Wednesday, August 18, 2010

ஒரு இந்தியப் பயணம் - 6

                                                   கோவை விமான நிலையம்.
கிங் பிஷேர் ஏர்வேசில் நான் கோவை சென்று சேர்ந்தபோது பல ஆச்சர்யங்கள் எனக்கு காத்திருந்தன. விமான நிலையம் விரிவாக்க பணியில் முனைந்திருந்தனர் தொழிலாளர்கள். கோவை செம்மொழி மாநாட்டை ஒட்டி கிட்டத்தட்ட ஏழாயிரம் மக்கள் வந்து செல்லும் வகையில் வடிவமைத்துக் கொண்டிருந்தனர். அவினாசி சாலை ஆறு வழி சாலையாக்கப்பட்டு சுத்தமாக இருந்தது. சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டிக் கொண்டிருந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவினாசி சாலையின் அழகே, சாலையின் இரு புறங்களிலும் பசுமையாக இருக்கும் மரங்கள் தான். மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு..எதோ டெக்சாஸ் ப்ரீவே போல மொட்டையாக இருந்தது. ஊரெங்கும் செம்மொழி மாநாட்டுக்காக ப்ளெக்ஸ் போர்டுகள். சாலையோர பூங்காக்கள், மின்னும் சாலைகள் என நகரமே புது பொலிவோடு காட்சி அளித்தது. செம்மொழி மாநாட்டினால் என்ன லாபமோ என்னவோ, கோவை மாநகர் புதுப்பிக்கபட்டிருந்தது.  
                                           பரூக் பீல்ட் பிளாசா வணிக வளாகம்.
பரூக் பீல்ட் பிளாசா என்ற ஒரு வணிக வளாகம் கோவையின் பரூக் பான்ட் சாலையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருந்தது. ஸ்டாலின் அந்த வளாகத்தை எவ்வளவோ கொடிகள் (ஐநூறு கோடி என்பது செவி வழி செய்தி) கொடுத்து வாங்கி உள்ளதாக பேசிக் கொண்டார்கள். அது சரி நம்ம ஊரு எம் எல் ஏ விற்கு அதிக பட்சம் சம்பளம் ஐம்பதாயிரம் இருக்குமா? ஐநூறு கொடிகள் கொண்டு தமிழ் நாட்டுக்கே ஐந்து ஆண்டுகள் மின்சாரம் தரலாமே? கோவை புதூரில் தயாநிதி மாறன் நானூறு ஏக்கர்கள் நிலம் வாங்கி உள்ளதாக பேசி கொண்டார்கள். பெருமூச்சி தான் விட முடிந்தது.


                             புதிதாய் திறந்து வைக்கப்பட்டுள்ள ஐ டி பூங்கா.

இரண்டு பிரமாண்டமான ஐடி பூங்காக்கள் கட்டி கொண்டிருந்தார்கள்.( அதில் ஒன்று முதல்வரால் சமீபத்தில்  திறந்து வைக்கப் பட்டது). இதனால், சரவணம்பட்டி, பீளமேடு,கணபதி பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை எல்லாம் எகிறி விட்டது. பெரிய தலைகள் எல்லாம் வேறு கோவையில் முதலீடு செய்வதால், கொவையில் வீடு வாங்குவதற்கு சமான்யனால் முடிவது மிகவும் கடினம்.
                         சிறுமுகை. நீலகிரி மற்றும் பவானி ஆறு. (புகைப்படம்: நிர்மல்.)

நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு நகர்வலம் வந்தேன். எனக்கு பிடித்த கோவை மாநகரை எவ்வளவு முறை சுற்றி வந்தாலும் அலுக்கவில்லை. வெய்யில் கொளுத்தியது. என்றாலும் சென்னைக்கு இது எவ்வளவோ தேவலாம். உறவினர்களின் வீடுகளுக்கு சென்றது தவிர எனது சொந்த ஊரான சிறுமுகைக்கும் சென்று வந்தேன். உலகில் எங்கு பறந்தாலும் எங்கு வாழ்ந்தாலும், பிறந்த வளர்ந்த கூட்டினை வந்து அடையும் சுகம் சொல்லி மாளாது. 

சிறுமுகை, கோவையில்  இருந்து சுமார் நாற்ப்பத்தைந்து கிலோமீட்டர்  தொலைவில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நீலகிரி மலை அடிவாரம் என்பதால், ஊரை சுற்றிலும் நீல நிறத்தில் மலை மாதாவின் மார்பகங்கள் செழுமையாக தெரியும். இரவில் மலையில் தெரியும் மின்மினி விளக்குகளும் அந்தி நேரத்தில் மலையில் பட்டு எதிரொலிக்கும் சூரிய ரேகைகளும் என அது ஒரு சொர்க்கம். பலர் நகரத்துக்கு சென்று தங்கி விட்டாலும்  சிறுமுகை இன்னமும் மாறாத அமைதியுடன் பசுமையாக இருந்தது. ஊருக்கு வெளியே மலையின் அடியில் பவானி ஆறு சலசலத்து ஓடி கொண்டிருந்தது. ஆற்றோர வாழை தோட்டங்களும் நீரில் முங்கி குளித்து கொண்டிருந்த மங்கைகளும்..ஆற்றை கடந்து வர செல்லும் பரிசல்களும், .பிள்ளையார் கோயிலும், மேரி மாதா ஆலயமும்...நான் படித்த பள்ளியும் . என்னை அடையாளம் கண்டு கொண்டு 'நல்ல இருக்கியா ராசா' என என்னை கட்டி அனைத்து கொண்ட என் ஊர் பெருசுகளும், என எனது ஊரின் அழகை  அமெரிக்காவினால் கூட ஈடு செய்ய முடியாது என உணர்ந்தேன்.
   
                                               சிறுமுகை. நன்றி: www.sirumugai.org
இங்கு தான் என் தாய் அமர்வார்கள். இங்கு தான் என் தந்தை மர லாரி ஒன்றை செய்து தந்தார்கள். இங்கு தான் நானும் என் சகோதரனும் சண்டையிட்டது, இங்கு தான் ஒளிந்து விளையாடுகையில் நான் ஒளிந்து கொள்ளும் இடம், என நான் சிறுபிள்ளை போல என் மனைவிஇடம் விளக்கி கொண்டே என் மனைவியை அறுத்து தள்ளி விட்டேன். இருந்தாலும் நான் ஒரு சிறு பிள்ளையை போல அந்த trance  உள் சென்று வந்ததை போல இருந்தது.

சிறுமுகையை விட்டு அகலும்போது எதோ சொல்லொண்ணா துயரம் என் தொண்டையை அடைத்துக் கொண்டது. என் மனைவிக்கும் சிறுமுகை மிகவும் பிடிக்கும் ஆகையால்... கடைசி காலத்தில் எங்கள் காலத்தை சிறுமுகையில் தான் கழிக்க வேண்டும் என பேசிக் கொண்டோம்.

மிகவும் பிடித்த KG  திரை அரங்கு சென்று என் மனைவி ஒரு சூர்யா ரசிகை என்பதால், 'சிங்கம்' படம் பார்த்தோம். படம் சரியான மசாலா என்றாலும் சூர்யாவின் நடிப்பு நன்றாக இருந்தது என சொல்லி என் மனைவியின் முகத்தில் சிரிப்பை கண்டேன்.

கோவைப் பயணம் முடிந்தது மீண்டும் பெங்களூரு பயணம் ஆனோம். ஒரு ஆச்சர்யமான பரவசமான, அனுபவத்தை எதிர் கொள்ளப் போகிறோம் என்பது எங்களுக்கு அப்போது தெரியாது.

(பயணம் தொடரும்...)
--

நேர்மையான உமா சங்கரும் நேர்மையற்ற அரசியலும்...

சாதி என்ற உருப்படாத ஒரு காரணம் சொல்லி, ஊழல்களை அம்பலப் படுத்திய உமா சங்கர் என்ற நேர்மையான அரசு அதிகாரியை தற்காலிக பணி நீக்கம் செய்த தமிழக அரசுக்கு எனது கண்டனங்கள்.  வலை தோழர்களுடன் நானும் கண்டன பதிவில் இணைகிறேன்.

Saturday, August 14, 2010

சுதந்திரம்...!


நேற்றைய,
பியர் விருந்தின்,
மிச்சங்களை நக்கிவிட்டு
மயங்கிக் கிடந்தன
நடுநிசி நாய்கள்...

குப்பையை கிளறி,
இலைகளின் எச்சங்களை
தேடி கொண்டிருந்தன...
நாளைய மாணவனின் 
விரல்கள்...

தம் மக்கள் 
சுமை சுமந்து 
சோர்ந்து போக..
கட்டணம் கட்டிய
தாயும் தகப்பனும்,
நாளைய மருத்துவனுக்கோ பொறியாளனுக்கோ  
தவமிருந்தனர்...

அவர்களின் தந்தையும் தாயும்...
முதியோர் இல்லத்தில்...
பேரனின் வரவுக்கு காத்திருந்தனர்...

காந்திக்கு மாலை இட்ட கையோடு,
தீக்குளித்த தொண்டனின்,
மனைவியுடன்
போன்னாடையோடு 
புகைப்படம் எடுத்துக் கொண்டான்...
தலைவன்.

சாலையின் சந்திப்பின் ...
விளக்குச் சிவப்பில்...
இடுப்பில் உறங்கி கிடந்த 
குழந்தையை கிள்ளிய பெண் 
'சாமீ' என ஆரம்பித்தாள்...

மாலைப் பேருந்தின் மூச்சு திணறலில்,
அவள் புட்டம் உரசும் 
மனிதனின் பேரனுக்கு...
நேற்று மூன்றாவது பிறந்தநாள்.

அலுவலக கணினியில் 
'சுதந்திரம்' 
என கவிதை எழுதினான் 
நிகழ் காலக் கவிஞன்.

இப்படியாக...
முடிந்து போனது....
அறுபத்து   நாலாவது 
சுதந்திர தினம்...

சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

--

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...