Friday, October 29, 2010

உலக சினிமா: அப் இன் தி ஏர் (Up in the Air).




உலகில் பல தொழில்களில் ஒன்று ஆலோசகர் எனப்படும் கன்சல்டன்ட் தொழில். கன்சல்டன்ட்கள் ஐ டி தொழிலில் மட்டும் அல்ல. பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வருடத்தில் பாதி நாட்கள் விமானங்களில் பறந்து கொண்டே இருப்பார்கள். இவர்களது வாழ்க்கையை பெட்டி வாழ்க்கை (Box Life) என சொல்லலாம். எப்போதும் பெட்டியில் துணிகளை வைத்து எங்கும் கிளம்ப தயாராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கன்சல்டன்ட் வாழ்கையை சிறிது நகைச்சுவை, மேலோட்டமான செண்டிமெண்ட்ஸ் கலந்து வாழ்கையை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் திரைப்படமாக 'அப் இன் தி ஏர்' திரைப் படத்தை படைத்திருக்கிறார் கனடா நாட்டு இயக்குனர் ஜேசன் ரேயத்மான்.

அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தின் ஒமஹா நகரில் இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறான் நடுத்தரவயது ரயான் பிங்கம். அவனது வேலை, வேலைநீக்கம் செய்யும் ஒரு ஆலோசகன். ஒவ்வொரு நகரத்தில் இருக்கும் கம்பனிகளுக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதே அவனது வேலை. வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களை அவர்களின் கவலைகளை குறைத்து அவர்களுக்கு இருக்கும் எதிர்காலத்தை விளக்கி ஒரு மனோதத்துவ நிபுணன் போல அவர்களது சுமைகளை தாங்கி கொண்டு அவர்களுக்கு பணி நீக்கம் தருவதே அவனது சவாலான வேலை.

வருடத்தில் 290 நாட்கள் விமானங்களில் பறந்து பறந்து வேறு வேறு ஊர்களுக்கு சென்று பணி நீக்கம் செய்யும் வேலை அவனுக்கு பிடித்திருந்தது. எஞ்சி இருந்த 75 நாட்களை அவன் வெறுத்தான். ஏனென்றால் தனியாக அவனது அபார்ட்மெண்டில் வாழ வேண்டும்.

அமெரிக்காவில் பிரீகுவன்ட் பிளையர் மைல்ஸ் என ஒன்று உண்டு. ஒரே விமானத்தில் பறந்து கொண்டே இருந்தால், அதற்குண்டான அட்டையை கொடுப்பார்கள்.நீங்கள் பறக்கும் தூரத்திற்கு உள்ள மைல்கள் பாயிண்டுகளாக அந்த அட்டையில் ஏறும். சில குறிப்பிட்ட பாயிண்டுகள் சேர்ந்ததும் உங்களுக்கு அந்த விமானத்தில் இலவசமாக அந்த பாயிண்டுகளுக்கு ஏற்ற தொலைவுக்கு அந்த விமானத்தில் பறந்து கொள்ளலாம். (இப்போது இந்தியாவிலும் இது இருக்கிறது). ரயான்னுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற அந்த விமான அட்டையில் ஒரு மில்லியன் பாய்ண்டுகள் சேர்க்கவேண்டும் என்பது கனவு.


நாடலி என்ற புதிதாக பட்டபடிப்பை முடித்து அவனது கம்பெனியில் சேரும் பெண்ணினால் அவனது கனவுக்கு தடை வருகிறது. அவனது கம்பனியின் செலவை குறைக்க அவள் புதிய ஒரு யோசனையோடு வருகிறாள். பணி நீக்கம் செய்வதற்கு நேரில் செல்லாமல், இன்டர்நெட் மூலமாகவே வீடியோ கோன்பெரேன்சிங் முறையில் நேர்முகம் நடத்திக் கொண்டால் விமான செலவுகள் மற்றும் தங்கும் செலவுகள் கம்பனிக்கு மிஞ்சும் என்ற அவளது யோசனையை அந்த கம்பெனி எம் டீ ஏற்றுக்கொள்ள ரயான் அதனை எதிர்க்கிறான். பணி நீக்கம் செய்யப்படும் மக்களின் குறைகளை நேரில் சென்று அறியாமல் அவர்களை திருப்தி படுத்த முடியாது என்ற அவனது வாதம் எடுபடவில்லை.

எனினும் பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் மன நிலையை நேரில் அறிய ரயான், நாடலீயையும் தன்னுடன் கூட்டி செல்ல வேண்டி இருக்கிறது. இருவரும் சேர்ந்தபடி பணி நீக்கம் செய்ய ஆரம்பிக்கும்போது, பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் துக்கமான மன நிலை நாடலீக்கு மெல்ல புரிகிறது. அவளது பாய் அவளை விட்டு பிரிய, அவளால் பணி நீக்கம் செய்யப்பட ஒரு பெண்மணி தற்கொலை செய்து கொள்ள நாடலி தனது வேலையே ராஜினமா செய்து விடுகிறாள். இதற்கிடையே... ஒரு விமான நிலையத்தில், ரயான் போலவே ஒரு கன்சல்டண்டாக பறந்து கொண்டே இருக்கும் அலெக்ஸ் என்ற நடுத்தரவயது பெண்ணின் காதலும் கலவியும் கிடைக்க, பின்னர் அவளை மனதிற்குள் காதலிக்க ஆரம்பிக்கிறான் ரயான்.

ரயான்னுக்கு ஒரு தங்கை இருக்க அவனது குடும்பத்தின் மீது அவனுக்கு பிடிப்பில்லாமல் இருக்கிறது. எனினும் அவனது தங்கையின் திருமணத்துக்கு கட்டாயம் வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட அவன் அந்த திருமணத்துக்கு சென்றானா.. அவனது மன நிலை என்ன என்பதை மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்கள்.


படம் மூன்றே மூன்று கதாபாத்திரங்களை சுற்றி சுழல்கிறது. ரயான்னின் தனிமையின் கொண்டாட்டம் பின்னர் அந்த தனிமையே அவனை வாட்டுகிறது. ரயான்னை வெறும் நட்புக்காகவும் கலவிக்காகவும் மட்டும் ஏற்றுக் கொள்ளும் அலெக்ஸ், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்துடன் வரும் நாடலி. ஒவ்வொருவரின் கதையும் படத்துடன் பின்னி பிணைந்து நமக்கு முன்னே நடப்பதை போல காட்சிகள் விரிவது இயக்குனரின் திறமை.

ரயான்னாக வரும் ஜார்ஜ் க்ளூனியின் நடிப்பு அபாரம். தனிமையை தான் நேசிக்கும் தருணங்களுக்கும் தனிமையை வெறுக்கும் தருணங்களுக்கும் வேறுபட்ட முகபாவத்தை காட்டி கைத்தட்டல் அள்ளிக் கொள்கிறார். ஆஸ்காருக்கு இவரது நடிப்பு பரிந்துரைக்கப் பட்டது மிகை அல்ல. நாடலியாக நடித்திருக்கும் ஆனா கெண்ட்ரிக்கும் எதுவும் தெரியும் என்ற திமிர் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக கரைவதை அற்புதமாக காட்டி இருக்கிறார்.

வால்ட்டர் கிம்மின் புத்தகத்தை திரைக்கதையாக்கி கருப்பு நகைச்சுவை படம் நெடுக தூவி, ஒப்பாரி காட்சிகளோ உருக்கமான காட்சிகளோ இன்றியும் கூட நம் இதயத்தை கனக்க வைக்கிறார் இயக்குனர் ஜேசன் ரேயத்மான். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், அமெரிக்கர்கள் தங்களை திரையில் பார்ப்பதே. அமெரிக்காவில் நடக்கும் பணி நீக்கங்களும் பலரின் பெட்டி வாழ்க்கைகளும் படத்தில் துல்லியமாக காண்பிக்கப் பட்டிருக்கிறது.

அப் இன் தி ஏர் ---தம்ஸ் அப்.



திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி... 



Wednesday, October 20, 2010

பூலோக சுவர்க்கம்: சுவிஸ் பயணம்-2( படங்களுடன்...)

                                                                  ஜூரிச் ஏர்போர்ட்.

சுவிஸ் சென்று இறங்கியதும், அமெரிக்கன் டாலரை சுவிஸ் பிராங்க்ஸ் ஆக மாற்ற வேண்டுமே..!. நாங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பும்போது சுவிஸ் பிராங்கை விட அதிகமாக இருந்த அமெரிக்க டாலர், நாங்கள் சுவிசில் இறங்கி பணத்தை மாற்றும்போது சுவிஸ் பிராங்கை விட மதிப்பு குறைவாக இருந்தது.  ஒரே இரவில் நடந்த இந்த மாற்றம் எங்களின் முதல் ஆச்சர்யம்.

உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் ஆகையால், ஒரு பிரம்மாண்டமான விமான நிலையத்தை எதிர்பார்த்து போன எங்களுக்கு அந்த சிறிய விமான நிலையம் இரண்டாவது ஆச்சர்யம்.

அமெரிக்காவை விட ஐரோப்பா தான் சுத்தமானது என பலரும் கூற கேட்டு இருந்த எங்களுக்கு, விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், கால் வைக்க கூட இடமின்றி எங்கெங்கு காணினும் சிகரெட் துண்டுகள். யாரை பார்த்தாலும் சிகரட் புகைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இது எங்களுக்கு மூன்றாம் ஆச்சர்யம்.

                                                                   சுவிஸ் ரயில்
விமான நிலையத்தின் முன்னாடியே ரயில் நிலையம் இருக்கிறது. சுவிசில் எந்த ரயில் நிலையம் சென்றாலும் தகவல் தரும் அலுவலகம் உள்ளது. நல்ல உதவியாக இருக்கிறார்கள். நாம் எங்கு செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும் என்பதை அவர்கள் எளிதாக விளக்குகிறார்கள்.

சூரிச் விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் சென்று தகவல் தரும் நிலையத்திற்கு சென்று நான்கு நாள் பாஸ் வாங்கி கொண்டோம். மிக அதிகம் தான். ஒரு ஆளுக்கு இரண்டாம் வகுப்பு பாஸ், இருநூற்று இருபது சுவிஸ் பிராங்குகள். நான்கு நாட்களுக்கு எந்த ரயிலில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். சுவிஸ் ஒரு சிறிய நாடு என்பதாலும், நான்கு மணி நேர பயணத்தில், சுவிசின் கிழக்கு ஓரத்தில் இருந்து மேற்கின் ஓரத்துக்கு சென்று விட முடியும் என்பதால் நான்கு நாட்களுக்கு பாஸ் எடுத்துக் கொண்டோம். இந்த பாசின் வசதி என்னவென்றால் ரயில்கள்  மட்டும் அல்லாது, டிராம்கள், பேருந்துகள், படகுகள், என அனைத்திலும் கட்டணம் இன்றி அந்த நான்கு நாட்களில் பயணம் செய்து கொள்ளலாம். தனி தனியாக பயண சீட்டு எடுக்கவேண்டுமென்றால், நமது சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.
                                                                    ரயிலின் உள்ளே..!
நாங்கள் சென்று சேர்ந்த நாளின் மறுநாளில் இருந்து நான்கு நாட்களுக்கு பாஸ் எடுத்து வைத்துக் கொண்டோம். ரயில் நிலையம் சுத்தமாக இருந்தது என்றாலும் அமெரிக்க ரயில் நிலையங்களின் பளபளப்பு இங்கு இல்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் சூரிச் நகரில் தங்கும் அறை முன்பதிவு செய்யும் போது, எனக்கு செப்டம்பர் மூன்றில் இருந்து தான் கிடைத்தது. நாங்கள் சூரிச் சென்று சேர்ந்த நாளோ செப்டம்பர் ஒன்று. எனவே முதல் இரண்டு நாட்களுக்கு சுவிஸ் நகரின் தலை நகரான பெர்ன் நகரில் அறை முன் பதிவு செய்திருந்தோம். நாங்கள் மறுநாள் செல்ல திட்டமிட்டிருந்த ஜெனீவா நகரம் சூரிச்சிலிருந்து மூன்று மணி நேரம். அனால் பெர்நிலிருந்து இரண்டு மணி நேரம். மற்றும் இண்டர்லாகன் என்ற நகரம் நாற்பது நிமிடங்கள் மட்டுமே என்பதால், பெர்னில் அறை எடுத்திருந்தோம்.

நான் முன்பே கூறியதை போல சுவிஸ் நாட்டில் எல்லாவற்றிற்கும் விலை மிக மிக அதிகம். பெர்ன் நகரத்தில் நாங்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை நூற்றி ஐம்பது டாலர்கள். அது தான் அங்கு இருந்ததிலே மிகவும் குறைவு. (ஹாஸ்டல்கள் உண்டு என்றாலும், குடும்பத்துடன் அங்கு சென்று தங்க வசதிப்படாது. முக்கியமாக அங்கு பொதுக்கழிப்பிடங்கள் தான் உண்டு. மற்றும் குழந்தையுடன் சென்றால் அங்கு தங்குவது மிகவும் கடினம். தனியாக செல்பவர்களுக்கு ஐம்பது சுவிஸ் பிராங்குகளுக்கு ஹாஸ்டல்கள் உண்டு.)
                                                                   சூரிச் ரயில் நிலையம்.
சூரிச்சிலிருந்து பெர்ன் நகருக்கு அன்று தனியாக டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறி எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். ரயில் மிக சுத்தமாக அழகாக இருந்தது. விமானத்தில் இருக்கும் இருக்கைகளை விட மிக வசதியாக இருந்தது.

அங்குள்ள ரயில் நிலையங்களை பான்ஹோப்ப் (bahnhoff) என்றும் விமான நிலையங்களை ப்லாகபான்(flughafan) என்றும் சொல்கிறார்கள். அவர்கள் பேசுவது சுவிஸ் என்ற மொழி. ஜேர்மன் மொழிக்கும் சுவிஸ் மொழிக்கும் ஒற்றுமைகள் உண்டு என்றாலும் பல வேறுபாடுகள் உண்டு என்பதை பின்னாளில் எனக்கு நண்பனான பீட்டர் பக்மான் என்ற எனது சுவிஸ் வாழ் நண்பனின் மூலம் தெரிந்து கொண்டேன்.

சூரிச்சிலிருந்து பெர்ன் செல்ல ஒன்னேகால் மணி நேரம் ஆனது. ஒரு ஆளுக்கு அறுபத்தியொரு அமெரிக்க டாலர்கள். வழக்கமாக ரயில் பயணங்களில் சுவிஸ் மிக அழகாக இருக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் எங்களுக்கு அமெரிக்காவுக்கும் சுவிஸ் நாட்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை.  சுவிஸ் மிக அழகு என்று சொல்கிறார்கள் ஆனால் அமெரிக்காவும் இப்படித்தானே இருக்கிறது என பேசிக் கொண்டோம்.

சுவிஸ் எங்களுக்கு ஆச்சர்யங்களையும் அதிசயங்களையும் காட்டவில்லை, மறுநாள் மாலை வரை. அதற்க்கு அப்புறம் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

(பயணம் தொடரும்).
--

Monday, October 18, 2010

அண்டத்தின் அடியில் அறுபத்து ஏழு நாட்கள்....!

                                                     அந்த முப்பத்து மூன்று பேர்..!

உலகம் முழுக்க பிரார்த்தனையோடு, மூச்சை பிடித்தபடி காத்திருக்க.. அந்த சுரங்கத்தின் அடியில் இருந்து முதல் ஆள் வெளியே வர கர  கோஷங்களும் வாழ்த்துகளும், கண்ணீர் துளிகளும், சந்தோஷங்களும் கொண்டாடங்களுமாய் நிறைந்தது அந்த சிலி நாட்டின் கிராமத்தில். முப்பத்து மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் பூமிக்கு அடியில்  சுமார் ஒரு மைல் தொலைவில் மண் சரிவில் மாட்டிக்கொள்ள அறுபத்தி ஏழு நாட்கள் கழித்து அந்த முப்பத்து மூன்று சுரங்கத் தொழிலாளர்களையும் உயிருடன் மீட்டிருக்கிறது சிலி அரசு.
                                                             அந்தச் சுரங்கம்..!

ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி   ஒரு வெடி விபத்தில், அந்த சுரங்கத்தின் வாயில்கள் நசுங்கி மூடிக் கொள்ள, உள்ளே இருந்த முப்பத்து மூன்று சுரங்க தொழிலாளர்கள், உயிரிழந்திருப்பர் என சிலி நாட்டின் நாளிதழ்கள் கதறத் துவங்கின. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என கருதிக் கொண்டிருந்த வேளையில்.. அவர்களை தேட அந்த மலையில் ஆழ்துளை போடப்பட, அந்த டிரில்லர் முனைப்பகுதி  இரண்டாயிரம் அடிகள் இறங்கியப்பின் தட்டப்பட, அவசர அவசரமாக அதனை வெளியே இழுத்து பார்க்கையில், அதன் முனையில் ஒரு தாளில் சிவப்பு மையில் இருந்த வாசகம் உலகத்தையே பரபரக்க வைத்தது. ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பினரா அவசர அவசரமாக பயணத்தை பாதியில் முடித்து விட்டு நாடு திரும்பினார். மீடியாவின் முன்னிலையில் நாட்டின் அதிபர் செபஸ்டின் பினரா, கரங்கள் நடுங்க குரல் தழுதழுக்க வாசித்தார்...' நாங்கள் முப்பத்து மூன்று பேரும் நலமாக உயிருடன் உள்ளோம்'. சிலி நாட்டு
மக்கள் சந்தோஷ கூத்தாடினர். எதோ தங்களின் சொந்த சகோதரர்கள் பற்றி நற்செய்தி வந்த உற்சாகத்தில் துள்ளினர்.  எனினும் அவர்களை உயிருடன் மீட்பது எப்படி?
செபஸ்டியன் பிநேரா நிச்சயமாக அவர்களை உயிருடன் மீட்க என்னாலான அனைத்தும் செய்வேன் என சொன்னதோடு மட்டுமல்லாது அவர் செயல்படுத்தியும் காட்டினார்.
                                சுரங்கத்தின் உள்ளே...மனம் தளரா... வீரர்கள்..

 அண்டை நாட்டின் உதவிகளை நாடினார். பல உலக நாடுகளும் அவருக்கு உதவிக்கு வந்தன. முதலில் ஒரு சிறிய துளை போடப்பட்டு அதன் மூலம் உணவும் மருந்தும் அனுப்பி வைக்கப் பட்டது. ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து இருநூறு கலோரிகள் கொண்ட உணவே அனுப்பப்பட்டது. அவர்கள் உடல் மெலிய வேண்டும் என்பதே அதற்க்கு காரணம் அப்போது தான் அவர்களால் சிறிய துளையிலும் வெளியே வர முடியும்.

ஒரு பைபர் ஒப்டிக் லைன் ஒன்று உள்ளே அனுப்பப்பட்டு அதன் மூலம் அவர்கள் வெளியே தொலைபேசி கொள்ளவும், வீடியோ கோன்பிரேன்சிங் மூலம் தொடர்பும் ஏற்ப்படுத்தப் பட்டது. ஐயாயிரம் வாட் மின்சார கம்பியும் மின் விளக்கும் அனுப்பப்பட்டன. உள்ளிருப்பவர்களுக்கு பகலும் இரவும் வேறுபாடு அறிய இரவு நேரத்தில் தானாக விளக்குமங்கி போகுமாறு அமைக்கப் பட்டது. சுரங்க தொழிலாளர்கள், உள்ளே இருக்கும் அமிலங்களை வைத்து ஒரு ரசாயன கழிவறையை உருவாகினர். மல ஜலங்கள் ரசாயனத்தில் கரைந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கவே இந்த ஏற்பாடு.

அவர்கள் மன நலம் குன்றி போகாமல் இருக்க அவர்களுக்கு ஐபோட், ஒரு சிறிய ப்ரொஜெக்டர் அதில் அவர்கள் பேரும் கால்பந்தாட்ட பிரியர்களாக இருந்ததால், சிலி நாடு, உக்ரைனோடு விளையாடிய கால்பந்தாட்ட போட்டி டி வீ டி என அனுப்பி வைக்கப்பட்டது. 

ஒரு பெரிய துளை போடும் கருவி கொண்டு வரப்பட்டு, உள்ளே துளை போட, உள்ளிருந்த சுரங்க தொழிலாளர்கள், ஒவ்வொருவராக நேரம் பிரித்துக் கொண்டு துளையால் விழும் மண் மற்றும் கல்லின் துகள்கள் ஆகியவற்றை அப்புறப் படுத்தினர்.

குழுவில் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள், பல நகைச்சுவை துணுக்குகள் சொல்லி உள்ளிருக்கும் மற்றவர்கள் மனம் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்படி ஒவ்வொருவராக ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
                                                                              காப்ஸ்யூல்.

இதற்குள் துளை போடும் வேலை முடிவுக்கு வர, காப்ஸ்யூல் போன்ற ஒரு சாதனத்தை ஒரு காப்பாற்றும் வீரர் மற்றும் ஒரு சுரங்க தொழிலாளி ஆகியோர் மட்டுமே வர கூடிய அந்த கருவியை மோட்டாரின் துணை கொண்டு உள்ளே இறக்க முதல் தொழிலாளி வெளியே வர, காத்திருந்த சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பெரேரா கட்டி தழுவி முத்தமிட்டு வரவேற்ற போது உலகமே ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தது. அறுபத்து ஏழு நாட்கள் இருட்டையே கண்டவர்களுக்கு, வெளிச்சம் கண்களை பாதிக்கும் என்பதால்... பகல் நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு குளிர் கண்ணாடி கொடுக்கப்பட்டது.
 உலக தலைவர்களின் முன்னோடி..சிலி அதிபர் செபஸ்டியன் பெரேரா.

இவை அனைத்தும் நடந்து முடிக்கும் வரை, செபஸ்டியன் பெரேரா ஒரு டெண்டில் இருந்து கொண்டு முழுவதுமாக உடனிருந்தார். எப்பாடு பட்டாவது தனது மக்களை காப்பேன் என்று அவர் கொண்ட உறுதியை பூர்த்தி செய்தார். உலகம் முழுமைக்கும் தான் ஒரு மாதிரி தலைவனாக இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார். சிலி என்ற தென் அமெரிக்க சிறிய தேசம் இன்று உலகம் முழுதும் புகழ் பெற காரணமாக அந்த சுரங்க நிகழ்ச்சி அமைந்து விட்டது.
                ஒரு சுரங்கத் தொழிலாளியை சிலி அதிபர் வரவேற்கும் காட்சி.
                                                        புகைப்படம்: நன்றி All voices

இந்த வெற்றிக்கு காரணம், காப்பாற்றும் வீரர்களின் சாதுர்யமான யோசனைகள், அதற்கும் மேலே, தன நாடு மக்களை காப்பாற்ற அந்த மாபெரும் தலைவன் செபஸ்டியன் பெரராவின் முயற்சி, அதற்கும் மேலே அந்த முப்பத்து மூன்று பேரின் ஒற்றுமை மற்றும் மன உறுதி.

இன்னொன்றையும் சிலி வாசிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சுரங்கத்தின் அடியில் மாட்டிக் கொண்டபின்  முதல் முதலில் சுரங்க தொழிலாளர்களிடம் பேசிய அதிபர்
 'எவ்வளவு பேர் இருக்கிறீர்கள்?' என வினவ...
'முப்பத்து நான்கு பேர் ' என பதில் வந்திருக்கிறது.
'முப்பத்து மூன்று பெயர்கள் என்னிடம் உள்ளது. அந்த முப்பத்து நான்காவது ஆளின் பெயர் என்ன'

'கடவுள்'.

--

Monday, October 11, 2010

பூலோக சுவர்க்கம்: சுவிஸ் பயணம்-1( படங்களுடன்...)

                                    நியூ யோர்க்கின் ஜ எப் கே விமான நிலையம்.

ஐரோப்பிய  பயணம் என்பது எனது சிறுவயது கனவாகவே இருந்தது. நான் அமெரிக்காவில் வசித்தாலும் எப்பொழுதும் ஐரோப்பாவில் அதுவும் குறிப்பாக சுவிஸ் நாட்டில் பயணம் கொள்ள வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவாவாக இருந்தது. அதற்க்கு எனது எம் பி ஏ படிப்பு உதவியதற்காக அதற்க்கு ஒரு வந்தனம்.சுவிஸ் நாட்டில் இருக்கும் ஒரு கல்லூரியில் நான் எம். பி ஏ சேர்ந்ததற்கு காரணம், ஒரு சப்ஜெக்டுக்கு நான் அங்கு சென்று ஐந்து நாட்கள் பயில வேண்டும் என்ற காரணமும் ஒன்று. எனது பயண திட்டம் ஆறு மாதங்களுக்கு முன்னரே துவங்கி விட்டது. சுவிஸ்சில் எங்கு தங்குவது, எப்படி பயணப் படுவது என.

முதல் நான்கு நாட்கள் முழுக்க சுவிஸ்ஸை சுற்றிப் பார்ப்பது, அடுத்த ஐந்து நாட்கள் எம் பி ஏ படிப்பிற்கு, அடுத்த நான்கு நாட்கள் ஆஸ்திரியாவை சுற்றிப் பார்ப்பது என முடிவானது. முதல் நான்கு நாட்களுக்கு சுவிஸ்சில் எங்கெங்கு சுற்றிபார்ப்பது என ஒரு அட்டவணை தயாரித்தோம். ஐரோப்பிய பயணத்துக்கு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி முதல் செப்டம்பர் மாத நடுவாந்திர   நாட்கள் வரை பயணம் செய்வது சிறந்தது என கண்டோம். அப்போது பயணச் சீட்டின் விலையும் குறைவாக இருக்கிறது. சீதோஷ்ண நிலையும் அங்கு கடும் வெயிலும் கடும் குளிரும் இல்லாத ஒரு இலகுவான நிலையில் இருப்பதை பழைய பருவ நிலைகளை வைத்து ஒப்பிட்டு அப்போது செல்வது என முடிவாயிற்று.முதலில் விமானத்தில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தோம். 

                                       ஜூரிச் நகரம். பறவையின் பார்வையில்...
 அந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதி நாளில் மாலை ஐந்தரை மணி அளவில் அமெரிக்காவின் பால்டிமோர் விமான நிலையத்தில் டெல்டா விமானத்தில் துவங்கியது அந்தக் கனவுப் பயணம். நியூ யார்க் சென்று சேரும்போது மணி ஏழரை. அங்கிருந்து அடுத்து சுவிசின் பெருநகரமான சூரிச் க்கு இரவு பத்தரை மணிக்கு தான் புறப்பாடு. நியூ யார்க்கின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தை 'தி டெர்மினல்' என்ற ஆங்கிலப் படத்தில் பார்த்தது. அது  தான் எனக்கு முதல் தடவை. மிகப்பெரிய விமான நிலையம். அங்குள்ள வணிக வளாகங்களை சுற்றி சோர்வடைந்து பத்து மணிக்கு அந்த பெரிய விமானத்தில் ஏறி அமர்ந்தோம். சரியாக பத்தரை மணிக்கு எங்களை சுமந்தபடி வானில் எழும்பியது அது டெல்டா விமானம். என் மகன் அவனது இருக்கையின் முன்னால் இருந்த தொடு திரையில் விரல் வைத்து விளையாட ஆரம்பித்தான்.  பணிரெண்டு மணி அளவில் விமானப் பணிப்பெண் வந்தளித்த ஸ்பினாச் பாஸ்தாவை வாயில் வைக்க முடியவில்லை. இருந்தாலும் இருந்த அகோர பசியில் தின்று தீர்த்து உறங்கிப் போனோம்.
                                                                   
காலையில் கண் விழித்த பொது சுவிஸ் நகரத்தின் மேல் பறந்து கொண்டிருந்தோம். பூமியில் தெரிந்த மலைகளும், குளங்களும் ஆறுகளும்.. இது வேறு நகரம் என உணர்த்திக் கொண்டே இருந்தது.
                           ஆல்ப்ஸ் மலை.. ஒரு பறவையின் பார்வையில்...

நான் கண்ட கனவு என் கண்முன்னே நனவாக விரிந்து கொண்டிருந்தது. பரந்து விரிந்திருந்த சின்ன சின்ன மலை தொடர்களும், ஏரிகளும்.. பச்சை பசேல் புல்வெளிகளும் என விரிந்த பூமியின் வரைபடத்தில், தொடுவானம் முடிகிற தொலைவில் ஒரு மலை முகடுகளில் கொட்டி வைத்த ஐஸ் கிரீம் போலத் தெரிந்த ஆல்ப்ஸ் மலை பரவசப் படுத்தியது.   பூமியில் நாங்கள் ஒரு சொர்க்கத்தை காணப் போகிறோம் என்ற ஆவல் எங்களை உந்தித் தள்ளியது.

                                                              சூரிச் விமான நிலையம்.

விமானம் தரையை தொட்டதும் உள்ளிறங்கி நடந்தோம். இம்மிக்ராஷனில் எந்த கேள்வியும் கேட்கவில்லை. விசா இருக்கிறதா என பார்த்து விட்டு 'வெல்கம் டு சுவிட்சர்லாந்த்' என கூறி அனுமதித்தார்கள்.

விமான நிலையத்தில் தான் எங்களுக்கு முதல் ஆச்சர்யம் காத்திருந்தது!
--

Friday, October 8, 2010

பிறிதொருநாளில்...!

சாயம் தொலைந்த சுவர்கள்,
காரை பெயர்ந்த தரை,
மழை நீர் ஒழுகும் கூரை,
கருப்பு தொலைத்த பலகை,
இலை உதிர்த்த போகன்வில்லா ,
இறந்து போன வாத்தி..
பொம்மியம்மா விற்கும் கார நில்லிக்காய்...
ரொட்டிக்கடை அண்ணாச்சி..
கிச்சாமி எட்டிப் பார்த்து மாட்டிக் கொண்ட..
பெண்கள் கழிப்பறை,
கட்டிப்புரண்டு சண்டையிட்ட மைதானம்...
திருட்டு தம்மடித்த முள் புதர்...
என...
எதுவும் சிலிர்ப்பைத் தரவில்லை...!
பிறிதொருநாளில்...
என் மகனின் கரம் பிடித்து அழைத்து சென்று...
என் நினைவுகள் பகிரும் வரை...!
--

Saturday, October 2, 2010

உலக சினிமா: மிஸ்டர் ஹோலந்த் ஓபஸ் (Mr.holland opus)


இசைக்கு சாதியோ, மதமோ, மொழியோ,நிறமோ, நாடோ, எல்லைகளோ இன்றி, நம்மை கட்டிபோட வைக்கும் ஒரு மந்திரக் கருவி. கொண்டாட்டமேன்றாலும், அதீத வருத்தம் என்றாலும், ஆறுதலுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நாம் நாடுவது இசையை தான். அந்த இசையே தனது முழு மூச்சாக கொண்டு.. உலகியல் வெளிச்சங்களுக்கு வராமல் போன ஒரு மாபெரும் கலைஞனின் கதை தான் ஹோலந்த் ஓபஸ்.

க்ளென் ஹோலந்த் என்ற இசை கலைஞனுக்கு தான் ஒரு மிகச்சிறந்த ஓபஸ் இயற்றி அதனை அரங்கேற்ற வேண்டும் என்பது தான் தன வாழ்கையின் ஒரே லட்சியம்.ஓபஸ் என்பது ஒருவிதமான இசை கோர்ப்பு. தனது லட்சியத்தை நோக்கி நகரத்துடிக்கும் அந்த இசை கலைஞனுக்கு பொருளாதாரத்தடை. தனது குடும்பத்தை காப்பாற்ற தனது லட்சியப் பயணத்தை விட்டு விட்டு சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட, வேண்டா வெறுப்பாக அமெரிக்காவின்  போர்ட்லன்ட் மாநிலத்தின் ஒரு பள்ளிக்கூடத்தில் இசை வாத்தியாராக சேரும் வாய்ப்பு.








பள்ளி மாணவர்கள் அராஜகம் செய்ய, ஒவ்வொருவரையும் வழிக்கு கொண்டு வருகிறார் ஹோலந்த்.
 தங்களுக்கு ராக் அண்ட் ரோல் இசை தான் பிடிக்கும் என மாணவர்கள் சொல்ல, பள்ளி மேலிடம் இதனால் அவர்களது ஒழுக்கம் கெட்டுவிடும் என மறுக்க, மாணவர்களின் வழியிலேயே சென்று அவர்களுக்காக போராடி, அவர்கள் விருப்பபடியே ராக் அண்ட் ரோல் வழி இசை கற்றுக் கொடுக்கிறார்.
கிளாரினெட் வாசிப்பதில் ஆர்வம் இருந்தாலும் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டப் பெண். இசை அறிவே இல்லாத விளையாட்டு வீரனான அந்த சிறுவனுக்கு ஏற்ற வாத்தியமாக ட்ரம்ஸ் வாசிக்க சொல்லிக் கொடுப்பது, பிராட் வேயில் பாடவேண்டுமேன்பதே தனது லட்சியமாக கொண்ட பெண்ணுக்கு அவளுக்கு ஏற்ற ஒரு களனை உருவாகி கொடுப்பது என ஒரு ரியல் மாஸ்டராக தனது மாணவர்களுக்கு உதவி ஒரு ஹீரோவாக உயர்கிறார்.  
எனினும் சொந்த வாழ்கையில், தனது மகனை பெரும் இசை கலைஞாக உருவாக்க நினைக்கும் ஹொலண்டுக்கு கேளாச் செவியுடன் மகன் பிறக்க.. உடைந்து போகிறார். எனினும் தனது லட்சியக் கனவை மனதில் தேக்கி கொண்டே.. புது புது இசை கலைஞர்களை தனது மாணவர்களிடம் இருந்து உருவாக்குகிறார். இறுதியில் அவர் பள்ளியில் இருந்து ரிடயர்மென்ட் ஆகும் நாளில், யாருமே தன்னை வழி அனுப்ப வராதது கண்டு மனம் வருந்தி செல்ல, பள்ளி ஆடிடோரியத்தில் எதோ சத்தம் கேட்கிறதே என்று எட்டிப் பார்க்க, அவரது மாணவர்கள் அனைவரும் அங்கு குழுமி இருக்க, அவரிடம் பயின்ற அவரது இசை மாணவர்கள், தற்போது...கவர்னராகவும, சினிமா ஸ்டாராகவும், பாடகர்களாகவும் இருக்கும் மாணவர்கள் ஹோல்லாந்து எழுதிய அந்த ஒபசை இசைக்க... அந்த மாபெரும் இசைக்கனவு நனவாகிறது.

ஹாலிவூடில் அவ்வளவாக அறியப்படாத நட்சத்திரமான ரிச்சர்ட் கிரேபாசின் (Richard Greyfuss) நடிப்புக்காகவே இப்படத்தை பார்க்கலாம். அவர் மனதில் இருக்கும் இசையை அவரது முகத்திலேயே நடமாட விடுவது சவாலான நடிப்பு.  1996  வருடத்திற்கான சிறந்த நடிப்புக்கு ஆஸ்காருக்கும் கோல்டன் க்ளோப் விருதுகளுக்காகவும் இவரது பெயர் இப்படத்திற்காக பரிந்துரைக்கப் பட்டது.  
பாற்றிக் ஷான் டன்கனின் திரைக்கதை, கிட்டத்தட்ட இந்திய சினிமாவின் செண்டிமெண்ட்கள் நிறைந்தது. இன்னமும் நம்மவர்கள், இப்படத்தை சுட்டுவிடாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. படத்தில் தொய்வில்லாமல் விறுவிறுவென இருப்பதற்கு காரணம் திரைக்கதையே. 

டை ஹார்ட் லீதல் வெப்பன் போன்ற அக்ஷன் படங்களின் இசை அமைப்பாளரான மைக் கேமனின் இசை தான் படத்தின் உயிர்நாடி.படத்தின் இறுதியில் வரும் அந்த ஒபசை கேட்க கேட்க.. அப்படியே இதமான ஒன்று உங்கள் இதயத்தில் இறங்கி படர்வதை உணரலாம் அப்படி ஒரு அருமையான இசை.பல விருதுகளை வென்ற இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயமாக மனத்தைக் கலங்கடிக்கும்.

இசையின் மீதான எனது ஈடுப்பாட்டை இத்திரைப்படம் அதிகரிக்க செய்தது.

ஹோலாந்து ஓபஸ் ஒரு இனிய இசைப் பயணம்..





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...