Saturday, September 27, 2008

உலக சினிமா: 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' (The Pursuit of Happyness). தன்னம்பிக்கை + விடாமுயற்சி=வெற்றி.


வீடு இல்லாமல் தெரு தெருவாக சுற்றி கொண்டிருந்த, ஒரு பிச்சைக்கார வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த ஒருவன், தனது விடா முயற்சியாலும் தனது தன்னம்பிக்கையாலும் பல மில்லியன் டாலர்களுக்கு சொந்தக் காரன் ஆனான் என சொல்லும் உண்மை கதை.

கிறிஸ் கார்ட்னர் என்ற ஒரு பங்கு வர்த்தக வியாபாரியின் சுயசரிதையான 'தி பர்சூட் ஆப் ஹாப்பி நெஸ்' என்ற புத்தகம் தான் பல மாற்றங்களுடன் திரைப்படமாகியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் படம் துவங்குகிறது. மருத்துவமனைகளுக்கு உபயோகப்படும் ஒரு கருவி விற்கும் விற்பனை பிரதியாக கிறிஸ்.நர்ஸ் ஆக வேலை பார்க்கும் மனைவி. சீன குடும்பம் நடத்தும் ஒரு விலை குறைந்த டே கேர் செல்லும் மகன் என அளவான மத்திய தர குடும்பம். இருந்தாலும் வறுமையால் அக்குடும்பத்தில் பிரச்சனை வருகிறது. வாடகை குடுக்காததால் வீட்டுக்காரனின் நச்சரிப்பு. நோ பார்கிங் இடத்தில் காரை பார்க் செய்ததால் அடிக்கடி கிடைக்கும் அபராதம் என வீட்டில் இருக்கும் பண பிரச்சனை அழகாக காட்டப் படுகிறது.
தான் காரை பார்க் செய்யும் இடத்தை இன்னொருவருக்கு விட்டு கொடுத்து நட்பு வளர்க்கிறான் கிறிஸ். அவர் டான் விட்டர் என்னும் பங்கு சந்தை வர்த்தக அலுவலகத்தில் வேலை பார்ப்பதை அறிந்து அங்கு வேலை செய்யும் மக்கள் கோட், சூட், டை என நடைபோடுவதை பார்க்க... தானும் அவ்விடத்தில் வேலை செய்ய ஆசை படுகிறான். அவருடன் ஒரு டாக்சி யில் செல்லும்போது சிறுவர்கள் விளையாடும் க்யுப் எனும் விளையாட்டு பொருளை அவர் சரியாக பொருத்த முடியாமல் தவிக்க அதனை எளிதாக பொருத்தி அவன் சிறந்த மூளைக்காரன் என நிரூபிக்கிறான்.

அவரிடமே டான் விட்டர் அலுவலகத்தில் தானும் வேலை பார்க்க என்ன செய்ய வேண்டும் என கேட்க அவரோ வருட வருடம் இலவசமாக அவர்கள் தரும் ஆறு மாத பயிற்சி எடுத்துக்கொண்டு அவர்களின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அந்த அலுவலகத்தில் வேலை என்ன சொல்கிறார்.
பலவித சிந்தனை செய்த பின்பு அதற்க்கு ஒத்து கொள்கிறான் கிறிஸ். மறுதினம் அவனை நேர்முக தேர்விர்ற்கு வரும்படி அழைப்பு வருகிறது. அன்று வீட்டுக்காரன் வாடகைக்கு பிரச்சனையை செய்வதால் தானே அந்த வீட்டுக்கு பெயிண்ட் அடித்து தருவதாக கூறுகிறான் கிறிஸ். அதன்படி அவன் ஒரு ஜீன்ஸ் மட்டும் அணிந்து ஒரு ஜிப் அறுந்து போன ஒரு ஜெர்கின் போட்டு கொண்டு பெயிண்ட் அடித்து கொண்டிருக்கும் வேளையில் போலீஸ் வருகிறது.
அவன் 'நோ பார்கிங்' இடத்தில் தனது காரை எப்போதோ நிறுத்தியதற்கு அபராதம் விதித்தும் அவனால் செலுத்த படாததால் அவனை கைது செய்து ஜெயிலில் வைக்கிறார்கள். ஒரு இரவு சிறையில் கழித்த பின்பு காலை நேர்முக தேர்விற்கு நேரமாகி விட்டதால் அதே உடையுடன் சாயம் போன ஜீன்சும் ஜிப் அறுந்து போன ஜெர்கினும் அணிந்தபடியே நேராக டான் விட்டர் அலுவலகம் சென்று தேர்விற்காக காத்திருக்கிறான். கிட்டத்தட்ட சுவர்களுக்கு சுண்ணாம்பு பூசுபவன் தோற்றத்தோடு இருக்கும் அவனை அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் ஏளனமாக பார்க்கிறார்கள்.நேர்முக தேர்வில் அவன் கூறுகிறான்.
'நான் இப்போது இருக்கும் தோற்றத்திற்காக எப்படியாவது ஏதாவது ஒரு பொய்யை சொல்லி உங்களை ஏமாற்றி விடலாம் என நினைத்தேன். எனக்கு ஒரு பொய்யும் தெரியவில்லை, எனவே உண்மையை சொல்கிறேன். நோ பார்கிங் இடத்தில் எனது காரை நிறுத்தியதற்காக என்னை போலீஸ் கைது செய்து நேற்று இரவு முழுவதும் சிறையில் இருந்தேன். இன்று காலை நேராக சிறையில் இருந்து வருகிறேன். '
அப்போது தேர்வு செய்யும் குழுவில் இருக்கும் ஒருவர் கேட்கிறார். 'நீ நேர்முக தேர்வில் இருந்து உன்னிடம் ஒருவன் இப்படி சட்டை இல்லாமல் தேர்விற்கு வந்தால் அவனை பற்றி நீ என்ன நினைப்பாய்?'
அவன் கூறும் பதில்.' அவன் நல்ல பான்ட் அணிந்திருக்கிறான் என்று தான் நினைப்பேன்'.

அவன் தேர்வாகி விடுகிறான்.
ஆறுமாதம் சம்பளம் இன்றி படிக்க போவதை அறிந்த அவன் மனைவி வறுமையால் அவனை விட்டு பிரிந்து நியூ யார்க் நகரம் சென்று விடுகிறாள். மகனையும் தன்னையும் சுமந்து கொள்ளும் பொறுப்பு அவனுக்கு வருகிறது.

ஒரு நாள் நாடு இரவில் வாடகை கட்டாததால் நடு இரவில் வீட்டுக்காரனால் துரத்தப்படுகிறான் கிறிஸ். ஒரு விடுதியில் குறைந்த வாடகைக்கு அறை எடுத்து தங்குகிறான்.

அவனது படிப்பு துவங்குகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த மருத்துவ இயந்திரத்தை விற்க அலைகிறான். மகனையும் பார்த்துகொள்கிறான். அவனும் படிக்கிறான். இடையில் அவனிடம் இருக்கு இரண்டு இயந்திரங்களில் ஒன்று களவு போகிறது. அதனை பெரும் அலைச்சல்களுக்கிடையில் கண்டுபிடிக்கிறான். இருக்கிற காசும் தீர்ந்து போக.. நடு தெருவுக்கு வருகிறான். எங்கு செல்ல என தெரியாமல் ரயில் நிலையத்துக்கு வருகிறான். அங்குள்ள ஒரு கழிப்பிடத்தினுள் அங்குள்ள டிஷ்யு பேப்பெர்களை விரித்து கண்ணீருடன் தன் செல்ல மகனுடன் அந்த இரவை கழிக்கிறான்.

அமெரிக்காவில் வீடற்றவர்களுக்கு (இந்திய மொழியில் சொல்வதானால் பிச்சை காரர்களுக்கு) என்று விடுதிகள் உண்டு. அதற்க்கு பெரிய ஒரு வரிசையில் நிற்க வேண்டும் இரவு மட்டும் தங்கி கொள்ளலாம். மறுநாள் அதே விடுதியில் அதே இடம் கிடைக்கும் என சொல்ல முடியாது. வேறொரு விடுதியில் வேறு இடம் கிடைக்கலாம்.
அப்படி பட்ட இடங்களில் பிச்சை காரர்களோடு பிச்சை காரனாய் தனது மகனுடன் அங்கு இரவுகளை கழிக்கிறான் கிறிஸ். இரவுகளில் அவ்விடத்தில் வரும் சொற்ப வெளிச்சத்தில் படிக்கிறான். வார விடுமுறைகளில் தேவாலயங்கள் சென்று அங்கு கிடைக்கும் உணவை உண்கிறார்கள் இருவரும். அவ்வப்போது பூங்காக்கள் சென்று மகன் விளையாட பணிக்கிறான்.
தேர்வு நாள் வருகிறது. தேர்வெழுதி விட்டு வெளியே வருகிறான். ஒரே ஒருவன் மட்டுமே தேர்வு செய்யபடுவான் என்கிறார்கள். அந்த ஒருவனாக இல்லாவிட்டால் அவனது வாழ்வே கேள்விகுறி ஆகி விடும்.

அவனை ஒரு நாள் திடீரென அழைக்கிறார்கள். அவன் தேர்வாகிவிட்டத்தை சொல்ல அவன் கண்களில் கண்ணீர்.. படம் பார்க்கும் நமக்கோ அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நிழலாடுகிறது. அற்புதமான நடிப்பை இங்கு வெளிப்படுத்துகிறார் கிறிஸ் ஆக நடித்திருக்கும் வில் ஸ்மித். அவரின் வெற்றி நமது வெற்றியாக நமது கண்களும் பனிக்கிறது

படத்தில் ஒரு வசனம். கிறிஸ் தனது மகனிடம் சொல்வதாக வருகிறது.'உன்னால் முடியாது என யார் கூறினாலும் அதை நம்பாதே. உனது திறமை எது என அவர்களுக்கு தெரியாது. உன்னால் எதுவும் முடியும் என நம்பு. உன் லட்சியத்துக்கு குறுக்கே எது வந்தாலும் நீ நில்லாதே. உனது இலக்கை நோக்கி முன்னேறு.'

வில் ஸ்மித்தின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் நிஜத்திலும் வில் ஸ்மித்தின் மகனே. புலிக்கு பிறந்தது என கூறப்படும் பழமொழி போல மிக அற்புதமாக நடித்திருக்கிறான் அந்த சிறுவன். வில் ஸ்மித்தின் திரை வாழ்கையில் இப்படம் ஒரு மைல் கல். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்டு பாரஸ்ட் விடக்கர் என்ற சக நடிகனிடம் தோற்று விட்டார்( பாரஸ்ட் விடக்கர் நடித்த படம் இடி அமீன் வாழ்வை சொல்லும் 'த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து மிக அற்புதமான நடிப்பு. அப்படத்தை பற்றி பதிய இருக்கிறேன்).
இருந்தாலும் தோல்வியே வாழ்க்கையாக இருக்கிறது என உடைந்து போகும் அனைத்து இதயங்களுக்கும் ஒரு உந்து சக்தி இந்த படம்.
Sunday, September 14, 2008

தோழனுக்கு...


தோழா ,
சூரியனை நோக்கியது உன் பயணம்.
சுடும் வெய்யில்
உன்னை
சுட்டேரிக்கவா முடியும்.

உன்
இன்றைய வியர்வைகள்
உன்
நாளைய விருட்சத்துக்கு
நீ ஊற்றும் நீர்.

பேனாக்கள்,
ரத்தம் சிந்தினால் தான்
கவிதைகளின் பிரசவம்.

உன்
நிகழ்கால நிமிஷங்கள் கண்டு
கலங்காதே
எதிர்காலம் உன்னை எதிர்கொள்ள காத்திருக்கிறது .

இன்று
பாதைகளின் வழியே
உன் பாதங்கள் போகலாம்.
நாளை
உன் பாதங்களை நோக்கி
பாதைகள் அமையலாம்.

உனக்குள்
எரிகின்ற தீயை,
எச்சிலால் ...
அழித்துவிட முடியுமா?

தேய்மானங்கள்...
நிலவுக்கும் உண்டு.
நீ
பவுர்ணமி ஆக
பிரமிப்பூட்ட போகிறாய்.

இருட்டின்
பிரஜையாக இருக்கிறோம்
என்று இடிந்து போகாதே...
தீபாவளிக்கே
நீ
வெளிச்சம் தர போகிறாய்.

கருப்பையை
உனக்குள் ஒளித்துக்கொண்டு
உயிர்க்காய் அலைய வேண்டாம்.
சூரியன்
சாய்ந்த நேரத்தில் தான்,
நிழல்களின் யுத்தங்கள்.
சூரியன் உச்சிக்கு போனால்
நிழல்கள் நினைவிழந்து விடும்.

உழை..
உன் உயிர்கள்
காந்த துகள்களாய்
உன்னுடன் ஒட்டிக்கொள்ளும்

இதயத்தில்
நிரந்தரமாய் எவரும் இல்லை..
உலகத்து போர்க்களத்தில்
இழப்பதற்கு எதுவும் இல்லை...

விடியல்கள் உன் அருகில்
உயரங்களின் உச்சியை
விரைவாய் நீ தொட....வாழ்த்துகிறேன்.

Thursday, September 11, 2008

வாஜ்பாயியை காலில் விழுந்து வணங்க வைத்த சின்னப்பிள்ளைமுன்னாள் பிரதமர் வாஜ்பாயியே காலில் விழுந்து வணங்கும் அளவுக்கு அந்த கிராமத்து பெண்மணி சின்னப்பிள்ளை அப்படி என்ன சாதித்து விட்டார்?
கண்டாங்கி சேலை கட்டி... காலில ஒரு ரப்பர் செருப்பு. முகத்தில் ஒரு வெகுளித்தனம். இது தான் சின்னப்பிள்ளை. மதுரை அருகே உள்ள புலிசெரியில் கூலி வேலை செய்யும் ஐம்பது வயது பெண்மணி. 'ஸ்த்ரீஷக்தி' விருதை முன்னால் பிரதமர் வாஜ்பாய் கைய்யால் வாங்கி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது, வாஜ்பாயீ இந்த பெண்மணியின் சாதனையை பாராட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்.

புலிசெரியில் கூலி வேலை செய்து வரும் சின்னப்பிள்ளை, தனது குடிசை வீட்டில் இருந்தபடி தனது சக தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஞாயமான கூலியையும் நல்ல வேலை தரத்தையும் பெற்று தந்ததில் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார்.

தனது கூலி வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக முதலாளியிடம் பரிந்து பேசி அவர்களையும் ஆமொதிக்கவைத்து நல்ல கூலியை பெற்று தந்திருக்கிறார். முதலில் மறுத்த முதலாளிகளை ஒத்துக்கொள்ள வைக்க கடுமையாக சாத்வீகமாக போராடி அதில் வெற்றியும் பெற்றார்.
'தன்' என்ற நிதி நிறுவனம் நடத்திய 'களஞ்சியம்' என்ற இயக்கத்தில் 1989 இல் இணைந்தார் சின்னப்பிள்ளை. கிராமங்களில் 'களஞ்சியம்' என்ற சிறுசேமிப்பு முறை பற்றி எடுத்துகூறி அவர்களை இணைய வைத்திருக்கிறார். அவரது திறமை அவரை 'களஞ்சியத்தின்' நிர்வாக பொறுப்பில் ஒரு நிர்வாகியாகியது.
எழுதப்படிக்க தெரியாத சின்னப்பிள்ளை, ஒரு தேர்ந்த நிர்வாகியாக செயல்பட்டு 'களஞ்சியம்' இயக்கத்தை வழி நடத்தினார். இப்போது 'களஞ்சியத்தில்' ஏறக்குறைய எழுபதாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.அனைவரும் பின்தங்கிய, ஏழை விவசாய மற்றும் கூலி தொழிலாளர்கள். ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்தவர்களும் ஒரு சிறு குழு ஏற்ப்படுத்தி அவர்களது வருவாயில் ஒரு சிறு பகுதியை களஞ்சியத்தில் சேமிக்க தொடங்க.. களஞ்சியம் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கப்பட.. ஏழைகளின் ரத்தத்தை வட்டி மூலம் உறிஞ்சும் பண முதலைகளை அடக்கி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கைப்பிடி அரிசியை சேமித்து உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்து உதவினர்.

இப்போது களஞ்சியத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய் சேர்ந்து , தமிழ் நாடு, ஆந்திரா கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களில் தனது கிளைகளை பரப்பி சிறந்த சிறுசேமிப்பு வங்கியாக ஏழை மக்களின் கஜானாவாக திகழ்கிறது. இந்த பணத்தை கொண்டு குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்பது..உறுப்பினர்களுக்கு குடிசை வீடு கட்டி கொடுப்பது, சிறு தொழில்களுக்கு உதவி செய்வது போன்ற சேவைகளை 'களஞ்சியம்' செய்து வருகிறது.
இவ்வளவு நாட்களாக வசதி படைத்தவர்களுக்கு உண்டான குளத்தில் மீன் பிடிக்கும் காண்ட்ராக்டை ஏழைகளுக்கு பெற்று தந்தது, உயர் சாதி இருக்கும் வழியாக சென்ற விஷ்ணு பகவானின் தேரை ஏழைகள் மற்றும் பிற்படுத்த பட்ட சாதி இருக்கும் தெரு வழியாக செல்ல வழி செய்தது என சின்னப்பிள்ளையின் சாதனைகள் நீளும்.
ஐம்பது வயதிலும் அயராது உழைத்து..விளம்பரங்களை தேடி செல்லாது உதவி செய்ய ஏழை மக்களை தேடி செல்லும் சின்னப்பிள்ளையின் காலில் நாமும் விழுந்து வணங்குவோம்.

Friday, September 5, 2008

என் இலங்கை சகோதரனுக்கு/சகோதரிக்கு.....


ஆர்மிகாரனின் தோட்டாக்கள்
உன்னை துளைக்கும் பொழுது
என் மேலும் பட்டு தெறித்தது,
உன் ரத்த துளிகள்.
என் ரத்தம் கொதித்தது...
உள்ளம் துடித்தது...
ஏன் என்றால் நான் இந்தியன்.

முல்லைத்தீவில்
பள்ளிக்கூடத்தின் மீது
குண்டுகள் விழுந்து
துண்டுகள் ஆனது..
அங்குள்ள மொட்டுகள்
மட்டுமல்ல..
எனது இதயமும்...

நீங்கள் நிராகரிக்கப்படவில்லை...
நேசிக்கப்படுகிறீர்கள்...
உங்களுக்காக கண்ணீர் வடிக்கும்
இந்தியனால்...
நமக்குள்
தொப்புள் கொடி உறவில்லை என்றாலும்
தனுஷ்கோடி உறவு உள்ளது..
நான் உன் சகோதரன்.
நான் உன் இனம்...

பிணங்களின் குவியல்களில் ,
நீ
உன் உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் போது...
நான்
உன்னை தேடி கொண்டிருக்கிறேன்..
ஏன் என்றால்...
நீ என் உறவு...

நான்
அமெரிக்காவில் இருந்தாலும்
என் சகோதரன்
இந்தியாவில் இருந்தாலும்...
நீ
இலங்கையில் இருந்தாலும்...
நம்மை இணைக்கும் பாலம் தமிழ்...
இதில்,
இந்தியன் தமிழன் ,
இலங்கை தமிழன்..
மலேசிய தமிழன்
என
கூறுபோட்டு பார்க்க...
நாம்
மீன்களின் கூட்டம் அல்ல
நானும்,
நீயும்,
அவனும்
தமிழர்கள் தான்.....
உனது
கண்ணீர் துடைக்க
என் கைகள் நீளும்
உறைந்து போகாமல்
உனது சொந்தங்கள் உன்னை சேரும்
இலங்கையில்
தமிழ் இனம் வாழும்...
தமிழ் வாழும்....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...