Wednesday, February 13, 2013

பெண்களுக்கெதிரான தேசம்!
நம் தேசத்தின் ஆணாதிக்கத்துக்கு இதோ, இன்னொரு பலி. காதல் என்ற வன்முறையால், அமிலத்தில் அழுத்தப்பட்டு, தனது சிறகுகள் கருகி, உயிரை விட்டிருக்கிறது இந்த வண்ணத்து பூச்சி. புன்னகை தொலைத்துவிட்ட தேசமோ, தேவதைகளை காக்க வழி அறியாது தலை குனிந்து மௌனமாக நிற்கிறது.

ஏன் இந்த நாடு பெண்களுக்கெதிரான தேசமாக மாறிப் போனது. மொத்தம் உள்ள 135 நாடுகளில், பெண்களுக்கான பாதுகாப்பில் இந்தியாவின் இடம் 113. இந்த தேசத்தில் தான் அதிக பெண் தெய்வங்கள் தெய்வமாக வழி படப் படுகிறார்கள்.

பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஆணாதிக்க தேசத்தில், பெண்களுக்கெதிரான வன்முறையை ஊடகங்களிலும், சினிமாவிலும் நய்யாண்டி செய்து கொண்டு அவர்களை அவமதித்து வாழும் தேசமிது. பெண் என்றால், காமத்துக்கு உருவாக்கப்பட்ட ஒரு வடிகாலாகத்தான் இந்த நாட்டின் ஒவ்வொரு ஊடக எந்திரமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரம், அவளது எதிர்கால நலன் கருது எழுபது விழுக்காடுகள் வெளியே வருவதே இல்லை. பெண்கள் இப்படித்தான் உடை அணியவேண்டும் எனில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்த படுவார்கள் என்று சொல்லி தரும் பெரியோர்கள், தங்கள் வீடு ஆண்கள் பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை சொல்லித் தருவது இல்லை.

நேற்று ஏழு வயது பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டிருக்கிறது. சென்ற வாரம் பதிமூன்று வயதுக்குட்பட்ட மூன்று சகோதரிகள், கற்பழிக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

பெண்கள் பயமில்லாமல் நடமாடும் ஒரு இந்தியாவை என்று உருவாக்கப் போகிறோம்? இந்த கேடு கேட்ட நிலைமைக்கு, நம் நாட்டின் ஊடகம் ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. பெரும் பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகள் எல்லாம், அரை குறை ஆடைகளுடன் பெண்களின் படங்களை வெளியிட்டு, மனதின் அடியே அமிழ்ந்து கிடக்கிற பாலுணர்வுகளை வெளியே கொண்டு வருகின்றன. இன்றைய திரைப்படங்களின் வசூலே பெண்களின் இடைகளிலும் தொப்புள்களிலும், மேலும் பல சாமாசாரங்களிலும் தான் இருக்கிறது.

தனக்கு கிடைக்காத பெண் வேறு எவனுக்கும் கிடைக்க கூடாது என தனது கதாநாயகனை விட்டே உலகத்துக்கு பாடம் சொல்லித் தருகிறது. காதல் மட்டுமே உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்றும் காதல் இல்லாவிட்டால் செத்து ஒழி என்றும் பாடம் புகட்டுவது திரைப்படங்கள் தான். பாலியல் வறட்சி நிறைந்த தேசத்தில், மனித அடிமன வக்கிரங்களை வெளியே கொண்டுவர, 'கலாச்சாரத்திற்காக' பாடுபட்டுக் கொண்டிருப்பதாக பீற்றிக் கொள்ளும் எழுத்தாளர்களுமே தங்கள் புத்தகம் விற்பதற்காக, அதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்தால் அடைந்துவிட கூடிய வெறியை ஒருவனுக்கு ஊட்டுவதற்கு அவனது பெற்றோர் தான் மிகப் பெரிய காரணமாக இருக்கிறார்கள். குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதற்காக ஓடி ஓடி வேலை செய்யும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கவனிக்க மறந்து அந்நியமாகிப் போக, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே அறியாமல் போக, குழந்தைகளோ, வளரும் பிராயத்தில் தங்களுக்குள் நடக்கும் ரசாயன உணர்வு மாற்றங்களை அறியாமல் குழம்பிப் பொய் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். கற்பு கற்பு என்று பிதற்றிக் கொண்டு, அதனை பெண்களுக்கு மட்டுமே பொதுவானதாக வைத்து விட்டு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால்,'யாரிடமும் சொல்லாதே மானம் பொய் விடும் ' என அவர்களை மிரட்டி, அவர்களது உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே அமிழ்த்தி புழுங்க வைத்து உயிரோடு ஒவ்வொரு நாளும் சாகடிக்கும் கொடுமை, பாலியல் பலாத்காரத்தை விட கொடுமை.

பாலியல் கல்வி, பள்ளிக்கூடங்களில் இருந்து தொடங்கட்டும். பெண்களை மதிக்க ஆண்களுக்கு, வீடுகள் கற்றுக் கொடுக்கட்டும். ஆண்களை சிறந்த பள்ளிகூடங்களிலும், பெண்களை மோசமான பள்ளிகூடங்களிலும் சேர்ப்பதை வேறுபாடு காட்டுவதை பெற்ற மனங்கள் உணரட்டும். பெற்றோர்களின் நேரம் தினமும் கொஞ்சம் தங்கள் குழந்தைகளுக்காகவும் இருக்கட்டும். இந்த தேசத்தை நம் குழந்தைகள் தான் காப்பாற்ற வேண்டும்.

1 comment:

தியாவின் பேனா said...

இது இந்திய நாட்டின் தொடர்கதை... அரசியல்வாதிகள் தான் முழுக் காரணம்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...