அரசியல்வாதிக்கும், அரசாள பிறந்தவர்க்கும், தனது வாயே மூலதனம். அதாவது, மக்களை மதிமயக்க வைக்கும் பேச்சாற்றல் தான் அவர்களது பலம். அதற்க்கு , அண்ணா, கருணாநிதி, மார்டின் லூதர் கிங் என பல உதாரணங்கள் சொல்லலாம். அரசாள பிறந்தவனுக்கு பேசும்போது நாக்கு பிறழ்ந்தால் அவன் என்னவெல்லாம் சங்கடங்கள் அனுபவிக்கக் கூடும் என்பதை அழகாக சொல்கிறது சென்ற வருட சிறந்த படம், சிறந்த நடிகர்,சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைக்கதை என்கிற மிக முக்கியமான ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற தி கிங்க்ஸ் ஸ்பீச் திரைப்படம்.
பெர்ட்டி என்கிற ஆல்பர்ட் என்கிற ஆறாம் ஜார்ஜ் மன்னர். உண்மை புகைப்படம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில், இங்கிலாந்தை ஆண்ட மன்னன்ஆறாம் ஜார்ஜ் நோய் வாய் பட்டிருந்த காரணத்தால், தனது முதல் மகனான டேவிட் க்கு பட்டம் சூட்ட நினைக்கிறார். டேவிடோ ஒரு விவாகரத்தான ஒரு அமெரிக்க பெண்ணிடம் காதல் கொண்டு அவளை மணக்க இருப்பதாக கூறுகிறான். அந்த காலத்தில் பிரிட்டிஷ் மன்னன் தான் கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவனாகவும் அறியப்பட்டதால், ஒரு மன்னன் இவ்வாறு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மணப்பது அப்போதைய கத்தோலிக்க மத சட்ட திட்டங்களுக்கு எதிராக இருந்ததால், அவன் மன்னனாக ஆகும் தகுதி இழக்க, சட்டப்படி அவனது தம்பி பெர்ட்டி தான் அந்த பட்டத்துக்கு ஏற்றவன்.
படத்தின் துவக்கத்திலேயே தனது நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரை நிகழ்த்த பெர்ட்டி முயற்ச்சிக்க, தனது திக்கு வாய் பிரச்சனையால் அவனால் சரியாக உரை நிகழ்த்த முடியாமல் போக, அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை. மக்களுக்கோ, சரியாக பேசத்தேரியாதவன் தங்களின் தலைவனாக எப்படி இருக்க முடியும் என அவன் மேல் நம்பிக்கை இன்மை. ஏற்படுகிறது. அரசாங்க காரியங்களில் தன சகோதரனை விட சிறந்து விளங்கும் பெர்ட்டி, தனது வாய் பிரச்னையால் அவனால் ஒரு சிறந்த மன்னனாக வாய்ப்பை ஏற்று நாட்டை வழிநடத்த அவனுக்கு நம்பிக்கை வராமல் போகிறது.
லயொநெல் லோக், தனது மனைவியுடன், உண்மை புகைப்படம்.
அவனது கவலையை உணர்ந்த அவனது மனைவி எலிசபெத், தனது கணவனின் இந்த திக்கு வாய் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறாள். அப்போது அவளுக்கு ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட மருத்துவனான லியோனல் லோக் என்பவனைப் பற்றி கேள்விப் பட்டு அவனிடம் தன கணவனை யாருக்கும் தெரியாது அழைத்து செல்கிறாள். லோக், பெர்ட்டியை ஒரு மன்னனாக கருதமுடியாது என்றும் தான் அவனை 'ஹிஸ் ஹைனெஸ்' என்று அழைக்காமல் பெர்ட்டி என்றே அழைக்க முடியுமானால் அவனுக்கு உதவுவதாகக் கூறுகிறான். அதவும் போக, அரசனை தேடி தான் வர முடியாது என்றும், தனது அலுவலகத்துக்கு அவன் வந்தால் மட்டுமே உதவ முடியும் என கறாராக கூறிவிட, எலிசபெத் பெர்ட்டியை எப்படியோ சமாதனப் படுத்தி அவனை அழைத்து வந்துவிடுகிறாள்.
அரச பரம்பரையை சார்ந்த தான் ஒரு சாதாரண மருத்துவனை தேடி செல்வதா என்ற இறுமாப்பும், தன்னை பெயர் சொல்லி ஒரு சாதாரணன் அழைப்பதா என்ற திமிரும் கோவமும் சேர்ந்து புறப்பட, லோக் இன் மீது ஒரு சினத்துடன் தான் அவனைத்தேடி வருகிறான் பெர்ட்டி. அவனது முதல் சந்திப்பில், லோக் ஒரு இசைத்தட்டை சுழல விட்டபடி, அவனை ஒரு செய்தி தாள் கொடுத்து படிக்க சொல்ல, அவன் பாதி படித்து முடித்ததும் 'இதற்க்கு மேல் என்னால் உனது ஆய்வுகளுக்கு உட்பட முடியாது' என கோவத்துடன் வெளியேறி விடுகிறான். அவன் படித்ததை பதிவு செய்த லோக் அந்த பதிவு செய்த ஒலித் தட்டையும் அவனிடம் கொடுத்து அனுப்புகிறான்.
காலின் பிர்த் மற்றும் ஜெப்ரி ரஷ்
அந்த சமயத்ததில், ஜேர்மனி இன் ஹிட்லரின் அட்டூழியம் போருக்க இயலாது, அந்த நாட்டின் மீது படை எடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, பெர்ட்டி தனது பொதுமக்களுக்கு உரை நிகழ்த்த வேண்டிய அவசியம் வருகிறது. அப்போது லோக் தான் பேசியதை பதிவு செய்த ஒலித்தட்டை கேட்கும்போது தான் திக்கு இல்லாமல் பேசியதை கேட்டதும் லோக் இன் மீது நம்பிக்கை வர, தனக்கு திக்கு வாய் இருப்பதை நீக்க லோக் இடம் தன்னை முழுவதுமாக ஒப்புவிக்கிறான் பெர்ட்டி.
அறிக்கைகளை ஏற்ற இறக்கத்துடன் படிக்க கொஞ்சம் கொஞ்சமாக படிக்க லோக் பெர்டிக்கு பயிற்சி தருகிறான். வார்த்தைகளின் இடையே விழும் இடைவெளிகளில் அவனுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை மனதுக்குள் சொல்லி நிரப்ப சொல்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் எப்படி தன்னை முழுதுமாக தயாரித்து அவன் பொதுமக்களுக்கான தனது வானொலி உரையை வெற்றிகரமாக முடித்தானா என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது திரைப்படம்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் வாழ்ந்த ஆறாம் ஜார்ஜ் மன்னன் என்கிற பெர்ட்டியின் உண்மை கதை இது. இப்போது வாழ்ந்து வரும் இரண்டாம் எலிசபெத்தின் தந்தை தான் இந்த பெர்ட்டி
படத்தில் பெர்ட்டி யாக நடித்திருக்கும் காலின் பிர்த்க்கும்(Colin Firth), டாக்டர் லோக் ஆகா நடித்திருக்கும் ஜெப்ப்ரி ரஷ் க்கும்(geoffrey rush) தான் நடிப்பில் போட்டி.
ஒரு அரச பரம்பரையின் வாரிசுக்கு உரிய கம்பீரத்தையும், தனக்கு திக்கும் வாய் பிரச்னையினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும், தனது மக்களின் மேல் இருக்கும் பிரியத்தையும், தனது மரியாதையை விட்டு கொடுக்க தயங்கும் தயக்கத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கும் காலின் பிர்தின் நடிப்பு ராஜ கம்பீரம். அதற்க்கு இணையான மென்மையான நடிப்பு லோக் ஆக நடித்திருக்கும் ஜெப்ரி ரஷ். தனது சட்ட திட்டங்களுக்கு பெர்ட்டியை உடன்படுத்த அவர் கை யாளும் மென்மையான ஆனால் உறுதியான நிலைப்பாட்டை அலுவலக மேலாளர்கள் அனைவரும் கடைப் பிடித்தால் நிச்சயமாக அலுவலகங்களில் உற்பத்தி கூடும். மிகவும் நுணுக்கமான பாத்திரப்படைப்பான லோக் ஆக அற்புதமான அண்டர் ப்ளே நடிப்பில் மின்னுகிறாள் ஜெப்ரி ரஷ.
திக்கு வாயால் கஷ்டப்படும் ஒரு மன்னன் அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டு வருகிறான் என்ற நூலிழை போன்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு, அற்புதமான திரைக்கதை வடித்த டேவிட் செயட்லருக்கும் (David Sidler) ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கும் இயக்குனர் டாம் ஹூப்பருக்கும் ஒரு ராயல் சல்யுட்.
நம்மை கதை நடக்கும் ஆயிரத்து தொள்ளயிரத்து முப்பதுகளுக்கு அழைத்து சென்ற ஒளிப்பதிவாளர் டானி கோஹேன் மற்றும் இசை அமைப்பாளர் அலேசான்டரே டெஸ்பிளாட் ஆகியோரின் உழைப்பு படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது.
தி கிங்க்ஸ் ஸ்பீச் - ராஜ கம்பீரம்.
1 comment:
உங்கள் பதிவுகள் குறித்து வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_10.html
Post a Comment