Monday, December 31, 2012

திரைசிற்பிகள் - 3 ரோமன் பொலன்ஸ்கி


உலக சினிமாவின் மறுக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் ரோமன் பொலன்ஸ்கி . அவரது படங்கள் திரை உலக ஜாம்பாவானான ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் படங்களைப் போல உள்ளது என சொல்லபட்டாலும், ஹிட்ச்காக் போலல்லாது வெவ்வேறு ஜானர்களில் இவர் படங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறார். இவர் படங்கள் பெரும்பாலும், கிரைம் த்ரில்லர் வகையை சார்ந்தவை. ஆனால் இவரது த்ரில்லர்கள், சாதரணமான கதைகளாக இல்லாது, மாடர்ன் சிந்தனைகளுடனான மாற்று சினிமாக்களாகவே இருந்திருக்கிறது.உலக வாழ்கையின் சாதாரண  நிகழ்வுகளும், அதன் அடியாழத்தில் புதைந்திருக்கும் வக்கிரங்களை இவரின் படங்கள் பேசிக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் முன் பாரிசில் பிறந்த ரோமனின் குடும்பம் பாரம்பரியமான யூத இனத்தை சார்ந்தவர்கள். ரோமன் பிறந்த பிறகு போலந்துக்கு குடி பெயர்ந்தவர்கள், இரண்டாம் உலகப் போரின்போது நடந்த இனப் பயங்கரவாதத்துக்கு இவரது தாய் பலியானார்.ரோமன் தனது சிறு வயதில் இனவாதத்தில் இருந்து தப்பிக்க வேறு வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தபடியே இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலவற்றை, தனது 'தி பியானிஸ்ட்' படத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போரின் பின்னே, தனது கலை வாழ்க்கையை,'சிறுவர்களின் வானொலி நிகழ்ச்சியான 'தி மேரி காங்' மூலம் ஆரம்பித்தார். பின்னர் ஒரு நடிகனாக 'தி சன் ஒப் ரெஜிமெண்ட்' படத்தில் நடிக்க அறிமுகமாக.. பின்னர் உலக புகழ் பெற்ற லாட்ஸ் (LOTZ) பள்ளியில் திரைப்பட கல்வி பயின்றார்.

1962 இல் இவர் எடுத்த 'தி நைப் இன் தி வாட்டர் ' (The Knife In the Water')
திரைப்படம், உலக திரைப்பட அரங்கில் இவரது இருப்பை தெரியப்படுத்தியது.போலிஷ் மொழியில் எடுக்கப்பட்ட அந்தப் படம், வெளிநாட்டு பட வரிசையில் சிறந்ததென ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டது. மீண்டும் இவர் ஹாலிவூட் சென்று இயக்கிய, ரோஸ் மேரிஸ் பேபி என்ற படத்துக்கு சிறந்த திரை கதை ஆசிரியருக்கு இவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டபோது ஹாலிவூட் உலகம் இவரை திரும்பி பார்த்தது.

1974 இல் இவர் இயக்கிய 'சைனா டவுன் ' என்ற திரைப்படத்திற்கு பனிரெண்டு ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டன. திரைக்கதைக்காக ராபர்ட் டவுன் ஆஸ்கார் விருது வென்றார். உலகமே இவர் ஒரு உலக திரை உலக சிற்பி என்பதை புரிந்து கொண்டது. விருதுகளுக்கான பரிந்துரை மட்டுமன்றி. இவர் இயக்கிய 'தி பியானிஸ்ட்' என்ற திரைப்படம் ஒரு இசை கலைஞனின் வழியாக இரண்டாம் உலகப்போரின் அவலங்களை உலகுக்கு உணர்த்தியது. அந்த படத்துக்காக, சிறந்த இயக்கத்துக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றார் பொலன்ஸ்கி.

திரை உலகில் வெற்றி பெற்ற இவரது சொந்த வாழ்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை. சிறு வயதில் தாயை யூதர்களுக்கெதிரான இனப்போரட்டத்துக்கு பறிகொடுத்த பொலன்ஸ்கி தான் இனக்கலவரங்களில் இருந்து தப்பிக்க, ஊர் ஊராக பயணப்படுபவராக இருந்தார். அவர் தன்னுடன் ஒரு படத்தில் நடித்த ஷரன் டேட் என்ற நடிகை மணம் புரிந்துகொண்டார்.

1970, ரோமன் போலன்ஸ்கி லண்டன் சென்றிருந்த போது, சார்லஸ் மேன்சன் பாமிலி என்ற இனவாதக் குழுவால் எட்டரை மாத நிறைமாத கர்ப்பிணியான ஷரன் டேட் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், குத்தி கொல்லப்பட்டார். 1977 இல் ஒரு பதிமூன்று வயது பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக அவரை கைது செய்ய போலீஸ் தேடியதும், ஐரோப்பா சென்று லண்டன் நகரத்தில் சென்று வசிக்க ஆரம்பித்தார். இன்றும் அந்த வழக்கினால் அவரை தேடிக் கொண்டிருக்கிறது அமெரிக்க போலீஸ். தற்போது அவர் சுவிட்செர்லாண்டில் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் சம்மததினுடனேயே அந்த உறவு ஏற்பட்டது என்பது அவர் வாதம். ஒரு படைப்பாளிக்குரிய பலவீனங்களில் அவர் மாறிக்கொண்டு பரபரப்பு செய்திகளின் குழந்தையாய் அவர் வாழ்ந்துவந்தாலும், அவரது திரைப்படங்களில் அவர் கொண்டு வந்துள்ள படைப்புத்திறன், அவரது சொந்த வாழ்கயினால் என்றும் பாதிப்படைந்ததில்லை. அவரது சில நுணுக்கமான, அற்புதமான திரைப்படங்கள் சிலவற்றை பார்க்கலாம்.


ரோஸ்மேரிஸ் பேபி.


ரோஸ்மேரி மற்றும் கய் இருவரும் நியூ யார்க்கின் அபார்ட்மெண்ட் ஒன்றில் குடி ஏறுகிறார்கள். அவர்களை சுற்றி அமானுஷ்யமாய் ஏதேதோ நடக்கிறது. கய் ஒரு நடிகன். அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு வயதான தம்பதியிடம் கய் நட்பு கொள்கிறான். இறங்குமுகத்தில் இருக்கும் அவனது மார்கெட், திடீரென உயர்கிறது. திரை உலகத்தில் இருக்கும் அவனது எதிரியின் கண் பார்வை பறிபோகிறது. இந்த சமயத்தில் ஒரு நாள் ஒரு விபரீத கனவு காணும் ரோஸ்மேரி கருவுருகிறாள். அப்போது அந்த வயதான தம்பதி அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள ரோஸ் மேரிக்கு அவர்கள்த அதீத கவனிப்பு மற்றும் அவர்களின் அதிகாரம் கண்டு மிரளுகிறாள். கடைசியில் தனது குழந்தைக்கு இருக்கும் ஆபத்தை உணர்கிறாள். ஹாலிவூடில் பொலன்ஸ்கி இயக்கிய இப்படம், பெரும் வரவேற்ப்பை பெற்றதுடன் ஒரு ஆஸ்கார் விருது மற்றும் பதினோரு இதர விருதுகளை வென்று ரோமன் போலன்ஸ்கிக்கு சிவப்பு கம்பளம் விரித்தது ஹாலிவூட்.

சைனா டவுன்


ஹாலிஸ் முல்றாய் எனும் லாஸ் ஏஞ்சலிஸ் நகர நீர் கட்டுப்பாடு வாரிய பொறியாளரின் மனைவி, துப்பறியும் நிபுணனான ஜே ஜே கிட்சை தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா என அறிந்து வர சொல்கிறாள்.கிட்சும் ஹாலிசை பின் தொடர்ந்து அவர், வேறொரு சின்ன பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டு பிடித்து புகைப்படம் எடுக்கிறான். அவனை அறியாமல் அந்த புகைப்படங்கள் செய்தி தாள்களில் வெளியே வந்துவிட, அவனை தொடர்பு கொள்கிறாள் எவெலின். அவளே ஹாலிசின் உண்மை மனைவி என்று அறிகிறான் கிட்ஸ். அவள் அந்த கேசை விட்டு விடும்படி சொல்ல, வேறொரு நாளில், ஹாலிஸ் அந்த நீர்தேக்கி மையத்தில் கொலை செய்யப்பட்டு கிடக்க, அதனை செய்தது எவெலின் தான் என கிட்ஸ் சந்தேகப்பட, பின் வரும் திடுக்கிடும் திருப்பங்களால் படம் பரபரப்பாக சென்று யாரும் எதிர்பாராத உச்சக்கட்டத்தை அடைகிறது. படத்தில் கிட்சாக நடித்திருக்கும் ஜாக் நிக்கல்சன், தனது தனிப்பிட்ட நடிப்பினால் தூள் கிளப்பி இருப்பார். இப்படம், பனிரெண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது வாங்கியது. அதை தவிர மேலும் இருவது விருதுகளை வாங்கிக் குவித்தது.

டெத் அண்ட் தி மெய்டன்.


வக்கீல் ஜெரார்டோ , அவனது மனைவி பவ்லினா எஸ்கோபார், மற்றும் டாக்டர் மிரண்டா, என்ற இந்த மூன்று கதாபாத்திரங்கள் தான் படம் முழுக்க. ஆனால் படம் முழுவதும் நீங்கள் உங்கள் இருக்கை நுனியில் தான் அமர்ந்திருப்பீர்கள். ஒரு நாள் இரவு ஒரு புயலின் நடுவில் மாட்டிகொண்ட டாக்டர் மிரான்டாவை தனது இல்லத்துக்கு அன்றிரவு தங்க அழைத்து வருகிறான் ஜெரார்டோ.அப்போது டாக்டர் மிரண்டாவின் குரலை கேட்டதும்,அவனை துப்பாக்கி முனையில் சிறை பிடிக்கும் பவ்லினா, அவன் ஒரு கொடியவன் என்றும், அதற்க்கு முந்தய ஆட்சியில் தன்னை கண்ணை கட்டிவிட்டு டார்ச்சர் செய்தான் என்றும் வார காலமாக தன்னை கற்பழித்தவன் என்றும் குற்றம் சாட்ட, 'இல்லை' என்று டாக்டர் மிரண்டாவும்,'இருக்காது' என்று அவள் கணவன் ஜெரார்டோ வும் மறுக்கிறார்கள். உண்மை என்ன என்பதை கிளைமாக்ஸ் வரை இந்த மூன்று கதாபத்திரங்களை வைத்தே சிறிதும் தொய்வில்லாமல், சொல்லி இருக்கிறார் போலன்ஸ்கி. பவ்லினாவாக நடித்திருக்கும், சிகோர்னி வீவரும், டாக்டர் மிரண்டாவாக, காந்தக் குரலில் மயக்கும் பெண் கிங்ஸ்லீயும் கலக்கி இருக்கிறார்கள். அவர்களது நடிப்பே நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது.

தி பியானிஸ்ட்


வ்லாடிஸ்லா ஷ்பில்மன் ( Władysław Szpilman) என்ற ஒரு பியானோ இசை கலைஞனின் உண்மை கதையையும், தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் தொகுத்து ரோமன் போலன்ஸ்கி உருவாகின திரைக் காவியம் தான், 'தி பியானிஸ்ட்'. ஷ்பில்மன் போலந்தை சேர்ந்த ஒரு யூதன். உலக புகழ் பெற்ற பியானோ கலைஞன். இரண்டாம் உலகப்போரின் போது, யூதர்களை வேட்டையாடும் ஜெர்மானியர்கள், ஸ்பில்மானின் குடும்பத்தையும் விட்டு வைக்க வில்லை. யூதனல்லாத ஒரு குடும்பத்தின் உதவியுடன் ஷ்பில்மன் தப்பிப்பது தான் பதைபதைக்க வைக்கும் இந்தப் படத்தின் கதை.வ்லாடிச்லா ஷ்பில்மெனாக வாழ்ந்திருப்பார் அட்ரியன் ப்ரோடி. அவருக்கு ஆஸ்கார் விருதும், ரோமன் போலன்ஸ்கி க்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்காரும் படத்தின் திரைக்கதைக்கும் கிடைத்தது. படத்தில் உள்ள ஒவ்வொரு போர்கள காட்சியும், சிதைந்து போன ஓவியமாக காட்சி அளிக்கும் சிறப்பு இந்த திரைப்படத்துக்கு உண்டு.

33 வருடங்களுக்கு முன் தான் மாட்டிகொண்ட அந்த கற்பழிப்பு குற்றசாட்டு உண்மை இல்லை என தொடர்ந்து மறுத்து வரும் போலன்ஸ்கி, அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் நடந்தது எனினும் அவளுக்கு அப்போது பதிமூன்று வயது என்பதால், அந்த குற்றத்தின் துக்கம் தன்னை தொடர்ந்து கொண்டே இருப்பதாக கூறியுள்ளார். அவரின் குற்றத்துக்கு வக்காலத்து வாங்க வில்லை. யார் கண்டது, அதனையும் கூட ஒரு படமாக அவர் எதிர்காலத்தில் எடுக்கலாம்.

ஒரு கலைஞனுக்கு சொந்த வாழ்வில், பல சோகங்கள், பல நிகழ்வுகள் இருந்தாலும், அவனது கலை பயணம் தடையில்லாமல் தொடரவே செய்கிறது. சந்திக்கும் இடர்களையும் தனது எதிர்காலப் படங்களுக்காங்க கச்சா பொருள்களாக மாற்றிக் கொள்ளும் தன்மை சில பெரும் திரைச் சிற்பிகளாக மட்டுமே முடியும் அத்தகையோரில் ரோமன் போலன்ஸ்கி க்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

-நன்றி. soundcameraaction.com க் காக நிலாமுகிலன்

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...