Wednesday, December 30, 2009

மாத்ருபூமி - ஆண்களுக்கு எதிரான ஒரு மாற்று சினிமா.

இவ்வளவு அதிர்ச்சி அளிக்கும் ஒரு இந்திய திரைப்படத்தை இதற்குமுன் நான் பார்த்ததில்லை. உலக சினிமாக்களில், என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பல திரைப்படங்கள் உண்டு. உதாரணமாக பிரெஞ்ச் படமான இர்ரிவர்சிபிள்(irreversible). மாத்ருபூமி தணிக்கைக்கு பெயர் போன இந்தியாவிலிருந்து படைக்கப்பட்டிருப்பது தான் ஆச்சர்யம். படத்தின் கரு வன்புணர்ச்சி. இத்தகைய ஒரு கருவை ஆபாசமான காட்சிகள் இன்றி படமாக்கியது பெரிய விஷயம்.

வடக்கே ஒரு கிராமத்தில், பெண்கள் பிறந்தால் அதனை கொன்று விடுகிறார்கள். பெண்கள் பிறந்தால் அவர்களுக்கு வரதட்சணை தரவேண்டும் என. எனவே அந்த கிராமத்தில் வாழ்பவர்கள் முழுக்க முழுக்க ஆண்களே. அவர்களுக்கு காமம் அடங்காமல் தலை விரித்தாடுகிறது. நீல படம் பார்க்கிறார்கள். விழாவில் ஆண் பெண் வேடம் ஏற்று ஆடினாலும் அவர்கள் இச்சையுடன் நோக்குகிறார்கள். பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்ய அவர்களுக்கு தடை இல்லை.
அந்த கிராமத்தில், கல்யாணம் செய்வதற்கு கூட பெண் கிடைப்பதில்லை. இந்த சமயத்தில் ஒருவனுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட அனைத்து ஆண்களும் அவனை பொறாமையுடன் பார்க்கின்றனர். திருமணநாளில் மணமகனின் தந்தை மணமகளின் தந்தைக்கு ஒரு லட்சம் பணமும் ஒரு பசு மாடும் சீதனமாக கொடுத்து தனது மகனுக்கு மணம் முடிக்கப் பார்க்க, பூசாரியின் தயவால் மணமகள், பெண் இல்லை ஒரு ஆண் சிறுவன் என்றும் பணத்திற்காக அவனுடைய தந்தை தனது மகனுக்கு பெண் வேடமிட்டு அழைத்து வந்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
அந்த கிராமத்தில் ஒரு பணக்கார குடும்பம். ஒரு வயதான தந்தை. அவருக்கு ஐந்து மகன்கள். மூத்த மகன் தனக்கு ஒரு பெண் பார்க்க வக்கில்லாது போய்விட்ட தனது தந்தையை திட்டி தீர்க்கிறான். அந்த தந்தையோ, அந்த கிராமத்து பூசாரியிடம் தனது மகன்களுக்கு பெண் பார்க்குமாறு சொல்ல அந்த பூசாரி ஊரெல்லாம் சல்லடை போட்டு தேடுகிறான். அப்போது ஒரு நாள் கல்கி என்ற பெயருடைய ஒரு அழகான பெண் தனது பக்கத்து கிராமத்தில் இருப்பதை அறிய அந்த வீடு சென்று அந்த பெண்ணின் தந்தையிடம் பணத்தாசை காட்டி அந்த பெண்ணை அந்த குடும்பத்துக்கு கட்டிக் கொடுக்குமாறு கோருகிறான். பணத்தினால் கவரப்பட்ட அந்த பெண்ணின் தந்தை ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து பசுக்களுக்கு ஈடாக, அந்த குடும்பத்தின் ஐந்து மகன்களுக்கும் சேர்த்து கட்டி வைத்து விடுகிறான்.( ஒரு மகனுக்கு ஒரு லட்சம் மற்றும் ஒரு பசு.)

முதலிரவு அன்று மூத்த மகன் கல்கியை பங்கு போடுகிறான். முதல் நாள் எனக்கு மற்ற நாள் உனக்கு என.. ஐந்து நாட்களுக்கு ஐந்து பேரின் முறை. இதை கண்டு கோவம் கொள்கிறான் தந்தை. உங்களுக்காக நான் ஐந்து லட்சம் செலவு செய்திருக்கிறேன். எனக்கும் வேண்டும் என. அந்த பெண்ணை ஒவ்வொரு நாளும் ஒருத்தர் என பங்கு போட்டு வன்புணர்ச்சி செய்கிறார்கள். அதில் கடைசி மகன் மட்டும் அவளிடம் அன்பாய் இருக்கிறான். அவன் மேல் அவளுக்கு காதல் வருகிறது. அந்த வீட்டில் வேலை செய்யும் ரகு என்ற சிறுவன் அவளுடன் அன்பாய் இருக்கிறான்.அவளது கஷ்டத்தை உணர்ந்தவனாய் இருக்கிறான்.

ரகுவின் மூலம் தனது தந்தைக்கு கடிதம் எழுதுகிறாள் கல்கி. மகன்களுடன் சேர்ந்து தந்தையும் தன்னை வன்புணர்ச்சி செய்வதாக எழுதுகிறாள். அதனை அறிந்ததும் காரில் வந்து இறங்குகிறான் கல்கியின் தந்தை. செல்போன் சகிதம் உலா வரும் அவன், கல்கியிடம், 'அந்த கிழவன் உன்னோடு படுப்பதாக என்னிடம் முன்பு கூறவில்லை ஏமாற்றுக்காரன். நல்லவேளை இப்போது எனக்கு தெரிந்துவிட்டது அதனால் மேலும் ஒரு லட்சம் வாங்கி விட்டேன்' என சொல்லி பணம் வாங்கி செல்கிறான்.

இந்நிலையில், கல்கி கடைசி மகனுடன் மட்டும் காதலுடன் இருப்பது தந்தைக்கும் மற்ற மகன்களுக்கும் பொறுக்கவில்லை. ஒரு நாள் குறித்து அவனை கொன்று போடுகிறார்கள். அவன் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக போலிசிடம் சொல்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிணத்தை போஸ்ட் மோர்டம் செய்யாமல் சென்றுவிடுகிறது போலீஸ். தனக்கு ஒரே ஆறுதலாக இருந்தவனையும் கொன்றுபோட்ட அந்த குடும்பத்திடம் இருக்க பிடிக்காத கல்கி, வேலைக்கார சிறுவனிடம் தன்னை எப்படியாவது அந்த கிராமத்திலிருந்து தப்பிக்க வைக்கும்படி மன்றாடுகிறாள்.

அவள் மேல் இரக்கம் கொண்டு அவளை கூட்டிக்கொண்டு ஊரை விட்டு ஓடுகிறான் ரகு. அப்போது அதனை அறிந்து கொண்ட அந்த குடும்பம் அவர்களை சுற்றி வளைத்து, பின் தங்கிய சாதியை சேர்ந்த ரகுவை சுட்டு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்கின்றது. வேலைக்காரனோடு ஓடிப்போனவள் என அவளை தூற்றி மாட்டு தொழுவத்தில் போடுகிறார்கள் அவளை. ரகுவின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவனுடைய தந்தையுடன் சேர்ந்த தாழ்த்த சாதி கூட்டம் திட்டம் தீட்டுகிறது.

அந்த குடும்பத்தில் ரகுவின் மறைவுக்கு பிறகு புதிதாய் ஒரு சிறுவன் வேலைக்கு சேர்கிறான். மாட்டுத் தொழுவத்தில் மாட்டின் சாணி மற்றும் மூத்திரத்துக்கு மத்தியில் கிடக்கும் கல்கிக்கு தினமும் உணவு கொண்டு வந்து கொடுக்கிறான். ரகுவின் தந்தையும் அவனது கூட்டாளிகளும் பழிவாங்க வந்தவர்கள், மாட்டு தொழுவத்தில் சுய நினைவற்று கிடக்கும் கல்கியை பார்த்து கோவம் கொள்கிறார்கள். ரகுவின் மரணத்துக்கு காரணம் கல்கியே என அவளை வைத்தபடி ரகுவின் தந்தை அவளை வன்புணர்ச்சி செய்கிறான்.

கல்கி ஒரு நாள் கர்ப்பம் அடைய அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். மகன்கள் எல்லோரும் பிறக்கபோகும் குழந்தைக்கு தானே தகப்பன் என போட்டி போட அந்த மகன்களின் தந்தையோ தான் தான் முதலிரவில் அவளுடன் படுத்தவன் என்ற முறையில் தானே தந்தை என அறிவிக்கிறான். அப்போது திரளாக வந்த தாழ்ந்த சாதி கூட்டம், ரகுவின் தந்தையே அக்குழந்தைக்கு தகப்பன் என அறிவித்து அந்த பெண்ணை தங்களோட அனுப்பி வைக்குமாறு கோர, அந்த குடுமபத்தின் தந்தை துப்பாக்கியை கொண்டு வந்து அவர்களை விரட்டுகிறான். அந்த துப்பாக்கியை வாங்கி கொண்டு நான்கு மகன்களும் கல்கியை சொந்தம் கொண்டாட நினைத்த ரகுவின் தந்தையின் கிராமத்துக்கு சென்று அவனை சுட்டு கொலை செய்ய, கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த நால்வரையும் படுகொலை செய்து போடுகிறது....

இதனிடையே அந்த குடும்பத்தின் தந்தை கல்கியை கொடுமை செய்ய.. அதனை காண சகியாமல் அந்த புதிய வேலைக்கார சிறுவன் அவனை கத்தியால் குத்தி கொன்று போடுகிறான். இதனிடையே கல்கிக்கு பிரசவ வலி எடுக்க அந்த ரத்த பூமியில் புதிதாய் ஜனிக்கிறது ஒரு பெண் குழந்தை ஒன்று. அதனை கண்டு ஆனந்த படுகிறார்கள் கல்கியும் அந்த வேலைக்கார சிறுவனும். அத்துடன் முடிவடைகிறது படம்.
படம் முழுக்க முழுக்க ஆணாதிக்கம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் அந்த வேலைக்கார சிறுவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கல்கியாக நடித்திருக்கும் துலிப் ஜோஷி இந்த பாத்திரத்தில் நடிக்க மிகுந்த தைரியம் வேண்டும். அழகு தேவதையாக இருக்கிறார். வசனங்களே அவருக்கு இல்லை. கண்களே எல்லாம் பேசி விடுகிறது. சலீம் சுலைமானின் இசை படத்தின் மூடுக்கு ஏற்றவாறு படத்தோடு இழையோடுகிறது.

இயக்குனர் மனிஷ் ஜா துணிச்சலாக படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் கதை இப்படி இருந்தாலும், ஆபாசமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. வசனங்களிலும், உருவக காட்சிகளிலும் மட்டுமே பல செய்திகள் நமக்கு சொல்லப்படுகின்றன.

2003 இல் வெளியான இத்திரைப்படம், வெனிஸ் திரைப்படவிழா மற்றும் தேச்சலோனிக்கி திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளி உள்ளது.

நிச்சயம் மென்மையான இதயங்களை உடையவர்களுக்கு மற்றும் பதினெட்டு வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு இந்த திரைப்படம் அல்ல.

-------------

10 comments:

Karna said...

Reading the review itself is so heavy...

Unknown said...

அருமையான விமர்சனம். இப்படம் எப்படி மக்கள் மாக்களாக இருக்கிறார்கள் என்று சித்தரிக்கறது. இது போல் தினம் தினம் உத்திரபிரதேசத்தில் நடப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.

ஆர்வா said...

இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா? ஆச்சர்யம்தான்..


தங்கள் விமர்சனம் தெளிவாக இருக்கிறது

ethavuthu Irukkum said...

தங்கள் விமர்சனம் படிப்பதற்கே தைரியம் வேண்டும். சத்தியமாக மென்மையான இதயம் படைத்தவர்கள் படத்தை பார்க்க முடியாது. வாழ்த்துக்கள்.
சுகுமார் R

NILAMUKILAN said...

உண்மை கர்ணா. படமும் மிகவும் ஆழமே. நன்றி

NILAMUKILAN said...

நன்றி பிஸ்மில்லாஹ். படத்தை பார்க்கும்போதே மிகவும் வேதனையாக இருக்கிறது..

NILAMUKILAN said...

நன்றி கவிதை காதலன். மிக வித்தியாசமான ஒரு இந்திய திரைப்படம் இது

NILAMUKILAN said...

நன்றி சுகுமார்.

குப்பன்.யாஹூ said...

THANKS FOR SHARING

thiyaa said...

அருமை
வாழ்த்துகள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...