Wednesday, July 7, 2010

ஒரு இந்தியப் பயணம் -3

                          பெங்களூரு விமான நிலையத்தின் வெளிப்புற தோற்றம்.

 'அண்ணா நீங்க தமிழா?' கேட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கும். சாயம் போன சுடிதாரை அணிந்திருந்தாள். மிகவும் ஒல்லியாக இருந்தாள். என்னையும் என் கையில் இருந்த 'சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு' புத்தகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

' ஆமாம்மா' என நான் சொன்னதும் உடனே என் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து...
'அண்ணா நான் ராமநாதபுரம் பக்கத்துல காளையார் கோயில் பக்கம் போகணும். எனக்கு உதவி செய்விங்களா?'

அந்தப்பெண் வள்ளி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவள். வீடு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏஜண்டுகள் மூலம் அனுப்பப் பட்டுள்ளவள். மாடு மாதிரி உழைத்திருக்கிறாள். அவளது சம்பளம் ஏஜண்டுகளுக்கு நேரடியாக போய்விடும். அவர்கள் பாதி பணத்தை அம்முக்கி கொண்டு மிச்சத்தை அவளது வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். சமீபமாக இவளுக்கு உடல் நலம் குன்றி பொய் உள்ளது. ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்திருக்கிறாள். அதற்கும் மேல் தங்களுக்கு இவள் உதவிட மாட்டாள் என உணர்ந்து அவளுக்கு ப்ளைட் டிக்கெட் எடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

அவள் அப்படி கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சென்னைக்கு அவளது மாமா வருவதாக சொல்லி இருப்பதாக கூறினாள். அவளது பாரங்களை நானே எழுதி அவளது டிக்கெட் வாங்கி பரிசோதித்து அவளை அவள் கிளம்ப இருக்கும் விமான நிலையத்தின் கேட் வரை சென்று விட்டு வந்தேன். நான் பெங்களூரு சென்று சென்னை செல்ல இருப்பதால், சென்னையில் நான் தாங்கும் இடத்தின் தொலை பேசி என்னையும் கொடுத்து, ஏதாவது தேவையென்றால் அழைக்கும் படி சொல்லிவிட்டு வந்தேன். எனக்கும் முன்னே, அவளது விமானம் புறப்பட்டு விட்டது. கண்களில் நன்றியோடு எனக்கு டாடா காட்டிவிட்டு சென்றாள்.

தோஹாவிலிருந்து பெங்களூரு செல்லும் விமானம் சிறியதாக இருந்தது. அமெரிக்காவில் உள்நாட்டில் பறக்கும் விமானங்களை போல இருந்தது. நாலரை மணி நேரப்பயணம் பெரும்பாலும் என் உறக்கத்திலேயேகழிந்தது.
மறுநாள் காலை நான் மூன்று மணி அளவில் நான் பெங்களூரு சென்று அடைந்த பொது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அது வேறொன்றுமில்லை, பெங்களூரு விமான நிலையம் தான்.

அதன் பிரம்மாண்டமும் அழகும் தான் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் என பறை சாற்றிக் கொண்டிருந்தது. எங்கும் கண்ணாடி, நம் முகம் தெரியும் பளிங்குத் தரைகள். பளிச்சிடும் மின் விளக்குகள் என... ' நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா என எண்ண வைத்தது.'

                       பெங்களூரு விமான நிலையத்தின் உட்புறத்  தோற்றம்.

எனினும் குடியுரிமை அதிகாரி என் முகத்தை கூட பார்க்கவில்லை, ஒரு புன்னகை சிந்தவில்லை,கடமையாக பச்ச்போர்டை பார்த்து சீல் குத்தி விட்டு 'நெக்ஸ்ட்' என்றார்.

விமானநிலையத்தின் ஒவ்வொரு இடத்திலும் பணக்காரத்தனம் தெரிந்தது. உள்ளே இன்டர்நெட் வசதியும் உள்ளது. வயர்லெஸ் இன்டர்நெட் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அங்கிருந்த தகவல் அளிக்கும் மையத்தில் சொன்னார் அங்கு கோட் போட்டு டை கட்டி அமர்ந்திருந்தவர். அவர் சிநேகமாக சிரித்தபடிஉதவினார்.
 
 அங்கேயே ஒரு காபியை அருந்தியபடி ( ஒரு காபி நூற்றி அறுபது ரூபாய். காபி டே என்ற கடையில்.) எனது சென்னை விமான டிக்கெட் மற்றும் நேரத்தை உறுதி செய்தபின் டொமெஸ்டிக் விமான நிலையத்திற்கு நடந்தேன். டொமெஸ்டிக் மற்றும் இன்டர்நேஷனல் இரண்டும் உள்ளுக்குள்ளேயே இருக்கிறது. பாதகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருந்தன. கிங் பிஷர் ஏர்லைன்ஸில் சென்னை சென்று இறங்கியதும், சென்னை விமான நிலையம், தான் இன்னும் மாறவில்லை என சொன்னது. பெங்களூர் விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்திற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள தூரம். சென்னையில் புதிதாக விமான நிலையம் அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பல நாடு பயணிகள் மற்றும் பல நாடு விமானங்கள் வந்து போகும் விமான வலை சென்னைக்கு இருப்பதால், விமான நிலையம் மேம்படுத்தப் படுவது அவசியமாகிறது.

சென்னையில் நான் நான்கு நாட்கள் தங்கி இருந்தேன். தோஹாவில் நான் சந்தித்த வள்ளியை சுற்றியே என் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவள் தொலைபேசி அழைத்தால், அவளை எப்படியாவது ராமநாதபுரத்தில் இருக்கும் அவளது குக்கிராமத்தில் பாதுகாப்பாக சேர்த்து விட வேண்டுமே என எண்ணியபடி இருந்தேன். அவளை பற்றி என்னை சென்னைக்கு வரவேற்க வந்த என் மனைவி இடமும் சொல்ல அவளும் பதைபதைத்தபடி காத்திருந்தாள்.
அந்த நான்கு நாட்களில் வள்ளியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரவே இல்லை.

(--பயணம் தொடரும்)
--

3 comments:

Wilson said...

Nice narration

வடுவூர் குமார் said...

அட‌!பாவ‌மே,என்னாச்சோ?

ராஜசுப்ரமணியன் S said...

சமீப காலத்தில் டெல்லி விமான நிலையத்தின் 3வது டெர்மினல்,மிகப் பிரமாண்டமாகவும் உலகத்தரம் வாய்ந்ததாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் ராமனாதபுரத்து வள்ளி களுக்கு அரசாங்கம் என்னசெய்திருக்கிறாது?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...