Wednesday, November 4, 2009

முக்தர் மயி - ஒரு பழங்குடிப் பெண் போராளி.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மலை கிராமம் மீர்வாலா. மச்தோய் பலோச் என்ற பழங்குடியினர் அதிகமாக வாழும் கிராமம். 2002 ஆம் வருடம். தனது பதினாலு வயது தம்பி எதிரி குடியினரின் பெண்ணுடன் சுத்துவதாக கிளம்பிய வதந்தியால் பஞ்சாயத்து கூடப்படுவதை கண்டு மனம் பதை பதைத்து பஞ்சாயத்துக் கூடத்துக்கு ஓடி வருகிறாள் அந்த முப்பது வயதுப்பெண் முக்தர் மாய். தன தம்பி ஒரு பாவமும் அறியாதவன் என்றும் அவனை விட்டு விடுமாறும் பஞ்சாயத்தினர் முன் கெஞ்சி கதறி அழுகிறாள். பஞ்சாயத்தினரோ,
'உனது தம்பி நமது குடிக்கு கேடு விளைவித்துவிட்டான். அவனை மன்னிக்கவேண்டுமென்றால் நீ அதற்க்கு பரிகாரம் செய்யவேண்டும் செய்வாயா?' என கேட்கிறது.

தனது தம்பி மேலுள்ள பாசத்தினால் வரப்போகும் ஆபத்தை அறியாத அந்த அபலைப் பெண் சரி என்பதாக தலையை ஆடுகிறாள். பஞ்சாயத்தினர் நிரூபிக்கப்படாத அந்த வதந்திக்கு அந்த அதிர்ச்சியான அபாயமான அதிரடியான தீர்ப்பை வழங்குகிறார்கள்.

'இந்த பெண்ணின் சகோதரன் தனது நடத்தையினால் நமது குடிக்கு அபகீர்த்தி விளைவித்துவிட்டான். இந்த பெண்ணின் வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ஒரு ஞாயமான தீர்ப்பை வழங்குகிறது. இந்த பெண்ணின் சகோதரனால் நம் குடிக்கு ஏற்ப்பட்ட அவமானம் மொத்தமும் இந்த குடும்பத்துக்கே செரக்கடவது எனவே நம் குடியில் உள்ள நால்வர் இந்த பெண்ணை நம் கிராமத்து மக்கள் அனைவரின் முன்னிலையில் வன்புணர்ச்சி செய்யவேண்டும். அதன் பின்னர் இந்த குடும்பத்தினர் அனைவரும் அதனை நினைத்து நினைத்து வெட்கி வாழ்நாள் முழுதும் வாழவேண்டும்.'

இதை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண்ணின் தந்தை பஞ்சாயத்தின் முன் கீழே விழுந்து அழுது புரள்கிறான். அவனை உதாசீனப்படுத்திவிட்டு கிராமத்தின் முன்னிலையில் அந்த அக்கிரமம் அந்த பெண்ணின் கதறலில் அரங்கேறுகிறது. ஒட்டு மொத்த கிராமமும் அந்த அட்டூழியத்தை கண்டு அமைதியாக இருக்கிறது. அந்த நால்வரும் அந்த பெண்ணை சின்னாபின்னாபடுத்தி போடுகிறார்கள். கந்தலாக கிடந்த அந்த பெண்ணை அவளது தந்தை தன பெண்ணின் நிலையை எண்ணி கதறியபடி ஒரு ஆடையை கொண்டு போர்த்தி வீட்டுக்கு தூக்கி போகிறான்.

தனக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணி எண்ணி முக்தர் அழுது தற்கொலைக்கு முயன்று தோற்க்கிறாள். அவள் தனது குடும்பத்தின் துணையோடும் நண்பர்களின் ஆதரவுடனும் உடல் நிலையிலும் மன வலிமையிலும் தேர்ச்சி பெறுகிறாள். அவளுடைய பால்ய தோழிகளான நஸ்ரீன் அக்தர்,நசீம் அக்பர் மற்றும் ஜமில் அஞ்சும் அவளுக்கு உறுதுணையாக இருந்து தோள் கொடுக்க ஒரு இஸ்லாமிய இமாமின் துணை கொண்டு காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த அநீதியை அரக்க செயலை புகாராக கொடுக்கிறாள். அந்த புகார் முதலில் ஏற்றுக் கொள்ள படவில்லை. தான் கற்பழிக்கப்பட்டவள் என வெளிப்படுத்திக்கொள்ள எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டாள் என்கிற தைரியத்தில் அவளது கிராமத்து பஞ்சாயத்து மனிதர்கள் இருக்க, தனது தோழர்களுடன் அந்த இஸ்லாமிய இமாமின் உதவியுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை ஊடகங்களின் வாயிலாக உலகுக்கு தெரிவிக்கிறாள்.

இந்த அநீதி உலகெங்கும் பறைசாற்றப்பட, பாகிஸ்தானின் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு அவளுக்கு தண்டனை அளித்த கொடியவர்கள் கைது செய்யபடுகிறார்கள். நீதி மன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் மகிழ்வடைந்த முக்தர் இப்படி சொல்கிறாள்.
'இது எனக்கு உண்டான தீர்ப்பு அல்ல. இது போன்ற தீர்ப்பு எழுதும் பஞ்சாயத்தருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு. கல்வி அறிவும் உலக அறிவும் இல்லாத பெண்களை கொடுமை செய்யும் உலகத்தினருக்கு எதிரான தீர்ப்பு'
என முழங்கினாள்

அவளுக்கு அரசாங்கத்தின் பேரில் நாலு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இஸ்லாமாபாத்தின் முக்கிய இடத்தில் முக்தர் தன குடும்பத்துடன் வசிக்க ஒரு பெரிய வீடும் கொடுக்கப்பட்டது. அதனை மறுத்துவிட்ட முக்தர், அரசு தனக்கு அளித்த நாலு லட்சத்தில் தனது கிராமமான மீர்வாலாவில் பெண்களுக்கான பள்ளி ஒன்றை துவக்கினாள்.அவளும் அவளது தோழிகளும் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகளை எடுக்க துவங்கினார்கள். சமுதாயத்தைச் எதிர்கொள்ளும் பக்குவம் அங்கு பெண்களுக்கு போதிக்க படுகிறது.
தானும் ஒரு மாணவியாய் அந்த பள்ளியில் கல்வி கற்றார் முக்தர். தனது பள்ளியில் மற்ற மாணவியரோடு தானும் மாணவியாய்....

அறியாமையே பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு காரணம் என்பது முக்தர் மயி யின் முழக்கம். அந்த அறியாமை இருளை இன்றைய இளம்பெண்களிடம் இருந்து அகற்றவே அவர் பள்ளிகள் துவங்கி உள்ளார்.
உலகம் முழுதும் அவர் வரவேற்கப்படுகிறார். பல விருதுகள் அவரை தேடி வருகிறது.
அவற்றில் சில.

ஆகஸ்ட் 2 2005 பாகிஸ்தான் அரசாங்கத்தின் வீர தீர செயல்களுக்கான பாத்திமா ஜின்னா தங்க பதக்கம்.
நவம்பர் 2 2005 அமெரிக்க இதழான கிளாமர் 'இந்த வருடத்தின் சிறந்த பெண்' (woman of the year) என கெளரவம்.
ஜனவரி 2006 - அவரது கதை ஜெர்மனி இல ஜேர்மன் மொழியில் மற்றும் பாரிசிலிருந்து ப்ரென்ச் மொழியிலும் புத்தகமாக வெளி வந்தது. அதனை வெளியிட அவர் பாரிசுக்கு அழைக்கப்பட்டு அரசாங்க மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.
2 மே 2006 இல நியூ யோர்க்கின் ஐ நா சபையில் அவர் பேட்டி காணப்பட்டு அது ஒளிபரப்பானது. அவர் அங்கு சொன்னது..'தனது நீதிக்காகவும் தனது அடுத்த தலைமுறையின் நீதிக்காகவும் தான் பாடு பட போவதாக சொன்னார்'
மார்ச் 2007 இல வடக்கு தெற்கு விருது ஐரோப்பா ஒன்றியத்தால் வழங்கப்பட்டது.

பெண் இன கொடுமைகளால் மனம் புழுங்கி உள்ளுக்குள்ளேயே தவித்திருக்கும் பெண்களுக்கு மத்தியில் முக்தர் மயி ஒரு எடுத்துக்காட்டு. அவரது கல்வி பணி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி. தகவல் உதவி விக்கிபீடியா

6 comments:

ஹேமா said...

பெண்களுக்கு ஒரு உற்சாக மருந்துபோல ஒரு கதை.அருமை.
நம்பிக்கையையோடும் துணிவோடும் ஒரு பெண்.

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

//பெண் இன கொடுமைகளால் மனம் புழுங்கி உள்ளுக்குள்ளேயே தவித்திருக்கும் பெண்களுக்கு மத்தியில் முக்தர் மயி ஒரு எடுத்துக்காட்டு. அவரது கல்வி பணி தொடர வாழ்த்துக்கள்.//

இந்த செய்தியை பதிவு செய்த உங்களுக்கும் வாழ்த்துகள்!

நிலா முகிலன் said...

நன்றி ஹேமா. எதிர்காலத்தை நினைத்து பெண்கள் பேசாமல் இருந்துவிடுவதால் தான் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தலை தூக்குகின்றன.

நிலா முகிலன் said...

நன்றி சுந்தர ராஜன்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

பெண்களுக்கு மட்டுமல்ல வாழ்க்கை முன் வைக்கும் சகல சவால்களையும் தீரத்துடன் எதிர்கொள்ளும் எல்லோருக்கும் முக்தர் மயி ஒரு நேர்மறையான அகதூண்டல்.
இடுகைக்கு நன்றி நிலா முகிலன்.

ரோஸ்விக் said...

வாழ்த்த மட்டுமல்ல.... வணங்கப்பட வேண்டியவள் இவள். பகிர்விற்கு நன்றி நண்பரே!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...