Saturday, September 18, 2010

ஒரு இந்தியப் பயணம் -7


                                             கெம்மனகுண்டி  செல்லும் வழியில்...

உலக மயமாக்கலால் அழகாயின பல பெருநகரங்கள். ஆனால் அதுவே பெங்களூரின் அழகை சிதைத்துள்ளன என்பது தான் உண்மை. சாலையோரப் பூங்காக்களும், பசுமைகளும் சற்றே குளிரான சீதோஷ்ண நிலையும் அழகு பெண்கள் நடமாடும் எம் ஜி ரோடு மற்றும் பிரிகேட் ரோடு என பெங்களூரு ஒரு அழகான பசுமையான நகராக இருந்தது. இப்போது எங்கும் கான்க்ரீட் காடுகளாக அழகான நீளமான எம் ஜி ரோடு குறுக்கப்பட்டு மெட்ரோ பாலம் என பழைய அழகு குலைந்து பொய் தனது முகவரியை தொலைத்து விட்டிருந்தது வருத்தம் அளித்தது. என்றாலும் இந்த முறை, பெங்களூரு பயணம் மறக்க முடியாததாய் அமைந்ததற்கு காரணம் எங்களது ஹளபீடு மற்றும் பேலூர் பயணம் தான்.

பெங்களூருவிலிருந்து ஐந்தரை மணி நேரப் பயண தூரத்தில் இருக்கிறது சிக்மகளூர். பெங்களூரிலிருந்து ஒரு க்வாலிஸ் அமர்த்தி கொண்டோம். பயணம் செய்ய செய்ய விரிந்த கர்னாடக வெளியில், தெரிந்த கன்னட எழுத்துக்களில்.. வேறொரு க்ரகுஅத்தில் பயணம் செய்யும் உணர்வை கொடுத்தது. ( அமெரிக்காவில் இப்படி உணர்ந்ததில்லை. காரணம் ஆங்கிலம். மொழி என்பது அந்த அந்த ஊரை நமக்கு நெருக்கம் ஆக்குகிறது). இரவு மழைத தூறல்களுக்கிடையே சிக்மகளுறு சென்று பிளான்டர்ஸ் கோர்ட்  என்ற விடுதியில் அடைந்தோம். சிக் மகளூரில் இருந்து ஒருமணி  நேரப் பயணத்தில் தொடங்கும் மலை பிரதேசம், பச்சை கம்பள தரைகள், தொட்டு பிடித்தபடி ஓடும் மூடு பனிகள், சாலையோர செடிகளில் தேங்கி இருக்கும் மழை நீர் என அந்த மலை தொடர் சுகமான அனுபவங்களை தேக்கி வைத்திருந்தது.

முதலில் நாங்கள் சென்று சேர்ந்த இடம் முள்ளியன்கிரி. அது தான்
 கர்நாடகாவின் மலைகளிலேயே உயர்ந்த இடம்
என சொன்னார்கள். நாங்கள் சென்று சேர்ந்த பொது, ஆளை தள்ளி விடும் காற்றும் குளிரும், எதிரில் நிற்கும் ஆள் கூட தெரியாது குரல்களை வைத்து தான் எங்களால் மற்றவர்களை கண்டு பிடிக்க முடிந்தது.

                                                                   முள்ளியணகிரி
சிறிது தூரம் தட்டு தடுமாறி நடந்த போது சில படிக்கட்டுகள் மேல் நோக்கி சென்றது. சில படிகள் மட்டுமே தெரிந்தது. மீதி படிக்கட்டுகளை மஞ்சு மறைத்துக் கொண்டது, எதோ சொர்க்கத்துக்கு அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் போல ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியது. படிகளில் இறங்கி வந்த பெரியவரை கேட்டேன். படிகளின் முடிவில் என்ன இருக்கிறது என்று. ராமர் கோவில் ஒன்று உள்ளதாக கூறினார். படிகள் செங்குத்தாக ஏறியதாலும் நேரம் இல்லாமையாலும், எங்கள் பயணத்தை தொடர ஆரம்பித்தோம். பச்சை போர்வைகள் போர்த்திய மலைகளில் சுற்றி திரிந்த பின்னர், கெம்மனகுண்டி(பெயரே அது தான்).செல்ல முயற்சித்த போது, சில நாட்களாகவே தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் சேதமாக இருக்கிறது என்றும் மேலும் மழை தூறி கொண்டே இருந்ததால், மேலும் செல்வது உசிதமல்ல என்றும், கெம்மனகுண்டி செல்ல முயற்சித்து முயற்சி தோல்வி உற்றவராய் பாதி வழியில் திரும்பிய ஒரு இளைஞர் பட்டாளம் தெரிவித்ததால் எங்களது பயணத்தை அன்று அத்துடன் முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

அன்று முழுதும் மழை தூறி கொண்டே இருந்ததால், பச்சை போர்த்திய அந்த மழையின் இலைகளில், துளிர்த்த மழை துளிகள், ஈரமான சாலைகள் , வண்ணகுடைகள் பிடித்து திரிந்த பள்ளி குழந்தைகள், அந்த மாலை நேரத்தில் சிக்மகளூர் ரம்மியமாக இருந்தது. அன்றைய இரவு, நிலவு ஒளியில் மழையின் துளிகளில்  கழிந்தது.


                                                                      ஹளபீடு 

மறுநாள் காலையில் எங்கள் பயணம், நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஹளபீடு நோக்கி துவங்கியது. பணிரெண்டாம் நூற்றாண்டில் கர்நாடகத்தின் ஒரு பகுதியை ஆண்டிருந்த ஹொய்சாலா அரசின் தலை நகராக விளங்கியது ஹளபீடு. ஹளபீடு என்றால், சிதைந்த நகரம் என்று பொருள். அன்றைய காலத்தில் அடுத்தடுத்த  இஸ்லாமிய மன்னனான மாலிக் கபூரின் படையெடுப்பில் சிதைந்தது அந்த நகரம்.

ஹலபீடுவில் இரண்டு கோவில்கள் உண்டு.ஹோய்சலேஸ்வரா மற்றும் சாந்தலேஸ்வரா. அந்த கோவில்களை கட்டியது அந்த காலத்தில் ஆட்சி செய்த ஹோய்சால மன்னன் விஷ்ணுவர்த்தனன் ஹொய்சாலா. அவனது பெயரிலும் அவனது மனைவியான சாந்தலாவின் பெயரிலுமே அந்த கோவில்கள் அழைக்கப்பட்டன. ஹோய்சாலாவிலிருந்து இருபது நிமிட பயண தூரத்தில் பேலூர் கோவில் இருக்கிறது. இத்தனையும் விஷ்ணுவர்தன ஹொய்சாலா தான் கட்டினார்.
                                              சிற்பியின் ஏவுகணை சிந்தனை.

                                                           சிவன் மற்றும் பார்வதி.

ஹளபீடுவின் கோவிலை கண்டதும் அப்படியே பிரம்மித்து நின்று விட்டேன்.அந்த கட்டமைப்பும் கலை நேர்த்தியும், நான் உலகில் வேறெங்கும் காணாதது. அதுவும் பணிரெண்டாம் நூற்றாண்டில், சிற்பிகளுக்கு எந்த அளவுக்கு கற்பனை திறன் இருக்கிறது என்றால், நான் உபயோகிக்கும் ஹெல்மெட் என்கிற தலை கவசம் மற்றும் மிசைல் என்கிற ஏவுகணைகளை செதுக்கி இருந்தார்கள். சிவா பார்வதி சிலைகளுக்கு அவர்கள் கல்லால் செதுக்கி இருந்த ஆபரணங்களை பார்த்து பெண்களுக்கே சபலம் வந்து விட்டது. அப்படி ஒவ்வொன்றாக பார்த்து செதுக்கி இருந்தார்கள்.
                                                                      கம்பீர நந்தி.
அங்கு இருந்த நந்தி சிலைகள் உயிருடன் இருப்பதை போலவே கம்பீரமாக ஆண்மையுடன் வீற்றிருந்தது, நந்தியின் ஒவ்வொரு உருப்புமே அச்சு அசலாக உண்மயாகவே இருந்தது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்று எங்கள் வழிகாட்டி கூற எனது பிரமிப்பு அதிகமானது. கோயிலின் ஒவ்வொரு சிலையையும் எனது கரங்கள் ஆசையுடன் தடவிப் பார்க்க உள்ளுக்குள் பரவசம் கலந்த சிலிர்ப்பு எனது முதுகு தண்டுவடத்தை சில்லிட்டது. ஹளபீடுவை கலை பொக்கிஷம் என உணர்ந்த உநேஸ்கோ இதனை தனது குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது. 

'என்ன இல்லை நமது திருநாட்டில்' என்று சொல்வது முற்றிலும் உண்மை, எல்லா வளங்களும் பெற்ற நமது நாட்டில் நமது சின்னங்களை பாதுகாப்பது தான் மிக முக்கியமான விடயமாக இருக்கிறது. ஹளபீடு அளவுக்கு எங்களை பேலூர் ஈர்க்கவில்லை என்றாலும், ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

                                                                                                                                                                                
இரண்டு நாட்களில் நாங்கள் பெங்களூரு திரும்பி விட்டோம்  அடுத்த நாள் நான்  எனது கல்லூரி நண்பர்கள் சிலரை சந்திப்பதாக ஏற்பாடு. இந்திரா நகரில் உள்ள பார்பக்யு நேஷன் என்ற உணவகத்தில் சந்தித்தோம். பதினாறு வருடங்களுக்கு பின்னர் சந்திக்கும் வேளையில் எங்கள் கல்லூரி நாட்களை அசைபோட்டது சுகமாக இருந்தது. அந்த உணவகத்தில் அன்லிமிடெட் துவக்க உணவு நாம் போதும் என்று சொல்லும் வரை, நமது மேசையிலேயே தீ மூட்டி,  வித விதமாக வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பின்னர் மெயின் உணவு வேறு. அனைத்தும் முடித்து விட்டு நாங்கள் அமெரிக்க செல்ல விமானத்தில் ஏறி அமர்ந்த போது.. எதையோ விட்டு விட்டு செல்வது போல மனம் பிசைந்தது. கண்களில் நீர் கோடிட்டன.
வழக்கம் போல என் மனைவியிடம் சொன்னேன்...
'சீக்கிரமே இந்தியா திரும்பி செட்டில் ஆகிவிட வேண்டும்.'
'ஆமாம் நானும் அதை தான் எண்ணிக் கொண்டிருந்தேன்' என்றாள் அவள்.

சுகமான நினைவுகளையும் கனத்த இதயங்களையும்  சுமந்த எங்களை சுமந்த படி உயர உயர பறக்க ஆரம்பித்தது அந்த அலுமினியப்  பறவை..

முற்றும்.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...