Saturday, October 2, 2010

உலக சினிமா: மிஸ்டர் ஹோலந்த் ஓபஸ் (Mr.holland opus)


இசைக்கு சாதியோ, மதமோ, மொழியோ,நிறமோ, நாடோ, எல்லைகளோ இன்றி, நம்மை கட்டிபோட வைக்கும் ஒரு மந்திரக் கருவி. கொண்டாட்டமேன்றாலும், அதீத வருத்தம் என்றாலும், ஆறுதலுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நாம் நாடுவது இசையை தான். அந்த இசையே தனது முழு மூச்சாக கொண்டு.. உலகியல் வெளிச்சங்களுக்கு வராமல் போன ஒரு மாபெரும் கலைஞனின் கதை தான் ஹோலந்த் ஓபஸ்.

க்ளென் ஹோலந்த் என்ற இசை கலைஞனுக்கு தான் ஒரு மிகச்சிறந்த ஓபஸ் இயற்றி அதனை அரங்கேற்ற வேண்டும் என்பது தான் தன வாழ்கையின் ஒரே லட்சியம்.ஓபஸ் என்பது ஒருவிதமான இசை கோர்ப்பு. தனது லட்சியத்தை நோக்கி நகரத்துடிக்கும் அந்த இசை கலைஞனுக்கு பொருளாதாரத்தடை. தனது குடும்பத்தை காப்பாற்ற தனது லட்சியப் பயணத்தை விட்டு விட்டு சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட, வேண்டா வெறுப்பாக அமெரிக்காவின்  போர்ட்லன்ட் மாநிலத்தின் ஒரு பள்ளிக்கூடத்தில் இசை வாத்தியாராக சேரும் வாய்ப்பு.
பள்ளி மாணவர்கள் அராஜகம் செய்ய, ஒவ்வொருவரையும் வழிக்கு கொண்டு வருகிறார் ஹோலந்த்.
 தங்களுக்கு ராக் அண்ட் ரோல் இசை தான் பிடிக்கும் என மாணவர்கள் சொல்ல, பள்ளி மேலிடம் இதனால் அவர்களது ஒழுக்கம் கெட்டுவிடும் என மறுக்க, மாணவர்களின் வழியிலேயே சென்று அவர்களுக்காக போராடி, அவர்கள் விருப்பபடியே ராக் அண்ட் ரோல் வழி இசை கற்றுக் கொடுக்கிறார்.
கிளாரினெட் வாசிப்பதில் ஆர்வம் இருந்தாலும் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டப் பெண். இசை அறிவே இல்லாத விளையாட்டு வீரனான அந்த சிறுவனுக்கு ஏற்ற வாத்தியமாக ட்ரம்ஸ் வாசிக்க சொல்லிக் கொடுப்பது, பிராட் வேயில் பாடவேண்டுமேன்பதே தனது லட்சியமாக கொண்ட பெண்ணுக்கு அவளுக்கு ஏற்ற ஒரு களனை உருவாகி கொடுப்பது என ஒரு ரியல் மாஸ்டராக தனது மாணவர்களுக்கு உதவி ஒரு ஹீரோவாக உயர்கிறார்.  
எனினும் சொந்த வாழ்கையில், தனது மகனை பெரும் இசை கலைஞாக உருவாக்க நினைக்கும் ஹொலண்டுக்கு கேளாச் செவியுடன் மகன் பிறக்க.. உடைந்து போகிறார். எனினும் தனது லட்சியக் கனவை மனதில் தேக்கி கொண்டே.. புது புது இசை கலைஞர்களை தனது மாணவர்களிடம் இருந்து உருவாக்குகிறார். இறுதியில் அவர் பள்ளியில் இருந்து ரிடயர்மென்ட் ஆகும் நாளில், யாருமே தன்னை வழி அனுப்ப வராதது கண்டு மனம் வருந்தி செல்ல, பள்ளி ஆடிடோரியத்தில் எதோ சத்தம் கேட்கிறதே என்று எட்டிப் பார்க்க, அவரது மாணவர்கள் அனைவரும் அங்கு குழுமி இருக்க, அவரிடம் பயின்ற அவரது இசை மாணவர்கள், தற்போது...கவர்னராகவும, சினிமா ஸ்டாராகவும், பாடகர்களாகவும் இருக்கும் மாணவர்கள் ஹோல்லாந்து எழுதிய அந்த ஒபசை இசைக்க... அந்த மாபெரும் இசைக்கனவு நனவாகிறது.

ஹாலிவூடில் அவ்வளவாக அறியப்படாத நட்சத்திரமான ரிச்சர்ட் கிரேபாசின் (Richard Greyfuss) நடிப்புக்காகவே இப்படத்தை பார்க்கலாம். அவர் மனதில் இருக்கும் இசையை அவரது முகத்திலேயே நடமாட விடுவது சவாலான நடிப்பு.  1996  வருடத்திற்கான சிறந்த நடிப்புக்கு ஆஸ்காருக்கும் கோல்டன் க்ளோப் விருதுகளுக்காகவும் இவரது பெயர் இப்படத்திற்காக பரிந்துரைக்கப் பட்டது.  
பாற்றிக் ஷான் டன்கனின் திரைக்கதை, கிட்டத்தட்ட இந்திய சினிமாவின் செண்டிமெண்ட்கள் நிறைந்தது. இன்னமும் நம்மவர்கள், இப்படத்தை சுட்டுவிடாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. படத்தில் தொய்வில்லாமல் விறுவிறுவென இருப்பதற்கு காரணம் திரைக்கதையே. 

டை ஹார்ட் லீதல் வெப்பன் போன்ற அக்ஷன் படங்களின் இசை அமைப்பாளரான மைக் கேமனின் இசை தான் படத்தின் உயிர்நாடி.படத்தின் இறுதியில் வரும் அந்த ஒபசை கேட்க கேட்க.. அப்படியே இதமான ஒன்று உங்கள் இதயத்தில் இறங்கி படர்வதை உணரலாம் அப்படி ஒரு அருமையான இசை.பல விருதுகளை வென்ற இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயமாக மனத்தைக் கலங்கடிக்கும்.

இசையின் மீதான எனது ஈடுப்பாட்டை இத்திரைப்படம் அதிகரிக்க செய்தது.

ஹோலாந்து ஓபஸ் ஒரு இனிய இசைப் பயணம்..

2 comments:

உதயன் (யாழ்ப்பாணம்) said...

விமர்சனம் சூப்பர்...

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...