Thursday, January 12, 2012

கிளைமாக்ஸ் கதைகள் 7: முடிவல்ல ஆரம்பம்...!
அந்த ஆஸ்பத்ரியின் வராண்டாவில் நகம் கடித்தபடி காத்திருந்தேன்.

டாக்டர் கூறிய அனைத்து டெஸ்டுகளும் முடிந்து விட்டன. ஒன்றா இரண்டா... ஐந்து டெஸ்டுகள்.

அந்த ரிசல்டுகள் அனைத்தும் இப்போது டாக்டரின் கைவசம்.

டாக்டர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் 'ஆம் அந்த வியாதி இருக்கிறது' என்று சொல்லிவிட்டால் என் கதி என்ன?

நான் ஒரு ஐ டி கம்பனியில் கை நிறைய சம்பளம் வாங்கும் சங்கர். ஒரு ஹான்க் மோட்டார் பைக், வார இறுதி கிளப்களில் பார்ட்டி, வாரம் ஒரு முறை மிலிடரி ஓட்டலில் சிக்கன் பிரியாணி,மாதம் ஒருமுறை நண்பர்களுடன் சுற்றுலா, பண்டிகை காலங்களில் பெற்றோருக்கு பணமும் உடுப்புகளும், தங்கைக்கு மறக்காமல் ஒரு தங்க கம்மலும் வாங்கி சொந்த ஊர் சென்று திரும்புதல், இரண்டு காதல் தோல்விகள் என சராசரி, சென்னை ஐ டி இளைஞனின் பிரச்சனை இல்லாத வாழ்கை.

ஒரு வருடத்துக்கு முன்பு தான் 'இந்தப் பிரச்சனை' ஆரம்பித்தது.'இதுவாக' இருக்குமோ என ஒவ்வொரு நாளும் நான் பயந்து பயந்து இறந்துக் கொண்டிருந்தேன்.

மருத்துவர்களிடம் செல்வதற்கும் பயம். ஏடாகூடமாக ஏதாவது சொல்லி தொலைத்து விட்டால், நான் வாழும் நாட்கள் எல்லாம் நரகமாகிவிடுமே!

இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல எனது பிரச்னை பூதாகாரமாகிக் கொண்டே செல்வதை நான் புரிந்து கொண்டேன்.

இனிமேல் காலம் தாழ்த்துவதால், சிக்கல் மேலும் பெரிதாக இருக்குமோ என்று தான் இந்த டாக்டரை பார்க்க வந்தேன்.

டாக்டர் ரங்கபாஷ்யம், 'இது போன்ற வியாதிக்கு கை தேர்ந்தவர்' என்றெல்லாம் டெஸ்டிங் டீமில் வேலை பார்க்கும் முத்து சொல்லி தான் இவரை பார்க்க வந்தேன். அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும். அன்பாக பேசியவர், சில பரிசோதனைகள் செய்தபின் தான் தான் எந்த முடிவுக்கும் வர முடியும் என சொல்லிவிட்டார்.

ரங்கா பாஷ்யத்தின் மேல் பாரத்தை போட்டு விட்டு ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அனைத்து பரிசோதனைகளுக்கும் என்னை உட்படுத்திக் கொண்டேன்.

இதோ இன்னும் சிறிது நேரத்தில் ரங்கா பாஷ்யம் என்னை உள்ளே அழைக்கப் போகிறார். 'உங்களுக்கு ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகிவிடும்' என்று சொல்ல போகிறார் என்று காத்திருக்கிறேன்.

'மிஸ்டர் சங்கர்...' என்று அழைத்த அந்த நர்ஸ் மிக அழகாக ஒரு வெள்ளை தேவதையை போல இருந்தாள். ஆனால் அவளை ரசித்துக் கொண்டிருக்க இப்போது சமயமும் இல்லை, எண்ணமும் இல்லை, மிகுந்த பதை பதைப்புடன் உள்ளே நுழைந்தேன்.

ரங்கபாஷ்யத்தின் முகம் எந்த ஒரு உணர்வையும் வெளிக்காட்டாமல் இறுகி இருந்தது.

'உட்காருங்க சங்கர். எப்படி இருக்கீங்க? வேலை எல்லாம் எப்படி போகுது?'

'டாக்டர் சஸ்பென்ஸ் தாங்கல. சொல்லுங்க டாக்டர் ரிசல்ட் வந்துருச்சா? '

' ஆமா சங்கர். நீங்க கொஞ்சம் உங்க மனசை திடப் படுத்திக்கணும்'

'டாக்டர்ர்ர்ரர்ர்ர்ர் ....!'

'எஸ் சங்கர். உங்களுக்கும் 'அது இருக்கு' '.

'ஒ மை காட். இன்னும் எவ்ளோ நாள் இருக்கு டாக்டர்?'

'இன்னும் ஒரு ஆறு மாசம். அவ்ளோதான்'

'ஐயோ டாக்டர், எனக்கு பொண்ணு எல்லாம் பாத்ருக்காங்க டாக்டர் இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம்'

' ஐ ஆம் சாரி சங்கர். கொஞ்சம் தள்ளி போட வேணா முயற்சி பண்ணி பாக்கலாம்'

துவண்டு சரிந்த என்னை தேற்றினார் ரங்கா பாஷ்யம்.


'இப்போ அதுனால என்ன மிஸ்டர் சங்கர். இப்போ என்னை பாருங்க எனக்கும் தான் இருக்கு. என்ன பண்றது, நமக்கு வந்துட்டா அதோட வாழ பழகிக்கணும். தலை முடி உதிர்றது இப்போ எல்லாம் சாதாரணம். உங்களுக்கு ஆறு மாசத்துல முழுக்க உதிர்ந்துட்டா, ஒரு விக் வாங்கி மாட்டிக்கொங்களேன்.'

தனது வழுக்கை மண்டையை தடவியபடி முடிவில்லாதபடி பேசி கொண்டே சென்ற ரங்கா பாஷ்யத்தை பார்த்தபடி, இது தான் ஆரம்பம் என நினைத்துக் கொண்டேன்.


(குறிப்பு: நந்தினி ரெட்டி இயக்கிய ஆளா மொதலாயிந்தி என்ற தெலுகு திரைப்படத்தின் ஒரு காட்சியை தழுவியது இந்த கதை.)

1 comment:

♔ம.தி.சுதா♔ said...

இனிய தமிழ் தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...