Tuesday, November 20, 2012

உலக சினிமா: The Descendantsஉலகத்தில் அன்பு மட்டுமே நிரந்தரமானது. துரோகங்களும், கயமைகளும் நம்மை சூழும்போழுது, அன்பு காட்டுதலும், மன்னிப்புகளும் மட்டுமே நம்மை அந்த துன்ப சூழ்நிலைகளை விட்டு வெளியேற வைக்கும்.   Sideways , About Shmidt போன்ற சிறந்த படங்களை அளித்த அலேசாண்டர்  பயின் இன் (Alexander Payne) இயக்கத்தில் தி டிசண்டன்ஸ் நமது உள்ளத்தின் ஆழமான அடுக்குகளை மிதமாக வருடுகிறது  , படம் முழுக்க வியாபித்திருக்கும் நுட்பமான உணர்வுகள். 

'ஹவாய் தீவு, அமெரிக்காவின் சொர்க்கம் என வர்ணிக்கப் படுகிறது. ஆனால் அங்கு வாழும் எனது வலி உங்களுக்கு புரியாது' என பொருள் பட வாய்ஸ் ஓவரில் மாட் கிங் உரையாடும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. 

ஹவாய் தீவுகளில் ஒன்றான கவாய் தீவில்  அவனுக்கும் அவனது ஒன்று விட்ட சகோதரர்களுக்குமான 25000 ஏக்கர் நிலம் அவர்கள் பரம்பரை சொத்தாக ஒரு அறக்கட்டளையின் கீழ் இருக்கிறது. அதற்க்கு தலைவனாக மாட் இருக்கிறான். அந்த அறக்கட்டளை ஏழு வருடங்களில் முடிவதால், அதனை விற்க முடிவெடுக்கிறார்கள் மாட்டும் அவனது ஒன்று விட்ட சகோதரர்களும். யாருக்கு அந்த நிலத்தை விற்கிறார்கள் என்பதை பொறுத்தே கவாய் தீவின் எதிர்காலம் என்ற நிலை. இதை பற்றியே அந்த தீவு மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும், தனது வக்கீல் வருமானத்தால் தான் காலம் தள்ளுகிறான் மாட்.

ஹவாய் தீவு கடல் சாகச விளையாட்டுகளுக்கு பெயர் போனது. மாட் கிங்கின் மனைவி எலிசபெத்துக்கு அந்த விளையாட்டுகள் தான் பொழுது போக்கு. அப்படி ஒரு நாள் விளையாடுகையில் விபத்து ஏற்பட்டு, தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு தள்ளப்படுகிறாள். அவளை ஆஸ்பத்ரியில் வைத்து கவனித்துக் கொள்கிறான் மாட். 

பதின் பருவத்தில் இருக்கும் அவனது மூத்த மகள், அலெக்ஸ் என்கிற அலெக்சாண்ட்ரா, தனது தாயுடன் சென்ற கிறிஸ்துமசின்  போது ஏற்பட்ட வாக்குவாதத்தால்  ஆத்திரமுற்று வேறு நகரில் போர்டிங் பள்ளியில் தங்கி படித்து வருகிறாள். அவனது இரண்டாவது பெண் ஸ்காட்டி, சரியான வளர்ப்பு முறை இல்லாததால், பள்ளியில் பலவகை முறைப்பாடுகளை தாங்கி நிற்கிறாள். வேலை நிமித்தம், வெளியூர்களில் பெரும்பாலும் தங்க நேரிடும் மாட் கிங்குக்கு தனது குடும்பம் அந்நியமாக  தெரிகிறது. மாட் கிங்கிற்கு தனது பெண்களை கையாளத் தெரியவில்லை. அவர்களின் பழக்க வழக்கங்கள் சரியாக இல்லாததை உணர்கிறான். தனது மனைவி கோமா நிலையில் தள்ளப்பட்டதை அடுத்து, குடும்ப பாரம் முழுவதும்  தானே சுமக்கிறான்.

எலிசபெத்தை கவனிக்கும் டாக்டர்கள், இனி எலிசபத் பிழைக்கப் போவதில்லை என்றும், அவள் மேல் வைத்திருக்கும் லைப் சப்போர்டை எடுத்துவிடப் போவதாகவும் அதற்க்கு முன்னர் 'சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பிருங்க' என்று சொல்லவும், தனது மூத்த மகள் அலெக்ஸ் இருக்கும் பள்ளிக்கு சென்று அவளது எதிர்ப்பையும் மீறி அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான்.

பின்னர் மெல்ல, அவளது அம்மாவின் நிலைமையை எடுத்து சொல்ல, அவளோ அவளது அம்மாவின் மீது வெறுப்பை உமிழ்கிறாள். மாட் காரணத்தை வினவ அப்போது தான், அவனது மனைவி எலிசபெத் க்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனை தான் கண்ணால் கண்டதாகவும் கூற உடைந்து போகிறான் மாட். அதனை தங்கள் குடும்ப நண்பனின் மூலம் உறுதிபடுத்திக் கொள்கிறான். அவனது மனைவி எலிசபெத் மீது கோவமும் ஆத்திரமும் வந்தாலும், அவளது தற்போதைய கையாலாகாத நிலையை உணர்ந்து அவளை மன்னித்து விடுகிறான். உறவினர்களிடம் சொல்வதை போல, அவளது கள்ள காதலனையும் கண்டு பிடித்து, அவள் இறப்பதற்கு முன் அவனை அவளிடம் அழைத்து வர விரும்பி தங்கள் மகள்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களை ஒன்றிணைத்து அவனை தேடி கிளம்புகிறான். அவன் அம்முயற்சியில் வெற்றி பெற்றானா, தனது மகள்களின் அன்பை பெற்றானா, தனது பரம்பரை சொத்துகளை விற்றானா  என மீதி படம் கூறுகிறது.

ஹாலிவூடில் சூப்பர் ஸ்டார் அளவில் இருக்கும் மிக சில நடிகர்களில் ஜார்ஜ் கிளூனியும் ஒருவர். அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது ஆச்சர்யம். நடுத்தர வயது மாட்டை தனது அடக்கமான நடிப்பினால் கம்பி மேல் நடப்பது போல பிரதிபலிக்கிறார். தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டால் எனத் தெரிந்ததும் பொங்கும் ஆத்திரத்துடன் அவளை தனிமையில் திட்டி தீர்த்துவிட்டு மகள்களை அம்மாவுடன் பேச சொல்ல, அவர்கள் திட்டத் துவங்கியதும், 'அம்மாவை அப்படி எல்லாம் பேசக் கூடாது' என அடக்கும் காட்சியில் ஜொலிக்கிறார்.

படத்தின் முதல் ஹீரோ, படத்தின் தொய்வில்லாத திரைக்கதை. எந்த ஒரு சிக்கலும் இல்லாத தெளிவான கதையில் சுவாரஸ்யங்களை புகுத்தி படம் பார்ப்பவர்களை அசத்தி இருக்கிறார்கள். படத்தின் கதை முதலில் நாவல் வடிவத்தில் எழுதியவர் கவாய் ஹார்ட் ஹெம்மிங்க்ஸ்.
அதற்க்கு திரைக்கதை அமைத்தவர்கள், Alexandar Payne, Nat Faxon and Jim Rash.
அடுத்து Phedon Papamichael கையாண்டிருக்கும் ஒளிப்பதிவு. இந்த சோகமான கதையின் மூடுக்கு ஏற்றவாறு கமெராவும் பயணிக்கிறது. ஹவாய் தீவின் அழகையும் அள்ளித்தர தவறவில்லை.

நாவலை தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை பகுதியில், இத்திரைப்படம் ஆஸ்கார் வென்றது. ஜார்ஜ் க்ளூனி க்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டது.

டிசண்டன்ட்ஸ் : டீசன்ட்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான விமர்சனம்... பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது...

நன்றி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...