Monday, December 7, 2009

உலக சினிமா: சென்ட்ரல் ஸ்டேஷன் (பிரேசில்)

ஐம்பதுகளில் இருக்கும் ஒரு கள்ளப் பெண்மணி, பதினோரு வயது சிறுவன், இவர்கள் இருவரின் பயணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான திரைப்படம் அளிக்கமுடியுமா? முடியும் என நிரூபித்திருக்கிறார், எனது மதிப்புக்குரிய இயக்குனர்களில் ஒருவரான பிரேசிலிய இயக்குனர் வால்ட்டர் சல்லஸ். அந்த திரைப்படம் தான் சென்ட்ரல் ஸ்டேஷன். சிறிது சிறிதாக படத்தினுள் நாம் இழுக்கப்பட்டு, டோரா மற்றும் ஜோஷுவா ஆகியோருடன் நாமும் பிரேசிலிய கிராமங்களில் பயணம் சென்று வந்த உணர்வு.

ஐம்பதுகளில் இருக்கும் டோரா தான் படத்தின் நாயகி. சிறுவயதில் தனக்கு நேர்ந்த அவமானங்களில் மனம் வெறுத்து தனது குடும்பத்தை பிரிந்து பிரேசிலின் தலை நகரான ரியோ தே ஜெனிரோவில் தனது தோழியுடன் வாழ்கிறாள். அவளுக்கு வேலை? ரியோவின் சென்ட்ரல் ஸ்டேஷன் இல் ஒரு பெஞ்சை போட்டு எழுத படிக்க தெரியாத மக்களுக்கு கடிதம் எழுதும் வேலை. ஒரு கடிதம் எழுத ஒரு பிரசிலிய ரியல். அதனை தபால் பெட்டியில் சேர்க்க ஒரு ரியல். என அவளது வாழ்க்கை ஓடுகிறது. பலரும் வந்து அவளிடம் கடிதம் எழுதி காசும் தருகிறார்கள். எல்லாவற்றையும் எழுதி தனது வீடு கொண்டு வந்து அவர்கள் எழுத சொன்னதை தனது தோழி ஐரீனுக்கு படித்துக்காட்டி இருவரும் சிரிக்கிறார்கள். பின்னர் பல கடிதங்களை கிழித்து போடுகிறாள். சில கடிதங்களை மட்டும் தனது மேசை டிராயரில்வைத்துக்கொள்கிறாள்.

ஒரு நாள் அனா என்ற ஒரு பெண்மணி சென்ட்ரல் ஸ்டேஷன் இல் தனது பதினோரு வயது மகனான ஜோஷுவாவை டோராவிடம் அழைத்து வருகிறாள். ஜோஷுவாவை பார்த்தவுடன் டோராவிற்கு பிடிக்காமல் போகிறது. அவனுக்கும். அவன் தனது பம்பரத்தை வைத்து டோராவின் மேசையை குடைகிறான். அவளோ அவனை அடிக்க கையை ஓங்கி விரட்டி விடுகிறாள். அனா தனது கணவனுக்கு டோராவை கடிதம் எழுத சொல்கிறாள். ஜோஷுவா நன்றாக வளர்ந்து விட்டான் என சொல்லி அவளது முகவரியை கூறி சந்திக்க வருமாறு அக்கடிதத்தில் எழுதுமாறு டோராவை கேட்க அவளும் அவ்வாறே எழுத ஜோஷுவாவின் புகைப்படமும் அக்கடிதத்துடன் இணைத்து அனுப்ப கோருகிறாள். அப்படியே செய்வதாக கூறி அவளிடம் பணம் வாங்கிகொண்டு தனது கடிதங்களில் ஒன்றாக வைத்துக்கொள்கிறாள் டோரா. 'இவள் கடிதம் எழுதுகிறாள் அனால் அதனை அவள் தபால் பெட்டியில் போடுவாள் என்பது என்ன நிச்சயம்?' என கேட்கிறான் ஜோஷுவா. அதனாலேயே டோராவிற்கு அவனை பிடிக்காமல் போய்விடுகிறது.

கடிதம் எழுதிவிட்டு சென்ட்ரல் ஸ்டேஷன் ஐ விட்டு வெளியே வந்து சாலையை கடக்க எத்தனிக்கையில் கட்டுக்கடங்காத வேகத்தில் வரும் ஒரு பஸ் மோதி, அதே இடத்தில் இறந்து போக, அந்த ஒரே ஒரு நொடியில் அநாதை ஆகிறான்ஜோஷுவா.
அவனுக்கு இப்போது உலகத்தில் தெரிந்த ஒரே முகம், டோரா. அவளிடம் வந்து கண்களில் நீர் வழிய தன தாய் எழுதிய கடிதத்தில் தனது தந்தையின் முகவரி இருக்கும் என்றும் அதனை தனக்கு தரவும் வேண்டுகிறான். டோரா அவன் மேல் உள்ள கடுப்பில் தர மறுத்து விட்டு வீடு சென்று விடுகிறாள். அவனது இரவு அன்று அந்த ரயில் நிலையத்தில் கழிகிறது. மறுநாள் வழக்கம் போல ஸ்டேஷன் வரும் டோரா, அங்கு படுத்திருக்கும் ஜோஷுவாவை கண்டு மனம் இறங்கி, அவனுக்கு உணவு வாங்கி தருகிறாள். அதனை அவன் மறுத்து விடுகிறான். அப்போது அந்த ஸ்டேஷன் இல் கடை வைத்துள்ள ஒருவன் ஜோஷுவாவை நெருங்க, அவனை வழி மரிக்கும் டோரா, அவன் தனக்கு வேண்டப்பட்ட பையன் என கூறியதும் அவளை தனியே அழைத்துப் போய் பேசுகிறான். திரும்பி வந்த டோரா, ஜோஷுவவிடம் பரிவுடன் பேசி அவனை தனது வீடு அழைத்து சென்று சாப்பாடு கொடுத்து தனது தோழிக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாள். சிறுவனின் சூட்டிப்பைக் கண்டு டோராவின் தோழி ஐரீனுக்கு அவனை மிகவும் பிடித்து விடுகிறது. அன்று இரவு ஜோஷுவாவுக்கு டோராவின் வீட்டில் கழிகிறது.

காலையில் ஜோஷுவாவை தூரமாக இருக்கும் ஒரு இடத்திருக்கு கூடி சென்று ஒரு குடும்பத்திடம் அவனை ஒப்படைக்கிறாள் டோரா. இனி உனக்கு நல்ல காலம் பிறக்க போகிறது என்று சொல்லி அந்த குடும்பத்தாரிடம் 2000 ரியால் வாங்கிகொண்டு, ஸ்டேஷன் இல் இருந்தவுடன் ஆளுக்கு ஆயிரம் என பங்கு போடு கொண்டு வீட்டிற்கு ஒரு புது டிவி வாங்கி வருகிறாள். மாலையில் ஐரீன் டோராவிடம் ஜோசுவாவை பற்றி விசாரிக்க, அவன் வெளிநாட்டுக்கு தத்து கொடுக்கும் ஒரு குடும்பத்திடம் விட்டு விட்டதாகவும் அவனை ஐரோப்பியாவில் இருந்தோ அமெரிக்காவில் இருந்தோ பெரும் செல்வந்தர்கள் தத்தெடுத்துக் கொள்வார்கள் என்றும் சொல்ல... அவர்கள் குழந்தைகளை கொன்று அவர்களது உறுப்புகளை எடுத்து விற்கும் கூட்டம் என ஐரீன் சொல்கிறாள். தனது தவறை உணர்ந்த டோரா ஜோஷுவாவை அந்த குடும்பத்தில் இருந்து காப்பாற்றி அவனது தந்தை இருக்கும் ஊரை நோக்கி பயணமாகிறாள்.
அந்தப் பயணத்தில் டோராவிற்க்கும் ஜோஷுவாவிற்க்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய் விடுகிறது. இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்தாலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். வழியில் பணம் எல்லாம் இழந்து போக, ஒரு ட்ரக் ஓட்டுனர் அவர்களுக்கு உதவுகிறார். அவர் மேல் டோராவிற்கு காதல் வர அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை தனியே விட்டு சென்று விடுகிறார். எப்படியோ அவனது தந்தை இருக்கும் ஊர் வந்து சேரும் அவர்கள், அவனது தந்தை வீட்டை விட்டு வேறு ஒரு ஊருக்கு சென்று விட்டதை அவ்வீட்டில் குடி இருந்தவர்கள் கூறுகிறார். அந்த ஊறி திருவிழா ஆகையால், மிகுந்த நெரிசல். பணம் இன்றி பட்டினி கிடந்த டோரா மயங்கி விழுகிறாள். அவளை ஜோஷுவா மடியில் கிடத்தி தடவி கொடுத்து நன்றாக பார்த்து கொள்ள மனம் நெகிழ்கிறாள் டோரா.

அங்கு சாமிக்கு கடிதம் எழுத ஆள் இல்லாததை கண்ட ஜோஷுவா உடனே டோராவை அங்கு அமர வைத்து எழுதி கொடுக்க வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஒரு விடுதியில் அறையும் எடுக்கிறார்கள். அப்போது வழக்கம் போலஎழுதிய கடிதங்களை, ஜோஷுவா கிழிக்க போக அதனை தடுக்கும் டோரா மறுநாள் அதனை தபால் நிலையத்தில் சேர்த்து விடுகிறாள். பின்னர் அவனது தந்தை வீட்டிற்கு செல்லும் அவர்கள் ஜோஷுவாவின் சகோதரர்களை சந்திக்கிறார்கள். ஜோஷுவவின் தந்தை ஜோஷுவாவின் அன்னைக்காக காத்திருந்து காத்திருந்து கடிதம் வராமல், தண்ணி அடித்தே இறந்து போனதை சொல்கிறார்கள். தனது தம்பியை பாசத்துடன் ஏற்றுக் கொள்கிறார்கள். ஜோஷுவாவை சரியான இடத்தில் சேர்பித்து விட்டதால், நிம்மதி அடையும் டோரா, விடியும் முன் ஜோஷுவா தனக்கு வாங்கி தந்த ஆடை அணிந்து கொண்டு புறப்படுகிறாள். காலை எழுந்ததும் ஜோஷுவா ஓடி வந்து அவளை தேடுகிறான். அப்போது அவள் பஸ்ஸில் ஏறி வெகு தூரம் சென்று விட்டிருக்கிறாள். ஜோஷுவவுக்கு கண்ணீர் மல்க அவள் கடிதம் எழுதுகிறாள். அத்துடன் படம் முடிகிறது.

படத்தின் உயிர் நாடி ஜோஷுவாக நடித்துள்ள வ்நிசிஸ் தி ஒலிவேரா (Vinícius de Oliveira) மற்றும் டோராவாக நடித்துள்ள பெர்னாண்டோ மொண்டேநேக்ரோ ( Fernanda Montenegro) ஆகியோரின் நடிப்பு. ஒரு திரைப்படமாக அல்லாமல் நம் கண்முன்னே நடக்கும் கதை போல ஒரு தோற்றத்தை கொண்டு வந்த பெருமை இவர்களையே சேரும்.

வால்ட்டர் செலேசின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வால்ட்டர் கர்வால்ஹோ தான் இந்த படத்துக்கும். ட்ரைனை தொடர்ந்து சூரிய கதிர்கள் ஊடாக ஜோஷுவா ஓடி வரும் காட்சியும், அந்த கிராமத்தில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மேழுகுதிரிகளுகிடையே, டோரா ஜோஷுவாவை தேடி செல்லும் காட்சியும் கண்களுக்கு விஷூவல் விருந்து.
மனித நேயத்தை ஒரு வித்தியாச கோணத்தில் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார் வால்ட்டர் செலஸ்.

இத்திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பாப்டா மற்றும் பெர்லின் விருதுகள் இத்திரைப்படத்துக்கு கிடைத்தன.

அவசியம் சென்று சேர வேண்டிய இடம்... சென்ட்ரல் ஸ்டேஷன்.

----

2 comments:

thiyaa said...

அருமையான விமர்சனம்
நல்ல பதிவு

உலக சினிமா ரசிகன் said...

தொடர்ந்து நிறைய உலக சினிமாக்களை அறிமுகப்படுத்துங்கள்.
வாழ்க வளமுடன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...