Wednesday, June 23, 2010

உலக சினிமா: கலர் ஒப் பாரடைஸ் (Color of Paradise).

மஜீத் மஜீதின் படங்களை பற்றி ஏற்கனவே ஏகப்பட்ட தடவை எழுதி விட்டேன். உலக சினிமாவில் ஒரு தனி முத்திரையை படைத்திருக்கும் இவரது படங்கள், எந்த ஒரு வணிக ரீதியான விடயங்களையும் உள்ளடக்கி இல்லாமல், மிகவும் மெலிதான உணர்வுகளை தூண்டும் திரைக்கதை அமைப்பு இவரது படங்களில் காணலாம். ஒரு எளிதான கதையா எடுத்து கொண்டு சிக்கலில்லாமல் கதை சொல்லும் இவரது பாணி உலக படைப்பாளிகளை இன்னமும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

முகமது பார்வையற்ற ஒரு சிறுவன். இரானின் தலைநகரான டேஹரானில் ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கிறான். பள்ளி விடுமுறையில், மாணவர்களின் பெற்றோர் வந்து தத்தமது குழந்தைகளை தங்களது வீடுகளுக்கு அழைத்து செல்கையில் தனது தந்தைக்காக காத்திருக்கிறான் முகமது.

மனைவியை இழந்த முகமதுவின் தந்தை ஹாஷேம், தான் மறுமணம் புரிய இருக்கும் வேளையில் முகமதுவுக்கு விடுமுறை விட்டு விட்டதால் அவனால் தனது திருமணம் தடை படுமோ என அஞ்சி அவனை பள்ளியிலேயே விடுமுறை முழுவதும் வைத்திருக்குமாறு வேண்ட.. பள்ளி முதல்வரோ அது தங்கள் பள்ளியின் விதிமுறைக்கு மாறானது என சொல்லி முகமதுவை அழைத்து செல்லுமாறுகூறுகிறார்.


வேண்டா வெறுப்புடன் தனது மகனை தனது ஊருக்கு அழைத்து செல்கிறான் ஹஷேம். அவனைக் கண்டு ஆனந்த கூத்து அடைகிறார்கள் அவனது பாட்டியும் அவனது சகோதரிகளும். தனது சகோதரிகளுடன் தானும் அவர்களது பள்ளி செல்ல வேண்டும் என அடம் பிடிக்க பாட்டி அனுப்பி வைக்க பள்ளியில் தான் ப்ரைலரில் எழுதி படித்த பாடங்களை சொல்லி பள்ளி ஆசிரியரிடம் சபாஷ் வாங்குகிறான் முகமது.

தான் மறுமணம் முடிக்கும் நேரம் முகமது இருந்தால் தடையாக இருக்கும் என எண்ணி அவனை அவனது பாட்டிக்குத்  தெரியாமல் ஒரு கண் பார்வையற்ற தச்சனிடம் சென்று சேர்த்து விடுகிறான் ஹஷேம்.

பேரனைக் காணாத துக்கத்தில் பாட்டி அவனது நினைவாகவே இருந்து மரித்து போக, ஹாஷேம் திருமணம் இந்த கேட்ட அறிகுறியால் நின்று போகிறது. தாயையும் திருமணத்தையும் தொலைத்து விட்ட ஹாஷேம், தனது மகனை மீட்டு வரப் புறப்படுகிறான் ஹாஷேம். முகமதுவை அழைத்து வரும் வழியில் ஒரு மரப்பலத்தை கடக்கையில் அது இடிந்து விழ முகமது ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்படுகிறான். முகமதுவை ஹாஷேம் காப்பாற்றினானா என்பது கிளைமாக்ஸ்.

திரைப்படம், கண் பார்வையற்ற முகமதுவின் பார்வையில் சொல்லப் படுகிறது. அவனது அறிமுக காட்சியும், கூட்டிலிருந்து தவறி விழுந்து விட்ட பறவை குஞ்சை அது எழுப்பும் ஒலியை வைத்து கண்டுபிடித்து அதனது கூட்டில் விடும் ஆரம்ப காட்சி அசத்துகிறது.

ஒளிப்பதிவாளரின் பார்வையில் வடக்கு டேஹரானின் அழகான மலைப்பகுதியை அற்புதமாக அள்ளி வந்திருக்கிறது காமெரா.

முகமதுவின் சகோதரிகளாக வரும் அந்த சின்னஞ்சிறு பாப்பாக்கள் அவ்வளவு அழகு.

முகமதுவாக வாழ்ந்திருக்கும் அந்த சிறுவனான மோசென் ராமெசானியின் நடிப்புக்கு நம்ம ஊர் சிவாஜியும் கமலும் கூட இணை இல்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. அவன் தன்னை வேலைக்கு சேர்த்த கண்பார்வையற்ற தச்சனிடம் கேட்கும் கேள்விகள் நிச்சயம் நம்மை கரைய செய்யும்.

'கடவுள் நல்லவரென எல்லாரும் சொல்கிறார்கள். அப்படி இருந்தால் அவர் ஏன் என் கண்களை பறிக்க வேண்டும்? கண்கள் இல்லாமல் அவரை எப்படி நான் காண முடியும்?. நான் என டீச்சரிடம் கேட்ட பொது, அவர் சொன்னார் 'இறைவன் எங்கும் இருக்கிறான். உன் விரல் நுனியில் கூட இருக்கிறான்'. நான் என விரல் நுனிகளை வைத்து தேடி கொண்டே இருக்கிறேன் அவன் அகப்படவில்லை.'

கலர் ஒப் பாரடைஸ் மஜித்தின் மற்றொரு மாஸ்டர் பீஸ்.

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இங்கே..

4 comments:

அருண்மொழிவர்மன் said...

மஜீத் மஜீதின் படங்கள் நாம் வாழும் உலகில் நாம் பார்க்கத் தவறும் விடயங்களையும், மனிதர்களையும் கண் முன்னால் நிறுத்துபவை.
நல்ல் அறிமுகத்தை தந்துள்ளீர்கள்

geethappriyan said...

நண்பரே, மிக அழகாய் எழுதியுள்ளீர்கள்.மஜித் மைதியின் படைப்புகள் தீராத தாக்கத்தை உண்டு பண்ணும்.என் டேஷ்போர்டுக்கு உங்கள் இடுகைகள் ஏனோ வரவில்லை,மீண்டும் ஃபாலோவராய் இணைந்துள்ளேன்.இனி தொடர்ந்து வரும் என எண்ணுகிறேன்.

NILAMUKILAN said...

நன்றி அருள்மொழிவர்மன். அவசியம் பாருங்கள் அற்புதமான படைப்பு.

NILAMUKILAN said...

நன்றி கீதப்பிரியன். மஜித்தின் படைப்புகளுக்கு நான் அடிமை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...