Monday, March 22, 2010

இருக்கை...!



மழையில்,
மனித வியர்வையில்,
குழந்தையின் கிறுக்கல்களில்..
கலவரத்தில் முத்தமிட்ட கத்தியில்...
காதலனை பார்க்கும் அவசரத்தில்...
பூச்சு தீட்டப்பட்ட பெண்ணின் நகங்களில்...,
மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த வன்முறையில்...
நைந்தும் பிய்ந்தும் போன..
இருக்கை...

நிர்வாணம் மறைக்க...
அவ்வப்போது ..
புத்தகம்,
கைக்குட்டை..
சிறு குழந்தை..
காய்கறி கூடை..
பைக்கட்டு என..
இடம் பிடிக்க நிகழும்...
ஆடை அணிவிப்புகள்..

பிச்சைகாரன்,
அம்மாவை தொலைத்த குழந்தை...
பாலியல் தொழிலாளி,
மதம் மறுப்பவன் ,
சாமியார்கள்,
காதலர்கள்...
திருடன்,
வைத்தியன்...
பார்வை தொலைத்தவன்...
வேலை இல்லாதவன்...
கால்களை இழந்தவன்...
என..
எவனுக்கும் பகிரப்படும் இடம்...

இரவின் மடியில்...
சாய்ந்து கொள்ள தோளும்..
காயாத கண்ணீரை...
துடைத்துக் கொள்ள மடியுமாய்...
மாணவர்கள் தாளம் போடும்...
இசை கருவியாய்...
அஜீரண குழந்தையின்
வாந்தியையும் மலத்தையும் ஏந்தி கொள்ளும்
ஏந்தலாய்...

என்னையும் தாங்கிக்கொள்ள...
சிரித்தபடி வரவேற்றது...
அரசு பேருந்தின்...
சன்னலோர... இருக்கை....
---

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...