Thursday, March 12, 2009

தேர்தல் 2009மக்கள் அறிவாளிகளாகவும் அரசியல்வாதிகள் முட்டாள்களாகவும் மாறும் காலம் ஒன்று உண்டு என்றால் அது தேர்தல் நடக்கும் காலம் மட்டுமே.

அரசியல்வாதிகள் தங்கள் தொகுதிப் பக்கம் ஒதுங்கி தங்கள் முகங்கள் மக்கள் மறந்துவிடாமல் இருக்க தேர்தல் காலத்தில் மட்டுமே கை கூப்பியபடி எட்டிப் பார்ப்பார்கள். அவர்கள் போடும் கூழை கும்பிடை பார்த்தால், கோவில் வாசல்களில் ஆலய முற்றங்களில், பள்ளிவாசலின் வாசல்களின் 'அம்மா தாயே' என அழைக்கும் அந்த ஜீவன்களின் ஞாபகங்கள். அவர்களின் கும்பிடல் வயிற்றுக்காக...அரசியல் வாதிகளின் கும்பிடு வோட்டுக்காக.மக்களுக்கு வைக்கும் வேட்டுக்காக ....

இன்றைய அரசியல் காட்சிகளை நினைத்தால் எதோ மசாலா படம் பார்ப்பதை போல உணர்வு, நகைச்சுவை, சண்டை காட்சிகள், குடும்ப செண்டிமெண்ட், கண்ணீர் காட்சிகள் என கலவையான ஒரு திரைப்படம் தான் தேர்தல் 2009
தமிழக அரசியலில், இலங்கை தமிழருக்கு தனி ஈழம் அமைய அதிமுக போராடும் என ஜெயலலிதா உண்ணாவிரத பந்தலில் போட குண்டு இலங்கை ராணுவ குண்டை விட பயங்கரமாக வெடித்து கொண்டிருக்கிறது.

எம்ஜிஆர் இறந்து போனதுக்கு அப்புறம், இத்துணை நாள் இலங்கை தமிழருக்கு எதிராக பேசி வந்த ஜெயலலிதா திடீரென ஞான உதயம் வந்தது போல தமிழருக்கு தனி ஈழம் வேண்டுமென பேசி இருப்பது இந்த படத்தின் மிக சிறந்த நகைச்சுவை. அழுகிற குழந்தை கூட இந்த கூற்றை கண்டு சிரிக்க ஆரம்பித்து விடும். தேர்தலுக்காக கொள்கையை கூட மாற்றி கொள்ளும் கட்சிகள் கண்டு நகைப்பதா அழுவதா.


இவ்வளவு நாட்களும் சோனியாவின் கடைக்கண் பார்வை படாதா என ஏங்கி கிடந்தவர், அது தனக்கு கிட்டாது என தெரிந்ததும், தமிழக உணர்வாளர்களின் ஈழ தமிழ் சகோதரர்களின் சகோதரபாசம் அறிந்ததும், தலைகீழாக குப்பற அடித்த பல்டி தான் அவர் மேற்படியாக பேசி உள்ளது.
அடுத்து சகோதர பாசம். வைகோ, ஜெயலலிதாவை தனது கொள்கைக்கு ஆதரவாக மாற்றி விட்டது வேண்டுமானால் அவருக்கு கிடைத்த வெற்றியாக எண்ணி கொள்ளலாம். இருந்தாலும் எத்தனை தடை வந்தாலும் தனது விடுதலை புலிகளின் ஆதரவை அவர் விளக்கி கொள்ளவில்லை. ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருந்த போதிலும் அவர் தனது கொள்கைகளை விட்டுகொடுக்கவில்லை. அந்த வகையில் வைக்கோ பாராட்டுக்கு உரியவரே. இருந்தாலும் அவ்வப்போது அவர் கண்ணீர் விட்டு அழுவது... அவர் நிஜமாக அழுகிறாரா இல்லை நடிக்கிறாரா என்று குழப்பமாக இருக்கிறது. அவர் ஜெயலலிதாவை சகோதரி என விளிக்கும் போதெல்லாம் நகைப்பாக இருக்கிறது.


மருத்துவர் ராமதாஸ் என்ன தான் ஈழ மக்களிடம் பாசம் கொண்டிருந்தாலும், தனது மகனின் பதவி மீது அதைவிட மேலாக பாசம் வைத்துள்ளார். ஆளும் கட்சியான மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்கிறது என கூறினாலும் அதற்க்கு பதிலாக தனது மகனை பதவியை விட்டு ராஜினாமா செய்ய சொல்ல வில்லை.இன்னமும் பம்மிக்கொண்டு தான் இருக்கிறார். ஒருவேளை தேர்தலில் தோற்று தனது மகனின் பதவி காலியானால் வேண்டுமானால் ஈழ தமிழர்களின் மேல் அவரின் பாசம் போங்க கூடும். அவருக்கு வேண்டியதெல்லாம் தன் மகன் அன்புமணிக்கு மத்தியில் ஒரு பதவி. தனது சீடனான காடு வெட்டி குரு எவ்வளவு அட்டூழியம் செய்தாலும் அதை எல்லாம் கண்டுக்காமல் அவருக்கு ஒரு பதவி. அவ்வளவு தான். அதை தரும் கூட்டணி எங்கு இருந்தாலும் அதற்க்கு தாவ அவர் தயார். அவர் எப்போதும் ஒரே கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருந்தது கிடையாது.

திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்தின் நிலைமை தான் மிக மோசமாக இருக்கிறது. அவரது எழுச்சியை பார்த்து அட, திராவிட கழகங்களுக்கு மாற்றாக இந்த கட்சி நல்லதொரு கட்சியாக இருக்கும் போல இருக்கிறதே என நிமிர்ந்து உட்கார்ந்தால், அவர் பொது தேர்தலை மனதில் வைத்து, இலங்கை தமிழர் பிரச்னையை ஆதரிக்கலாமா வேண்டாமா, ஆதரித்தால் காங்கிரஸ் தன்னை கை விட்டு விடும் ஆதரிக்காவிட்டால் தமிழகம் தன்னை கை விட்டு விடும் என பதுங்கி கொண்டார். அவ்வபோது 'பொது தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என மக்கி போன முழக்கங்களுடன் பின் தங்கி விட்டார். பொது தேர்தலை தனியாக தன்னால் சந்திக்க முடியுமா என்ற பயம் அவருக்கு வந்து விட்டது. அவரிடம் முன்பு இருந்து வீரியம், திருமங்கலத்தில் டெபொசிட் இழந்ததும் காணாமல் போய் விட்டது.

திருமாவளவன் வீரம் சொரிய பேசுகிறார். எடுத்த கொள்கையில் உறுதியாக நிற்கிறார். அவர் அஞ்சி நான் கண்டதில்லை. எதற்காகவும் அவர் தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் அவரின் தொண்டர்களில் பலர் குண்டர்கள். வர் பந்த் ஏதாவது நடத்தி விட்டால் அரசு பேருந்துகள் தான் பாவம். குறைந்தது இருவது பேருந்துகள் பற்றி எரிகின்றன. முப்பது பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து தூள் தூளாகின்றன. இப்படிப்பட்டவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா? திருமாவளவன் தனது கட்சி தொண்டர்களை அடக்க வேண்டும்.அவர்களுக்காக பரிந்து பேசாது அவர்களின் தவறுகளை எடுத்துரைக்க வேண்டும்.


சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒன்று இருப்பதே சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் மட்டும் தான் தெரியும் என்பதால் அதனை விட்டு விடுவோம்.
தமிழக காங்கிரஸ், படத்தில் வில்லன் முகாமில் இரண்டு குரூப் கொண்டு ஒன்றை ஒன்று தாக்கி கொள்வது போல எப்போதும் முட்டலும் முனகலும் தான். தனியாக நிச்சயமாக காங்கிரஸ் தமிழகத்தில் வெல்ல முடியாததால் எப்போதும் அதற்கு ஒரு திராவிட கட்சியின் துணை தேவைப்படுகிறது. இப்போது ஈழத்து கல்லறைகளின் நிழல் படிந்து கறைபடிந்து பரிதாபமாக நிற்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் வென்றாலும் கூட தமிழகத்தில் மிக கடினமே. ஈழத்தமிழ சகோதரர்களின் இழப்புகளுக்கு, எப்போதோ நடந்து போன ராஜீவ் காந்தி என்ற தனி மனிதனின் கொலைக்கு ஒட்டு மொத்த ஈழ தமிழர்களை பழி வாங்கும் சமயமாக இதனை கருதுவதால், உணர்ச்சி மிக்க தமிழன் நிச்சயம் ஒட்டு போடா மாட்டான். இந்த நிலையை உணர்ந்து தனது கொள்கை மறந்து ஒட்டு வங்கியை அறுவடை செய்ய பார்க்கிறது அதிமுக.
கருணாநிதி இத்திரைப்படத்தின் சிறந்த குணசித்திர பாத்திரம். ஈழ தமிழர்களின் துயர் துடைக்க உயிர் துறக்க தயார் என்று காமெடி பண்ணுவதாகட்டும், அனைத்து எம்பிக்கள் ராஜினமா என வில்லத்தனம் பண்ணுவதாகட்டும், உடன்பிறப்பே உன்னை நெஞ்சில் சுமக்கிறேன் என கண்ணீர் வடிப்பதாகட்டும், அற்புதமான நடிப்பு.அவருக்கு அவருடைய குடும்பத்தில் உள்ள ஒன்று விட்ட சகோதரன் மகன், சகலையின் பேத்தியின் கணவனின் மூத்த சகோதரியின் பேத்தி என குடும்பத்தில் ஒருத்தர் விடாமல் ஏதாவது பதவியை கொடுத்து விட வேண்டும் என முனைப்புடன் திரியும் அவருக்கு ஈழத்தமிழன் செத்தால் என்ன, ஈழத்தமிழச்சிகள் கற்பழிக்கப்பட்டால் என்ன, தமிழ் நாடு எக்கேடு கேட்டால் என்ன தமிழன் எப்படி போனால் என்ன. அழகிரியின் மகளுக்கு பதவி கனிமொழிக்கு பதவி, இன்னும் உதயநிதியின் பய்யன் மட்டும் தான் பாக்கி. கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் வரலாறு காணாத வீழ்ச்சி இம்முறை தமிழகத்தில் இருக்க போகிறது எனவே நான் எண்ணுகிறேன்.

தமிழகத்தில் காங்கிரஸ் கவிழ்ந்தாலும், தேசிய அளவில் காங்கிரஸ்க்கே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மிக்க படித்த மன்மோகன் சிங்கும் ப சிதம்பரமும் மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை பெற்றிருக்கிறார்கள். ப ஜ க விற்கு இருக்கும் கூட்டணிகள் எல்லாம் பிரிந்து போக அது மேலும் காங்கிரசுக்கு பலம் சேர்க்கிறது. வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது அதற்க்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாகி இருக்கிறது. முலாயம் சிங்கும் மனது வைத்தால் காங்கிரசை வீழ்த்துவது கடினம். எனினும் மத்தியில் அமரபோகும் கட்சியை நிர்ணயிக்க போவது தமிழனின் ஒட்டு தான்.
இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

1 comment:

ஹேமா said...

முகிலன்,இது அரசியல்.
வேண்டாம்.

பல காலத்திற்குப் பிறகு தொடர் எழுதப்போறீங்க.நீங்கள் நிறையப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ளவர் என்றபடியால்தான் நான் தொடருக்கு அழைத்திருந்தேன்.இனி அந்த வாயப்பும் சந்தர்ப்பமும் எங்களுக்கு.ஆவலோடு பார்த்திருக்கிறேன் தொடரை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...