Monday, November 16, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே...!


'ஆனந்த சுதந்திரம்... அடைந்து விட்டோம்...'
பாரதீ....!
நீ கண்ட கனவு
இன்னும் எங்களுக்கு கனவாகவே....

'நெஞ்சு பொறுக்குதில்லையே..
இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்துவிட்டால்...'
அன்றே தெரிந்துவிட்டது உனக்கு...
எங்களுக்கு...
இப்போது தான் புரியவே ஆரம்பித்திருக்கிறது.

புதுமை பெண்களை
படைக்கக் கோரினாய்...
புதிதாக பிறக்க கூட
நம் தேசத்து மன்னர்கள்
விட்டுவைப்பதில்லை.

ஜனிக்கும் கருப்பைகளே..
என் புதுமை பெண்களுக்கு...
கல்லறைகள்.

ஸ்கேனில் தப்பி விட்டால்...
இவர்கள்
முதலில் குடிப்பது
தாயின் முலைப்பாலை அல்ல...
கள்ளிச் செடியின் காம்புப் பாலை..

'தனி ஒருவனுக்கு உணவில்லையேல்..
ஜகத்தினை அழித்திடுவோம்...'
இங்கு ஜகமே தவிக்கிறது..
எதனை அழிப்பது?

'சாதி சண்டைகள் போச்சோ..சமய சண்டைகள் போச்சோ..'
எப்படி பாரதீ?
எங்கள் அரசியல்வாதிகளின் ஒட்டு வங்கியே
அதில் தானே இருக்கிறது?

எங்கள் அரசியல் வாதிகளின்
ஆதர்சன சத்தியகள் எல்லாம்..
அரியணை ஏறியதும்
ஆணி அடிக்கப்படும்.

எங்கள் தலைகள்
அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது
உலக வங்கியில்.

உன் புரட்சி உணர்வுகள்..
எங்கள் இளைஞர்களின் இதயங்களில்
புலரவே இல்லை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு
திட்டங்கள் தீட்டவேண்டியவர்கள்
பட்டங்களை சுமந்து கொண்டு
வீதிகளில்...
வேலைக்காய்....

'சிங்கள தீவினிற்கு ஒரு பாலம் அமைப்போம்'
அதனை செயல்பட துணிந்ததால்...
எங்களுக்கு கிட்டியது
பாலமல்ல..
மரண ஓலம்.

எங்கள் தேசத்தின் கால்களே
நசுக்கி போட்டது
எங்கள் தொப்புள் கோடி சொந்தங்களை...

இப்போதைக்கு
நம் பாரதத்துக்கு வேண்டியதெல்லாம்
ஒரு நல்ல தலைவன்.

பாரதீ..
மீண்டும்
இம்மண்ணில் பிறந்து விடு.
இறந்து கொண்டிருக்கும் இந்தியாவிற்கு
உயிர் கொடு.
உணர்வுகளை தொலைத்துகொண்டிருக்கும்
எம் நாட்டு இளைஞர்களை
உன் கவிதைகளால் உரமேற்று.
உன் மூலம்
நம் தேசம்...
ஒரு
புதிய விடியலை காணட்டும்.....

--மகா கவியின் நூற்றி இருபத்தி ஏழாம் பிறந்த தினத்தை முன்னிட்டு....

-நிலா முகிலன்.
-----

4 comments:

கலையரசன் said...

என் மனதில் உள்ள... விளக்க நினைத்த... விஷயம்! அருமையாய் சொல்லியிருக்கிறார்,, !!

jgmlanka said...

//'சிங்கள தீவினிற்கு ஒரு பாலம் அமைப்போம்'
அதனை செயல்பட துணிந்ததால்...
எங்களுக்கு கிட்டியது
பாலமல்ல..
மரண ஓலம்.

எங்கள் தேசத்தின் கால்களே
நசுக்கி போட்டது
எங்கள் தொப்புள் கோடி சொந்தங்களை...//

வலிமையான வார்த்தைகள்... ஆழமான கருத்துக்கள்...
தொடர வாழ்த்துக்கள்

NILAMUKILAN said...

இந்தியனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள்,
எனக்கு தோன்றியதை கேட்டிருக்கிறேன். நன்றி கலையரசன்.

NILAMUKILAN said...

நன்றி பூங்கோதை. தொடர முயல்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...