Thursday, December 30, 2010

உலக சினிமா: ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி (டென்மார்க்) 18+


டென்மார்க் ஒரு சிறிய நாடு. எனினும் பசுவுக்கும், பால் சம்மந்தப்பட்ட வெண்ணை, சீஸ்,தயிர் என அனைத்துக்கும் பெயர் போனது. டென்மார்க் நாட்டின் பிரதான மொழியான  டானிஷ் திரைப்படங்களிலும் சிறந்த திரைப்படங்கள் வெளிவந்து உலக சினிமா ரசிகர்களை அவ்வப்போது கொள்ளையிட்டு போவதுண்டு. லார்ஸ் வான் டயர் (ப்ரேகிங் தி வேவ்ஸ், டாக்வில் ),சுவீடனை சேர்ந்த லூகாஸ் மூடிசன்  போன்ற உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் இந்தப் பகுதியில் இருந்து வந்தவர்களே. ஹான்ஸ் ஓலே பெர்னடேல் என்ற டென்மார்க் இயக்குனர் த்ரில்லர் வகை திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர். அவர் இயக்கிய டானிஷ் திரைப்படமே ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி .

காக்க காக்க சூரியாவை போல மழையில் ஒருவன் விழுந்து கிடக்க...அன்புசெல்வனைப் போலவே கதையை சொல்ல ஆரம்பிக்கிறான் யோனாஸ். 'என்னை மழை நாளில் சுட்டு போட்டிருக்கிறார்கள், மர்மக்கதை என்றாலே ஒரு அழகிய பெண் வரவேண்டுமே',யோனாஸ் யோனாஸ் என ஒரு பெண் வந்து அவன் அருகே கதற..'இதோ வந்து விட்டாள்', எனத் துவங்குகிறது கதை.


ஒரு பெண் ஒருவனை கொலை செய்ய அவன் ரத்த குளம் கட்ட கீழே விழுகிறான். அத்துடன் யோனசின் கதை. மனைவி இரண்டு அழகு குழந்தைகள் என அளவான குடும்பம். அவனுடைய வேலை, கொலை செய்யப்பட பிணங்களை போலீசுக்காக போட்டோ எடுத்து கொடுப்பது. காலை எழுந்து மனைவி குழந்தைகளை, வேலையிலும் பள்ளியிலும் விட்டு விட்டு தனது அலுவலகத்துக்கு செல்லும் ஒரு சராசரி மனிதன் யோனாஸ். அன்றும் அப்படியே, தனது குடும்பத்துடன் வேலைக்கு புறப்பட, குடும்பமே அவனது காரை எள்ளி நகையாடுகிறது. அது ஓட்டை கார் என்றும் அதனை எப்போது தான் மாத்துவானோ எனவும் கிண்டல் செய்தபடி வர கார் அதற்கேற்றார்போல நடுரோட்டில் நின்றுவிடுகிறது. அப்போது அவன் ரியர் வியூவில் வேகமாக தன காரின் பின்னே வரும் இன்னொரு கார் தன காரின் பக்கவாட்டில் மோதியபடி கண்ட்ரோல் இழந்து எதிரில் வரும் வேறொரு காரில் மோதி குட்டிகாரணம் அடிக்க. அந்தக் காரில் இருந்து தூக்கி எறியப் படுகிறாள் அந்தப்பெண். யோனாஸ் ஓடி சென்று அந்த பெண்ணை காப்பாற்ற முயல, அவள் 'செபாஸ்தியன், செபாஸ்தியன் ' என முனகியபடி மயங்கி விழுகிறாள்.

தன்னால் தான் அந்த பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டது என்று மனசாட்சி உறுத்த அவளைக் காண மருத்துவமனைக்கு செல்கிறான் யோனாஸ். அவளது குடும்ப உறுப்பினர்கள் தவிர யாரையும் உள்ளே விட மருத்துவமனை ஊழியர் மறுக்க, தான் அவளது பாய் பிரெண்ட் என பொய் சொல்லி உள்ளே நுழைய, அவள் தான் அந்தப்பெண்ணின் பாய் பிரெண்ட் என அறிந்த அவளது சகோதரன் அவனை உள்ளே கூடி செல்கிறான். அங்கே அவளது குடும்பமே சோகத்தில் மூழ்கி இருக்க, யோனசை அந்தப்பெண் ஜூலியாவின் பாய் பிரெண்ட் என அறிமுகம் செய்து வைக்கிறான், அந்தப் பெண்ணின் சகோதரன்.

அப்போது தான் அந்தப் பெண்ணின் குடும்பம் ஒரு மிகப்பெரிய பணக்கார குடும்பம் என உணர்கிறான் யோனஸ். அவள் கோமாவில் இருப்பதாகவும், அவனால் மட்டுமே அவளை நினைவுக்கு கொண்டு வரமுடியும் என அவளது மருத்துவரும், அவளது குடும்பத்தாரும் நம்ப, அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு கிளம்பி விடுகிறான்.யோனஸ்.

ஜூலியாவின் சிதைந்து போன,  கார் இருக்கும் இடம் சென்று அவள் காரில் இருக்கும் ஒரு பெட்டியை எடுத்து அந்த குடும்பத்திடம் சென்று தான் அவளது காதலன் செபஸ்தியன் இல்லை என சொல்லிவிட தீர்மானித்தபடி மருத்துவமனைக்கு செல்ல, அங்கே அவளது குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறது. ஜூலியா கோமாவிலிருந்து கண் விழித்து விட்டாள். அதற்க்கு காரணம் செபஸ்தியன் என்கிற யோனஸ் தான் என நம்பும் அவர்களிடம் தான் அவன் இல்லை என அவன் சொல்ல, அவளது தந்தையோ, அவள் விபத்தில் உருக்குலைந்து போய் இருப்பதால் தான் அவன் அப்படி சொல்கிறான் என அவர் நினைத்து அவனிடம் ஒரு பிளான்க் செக்கை திணிக்கிறார். தனது பெண் மீண்டு வருவது அவனது கையில் தான் இருக்கிறது என அவனிடம் கெஞ்ச, அவனும் மனது கேட்காமல் சம்மதித்து செபாஸ்தியான் போல நடிக்கிறான்.

விபத்தில் பார்வை மங்கி, பழைய ஞாபகங்கள் அனைத்தும் மறந்து (அம்னிசியா) கிடக்கும் ஜூலியா விடம், அவள் தாய் லாந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் அவள் விபத்து நடந்ததை வைத்து, தாங்கள் தாய் லாந்தில் எப்படி எல்லாம் சந்தோஷமாக இருந்தோம் என அவளிடம் விவரிக்கையில் அவளும் அவன் செபஸ்தியன் என்றே நம்புகிறாள். இதற்கிடையில், தனது போலீஸ் நண்பர்களை வைத்து, செபஸ்தியன் இறந்ததை உறுதிப் படுத்திக் கொள்கிறான் யோனஸ்.  சிறிது சிறிதாக அவளை காதலிக்க ஆரம்பிக்கும் யோனசுக்கும் அவனது மனைவி மெட்டிக்கும் இடையே இடைவெளி விழ ஆரம்பிக்கிறது. இடை இடையே மருத்துவமனையில் உடம்பு முழுக்க பாண்டேஜ் போடப்பட்ட ஒரு உருவம் அவ்வப்போது காண்பிக்கப் படுகிறது.

ஜூலியாவை மிகவும் அக்கறையாக பார்த்துக் கொள்ளும் யோனஸ் ஒருமுறை அவள் உடம்பு முழுதும் கழுவி விடும் வேளையில் தங்களை மறந்து அவர்கள் கலவி கொள்கிறார்கள். சிலநாட்கள் கழித்து அவன் மருத்துவமனைக்கு வரும்போது ஜூலியாவின் குடும்பம் மகிழ்ச்சியுடன் அவள் கர்ப்பமானதை அவனிடம் பகிர்ந்து கொண்டாடுகிறார்கள். அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறான். அவனை தனியே அழைத்து செல்லும் ஜூலியாவின் டாக்டர்  கோமாவில் இருக்கும்போது அவளை கர்ப்பமாக்கிய  அவனை கேட்ட வார்த்தையில் திட்டுகிறார்.அப்போது தான் அவள் கோமாவில் இருக்கும்போதே கர்ப்பமாகியுள்ள விஷயம் அவனுக்கு தெரிய அவன் அதிர்ச்சி அடைகிறான்.


இடையே தன ஒரு சோகமான நிகழ்வில் மனைவி குழந்தைகளை விட்டு அவன் பிரிய, ஜூலியா மருத்துவமனயிலிருந்து, விடுவிக்கப்பட, அனைவரும்  ஜூலியாவின் அந்த மிகப்பெரிய மாளிகையில் கூட, அங்கு ஜூலியாவுக்கும், செபஸ்தியன் என்கிற யோனசுக்கும் திருமண அறிவிப்பை பெருமையுடன் செய்கிறார் ஜூலியாவின் தந்தை. இருவரும் திருமணத்துக்கு முன் சேர்ந்திருக்க கடலோரத்தில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்க்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சென்று இருவரும் இருக்கையில் ஒரு நாள் கதவு தட்டப்பட, கதவை திறக்கும் யோனஸ் அங்கு ஒரு மனிதன் நிற்க, அந்த மனிதன் 'தான் செபஸ்தியான்' என அறிமுகம் செய்ய, யோனசுடன் சேர்ந்து நாமும் அதிர்ச்சி அடைகிறோம். அதன் பின்னர் வருவது சில்லிடவைக்கும் கிளைமாக்ஸ்.

ஒரு வினாடி கூட தொய்வில்லாமல் படம் பறப்பதற்கு ஏதுவாக இருப்பது, இப்படத்தின் திரைக்கதை. படத்தில் பல முடிச்சிகள் கிளைமாக்சில் அவிழும்போது வாவ் போட வைக்கிறார் இயக்குனர். இரண்டுக்கும் சொந்தக்காரர் ஓலே பெர்டினால். 

அடுத்து படத்தின் மிக அற்புதமான ப்ளூ டோன் ஒளிப்பதிவு (டேன் லாச்த்சன் ) திரைக்கதையும் ஒளிப்பதிவுமே இப்படத்தின் ஹீரோக்கள்.

படத்தில் யோனசாக நடித்திருக்கும் அண்டெர்ஸ் பெர்தேல்சன் மனைவிக்கும் காதலிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார். நினைவுகள் மழுங்கி, பார்வையில்லாமல் தவிக்கும் தவிப்பை ஜுலியாவாக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ரேபெக்கே ஹம்சே.

ஜெட் வேகத்தில் பறக்கும் இப்படம் நிச்சயம் தமிழ் படுத்த ஏதுவான படம்.
அம்னிசியா , பிளான்க் செக்கை நிரப்ப சொல்லுதல், காதல் என தமிழ் படத்தின் பல நிகழுவுகள் இப்படத்தில் வருகின்றன.
யாராவது கூடிய சீக்கிரம் இந்தப் படத்தை சுட்டு தமிழ் படுத்துவார்கள். ( கமலஹாசன், மிஷ்கின், கே எஸ் ரவிகுமார் கவனிக்க!).

சன்டான்ஸ் பிலிம் பெஸ்டிவல், ராபர்ட் பெஸ்டிவல், போடில் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது இத்திரைப்படம்.

ஜஸ்ட் அனதர் லவ் ஸ்டோரி -ஜஸ்ட் கோ பார் இட்.

திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி...




1 comment:

Philosophy Prabhakaran said...

நல்லதொரு பகிர்வு... பதிவிறக்க லிங்குகள் எங்கே...?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...