Wednesday, October 20, 2010

பூலோக சுவர்க்கம்: சுவிஸ் பயணம்-2( படங்களுடன்...)

                                                                  ஜூரிச் ஏர்போர்ட்.

சுவிஸ் சென்று இறங்கியதும், அமெரிக்கன் டாலரை சுவிஸ் பிராங்க்ஸ் ஆக மாற்ற வேண்டுமே..!. நாங்கள் அமெரிக்காவில் இருந்து கிளம்பும்போது சுவிஸ் பிராங்கை விட அதிகமாக இருந்த அமெரிக்க டாலர், நாங்கள் சுவிசில் இறங்கி பணத்தை மாற்றும்போது சுவிஸ் பிராங்கை விட மதிப்பு குறைவாக இருந்தது.  ஒரே இரவில் நடந்த இந்த மாற்றம் எங்களின் முதல் ஆச்சர்யம்.

உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் ஆகையால், ஒரு பிரம்மாண்டமான விமான நிலையத்தை எதிர்பார்த்து போன எங்களுக்கு அந்த சிறிய விமான நிலையம் இரண்டாவது ஆச்சர்யம்.

அமெரிக்காவை விட ஐரோப்பா தான் சுத்தமானது என பலரும் கூற கேட்டு இருந்த எங்களுக்கு, விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், கால் வைக்க கூட இடமின்றி எங்கெங்கு காணினும் சிகரெட் துண்டுகள். யாரை பார்த்தாலும் சிகரட் புகைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இது எங்களுக்கு மூன்றாம் ஆச்சர்யம்.

                                                                   சுவிஸ் ரயில்
விமான நிலையத்தின் முன்னாடியே ரயில் நிலையம் இருக்கிறது. சுவிசில் எந்த ரயில் நிலையம் சென்றாலும் தகவல் தரும் அலுவலகம் உள்ளது. நல்ல உதவியாக இருக்கிறார்கள். நாம் எங்கு செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும் என்பதை அவர்கள் எளிதாக விளக்குகிறார்கள்.

சூரிச் விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் சென்று தகவல் தரும் நிலையத்திற்கு சென்று நான்கு நாள் பாஸ் வாங்கி கொண்டோம். மிக அதிகம் தான். ஒரு ஆளுக்கு இரண்டாம் வகுப்பு பாஸ், இருநூற்று இருபது சுவிஸ் பிராங்குகள். நான்கு நாட்களுக்கு எந்த ரயிலில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். சுவிஸ் ஒரு சிறிய நாடு என்பதாலும், நான்கு மணி நேர பயணத்தில், சுவிசின் கிழக்கு ஓரத்தில் இருந்து மேற்கின் ஓரத்துக்கு சென்று விட முடியும் என்பதால் நான்கு நாட்களுக்கு பாஸ் எடுத்துக் கொண்டோம். இந்த பாசின் வசதி என்னவென்றால் ரயில்கள்  மட்டும் அல்லாது, டிராம்கள், பேருந்துகள், படகுகள், என அனைத்திலும் கட்டணம் இன்றி அந்த நான்கு நாட்களில் பயணம் செய்து கொள்ளலாம். தனி தனியாக பயண சீட்டு எடுக்கவேண்டுமென்றால், நமது சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.
                                                                    ரயிலின் உள்ளே..!
நாங்கள் சென்று சேர்ந்த நாளின் மறுநாளில் இருந்து நான்கு நாட்களுக்கு பாஸ் எடுத்து வைத்துக் கொண்டோம். ரயில் நிலையம் சுத்தமாக இருந்தது என்றாலும் அமெரிக்க ரயில் நிலையங்களின் பளபளப்பு இங்கு இல்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். நான் சூரிச் நகரில் தங்கும் அறை முன்பதிவு செய்யும் போது, எனக்கு செப்டம்பர் மூன்றில் இருந்து தான் கிடைத்தது. நாங்கள் சூரிச் சென்று சேர்ந்த நாளோ செப்டம்பர் ஒன்று. எனவே முதல் இரண்டு நாட்களுக்கு சுவிஸ் நகரின் தலை நகரான பெர்ன் நகரில் அறை முன் பதிவு செய்திருந்தோம். நாங்கள் மறுநாள் செல்ல திட்டமிட்டிருந்த ஜெனீவா நகரம் சூரிச்சிலிருந்து மூன்று மணி நேரம். அனால் பெர்நிலிருந்து இரண்டு மணி நேரம். மற்றும் இண்டர்லாகன் என்ற நகரம் நாற்பது நிமிடங்கள் மட்டுமே என்பதால், பெர்னில் அறை எடுத்திருந்தோம்.

நான் முன்பே கூறியதை போல சுவிஸ் நாட்டில் எல்லாவற்றிற்கும் விலை மிக மிக அதிகம். பெர்ன் நகரத்தில் நாங்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை நூற்றி ஐம்பது டாலர்கள். அது தான் அங்கு இருந்ததிலே மிகவும் குறைவு. (ஹாஸ்டல்கள் உண்டு என்றாலும், குடும்பத்துடன் அங்கு சென்று தங்க வசதிப்படாது. முக்கியமாக அங்கு பொதுக்கழிப்பிடங்கள் தான் உண்டு. மற்றும் குழந்தையுடன் சென்றால் அங்கு தங்குவது மிகவும் கடினம். தனியாக செல்பவர்களுக்கு ஐம்பது சுவிஸ் பிராங்குகளுக்கு ஹாஸ்டல்கள் உண்டு.)
                                                                   சூரிச் ரயில் நிலையம்.
சூரிச்சிலிருந்து பெர்ன் நகருக்கு அன்று தனியாக டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறி எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். ரயில் மிக சுத்தமாக அழகாக இருந்தது. விமானத்தில் இருக்கும் இருக்கைகளை விட மிக வசதியாக இருந்தது.

அங்குள்ள ரயில் நிலையங்களை பான்ஹோப்ப் (bahnhoff) என்றும் விமான நிலையங்களை ப்லாகபான்(flughafan) என்றும் சொல்கிறார்கள். அவர்கள் பேசுவது சுவிஸ் என்ற மொழி. ஜேர்மன் மொழிக்கும் சுவிஸ் மொழிக்கும் ஒற்றுமைகள் உண்டு என்றாலும் பல வேறுபாடுகள் உண்டு என்பதை பின்னாளில் எனக்கு நண்பனான பீட்டர் பக்மான் என்ற எனது சுவிஸ் வாழ் நண்பனின் மூலம் தெரிந்து கொண்டேன்.

சூரிச்சிலிருந்து பெர்ன் செல்ல ஒன்னேகால் மணி நேரம் ஆனது. ஒரு ஆளுக்கு அறுபத்தியொரு அமெரிக்க டாலர்கள். வழக்கமாக ரயில் பயணங்களில் சுவிஸ் மிக அழகாக இருக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் எங்களுக்கு அமெரிக்காவுக்கும் சுவிஸ் நாட்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை.  சுவிஸ் மிக அழகு என்று சொல்கிறார்கள் ஆனால் அமெரிக்காவும் இப்படித்தானே இருக்கிறது என பேசிக் கொண்டோம்.

சுவிஸ் எங்களுக்கு ஆச்சர்யங்களையும் அதிசயங்களையும் காட்டவில்லை, மறுநாள் மாலை வரை. அதற்க்கு அப்புறம் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

(பயணம் தொடரும்).
--

2 comments:

thiyaa said...

நல்லாயிருக்கு

PG said...

Nice. Switzerland is indeed most expensive in Europe. For scenic trips, one need to take specific scenic tours (such as Glacier express, Golden pass etc). Travelling in regular trains are not that enchanting.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...