Saturday, November 8, 2008

கடவுளும் நானும்...


கடவுள் யார்?...கடவுள் இருக்கிறாரா..?
கடவுளை யாரும் கண்டதுண்டா?..
எதற்காக மதத்தின் பெயரால் குண்டுகள் வெடிக்கின்றன?
எதற்காக மதத்தின் பெயரால் வீடுகள் பற்றி எரிகின்றன?
எதற்காக பல உயிர்கள் மதத்தினால் மதம் பிடித்தவர்களால் பறிக்கப்படுகின்றன?

கடவுள் தனக்காக தான் படைத்த மனிதனின் உயிர்களை காவு கேட்டாரா?தான் படைத்த மனிதர்களின் உயிர்களை, தனது பெயரால் சிதைக்கும்போது...கடவுளுக்கு கோவம் வராதா..?


எனக்கு நினைவு தெரிந்த நாளில் எனக்கு 'தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்தும்' என சொல்லி தரப்பட்டிருக்கிறது. தப்பு செஞ்சா சாமி கண்ணை குத்துமா? இன்னமும் அப்படி தான் நம்பி கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஏதாவது துன்பம் நேரும்போதெல்லாம், நான் முன்பு செய்த தப்புக்காக தான் எனக்கு தண்டனை கிடைக்கிறது என நினைத்து கொள்வேன். ஏதாவது தப்பு செய்யும்போதெல்லாம் 'ஐயோ இப்படி செய்கிறோமே.. இதனால் நமக்கு என்ன துன்பம் நேர போகுதோ' என எண்ணி இருப்பேன். எனக்கு துன்பம் வரும் வேளையில் ' ஒ அன்று செய்த தப்புக்கு இன்று நமக்கு தண்டனைக் கொடுத்தான் ஆண்டவன் என்றே நினைத்து கொள்வேன்.

சரி தண்டனை கொடுத்தது ஆண்டவன் தான் என எப்படி எனக்கு தெரிந்தது? எனக்கு அந்த கடவுள் மேல் ஆணையாக தெரியாது. என் என்றால் நான் கடவுளை கண்டதில்லை. ஆனால், கடவுள் நமது செயல்கள் ஒவ்வொன்றும் பார்த்து கொண்டிருக்கிறார் என்ற நினைவே என்னை பல சமயங்களில் தப்பு செய்ய விடாமல் தடுத்திருக்கிறது. அப்படி என்றால் கடவுள் தேவை தானா?

என்னை பொறுத்தவரை.. கடவுள் நிச்சயமாக தேவை.. ஆனால் அது அடுத்தவனின் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்காதவரையில்...? எனது சாமியை கும்பிடாதவனை நான் பழித்ததும் இல்லை, அடுத்தவன் சாமியை நான் பழித்ததும் இல்லை.


எது ஒன்று நம்மை தப்பு செய்ய விடாமல் தடுக்கிறதோ அது நமக்கு தேவையா இல்லையா? சிலர் ' மனசாட்சிக்கு பயந்தா போதும் ' என்று சொல்வார்கள். அவர்களுக்கு தெரியாதா 'மனம் ஒரு குரங்கு ' என்று. ஆசை என்ற சொல்லே மனசு என்பதில் இருந்து தானே வந்தது. ஆசை அளவுக்கு மீறும்போது தானே தப்பு செய்யவே செய்கிறோம். எனவே மனசாட்சிக்கு பயப்படுவது என்பது அங்கேயே அடிபட்டு போகிறது. உதாரணமாக ஐஸ்வர்யா ராயை பார்க்க ஆசைப்படுவது தப்பில்லை. ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கே ஆசைப்படுவது தப்பு தானே. அதையும் மனசு தானே படுகிறது?

சரி ஆனால் தான் கண்டிராத கடவுளை, படங்களிலும் சித்திரங்களிலும், கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளிலும் மட்டுமே பார்க்கப்பட்ட கடவுளுக்காக, எதற்காக இந்த போராட்டம்? தங்களது உயிர்களை பணயம் வைக்கும் அளவுக்கு கடவுள் என்ன செய்துவிட்டார் இவர்களுக்கு... தனது இனத்தையே அழிக்கும் அளவுக்கு இவர்களின் வெறி ஏன் உச்சத்திற்கு போகிறது? இதனால் இவர்களது கடவுளின் அந்தஸ்த்து பெருகி விடுமா? அல்லது கடவுள் இவர்களின் தியாகங்களையும் தீவிரவாதத்தையும் பார்த்து ஆனந்த கூத்தாடுவாரா?( நான் எல்லா மதங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்) பணம் கொடுத்து மதம் மாற்றம் பண்ண கடவுள் சொல்கிறாரா? ...

கடவுளுக்கு நான் பயப்படுகிறேன் என்று கூறினது போல.. மனித வடிவங்களில் கடவுள்களை நான் வணங்குகிறேன். பாபா ஆம்தே, அன்னை தெரசா போன்றவர்கள்..தங்கள் செய்கைகளால் கடவுளை காக்கவில்லை. கடவுளுக்காக துப்பாக்கி ஏந்தவில்லை. கடவுளுக்காக சூலாயுதம் தரிக்கவில்லை. கடவுளுக்காக வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு மனிதர்களை ரத்த சகதிக்குள் பிணங்களாக மற்ற வில்லை. தங்கள் செய்கைகளால் அவர்களே கடவுளாக மாறிவிட்டனர் என்பது தான் உண்மை.


கடவுள் படைத்ததாக சொல்லப்படும் உயிர்களை காவு வாங்குவதன் மூலம் நீ கடவுளை முட்டாளாக்கி கொண்டிருக்கிறாய். அந்த கடவுளை விட்டு வெகு தூரம் சென்று கொண்டிருக்கிறாய்...
கடவுளை காக்கும் வேலை உனக்கு வேண்டாம். உலகத்தையே காக்கிற கடவுள் தன்னை காப்பாற்றிக்கொள்ளமாட்டாரா? தன்னையே காப்பாற்றிக்கொள்ள தெரியாத கடவுள், கடவுள் தானா? நீ உன்னையும் உன் தாய் தகப்பனையும் உன் பொண்டாட்டி புள்ளைகுட்டியையும் காப்பாற்றிகொள். உலகத்தை காக்கும் கடவுள், தன்னை காப்பாற்றி கொள்வார்.

Wednesday, October 8, 2008

நடிகர்கள் ஏன் நாடாளக்கூடாது?

எம்ஜியார்தொடங்கி இன்று வந்துள்ள சிரஞ்சீவி வரை நடிகர்கள் அரசியலில் குதித்திருக்கிறார்கள். நடிகர்கள் நாடாள வர கூடாது என்றும் கூத்தாடிகளுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்றும் ஒரு சாரார் பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்க, பல நடிகர்கள் இன்னமும் அரசியல் கட்சி தொடங்கும் முனைப்போடு தான் இருக்கிறார்கள்.

1953 வரை காங்கிரஸில் இருந்த எம்ஜியார், கருணாநிதியால் திமுக விற்கு அழைத்து வரப்பட்டார். கருணாநிதியுடன் ஏற்ப்பட்ட பிணக்கால் 1972 இல் அதிமுக கட்சியை துவக்கினார். அவர் 1987 இல் தான் இறக்கும் வரை அவரே தமிழகத்தின் முதல்வராக இருந்தார். ஒரு நடிகன் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆவது இந்தியாவை பொறுத்த வரை அதுவே முதல் தடவை. எம்ஜியார் மக்களினால் ஒரு கடவுளாகவே பார்க்கப்பட்டார். திரையிலும் அவர் நல்லவனாகவே இருந்தார். ஏழை பங்காளனாக தனது இமேஜை வைத்துக்கொண்டார். நிஜத்திலும் ஏழைகளுக்கு பலவிதத்தில் காப்பாளனாக இருந்தார். இருந்தாலும் பலவித இலவச திட்டங்கள் வெளி வர அவரே முன்னோடி. மக்களை கவர இலவச திட்டங்களை அறிவித்து மக்களை சோம்பேறி ஆகும் திட்டம் அவராலேயே பிள்ளையார் சுழி போடப்பட்டது.

காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டிருந்த தமிழகம், காமராஜ் போன்ற பெருந்தலைவரையே முதல் பதவியில் இருந்து தூக்கி எறிய வைத்தது திரை உலகில் மின்னிய எம்ஜியார் என்ற நட்சத்திரம். தமிழக மக்கள் நடிகர்களை கடவுளாகவே கொண்டாடினர். வில்லனாக நடித்த நம்பியார் நிஜத்தில் சாந்த சொரூபி.சிறந்த பக்திமான். அவரை மக்கள் நிஜத்திலும் வில்லனாகவே பாவித்தார்கள்.தமிழக மக்களின் வாழ்க்கையோடு சினிமாவும் இரண்டற கலந்திருந்தது. எனவே அரசியல் வாதிகள் சினிமா நட்சத்திரங்களை மக்கள் சக்தியை இழுக்கும் காந்த சக்தியாக பயன் படுத்திகொண்டார்கள்.

சரி. நடிகர்கள் நாடாளலாமா கூடாதா? 2006 இல் அமெரிக்காவில் நடந்த கருத்து கணிப்பில் சிறந்த ஜனாதிபதியாக மறைந்த அமெரிக்கா அதிபர் ரோனல்ட் ரீகனை பெரும்பான்மையான அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்தனர். ரோனல்ட் ரீகன் ஒரு நடிகனாக இருந்து அரசியல்வாதியானவர். இன்றும் மத்திய வயதினரிடம் தங்களுக்கு பிடித்த தமிழக முதல்வர் யார் என தேர்வு செய்ய சொன்னால் நிச்சயமாக எம்ஜியார் அறுதி பெரும்பான்மையில் வென்று விடுவார்.
ரீகன் உலக சமாதானத்தில் அக்கறை கொண்டு இருந்தார். அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பொது பல வாய்ப்புகள் வந்தும் போருக்கு செல்லாமல் அமைதி காத்தார். முணுக்கென்றால் போருக்கு புறப்பட்டு விடும் அமெரிக்கா ஜனாதிபதிகள் இடம் இருந்து வித்தியாசப்படுத்தி நின்றார் ரீகன். அதனாலேயே ரீகன் மீது அமெரிக்கா மக்களுக்கு தனி பிரியம்.
மக்களின் ஆதரவு இருந்தால் முதல்வராகலாம். ஆனால் நிர்வாக திறமையும் அரசியலும் தெரிந்திருந்தால் மட்டுமே சிறந்த முதல்வராக முடியும். அதற்க்கு எம்ஜியார் போல ஒரு கட்சியின் சாதரண உறுப்பினராகி அரசியலின் நெளிவு சுளிவுகளை அறிந்து உண்மையான சேவை மனப்பான்மை இருந்தால் மட்டுமே அரசியல் பக்கம் எட்டி பார்க்கவேண்டும்.

வெறும் ரசிகர் கூட்டத்தை நம்பி அரசியலில் பிரகாசிக்க முடியாது.கட்டுக்கோப்பான மகத்தான ரசிகர் கூட்டம் வைத்திருந்த சிவாஜி கணேசன் இதற்க்கு நல்ல உதாரணம். அவரும் அரசியலில் இணைந்தாலும் அவரால் எம்ஜியார் அளவுக்கு அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை. எம்ஜியார் ஜெயலலிதா கருணாநிதி போன்றவர்கள் சினிமாவில் இருந்தாலும் அரசியலில் குதித்து உடனே முதல்வர் ஆக வேண்டும் என ஆசை படவில்லை.

பா மா காவின் கோட்டையான விருத்தாச்சலத்தில் வெற்றி பெற்று சட்டசபை புகுந்த விஜய காந்தின் தைரியத்தை பாராட்டும் அதே வேளையில் சட்டசபையில் அவரது செயல்கள் சிறப்பானதாக இருந்ததா என்பது கேள்வி குறியே. சட்டசபை கூட்டத்தொடரின் முதல் பகுதியில் அவர் வாயே திறக்கவில்லை.கேட்டால் இப்போது தானே சட்டசபைக்குள்ளே நுழைந்திருக்கிறேன் என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார். இது ஒரு எம் எல் எ க்கு அழகல்ல. இது அவரது அனுபவம் இல்லாமையே காட்டுகிறது. அவர் தனது கொள்கைகள் பற்றி அல்லது செய்யபோகும் திட்டம் பற்றி சொல்லாமல் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் திட்டி கொண்டே பொழுதை போக்குகிறார்.

அவர் முதல்வராகி விட்டால் அனேகமாக முதல் ஆறுமாதம் ஒன்றுமே செய்யாமல் இப்போது தானே முதல்வராகி இருக்கிறேன்..இனிமேல் தான் பழகி ஆரம்பிக்க வேண்டும் என கூறினாலும் கூறுவார்.
இவரைத்தவிர அவசரகதியில் அரசியலுக்கு வந்த கார்த்திக் சரத்குமார் போன்றோரை பற்றி சொல்லவே வேண்டாம். அரசியலுக்கு வந்த காரணத்தை நடிகர்களிடம் நிருபர்களின் கேள்விக்கு அவர்கள் சொல்லும் ஒரே பதில் மக்கள் சேவை செய்ய வந்தேன். அதனை அரசியலுக்கு வராமல் கூட செய்யலாமே.
அதற்காக நடிகர்கள் நாடாள கூடாது என பா மா கா கூறும் கூற்று சிறுபிள்ளைத்தனமானது . நடிகர்களால் தங்களது ஒட்டு வங்கி பாதிக்கும் என்ற பயத்தினால் அவர்கள் அப்படி பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் நாடாளும்போது, நடிகர்கள் ஏன் நாடாள கூடாது. நடிகர்களே அரசியலுக்கு வாருங்கள். ஆனால் வந்தபின் அது என்ன வென தெரிந்து கொள்ள முனையாதீர்கள். அது உங்களை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு ஆபத்தாக முடியும். உங்களுக்கும் அது ஒரு காஸ்ட்லியான விபத்தாக முடியும். அரசியலுக்கு வாருங்கள். அதனை கற்று கொண்டு வாருங்கள். மக்கள் சேவை தான் உங்கள் குறிக்கோள் என்றால் நீங்கள் கட்சி ஆரம்பித்த அடுத்த நாளே முதல்வர் ஆக வேண்டும் என கனவு காணாதீர்கள்.அரசியல் சுவடி கற்றுக்கொள்ளுங்கள்.ஆள வாருங்கள்.

Saturday, September 27, 2008

உலக சினிமா: 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' (The Pursuit of Happyness). தன்னம்பிக்கை + விடாமுயற்சி=வெற்றி.


வீடு இல்லாமல் தெரு தெருவாக சுற்றி கொண்டிருந்த, ஒரு பிச்சைக்கார வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த ஒருவன், தனது விடா முயற்சியாலும் தனது தன்னம்பிக்கையாலும் பல மில்லியன் டாலர்களுக்கு சொந்தக் காரன் ஆனான் என சொல்லும் உண்மை கதை.

கிறிஸ் கார்ட்னர் என்ற ஒரு பங்கு வர்த்தக வியாபாரியின் சுயசரிதையான 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' என்ற புத்தகம் தான் பல மாற்றங்களுடன் திரைப்படமாகியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் படம் துவங்குகிறது. மருத்துவமனைகளுக்கு உபயோகப்படும் ஒரு கருவி விற்கும் விற்பனை பிரதியாக கிறிஸ்.நர்ஸ் ஆக வேலை பார்க்கும் மனைவி. சீன குடும்பம் நடத்தும் ஒரு விலை குறைந்த டே கேர் செல்லும் மகன் என அளவான மத்திய தர குடும்பம். இருந்தாலும் வறுமையால் அக்குடும்பத்தில் பிரச்சனை வருகிறது. வாடகை குடுக்காததால் வீட்டுக்காரனின் நச்சரிப்பு. நோ பார்கிங் இடத்தில் காரை பார்க் செய்ததால் அடிக்கடி கிடைக்கும் அபராதம் என வீட்டில் இருக்கும் பண பிரச்சனை அழகாக காட்டப் படுகிறது.
தான் காரை பார்க் செய்யும் இடத்தை இன்னொருவருக்கு விட்டு கொடுத்து நட்பு வளர்க்கிறான் கிறிஸ். அவர் டான் விட்டர் என்னும் பங்கு சந்தை வர்த்தக அலுவலகத்தில் வேலை பார்ப்பதை அறிந்து அங்கு வேலை செய்யும் மக்கள் கோட், சூட், டை என நடைபோடுவதை பார்க்க... தானும் அவ்விடத்தில் வேலை செய்ய ஆசை படுகிறான். அவருடன் ஒரு டாக்சி யில் செல்லும்போது சிறுவர்கள் விளையாடும் க்யுப் எனும் விளையாட்டு பொருளை அவர் சரியாக பொருத்த முடியாமல் தவிக்க அதனை எளிதாக பொருத்தி அவன் சிறந்த மூளைக்காரன் என நிரூபிக்கிறான்.

அவரிடமே டான் விட்டர் அலுவலகத்தில் தானும் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும் என கேட்க அவரோ வருட வருடம் இலவசமாக அவர்கள் தரும் ஆறு மாத பயிற்சி எடுத்துக்கொண்டு அவர்களின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அந்த அலுவலகத்தில் வேலை என்ன சொல்கிறார்.
பலவித சிந்தனை செய்த பின்பு அதற்க்கு ஒத்து கொள்கிறான் கிறிஸ். மறுதினம் அவனை நேர்முக தேர்விர்ற்கு வரும்படி அழைப்பு வருகிறது. அன்று வீட்டுக்காரன் வாடகைக்கு பிரச்சனையை செய்வதால் தானே அந்த வீட்டுக்கு பெயிண்ட் அடித்து தருவதாக கூறுகிறான் கிறிஸ். அதன்படி அவன் ஒரு ஜீன்ஸ் மட்டும் அணிந்து ஒரு ஜிப் அறுந்து போன ஒரு ஜெர்கின் போட்டு கொண்டு பெயிண்ட் அடித்து கொண்டிருக்கும் வேளையில் போலீஸ் வருகிறது.
அவன் 'நோ பார்கிங்' இடத்தில் தனது காரை எப்போதோ நிறுத்தியதற்கு அபராதம் விதித்தும் அவனால் செலுத்த படாததால் அவனை கைது செய்து ஜெயிலில் வைக்கிறார்கள். ஒரு இரவு சிறையில் கழித்த பின்பு காலை நேர்முக தேர்விற்கு நேரமாகி விட்டதால் அதே உடையுடன் சாயம் போன ஜீன்சும் ஜிப் அறுந்து போன ஜெர்கினும் அணிந்தபடியே நேராக டான் விட்டர் அலுவலகம் சென்று தேர்விற்காக காத்திருக்கிறான். கிட்டத்தட்ட சுவர்களுக்கு சுண்ணாம்பு பூசுபவன் தோற்றத்தோடு இருக்கும் அவனை அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள்.நேர்முக தேர்வில் அவன் கூறுகிறான்.
'நான் இப்போது இருக்கும் தோற்றத்திற்காக எப்படியாவது ஏதாவது ஒரு பொய்யை சொல்லி உங்களை ஏமாற்றி விடலாம் என நினைத்தேன். எனக்கு ஒரு பொய்யும் தெரியவில்லை, எனவே உண்மையை சொல்கிறேன். நோ பார்கிங் இடத்தில் எனது காரை நிறுத்தியதற்காக என்னை போலீஸ் கைது செய்து நேற்று இரவு முழுவதும் சிறையில் இருந்தேன். இன்று காலை நேராக சிறையில் இருந்து வருகிறேன். '
அப்போது தேர்வு செய்யும் குழுவில் இருக்கும் ஒருவர் கேட்கிறார். 'நீ நேர்முக தேர்வில் இருந்து உன்னிடம் ஒருவன் இப்படி சட்டை இல்லாமல் தேர்விற்கு வந்தால் அவனை பற்றி நீ என்ன நினைப்பாய்?'
அவன் கூறும் பதில்.' அவன் நல்ல பான்ட் அணிந்திருக்கிறான் என்று தான் நினைப்பேன்'.

அவன் தேர்வாகி விடுகிறான்.
ஆறுமாதம் சம்பளம் இன்றி படிக்க போவதை அறிந்த அவன் மனைவி வறுமையால் அவனை விட்டு பிரிந்து நியூ யார்க் நகரம் சென்று விடுகிறாள். மகனையும் தன்னையும் சுமந்து கொள்ளும் பொறுப்பு அவனுக்கு வருகிறது.

ஒரு நாள் நாடு இரவில் வாடகை கட்டாததால் நடு இரவில் வீட்டுக்காரனால் துரத்தப்படுகிறான் கிறிஸ். ஒரு விடுதியில் குறைந்த வாடகைக்கு அறை எடுத்து தங்குகிறான்.

அவனது படிப்பு துவங்குகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த மருத்துவ இயந்திரத்தை விற்க அலைகிறான். மகனையும் பார்த்துகொள்கிறான். அவனும் படிக்கிறான். இடையில் அவனிடம் இருக்கு இரண்டு இயந்திரங்களில் ஒன்று களவு போகிறது. அதனை பெரும் அலைச்சல்களுக்கிடையில் கண்டுபிடிக்கிறான். இருக்கிற காசும் தீர்ந்து போக.. நடு தெருவுக்கு வருகிறான். எங்கு செல்ல என தெரியாமல் ரயில் நிலையத்துக்கு வருகிறான். அங்குள்ள ஒரு கழிப்பிடத்தினுள் அங்குள்ள டிஷ்யு பேப்பெர்களை விரித்து கண்ணீருடன் தன் செல்ல மகனுடன் அந்த இரவை கழிக்கிறான்.

அமெரிக்காவில் வீடற்றவர்களுக்கு (இந்திய மொழியில் சொல்வதானால் பிச்சை காரர்களுக்கு) என்று விடுதிகள் உண்டு. அதற்க்கு பெரிய ஒரு வரிசையில் நிற்க வேண்டும் இரவு மட்டும் தங்கி கொள்ளலாம். மறுநாள் அதே விடுதியில் அதே இடம் கிடைக்கும் என சொல்ல முடியாது. வேறொரு விடுதியில் வேறு இடம் கிடைக்கலாம்.
அப்படி பட்ட இடங்களில் பிச்சை காரர்களோடு பிச்சை காரனாய் தனது மகனுடன் அங்கு இரவுகளை கழிக்கிறான் கிறிஸ். இரவுகளில் அவ்விடத்தில் வரும் சொற்ப வெளிச்சத்தில் படிக்கிறான். வார விடுமுறைகளில் தேவாலயங்கள் சென்று அங்கு கிடைக்கும் உணவை உண்கிறார்கள் இருவரும். அவ்வப்போது பூங்காக்கள் சென்று மகன் விளையாட பணிக்கிறான்.
தேர்வு நாள் வருகிறது. தேர்வெழுதி விட்டு வெளியே வருகிறான். ஒரே ஒருவன் மட்டுமே தேர்வு செய்யபடுவான் என்கிறார்கள். அந்த ஒருவனாக இல்லாவிட்டால் அவனது வாழ்வே கேள்விகுறி ஆகி விடும்.

அவனை ஒரு நாள் திடீரென அழைக்கிறார்கள். அவன் தேர்வாகிவிட்டத்தை சொல்ல அவன் கண்களில் கண்ணீர்.. படம் பார்க்கும் நமக்கோ அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நிழலாடுகிறது. அற்புதமான நடிப்பை இங்கு வெளிப்படுத்துகிறார் கிறிஸ் ஆக நடித்திருக்கும் வில் ஸ்மித். அவரின் வெற்றி நமது வெற்றியாக நமது கண்களும் பனிக்கிறது

படத்தில் ஒரு வசனம். கிறிஸ் தனது மகனிடம் சொல்வதாக வருகிறது.'உன்னால் முடியாது என யார் கூறினாலும் அதை நம்பாதே. உனது திறமை எது என அவர்களுக்கு தெரியாது. உன்னால் எதுவும் முடியும் என நம்பு. உன் லட்சியத்துக்கு குறுக்கே எது வந்தாலும் நீ நில்லாதே. உனது இலக்கை நோக்கி முன்னேறு.'

வில் ஸ்மித்தின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் நிஜத்திலும் வில் ஸ்மித்தின் மகனே. புலிக்கு பிறந்தது என கூறப்படும் பழமொழி போல மிக அற்புதமாக நடித்திருக்கிறான் அந்த சிறுவன். வில் ஸ்மித்தின் திரை வாழ்கையில் இப்படம் ஒரு மைல் கல். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்டு பாரஸ்ட் விடக்கர் என்ற சக நடிகனிடம் தோற்று விட்டார்( பாரஸ்ட் விடக்கர் நடித்த படம் இடி அமீன் வாழ்வை சொல்லும் 'த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து மிக அற்புதமான நடிப்பு. அப்படத்தை பற்றி பதிய இருக்கிறேன்).
இருந்தாலும் தோல்வியே வாழ்க்கையாக இருக்கிறது என உடைந்து போகும் அனைத்து இதயங்களுக்கும் ஒரு உந்து சக்தி இந்த படம்.
Sunday, September 14, 2008

தோழனுக்கு...


தோழா ,
சூரியனை நோக்கியது உன் பயணம்.
சுடும் வெய்யில்
உன்னை
சுட்டேரிக்கவா முடியும்.

உன்
இன்றைய வியர்வைகள்
உன்
நாளைய விருட்சத்துக்கு
நீ ஊற்றும் நீர்.

பேனாக்கள்,
ரத்தம் சிந்தினால் தான்
கவிதைகளின் பிரசவம்.

உன்
நிகழ்கால நிமிஷங்கள் கண்டு
கலங்காதே
எதிர்காலம் உன்னை எதிர்கொள்ள காத்திருக்கிறது .

இன்று
பாதைகளின் வழியே
உன் பாதங்கள் போகலாம்.
நாளை
உன் பாதங்களை நோக்கி
பாதைகள் அமையலாம்.

உனக்குள்
எரிகின்ற தீயை,
எச்சிலால் ...
அழித்துவிட முடியுமா?

தேய்மானங்கள்...
நிலவுக்கும் உண்டு.
நீ
பவுர்ணமி ஆக
பிரமிப்பூட்ட போகிறாய்.

இருட்டின்
பிரஜையாக இருக்கிறோம்
என்று இடிந்து போகாதே...
தீபாவளிக்கே
நீ
வெளிச்சம் தர போகிறாய்.

கருப்பையை
உனக்குள் ஒளித்துக்கொண்டு
உயிர்க்காய் அலைய வேண்டாம்.
சூரியன்
சாய்ந்த நேரத்தில் தான்,
நிழல்களின் யுத்தங்கள்.
சூரியன் உச்சிக்கு போனால்
நிழல்கள் நினைவிழந்து விடும்.

உழை..
உன் உயிர்கள்
காந்த துகள்களாய்
உன்னுடன் ஒட்டிக்கொள்ளும்

இதயத்தில்
நிரந்தரமாய் எவரும் இல்லை..
உலகத்து போர்க்களத்தில்
இழப்பதற்கு எதுவும் இல்லை...

விடியல்கள் உன் அருகில்
உயரங்களின் உச்சியை
விரைவாய் நீ தொட....வாழ்த்துகிறேன்.

Thursday, September 11, 2008

வாஜ்பாயியை காலில் விழுந்து வணங்க வைத்த சின்னப்பிள்ளைமுன்னாள் பிரதமர் வாஜ்பாயியே காலில் விழுந்து வணங்கும் அளவுக்கு அந்த கிராமத்து பெண்மணி சின்னப்பிள்ளை அப்படி என்ன சாதித்து விட்டார்?
கண்டாங்கி சேலை கட்டி... காலில ஒரு ரப்பர் செருப்பு. முகத்தில் ஒரு வெகுளித்தனம். இது தான் சின்னப்பிள்ளை. மதுரை அருகே உள்ள புலிசெரியில் கூலி வேலை செய்யும் ஐம்பது வயது பெண்மணி. 'ஸ்த்ரீஷக்தி' விருதை முன்னால் பிரதமர் வாஜ்பாய் கைய்யால் வாங்கி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது, வாஜ்பாயீ இந்த பெண்மணியின் சாதனையை பாராட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்.

புலிசெரியில் கூலி வேலை செய்து வரும் சின்னப்பிள்ளை, தனது குடிசை வீட்டில் இருந்தபடி தனது சக தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஞாயமான கூலியையும் நல்ல வேலை தரத்தையும் பெற்று தந்ததில் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார்.

தனது கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக முதலாளியிடம் பரிந்து பேசி அவர்களையும் ஆமொதிக்கவைத்து நல்ல கூலியை பெற்று தந்திருக்கிறார். முதலில் மறுத்த முதலாளிகளை ஒத்துக்கொள்ள வைக்க கடுமையாக சாத்வீகமாக போராடி அதில் வெற்றியும் பெற்றார்.
'தன்' என்ற நிதி நிறுவனம் நடத்திய 'களஞ்சியம்' என்ற இயக்கத்தில் 1989 இல் இணைந்தார் சின்னப்பிள்ளை. கிராமங்களில் 'களஞ்சியம்' என்ற சிறுசேமிப்பு முறை பற்றி எடுத்துகூறி அவர்களை இணைய வைத்திருக்கிறார். அவரது திறமை அவரை 'களஞ்சியத்தின்' நிர்வாக பொறுப்பில் ஒரு நிர்வாகியாகியது.
எழுதப்படிக்க தெரியாத சின்னப்பிள்ளை, ஒரு தேர்ந்த நிர்வாகியாக செயல்பட்டு 'களஞ்சியம்' இயக்கத்தை வழி நடத்தினார். இப்போது 'களஞ்சியத்தில்' ஏறக்குறைய எழுபதாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.அனைவரும் பின்தங்கிய, ஏழை விவசாய மற்றும் கூலி தொழிலாளர்கள். ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்தவர்களும் ஒரு சிறு குழு ஏற்ப்படுத்தி அவர்களது வருவாயில் ஒரு சிறு பகுதியை களஞ்சியத்தில் சேமிக்க தொடங்க.. களஞ்சியம் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கப்பட.. ஏழைகளின் ரத்தத்தை வட்டி மூலம் உறிஞ்சும் பண முதலைகளை அடக்கி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கைப்பிடி அரிசியை சேமித்து உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்து உதவினர்.

இப்போது களஞ்சியத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய் சேர்ந்து , தமிழ் நாடு, ஆந்திரா கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களில் தனது கிளைகளை பரப்பி சிறந்த சிறுசேமிப்பு வங்கியாக ஏழை மக்களின் கஜானாவாக திகழ்கிறது. இந்த பணத்தை கொண்டு குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்பது..உறுப்பினர்களுக்கு குடிசை வீடு கட்டி கொடுப்பது, சிறு தொழில்களுக்கு உதவி செய்வது போன்ற சேவைகளை 'களஞ்சியம்' செய்து வருகிறது.
இவ்வளவு நாட்களாக வசதி படைத்தவர்களுக்கு உண்டான குளத்தில் மீன் பிடிக்கும் காண்ட்ராக்டை ஏழைகளுக்கு பெற்று தந்தது, உயர் சாதி இருக்கும் வழியாக சென்ற விஷ்ணு பகவானின் தேரை ஏழைகள் மற்றும் பிற்படுத்த பட்ட சாதி இருக்கும் தெரு வழியாக செல்ல வழி செய்தது என சின்னப்பிள்ளையின் சாதனைகள் நீளும்.
ஐம்பது வயதிலும் அயராது உழைத்து..விளம்பரங்களை தேடி செல்லாது உதவி செய்ய ஏழை மக்களை தேடி செல்லும் சின்னப்பிள்ளையின் காலில் நாமும் விழுந்து வணங்குவோம்.

Friday, September 5, 2008

என் இலங்கை சகோதரனுக்கு/சகோதரிக்கு.....


ஆர்மிகாரனின் தோட்டாக்கள்
உன்னை துளைக்கும் பொழுது
என் மேலும் பட்டு தெறித்தது,
உன் ரத்த துளிகள்.
என் ரத்தம் கொதித்தது...
உள்ளம் துடித்தது...
ஏன் என்றால் நான் இந்தியன்.

முல்லைத்தீவில்
பள்ளிக்கூடத்தின் மீது
குண்டுகள் விழுந்து
துண்டுகள் ஆனது..
அங்குள்ள மொட்டுகள்
மட்டுமல்ல..
எனது இதயமும்...

நீங்கள் நிராகரிக்கப்படவில்லை...
நேசிக்கப்படுகிறீர்கள்...
உங்களுக்காக கண்ணீர் வடிக்கும்
இந்தியனால்...
நமக்குள்
தொப்புள் கொடி உறவில்லை என்றாலும்
தனுஷ்கோடி உறவு உள்ளது..
நான் உன் சகோதரன்.
நான் உன் இனம்...

பிணங்களின் குவியல்களில் ,
நீ
உன் உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் போது...
நான்
உன்னை தேடி கொண்டிருக்கிறேன்..
ஏன் என்றால்...
நீ என் உறவு...

நான்
அமெரிக்காவில் இருந்தாலும்
என் சகோதரன்
இந்தியாவில் இருந்தாலும்...
நீ
இலங்கையில் இருந்தாலும்...
நம்மை இணைக்கும் பாலம் தமிழ்...
இதில்,
இந்தியன் தமிழன் ,
இலங்கை தமிழன்..
மலேசிய தமிழன்
என
கூறுபோட்டு பார்க்க...
நாம்
மீன்களின் கூட்டம் அல்ல
நானும்,
நீயும்,
அவனும்
தமிழர்கள் தான்.....
உனது
கண்ணீர் துடைக்க
என் கைகள் நீளும்
உறைந்து போகாமல்
உனது சொந்தங்கள் உன்னை சேரும்
இலங்கையில்
தமிழ் இனம் வாழும்...
தமிழ் வாழும்....

Sunday, August 31, 2008

'ஆமிர்' (AAMIR) ஒரு அற்புதமான 'இந்தி'ய திரைப்படம்.


வழக்கமாக இந்தி திரைப்படங்கள் ஒரே மாதிர்யான கதைகள் கொண்டவைகளாக இருக்கும். ஒன்று காதல் கதைகள் அல்லது சரித்திர கதைகள் அல்லது நிழல் மனிதர்களின் கதைகள் அல்லது குடும்ப கதைகள். அத்தி பூத்தாற்போல சில அபூர்வ அற்புத படங்கள் வருவதுண்டு. அப்படி பட்ட ஒரு படம் தன் 'ஆமிர்'
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க... முற்றிலும் புதுமுகங்களான தொழில் நுட்ப கலைஞர்கள் கொண்டு எந்தவித மசாலாத்தனங்கள் இல்லாமல் மரத்தை சுற்றி பாடும் பாடல்கள் இல்லாமல், அமச்சூர்த்தனமான சண்டை காட்சிகள் இல்லாமல் அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகள் இல்லாமல் சமுதாயத்துக்கு நல்ல கருத்து சொல்லும் படமாக வெளி வந்திருக்கிறது.
நாட்டில் சில இஸ்லாமிய தீவிரவாதிகளால் பல நல்ல இஸ்லாமிய சகோதரர்கள் சமுதாயத்தால் பழி வாங்கப்படுவது முகத்தில் அறைந்தார் போல சொல்லப்படுகிறது. திரைப்படம் நடக்கும் காலம் சில மணித்துளிகளே. கதாநாயகனுக்கு படம் முழுவதும் ஒரே உடைதான். என பல புதுமைகள் இப்படத்தில் உள்ளன.

சரி கதை என்ன?
லண்டனில் வசிக்கும் டாக்டர் ஆமிர், தனது குடும்பத்தை காணுவதற்காக மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறான். தனது குடும்பத்தை காணப்போகும் ஆவல் அவன் உள்ளத்தில் படர சந்தோஷத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் அவனுக்கு முதல் சோதனை கஸ்டம்ஸ் அலுவலகரால் கேள்விகளால் துளைக்க படுகிறான். அவனுடைய உடைமைகள் நான்கு முறை சோதிக்கப்படுகிறது. அதற்க்கு காரணம் அவனுடைய பெயர் 'ஆமிர்' அவன் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவன் என்பதால் அவன் ஒரு தீவிரவாதியை போல பார்க்கப்படுகிறான்.(இப்போதும் இந்தியாவில் பல இடங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் பெரும்பாலானோர் தீவிரவாதிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் இதை போல கருப்பர்கள் அனைவரும் திருடர்களாக பார்க்கப்படுகிறார்கள்.).

தனது குடும்பம் தனக்காக காத்திருக்கும் என எண்ணியபடி விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் ஆமிர், தனது சொந்தங்கள் யாரையும் கானது குழப்பம் அடைகிறான். அப்போது ஒரு பைக்கில் வரும் இருவர் திடீரென அவனது கையில் ஒரு கைபேசியை எறிந்து விட்டு சென்று விடுகிறார்கள்.

அந்த அலைபேசிக்கு அழைப்பு வருகிறது. புரியாமல் அதனை எடுத்து பேசும் ஆமிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அலை பேசியில் பேசும் மனிதன் ஒரு வாடகை வண்டியின் எங்களை கூறி அதில் ஏறுமாறு சொல்கிறான். மறுக்கும் ஆமிரிடம் அவனது உடைமைகள் களவாடப்பட்டு அந்த வண்டியில் உள்ளதாக தெரிவிக்க ஆமிர் அப்போது தான் தனது பேட்டிகள் களவாடப்பட்டது உணர்ந்து அந்த வண்டியின் பின்னால் ஓடுகிறான்.

ஒரு கட்டத்தில் சோர்ந்து பொய் அமரும் சமயம் அவனுக்கு மீண்டும் அழைப்பு வருகிறது. அப்போது அவனது குடும்பம் கடத்தப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதுவும் நேராமல் இருக்க ஆமிர் அவன் சொல்படி நடக்க வேண்டும் என்றும் அவனுக்கு கூறுகிறான் அந்த மொட்டை மனிதன்.

பின்னர் ஒரு விடுதியில் காத்திருக்க வைக்க படுகிறான். அப்போது அங்கு ஒரு வேசி அவனை படுக்கைக்கு அழைக்க அவளை உதாசீனபடுத்துகிறான். பின்னர் ஒரு இடத்துக்கு சென்று ஒரு சிவப்பு பெட்டியை வங்கி வர சொல்கிறான். ஆமிர் வங்கி தனது விடுதி வந்த பின், கழிப்பறையில் கிடைத்த எங்களை அந்த பெட்டியில் அழுத்த அந்த பெட்டி திறந்து கொள்ள.. ஐந்நூறு ரூபாய் நோட்டு கட்டுகளை காண்கிறான். மீண்டும் அலைபேசி வருகிறது. அந்த பணம் முழுவதும் இஸ்லாமியரின் புனிதப் போருக்காக உலகம் முழுதும் இல்ல இஸ்லாமியரால் அனுப்பி வைக்க பட்ட பணம் என கூறுகிறான் மொட்டை தலை மனிதன். அதை எடுத்து இன்னொரு மனிதனிடம் சேர்த்து விட்டால் அவனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிடுவதாக கூற அந்த பெட்டியை எடுத்து கொண்டு அவன் சொன்ன அந்த இருட்டான சந்தின் வழியாக நடக்க ஆரம்பிக்கிறான் ஆமிர்.

அப்போது அங்கு வந்த திருடர்கள் ஆமிரை அடித்து போட்டுவிட்டு பெட்டியை பறித்து கொண்டு ஓட.. துரத்தி கொண்டு ஓடுகிறான் ஆமிர். அவனால் மேலும் ஓட முடியாமல் அவனுடைய ஆஸ்துமா வியாதி படுத்தி எடுக்க அங்கேயே அமர்ந்து விடுகிறான்.
சரியானதும் எழுந்து பெட்டியை தூக்கி கொண்டு ஓடியவனை தேட ஆரம்பிக்கிறான். அப்போது அவன் விடுதியில் சந்தித்த வேசி அவனுடைய உதவிக்கு வருகிறாள். திருடர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்கிறாள். மதுவின் மயக்கத்தில் இருக்கும் அவர்களை அடித்து போடுகிறான் ஆமிர். அவர்கள் பயந்த படி அந்த சிவப்பு பெட்டியை எடுத்து அவனிடம் கொடுக்க அதை பெற்று கொண்டு அந்த மொட்டை தலை மனிதன் சொன்ன பேருந்து நிறுத்தத்துக்கு வந்து காத்திருக்கிறான். அவனை மீண்டும் அலை பேசியில் அழைக்கும் மொட்டை தலை மனிதன், ஊர்தி எண் 83 இல் ஏற சொல்கிறான். ஏறி அமரும் ஆமிர், பஸ் செல்ல துவங்கியதும் வரும் அலைபேசி அழைப்பை எடுத்து பேச அவன் அமர்ந்திருக்கும் இருக்கையின் அடியில் அந்த பெட்டியை வைத்து விட்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி விடுமாறு கட்டளை வருகிறது. குழப்பமாக நடந்த நிகழ்வுகளை யோசனை செய்து பார்க்கும் ஆமிர், அந்த திருடர்கள் மூலம் பெறப்பட்ட சிவப்பு பெட்டி மாற்றப்பட்டிருப்பதையும் தற்போது அப்பெட்டியில் குண்டு இருப்பதையும் அந்த பஸ் வெடித்து சிதற தான் கருவி ஆக்க பட்டிருப்பதையும் உணர்கிறான்.
அந்த மொட்டை தலை மனிதன் சொன்னவாறு தன் இருக்கையின் அடியில் பெட்டியை வைத்து விட்டு பஸ் விட்டு கீழிறங்குகிறான். இன்னும் இரு நிமிடங்களில் குண்டு வெடிக்க போகிறது. அப்போது ஆமிர் அமர்ந்த இருக்கையில் ஒரு குழந்தை அமர்ந்து அவனுக்கு 'டாட்டா' காட்டுகிறது. உடைந்து போகிறான் ஆமிர். அடுத்து அவன் எடுத்த முடிவு கண் கலங்க வைக்கிறது.

ஒரு மிகவும் சிக்கலான கதையை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜ்குமார் குப்தா. படத்திற்காக எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் நேர்கோட்டில் கதை ராக்கெட் வேகத்தில் பயணம் செய்கிறது. படத்தின் மூலம் அழுத்தமாக சமூகத்துக்கு உண்டான சேதியும் வைத்திருக்கிறார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு தூண்கள். ஆமிராக நடித்திருக்கும் ராஜேஷ் கண்டேல்வால் பரபரப்பு,இயலாமை, மென் சோகம், தவிப்பு என தன் முகத்தில் அத்தனை உணர்ச்சிகளையும் லாவகமாக கொண்டு வந்து தேர்ந்த நடிப்பில் மின்னுகிறார்.
ஆமிர் தரமான ஒரு 'இந்தி'ய சினிமா.Saturday, August 23, 2008

உலக சினிமா: சில்ட்றேன் ஆப் ஹெவென்(Children of heaven)....காலணியே கதாநாயகன்!எத்தனையோ கோயில்களில், மண்டபங்களில் மற்றும் எங்கெங்கோ நமது செருப்பை, காலணியை தவற விட்டிருப்போம். அதனை பற்றி அந்த சமயத்தில் நினைத்து கவலை படுவோம். அதன் பிறகு புது காலணி வாங்கிய பின் தொலைந்த செருப்பை பற்றி நினைத்து கூட பார்க்கமாட்டோம். படம் முழுக்க காலணியே கதாநாயகனாக அல்லது முதன்மையான கதாபாத்திரமாக நடிக்க முடியுமா....முடியும் என நிரூபித்திருக்கிறது மஜித் மஜீதியின் படைப்பான இரானிய திரைப்படம் 'சில்ட்றேன் ஆப் ஹெவென்' (Children of heaven).

ஒரு சிறுவன் ஒரு சிறுமி, ஒரு ஜோடி காலணி. இது தான் படமே. இதனை வைத்து கொண்டு படம் முழுக்க இருக்கை நுனியில் அமரவைத்திருக்கிறார் இயக்குனர் மஜீத் மஜீதி.
ஒரு முதியவர் ஒரு ஷூவை தைத்து கொண்டிருக்கிறார். தைத்து முடித்தும் ஷூக்களை அருகில் வைத்து விட்டு அம்மா வாங்கி வர சொன்ன உருளை கிழங்கை எடுத்து கொண்டிருக்கும்போது குப்பை எடுக்க வந்த கண் இல்லாத ஒருவர் செய்தி தாளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஷூவையும் தவறுதலாய் எடுத்து பொய் விடுகிறார்.
தேடிப்பார்க்கும் சிறுவன்.. அழுகையுடன் வீட்டுக்கு வருகிறான். அவர்கள் குடும்பம் ஏழை குடும்பம். தந்தை உப்பு கல்லை வாங்கி உடைத்து வீடுகளில் விற்று பணம் சம்பாதிப்பவர். அம்மாவுக்கோ சீக்கு. தங்கையின் ஷூவை தொலைத்து விட்டதாக அவளிடம் கூறுகிறான் சிறுவன். தங்கையோ அண்ணனை அப்பாவிடம் காட்டி கொடுத்து விடாமல் தான் ஷூ போடவில்லைஎன்றால் பள்ளியில் அனுமதிக்க விடமாட்டார்களே என வருந்த அதற்க்கு ஒரு யோசனை சொல்கிறான் அண்ணன். இரானில் காலையில் பெண்கள் பள்ளியும் மாலையில் ஆண்கள் பள்ளியும் இயங்கும்.எனவே காலையில் தங்கை அண்ணனின் ஷூவை போட்டு செல்லவேண்டியது. மதியம் வேக வேகமாக ஓடி வந்து பாதி வழியில் பள்ளி செல்லும் வழியில் காத்திருக்கும் அண்ணனிடம் தங்கை கொடுத்துவிட வேண்டியது. இதற்கிடையில் காணாமல் போன ஷூவை கண்டு பிடிக்க வேண்டியது என முடிவு எடுக்கிறார்கள்.தந்தையும் தாயும் அருகருகே அமர்ந்து குடும்ப கஷ்டத்தை பேசி கொண்டிருக்க...அண்ணனும் தங்கையும் மாறி மாறி தங்கள் நோட்டு புத்தகத்திலேயே எழுதி இத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்கிறார்கள். அப்பா இருக்கும் கஷ்டத்தில் அவரை புதிதாக ஷூ வங்கி தர சொல்லி நச்சரிக்க குடும்ப கஷ்டம் உணர்ந்த அந்த பிள்ளைகள் முயலவில்லை.

அவர்களின் திட்டப்படி காலையில் பள்ளி செல்லும் தங்கை, பள்ளி முடிந்ததும்அரக்கப் பறக்க ஓடி வந்து, வழியில் நிற்கும் அண்ணனிடம் ஷூவை கொடுத்து விட்டு அவன் அணிந்து வந்திருக்கும் செருப்பை அணிந்து வீட்டுக்கு வருகிறாள்.

ஒரு முறை தங்கை பள்ளி முடிந்ததும் அண்ணனை நோக்கி ஓடி வருகையில் அவளது ஷூ பறந்து சென்று ஒரு கால்வாயில் விழுந்து விடுகிறது. அதனை துரத்தி கொண்டு தங்கை அழுதபடி ஓடுகிறாள், நல்ல இதயம் படைத்த ஒரு பெரியவர் வந்து அவளுக்கு உதவி செய்து கால்வாயில் விழுந்த அவளது ஷூவை அவளுக்கு எடுத்து தருகிறார். அவள் வர தாமதமாகி விடுவதால் அண்ணன் தாமதமாக பள்ளி செல்ல தலைமை ஆசிரியரால் தண்டிக்க படுகிறான். இப்படி ஷூவினால் அண்ணனும் தங்கையும் கஷ்டபடுவதை அருமையாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.
கடைகளில் விலை உயர்ந்த ஷூவை பார்க்கும் வேலையில் எல்லாம் ஷூ இல்லாமல் தங்கை கஷ்டப்படுவதை உணர்ந்து மனம் வருந்துகிறான் அண்ணன்.
ஒரு நாள் தான் கூட படிக்கும் ஒரு பெண் தனது ஷூவை அணிந்திருப்பதை பார்த்து விடுகிறாள் தங்கை. உடனே அவள் தனது சகோதரனிடம் சொல்ல, அவர்கள் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு செல்கிறார்கள். அப்போது தான் அந்தப் பெண் தங்களை விட ஏழை என்றும் அவளது தந்தை தான் அந்த குப்பை எடுத்து செல்லும் கண் பார்வையற்ற அந்த பெரியவர் என்றும் உணர்ந்து அவளிடம் ஷூவை கேட்காமல் வந்து விடுகிறார்கள்.
அவர்களுக்கு அல்வா மாதிரி ஒரு சேதி கிடைக்கிறது. ஆம் அந்த சிறுவனின் பள்ளியில் நடக்கும் ஓட்ட பந்தயம் தான் அது. முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு மேல் அந்த சிறுவனின் கவனம் செல்லவில்லை. மூன்றாம் பரிசு ஒரு விலை உயர்ந்த ஷூ. அனைவரும் முதலாவதாக வரவேண்டும் என தான் நினைப்போம். ஆனால் அந்த பாசம் மிகுந்த அண்ணனோ அந்த போட்டியில் எப்படியாவது மூன்றாவதாக வந்து அந்த ஷூவை பரிசாக பெற்று தங்கைக்கு பரிசளிக்க வேண்டும் என விரும்புகிறான்.
அடுத்து நடைபெறும் ஓட்டப்பந்தயம் தான் படத்தின் கிளைமாக்ஸ். கிளைமாக்ஸ் மட்டுமே படத்தில் இருபத்து நிமிடங்கள். நம்மை நகம் கடிக்கவைத்து அடுத்து என்னாகுமோ என மனம் பதைபதைக்க வைக்கிறது.
உலகின் பல விருதுகளை தட்டி சென்ற திரைப்படம். ஈரானிய திரைப்படங்களை உலக தரத்துக்கு எடுத்து சென்ற மிக எளிமையான திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை அமைப்பு ப்ரம்மிக்கத்தக்கவகையில் உள்ளது.
இத்திரைப்படத்தை அவசியம் உங்கள் வீட்டு குழந்தைகளுடன் பாருங்கள்.

டிராபிக் ராமசாமி..அகிம்சை 'அந்நியன்'

தன்னலமற்று பொதுநலத்துக்கு என வாழ்பவர்கள் மிக சிலரே. சுதந்திர போராட்ட நேரத்தில் வாழ்ந்த தியாகிகள் பலரை வரலாறுகள் மூலம் கண்டுணர்ந்துள்ளோம். அன்னை தெரசா, மேதா பட்கர் வரிசையில் இப்போது பலருக்கும் அறிமுகமாகிருப்பது நம் தமிழகத்தை சேர்ந்த டிராபிக் ராமசாமி.

'எப்போடா அம்பத்தெட்டு வயசாகும் நிம்மதியா வீட்டுல ஓய்வெடுக்கலாம்' என்பது தான் வேலைக்கு போகும் பலரது கனவு. தனது எழுபத்தி மூன்றாம் வயதில் தான் நேசிக்கும் சென்னை நகரம் ஒரு தூய்மையான நகராக மாற வேண்டும் என நடு ரோட்டில் நின்று கொண்டு டிராபிக் ஒழுங்கு படுத்துவது, பொது மக்களுக்கு இடையூறாக இருந்த மீன் பாடி வண்டிகளை ஒழித்தது, பொதுமக்கள் பஸ்சில் பயணம் செல்வதற்கு இடையூறாக சில வழித்தடங்களில் இருந்த ஆட்டோக்களை ஒழித்தது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருமுனை ஆக்ரமிப்பு கடைகளை இடிக்க கோர்ட்டில் கேஸ் போட்டு வெற்றி அடைந்தது என இவரது பொதுநல சாதனைகள் நீளும்.
மீன் பாடி வண்டிகளை கேஸ் போட்டு ஒழித்ததால் இவர் மீது கோவம் கொண்ட சிலர் அடியாள் வைத்து அடித்து இவரது ஒரு கண்ணை செயலிழக்க வைத்தார்கள். இருந்தாலும் இவரது சாதனை பயணம் இன்னும் தொடர்கிறது.

ஒரு மில்லில் பியூனாக வேலை பார்த்த ராமசாமி சென்னை பாரி முனையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போக்குவரத்து காவலர்க்கு உதவி இருக்கிறார். இதனால் அவரை பாராட்டும் வகையில் அவருக்கு அடையாள அட்டை வழங்கி இருக்கிறார்கள் போக்குவரத்து காவலர்கள். இதனாலேயே ராமசாமி என்ற பெயருக்கு முன்னால் 'டிராபிக்' என்ற அடையாள பெயர் ஒட்டி கொண்டு டிராபிக் ராமசாமி ஆனார்.

இப்படி பொதுநலம் ஒன்றையே குறிக்கோளாக வாழ்ந்து வருபவர்க்கு குடும்பம் எப்படி துணை நிற்கும்? அவர் முட்டாள்தனமான காரியம் செய்கிறார் என ஒதுக்கி வைத்துள்ளது அவரது குடும்பம். தனது பொது நல சேவையால் பல சமூக விரோதிகளின் எதிரி ஆகிவிட்டபடியால் தனது குடும்பத்துக்கு அவர்கள் மூலம் ஆபத்து வரலாம் என கருதி தற்போது நண்பர்களின் துணையுடன் தனியாக வசித்து வருகிறார்.

எந்த அரசு வந்தாலும், தப்பு நடக்கிற இடத்தில் எல்லாம் தட்டி கேட்கும் இவரால் அரசுக்கு தலை வலி தான். அதனால் தன் ஜெயலலிதா அரசில் இவர் போட்ட கேஸ் களுக்கு ஆதரவு அளித்த கருணாநிதி அரசு இன்று இவரை பொது நலத்துக்கு இடையூறு விளைவிக்கிறார் என அவ்வப்போது பிடித்து சிறையிட்டு விடுகிறது. அரசியல் கட்சிகள் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ இல்லையோ, தங்களுக்கு யாராவது இடையூறு செய்தால் அவர்களை இம்சிப்பதே வேலையாக பொய் விட்டது.

டிராபிக் ராமசாமி போல ஒரு பொது நலம் எனக்கும் உங்களுக்கும் எல்லோருக்கும் இருந்தாலும் குடும்பம் அல்லது தொழில் என ஏதாவது ஒன்று தடுக்கும். எனவே முழுதாக இறங்காவிட்டாலும் சமூகம் நன்றாக இருக்க களத்தில் இறங்கி களை எடுக்கும் டிராபிக் ராமசாமிகளுக்கு உதவியாக இருப்போமா?

Wednesday, August 20, 2008

உலக சினிமா:- த வில்லோ ட்ரீ (The Willow Tree) - பாதை மாறிய பயணம்

உலகின் தலை சிறந்த இயக்குனர்களின் வரிசையில் கண்டிப்பாக இரானிய இயக்குனர் மஜித் மஜிதிக்கும் நிச்சயம் ஒரு அரியணை இருக்கும். அவருடைய அனைத்து திரைப்படங்களிலும் அடிப்படை அன்பு மட்டுமே. மற்றும் இவரது ஒவ்வொரு திரைபடங்களில் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல விரிகிறது.

நான் சமீபமாக பார்த்த இவரது திரைப்படம் 'த வில்லோ ட்ரீ'. (The willow Tree). நான் பார்த்த இவரது திரைப்படங்களில் இருந்து இந்த படம் மாறுபட்டது. ஒரு கண் பார்வையற்ற பேராசிரியரின் கதை இது. 'இந்த கோணத்தில் கூட சிந்திக்க முடியுமா ' என்ற ஆச்சர்யத்தை இப்படம் கண்டதும் எனக்கு உண்டானது.


கண் பார்வையற்ற பள்ளியில் பேராசிரியராக இருக்கிறார் நடுத்தர வயது யூசுப். படத்தின் ஆரம்பத்தில் அவர் தனது அன்பான மனைவி, அழகான பெண் குழந்தையுடன் தனது இல்லத்தில் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார். அவர் குழந்தையுடன் விளையாட அவரது மனைவி அவரது வேலையில் உதவி செய்ய எந்த குறையும் இல்லை யூசுப் க்கு. ஒரே ஒரு குறை, அவருக்கு கண் பார்வை இல்லை.


எல்லோரையும் போல அவருக்கும் தனக்கு கண் பார்வை வேண்டும்.. இந்த உலகத்தை பார்க்க வேண்டும்.. தனக்கு பிரியமான மனிதர்களை நோக்க வேண்டும் என்ற உந்துதல் அவருள் எழுகிறது.


தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் கண் பார்வைக்கான அறுவை சிகிச்சைக்காக தனது குடும்பம் அனுப்பி வைக்க...பிரான்ஸ் தேசம் புறப்படுகிறார் யூசுப். மருத்துவமனையில் தனது குழந்தை பேசி பதிவு செய்திருந்த ஒலி நாடாவை அடிக்கடி கேட்டு ஆறுதல் அடைந்து கொள்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிகிறது. மறுநாள் கட்டுகளை பிரிக்க போகிறார்கள். எனினும் அப்போதே அவருக்கு உலகை பார்க்க ஆவல் எழுகிறது. தனது கட்டுகளை தளர்த்தி நோக்குகிறார். அப்போது அவர் காணும் காட்சி.. ஒரு எறும்பு படாத பாடுபட்டு தனது இரையை சேமிக்க எடுத்து செல்கிறது. ஒரு குழந்தைக்குரிய குதூகலத்துடன் மருத்துவ மனை வளாகத்தில் குதித்து குதித்து நடை போடுகிறார்.( யுசுப்பாக நடித்திருக்கும் பர்விஸ் பரஸ்டுய் இந்த இடத்தில் பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்).


வீடு திரும்பும் பொது பாரிசின் அழகை ரசித்தபடி வரும் அவர் இரான் வந்து சேர்ந்ததும் தன்னை வரவேற்க காத்திருக்கும் மக்களில் தனது மனைவி மகளை தேடுகிறார். அனைவரும் சிரித்தபடி மகிழ்வோடு வரவேற்று கொண்டிருக்க..ஒரே ஒரு வயதான பெண் அவரைப் பார்த்து கண்ணீர் சிந்துகையில்..'அம்மா' என அவர் உணர்ந்து அழைக்கும் பொது நமக்கும் மேனி சிலிர்க்கிறது.


அதன் பின் தான் ஆரம்பிக்கிறது பிரச்சனை... புகை வண்டியில் செல்லும்போது ஒருவன் பிக் பாக்கெட் அடிப்பதை காண்கிறார். அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. மனைவியின் சொந்தக்கார பெண்மணியின் அழகில் மயங்கிப்போய் அவளுக்கு பூ வாங்கி செல்கையில் மனைவி அதை கண்டு அவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தாய் வீடு சென்று விடுகிறாள். தனது இளமையில் தான் காணமல் போன அழகை அப்பொழுது தான் அவருக்கு தரிசிக்க வாய்ப்பு கிடைக்கிறது.. அதுவும் மறுக்கப்பட அவர் ஏமாற்றம் அடைகிறார் .. அவரது தாயும் நோய் வாய்ப்பட..தனது தாயின், மனைவியின், மகளின் அன்பு மறுதலிக்கப்படும்போது தனக்கு எதற்காக இந்த கண் பார்வை கிடைத்தது என கதறுகிறார்...


மிக எளிதான திரைக்கதை.. மிக அழகான காட்சிகள்... மிக இயல்பான மனிதர்கள்..அற்புதமான ஒளிப்பதிவு, மிக சிறந்த நடிப்பு என எல்லா வகையிலும் இத்திரைப்படம் ஒரு அற்புதம்.


இரானின் மத்திய தர குடும்பத்தை சேர்ந்த மஜித் மஜிதி..முதில் ஒரு நடிகராக தனது திரைப்பட வாழ்க்கையை துவக்கி.. கலர் ஆப் பாரடைஸ் சில்ட்ரென் பரம் ஹெவன் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கி உள்ள இவர் இதுவரை உலக அளவில் 32 விருதுகளை பெற்றுள்ளார்.
ஒரு பெண்ணின் கால் விரல்கள் காட்டினால் கூட குற்றம் என கூறும் இரானிலிருந்து உலக அளவில் விருதுகள் வாங்க கூடிய படங்கள் வெளி வரும் வேளையில்..கதா நாயகியின் இடுப்பையும் மார்பையும் நம்பித்தான் சூப்பர் ஸ்டாரின் படம் உட்பட நமது தமிழ் படங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. (சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் இதற்க்கு விதி விலக்கு).

Monday, August 18, 2008

உலக சினிமா :- த வே ஹோம் (The way home) - உறவுப் பாலம்'தொலைந்து போனவர்கள்' கவிதையை நான் எழுதிக்கொண்டிருந்தபோது வயதான கிராமத்து பாட்டிக்கும், நகரத்தில் பிறந்து வாழ்ந்த அல்ட்ரா மாடர்ன் பேரனுக்கும் உள்ள பாச பிணைப்பை கூறும் தென் கோரிய மொழி திரைப்படமான 'த வே ஹோம்' (The way home) பற்றி எழுத தோன்றியது. அதற்க்காக எனது குறுந்தகடு கருவூலத்திலிருந்து மறுபடி அத்திரை காவியத்தை காண நேர்ந்தது. எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத.. கண்களில் குறைந்த பட்சம் ஒரு சொட்டு கண்ணீர் வரவழைக்கும் திரைப்படம் தான் 'தி வே ஹோம்'.

உலக திரைப்படங்கள் என கூறி கொண்டு நம்மவர்கள் 'சிவாஜி' என்றும் 'தசாவதாரம்' என்றும் கோடிகளை கொட்டி கமர்ஷியல் குப்பைகளை அளித்து கொண்டிருக்கும்வேளையில்..உலக அளவுக்கு திரைப்படம் எடுக்க சிறந்த திரைக்கதை போதும் என நிரூபிக்க வந்த படம். (படத்தின் கதை நடக்கும் இடம் தென் கொரியாவின் மிக பின் தங்கிய ஒரு கிராமம். நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள்.) நம் ஊரில் இதே கதையை திரைப்படமாக எடுக்க ஒரு கோடி கூட தேவை இருக்காது.

முதல் காட்சி, தென் கொரியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு ரயிலிலும் பின்னர் ஒரு ஓய்ந்து போன ஊர்தியிலும் ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண்ணும் அவளை விட பல மடங்கான அல்ட்ரா மாடர்ன் சிறுவனும் செல்கின்றனர். அந்த கிராமத்தில் பஸ் நின்றதும் அந்த தாய்க்கும் சிறுவனுக்கும் சண்டை வருகிறது. அந்த சிறுவன், தன் தாயை எட்டி உதைக்கிறான். அதன் மூலம் அவன் எவ்வளவு குறும்புக்கார சிறுவன் என காண்பிக்க படுகிறது. அடுத்து அவர்கள் அந்த மலை கிராமத்தில் நடந்து சென்று ஒரு சிறு பாடவதியான வீட்டை அடைகிறார்கள். ஒரு சிறு அறை மட்டுமே இருக்கும் குடிசை வீடு அது. முகத்தின் வரிகள் மிகுந்து அவளின் வயதை சொல்கிறது பாட்டியின் முகம் . அவளுக்கு குறைந்தது ஒரு தொண்ணூறு வயது இருக்கலாம். தான் வேலை தேடி கொண்டிருப்பதாகவும் அதுவரை தன் பிள்ளை அந்த வாய் பேச முடியாத பாட்டியின் பராமரிப்பில் இருக்கவும் விட்டுவிட்டு அந்த தாய் கொரியா நகரத்திற்கு சென்று விடுகிறாள். பாட்டியை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் பொய் விடுகிறது சிறுவனுக்கு. பாட்டியின் உணவை உண்ணாமல் தான் கொண்டு வந்திருக்கும் டப்பா உணவுகளையே உண்ணுகிறான் அவன். எந்த நேரமும் வீடியோ கேம் இல் மூழ்கி இருக்கும் அவன்.. பாட்டியை கிறுக்கு என்றும் ஊமை என்றும் வீட்டு சுவரில் எழுதி வைக்கிறான். வயதான பாட்டி துணி தைக்க ஊசியில் நூலை கோர்த்து தர சொல்லி பேரனின் உதவியை நாடுகிறாள். மிகுந்த சலிப்பிற்கு இடையே அவன் கோர்த்து தருகிறான். தான் விளையாடிகொண்டிருந்த் வீடியோ கேம் இன் பாட்டரி தீர்ந்து போனதால், வேறு பாட்டரி வங்கி தரும்படி பாட்டியிடம் கேட்கிறான். பாட்டிக்கு புரியாததால் பைத்தியம் செவிடு என திட்டுகிறான்.

இதனிடையே ஒரு சிறுமி 'மாடு மாடு' என கத்த துரத்தி கொண்டு வரும் மாட்டிடம் இருந்து வழி மாறி ஓடி தப்பிக்கிறான் இன்னொரு சிறுவன். அந்த சிறுமியின் பால் ஈர்ப்பு வருகிறது நம் கதாநாயக சிறுவனுக்கு.அந்த சிறுமியை நன்பியாக்கி கொள்ள தன்னை அழகாக்கி கொள்ள, பாட்டியிடம் முடி வெட்டி விட சொல்கிறான். முடி வெட்டும் போது தூங்கி விடும் அவன், கண் விழித்து பார்க்கும் போது தலையை ஒட்ட வெட்டி விட்டுள்ளது கண்டு கலக்கம் கண்டு அழுகிறான். பாட்டியை திட்டுகிறான்.

கென்டக்கி ப்ரய்ட் சிக்கன் வேண்டும் என சைகையில் கேட்க மழைக்குள் அந்த தள்ளாத வயதில் மழையின் கீழ் நடந்து வந்து அவனுக்காக கோழி வாங்கி அவித்து தனக்கு தெரிந்த வரையில் சமைத்து கொடுக்க, அது கென்டக்கி ப்ரய்ட் சிக்கென் அல்ல என சாப்பிட மறுத்து விடுகிறான். பின்னரவில் பசி எடுக்க அதே சிச்கேனை சாப்பிட்டு பசி ஆருகிறான்.. பாட்டி தான் வளர்த்து வந்த செடியில் பறித்த காய்கறிகளை விற்க அருகில் இருக்கும் சந்தைக்கு பேரனையும் கூட்டி கொண்டு பஸ் இல் ஏறி செல்கிறாள். அங்கு அவனுக்கு காலணி வாங்கி தருகிறாள். அப்போது பேரன் இனிப்பு மிட்டாய் வங்கி தர சொல்கிறான். இருக்கிற பணம் எல்லாம் செலவு செய்து அவனுக்கு வாங்கி தந்து அவனை பஸ்ஸில் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். பாட்டியின் கிராமத்துக்கு வந்து சேரும் பேரன்.. பாட்டியை காணாது பஸ் நிறுத்தத்திலேயே அமர்ந்து பாட்டி வரும் பஸ் நோக்கி காத்திருக்கிறான். எந்த பஸ்சிலும் வராது போன பாட்டி நடந்து வருவதை காண்கிறான். அப்போது தான் பஸ்சுக்கு காசு இல்லா விட்டாலும் இனிப்பு வாங்கி தந்த பாட்டி நடந்தே வந்த அன்பை எண்ணி உருகுகிறான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சண்டை போட்டபடியே பாட்டியிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறான் பேரன்.

அவனுடைய அம்மா வந்து அவனை அழைத்து செல்லும் நாள் வருகிறது. பாட்டியை பிரிய மனமின்றி அவன் செல்லும் நாளின் முதல் நாள் இரவு.. பாட்டிக்கு ஏகப்பட்ட நூல்களில் ஊசிகள் கோர்த்து வைக்கிறான். பாட்டிக்காக தானே வாழ்த்து அட்டைகள் செய்து அதில் அனுப்புனர் பகுதயில் பாட்டி என்றும் பெறுனர் பகுதியில் அவன் பெயரை எழுதி ஒவ்வொரு மாதமும் தனக்கு அனுப்புமாறும் அப்போது அவள் நலமாக இருக்கிறாள் என தான் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறான். அவன் ஊருக்கு புறப்பட்டு செல்லும் நாளில் நம் மனம் கனக்க... பேரன் மன்னிப்பு கேட்டபடி பாட்டியை பிரிய...அந்த மலை கிராமத்தில் கூன் போட்டபடி குச்சியை வைத்து மெல்ல ஏறும் பாட்டியை காட்டியபடி படத்தை முடிக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியும் நம்மையே பிரதிபலிப்பது போல நகர்வது தான் இப்படத்தின் வெற்றி. படத்தை பார்க்கும் ஒவ்வொரு பேரனும் தனது தாத்தா பாட்டியை நிச்சயம் நினைத்து கொள்வான். இப்படத்தை இயக்கியவர் லீ ஜியாங் ஹயாந்க் (Lee Jeong-hyang) என்ற பெண் இயக்குனர்.2002 இல் சூப்பர் ஹிட்டான இத்திரைப்படம் உலகெங்கும் வாழும் பாட்டிகளுக்காக எடுக்கப்பட்டது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஜீடோங்க்மா என்ற குக்கிராமத்தில், அந்த கிராமத்தில் வாழும் மனிதர்களை கொண்டே எடுக்கப்பட்டது. அந்த பாட்டியும் அவ்விடத்தில் வாழ்ந்தவர் தான். பெரிய நடிகர்கள் இன்றி வெறும் பாட்டி பேரனின் பாசப்பிணைப்பையும் அவர்களுக்குள் ஏற்ப்படும் உறவு பாலமும் மட்டும் பேசுகிற படம் பெரும் வெற்றியும் பெற்றது. படத்தில் பெரும் ஒப்பாரி காட்சிகளோ சோக காட்சிகளோ இல்லாமல் இருந்தாலும்.. படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு சொட்டு கண்ணீர் விடப்போவது நிஜம்.

Friday, August 15, 2008

சுதந்திரம்...


வலது தோள்பட்டை
தீயில் பட்டது போல்
சுடுகிறது...
வலி,
இதயத்தில் நுழைந்து
முளையில் விழுகிறது.
எதிரி நாட்டு தோட்டா துளைத்திருகிறது.

தரையில்
விழுந்து கிடக்கிறேன் நான்...
பனி நிறைந்த வெள்ளை நிலம்
என்
ரத்தத்தால்
சிவபபாகிக்கொண்டிருகிறது...

என்னை
நாட்டின் ராணுவத்துக்கு
அர்ப்பணித்த
என்
தாய் தந்தைக்கு
முதல் வணக்கம்....

இன்று
எங்காவது ஒரு குழந்தை
பிறந்த நாள் கேக்கை
வெட்டிக்கொண்டிருக்கும்....

இன்று
எங்காவது ஒரு அரசியல் வாதி
யாரிடமாவது
லஞ்சம்
வாங்கிக்கொண்டிருப்பார்..

இன்று
எங்காவது
ஒரு கற்பழிப்பு
நடந்து கொண்டிருக்கும்...

இன்று
பிறந்த
பெண் குழந்தையை கொல்ல
யாராவது கள்ளிப்பாலை
அதன் வாயில்
ஊற்றிக்கொண்டிருப்பர்கள்.

இன்று
எதாவது ஒரு விடுதியில்
ஆணும் பெண்ணும்
பணத்துக்காகவும்,
உடல் பசிக்காகவும்
இணைந்து கொண்டிருப்பார்கள்..

இன்று
வரதட்சணைக்காக
ஏதாவது ஒரு வீட்டில்
ஸ்டவ் வெடித்திருக்கும்..

இன்று
திருமணமான ஏதாவது ஒரு ஜோடி
விவாகரத்துக்காக
கோர்ட் படி ஏறி கொண்டிருக்கும்...

இன்று
எதோ மதத்தை சேர்ந்த
சாமியார்
எதற்காகவோ கைது செய்யப்பட்டிருப்பார்.

இன்று
ஏதாவது ஒரு நடிகன்...
'அன்பான ரசிகனே' என
மூளை சலவை செய்ய ஆரம்பித்திருப்பார்.

இன்று
எங்காவது சாதி மோதலில்
பல உயிர்கள் மடிந்திருக்கும்...

இன்று
மதத்துக்காக
'மதம்' பிடித்த மனிதர்கள்
எங்காவது
மோதிக்கொண்டிருப்பர்கள்...

இன்று
எதாவது இளைஞன்
வேலைக்காக
எதாவது ஒரு அலுவலகத்தின்
கதவை
தட்டிக்கொண்டிருப்பான்...


இன்று
எதாவது ஒரு சினிமா நடிகனின்
முதல் நாள் காட்சியில்
அவன் கட் அவுட் மேலிருந்து
கீழே விழுந்த ரசிகன்
உயிரை விட்டிருப்பான்...

எனினும்,
நாட்டுக்காக துடித்து கொண்டிருக்கும்
இதயங்களுடன்
எனது இதயமும் துடிக்கட்டும்...

அருகில் இருக்கும் கம்பத்தில்
என் பையில் இருக்கும் கொடியை கட்டி
சர சர வென ஏற்றுகிறேன்.

நொறுங்கிப்போன எலும்புகளுடன்
வலக்கையை உயர்த்தி
கொடி வணக்கம் செய்து
செத்து மடிகிறேன்......

சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்....

Wednesday, August 13, 2008

அம்மா என்ற உயிர் எழுத்து...ன்பு என்றால் அம்மா

றுதல் தருபவள் அம்மா

ரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா

கை விளக்கியவள் அம்மா

யிரைக் கொடுப்பவள் அம்மா

ழ் உரைத்தவள் அம்மா

ன்னைப் பெற்றவள் அம்மா

ணியாய் இருந்தவள் அம்மா

யம் நீக்கியவள் அம்மா

ற்றுமை விதைத்தவள் அம்மா

ய்வின்றி உழைத்தவள் அம்மா

டதம் ஆனவள் அம்மா..

க்கின் உறுதி அம்மா..

நான் மண்ணில் முளைக்க காரணம் ஆனாய் ..

இன்று எனக்கு ஞாபகம் ஆனாய்..


-- அம்மாவின் நினைவாக...

Sunday, August 10, 2008

தொலைந்து போனவர்கள்...


காலை நேர பூபாளம்..
புளியமரத்து நிழல்..
.'கண்ணாமூச்சி ரே ரே '...
தாத்தா பாட்டியின் ஸ்பரிசங்கள்...
வண்ணத்து பூச்சியின் தரிசனம்..,
மயில் இறகுகள் சேகரிப்பு...
பூக்களின் புன்னகை...
ஆற்றோர குளியல்...
மார்கழி மாத கோலங்கள்..
பசுமை தோட்டம்..
மாலை நேர விளையாட்டு...
தாயின் தாலாட்டு..


இவை ஏதும் இன்றி....


புத்தகச் சுமை...
'கார்டூன் சேனல்',
அடுக்குமாடி குடியிருப்பு...
'வீடியோ கேம்'...,
கணினி மைய்யங்கள்...,
புள்ளியை தொலைத்த ஓவியங்கள்..
வாகன இரைச்சல்...
பரிமாறப்படாத உணவு...
அப்பா அம்மாவின் இன்ஜினியர் கனவு...

இன்றைய இயந்திர உலகில்..
நாளையின் நினைவுகளால் ,
நனவுகளில் ,
தொலைந்து போனார்கள்
இளந்தளிர்கள்..!

Thursday, August 7, 2008

உருவம் தொலைத்த நிழல்கள்..


என் மகளின்
புத்தகத்தினுள் கிடைத்த
ஒற்றை சிறகு...


சாயங்கால மேகங்களுக்கு..
நடுவே தெரியும்
பிறை நிலவு...


என் வீட்டுக்கூரையின்
காலியான
புறா கூடு...


விடுமுறை நாட்களின் பிற்பகலில்..
காற்றில் கசியும்...
'அன்னக்கிளியே உன்னை தேடுது...'


தண்ணீர் தொட்டியில்
என் மகன் விடும்
காகித கப்பல்கள்..


அலுவலகத்துக்கு செல்லும் வழியில்
நான் கடந்து போகும்...
பிள்ளையார் கோயில்...


கடற்கரையில்
காலை நனைத்து காத்திருக்கையில்..
அலைகளில் வந்து விழுந்த ஒற்றை செருப்பு...


எதாவது ஒன்று..
இன்னமும் உன்னை..
ஞாபகபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது...


என் முகவரிவெளிச்சம் துப்பும் வானம்
எரிக்கும் வெய்யில்..
வரிகள் காட்டும் தள்ளாமையில்...
நிலக்கிழம்...

இடுகாட்டுக்கு வழி கேட்கும்,
இலைகள் இழந்த மரங்கள்..
உடைந்த வீடுகள்...
சிதைந்த கூடுகள்..
பூச்சிகளின் அணிவகுப்பு
மனித வியர்வை
உடம்புகளின் நாற்றம்...
மண் மக்கிப்போன குளம்....

வெளியே அழுக்குடன்
என் கிராமத்து மக்கள்...
உள்ளுக்குள் என்னை
வெள்ளையாய் வரவேற்றார்கள்..


Wednesday, August 6, 2008

சுப்ரமணியபுரம் - காதலின்/நட்பின் துரோகங்கள்...

அனைவரும் புதுமுகங்கள் என்றாலும் அப்படத்தின் புகைப்படங்கள் என்னை கவர்ந்தன. எனது சகோதரர்கள் எண்பதுகளில் அலைந்து திரிந்த உடையுடன் காட்சி தந்த அந்த இளைஞர்கள் என்னை வித்தியாச திரைப்படத்திற்கு காத்திருக்க வைத்தனர்.
'இந்த சினிமா வந்த கண்டிப்பா பாக்கணும்' அப்டின்னு சில படங்களுக்கு மட்டும் தான் தோன்றும். அப்படி தோன்ற வைத்த திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். ஒருதலை ராகம் போல எண்பதுகளில் வந்த காதல் திரைப்படம் என்று எதிர்பார்த்து போனவனுக்கு அதிர்ச்சி.. காதல் மற்றும் நட்பின் துரோகத்தை சொல்லி பளார் என அறைகிறது திரைப்படம்.
ஹாலிவூடின் மார்ட்டின் ச்கோர்சீசீ படத்தை பார்க்கிற உணர்வு படம் எங்கும் வியாபித்திருந்தது. திரைப்படத்தின் முதல் பகுதியில் அழகரின் சிரிப்பும் துளசியின் கண்களும் கவிதை பாடிகொண்டிருக்கிறது. இந்த இருவர் தான் படத்தின் முதற் பகுதியின் பிரதான பாத்திரங்கள் என்றாலும் இருவருக்கும் உள்ள வசனங்களோ ஒரு தாளின் அரைப்பக்கத்துக்கு மேல் மிகாது. இருவரின் இயல்பான முகபாவங்களே படத்தை நகர்த்தி செல்கிறது...
பரமன்,அழகர்,காசி, டும்கான் மற்றும் ஒருவன் என ஐந்து வேலை வெட்டி இல்லாத நண்பர்களை, வாழ்ந்து கெட்ட அரசியல் குடும்பம் தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்தி கொள்கிறது. அவர்களுக்காக கொலை செய்துவிட்டு சிறை செல்லும் பரமன் மற்றும் அழகர் அவர்களது உண்மை முகம் தெரிந்து அவர்களை 'போட்டு தள்ள' முயல... அவர்களின் காதலும் நட்பும் துரோகம் செய்து அவர்களை பழி வாங்கி விடுவது தன் கதை...
சமுதிரகனியின் அளவுக்கு அதிகம் இல்லாத வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது..இளைஞர்களை ஒரு விடுதி அறையில் மூளை சலவை செய்யும் போதும் துளசியின் காலடியில் விழுந்து கெஞ்சும் போதும் இயல்பான வில்லத்தனமான நடிப்பில் மிளிர்கிறார்.
கதாநாயகனாக வரும் ஜெய், பாதி படம் துளசியிடம் சிரித்தபடி வளைய வந்து மீதி படங்கள் அரிவாளை தூக்கி திகிலூட்டுகிறார். பரமனிடம் ' ஒரு பொம்பள கிட்ட உயிர் பிச்ச கேக்க வச்சுட்டாய்ங்கடா' என கதறும்போது அவரது நடிப்புத் திறமை வெளிப்படுகிறது..
துளசிக்கு இப்படத்தில் அவ்வளவு வேலை இல்லை என்றாலும்.. அவரது பார்வை அம்புகளால் மனதை அள்ளுகிறார். 'கஞ்சா' கருப்புக்கு இது ஒரு முக்கியமான படம். டும்கானாக வருபவரும் தனது இயல்பு நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார்..
இயக்குனர் சசிகுமாரின், அமைதியாக வந்து ரௌத்திரம் காட்டுகிறார்..ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார்... அனாவசியமான சண்டை கட்சிகளோ இடுப்பை ஆட்டும் மலிவான நடனங்களோ இன்றி படத்தை உண்மைக்கு வெகு அருகில் கொண்டு சென்றிருக்கிறார். அனைவரையும் புதுமுகங்களாக வைத்துக்கொண்டு தானே படத்தை தயாரித்து வெளியிட அவருக்கு அவரின் கதையின் மேல் அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை வீண் போக்க வில்லை தமிழ் நாடு.. தமிழ் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக இப்படமே தரவரிசையில் முதலில் இருக்கிறது...
ஜெம்ஸ் வசந்தனில் இசையில் 'கண்கள் இரண்டால்..' தாலாட்டுகிறது..பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார்... அழகர் மற்றும் காசி எதிரிகளிடமிருந்து தப்பிக்க சந்துகளின் தெருக்களில் ஓடும்போது புகுந்து புறப்படும் கதிரின் ஒளிப்பதிவு உலக தரம்.கலை இயக்குனர் ரேம்போன் தான் படத்தின் முதுகெலும்பு...எண்பதுகளின் உலகத்தை கலை நேர்த்தியுடன் வடிவமைத்திருக்கிறார்...( அந்த கால கட்டத்தின் தொலைக்காட்சி பெட்டி, செய்தி தாள் உட்பட...)
படத்தில் ரத்த காட்சிகளும் வன்முறை காட்சிகளும் ஏராளம். அதனை இயக்குனர் சிறிது குறைத்து மாற்று காட்சிகளால் உணர்த்தி இருக்கலாம்... அப்படி உணர்த்தி இருந்தால் படத்தின் வீச்சு பாதிக்கும் என அவர் நினைதிருக்கலாமோ என்னமோ..
தண்ணி அடித்துவிட்டு சலம்பல் பண்ணினாலே வந்து அள்ளிக்கொண்டு போகும் போலீஸ் ,அழகர் மற்றும் பரமன் இரண்டாவது பகுதியில் செய்யும் கொலைகளுக்கு எங்கயும் காணோம்...

அரசியல்வாதிகளுக்காகவும் காசுக்காகவும் கொலை செய்வோரில் ஒருவன் ஆவது இப்படத்தை பார்த்துவிட்டு திருந்தும் வாய்ப்பு இருக்கிறது..

படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தால்.. மார்ட்டின் ச்கோர்சீசீ படம் பார்த்த உணர்வு..

இயக்குனர் சசிகுமார் வென்றிருக்கிறார் சுப்ரமணியபுரம் கோட்டை கட்டி.. தனது முதல் படத்திலேயே..

Friday, August 1, 2008

பாபேல் - உலக திரைபடங்களில் ஒரு மைல் கல்.

அலேஜன்றோ கோன்சலேஸ் இன்னரிட்டு , ஒரு இச்பன்யோல் இயக்குனர். என்றாலும் சிறந்த இயக்குனர்கள் மொழிக்கு அப்பாற்பட்டவர்கள். அவருடைய முதல் படமான அமெர்ரோஸ் பெர்ரோஸ் படம் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். ஒரு சம்பவத்தால் மூவர் பாதிப்பு அடைகிறார்கள். அந்த புள்ளியிலிருந்து அவர்களுடைய கதைகள் தனி தனியாக அச்சம்பவம் நடக்கும் முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை விளக்கும் யுக்தி அதற்க்கு முன்பு வேறு படங்களில் நான் கண்டதில்லை. ( அதே யுக்தியை மணிரத்னம் தனது ஆய்த எழுத்தில் ஈயடிச்சான் காபி செய்திருப்பார்). இன்னரிட்டுவின் முதல் படமாகட்டும் இரண்டாவது படமான இருபத்தொரு கிராம்கள் ஆகட்டும், மனித உறவுகளையும் உணர்வுகளையும் பிழிந்து கொடுக்கும் பணியை செவ்வனே செய்திருந்தன...இட்டுவின் மூன்றவது படமான பாபேல் திரைப்படத்திற்காக நான் ஒரு ரசிகனாக காத்திருந்தேன் என்று தன் சொல்லவேண்டும். அமெரிக்காவில் திரைப்படம் வெளியான நாளிலேயே சென்று பார்த்து விட்டேன். என்றாலும் நேற்று மறுபடியும் குறுந்தகட்டில் பார்த்ததால், இத்திரைப்படத்தை பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற வேகம் என்னை உந்தி தள்ளியது.

பாபேல் என்னை ஏமாற்றவில்லை. முதல் இரண்டு படைப்புகளிலும் உள்ள அதே புதுமை, மற்றும் மனித உணர்வுகளால் நெய்யப்பட்ட ஒரு காவியம் பாபேல்.வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மனிதர்களுக்கு ஒரே நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இத்திரைப்படம். இப்படத்தில் நான்கு கதைகள் ஊடாடி வருகின்றன.
ஒவ்வொரு கதையும் மெல்லிய மனித உறவுகளை அதன் வலியோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது . இன்னரிட்டுவின் பலமே உறவுகளின் வலியை கூறுவது தான். பாபேலும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல. இந்த நேரத்தில் கூத்தும் சண்டயுமான நமது தமிழ் படங்களின் தரத்தை நினைத்து பார்க்கிறேன்.

  1. மொராக்கோவில் ஆரம்பிக்கிறது முதல் கதை. ஒரு வயதான கிழவன் ஒரு ஏழை குடியானவனுக்கு ஒரு துப்பாக்கியை விற்கிறான். அந்த ஏழை குடியானவன் ஆடுகளை மேய்த்து அதன் தொலை உரித்து விற்பனை செய்து அதன் மூலம் குடும்பத்தை காப்பாற்றி வருபவன். ஆடுகளை கொன்று தின்னும் ஓநாய்களை விரட்டவே துப்பாக்கி வாங்குகிறான். அவனுடைய இரண்டு பருவ வயது பசங்களிடம் துப்பாக்கியை கொடுத்து ஓநாய்களை விரட்டும்படி பணிக்கின்றான். அவன் இல்லாத நேரம் துப்பாக்கியின் தோட்டாக்கள் எவ்வளவு தூரம் செல்கின்றன என சரி பார்க்க தூரத்தில் வரும் ஒரு ஊர்தியை நோக்கி குறிபார்த்து சுடுகின்றான் இளைய மகன். வேகமாக சென்று கொண்டிருக்கும் ஊர்தி சுட்டவுடன் நிற்கிறது. களேபர குரல்கள் கேட்கின்றன. பயந்து பொய் வீட்டுக்கு ஓடுகிறார்கள் இருவரும். அமெரிக்கா சுற்றுலா பயணியான ஒரு பெண், தீவிரவாதிகளால் சுடப்பட்ட செய்தி நாடு முழுவதும் ஒலிக்கிறது . மொராக்கோ காவலர்கள் இவர்களை கண்டுபிடித்து நெருங்குகிறார்கள் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது?....
  2. இரண்டு அமெரிக்கா தம்பதியர் மொரோக்கோவில் சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கும் இருக்கும் சிறு கருத்து வேறுபாடுகளை பகிர்ந்து கொள்கின்றனர். ஊர்தியில் சென்று கொண்டிருகொபோது எங்கிருந்தோ வந்த தொட்ட ஒன்று மனைவியின் தோள்பட்டையை பதம் பார்க்கிறது. அந்த அத்துவான பாலைவனத்தின் அருகே மருத்துவ வசதி எதுவும் இல்லை. அந்த உல்லாச பயணிகளை அழைத்து வந்த வழிகாட்டி தனது ஊரில் ஒரு மருத்துவர் இருக்கிறார் என கூறி அருகாமையில் உள்ள தனது கிராமத்துக்கு கூட்டி செல்கிறான். ஆம்புலன்ஸ் வரும் வரை அந்த சிறிய கிராமத்தில் அந்த சிறிய அறையில் அந்த அமெரிக்கா தம்பதியினர் தங்குகிறார்கள். பதறி பதறிப்போகும் கணவன் மனைவிக்கு மூத்திரம் அள்ளுவது உட்பட அனைத்தும் செய்ய அவர்கள் கருத்து வேறுபாடுகள் காணாமல் போக இருவரும் காதலால் உருகுகிறார்கள். அவர்கள் கதி என்னவானது? அந்த அமெரிக்கா மனைவி பிழைத்தாளா?

  3. பெற்றவர்கள் வேறு ஊருக்கு சென்றிருக்க பிள்ளைகளை பார்த்து கொள்கிறாள் மெக்சிகோ நாட்டை சேர்ந்த நடுத்தரவயது பெண்மணி. அவர்கள் வசிப்பிடம் அமெரிக்காவில். ஊருக்கு சென்றுஇருக்கும் அவர்கள் எதோ பிரச்னையில் மாட்டி கொள்ள தனது சொந்த மகனின் திருமணத்தை காண மெக்சிகோ நாட்டிற்க்கு செல்ல முடியாமல் தவிக்கும் அந்த பெண் குழந்தைகளையும் தன்னோடு திருமணத்துக்கு அழைத்து செல்கிறாள். அவளையும் அவளுடன் அந்த அமெரிக்கா குழந்தைகளையும் கூட்டி செல்கிறான் அவளுடைய மருமகன். நாடு இரவில் அமெரிக்கா திரும்பும் வேலையில் போதையில் இருக்கும் அவன் எல்லை காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறாததால் (மெக்சிகோ மக்களுடன் எப்படி அமெரிக்கா குழந்தைகள் என்ற சந்தேகம் அவர்களுக்கு) தான் வந்த காரில் அளவுக்கதிகமான போதையுடனும் வேகத்துடனும் பறக்கிறான்.. காவலர்களிடம் தப்பிக்க குறுக்கு பாதையில் வண்டியை செலுத்தி நாடு இரவில் ஒரு அத்துவான காட்டில் அப்பெண்ணையும் குழந்தைகளையும் இறக்கி விட்டபின் காவலர் போனதும் வந்து கூட்டி செல்வதாக கூறி அவ்விடம் இருந்து நகர்கிறான் அவன். அப்பெண் மற்றும் குழந்தைகள் நிலை என்ன?...
  4. காது கேளாத வாய் பேச முடியாத பருவ பணக்கார பெண் தான் உடல் ஊனமுற்றவள் ஆகையால் எந்த இளைஞனும் தன்னை திரும்பி பார்க்க வில்லை என்று தன் மீதே அவளுக்கு கோவம். சுய வெறுப்பின் காரணமாக பிறரை வெறுப்பு ஏற்றும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்கிறாள் தனது தாய் தற்கொலை செய்து கொள்ள தந்தை வியாபாரத்திலேயே கண்ணாய் இருக்க..இந்தப்பெண் சாய்ந்துகொள்ள யாரும் இன்றி மனம் பிறழ்ந்து போகிறாள். மொரோக்கோவில் நடந்த ஒரு துப்பாகி சூட்டில் அவளுடய தந்தையின் துப்பாக்கி பயன்படுத்தபட்டிருப்பதால் அதனை விசாரிக்க வரும் துப்பறிவாளனுடன் தனது இளமை தாகத்தை தீர்த்து கொள்ள முயல்கிறாள். அவளுடைய நிலைமையை புரிந்து கொண்ட அவன் அவளுக்கு அறிவுரை கூறி செல்கிறான். மனம் ஒடிந்து போன அந்த பெண் என்ன செய்தாள்?

இந்த நான்கு கதைக்கும் உள்ள தொடர்பு இப்பொது புரிந்திருக்குமே...! அந்த மொரோக்கோ சிறுவன் துளைத்த தொட்ட அந்த அமெரிக்க பெண்ணின் தோளை பதம் பார்த்தது. அந்த மெக்சிகோ பெண் பார்த்து கொண்ட குழந்தைகள் இந்த அமெரிக்கா தம்பதியுடயது. அந்த சிறுவர்களின் துப்பாக்கிக்கு சொந்தகாரர் அந்த ஜப்பானிய வியாபாரி.

திரைப்படம் முடியும் வேளையில் நான்கு கதைகளும் எவ்வாறு ஒன்றுகொன்று தொடர்புடையது என்பது எளிதாய் விளங்கும்..
இன்னரிட்டுவின் அனைத்து படங்களுக்கும் திரைக்கதை எழுதி இருப்பவர் குவில்லேர்மோ அர்ரியாக (guillermo arriaga).
அமெரிக்கா தம்பதியாக நடித்திருக்கும் பிராட் பிட் மற்றும் காத் ப்லான்சே இருவரும் ஹாலிவுடின் பெயர் பெற்ற நடிகர்கள். இருந்தாலும் பிராட் பிட் நடித்ததிலேயே சிறந்த படம் இதுவே என நான் கூறுவேன்..
ஆஸ்கார் விருதுகளுக்கு ஏழு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த இசைக்கு மட்டும் விருது பெற்ற இப்படம்.. ஆஸ்கார் விருதுகளின் அளவு கோள்களை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இன்னரிட்டுவின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன்.

Tuesday, July 22, 2008

நண்பன்...
உன் எச்சங்களின்
மிச்சங்கள் போதும்
எனக்கு...

காலடியில் காத்திருப்பேன்
காலமெல்லாம்
உனக்கு...


-நிலா முகிலன்
புகைப் படம் - நிர்மல்

Monday, June 30, 2008

புகைப்பட கவிதை .....கரை சேர...பத்து மாசம் சொமந்தவதான்
பெத்து போட்டு போயிட்டா
பத்து நிமிசம் பாக்கலையே
சாமியாக ஆயிட்டா..

பத்து வருசம் ஆனபோதும்
நெஞ்சில் ஒன்ன சொமக்கறேன்
எஞ்சி இருக்கும் வாழ்க்கை எல்லாம்
ஒனக்குத்தான வாழறேன்...

கொளத்து தண்ணி மீனு போல
என் செல்வம் இங்கு வாழுது
கடலுக்கு தான் ஆசை பட்டா
'சுனாமி' வந்து தாக்குது.

துடுப்பில்லாத படகு போல
மனசு தத்தளிக்குது.
வாழ்க்கை கூட பரிசல் போல
சுத்தி சுத்தி அடிக்குது..

நீ என்ன பாத்து சிரிக்கும்போது
கண்ணு ரெண்டும் மின்னுது
அதுல தெரியும் நம்பிக்கை தான்
என்ன வாழ வக்கிது

பரிசல் போல நான் இருக்க
துடுப்பாக நீ இருக்க
வாழ்க்கை என்னும் நீரைத்தான்
தாண்டி சேர்வோம் கரைக்குத்தான்

---நிலா முகிலன்
புகைப்படம்- நிர்மல்

புகைப்பட கவிதை... மீனவ நண்பன்அன்று...
சிதிலமான என்னை செப்பனிட
மனைவியின் தாலி தங்கத்தை விற்றாய்.

உன் வியர்வை துளிகளால்...
எனக்கு வர்ணம் பூசினாய்.

உன் சுவாசக் காற்றால்
என்னை சுத்தப்படுத்தினாய்

கிழிந்த புடவையுடன்...
மனைவி தைத்து தந்த வலையை
என் மேல் போர்த்தி அழகு பார்த்தாய்.

எனது ஓட்டைகளை அடைத்தாய்
குடிசை ஓட்டைகளில்
நனைந்தது உன் குடும்பம்.

நான் முன்னேறி செல்ல
துடுப்பு வழித்தாய்
கை வலித்தாய்
பொறுமை சகித்தாய்
வெய்யிலில் தகித்தாய்.

நீ பசித்திருக்க
என்னை மீன்களால் நிரப்பினாய்.

இன்று...
ஓலசத்தம்
உன் ஓலை குடிசையில்...

நான் கரை ஏறிவிட்டேன்.
நீ..?
இலங்கையிலா? இந்தியாவிலா?
சிதைக்கப்பட்டாயா சிறையிடப்பட்டாயா?

அலைகளின் ஓசையில்
அலறிகொண்டிருகிறது...
என் மௌனங்கள்..

- நிலா முகிலன்

-புகைப்படம் -நிர்மல்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...