Friday, November 5, 2010

பூலோக சுவர்க்கம் - 4 சுவிஸ் பயணம்.

                                                                  ஜெனீவா நகரம்.
காலையில் எங்கள் விடுதியிலேயே இலவச உணவு வழங்கப்பட்டது. சுவிஸ்சில் க்ரோசாந்த் எனப்படும் ஒருவித ரொட்டியும் கோதுமை ரொட்டியும் பிரதான உணவுகள். க்ரோசாந்தை நான் அமெரிக்காவிலேயே உண்டிருந்தாலும் இங்கு அதன் வடிவமும் சுவையும் மிக அருமையாக இருந்தது. பழ சாறுகள், அவித்த முட்டை, நறுக்கிய பழத்துண்டுகள், அவித்த உருளை கிழங்கு என அருமையாக இருந்தது. சுவிஸ் தேசத்தின் வெண்ணையும் சீஸும் மிக பிரசித்தி பெற்றது. பாலுக்கு பெயர் போன டென்மார்க்கிலிருந்து வருவதாக சொன்னார்கள்.

 நாங்கள் பெர்ன் நகர ரயில் நிலையத்தை அடைந்து ஜெனீவா செல்லும் ரயிலை பிடித்தோம். அங்கிருந்து இரண்டு மணி நேரப் பயணம். ரயில் பெட்டியில் இருந்த ஒவ்வொருவரும் வந்து என் மகனை கொஞ்ச ஆரம்பித்தார்கள். அவனும் அவர்களுக்கு டாடா காட்டியும் ஒளிந்து விளையாடியும் புன்னகைகளையும் தந்து வசீகரித்துக் கொண்டிருந்தான். வயதானவர்கள் வந்து எங்கள் இருக்கையின் அருகே நின்று எதுவுமே பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். நான் ஹலோ சொன்னதும் பதிலுக்கு ஹலோ சொல்லி விட்டு அவனையே கவனிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் மனதில் அவர்களின் பேரன்கள் வந்து போயிருக்கக் கூடும்.

 ரயிலில் இரண்டு அடுக்குகள் இருந்தன. நமது ஊரைப் போல ஒரு பெட்டியில் சமையல் நடக்கிறது. அங்கு ரொட்டி, பழசாறு, தேநீர் பாஸ்தா என சகல ஐரோபிய உணவு வகைகளும் இருந்தன.  எனினும் விலையை கருதி நாங்கள் வாங்கவில்லை. கையோடு எடுத்து சென்றிருந்த தண்ணீர் பாட்டில்களையும் பழ சாறுகளையும்  காலி செய்தோம்.
ரயிலின் வெளியே தெரிந்த காட்சிகளில் நான் முன்பே சொன்னது போல அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு மிக அழகாக தெரியலாம்.ஆனால் அமெரிக்காவிலும் இதை போலவே பசுமை தெரியும் ஆதலால், அவ்வளவாக வேறுபாடு இன்றி தெரிந்தது. ஆங்காகே மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மிகவும் புஷ்டியாக இருந்தது. ஒரு மணி நேரப் பயணத்துக்கு பின் தான் அந்த பரவசமூட்டும் காட்சியை கண்டோம்.
பெர்நிலிருந்து ஜெனீவா செல்லும் வழியில் லவ்சான் நகர் இருக்கிறது. அதனை தாண்டி செல்லும் வேளையில், அந்த ஜெனீவா ஏரியின் அழகு.. அப்பா..சொல்லி மாளாது. (காண்க புகைப்படம்)

ஜெனீவா ஏரி லவ்சான் நகரத்திலிருந்து...
எந்த புகைப்பட காரனும் ஒரு நிமிடம் அந்த அழகு காட்சியை கண்டு ஸ்தம்பித்து தான் போய்விடுவான். அவ்வளவு அழகு. உண்மையாக சொல்கிறேன், அந்த காட்சியை காண எனக்கு கண்கள் இருந்ததற்காக அந்த ஒரு நொடி மிகவும் பெருமையாக இருந்தது. என்ன புகைப்படம் எடுத்தாலும், நேரில் காண்பது போல வராது. அப்போது தான் நான் சுவிஸ்சில் இருப்பதையே உணர்ந்தேன். சுவிஸ் ஒரு பூலோக சொர்க்கம் என மற்றவர்கள் கூறுவதை அப்போது தான் என் மனம் ஏற்றுக் கொண்டது.  என் மனைவியிடம் கூறினேன்.'சுவிஸ் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தினமும் இந்த அழகு காட்சிகளை அவர்கள் கண்டு கொண்டே இருக்கலாமே' என.ஜெனீவா பார்த்து திரும்பி செல்லும் வேளையில் நிச்சயமாக லவ்சான் நகருக்கு செல்ல வேண்டும் என பேசி கொண்டோம்.                                                  ஜெனீவா ஏரியின் நீர் எழுச்சி...
ஜெனீவா சென்று இறங்கியதும் அது எங்களுக்கு வேறுவிதமான நகராக தெரிந்தது. மக்கள் அனைவரும் மெர்சி மெர்சி என பிரெஞ்சு பேசிக் கொண்டிருந்தார்கள். நிறைய மக்கள் தலைகள். சுவிஸ்சிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம். (முதலாவது சூரிக்). டிராம்களும் பேருந்துகளும் தங்கள் ஹைட்ராலிக் பெருமூச்சோடு மக்களை உண்டும் துப்பிக்கொண்டும் இருந்தன.

ஜெனிவா என்று நினைத்தாலே நமக்கு ஐக்கிய நாடுகள் சபையும், செஞ்சிலுவை சங்கமும் தான் நினைவுக்கு வரும். ஆம். செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகமும், ஆஸ்திரியாவின் விஎன்னாவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகமும் இங்கு தான் இயங்குகின்றன. பிரான்ஸ் தேசத்தின் எல்லையில் இருப்பதால், ஜேர்மன் மொழியே பிரதான மொழியாக இருந்தாலும், ஜெனிவாவில் அதிகமாக பிரெஞ்சு தான் பேசுகிறார்கள். நாங்கள் இன்போர்மஷன் சென்டர் சென்று ஜெனீவா டூர் என ஏதாவது பஸ் இருக்கிறதா எனக்கேட்க, அவளோ பிரெஞ்சில் பதில் கூறினாள். எனக்கு பிரெஞ்சு தெரியாது என்றாலும் அவளது உடல் மொழியிலும் அவள் கூறியதில் இருந்து நேரே சென்றால், ஜெனீவா ஏரியில் போட் டூர் இருக்கிறது என புரிந்து கொண்டேன். 

அந்த போட் டூர் சரியான மொக்கை. இருந்தாலும் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கூறிய ஜெனீவா நகர வரலாறு பிடித்தமாக இருந்தது. படகில் இருந்தபடியே ' அதோ பார் ஐக்கிய நாடுகள் சபை, அதோ பார் பறவை' என்கிற ரேஞ்சில் இருந்தது.  ஏரியில் ஒரு ராட்சச நீர் எழுச்சி (அது தாங்க வாட்டர் பௌண்டன்)  இருந்தது. அது தான் உலகிலேயே மிக உயரமான வாட்டர் பவுண்டன் என சொன்னார்கள். ஒரு மணி நேரம் போட் அதனையே சுற்றி சுற்றி வந்தது. மக்கள் பலர் தாங்கள் சொந்தமாக வைத்திருந்த போட்டில் அந்த ஏரியில் பவனி வந்து கொண்டிருந்தனர். போட் டூர் முடிந்ததும் பசி எடுக்க அங்கிருந்த ஒரு லெபனான் தேசத்து உணவகத்தில் பலாபல்(falafal) ராப் உண்டோம். நம்ம ஊரு வடை போல இருக்கும் பலாபல். அனால் இதனை கொண்டைகடலை மசித்து செய்கிறார்கள். வடை போல செய்தது அதனை மசித்து சிறிது லேட்ட்யுஸ், தக்காளி, வெங்காயம் சிறிது தயிர் எல்லாம் வைத்து தருகிறார்கள்.  பக்கத்திலேயே இருந்த இந்திய உணவகத்தில் ஒரு பிரியாணி நாற்பது பிராங்குகள் என எழுதி இருந்ததை வயிற்றெரிச்சலோடு பார்த்து கொண்டே உண்டோம். பசிக்கு அமிர்தமாக இருந்தது. உங்கள் ஊரில் மெடிடரேனியன் அல்லது லெபனீஸ் உணவகம் இருந்தால் பலாபல்லை முயற்சித்து பாருங்கள்.


                                  மிகப் பழமையான கத்தோலிக்க தேவாலயம்.   

பின்னர் அங்கு சிறிது நேரம் சுற்றி விட்டு, லவ்சன் நகருக்கு செல்ல ஒரு பரவசத்தோடு காத்திருந்தோம். அன்றைய மாலை ஒரு மறக்கமுடியாத மாலையாக அமையப்போகிறது என்பதை நாங்கள் அப்போது உணர்ந்திருக்க வில்லை.

--

4 comments:

Anonymous said...

thank u very much ,for ur speedpost,please add more detail,thanks once again

கெக்கே பிக்குணி said...

என் ஸ்விஸ் பயணத்தை நினைவு படுத்தி விட்டீர்கள். நான் பார்த்த இடங்களில் கேரளத்துக்கு அடுத்து ஸ்விஸ் தான் பூலோக சொர்க்கம்! ஜெனீவின் நீர்வீழ்ச்சி ....!

ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இதாலியன், ரோமஞ் என்று முக்கியமாய் நான்கு மொழிகளும் ஸ்விஸ்ஸில் தேசிய மொழிகள். ஜெர்மனை ஸ்விஸ்ஸின் முக்கால் வாசி மக்கள் பேசுவார்கள்... அடுத்து, ஃபலாஃபல் பொதுவாக கொண்டைகடலை / ஃபாவா பீன் ஐத் தான் அரைத்துச் செய்வார்கள்.

கொசுவத்தி சுற்ற வச்சிட்டீங்க. நன்றி! பயணத் தொடர் இன்னும் தொடரவும்!

நிலா முகிலன் said...

நன்றி அனானி. உங்கள் பெயர் என்ன?

நிலா முகிலன் said...

தகவலுக்கு நன்றி கெக்கேபிக்குணி. உங்கள் பெயர் அருமை. சிக் பீசை கொண்டை கடலை என எழுதுவதற்கு பதில் பச்சை பட்டாணி என எழுதி விட்டேன். இப்போது சரி செய்துவிட்டேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...