Friday, March 20, 2015

கவிதை: கடவுளிடம் சிறுமியின் சிறு கேள்விகள்...!


செய்தி : ஆறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் http://www.ibtimes.co.uk/india-six-year-old-sexually-assaulted-4-foot-iron-rod-1491027

தெய்வம் நின்று கொல்லும்
என்றார்கள்.

நான் செய்த குற்றம் என்ன?

அப்பாவின் மடியில்
ஆழ்ந்துறங்கியதா?

அம்மாவிடம்
மிட்டாய் வாங்க காசு கேட்டதா?

தம்பியிடம்
பலப்பத்தை பிடுங்கி
சண்டை இட்டதா?

புல்லை
மான்களுக்கு
இரையாகப்  படைத்தாய்!

மான்களை
புலிகளுக்கிரையாகப்  படைத்தாய்!

என்னை,
மனிதர்களுக்கிரையாகப்
படைத்தாயா ?

பெண் என்றால்
பேயும் இரங்கும்  என்பார்களே!

கடவுளே !
உனக்கு
இரக்கம் இல்லையே
உன்னை
என்னவென்று சொல்வது?

பெண்களை
தெய்வமாக
வணங்கும் நாடு என்பதால்
தைரியமாகப் பிறந்தேன்.

பெண்களை சேதப்படுத்துபவர்கள்,
தெய்வங்களை
என்ன செய்வார்கள்?

பாலூட்டும் தாயையும்
பாலுணர்வுடன்  பார்க்கும்
பெண்களுக்கெதிரான தேசத்தில்...
ஆறும்
அறுபதும்
ஒன்றுதான்.

ஆக்குபவர்கள்
பெண்களாக இருந்தாலும்
இங்கே
அழிபவர்களும்
அவர்களாகவே இருக்கிறார்கள்.


கடவுளே !
நீ
பெண்ணாக இருந்தால் !
இங்கே
பிறந்துவிடாதே!

நீ
நிர்பயாவாக  மாறுவாய்
அல்லது
இதே கவிதையை
எழுதிக் கொண்டிருப்பாய்..!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...