கொடுத்துவிட வேண்டியது. இதற்கிடையில் காணாமல் போன ஷூவை கண்டு பிடிக்க வேண்டியது என முடிவு எடுக்கிறார்கள்.தந்தையும் தாயும் அருகருகே அமர்ந்து குடும்ப கஷ்டத்தை பேசி கொண்டிருக்க...அண்ணனும் தங்கையும் மாறி மாறி தங்கள் நோட்டு புத்தகத்திலேயே எழுதி இத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்கிறார்கள். அப்பா இருக்கும் கஷ்டத்தில் அவரை புதிதாக ஷூ வங்கி தர சொல்லி நச்சரிக்க குடும்ப கஷ்டம் உணர்ந்த அந்த பிள்ளைகள் முயலவில்லை.

அவர்களின் திட்டப்படி காலையில் பள்ளி செல்லும் தங்கை, பள்ளி முடிந்ததும்அரக்கப் பறக்க ஓடி வந்து, வழியில் நிற்கும் அண்ணனிடம் ஷூவை கொடுத்து விட்டு அவன் அணிந்து வந்திருக்கும் செருப்பை அணிந்து வீட்டுக்கு வருகிறாள்.

ஒரு முறை தங்கை பள்ளி முடிந்ததும் அண்ணனை நோக்கி ஓடி வருகையில் அவளது ஷூ பறந்து சென்று ஒரு கால்வாயில் விழுந்து விடுகிறது. அதனை துரத்தி கொண்டு தங்கை அழுதபடி ஓடுகிறாள், நல்ல இதயம் படைத்த ஒரு பெரியவர் வந்து அவளுக்கு உதவி செய்து கால்வாயில் விழுந்த அவளது ஷூவை அவளுக்கு எடுத்து தருகிறார். அவள் வர தாமதமாகி விடுவதால் அண்ணன் தாமதமாக பள்ளி செல்ல தலைமை ஆசிரியரால் தண்டிக்க படுகிறான். இப்படி ஷூவினால் அண்ணனும் தங்கையும் கஷ்டபடுவதை அருமையாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.
கடைகளில் விலை உயர்ந்த ஷூவை பார்க்கும் வேலையில் எல்லாம் ஷூ இல்லாமல் தங்கை கஷ்டப்படுவதை உணர்ந்து மனம் வருந்துகிறான் அண்ணன்.
ஒரு நாள் தான் கூட படிக்கும் ஒரு பெண் தனது ஷூவை அணிந்திருப்பதை பார்த்து விடுகிறாள் தங்கை. உடனே அவள் தனது சகோதரனிடம் சொல்ல, அவர்கள் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு செல்கிறார்கள். அப்போது தான் அந்தப் பெண் தங்களை விட ஏழை என்றும் அவளது தந்தை தான் அந்த குப்பை எடுத்து செல்லும் கண் பார்வையற்ற அந்த பெரியவர் என்றும் உணர்ந்து அவளிடம் ஷூவை கேட்காமல் வந்து விடுகிறார்கள்.
அவர்களுக்கு அல்வா மாதிரி ஒரு சேதி கிடைக்கிறது. ஆம் அந்த சிறுவனின் பள்ளியில் நடக்கும் ஓட்ட பந்தயம் தான் அது. முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு மேல் அந்த சிறுவனின் கவனம் செல்லவில்லை. மூன்றாம் பரிசு ஒரு விலை உயர்ந்த ஷூ. அனைவரும் முதலாவதாக வரவேண்டும் என தான் நினைப்போம். ஆனால் அந்த பாசம் மிகுந்த அண்ணனோ அந்த போட்டியில் எப்படியாவது மூன்றாவதாக வந்து அந்த ஷூவை பரிசாக பெற்று தங்கைக்கு பரிசளிக்க வேண்டும் என விரும்புகிறான்.
அடுத்து நடைபெறும் ஓட்டப்பந்தயம் தான் படத்தின் கிளைமாக்ஸ். கிளைமாக்ஸ் மட்டுமே படத்தில் இருபத்து நிமிடங்கள். நம்மை நகம் கடிக்கவைத்து அடுத்து என்னாகுமோ என மனம் பதைபதைக்க வைக்கிறது.
உலகின் பல விருதுகளை தட்டி சென்ற திரைப்படம். ஈரானிய திரைப்படங்களை உலக தரத்துக்கு எடுத்து சென்ற மிக எளிமையான திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை அமைப்பு ப்ரம்மிக்கத்தக்கவகையில் உள்ளது.
இத்திரைப்படத்தை அவசியம் உங்கள் வீட்டு குழந்தைகளுடன் பாருங்கள்.

11 comments:

Anonymous said...

அருமையான படம். மனதை கனமாக்கிய படம். படத்தை பார்த்தவுடன் எதோ ஒரு உணர்வு. குழந்தைகளாக இருந்த போதும் அவர்களுக்கிடையே தென்படும் பொறுப்புணர்ச்சி, சகிப்புத்தன்மை, புரிந்துணரும் தண்மை நம்மை வியக்க வைக்கும். சிறுவனும் சிறுமியும் இயல்பாக கதையுடன் பொருந்தி இருப்பார்கள்.

வேகத்துடன் ஓடி பரிசு பெறவேண்டும் என்று நினைக்கும் அந்த சிறுவனின் முகபாவங்கள் சொல்ல வார்த்தைகளே இல்லை.

முதல் பரிசு கிடைத்தும் எதிர் பார்த்தது கிடைக்காமல் தங்கைக்கு பதில் சொல்லும் வழியறியாமல் தலைகவிழ்ந்து நிற்க்கும் போதும், தன்னை சுற்றி நடக்கும் ஆரவாரங்களுக்கு கிடையே வேதனையோடு காணப்டுவதும்.... அருமையாக காட்சி படுத்தி இருப்பார்கள்.

Anonymous said...

பதிவர் தமிழ்ப்பிரியன் இதே திரைப்படத்தை முழுவதும் தனது இந்த பதிவில் கொடுத்து இருக்கிறார். http://majinnah.blogspot.com/search/label/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

ஹேமா said...

முகிலன் இனி ஏன் படம் பாக்கணும்.
அருமையான விமர்சனம்.இப்படியான ப்டங்களை பார்க்கும்போது எங்கள் தமிழ்ப்படங்கள் சீ...சீ...சீ.எத்தனை கோடிகளைச் செலவு செய்து,வேற்று மொழி நடிகைகளைக் கூட்டி வந்து,
அரைகுறை ஆடைகளுடன்ஆடவிட்டு..
ஐயோ வேணாம்.விடுங்க.

நிலா முகிலன் said...

உண்மை மது. இப்படத்தை பார்த்தும் தான் இப்படி கூட படம் எடுக்க முடியுமா என தோன்றியது. இயக்குனரின் ஷூ ஐடியா அருமை. அது போல படத்தில் நடித்திருந்த ஆண்ட சிறுமியும் சிறுவனும்.. எதோ ஒளிந்திருந்து அவர்கள் வாழ்க்கையை பார்ப்பது போல இருந்தது. அப்படத்தின் இணைப்புக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.

நிலா முகிலன் said...

நன்றி ஹேமா. தமிழிலும் அத்தி பூத்தார் போல 'முள்ளும் மலரும்', 'உதிரி பூக்கள்', 'குட்டி' போன்ற படங்களும் வருகின்றன. ஆனால் அவ்வாறான படங்கள் மிக சொற்பமே.

Gokulan said...

வாவ்.. கதையே அவ்வளவு அருமையாக இருக்கிறது.. கண்டிப்பாக பார்க்கிறேன்..

jackiesekar said...

நிலா மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

sharevivek said...

அருமையான விமர்சனம்..
நான் The Last Samurai - என்ற திரை படம் பார்த்தேன் .. அதுபோல் இதுவும் ஒன்று...

Anonymous said...

anpin nilaa mukilan

neeram kidaiththaal

www.vimbam.blogspot.com
pathivai paarththu thanghkalin karuththai pathividungkal

ரவிசங்கர் said...

இத்திரைப்படத்தை இங்கு பெறலாம்.

vinoth said...

இந்த படத்தை நானும் சமிபத்தில் பார்த்தேன் ஆனால் கடைசி 40நிமிடங்கள் மட்டும் தான். அருமையான படைப்பு. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போவதாக ஒரு ஸ்கூப் கேள்வி பட்டேன். சிறுவனாக தர்ஷன்(taare zameen paar) நடிக்கிறார். டைரக்டர் பிரியாதர்ஷன்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...