Friday, February 27, 2015

உலக சினிமா: ஈடா (போலந்து) ஆஸ்கார் 2015 திரைப்பட வரிசை.



கன்னியாஸ்த்திரி ஆவதற்காக படித்துக் கொண்டிருப்பவள் ஆன்னா.

சிறுவயதில், அனாதையாக யாராலோ அந்த ஆஸ்ரமத்தின் முன்னே விடப்பட்டவள். கன்னிகாஸ்திரி ஆவதற்கு முன்பு கடவுளின் முன்பு உறுதி மொழி எடுத்தால் தான் அவள் கன்னிகாஸ்திரி ஆக முடியும். அதற்க்கு முன்பு அவள் தனது வீட்டிற்கு சென்று வரலாம். உறுதி மொழி எடுத்தபின்னர் அவள் கடவுளுக்காக படைக்கப்பட்டவள்.கடவுளை சேவித்தே அவளது வாழ்வினி கழியும்.

தலைமை கன்னிகாஸ்திரி, ஆன்னாவுக்கு ஒரு தூரத்து அத்தை முறை உறவுப்பெண் இருப்பதாகக் கூறி அவளை சந்தித்து பிறகு வந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம் என்று அவளை சென்று வர அனுமதிக்கிறார்.

அந்த உறவுக்கார அத்தையின் விலாசம் தேடி கண்டு அவள் வீடு சேர்கிறாள் ஆன்னா. அவள் எதிர் கொள்வது ஒரு நடுத்தரவயது சதா புகைத்து கொண்டு கையில் மது போத்தலுடன் இரவு உடையில் ஒரு பெண்மணியை. அவள் சென்று சேரும் நேரத்தில் ஒரு ஆடவன் உடை அணிந்து கொண்டு அந்த வீட்டில் இருந்து விடை பெற்று செல்கிறான். 'நான் யார் என் தொழில் என்ன என்று உன்னிடம் சொல்லவில்லையா?' என கேட்கிறாள் அவள் அத்தை 'வாண்டா குருஸ் '. இதன் மூலம் அவள் தொழில் என்ன என்பதை பார்ப்பவரை தீர்மானிக்க வைக்கிறார் இயக்குனர்.

ஆன்னாவின் இயற் பெயர் ஈடா லிபென்ஸ்டைன்  என்றும் அவள் ஒரு யூத இனத்து குடும்பத்தை சார்ந்த பெண் என்றும் வாண்டா மூலம் அறிகிறாள் ஆன்னா. அவளது பெற்றோர் யார் என்பதை அறிந்து கொள்ள வாண்டாவும் ஆன்னாவும் சாலைப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அந்த பயணத்தின் ஊடே வாண்டா அவள் யூகித்தது போல அல்லாமல்  ஒரு நீதிபதி என்பதை அறிகிறாள் ஈடா. பயணத்தினூடே வாண்டா தண்ணி, புகை, ஆண்கள் என்று அனைத்து கேட்ட பழக்கங்களுடன் கூடிய ஒரு சாத்தானாகவும், ஆன்னாவை கன்னிகாஸ்திரி உடை அணிந்து கருணை உருவம் கொண்ட ஒரு தேவதையாகவும் காட்டப்படுகிறது. ( இதனை வசனமாகவும் வாண்டாவின் கதாபாத்திரம் பேசுகிறது).

இவர்களின் பயணத்தில் நடுவே ஒரு சாக்ஸ் இசைக்கும் இளைஞன் ஏறிக்கொள்ள அவனுக்கு ஆன்னாவின்  மீது ஈர்ப்பு ஏற்ப்படுகிறது. ஆன்னாவின் பெற்றோர் யார் என கண்டுபிடித்து அவர்கள் நிலையை அறிந்ததும் பெரும் அதிர்ச்சிக்குள்ளகிறார்கள் ஆன்னாவும் வாண்டாவும். வாண்டா மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள, ஆன்னா என்கிற ஈடா என்ன முடிவு எடுக்கிறாள் என்பது கிளைமாக்ஸ்.

ஈடா படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம் கண்களை விட்டு அகல மறுப்பதற்கு காரணம், படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கலை. படத்தின் முதல் காட்சியில், பனி பெய்து கொண்டிருக்கும் அந்த பகலில் ஏசுவின் சிலையை சுமந்து வரும் கன்னிகாஸ்திரிகளின் காட்சி முதலே அதகளம் ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொரு காமிரா கோணமும் மற்ற திரைப்படங்களில் இருந்து வேறுபட்டு தனித்து ஒரு ஓவியம் போல நிற்பதற்கு காரணம், Lukasz Zal,Ryszard Lenczewski என்ற இரட்டையர் தான். படத்தின் கதை நடக்கும் காலத்திற்கேற்ப கருப்பு வெள்ளையில் படம் பிடித்திருப்பது படத்தின் கதை காலத்திற்கு கூடுதல் நம்பகத் தன்மையை கொடுக்கிறது. ஒரு காட்சியின் பிரேம் முழுக்க வியாபித்திருக்கும் பின்னணி போருள்களிநூடே  ஒளியை பாய்ச்சி, பிரேமின் கீழ் பகுதியில் மட்டுமே கதாபாத்திரங்களின் முகங்களை காட்டும் அழகு, வேறு படங்களில் காணாதது. படத்தில் ஆன்னா என்கிற ஈடாவாக நடித்திருக்கும் அகதா (Agata Trzebuchowska) மிக அற்புத தேர்வு.  அவர் முகத்தில் இருக்கும் இன்னொசென்ஸ் மற்றும் தேஜஸ் ஒரு நிஜ கன்னிகாஸ்திரியின் பிரதிபலிப்பு.

வாண்டாவாக நடித்திருக்கும் அகதா (Agata Kulesza)  யாருமற்ற தனிமையில் குடியும் சிகரெட்டும் ஆண் நண்பர்களுமாக இருந்தும் டிப்ரஷனில் அவதிப்படும் கதாபாத்திரம். அதே சமயத்தில் ஈடாவின் மீதுள்ள அன்பு, என்று பிரமாதமாக கலந்து கட்டி நடித்திருக்கிறார்.

இயக்குனர் பாவல் பவ்ளிகொவ்ஸ்கி (Paweł Pawlikowski). ஈடாவின் திரை மொழியில், திரை உலக ஜாம்பாவான்  இங்கமார் பெர்க்மானின் சாயல் அதிகம் தெரிகிறது. படத்தின் மீதான ஒளிப்பதிவின் தாக்கத்தை அதிகரிக்க வைத்து எளிமையான திரைக்கதை அமைத்திருக்கிறார். படம் முழுதும் கொட்டிக் கொண்டிருக்கும் பனி மழை படத்தின் கதைக்கு ஏற்ப பயன்படுத்திருப்பது பார்வையாளனை கதைக்குள் இழுக்கும் தந்திரம்.

இசை, படத்தின் வெகு சில இடங்களில் மட்டுமே மெதுவாக ஒலிக்கிறது. மௌனத்தை கூட படத்தின் இசையாக்குவதில் வெற்றி கண்டிருக்கிறார் இசையமைப்பாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன்.

உலகின் பல்வேறு திரைப்பட விருதுகளை வென்றிருக்கும் இத்திரைப்படம், சிறந்த அயல்நாட்டு திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த அயல் நாட்டு திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது.

நல்ல திரைப்படங்களை தேடும் ரசிகர்களுக்கு விருந்து ஈடா.

ஈடா - அமைதிப் புயல்.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...