Saturday, April 16, 2011

தேசபக்தியும் உலகக் கோப்பையும்...!



மிக மிகத் தாமதமான பதிவு தான். என்ன செய்ய. வேலை பளுவும் சுகவீனமும் என்னை இணையத்தின் எழுத்திலிருந்து சிறிது ஓய்வெடுக்கச் செத்துவிட்டது. (ஐயோ திரும்பவும் வந்துவிட்டானே என பலரது அலறல் எனக்கு கேட்கிறது). 

உலகக் கிண்ண அலசல்:
சுமாரான துவக்கமாய் இந்தியா துவங்கினாலும், நாளுக்கு நாள் அதன் எழுச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது. இந்த 2011 உலகக் கோப்பையில் எந்த ஒரு பந்தயத்தையும் இந்தியா எளிதாக வென்று விட வில்லை.கடைசி வரை நம்மை நகம் கடிக்க வைத்த பின்பே வெற்றி இல்லக்கினை தொட்டனர். முன்பு உள்ள இந்திய குழு எல்லாம் இந்த நிலைமையில் நிச்சயமாக கோப்பையை வேன்றிருக்காது. சிறிது சிக்கல் வந்த உடனேயே நம்பிக்கை இழந்து பொல பொல வென விக்கெட்டுகள் சரிந்து மிக விரைவில் தோல்வியை சந்தித்து விடுவோம். ஆனால் இந்த உலகக் கோப்பை இந்திய அணி அத்தகைய அணி அல்ல. சச்சினுக்காக கோப்பை வெல்வோம் என பந்தயம் ஆரம்பிக்கும் முன்பு சூழுரைத்தாலும், இந்திய அணி இப்போது சச்சினை மட்டுமே சார்ந்திருக்க கூடிய ஒரு அணியாக இல்லாமல், ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அழுத்தமாக பதிய வைத்தார்கள். தங்களது தனித்தன்மையை காட்டுவதற்காக ஆடாமல், அணியின் வெற்றிக்காக ஆடியது ஒன்றே நமது தேசத்திற்கு உலககோப்பையை பெற்று தந்தது.

இந்த வெற்றிக் குழுவை ஒருங்கிணைத்து சென்ற மிஸ்டர் கூல் கேப்டன் டோனி இந்த வெற்றிக்கு ஒரு முழு முதல் காரணம் என சொல்லலாம். வெற்றியை இழந்து விடுவோம் என்ற நிலை வந்தால் மற்ற அணித்தலைவர்களின் டென்ஷனை பார்க்கும் வேளையில் தோனி எவ்வளவு சிக்கலான நிலைமைக்கு அணி சென்றாலும் ஒரு யோகியை போன்றதொரு அமைதியை அவரிடம் காண முடிந்தது. அனைத்திற்கும் மேல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அடுத்தடுத்து விக்கட்டுகள் சரிந்ததும் யுவராஜ் சிங்கிற்கு முன்னாள் தான் களத்தில் இறங்கி ஒரு தலைவனுக்கு உரிய பொறுப்புணர்ச்சியுடன் ஆடி வெற்றி ரன்னை முத்தாய்ப்பாக சிக்சருக்கு அனுப்பி, உலககோப்பை கனவுடன் இருந்த நூற்றி இருபத்து சொச்சம் இந்தியர்களின் கனவை தீர்த்துவைத்தார். வெற்றியில் ஆனந்த கூத்தாடிய தன குழுவினரின் மத்தியில் அவர்களை பார்த்து அமைத்தியாக சிரித்தபடி ரசித்து கொண்டிருந்துவிட்டு சச்சினை கோப்பையை தூக்கி முன் செல்லவிட்டு தான் பின்னால் நடந்து சென்று தனது பெருந்தன்மையை நிலை நாட்டினார்.

சச்சின் இருபத்தொரு ஆண்டுகளாக காண்பித்து வரும் கன்சிஸ்டன்சியை இந்த உலக கோப்பையிலும் தக்கவைத்துக் கொண்டார். தனது ஐம்பதாவது ஒரு நாள் செஞ்சுரியை இந்த உலகக் கோப்பையில் அடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்ட வில்லை என்றாலும், இவர் அளவுக்கு தொடர்ந்து இருபத்தொரு ஆண்டுகள் கிரிக்கட் ஆடுகளத்தில் இப்படி கன்சிஸ்டன்சியை உலக அரங்கில் வேறு யாரும் கொண்டதில்லை. அவரது கிரிக்கட் வரலாற்றில் உலக கோப்பையும் கைப்பற்றி முத்தமிட்டுவிட்டார். இன்னமும் இவர் இன்னொரு செஞ்சுரியை ஒரு நாள் ஆட்டத்தில் அடித்து அந்த ரெக்கார்டையும் தக்கவைத்துக் கொள்வார். உலககோப்பை வெற்றி ஊர்வலத்தை சச்சினை தூக்கி கொண்டு வளம் வந்த இருவரில் ஒருவரான, விராட் கொஹ்லி இடம், சச்சினை தூக்கி வந்தது உங்களுக்கு வலிக்கவில்லையா என ரவி சாஸ்த்ரி வினவ...'இருபத்தொரு வருடங்களாக இந்த தேசத்தை தனது தொழில் சுமந்த சச்சினை நாங்கள் இருபது நிமிடங்கள் தானே தூக்கி வலம் வந்தோம்' என டைமிங்காக அடித்த பன்ச் உலக கோப்பை ஆவணத்தின் அழியா பதிவாக நிலைத்து நிற்கும்.

இங்கு அமெரிக்காவில் எங்கள் அலுவாலகத்தில் ப்ரொஜெக்டர் வைத்து உலக கோப்பை போட்டிகளை காண வழி செய்த என் அலுவலகத்துக்கு நன்றி. எங்கள் அலுவலகத்தின் இயக்குனர்களில் ஒருவர் ஒரு பாகிஸ்தானி. பாகிஸ்தானை இந்தியா வென்ற அன்று நடந்த மீடிங்கில் இந்தியா பாகிஸ்தானை வெற்றி கொண்டதை சொல்லி அவரை வம்புக்கு இழுத்த போது அவர் சொன்ன பன்ச் வசனம்,' நான் ஒரு சிரித்த முகத்தை விட ஐநூறு சிரித்த முகங்களை காணவே ஆசை படுகிறேன். எனவே நானும் இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்'; ( மீசையில் மண் ). இங்கு அமெரிக்காவில் ஆங்காங்கே இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர். பல பார்டிகள் நடந்தேறின.தொலைபேசி வாழ்த்துக்கள் குவிந்தன. இந்தியாவின் தேசபக்தியை உலகெங்கும் பறைசாற்ற கிரிக்கெட் என்ற விளையாட்டு பெரும் பங்கை ஆற்றி உள்ளது .

உலகம் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

3 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
கொண்டாடப்பட வேண்டிய நல்ல வெற்றி.
வாழ்த்துக்கள்.

kumar said...

"" நான் ஒரு சிரித்த முகத்தை விட ஐநூறு சிரித்த முகங்களை காணவே ஆசை படுகிறேன். எனவே நானும் இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்'; ( மீசையில் மண் ).""


மீசையில் மண்.அருமையான சொல்லாடல்.ஆனால் மனதில் வலி இருந்தாலும் இப்படி சொன்ன அவரை

நக்கலடிப்பதை விட பாராட்டியிருக்கலாமே.என்ன இருந்தாலும் தனிக்குடித்தனம் போன நம் சகோதரன்தானே

NILAMUKILAN said...

நன்றி ரத்னவேல். நிச்சயமாக கொண்டாடுவோம்.பஷீர், உங்கள் கருத்துக்கு நன்றி. நான் என்றும் பாகிஸ்தான் சகோதர்களுக்கு எதிரானவன் அல்ல. அவர் எனக்கு நண்பரும் கூட. அவர் அப்படி சொன்னதற்கு பகடியாய் அவருடன் நான் கூறியதைத்தான் இங்கு பதிவில் சொல்லி உள்ளேன். அவர்கள் நிச்சயம் நம் சகோதரர்களே. மனம் புண் பட்டிருப்பின் வருந்துகிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...