முன்பெல்லாம்... தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்தவுடன், மலையாள மற்றும் வங்காள மொழி திரைப்படங்களே வரிசை கட்டி விருது பட்டியலில் முதன்மையான இடங்களை பிடித்திருக்கும். இப்போது.. தமிழ் படங்களை காபி அடித்து கமெர்சியல் ஐட்டங்களை புகுத்தி, அரை வேக்காடு திரைப்படங்கள் தான் மலையாளத்தில் வெளி வருகின்றன.
இத்தகைய திரைப்படங்களுக்கு மத்தியில் ப்ளஸ்சியின் திரைப்படங்கள்..வேறுபட்ட கதைக் களங்களுடன் தனித்து நிற்கின்றன. இவரது படங்களில் மனித நேய தாக்கங்கள் நிறைந்து இருக்கும். இவரது படங்களான காழ்ச்சா, தன்மாத்ரா போன்ற படங்கள் இதுவரை வெளிவராத கதைகளை சொல்லியது. அந்த வரிசையில் வந்திருக்கும் திரைப்படம் தான் ப்ரம்மரம்.
செய்யாத தவறுக்கு தண்டனையுரும் ஒருவனின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப் படுகிறது என்பது தான் கதை. படம் பார்த்ததும், ' நமக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால்...?'. என நினைத்து பயமாக இருந்தது. அதுவே படத்தின் வெற்றி எனக் கருதுகிறேன்.
ஜோஸ் என்கிற மோகன்லால் கோவையில் ஒரு வெற்றிகரமான பங்கு சந்தை புலியான தனது பள்ளியில் பயின்ற சகமாணவன் உன்னியை தேடி வருகிறான். தன்னை ஜோஸ் என்றும் பள்ளியில் ஆறாவது வகுப்பில் (எந்த வகுப்பு என மறந்து விட்டது) ஒன்றாக படித்ததாகவும் சொல்லி அன்று நடந்த நிகழ்வுகளை சொல்லி தனது நண்பனுக்கு ஞாபகப் படுத்துகிறான். உன்னிக்கும் அவன் தனது பழைய பள்ளி தோழன் என நினைவு வந்துவிட்டது. உன்னியின் மகளுடன் ( அந்த சிறுமியிடம் அபார நடிப்புத் திறமை.) உடனே ஒன்றி விடுகிறான் ஜோஸ்.
கோவையில் டாக்டராக இருக்கும் தனது இன்னொரு பள்ளி தோழனான அலெக்ஸ் வர்கீசுடன் இதனை பகிர்ந்து கொள்கிறான் உன்னி. பலவாறாக நினைத்து பார்க்கும் அலெக்ஸ், ஜோஸ் என்னும் ஒருவன் தம்முடன் படிக்கவே இல்லை என்றும் அவன் சிவன் குட்டி யாக இருக்க கூடும் என்றும் கூற, உன்னி ஜோசிடம் எகிற... ஜோஸ் தான் சிவன் குட்டி தான் என கூற... நம்மை பதற வைக்கிறது, சிவன் குட்டி கூறும் பிளாஷ் பாக்.
எதிர்பாராத திருப்பங்களுடன், எந்த ஒரு மசாலா ஐட்டமும் சேர்க்காது சிவன் குட்டி இன் மர்மங்களின் முடிச்சை ஒவ்வொன்றாக அவிழ்த்து எதிர்பார்க்காத கிளைமாக்சில் கலங்க வைத்து அப்ளாசை அள்ளுகிறார் ப்ளஸ்சி.
படத்தின் முதுகெலும்பு மோகன்லாலின் அசர வைக்கும் நடிப்பு. கோவம் கொண்டு உறுமுவதும் சட்டென கண் கலங்குவதுமாக ருத்ரதாண்டவம் ஆடி இருக்கிறார். இவரின் நடிப்புக்கு இந்த வருடம் தேசிய விருது கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே.
படத்தின் பின்னணியில் திகிலூட்டும் மோகன் சிதாராவின் இசையில், 'அன்னார கண்ணா வா' பாடல், சுகமான தாலாட்டு.
'அன்னாரக் கண்ணா வா' பாடலின் காணொளி.
அஜயன் விசெண்டின் ஒளிப்பதிவு படத்தின் மூடுக்கு ஏற்ப கன கச்சிதம்.
படத்தில் உள்ள ஒரே குறை, இரண்டாம் பகுதியில், தனது நண்பர்களை தனது வீட்டிற்க்கு மோகன்லால் கூட்டி செல்லும் பகுதி ரொம்ப நீளமாக தோன்றுவதால்.. அங்கே தொய்வு விழுகிறது.
மற்றபடி வரவேற்க தக்க மாற்று சினிமா 'ப்ரம்மரம்'
நிச்சயம் படம் பார்த்த பின் ஒரு இரண்டு நாட்களாவது உங்களை இந்த படம் தூங்க விடாது.
ப்ரம்மரம்- விறு விறு பம்பரம்...
--
6 comments:
நல்ல விமர்சனம் ..டைம் கிடச்சா பார்க்கலாம்
நல்ல விமர்சனம் மச்சான்...இந்த படத்தோட போஸ்டரை தினமும் பார்க்கிறேன்...இப்ப விமர்சனம் படித்தவுடன் படத்தை உடனே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.
பகிர்விற்கு நன்றி!!
நன்றி கிருஷ்ணா. நிச்சயம் பாருங்க.
நன்றி சிவன்.மலையாள படம் போஸ்டர் பாக்கறத இன்னும் விடலை போல இருக்கு ;) சும்மா தமாசு.
நன்றி பனித்துளி சங்கர்.
Post a Comment