Wednesday, August 6, 2008

சுப்ரமணியபுரம் - காதலின்/நட்பின் துரோகங்கள்...

அனைவரும் புதுமுகங்கள் என்றாலும் அப்படத்தின் புகைப்படங்கள் என்னை கவர்ந்தன. எனது சகோதரர்கள் எண்பதுகளில் அலைந்து திரிந்த உடையுடன் காட்சி தந்த அந்த இளைஞர்கள் என்னை வித்தியாச திரைப்படத்திற்கு காத்திருக்க வைத்தனர்.
'இந்த சினிமா வந்த கண்டிப்பா பாக்கணும்' அப்டின்னு சில படங்களுக்கு மட்டும் தான் தோன்றும். அப்படி தோன்ற வைத்த திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். ஒருதலை ராகம் போல எண்பதுகளில் வந்த காதல் திரைப்படம் என்று எதிர்பார்த்து போனவனுக்கு அதிர்ச்சி.. காதல் மற்றும் நட்பின் துரோகத்தை சொல்லி பளார் என அறைகிறது திரைப்படம்.
ஹாலிவூடின் மார்ட்டின் ச்கோர்சீசீ படத்தை பார்க்கிற உணர்வு படம் எங்கும் வியாபித்திருந்தது. திரைப்படத்தின் முதல் பகுதியில் அழகரின் சிரிப்பும் துளசியின் கண்களும் கவிதை பாடிகொண்டிருக்கிறது. இந்த இருவர் தான் படத்தின் முதற் பகுதியின் பிரதான பாத்திரங்கள் என்றாலும் இருவருக்கும் உள்ள வசனங்களோ ஒரு தாளின் அரைப்பக்கத்துக்கு மேல் மிகாது. இருவரின் இயல்பான முகபாவங்களே படத்தை நகர்த்தி செல்கிறது...
பரமன்,அழகர்,காசி, டும்கான் மற்றும் ஒருவன் என ஐந்து வேலை வெட்டி இல்லாத நண்பர்களை, வாழ்ந்து கெட்ட அரசியல் குடும்பம் தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்தி கொள்கிறது. அவர்களுக்காக கொலை செய்துவிட்டு சிறை செல்லும் பரமன் மற்றும் அழகர் அவர்களது உண்மை முகம் தெரிந்து அவர்களை 'போட்டு தள்ள' முயல... அவர்களின் காதலும் நட்பும் துரோகம் செய்து அவர்களை பழி வாங்கி விடுவது தன் கதை...
சமுதிரகனியின் அளவுக்கு அதிகம் இல்லாத வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது..இளைஞர்களை ஒரு விடுதி அறையில் மூளை சலவை செய்யும் போதும் துளசியின் காலடியில் விழுந்து கெஞ்சும் போதும் இயல்பான வில்லத்தனமான நடிப்பில் மிளிர்கிறார்.
கதாநாயகனாக வரும் ஜெய், பாதி படம் துளசியிடம் சிரித்தபடி வளைய வந்து மீதி படங்கள் அரிவாளை தூக்கி திகிலூட்டுகிறார். பரமனிடம் ' ஒரு பொம்பள கிட்ட உயிர் பிச்ச கேக்க வச்சுட்டாய்ங்கடா' என கதறும்போது அவரது நடிப்புத் திறமை வெளிப்படுகிறது..
துளசிக்கு இப்படத்தில் அவ்வளவு வேலை இல்லை என்றாலும்.. அவரது பார்வை அம்புகளால் மனதை அள்ளுகிறார். 'கஞ்சா' கருப்புக்கு இது ஒரு முக்கியமான படம். டும்கானாக வருபவரும் தனது இயல்பு நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார்..
இயக்குனர் சசிகுமாரின், அமைதியாக வந்து ரௌத்திரம் காட்டுகிறார்..ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார்... அனாவசியமான சண்டை கட்சிகளோ இடுப்பை ஆட்டும் மலிவான நடனங்களோ இன்றி படத்தை உண்மைக்கு வெகு அருகில் கொண்டு சென்றிருக்கிறார். அனைவரையும் புதுமுகங்களாக வைத்துக்கொண்டு தானே படத்தை தயாரித்து வெளியிட அவருக்கு அவரின் கதையின் மேல் அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை வீண் போக்க வில்லை தமிழ் நாடு.. தமிழ் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக இப்படமே தரவரிசையில் முதலில் இருக்கிறது...
ஜெம்ஸ் வசந்தனில் இசையில் 'கண்கள் இரண்டால்..' தாலாட்டுகிறது..பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார்... அழகர் மற்றும் காசி எதிரிகளிடமிருந்து தப்பிக்க சந்துகளின் தெருக்களில் ஓடும்போது புகுந்து புறப்படும் கதிரின் ஒளிப்பதிவு உலக தரம்.கலை இயக்குனர் ரேம்போன் தான் படத்தின் முதுகெலும்பு...எண்பதுகளின் உலகத்தை கலை நேர்த்தியுடன் வடிவமைத்திருக்கிறார்...( அந்த கால கட்டத்தின் தொலைக்காட்சி பெட்டி, செய்தி தாள் உட்பட...)
படத்தில் ரத்த காட்சிகளும் வன்முறை காட்சிகளும் ஏராளம். அதனை இயக்குனர் சிறிது குறைத்து மாற்று காட்சிகளால் உணர்த்தி இருக்கலாம்... அப்படி உணர்த்தி இருந்தால் படத்தின் வீச்சு பாதிக்கும் என அவர் நினைதிருக்கலாமோ என்னமோ..
தண்ணி அடித்துவிட்டு சலம்பல் பண்ணினாலே வந்து அள்ளிக்கொண்டு போகும் போலீஸ் ,அழகர் மற்றும் பரமன் இரண்டாவது பகுதியில் செய்யும் கொலைகளுக்கு எங்கயும் காணோம்...

அரசியல்வாதிகளுக்காகவும் காசுக்காகவும் கொலை செய்வோரில் ஒருவன் ஆவது இப்படத்தை பார்த்துவிட்டு திருந்தும் வாய்ப்பு இருக்கிறது..

படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால்.. மார்ட்டின் ச்கோர்சீசீ படம் பார்த்த உணர்வு..

இயக்குனர் சசிகுமார் வென்றிருக்கிறார் சுப்ரமணியபுரம் கோட்டை கட்டி.. தனது முதல் படத்திலேயே..

3 comments:

jayaraj j said...

Great review !!!
I am tempted to see this great movie after seeing your indepth analysis of the movie

Anonymous said...

அப்படத்தின் புகைப்படங்கள் என்னை கவர்ந்தன. எனது சகோதரர்கள் எண்பதுகளில் அலைந்து திரிந்த உடையுடன் காட்சி தந்த அந்த இளைஞர்கள்
very true

review nantaga irunthathu

ஒரு பொம்பள கிட்ட உயிர் பிச்ச கேக்க வச்சுட்டாய்ங்கடா'
Nam vuyirai valarthaval oru pen enpathai yeano maranthu vidukiraarkal.
oru pen illai ental yethu jananam..
athanal athil ilivu ethum illai..oru aan maganin kaalil viluunthal athu perumaiya..
konjam yosingappa...Director Sir, please change your thoughts

நிலா முகிலன் said...

ஜெயராஜ் மற்றும் பெயர் தெரியாத பின்னூட்ட பதிவாளருக்கும் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...