Sunday, September 14, 2008

தோழனுக்கு...


தோழா ,
சூரியனை நோக்கியது உன் பயணம்.
சுடும் வெய்யில்
உன்னை
சுட்டேரிக்கவா முடியும்.

உன்
இன்றைய வியர்வைகள்
உன்
நாளைய விருட்சத்துக்கு
நீ ஊற்றும் நீர்.

பேனாக்கள்,
ரத்தம் சிந்தினால் தான்
கவிதைகளின் பிரசவம்.

உன்
நிகழ்கால நிமிஷங்கள் கண்டு
கலங்காதே
எதிர்காலம் உன்னை எதிர்கொள்ள காத்திருக்கிறது .

இன்று
பாதைகளின் வழியே
உன் பாதங்கள் போகலாம்.
நாளை
உன் பாதங்களை நோக்கி
பாதைகள் அமையலாம்.

உனக்குள்
எரிகின்ற தீயை,
எச்சிலால் ...
அழித்துவிட முடியுமா?

தேய்மானங்கள்...
நிலவுக்கும் உண்டு.
நீ
பவுர்ணமி ஆக
பிரமிப்பூட்ட போகிறாய்.

இருட்டின்
பிரஜையாக இருக்கிறோம்
என்று இடிந்து போகாதே...
தீபாவளிக்கே
நீ
வெளிச்சம் தர போகிறாய்.

கருப்பையை
உனக்குள் ஒளித்துக்கொண்டு
உயிர்க்காய் அலைய வேண்டாம்.
சூரியன்
சாய்ந்த நேரத்தில் தான்,
நிழல்களின் யுத்தங்கள்.
சூரியன் உச்சிக்கு போனால்
நிழல்கள் நினைவிழந்து விடும்.

உழை..
உன் உயிர்கள்
காந்த துகள்களாய்
உன்னுடன் ஒட்டிக்கொள்ளும்

இதயத்தில்
நிரந்தரமாய் எவரும் இல்லை..
உலகத்து போர்க்களத்தில்
இழப்பதற்கு எதுவும் இல்லை...

விடியல்கள் உன் அருகில்
உயரங்களின் உச்சியை
விரைவாய் நீ தொட....வாழ்த்துகிறேன்.

2 comments:

ஹேமா said...

முகிலன் ,அழகான வரிகளோடு மனதில் உற்சாகத்தை...தைரியத்தைத் தரும் அருமையான கவிதை.அதுசரி யாருக்காகவோ எழுதின மாதிரி இருக்கு!எனக்கா....உங்களுக்கா?

NILAMUKILAN said...

வணக்கம் ஹேமா. உங்கள் கருத்துக்கு நன்றி. இது நம்மை போல உள்ள அனைவருக்கும்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...